Skip to main content

கோதை கீதை - 2

கோதை கீதை - 2



திருப்பாவை - 2

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு*
செய்யும் கிரிசைகள் கேளீரோ!* பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,*
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி**
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்*
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்*
ஐயமும் பிச்சையும் ஆம் தனையும் கை காட்டி*
உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்

கீதையில் 4.15 ஸ்லோகம் இது

ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி:
குரு கர்மைவ தஸ்மாத் த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் ||

கீதையின் இந்த ஸ்லோகத்தின் பொருள் :

முற்காலத்தில் மோக்ஷத்தில் நாட்டம் உடையவர்களும் கர்மயோகத்தின் தத்துவம் அறிந்து கர்மம் செய்திருக்கிறார்கள். ஆகவே நீயும் முன்னோர்களால் தொன்றுதொட்டு செய்யப்பட்டு வருகின்ற கர்மங்களையே செய்வாயாக.

அதாவது அர்ஜுனனிடம் கண்ணன் “நீயோ முமுக்ஷு, ஆகையால் எவ்வாறு பிற முமுக்ஷுக்கள் உலக நன்மைக்காகக் கர்மம் செய்தார்களோ அவ்வாறே நீயும் உலக நன்மைக்காகக் கர்மத்தைச் செய்வாயாக” என்று சொல்லுகிறார். (முமுக்ஷுக்கள் = மோக்ஷத்தில் நாட்டம் கொண்டவர்கள் )

வேதத்தின் நமக்கு விதிக்கப்பட்டுள்ள கர்மங்களை மாற்றும் உரிமை நமக்கு இல்லை. நம் முன்னோர்கள் என்ன கர்மங்களைச் செய்தார்களோ அதைப் பின்பற்ற வேண்டும். இதைத் தான் ஆண்டாள் ‘செய்யாதன செய்யோம்’ என்கிறாள்.

அவரவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கர்மங்களைச் செய்யும் போது தனக்கான கர்மா என்று நினைத்துச் செய்தால் அந்த கர்மத்துடன் ஒரு தொடர்பு ஏற்படுகிறது. இது தான் வினையே. இது கூடாது. மாறாக நாம் செய்யும் எல்லா கர்மாக்களும் மற்றவர்களுக்காக என்று செய்யப்படும் போது நமக்குக் கர்மங்களுடன் தொடர்பு ஏற்படுவதில்லை. பற்றற்ற தன்மை வந்துவிடுகிறது.

இதற்கு ஸ்ரீராமானுஜர் தன் பாஷ்யத்தில் “என்னை அறிந்துகொண்ட முன்னோர்கள் மோட்சம் பெறுவதில் பேராவல் கொண்டவர்களாக, தங்கள் பாவங்களை நீங்கப் பெற்று என்னால் உபதேசிக்கப்பட்ட பழமை வாய்ந்த கர்ம யோகத்தைப் செய்வாயாக” என்று கூறுகிறார். இதை தான் ஆண்டாள் உய்யுமாறு எண்ணி - கடைத்தேறும் வழி நம் முன்னோர்கள் சொன்ன கர்மாக்கள் என்கிறாள்.

இன்னொரு கீதையின் ஸ்லோகம் ( 2.48 ) இது

யோகஸ்தகுரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநஞ்ஜய |
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே ||

இதன் பொருள் : பற்றை துறந்து கைகூடுதல், கை கூடாமை, இவற்றில் சமநிலையாக இருந்து கொண்டு யோகத்தில் நிலைபெற்றபடி கர்மங்களை செய்; ஏனெனில் சமநிலையே யோகம் என்று கூறப்படுகிறது.

சற்று குழப்பமாக இந்த விஷயத்தை ஓர் உதாரணத்துடன் பார்க்கலாம்.

ஒரு மருத்துவமனை. அதில் இரண்டு செவிலியர்கள் வேலை செய்கிறார்கள். இருவருக்கும் ஒரே வேலை. ஒருத்தின் “என் வயிற்றுப்பிழைப்புக்கு இந்த வேலையைச் செய்கிறேன்” என்கிறாள். இன்னொருத்தி “நான் இந்தச் சமூகத்துக்கு வேலை செய்கிறேன்” என்கிறாள். இருவரும் ஒரே வேலையை ; ஒரே சம்பளம் ஆனால் எந்த பாவத்துடன் வேலை செய்கிறார்கள் என்பதில் தான் வேறுபாடு.

கர்மாவினால் தொடர்பு ஏற்பட்டால் இன்பம், துன்பம், அழுகை, கோபம், வருத்தம் என்று எல்லாம் வரிசையாக வந்துவிடும். ஒரு புண் ஏற்படுகிறது, சொறிவதால் இன்பம் ஏற்படுகிறது. சொறிவதால் எரிச்சலும் ஏற்பட்டு துன்பம் உண்டாகிறது. இரண்டுக்கும் புண் என்ற தொடர்பு போல, உலகத்தின் தொடர்பினால் உண்டாகும் இன்பம்-துன்பம் இரண்டுமே துன்பத்தின் வடிவமே என்று புரிந்துகொள்ள வேண்டும்.

கடமையைச் செய். தர்மத்தைச் செய் (ethical practices). அது தான் வேதத்தின் விதிக்கப்பட்டிருக்கிறது. அப்படி செய்யும் போது பலனைக் காரணமாக கொண்டு அதில் ஈடுபடாதே, சேவை உணர்வுடன் கர்மங்களைச் செய்வதற்கு மட்டுமே உனக்கு உரிமை உள்ளது என்கிறது கீதை.

நான் செய்யும் கர்மா பலனுக்கு என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, நான் செய்யும் கர்மாவினால் சமூகத்துக்குப் பலன் என்று இருந்தால் ’சமூகமே பகவத் ஸ்வரூபம்’ என்ற எண்ணம் வந்துவிடும். அந்த நிலையே யோக நிலை. அப்படி வரும் போது தான் பரந்த மனதுடன் ‘வையத்து வாழ்வீர்காள்’ என்று பாட முடியும்.

இந்த யோக நிலை எப்படி வரும் ?

விடிந்தால் ஸ்ரீராமருக்கு முடிசூட்டு விழா. ஆனால் ஓர் இரவில் எல்லாம் தலை கீழானது. அந்த சமயம் ஸ்ரீராமர் எப்படி இருந்தார் என்பது தான் யோக நிலை. வருத்தமும் இல்லை, கோபமும் இல்லை. பரதன் சந்திக்கும் போது ஸ்ரீராமரிடம் இதைப் பற்றிக் கேட்ட போது ‘இது எல்லாம் சகஜம்’ என்கிறார். நம் ஆசாரியர்கள் ஸ்ரீராமரைப் பின்பற்றுகிறார்கள். நமக்கு யோக நிலை வர வேண்டும் என்றால் நம் ஆசாரியர்களைப் பின்பற்ற வேண்டும்.

- சுஜாதா தேசிகன்
1.1.2023

Comments