Skip to main content

மரப் பட்டை சொல்லும் கதை

Image may contain: outdoor and nature
படத்தில் பார்க்கும் இந்தச் சின்ன மரப் பட்டை பற்றி தெரிந்துகொள்ள சற்றே பெரிய கட்டுரை படிக்க வாசகர்களை அழைக்கிறேன்.
“கர்நாடகா” என்றவுடன் நினைவுக்கு வருவது ”காவிரி”. ஆழ் மனதில் ஸ்ரீரங்கத்தின் வரண்ட காவிரி மனதில் தோன்றி “அவர்கள்” திறந்துவிடவில்லை என்று தோன்றுவதை தவிர்க்க இயலாது.
தினமும் காலை எழுந்தவுடன் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கத்தை நோக்கி இரண்டு அடி வைக்க வேண்டும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்கள் என்ன செய்யலாம் ? கர்நாடகா இருக்கும் திக்கில் இரண்டு அடி வைக்கலாம். காரணம் இருக்கு.
பாகவதத்தில் ’பக்தி’ என்ற இளமையான பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள் - ஞானம், வைராக்கியம். பக்தி இளமையுடன் இருக்க, குழந்தைகள் கிழவர்களாக இருப்பதைக் கண்ட நாரதர் வியப்புடன் ஏன் என்று விசாரிக்க, அதற்குப் பக்தி கூறிய பதில் இது.
“நான் இளமையோடுதான் இருந்தேன். நான் பிறந்தது தமிழகத்தில். கர்நாடகத்தில்தான் வளர்ந்தேன். பிறகு அங்கிருந்து மஹாராஷ்டிரத்தை அடைந்து அங்கிருந்து குஜராத் … என்று பல இடங்களுக்குச் சென்ற எனக்கு வயதாகிவிட்டது. கூடவே வந்த ஞானமும், வைராக்கியத்துக்கும் வயதானது. கடைசியாக யமுனைக் கரையை அடைந்து, பிருந்தாவனம், மதுரா, கோவர்த்தனம் சென்ற போது மீண்டும் எனக்கு இளமை கிடைத்தது. கண்ணன் விளையாடிய இடங்களின் ஸ்பரிசம் பட்டவுடன் எதுவும் நடக்கும்.
அதே போல நம் ஆசாரியர்கள் இரண்டு பேர் ஸ்பரிசம் பட்ட மண் கர்நாடகா. ஸ்பரிசம் மட்டும் இல்லை, ஸ்வாமி ஸ்ரீராமானுஜர், வேதாந்த தேசிகன் போன்றவர்களைப் பாதுகாத்து கொடுத்த இடம்.
கூரத்தாழ்வான் கிருமி கண்ட சோழன் கொடுமையிலிருந்து ஸ்ரீராமானுஜரை மேல்கோட்டை தப்பவைத்து அதனால் அவர் கண்களை தியாகம் செய்து பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஸ்ரீராமானுஜர் சுமார் 12 ஆண்டு காலம் மேல்கோட்டையில் இருந்துள்ளார்.
Image may contain: cloud, sky, outdoor and nature
அதே போல் ஸ்ரீரங்கம் திருவரங்கத்தில் ஸ்வாமி தேசிகன் எழுந்தருளியிருந்த காலத்தில் முகம்மதியர் படையெடுப்பால் பெருந்துன்பம் விளைந்தது. முகம்மதியர்படை கோயிலில் புகுந்து பாழ்செய்த போது பிள்ளைலோகாச்சாரியார் நம்பெருமாளை எழுந்தருளிக்கொண்டு செல்ல, ஸ்ரீவேதாந்த தேசிகன் ஸ்ரீரங்கத்தில் தலைமை தாங்கிய சுதர்சன பட்டர் எழுதிய ‘ச்ருத ப்ரகாசிகை’ என்ற ஸ்ரீராமானுஜர் சொன்ன உரைக் குறிப்புகள் அடங்கிய ஸ்ரீபாஷ்ய உரை நூலையும் அவருடைய இரண்டு புதல்வர்களையும் காப்பாற்றி பிணமோடு பிணமாக இரவு கழித்து சத்தியமங்கலம் காடு வழியாக கர்நாடகா வந்தடைந்தார். திருநாராயணபுரம், ஸ்த்யாகாலம் என்ற இடத்தில் இவர் தங்கியிருந்தார்.
