ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகன் 750வது திருநட்சத்திரத் அன்று காலை அஹோபிலத்தில் இருந்தேன் ( அக்டோபர் 1, 2017 )
அஹோபிலம் என்றவுடன் நவ நரசிம்மர்கள் நினைவுக்கு வருவார்கள். தசாவதாரத்தில் நரசிம்ம அவதாரத்துக்கு தனி சிறப்பு உண்டு. ஒரே சமயத்தில் மனித ரூபம், மிருக ரூபம் இரண்டையும் இணைத்துக்காட்டியது நரசிம்ம அவதாரத்தில் மட்டுமே.
ஹிரண்யன் கேட்ட வரம், பிரகலாதனின் நாராயண பக்தி பற்றி எல்லாம் உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். பெருமாள் ஏன் சிம்ம ரூபத்தை எடுத்துக்கொண்டார் ? புலி, கரடி என்று ஏதாவது ஒரு மிருக ரூபத்தை எடுத்துக்கொண்டிருக்கலாமே ? ஏன் சிங்கம் ? யோசித்துக்கொண்டே ஒண்ணரை நாளில் எப்படி ஒன்பது நரசிம்மர்களையும் சேவிக்க போகிறோம் என்று சுற்றி இருந்த மலையை பார்த்த போது மலைப்பாக இருந்தது.
திருமங்கை ஆழ்வார் ”தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்க வேள் குன்றமே” என்று தேவதைகளை தவிர மற்றவர்கள் சென்று சேவிக்க முடியாத இடம் என்கிறார். அஹோபிலத்துக்கு ஆழ்வார் கூறும் நல்ல தமிழ் பெயர் ’சிங்கவேள்குன்றம்’
சிங்க - சிங்கம், வேள் - என்பதற்கு பல அர்ததங்கள் இருந்தாலும், ஒப்பற்ற ஆண் மகன் - ஹீரோ என்ற அர்த்தம் இங்கே அருமையாக பொருந்துகிறது. குன்றம் - சிறிய மலை
நவ நரசிம்மர்களும் மேல் அஹோபிலம், கீழ் அஹோபிலம் என்று இரண்டு பகுதிகளில் சிதறி இருக்கிறார்கள். ஏற்கனவே அஹோபிலம் சென்று வந்த அனுபவம் இருப்பதால், முதலில் பாவன நரசிம்மரை சேவித்துவிட்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்தேன்.
மலையின் தென்புறம் அடர்ந்த காட்டுப்பகுதியில் பாவன நதிக்கரையில் எழுந்தருளியுள்ளார். டிராக்டர், அல்லது ஜீப்பில் தான் செல்ல வேண்டும் போகும் வழி அடர்ந்த காட்டுப்பகுதி; சீரற்ற மண் பாதை டிராக்டரின் சக்கரம் பாதி உள்ளே செல்லும் அளவுக்கு சேற்றுக்குழம்பு.
சேறு இல்லாத சில இடங்களில் பாறைகள். டிராக்டர் அந்த பாறைகளில் ஏறிவிட்டு வழுக்கிக்கொண்டு கீழே இறங்கும்.
வாகனங்கள் போடும் ஆட்டத்தில் வேட்டியோ அல்லது எலும்புகளோ கழன்றுவிடும். திரும்பி ஒழுங்காக வந்து சேர்வோமா ? என்று நம் மனதுக்கும், உடலுக்கும் சவால் விடும் இடம்.
காலை ஒன்பது மணிக்கு ஏதோ ஒரு டிராக்டரில் ஏறினேன். முதல் நாள் மழையின் காரணமாக சேறு அதிகமாக இருந்தது. உடம்பில் நகம் தவிர்த்து எல்லா இடங்களிலும் வலி தெரிய ஆரம்பித்தது.
காடுகளினூடே செல்லும் போது நூற்றுக்கணக்கான வண்ண பட்டாம் பூச்சிகளை ஒரே இடத்தில் குப் என்று பறக்கும் காட்சி சினிமாவில் தோன்றும் கிராபிக்ஸ் மாதிரி இருந்தது.
