Skip to main content

சுஜாதாவிற்கு கிடைத்த ’சாதித்த’ அகாடமி விருது !

சில மாதங்களுக்கு முன் ஒரு இணைய இதழ்

”எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஏன் உயரிய விருதுகள் வழங்கப்படவில்லை. அவர் சாதி ஒரு காரணமா?”
என்ற கேள்விக்குப் பதில் அளிக்குமாறு என்னைக் கேட்டிருந்தார்கள்.

அவர்களுக்கு அனுப்பிய பதில் கீழே...




சுஜாதாவிற்கு கிடைத்த ’சாதித்த’ அகாடமி விருது !

ஒரு நடிகரிடம் உங்களுக்குப் பிடித்த நடிகர்கள் யார் என்ற கேள்விகளை எப்போது கேட்டாலும் அவர்களுடன் சம காலத்தில் இருக்கும் நடிகர்களைக் கூறமாட்டார்கள். எம்.ஜி.ஆர். சிவாஜி போன்றவர்களைக் குறிப்பிடுவார்கள். இது ஒரு விதமான டெம்பிளேட் பதில். இது இசையமைப்பாளர்கள், கர்நாடகப் பாடகர்கள் முதல் எழுத்தாளர்களுக்கும் இது பொருந்தும்.

தமிழ் எழுத்தாளர்கள் கூறும் ‘டெம்பிளெட்’ பதில் புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா, கி.ஜா, நா.பா … இதைத் தவிர இலக்கியம் படைத்துக்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கும் எழுத்தாளர்கள் பக்கத்து மாநிலங்களில் உள்ள குஞ்சனையோ குட்டனையோ எக்ஸ்டராவாக குறிப்பிடுவார்கள்.

இன்றைய பெரும்பாலான எழுத்தார்கள் சுஜாதாவை ஞாபகமாக மறந்துவிடுவார்கள். இதில் உள்ள உளவியல் காரணங்களை யோசித்தால் அசூயை கலந்த போட்டி தான் காரணம் என்று கூறலாம்.

’அசூயை’ என்றால் பொறாமை. ஸ்ரீ ராமாயணத்தில் அசூயை இல்லாதவள் ’அனசூயை’ என்ற பாத்திரம். அவளுக்கு யார் மீதும் பொறாமை கிடையாது, யாரும் அவள் மீது பொறாமைப் பட முடியாது. சுஜாதா அனசூயை போன்றவர். இவருக்கு யார் மீதும் பொறாமை இல்லை ஆனால் மற்றவர்களுக்கு ?

சுஜாதா தன் சமகால எழுத்தாளர்களை வஞ்சனை இல்லாமல் புகழ்ந்து தள்ளினார். எந்த எழுத்தாளரைப் பற்றிக் கேட்டாலும் அவர் எழுதிய கதை ஒன்றை நினைவு வைத்துக் கொண்டு அதை குறிப்பிடுவார். நல்ல எழுத்தை நேசித்தார். தன் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்திருந்தார் அதனால் தனக்குப் போட்டியாக யாரையும் நினைக்கவில்லை.

சுஜாதா இறைவனடி சேர்ந்து பல வருடங்கள் ஆகியும் சுஜாதாவின் எழுத்து இலக்கியமா ? அவருக்கு ஏன் விருதுகள் வழங்கப்படவில்லை ? என்ற கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலைக் கூற விரும்புகிறேன்.

2008 பிப் 27 அவரைப் பிரிந்த நாளில் கலைஞர் முதல் பல பிரபலங்கள் வந்தார்கள். வருத்தப்பட்டார்கள். அஞ்சலி செலுத்தினார்கள். என்னைப் போல ரசிகர்கள் அழுதார்கள். ஆனால் நான் வியந்த விஷயம் மயானத்தில் வேலை செய்யும் சிப்பந்தி அழுதுகொண்டே இருந்தார். அழுததற்குக் காரணம் அவரும் சுஜாதா ரசிகர் !

சுஜாதாவின் பூத உடலைச் சிதையில் வைத்து மின்சார சேம்பருக்குள் மெதுவாக தள்ளிய போது ஒருவர் ‘சுஜாதா வாழ்க!’ என்று உணர்ச்சிகரமான குரலில் உரக்க சொன்னார்.

மென்பொருள் முதல் மயானம் வரை எல்லோரையும் கவர்ந்த அவருடைய எழுத்து இலக்கியமாக இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன ? சிதையில் தள்ளும் போது ஒலித்த ’சுஜாதா வாழ்க!’ என்ற அந்த கோஷமே அவருக்குக் கிடைத்த ’சாதித்த’ அகாடமி விருது !

"நாற்பது வருஷமாக உங்களைத் தொடர்ந்து படித்து வருகிறேனே... என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்ற கேள்விக்கு நீண்ட யோசனைக்குப் பின் சுஜாதா சொன்ன பதில் "நாற்பது வருஷம் உங்களைத் தொடர்ந்து படிக்க வைத்திருக்கிறேனே, என்னைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதேதான்!"

- சுஜாதா தேசிகன்
14.01.2023

Comments

  1. என்னை பொருத்தவரை சுஜாதாவின் ஸ்ரீ ரங்கத்து தேவதைகளுக்கு சாஹித்ய
    அகாடமி அவரை கௌரவித்து இருக்க வேண்டும். ஆர் கே நாராயணனின்
    மால்குடி டேஸ்சுக்கு இணையான படைப்பு அது. சுஜாதா டெல்லியில் லாபி
    செய்பவர் அல்ல . அரசியல் பின்புலம் இல்லாதவர் .

    ReplyDelete

Post a Comment