ஸ்ரீராமானுஜர், ஸ்ரீ வேதாந்த தேசிகன் மட்டும் இல்லை, நம் ‘நம்பெருமாளே’ சில காலம் திருநாராயண புரத்தில் தங்கியிருக்கிறார் !.

Image may contain: 1 person
மேலும் இந்த இடத்துக்குச் சிறப்பு இருக்கிறது . ஸ்வாமி ஸ்ரீராமானுஜர் மீது அளவுகடந்த பக்தி கொண்ட இருவர் மேல்கோட்டை பக்கம் உதித்தவர்கள். கிரங்கனூர் என்னும் கிராமத்தில் பிறந்த ஸ்ரீராமானுஜரின் மனதில் உள்ளதை ஆணையாக ஏற்று, திருமலையில் திருவேங்கடமுடையானுக்கு நந்தவனம் அமைத்த அனந்தாழ்வார் என்ற அனந்தான் பிள்ளை.
மற்றொருவர் சாலக்கிரமம் என்னும் இடத்தில் பிறந்து ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் என்று நமக்கு எடுத்துக்காட்டிய நம் வடுகநம்பி ஸ்வாமிகள்.


சென்ற ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவேதாந்த தேசிகன் வாசம் செய்த இடமான ஸ்த்யாகாலம் சென்றிருந்தேன் ( இங்கேயும் திருநாராயண புரம் இரண்டு இடத்திலேயும் அவர் 12 வருடம் வாசம் செய்துள்ளார் என்று எடுத்துக்கொள்ளலாம் ).
Image may contain: plant, tree, outdoor and nature
ஸ்த்யாகாலம் பெங்களூர் கொல்லேகால் போகும் வழியில் இருக்கும் சின்ன கிராமம். போகும் வழி எல்லாம் மங்களகரமாக
எல்லோர் இல்லத்தின் வாசலில் செழிப்பாக துளசியை காணமுடிந்தது. எங்கும் பச்சை வயல்கள்….
ஊருக்குள் நுழையும் முன் சில நூற்றாண்டு முன் ஒரு காலட்சேபத்தில் நுழைந்த குழந்தையின் கதை பற்றி நினைவு வருகிறது.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீபாஷ்ய காலட்சேபம் நடக்கிறது. காலட்சேபம் செய்பவர் ‘நடாதூர் அம்மாள்’. அங்கே நல்ல தேஜ்ஸுடன் ஐந்து வயதுக் குழந்தை தன்னுடைய மாமாவான கிடாம்பி அப்புள்ளாருடன் உள்ளே நுழைகிறார்கள் ( நடாதூர் அம்மாளுடைய சிஷ்யர் கிடாம்பி அப்புள்ளார் )
கால்டஷேபத்தை நடதூர் அம்மாள் நிறுத்துவிட்டு குழந்தையின் அழகைப் பார்த்து “யார் இந்தக் குழந்தை ?” என்று கேட்க ”என்னுடைய மருமகன்” தான் என்கிறார் அப்புள்ளார் கூடவே இந்தக் குழந்தைக்கு பாடம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்.
Image may contain: plant, tree, sky, grass, outdoor and nature
அதற்கு அம்மாள், தனக்கு வயதாகிவிட்டது அதனால் உன் மருமகனுக்கு நீயே ஆசிரியராக இருந்து பாடம் எடு என்று நியமித்துவிட்டு, தொடர்ந்து காலட்சேபத்தை தொடர முற்படும் போது நிறுத்திய இடம் நினைவுக்கு வரவில்லை. அப்போது சிறுவன் உள்ளே நுழைந்த போது தான் என்ன கேட்டானோ அதை அப்படியே ஒப்பிக்கிறான்.
நடாதூர் அம்மாள் சிறுவனை அணைத்துக் கொண்டு ”ஸ்ரீவைஷ்ணவ கொள்கையைப் பரவச் செய்து, பெரும் புகழுடன் விளங்குவாய்” என்று ஆசிர்வதிக்கிறார். அவர் ஆசிர்வாதம் பலித்தது. அந்தச் சிறுவன் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.
ஊருக்குள்ளே பெரும் ஆலமரம் ஒன்று தெரிகிறது. அதைச் சுற்றி பல மஞ்சள் தோட்டம். ஸ்ரீதேசிகனே பிரமாண்ட ஆலமரம் மாதிரி கீழே அவர் சிஷ்யர்கள் மஞ்சள் செடிகளாக காட்சி அளிப்பது மாதிரி இருக்கிறது.
