Skip to main content

கேசவா !


“இந்தப் பாட்டை கேட்டுப்பாருங்க” என்று இந்த லிங்க் இன்பாக்ஸில் எட்டிபார்த்தது ( https://www.youtube.com/watch?v=IFo4LTOuG9U ) கேசவாய நமஹ … மாதவாய நமஹ என்று பாடல் முழுவதும் பெருமாளின் நாம வேள்வி பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஓர்  mesmerizing அனுபவம்.

பாடலில் சேசவாய, மாதவாய என்று வருகிறது ஆண்டாள் திருப்பாவை முப்பதாம் பாட்டு நினைவுக்கு வந்தது. அதில் ”வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனை” என்று நாமங்களை மாற்றிப் பாடுகிறார். ஆண்டாள் செய்தால் அதற்குக் காரணம் ஏதாவது இருக்கும் !.

’கதை கதையாம் காரணமாம்’  என்பது போல நமக்குத் தெரிந்த கூர்ம அவதார கதையை ஆமை வேகத்தில் வேகமாகச் சொல்லி முடிக்கிறேன்.

ஸ்ரீவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரம். அமிர்தத்தை எடுக்க  தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை மந்தாரமலையினை அச்சாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் கொண்டு கடைந்தனர் அப்போது மந்தாரமலை கீழ்நோக்கி இறங்கப் பெருமாள் கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து உதவினார் என்பது உங்களுக்குத் தெரிந்த கதை.

வீட்டில் போர் போடும் போது சேறு, களிமண் எல்லாம் வருவது போல பெருமாளின் முதுகின் மீது மந்தார மலையினை மத்தாக நிறுத்தி தேவர்களும் அசுரர்கள் கடைந்த போது அதிலிருந்து பல பொருட்கள் வெளிவந்தது.

ஆலகாலம் விஷம், கற்பக விருட்சம், ஐராவதம், உச்சைசிரவஸ் ( இந்திரனுடைய யானை, குதிரை ),பாரிஜாத மரம், தன்வந்தரி, அமிர்தம் வந்தது.

இன்னொரு முக்கியமானவர் வந்தார் அவர் - மஹாலெட்சுமி. வந்தவுடன், விஷ்ணு மஹாலெட்சுமியை தமது மார்பில்( ஸ்ரீவத்சம் ) அணைத்துக் கொண்டார்.

கடைந்துகொண்டு இருந்த போது தேவர்களும், அசுரர்களும் அமிர்தமே குறியாக இருக்க அவர்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவை கண்டுகொள்ளவில்லை. எவ்வளவு பெரிய இழப்பு இது ? அதை தெரிந்துகொள்ள கீழ் வரும் உதாரணத்தை சொல்றேன்.

நீங்களே பார்த்திருப்பீர்கள் வீட்டு வேலையை ஆரம்பிக்கும் முன் பெண்கள் கூந்தலை இழுத்து முடிந்து டைட்டாக  கொண்டை போட்டுப்பார்கள்.

நம் விஷ்ணுவும் அதே போல மந்தார மலையைத் தாங்க செல்லும் முன் “மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ” என்று திருமங்கை ஆழ்வார் அனுபவிக்கும் கூந்தலை நன்றாக முடிந்துகொண்டு சென்றார்.

ஜன கன மன பாடலை - ஏஆர் ஏ. ஆர். ரகுமான் பாடல் வீடியோவை நீங்கள் பார்த்திருப்பீர்கள் ( மீண்டும் பார்க்கலாம் இங்கே https://www.youtube.com/watch?v=ftD3gDA-5S0  ) அதில் 1:43ல் விக்கு விநாயகராம் கடம் வாசிப்பதைப் பாருங்கள். அதில் அவருடைய கூந்தல் அப்படியும் இப்படியும் ஆடும்.

எவ்வளவு டைட்டாக குடுமியை முடிந்துகொண்டாலும் கொடுக்கும் இருபது நிமிஷத்து தனியாவர்த்தனத்தில் அப்படியும் இப்படி ஆட்டி திறமையை காண்பிக்கும் எந்த வித்வானின்  டைட்டான குடுமியும் அவிழ்ந்துவிடும். அப்படி அவிழும் போது அந்த வித்வான் வாசிப்பதை நிறுத்த மாட்டார். முழுக்க வாசித்துவிட்டு கைதட்டல் வாங்கியபின் தன் குடுமியை மீண்டும் முடிந்துகொள்வார்.  