கஜேந்திர மோட்சம் கதையில் யானையின் கால் முதலையின் வாயில் மாட்டிக்கொண்ட போது வரும் ஸ்லோகத்தில் சுற்றி அழகான இயற்கை காட்சிகள் ஆனால் யானையால் ரசிக்க முடியவில்லை என்பது போல எங்களால் இயற்கை காட்சிகளை முழுவதும் ரசிக்க முடியாமல், மூங்கில் மூள், கொடிகள் நம் முகத்துக்கு முத்தம் கொடுக்க ஆரம்பிக்க கூட இருப்பவர்கள் அதை முறிக்க முற்பட்டார்கள். டிராக்டர் ஓட்டுபவர் ”செடிகளை உடைக்காதீர்கள் முகத்துக்கு நேரே வந்தால் அதை தள்ளிவிடுங்கள்” என்றார். நிஜ காடு. விதுர நீதியில் ”சிங்கங்கள் இல்லாத காடு அழிக்கப்பட்டு விடும்” என்ற உவமை ஒன்று நினைவுக்கு வந்தது. அஹோபில காடுகளை காத்துக்கொண்டு இருப்பது இந்த மாதிரி டிராக்டர் ’நர’சிங்கங்கள் என்று நினைத்துக்கொண்டேன்.
போகும் வழியில் எங்களுக்கு முன் இருக்கும் ஜீப், அல்லது டிராக்டர் சேற்றில் மாட்டிக்கொண்டு இருக்கும். அல்லது ஏதாவது ஒரு ஜீப்பின் சக்கரம் கழண்டு ஜீப்பில் இருப்பவர்கள் செய்வதறியாமல் நின்றுகொண்டு இருப்பார்கள். அப்படி மாட்டிக்கொண்டு இருக்கும் டிராக்டர்கள் ஆக்ஸிலேட்டரை நரசிம்ம பெருமாள் மாதிரி உறும சேற்று மழை இலவசம். டிராக்டர் ஓட்டுனர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
கிட்டதட்ட இரண்டரை மணி நேரம் கழித்து பாவன நரசிம்மர் கோயில் தென்பட எல்லோர் முகத்திலும் ‘அப்பாடா’ மகிழ்ச்சி ஏற்பட்டது. இரண்டரை மணி நேரம் வெறும் 20 கிலோ மீட்டர் என்றால் கடந்து வந்த பாதை பற்றி யோசித்துப்பாருங்கள்.
செஞ்சு என்றழைக்கப்பட்ட மலைவாழ் மக்கள் வசித்த இடம். அங்கே பிறந்தவள் செஞ்சு லட்சுமி ஆண்டாளை போல நாராயணனை மட்டுமே காதலித்து கைப்பிடித்தவள். திருமகளின் அவதாரம். இங்கே இருக்கும் வேடிவ குலத்தினர் இந்த நரசிம்மரை தங்கள் இஷ்ட தெய்வமாக சேவிக்கிறார்கள். நரசிம்மரை ஒபாலெசுடு (Obalesudu) என்று செல்லமாக அழைக்கிறார்கள்.
சதுர்புஜங்களுடன் சுகாசனத்தில் வீற்றிருக்கிறார் நரசிம்மர். மேல் கரங்கள் சக்கரம், சங்கு பிடித்திருக்க கீழே இருக்கும் கரங்கள் ஒன்று இடது மடியில் திருமகளை அரவணைத்து மற்றொரு கரம் அவள் சிபாரிசில் அபய ஹஸ்தம் காட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த காட்சிக்கு ஏழு தலை ஆதிசேஷன் குடையாக இருக்கிறார்.
கோயிலுக்கு வெளியில் விரல் சைஸ் கப்பில் டீ விற்கும் கடையிலிருந்து கருடஸ்தம்பத்துடன் இந்த கோயில் அழகு. நரசிம்மர், செஞ்சு லக்ஷ்மி பற்றி இந்த ஊரில் நிறைய நாட்டுப்புற பாடல்கள் இருக்கிறது, நரசிம்மர் செஞ்சு லக்ஷ்மி சிற்பங்கள் கீழ் அஹோபிலத்திலும், மேல் அஹோபிலத்திலும் இருக்கிறது.
நரசிம்மருக்கும், செஞ்சு லக்ஷ்மிக்கும் நடைபெற்ற திருமணத்தை விவரித்து சமிஸ்கிருதத்தில் நாடகம் எழுதியுள்ளார் ஏழாம் அஹோபில மட ஜீயர்.
மீண்டும் மேடு பள்ளத்திலும், சேற்றிலும் சிக்கி தவிக்கும் போது எல்லோரும் நாராயணா, நரசிம்மா, ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, ராமானுஜா வண்டியை கெட்டியாக பிடித்துக்கொண்டு பல்லாண்டு பாட மாலை நேர வெய்யில் சிகப்பாக பெரியாழ்வார் பாடும் “அந்தியம் போதில் அரியுரு வாகி அரியை அழித்தவனை” (அந்தியம் போது - மாலை நேரம் , அரியுரு - நரசிங்மம், அரி - பகைவன்,) சேவித்துவிட்டு வரும் போது கிட்டத்தட்ட இருட்டிவிட்டது.