Image may contain: 1 person
ஸ்ரீதேசிகன் 1268 ஆம் வருடம் திருத்தண்கா ‘தூப்புல்’ ( பொருள் : தூய புல் ) என்ற பகுதியில் அவதரித்தார். இயர் பெயர் வேங்கட நாதன். புரட்டாசி திருவோணம் திருவேங்கடமுடையான் திருநக்ஷத்ரம் ! திருவேங்கமுடையானின் கண்டம் என்னும் மணியின் அம்சமாக இவரைப் போற்றுவர். தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள் அதனால் இவரை வேதாந்த தேசிகன் என்று அழைப்பர் - வேதாந்தத்துக்கு அதாவது தமிழ், சமிஸ்கிரதம் என்ற உபய வேதாந்தத்துக்கும் ஆசாரியன் ( தென்கலை சம்பிரதாயத்தவர்கள் வேதாந்தாச்சாரியார் என்று அழைப்பர் - இரண்டும் ஒன்று தான் )
உள்ளே நுழையும் போது கோயில் கோபுரம் புதுப் பொலிவுடன் தெரிகிறது. பத்தாண்டுகளுக்கு முன் சம்பரோக்‌ஷனம் நடந்தது என்று தகவல். “ஸ்ரீ கோட்டே வரதராஜர் கோயில்” என்ற எழுதியிருக்கிறது. ( “கோட்டே” என்ற அடைமொழியுடன் பல கோயில்கள் கர்நாடகாவில் பார்க்கலாம். அதைப் பற்றி தனியாக ஆராயலாம் )
கர்நாடகாவில் பெரும்பாலும் நரசிம்மர், நாராயணன், கிருஷ்ணர், வேங்கடேச பெருமாள் கோயில்கள் தான் அதிகம். இங்கே வரதர் எப்படி வந்தார் என்று யோசிக்கும் போது “வாங்கோ வாங்கோ” என்று உற்சவம் நடத்துபவர்கள் அழைக்க உள்ளே துவஜஸ்தம்பம் சேவித்துவிட்டு உள்ளே சென்ற போது நேராக வரதர் நீல நிற உடையுடன் காட்சி அளித்தார். காஞ்சிபுரம் போல பெரிய வரதர் இல்லை, சின்னவர் தான் !
தீர்த்தம், சடாரி வாங்கிக்கொண்டு புறப்படும் போது பக்கத்தில் இருந்த மண்டபத்தில் நாதஸ்வர இசை ஒலிக்க அங்கே பெருமாளுக்கு கல்யாண உற்சவம் நடந்துகொண்டு இருக்க அதைச் செவிக்க சென்றேன்.
Image may contain: sky, tree, cloud, mountain, ocean, outdoor, nature and water
கல்யாண உற்சவம் நடந்துகொண்டு இருக்க, வரதராஜர் பற்றி நினைத்துக்கொண்டேன். தேவர்களுக்கும் பிரம்மாவுக்கு கேட்ட வரத்தைத் தந்ததால் அவர் வரதர் என்று பெயர் பெற்றார். பிரம்மாவுக்கு மட்டுமா ? ஸ்ரீ ஆளவந்தார் ஸ்ரீராமானுஜரை சம்பிரதாயத்துக்குத் தர வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். யாதவ பிரகாசர் கொலை முயற்சியிலிருந்து தப்ப வைத்து விந்திய மலைக் காடுகளில் வரதரும், தாயாரும் வேடுவன், வேடுவச்சி மாதிரி வந்து சரியான பாதையை வகுத்துக்கொடுத்தனர்.
ஆளவந்தார் ஆசாரியன் திருவடியை அடைந்த பின் திருவரங்கப் பெருமான் அரையர் பாட்டு பாடி வரதன் மனதைக் குளிர வைத்து ஸ்ரீராமானுஜரை கேட்டு பெற்றுக்கொண்டார் ஸ்ரீரங்கம் வந்தார். வரதன் கேட்பதை தருவான்.