அதே போல் பெருமாளை மத்துக்குக் கீழே கடைந்த போது அவர் அப்படி இப்படியும் ஆட முடிந்த கூந்தல் அவிழ்ந்துவிட்டது. தனியாவர்த்தனம் (அமிர்த்தம் கிடைக்கும்) முடியும் வரை மீண்டும் கட்டிக்கொள்ளவில்லை. தனியாவத்தனம் போது கேண்டினுக்கு சென்று சாப்பாடே குறியாக இருப்பது போல, தேவர்களும் அசுரர்களும் அமிர்தமே குறியாக பெருமாளின் தனியாவர்த்தனத்தை பார்க்கத் தவறவிட்டார்கள். அப்போது பார்த்திருந்தால் ‘கேசவா’ என்று கூப்பிட்டிருப்பார்கள்.

‘கேசவன்’ என்பதற்குப் பல அர்த்தம் இருந்தாலும் அதில் ஒரு அர்த்தம் ”அழகிய கூந்தலை உடைய” என்பதாகும். மாதவன் என்பதற்கு என்ன அர்த்தம் ?

மஹா லெட்சுமியை மார்பில் வைத்திருப்பவன் என்று அர்த்தம் !

பாற்கடலைக் கடைந்த போது ஸ்ரீலக்ஷ்மி தோன்றி பெருமாள் மார்பில் வாசம் செய்வதால்  - மாதவன். கடைந்த பின் பெருமாளைப் பார்க்கும் போது அவர் கூந்தல் அவிழ்ந்து  - கேசவன்.

அதனால் தான் ஆண்டாள் ”வங்க கடல் கடைந்த மாதவனைக் கேசவனை ” என்று வரிசைப் படுத்துகிறார்.  அடுத்த வரியை பாருங்கள் - ”திங்கள் திருமுகத்து” என்கிறார்.

திருப்பாவை ஆரம்பத்தில் “கதிர் மதியம் போல் முகத்தான்” என்று உவமை சொன்ன ஆண்டாள் இதில் ”திங்கள் திருமுகத்து” என்கிறார்.  

இந்த ஒரு பாசுரம் தவிர, திருப்பாவையில் எங்குமே ”திருமுகத்து” என்ற பிரயோகம் கிடையாது லட்சுமி மார்பில் வந்த பிறகு உவமையும் கிடையாது. பெருமாளின் முகம் திங்கள் ‘திரு’ முகத்தானது.

திருமழிசை ஆழ்வார் திருச்சந்த விருத்தத்தில் “ பாசம் நின்ற நீரில் வாழும் ஆமையான கேசவா” என்கிறார்.  இங்கேயும் ஆமைக்குப் பின் கேசவா என்பதைப் பார்க்கலாம் !


நம்மாழ்வார் (2.7.1) திருவாய் மொழியில்
கேசவன் தமர் கீழ் மேல் எமர்
  ஏழ் ஏழு பிறப்பும்*
மா சதிர் இது பெற்று நம்முடை
  வாழ்வு வாய்க்கின்றவா!*
ஈசன், என் கருமாணிக்கம்,
  என் செங்கோலக் கண்ணன்,விண்ணோர்-
நாயகன்* எம் பிரான்,
எம்மான் நாராயணனாலே.

நம்மாழ்வார் எம்பெருமான் அடியார்களுக்கு மட்டுமல்லாமல், அடியார்களைச் சேர்ந்த அவர்களுடன் சம்பந்தம் பெற்ற மற்றவர்களுக்கும் அருள் செய்கிறான்  ( கீழ் ஏழு மேல் ஏழு தலைமுறையினரும் அடியார்கள் ஆயினர் ).

ஆண்டாள்  ”எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்”என்று சொல்லிவிட்டு ”எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்”  என்கிறார்.

சுஜாதா தேசிகன்
படம்: அமுதன்

Comments

  1. மாதவா...

    கேசவா...

    பெருமை மிகு பெயர் காரணம் அறிந்துக் கொண்டேன்...அமுதனின் சிறப்பான படத்துடன்...


    மேலும் இன்றைய எழுத்துரு படிக்கவும் எளிதாகவும் உள்ளது...

    ReplyDelete

Post a Comment