அதே ஓட்டுனர் “வாங்க பார்கவ நரசிம்மரையும் சேவித்துவிடலாம்” என்று கூப்பிட்ட போது பலர் “இதுவே போதும் எல்லாம் கழண்டுவிட்டது” என்று பலர் கழண்டுகொண்டார்கள். ஆனது ஆச்சு என்று சிலர் மட்டும் சரி என்று கிளம்பினோம்.
’கும்’ இருட்டு என்று கேள்விபட்டிருக்கிறோம். அன்று பார்த்தேன். இங்கே வர்ணிப்பதை கண்ணை மூடிக்கொண்டு கற்பனை செய்து பாருங்கள். சுற்றி அடர்ந்த காடு, உங்களை சுற்றி பூச்சிகள் சத்தம். எங்கோ பறவைகளின் சலசலப்பு என்று மிரண்டு தான் போனோம். அப்போது அங்கே பைக்கில் இருந்த ஒருவர்
“கோயில் சாத்தியாச்சே” என்ற சொல்ல அர்ச்சகர் என்று புரிந்துக்கொண்டோம். என்ன செய்வது என்று தெரியாமல் இருட்டில் நாங்கள் முழித்ததை அவர் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
”ஏதாவது செய்ய முடியுமா ?” என்று நாங்கள் கேட்பதற்கு முன்பே அவர் “சரி வாங்கோ” என்று தன் பைக்கை ஸ்டார்ட் செய்து மலை மீது இருக்கும் படிகளில் ஏதோ ஜாக்கிசான் படத்தின் சண்டைக் காட்சி போல ஓட்டிக்கொண்டு சென்றார். மொபைல் டார்ச் வெளிச்சத்தில் பின் தொடர்ந்தோம்.
மேலே சென்ற போது அங்கேயும் அதே இருட்டு எங்களை தொடர்ந்தது. டார்ச் வெளிச்சத்தில் கதவு திறக்கப்பட்டு நம்மாழ்வார் சொல்லுவது போல ’கிளர் ஒளி’ டார்ச் லைட் கீற்று அணையும் முன் நரசிம்மரை பார்க்க அவர் ’வளர் ஒளி மாயோனாக’ பார்கவ ரிஷிக்கு காட்சி கொடுத்த அதே கோலத்தில் நான்கு திருக்கரங்கள் - மேல் நோக்கி இருக்கும் கைகளில் சங்கு சக்கரமும், கீழ் நோக்கி இருக்கும் கையில் ஹிரணிய வதமும், திருபாததுக்கு கீழே பிரகலாதனுடன் எங்களுக்கு காட்சி கொடுத்தார்.
இரவு எல்லோரும் அவரவர் தங்கும் இடத்துக்கு செல்ல ஆயத்தமாக கிளம்பிக்கொண்டு இருக்க மறுநாள் எப்படி மற்ற ஏழு நரசிம்மர்களையும், அதுவும் அரை நாளில் சேவிக்க முடியும் என்று கேட்ட போது “மதியம் கிளம்ப வேண்டும்.. நோ சான்ஸ்” என்றார்கள்.
என்ன செய்வது என்று யோசிக்கும் போது “பேசாமல் என்னுடன் மடத்திலேயே படுத்துக்கொள்” என்று நரசிம்மர் ஐடியா கொடுக்க அஹோபில மடத்தில் எழுந்தருளியிருக்கும் நரசிம்மர் சன்னதி வாசலில் படுத்துக்கொண்டேன்.
அடியேன் படுத்துக்கொண்டிருக்கும் அஹோபில மடம் பற்றி சிறுகுறிப்பு.
ஸ்ரீராமானுஜருக்கு பிறகு பல ஆசாரியர்கள் ஸ்ரீவைஷ்ணவத்துக்கு பெருமை சேர்த்தார்கள். அவர்களில் ஸ்ரீ வேந்தாந்த தேசிகனுக்குத் தனி இடம் உண்டு. அவருக்குப் பின் அவர் திருகுமாரர் வரதாச்சார்யார் அந்தப் பொறுப்பை ஏற்றார். ஆனால் அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ஏற்கச் சரியான தலைமை அமையவில்லை.
