ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் 750வது திருநட்சத்திரத் அன்று காலை அஹோபிலத்தில் இருந்தேன் ( அக்டோபர் 1, 2017 ) அஹோபிலம் என்றவுடன் நவ நரசிம்மர்கள் நினைவுக்கு வருவார்கள். தசாவதாரத்தில் நரசிம்ம அவதாரத்துக்கு தனி சிறப்பு உண்டு. ஒரே சமயத்தில் மனித ரூபம், மிருக ரூபம் இரண்டையும் இணைத்துக்காட்டியது நரசிம்ம அவதாரத்தில் மட்டுமே. ஹிரண்யன் கேட்ட வரம், பிரகலாதனின் நாராயண பக்தி பற்றி எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். பெருமாள் ஏன் சிம்ம ரூபத்தை எடுத்துக்கொண்டார் ? புலி, கரடி என்று ஏதாவது ஒரு மிருக ரூபத்தை எடுத்துக்கொண்டிருக்கலாமே ? ஏன் சிங்கம் ? யோசித்துக்கொண்டே ஒண்ணரை நாளில் எப்படி ஒன்பது நரசிம்மர்களையும் சேவிக்க போகிறோம் என்று சுற்றி இருந்த மலையை பார்த்த போது மலைப்பாக இருந்தது.