ஸ்ரீராமானுஜரை காக்கும் பொருட்டு தன் கண்களை இழந்த கூரத்தாழ்வான் நிலை கண்டு வருத்தப்பட்ட ஸ்ரீராமானுஜர் வரதனை “துயரறு சுடர் அடி தொழுதெழு என் மனனே” என்று வேண்டிக்கொள்ளச் சொல்ல கூரத்தாழ்வான் ‘வரதராஜஸ்தவம்’ பாட வரதன் உடனே பார்வையை கொடுத்தார் ( ஆனால் கூரத்தாழ்வான் ஸ்ரீராமானுஜரை மட்டும் பார்த்தால் போதும் என்று கூறிவிட்டார் ! ).
இன்றும் ஸ்ரீராமானுஜர் சன்னதியில் கூடவே காஞ்சி வரதராஜர் தான் நித்திய திருவாராதன பெருமாளாகக் காட்சி அளிப்பார். ஸ்ரீரங்கத்தில் கூட உடையவர் பக்கத்தில் ஸ்ரீவரதராஜர் தான் ! . அடுத்த முறை ஸ்ரீவரதராஜர் எங்காவது இருந்தால் அங்கே ஸ்ரீராமானுஜர் கூடவே இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.
வரம் கொடுக்கும் பேரருளாளன் ஸ்த்யாகலத்துக்கு எதற்கு வந்தார் - ஸ்வாமி தேசிகனுக்கு வரம் கொடுக்க தான்.
கல்யாண உற்சவம், பிரசாதம் எல்லாம் முடிந்த பின் நேராக ஸ்வாமி தேசிகன் அபீதிஸ்தவம் எழுதிய அரச மரத்தைத் தேடி சென்றேன். மாலை வேளை, பசுமையான நெல் வயலில் வாசனை என்று அந்த இடமே ரம்மியமாக இருந்தது. காவிரி ஆறு எந்த சலசலப்பும் இல்லாமல் சூழ்நிலைக்கு ஏற்ப அமைதியாக சென்றுகொண்டு இருந்தாள்.
Image may contain: sky, tree, outdoor and nature
ஸ்வாமி தேசிகன் இங்கே தான் தனது காலை அனுஷ்டானங்களைச் செய்தார் என்ற நினைப்பே மனதுக்கு நெகிழ்வாக இருந்தது. இதை எல்லாம் சேவித்துவிட்டு மறுநாள் காலை மீண்டும் வரலாம் என்று திரும்பினேன்.
இரவு பெருந்தேவி தாயார் சன்னதிக்கு சென்று சேவித்தேன்.அங்கேயே சின்னதாக ஸ்வாமி தேசிகன் சன்னதி கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
பொதுவாக ஸ்வாமி தேசிகன் வலக் கையில் உபதேச முத்திரையும் இடது கையில் ஓலைச் சுவடியும் இருக்கும். அந்த ஓலைச் சுவடி ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாஷ்யம். இங்கேயும் அப்படியே காட்சி அளித்தார். பொதுவாக அமர்ந்த நிலையில் இருக்கும் ஸ்ரீதேசிகன் இங்கே நின்றுகொண்டு சேவைச் சாதிக்கிறார்.
திருவாய்மொழிக்கு ”ஈன்ற முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமாநுசன்” என்று கூறும் தனியன் மாதிரி ஸ்ரீபாஷியத்தை ஈன்ற தாய் இராமானுசன், அதை மொய்ம்பால் வளர்த்த பெருமை நம் ஸ்வாமி தேசிகனையே சாரும்.
No automatic alt text available.
சரி ஸ்த்யாகாலத்தில் ஸ்வாமி தேசிகன் என்ன செய்தார் ?
பிணமோடு பிணமாக இரவு கழித்து தேசிகன் சத்தியமங்கலம் காடு வழியாக கர்நாடகா வந்தடைந்தார் என்று முன்பு பார்த்தோம். சத்யாகாலம் வந்த ஸ்வாமி தேசிகன் இங்கே தினமும் முன்பு பார்த்த காவிரிக்கரையில் தினமும் தன்னுடைய காலை அனுஷ்டானங்களை முடித்து, அங்கே இருக்கும் அரச மரத்து அடியில் உட்கார்ந்து தியானம் செய்வார். இந்த மரத்துக்கு அடியில் தான் அபீதிஸ்தவம் இயற்றினார். 29 ஸ்லோகங்கள் கொண்டது. அதில் ஸ்ரீதேசிகன் நம்பெருமாளைப் பிரிந்து திருவுள்ளம் மிகப் புண்பட்டு இந்த உயர்ந்த ஸ்தோத்ரத்தை அருளிச்செய்தார்.