1379ல் கிடாம்பு கேசவாச்சார்யர் திருக்குமாரராக அவதரித்த ஸ்ரீநிவாச்சார்யார் என்பவர் ஸ்ரீநாராயணன் மீது அளவு கடந்த பக்தியுடன் சாஸ்திரங்கள் நன்று கற்று, விசயநகரப் பேரரசரான கிருஷ்ணதேவராயர் ராஜ சபையில் விசிஷ்டாத்வைதத்தை நிலைநாட்டிப் புகழ்பெற்றார். அவருடைய 20வது வயதில் நரசிம்மர் கனவில் தோன்றி அஹோபிலத்துக்கு வா என்று அழைக்க அங்கே சென்ற போது அவரை நரசிம்மர் ஒரு வயதான யோகியின் தோற்றத்தில் வரவேற்று, வேதங்களுடன் நரசிம்ம மந்திரத்தை அவருக்கு உபதேசித்து அங்கு உள்ள ஸ்ரீராமானுஜர் சன்னதியில் திரிதண்டத்தை வழங்கி சந்நியாச தர்மத்தை ஏற்றுக்கொள்ளச் செய்தார். ’சடகோப யதி’ என்ற திருநாமத்தையும் சூட்டினார். வயதான யோகி தான் நரசிம்மர் என்று உணர்ந்த ஸ்ரீநிவாச்சார், ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நிறுத்த நிர்மாணித்தது தான் அஹோபில மடம்.
ஜீயர் ஆழ்வார் திருநகரிக்கு சென்று சமயம் அங்கே களவாடப்பட்ட நம்மாழ்வாரை மறு ஸ்தாபிதம் செய்த பெருமையும் இவருக்கு உண்டு. அதனால் நம்மாழ்வார் ‘வண்’ என்ற அடைமொழியையும், மோதிரத்தையும் பரிசாக அளித்தார். அதனால் தான் ’வண் சடகோபன்’ என்று அழைக்கிறோம். இதைப் பார்த்த ஆதிப்பிரான் பூரிப்பில் நம்மாழ்வாரே உமக்குப் பரிசு கொடுக்க நான் கொடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்காது என்று தன்னுடைய பெயரில் உள்ள ‘ஆதி’யை கொடுக்க அது பெயரின் ஆதியில் சேர்ந்து ஸ்ரீஆதிவண் சடகோப ஜீயர்’ என்று ஆனது. வண் என்றால் புகழ் என்று பொருள். ( இன்றும் ஜீயர்கள் கையெழுத்து போடும் போது ’ஸ்ரீசடகோபஸ்ரீ’ என்று தான் கையெழுத்துப் போடுவார்கள். ஜீயர்களின் பட்டாபிஷேகம் அன்று மட்டும் ஸ்ரீ நம்மாழ்வார் கொடுத்த மோத்திரத்தை சாத்திக்கொள்வார்கள் என்பது மரபு. அதனால் தான் ஸ்ரீஆதிவன் சடகோபன் விரலில் மோதிரத்தை பார்க்கலாம் )
நவ நரசிம்மர்களில் மாலோலன் தான் நித்திய திருவாராதன பெருமாளாக ஜீயர்களுடன் பயணம் செய்யப் செய்கிறார். ஜீயரை அதனால் ’அழகிய சிங்கர்’ என்றும் அழைக்கிறோம். ’ஆதிவண் சடகோப யதீந்திர மஹா தேசிகன்’ என்று அழைக்கப்பெற்ற இந்த முதல் ஜீயரைத் தொடர்ந்து இன்றைக்கு 620 ஆண்டுகளாக எம்பெருமானார் தரிசனத்தை அஹோபில மடத்து ஜீயர்கள் வளர்த்து வருகிறார்கள்.
காலை நான்கு மணிக்கு எழுந்த போது தூறிக் கொண்டு இருந்தது… இரவு பலமான மழையின் அடையாளங்கள் தெரிந்தது. விடிந்தவுடன் என் நண்பரை அழைத்துக்கொண்டு மூங்கில் கம்பு ஒன்றை வாங்கிக்கொண்டு மேல் அஹோபிலத்துக்கு புறபட்டோம்.
அஹோபிலத்தின் சிரமமில்லாமல் சேவிக்க கூடிய நரசிம்மர் அஹோபில நரசிம்மர். இது தான் பிரதான கோயில். காலை சென்ற போது ”கோயில் திறக்க நேரம் ஆகும்” என்றார்கள். பிறகு சேவித்துக்கொள்ளலாம் என்று வராக நரசிம்மரை சேவிக்க சென்றோம்.
