Skip to main content

ஆண்டாளின் தமிழ் வார்த்தைகள்

ஆண்டாளின் தமிழ் வார்த்தைகள்



சமீபத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவையில் சில சொற்களை மேற்கோள் காட்டி அதற்கு உரையாசிரியர்கள் தங்கள் இஷ்டத்துக்குப் பொருள் கூறுகிறார்கள் என்று படித்தேன். அதில் சில விவாதங்களையும் பார்த்தேன்.

ஸ்ரீ வைஷ்ணவ உரையாசிரியர்கள் தங்கள் இஷ்டத்துக்குப் பொருள் கூறுபவர்கள் கிடையாது. எனக்குத் தெரிந்த தமிழ்ப் பேராசிரியர்களும் அப்படியே. நாதமுனி தொடக்கமாகச் செவி வழியே ஆழ்வார்களின் பாசுரங்களும், உரைகளும் வந்திருக்கிறது. ஸ்ரீராமானுஜர் காலத்தில் ஓலைப்படுத்தப்பட்டது. இன்றும் கிடைக்கிறது ஆனால் புரிந்துகொள்ளக் கஷ்டமாக இருப்பதற்கு நாம் நல்ல தமிழை விட்டு ஒடிடி தமிழுக்கு வந்துவிட்டோம்.

சில விளக்கங்களைக் கொடுக்கிறேன்.

(௧) "குத்து விளக்கு எரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்"

இங்கே கோட்டுக்கால் என்றால் யானைத் தந்தம். இதில் சந்தேகம் வேண்டாம்.
ஓடு + வீடு = ஓட்டு வீடு அது போல் கோடு + கால் = கோட்டுக்கால்.

ஒரு சொல்லுக்குப் பல அர்த்தம் தமிழில் இருக்கிறது. ’காண்டக்ஸ்ட்’ வுடன் பொருத்திப் பொருள் கொள்ள வேண்டும்.

எப்படி என்று புரிந்துகொள்ளத் பூதத்தாழ்வாரின் இந்த பாசுரத்தைப் பாருங்கள்

அரியது எளிது ஆகும் ஆற்றலால் மாற்றி
பெருக முயல்வாரை பெற்றால் கரியது ஓர்
வெண் கோட்டு மால் யானை வென்றி முடித்தன்றே
தண் கோட்டு மா மலரால் தாழ்ந்து

செய்வதற்கு அரிய செயல்களைச் செய்யும் பெருமாள் அருள் பெற்றால் செய்வதற்கு அரிய செயலும் சுலபமாகிவிடும். எப்படி என்றால் முன்பு கஜேந்திரன் என்ற கரிய, பெரிய ஒப்பற்ற வெண் தந்தங்களையுடைய யானை, ஒரு குளிர்ந்த நீர் பொய்கை கரையில் பூப்பறிக்கச் சென்ற போது என்று அந்த கதையைக் குறிப்பிடுகிறார் பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியில்.

வெண் கோட்டு மால் யானை என்ற தொடரில் கோட்டு = தந்தம்
தண் கோட்டு மா மலரால் என்ற தொடரில் கோட்டு = பொய்கை கரை

இதில் கோட்டு என்ற ஒரே வாக்கியத்தை எப்படி அழகாக இரண்டு இடத்தில் இரண்டாம் திருவந்தாதியில் உபயோகித்திருக்கிறார் !

(௨) "உக்கமும் தட்டொளியும் தந்து உன்மணாளனை"

உக்கம் என்பது விசிறி, ஆலவட்டம். நிகண்டு, கழக அகராதி, தமிழ் அகராதி, திவ்யப் பிரபந்த அகராதி போன்றவற்றில் இருக்கிறது. நீங்களும் தேடிப் பார்த்துக்கொள்ளலாம்.

அயோத்தியா காண்டத்தில் கம்பர் இந்த பாடலைப் பாருங்கள்

சீதப்‌ பனி நீர்‌ அளவி; திண்‌ கால்‌ உக்கம்‌ மென்‌ கால்‌
போதத்து அளவே தவழ்வித்து, இன்‌ சொல்‌ புகலாநின்றான்‌;
ஓதக்‌ கடல்‌. நஞ்சு அனையாள்‌ உரை நஞ்சு ஒருவாறு அவிய,
காதல்‌ புதல்வன்‌ பெயரே புகல்வான்‌ உயிரும்‌ கண்டான்‌.