பெரிய பெருமாளுக்கு திருவாராதனம் நின்றுவிட்டது, நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தை விட்டுப் போக வேண்டிய சூழ்நிலை என்று அடுக்கடுக்காக நிகழ்வுகளை நினைக்கும் போது ஸ்வாமிக்கு உண்டான மனநோவு கணக்கிடமுடியாத ஒன்று. திருவரங்கத்தில் ஏற்பட்ட ஆபத்தை நீக்கி, உத்ஸவமூர்த்திகள் மறுபடி பெரிய பெருமாளுடன் சேர்ந்து திருவாராதனம் கண்டருளும்படி இந்த ஸ்தோத்ரத்தால் பிராத்திக்கின்றார். பிறகு கோயிலுக்கு வந்து ஸ்ரீரங்கம் நம்பெருமாள் என்ன ஆனாரோ என்று கவலையுடன் ஸ்ரீவரதராஜரையும், பெருந்தேவி தாயாரையும் வேண்டிக்கொள்வாராம்.
ஸ்வாமி தேசிகனின் ஸ்தோத்திரம் வரதனை உருகச் செய்திருக்க வேண்டும். விசயநகர பேரரசரின் செஞ்சிக் படைத் தலைவனான கொப்ப‌ணார்ய‌ன் என்னும் பாகவதோத்தமனால் நம்பெருமாள் மீண்டும் திருவரங்கம் எழுந்தருளினார். விஜய்நகர பேரரசர்கள் பூர்வீகம் கர்நாடகா.
Image may contain: 1 person, sky and outdoor
மீண்டும் ஸ்வாமி தேசிகன் சன்னதிக்கு வாசகர்களை அன்புடன் அழைக்கிறேன்.
மூலவர் அவருக்குக் கீழே ஆமை ஒன்றும் அதற்கு மேல் உற்சவர் தேசிகன்! நின்று கொண்டு சேவைச் சாதிக்கிறார். மனதில் இரண்டு கேள்விகள் உடனே எழுகின்றன ஒன்று அந்த ஆமை ? அடுத்தது பொதுவாக ஸ்வாமி தேசிகன் அமர்ந்துகொண்டு தானே இருப்பார் இங்கே ஏன் நின்று கொண்டு இருக்கிறார் ?காலை அனுஷ்டானங்கள் முடித்துவிட்டு கோயிலுக்கு செல்லும் போது ஒரு நாள் ஆமை ஒன்று அவரைப் பின் தொடர்ந்தது. வேகமாக நடந்த தேசிகனை ஆமையும் வேகமாகப் பின் தொடர்ந்தது. ஸ்வாமி தேசிகன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அன்று இரவு ஸ்வாமியின் கனவில் சாத்விகமான ஒருவர் தோன்றி ”உங்களுக்கு நான் கைங்கரியம் செய்ய விரும்புகிறேன்” என்று கூறி இதையும் ஸ்வாமி தேசிகன் கண்டுகொள்ளவில்லை.
மறுநாள் கனவில் பெருமாள் தோன்றி முதல் நாள் கனவில் தோன்றியவருக்கு அருள் புரிய கட்டளையிட்டார். காலை அனுஷ்டானம் செய்ய சென்ற போது அங்கே ஆமை கல்லாக, கூர்மாசனமாக மாறியிருந்தது. அன்றிலிருந்து ஸ்வாமி தேசிகன் அதன் மீது அமர்ந்து தன்னுடைய அனுஷ்டானத்த செய்யத் தொடங்கினார்.
1929ஆம் ஆண்டு ஸ்ரீ அபிநவ ரங்கநாத ஜீயர் (பரகால மடம்) ஸ்வாமி இங்கு வந்த போது, இந்த கூர்மாசனம் நாளடைவில் காவிரி ஆற்றோடு அடித்துக்கொண்டு போகும் அபாயம் இருப்பதை யூகித்து அதை எடுத்து ஸ்வாமி தேசிகனின் சன்னதியில் பிரதிஷ்டை செய்ய ஏற்பாடு செய்தார்.
ஸ்தயாகாலத்தில் மட்டும் தான் ஸ்வாமி தேசிகன் நின்றுகொண்டு சேவை சாதிக்கிறார். ஏன் தெரியுமா ? நம்பெருமாள் வந்துவிட்டார் என்ற செய்தி வந்தவுடன் புறப்பட தயார் நிலையில் இருக்கிறார்.