போகும் பாதையில், அடர்ந்த மரம், செடிகள், கூழாங்கற்களுடன் ரம்மியமாக ஓடும் நீரோடைகள், பறவைகளின் ஒலி, மழைச் சாரலுடன் நடந்து செல்லும் போது வழியில் 116 தூண்கள் கொண்ட காலட்சேப மண்டபம் செடிகளுடன் காட்சி அளிக்கிறது.
விஜயநகர அரசர்கள், அல்லது அவர்களுக்கு முன் கட்டிய 11-12 ஆம் நூற்றாண்டு மண்டபம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாலர்கள். இந்த மண்டபத்தில் தான் முதலாம் அழகிய சிங்கர் பல காலட்சேபங்களை நிகழ்த்தினார் என்ற பல நூறு ஆண்டுகள் வரலாற்றை பத்து அடி நடந்து கடந்து சென்றோம்.
சற்று நேரத்தில் ’க்ரோடகார நரசிம்மர்’ என்ற வராக நரசிம்மர் சன்னதி வர “வாங்கோ எந்த ஊர்?” என்று குகை உள்ளேயிருந்து அர்ச்சகர் விசாரிக்க இரண்டு அவதாரங்களின் கலவையாக வராக ஸ்வாமி இடது மூக்கின் மீது பூமா தேவியுடன் காட்சி அளிக்கிறார். பக்கத்திலேயே லக்ஷ்மி நரசிம்மர் எழுந்தருளியிருக்கிறார். அவரை கண் குளிர சேவித்துவிட்டு ஜ்வாலா நரசிம்மரை சேவிக்கபுறப்பட்டேன்.
மெலிதான தூறல், எங்கும் நீர் கசியும் பாறைகள், மலை மீது பனிமூட்டத்தை கடந்து.. ஜ்வால நரசிம்மர் சேவிக்க செல்லும் போது
“மொபைல் சிக்னல் இல்லை”
“அமெரிக்காவில் சிக்னல் இல்லாத இடமே இல்லை… சில வருடங்கள் முன் ஆல்ப்ஸ் சிகரத்தின் உச்சியிலும் கூட மொபைல் போன் வேலை செய்தது.. You are always connected”
“இங்கே சிக்னல் இல்லை என்றாலும் you are connected with the place” என்றேன்.
கையில் ஊன்றுகோலுடன் “ஜெய் நரசிம்மா, ஜெய் நாராயணா” என்று கூட்டம் சொல்லிக்கொண்டு போவது நமக்கு களைப்பு தெரியாமல் ஊக்கத்தை கொடுக்கிறது. வயதையும் பொருட்படுத்தாமல் பாட்டிகள் தவழ்ந்து ஏறுவதை பார்க்கும் போது அவர்கள் பக்தியை விவரிக்க இயலாது.
சற்று தூரம் நடந்த பின்னர் மலையிலிருந்து நீர்வீழ்ச்சி கொட்டுகிறது, இந்த நீர் தான் பவநாசினி என்ற ஆறாக ஓடுகிறது. தடுப்பு கம்பியை பிடித்துக்கொண்டு ஜ்வாலா ( நரசிம்மர் இரணியனை துவம்சம் செய்த போது அவர் முகம் நெருப்பு மாதிரி காட்சி அளித்ததாம். ஜ்வாலா என்றால் நெருப்பு என்று அர்த்தம்)
அர்ச்சகர் கொடுத்த துளசி பிரசாதத்தையும், மலையில் பொழியும் பவநாசனியின் தீர்த்த்ததையும் துவாதசிக்கு நரசிம்மர் அனுக்கிரகமாக எடுத்துக்கொண்டு கீழ் நோக்கி இறங்க தொடங்கினேன். .
மலைப் பாதை கொஞ்சம் அகலம் கம்மி இருந்தாலும் வாசகர்களை என்னுடன் வேகமாக நடக்க வேண்டுகிறேன். சற்று தூரம் நடந்த அமைதியான இடத்தில் மாலோலன் சன்னதி தெரிகிறது.
உள்ளே மூலவர் மாலோல நரசிம்மர் இடது மடியில் மாஹாலக்ஷ்மியை அமர்த்திக்கொண்டு காட்சி தருகிறார். இங்கே திருமங்கை ஆழ்வாருக்கு தனி சன்னதி இருக்கிறது. மாலோல நரசிம்மருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. நவ நரசிம்மர்களில் இந்த நரசிம்ம மூர்த்தியின் உற்சவர் தான் அஹோபில ஜீயர் போகும் இடத்திற்கெல்லாம் நித்திய திருவாராதனம் கண்டருள எடுத்து செல்லப்படுகிறது.