தயரதன் மயங்கி இருக்க வசிஷ்டர் வலிய கைப்பிடி உடைய
விசிறியால் மெல்லிய காற்றை வீச, இன்சொல், கூறி, சோகம், தணிவிக்க,
சற்றே மூர்ச்சை தெளிந்து ‘இராமா, இராமா’ என்று பிதற்றுகின்ற தயரதனுக்கு
உயிர்ப்பு நிலை வந்தது.

திண் கால் உக்கம் என்பது வலிய கைப்பிடி உடைய விசிறியானது என்று பொருள்.

சரி விசிறியாகவே இருக்கட்டும், மார்கழி ஏற்கனவே குளிர், ஆண்டாள் சம்பந்தம் இல்லாமல் எதற்கு விசிறி கொடுக்கிறாள் ?

உக்கமும் தட்டொளியும் என்ற வார்த்தைக்கு உள்ளே போகும் முன் Proprietary என்ற ஆங்கில வார்த்தையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Proprietary என்றால் தமிழில் உரிமையுடைய என்று சொல்லலாம். அதனுடன் love சேர்த்தால் Proprietary love என்பது ’உரிமை காதல்’ என்று சொல்லலாம்.

சுலபமான உதாரணம் - கைக் குழந்தையை விட்டு தாய் விலகிச் சென்றால் உடனே குழந்தை அழத் தொடங்கும். விலகிச் செல்லக் கூடாது என்று அந்தக் குழந்தை அழுகை மூலம் தன் எதிர்ப்பை ( உரிமையுடன்) காட்டுகிறது.

தாய் விலகிச் செல்வது குழந்தைக்கு வேதனை( anguish ) தரக்கூடிய விஷயம். குழந்தைக்கு இந்த உலகத்தில் அம்மா தான் எல்லாம். அவள் கூட இல்லை என்றால் பதற்றமாகவும், தன்னுடன் கூட இருந்தால் நிம்மதியாகவும் உணர்கிறது. இது தான் ’Proprietary love’, உரிமைக் காதல்.

தாய் - குழந்தை பிரிவு, காதலன் - காதலி பிரிவு எல்லாம் உரிமைக் காதல் தான்.
இப்போது ஆண்டாள் பாசுரத்துக்கு வரலாம். உக்கமும் - விசிறி ; தட்டொளி - முகம் பார்க்கும் கண்ணாடி இவை இரண்டும் - symbols of proprietary love.

அதே போல், ஆழ்வார்களுக்கு பெருமாள் பக்கத்தில் இல்லை என்றால் கடும் துயரம் (anguish) வந்துவிடுகிறது.

ஆழ்வார்களுக்குப் பெருமாள் மீது உள்ள உரிமைக் காதல் (properierty love) விரகதாபமாகிறது. அதனால் ஆழ்வார்களுக்கு உடம்பு நெருப்பாகக் கொதிக்கிறது.
இந்த உளைச்சலுக்குக் குலசேகர ஆழ்வார் ”மாளாத காதல் நோயாளன் போல்” என்கிறார்.
இந்த நோய்க்கு என்ன அறிகுறி ? நம்மாழ்வார் சொல்லுகிறார்.

நொந்து ஆராக் காதல்-நோய் மெல் ஆவியுள் உலர்த்த*
நந்தா விளக்கமே! நீயும் அளியத்தாய்!*
செந்தாமரைத் தடங் கண், செங்கனி வாய் எம் பெருமான்*
அம் தாமம் தண்-துழாய் ஆசையால் வேவாயே?

அணையா விளக்கே எம்பெருமானிடம் நான் கொண்ட காதல் போல நீயும் கொண்டதால் என்னைப் போல நீயும் வேகின்றாயோ என்கிறார்.
நமக்குக் காய்ச்சல் வந்தால் “உடம்பு அனலாகொதிக்கிறது” என்போம். ஆழ்வார்களுக்கும் அதே போல் தான். சரி இந்த நோய்க்கு மருந்து என்ன ?

இந்த “நோய்க்கு மருந்து அறிவாரும் இல்லை மருத்துவனாய் நின்ற மா மணிவண்ணா!” என்று பெரியாழ்வார்

திருவாமாலிருஞ்சோலைக்கு மருந்து வாங்கப் போகிறார். அங்கே, கடை, மருந்து, மருத்துவன் எல்லாம் ”திருமாலிருஞ்சோலை எந்தாய்” என்கிறார்.

