24. இராமானுசன் அடிப் பூமன்னவே - வடிவழகு மணக்கால் நம்பி காட்டு மன்னார் முன்பு கைகூப்பி நின்றார். தன் ஆசாரியர்களின் ஆசை நிறைவேறப் போகிறது என்று அவர் உள்ளம் மகிழ்ச்சியில் திளைக்க, அவர் திருவாக்கில் திருமங்கையாழ்வாரின் திருநெடுந்தாடக பாசுரம் உலகம் ஏத்தும் தென் ஆனாய்! வட ஆனாய்! குட பால் ஆனாய்! குணபால மத யானாய்! இமையோர்க்கு என்றும் முன் ஆனாய்! பின் ஆனார் வணங்கும் சோதி! திருமூழிக்களத்து ஆனாய்! முதல் ஆனாயே! உதிர்ந்து காட்டுமன்னார் திருவடியில் விழுந்தது.(1) குருவை சீடன் தேடி அடையவேண்டியதே உலக நியதி. ஆனால் உலகம் நல்வாழ்வு பெறுவதற்கு சீடனைத் தேடி குருவும் செல்லலாம் என்று அந்த நியதியை மாற்றி மணக்கால் நம்பி நாள்தோறும் ஆளவந்தாரது அரண்மனைக்குச் சென்று அன்று இடைப் பிள்ளையான மாயக் கண்ணன் அர்ஜுனனுக்கு தேர்த்தட்டிலிருந்து அன்புடன் அருளிய பதினெட்டு அத்தியாயங்கள் கொண்ட கீதையின் செம்மைப் பொருளை கண்ணபிரான் சொன்னபடியே ஆளவந்தாருக்குத் தெளிந்த ஆர்வம் உண்டாகுமாறு பதினெட்டு நாள் உரைத்தார். ஒரு நாள் மணக்கால் நம்பி கீதையின் சரம ஸ்லோகமான “ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ, அஹம் த்வா ...