சன்னதிக்கு வெளியே நரசிம்மர் செஞ்சு லக்ஷ்மி சிற்பம் உடைந்து மரத்தடியில் பரிதாபமாக இருப்பதை பார்க்க முடிந்தது. சில வாரம் முன் கூகிளில் ஏதையோ தேடும் போது ஒரு ஜெர்மன் நாட்டு நரசிம்ம பக்தர் எடுத்த படங்களை பார்க்கும் போது ஒரு சிற்பம் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்று நான் எடுத்த படத்தையும் இதையும் ஒப்பிட்டு பார்த்த போது கோபமும், வருத்தமும் சேர்ந்து வந்தது. இந்த சிற்பங்கள் நம் ‘heritage’ என்ற உணர்வு வந்தால் மட்டுமே பாதுகாக்க முடியும்.
மாலோல நரசிம்மருக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு முன்பு மூடியிருந்த கீழ் அஹோபில நரசிம்மர் கோயிலுக்கு வந்தடைந்தேன். இயற்கை காட்சிகளுடன் கோபுரத்தை ரசித்துவிட்டு உள்ளே நுழைந்தேன்.
பாலாலயம் நடைபெற்றுக்கொண்டிருக்க, சேவித்துக்கொண்டு. 2013ல் சென்ற போது நினைவில் இருப்பதை இங்கே தருகிறேன்.
வழக்கமாக நாம் பார்க்கும் கோயில் மாதிரி வெளியே காட்சி அளித்தாலும் உள்ளே மலையில் உள்ள மேடு பள்ளத்தைக் கொண்டு இந்த கோயில் அமைந்திருக்கும். சின்னக் குறுகலான குகை அமைப்பில் இருக்கும் கர்ப்பகிரஹரத்தில், அஹோபில நரசிம்மர்( சின்ன மூர்த்தி ) காட்சி அளிப்பார். உடன் லக்ஷ்மி நரசிம்மர் உற்சவ மூர்த்தியும், ஆதிவண் சடகோப ஜீயரையும் இங்கே சேவித்துக்கொள்ளலாம்.
அங்கே கீழே வட்ட வடிவில் ஒரு பகுதியை இரும்பு தடுப்பு போட்டு மூடியிருப்பதை பார்க்கலாம். ஆறாம் பட்டம் அழகிய சிங்கர் உள்ளே சென்ற பிறகு வெளியே வரவில்லை இன்றும் அவர் நரசிம்மரை இன்னும் ஆராதனம் செய்துக் கொண்டிருப்பதாக பெரியோர்களின் கூற்று.
அடுத்து வேகமாக காரஞ்ச நரசிம்மரை சேவிக்க சென்றேன்.
கோயில் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்க உள்ளே காரஞ்ச நரசிம்மர் . சரியான உச்சரிப்பு கரஞ்ச. கரஞ்ச என்றால் வில் என்று பொருள். ராமரும் நானே நரசிம்மரும் நானே என்று காட்சி அளிக்கும் நரசிம்மர். ராமர் இருந்தால் அங்கே அஞ்சநேயர் இருக்க வேண்டுமே ? இருக்கிறார். நரசிம்மரை நோக்கி வணங்கியபடி சேவை சாதிக்கிறார். சில மணி நேரத்தில் மற்ற நரசிம்மர்களை சேவிக்க வேண்டுமே என்ற பதற்றத்துடன் வெளியே வந்த போது, ஒரு ஆட்டோ நின்றுக்கொண்டு இருக்க,
அவரிடம் மற்ற நரசிம்மர்களையும் சேவிக்க வேண்டும் என்று சொன்னவுடன் யோகாநந்த நரசிம்மர் சன்னதிக்கு அழைத்துச் சென்றார். ஹிரணிய வதம் முடித்த பின் பிரகலாதனுக்கு பல்வேறு யோக நிலைகளில் தன்னை எப்போதும் நெஞ்சில் நிலை நிறுத்தி ஆனந்தமாக தியானிக்கும் முறைகளை கற்றுக்கொடுத்த இடம். அவரை
சேவித்துவிட்டு சத்ரவட நரசிம்மர் சன்னதிக்கு ஆட்டோ சென்றது.
மிகவும் சாந்தமாக அதே சமயம் சுந்திர ரூபத்துடன் இருக்கும் நரசிம்மர் இவர்.