மேலே சொன்ன நம்மாழ்வார் “நொந்து ஆராக் காதல்” என்ற பாசுரத்துக்குத் திருவாய்மொழி ஈடு வ்யாக்யானத்தில் ”உக்கக்காலுக்கு உளையக்கூடிய உன் உடம்பே நெருப்பாக வேகிறாயே” என்ற பதம் வருகிறது.

இதன் பொருள் விசிறிக்காற்றின்( உக்கக்காலுக்கு ) மூலம் கெடக்கூடிய(உளையக்கூடிய) உனது சரீரமே நெருப்பாக மாறும் விதத்தில் நீ வெந்து போகிறாயோ ?

இங்கே உக்கல் என்ற சொல் வருவதையும், வெப்பத்தைத் தணிக்க அது தேவை என்பதும் தெரிகிறது.

ஸ்ரீராமானுஜர் உருவாக்கிய 74 சிம்மாசனாதிபதிகளில் ஒருவரின் பெயர் ‘உக்கல்’ அம்மாள். எம்பெருமானாருக்கு இவர் என்ன கைங்கரியம் செய்தார் என்று இந்நேரம் நீங்கள் கண்டுபிடித்திருப்பீர்கள். உக்கலம்மாள் என்னும் அடியார் எப்போதும் ராமானுஜருக்கு திருவாலவட்டம் வீசிக்கொண்டிருப்பார்.

இந்தப் பாசுரத்தில் நப்பின்னையிடம் ”உக்கமும் தட்டொளியும்” எங்களுக்குத் தந்து ”உன் மணாளனுக்கு” நாங்களும் ‘ஆதரமான’ அந்தரங்க கைங்கரியத்தில் எங்களையும் ஈடுபடுத்த வேண்டும் என்று ’சிம்பாளிக்காக’ பிராத்திக்கிறாள் ஆண்டாள்

(௩) ”மாரி மழை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்”

மன்னி என்றால் என்ன ? மழைக் காலத்தில் பெண் சிங்கம் ஆண் சிங்கத்துடன் ஒன்றிப் பொருந்தி ஒரு சிங்கம் போலக் கிடந்தது என்பது தான் ‘மன்னி’ என்ற சொல்லுக்குப் பொருள்.

அதாவது ‘ரிவிட்’ அடித்தது போல இருப்பது.

இதைப் புரிந்துகொள்ள நம் திருமங்கை ஆழ்வாரை கூப்பிடலாம்

பந்து ஆர் மெல் விரல் நல் வளை தோளி பாவை பூ மகள் தன்னொடும் உடனே
வந்தாய் என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா மழை போல் ஒளி வண்ணா
சந்தோகா பௌழியா தைத்திரியா சாம வேதியனே நெடுமாலே
அந்தோ நின் அடி அன்றி மற்று அறியேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே

ஆழ்வார் இங்கே ’என் மனத்தே மன்னி நின்றாய் மால் வண்ணா” என்கிறார். என் மனதில் ரிவிட் அடித்தது நின்றாய் என் மால் வண்ணா’ என்கிறார்.

- சுஜாதா தேசிகன்
11.01.2023

Comments

  1. சிறப்பான கட்டுரை.ஆனால் ஆரம்பத்தில் சிலர் இஷ்டத்துக்கு பொருள் கூறுகின்றனர் என்று சொன்னபோது அவை எவை என்று சொல்லி அதற்கு வைணவ ஆசார்யர்கள் என்ன விளக்கம் கூறியிருந்தார்கள் என சொல்லியிருந்தால் கோர்வையா வந்திருக்கும்
    அல்லது நீங்கள் குறிப்பிட்டவைதான் அவர்கள் சொன்னதா?

    ReplyDelete
  2. காஞ்சிபுரம் அருகில் *உக்கல்* என்றே ஒரு கிராமம் உண்டு.இங்கு பழமையான பெருமாள் கோயிலும் மறைந்த அக்கிரகாரம் ஒன்றின் சுவடுகளும் உள்ளன..தேவரீர் குறிப்பிடும் ஆசார்யரும் இத்தலத்தைச் சேர்ந்த மஹானோ?

    ReplyDelete

Post a Comment