“‘அஹா ஊஹூ’ என்று இரண்டு கந்தர்வ இசைக்கலைஞர்கள் இசைக்க அதற்கு நரசிம்மர் தாளம் போடுவது மாதிரி சேவை சாதிக்கிறார்” என்றார் அர்ச்சகர். இதுவரை கரடுமுரடான, காட்டு பாதைகள் மாதிரி இல்லாமல் தார் சாலை, வழி நெடுகிலும் மரங்கள், வயல்கள் சூழ்ந்த இடத்தில் அமைந்த இந்த இரண்டு நரசிம்மர்களை சேவிக்கும் போது நமக்கும் ‘அஹா ஊஹூ’ என்று சொல்ல தோன்றுகிறது.
நவ நரசிம்மர்களையும் சேவித்துவிட்டு உள்ளக்களிப்புடன் மதியம் அஹோபில மலையடிவாரத்தில் உள்ள பிரகலாத வரதனான ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்ஹர் சன்னதிக்கு வந்த போது “சீக்கிரம், சீக்கிரம்… நடை சாத்த போகிறார்கள்” என்று அனுப்பினார்கள்.
பரிட்சைக்கும் போகும் முன் முக்கியமான நோட்ஸ் பார்த்து நினைவுபடுத்திக்கொள்வது மாதிரி, முன்பு சேவித்த எல்லா நரசிம்மர்களின் உற்சவ மூர்த்திகளும் ஒன்றாக இங்கே சேவை சாதிக்கிறார்கள்.
ஹிரணியனை வதம் செய்த பின் குழந்தை பிரகலாதனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று பெருமாள் கேட்க . அதற்கு பிரகலாதன் “வரமா ? உன்னை சேவிப்பது தான் எனக்கு வரம்” என்று பதில் கூறினான். பெருமாளின் பத்து அவதாரங்கள் ஒன்று நரசிம்ம அவதாரம். அந்த ஒரு அவதாரத்தை பத்து விதமாக அஹோபிலத்தில் சேவிக்க முடிகிறது.
கட்டுரையின் ஆரம்பத்தில் பெருமாள் ஏன் சிங்கத்தின் முகத்தை எடுத்துக்கொண்டார் ? என்ற கேள்வியை பார்த்தோம். ஸ்வாமி தேசிகன் பெருமாள் எந்த உருவம் என்று முடிவு செய்யாமல் இருந்தார் என்கிறார். சரி அப்படி என்றால் எப்போது முடிவு செய்தார் ? ஹிரணியன் பிரகலாதனுடனான சம்பாஷனையில் “ஒரு சிங்கம் எப்படி யானையை அடித்து ரத்தத்தை உறிஞ்சுமோ அதே போல உன் நாராயணனை…” என்று சொல்லி முடிக்கும் முன் பெருமாள் சிம்ம முகத்தை எடுத்துக்கொண்டு தூணை பிளந்துக்கொண்டு வெளியே வந்தார். அஹோபிலம் என்பதற்கு “ஆஹா என்ன பலம்” என்று ஒரு அர்த்தம் உண்டு.
உக்ர ஸ்தம்பம், பிரகலாதன் மேடு, மண்டபங்கள், தீர்த்தங்கள் என்று பல இடங்கள் இருக்கிறது. ஒரே நாளில் எல்லா நரசிம்மர்களையும் சேவிக்க முடியாது அதே போல ஒரே கட்டுரையில் இவை எல்லாவற்றையும் விவரிக்க இயலாது. ஸ்ரீரங்கத்தின் பெருமாளின் சிறப்பு பெயர் ‘நம்பெருமாள்’ திருமங்கை மன்னன் சிங்கவேள்குன்ற எம்பெருமானுக்கு கொடுத்த சிறப்பு பெயர் “நம்முடை நம்பெருமாள்”
திருமங்கையாழ்வார் மட்டுமே இந்த திவ்ய தேசத்தை பற்றி பாடியிருக்கிறார் ( மங்களாசாசனம் ) அவர் சிங்கவேள்குன்றம் பற்றி பாடிய பத்து பாடல்களில் மூன்று பாடல்களில் அங்கே சென்று சேவிப்பது கடினம் என்று பெரிய திருமொழியில் ஆழ்வார் சொல்லுகிறார்.
தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே ” ( 1-7-4 )
( தேவதைகள் தவிர மற்றையோர் சென்று கிட்ட முடியாததான.. )
சென்று காண்டற்கு-அரிய கோயில் சிங்கவேழ்குன்றமே ( 1-7-8 )
( கிட்டே சென்று ஸேவிக்க முடியாத கோயிலான...)
தினைத்தனையும் செல்ல ஒண்ணாச் சிங்கவேழ்குன்றமே ( 1-7-7 )
(வேடர்களும் இருப்பதால் ..செல்ல கடினமாக உள்ள.. )
1500 பேர் கலந்துக்கொண்ட யாத்திரையில் அடியேனுக்கும் என்னுடன் வந்த நண்பருக்கு மட்டும் தான் நவ நரசிம்மர்களையும் சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது. காரணம் அன்று இரவு அஹோபில மடத்தில் உள்ள நரசிம்ம சன்னதியின் வாசலில் படுத்துக்கொண்டது தான் !
பிகு: நேரம் இருந்தால் இதையும் படிக்கலாம் / பார்க்கலாம்
நரசிம்ம கோபுரங்களின் தொகுப்பு
டிராக்டர், டோலே, குச்சி, குளம் என்ற நான்கு விதமான விஷயங்களில் ஒன்றை கவனித்தேன். டிராக்டர் ஓடும் போது மேலும் கீழுமாக குதிக்கும் போதும், சேறு, பாறை என்று வழுக்கிக்கொண்டு செல்லும் போதும் அதை கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம். டோலியில் செல்லும் போது அதில் அமர்ந்து செல்பவர்கள் பயத்துடன் கெட்டியாக பிடித்துக்கொள்கிறார்கள். நடைபாதையில் வழுக்கி விழாமல் இருக்க கையில் குச்சியை அழுத்தி பிடித்துக்கொள்கிறோம். குளத்தில் இறங்கும் போது வழுக்காமல் இருக்க தடுப்பை கெட்டியாக பிடித்துக்கொள்கிறோம். பிரகலாதன் இதே போல நரசிம்மரை கெட்டியாக பிடித்துக்கொண்டான். அதே போல நாமும் பிடித்துக்கொண்டால் பிரச்சனையே இல்லை !
2013ல் பார்த்த சில சிலைகள் இன்றைய நிலை
கடைசியாக ஒரு வீடியோ தொகுப்பு
Sri Narasimhaya Namaha. Dear Sir, After reading this blog, I feel as if I have visited Ahobilam. Wonderfully written. I know how you are able to do so. It is because of your association with the great writer Sujatha avargal. Your other blog about Ayodhya was too good. Thank you for the sevai. May Lord Narayana bless you with Good Health & Peace so that you continue to give us such gems in future.
ReplyDeleteஅய்யா...நானும் தான் வந்தேன். டோலியில் தான் மலை ஏறினேன் ..மூன்று நரசிம்மர் ஸேவை சாதித்தார். ஜ்வாலா நரசிமரைச் சேவிக்கலாம் என்றால், டோலி தூக்குபவர்களே சரியான பயங் காட்டி விட்டார்கள். அதனால் கீழே உள்ள நரிம்மரைச் ஸேவிக்க அழைத்து வந்துவிட்டனர். ஆனால் சும்மா சொல்லக்கூடாது....டோலி தூக்குபவர்களில் ஒருவரான ராஜூ என்பவர் தாங்கள் காட்டிய இடத்தையெல்லாம் கதையாக தெலுங்க தமிழ் கலந்த பிரவாள மொழியிலேயே விவரித்தது நல்ல அனுபவம் தான். அதன்பின் அந்த ஆயிரவைசியர் அன்னதானக்கூடத்தில் ஒரு அருமையான பில்டர் காப்பி வாங்கிக் கொடுத்தார் பாருங்கள்.....சூப்பர் தான்.
ReplyDeleteஅதே பாவன நரசிம்மர் தரிசனமும கிடைக்கவில்லை என்பது குறை. ஆனால் உங்கள் வர்ணனையில் நேரடியாக தரிசித்தது போல் கண்டேன். என்னை நினைவிருக்கும் என நம்புகிறேன்.
அயோத்தியில் தான் முழு அறிமுகமானோம். அங்கே உங்கள் சுயமியில் நாங்களும் சேர்ந்து கொண்டோம். அந்தப்படத்தை ப்ளாக்கில் போடுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.
அந்தப் பயணம் முழுதும் உங்களைத் தேடி, கடைசியில் என் மைத்துனர் தான் உங்களை அடையாளங்காட்டி என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். தினமலர் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இளவல் ஹரிஹரன் என்று. நினைவிற்கு வருகிறதல்லவா..
நரசிம் தரிசனம் இன்று ப்ரஹ்ம மூர்த்தத்தில் கிடைத்தது அந்த ஸ்ரீமாலோலன் திருவருளன்றி வேறு என்ன இருக்க முடியும்.