எவ்வளவு வருடங்கள் இங்கே இருந்தார், எப்போது வந்தார் என்பது எல்லாம் ஆராய்ச்சிக்கு உட்பட்டது. ஆனால் ஸ்வாமி தேசிகன் இங்கே வந்திருக்கிறார் என்பது உண்மை. இங்கே இருக்கும் மக்களுக்கு ஸ்வாமி தேசிகன் மீதும் இந்தக் கோயிலின் மீதும் மிகுந்த மரியாதையைப் பார்க்க முடிகிறது. இன்றும் இந்த ஊர் மக்கள் தங்களின் வீட்டில் ஒரு ஆண் குழந்தைக்கு “தேசிகாச்சார்” என்று பெயர் வைக்கிறார்கள் !

முன்பு பக்தி, ஞானம், வைராக்கியம் என்று மூன்று சொற்களை பார்த்தோம். ஒரு பொருளைப் பற்றி அறிவு ஏற்பட்டால் அது ஞானம். அப்பொருளிடத்து அன்பு ஏற்பட்டால் அதுவே பக்தி. அந்தப் பொருளின் அருமை பெருமைகளை உணர்ந்து மற்ற பொருட்களின் மீது நமக்குப் பற்றற்ற தன்மை ஏற்பட்டால் அதுவே வைராக்கியம். இங்கே பொருள் என்பது பெருமாள். அது மூன்றும் பூர்ணமாக பெற்றவர் நம் ஸ்வாமி தேசிகன்.
அவர் வாழ்கையில் பல சம்பவங்கள் இதை எடுத்துக் காட்டுகின்றன.
தன் ஆயுள் முழுவதும் ஸ்வாமி தேசிகன் உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்க்கை நடத்தியவர். அவர் சன்னியாசம் வாங்கவில்லை ஆனால் இல்லத்துறவி !. அவர் வாழ்ந்த காலத்தில் செல்வந்தராகவும், வேந்தியாகவும் இருந்த வித்யாரணயர் ஸ்வாமி தேசிகனின் ஏழ்மையைப் போக்கி இவரையும் செல்வந்தராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசனைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு கடித்ததை அனுப்பினார்.
ஸ்வாமி தேசிகன் அதற்குப் பதிலாக ‘வைராக்கிய பஞ்சகம்’ என்று ஐந்து ஸ்லோகங்கள் எழுதினார். ஒரு சாண் வயிற்றுக்கு என்சாண் உடம்பைக் குறுக்கி எதுவும் செய்ய மாட்டேன் என்று திட்டவட்டமாக சொல்லுகிறார். அதில் முன்னோர்கள் ஈட்டிய செல்வம் எதுவும் இல்லை, சொந்த வருவாயும் இல்லை ஆனால் மூதாதையர்கள் காட்டிய வரதராஜர் என்ற பேரருளாளப் பெருஞ்செல்வம் இருக்கிறது என்கிறார் !. எதற்குக் கையேந்த வேண்டும் - உணவுக்கு, தண்ணீர், உடை. இதற்குத் தேசிகன் என்ன சொல்லுகிறார் ? அறுவடை செய்த பின் அங்கே சிந்திய நெல்மணிகள் ஒரு கையளவு கிடைக்குமே அது பசியை தீர்க்க பேதுமானதாகாதா ? நதி, குளத்தில் இருக்கும் நீர் தாகத்தை தீர்க்காதா ? வயல் சுற்றி முள் வேலிகளில் கிழிந்த துணிகள் மாட்டிக்கொண்டு இருக்குமே அது என் மானத்தை மறைப்பதற்கு போதுமானது. தகுதியற்ற மனிதர்களை எதற்குப் பாராட்டி செல்வம் சேர்க்க வேண்டும் ? வைராக்கியமே இவருடைய செல்வம்!.
சன்னதியில் ஸ்வாமி தேசிகனை பார்த்துக்கொண்டு இருந்த போது ஸ்வாமி தேசிகனின் அர்ச்சா மூர்த்தியை அடுத்த நாள் பல்லக்கில் புறப்பாட்டுக்குத் தயார்படுத்த ஆரம்பிக்க அடியேனும் உதவி செய்ய சேர்ந்துகொண்டேன். அப்போது ஸ்வாமி தேசிகனை அணுஅணுவாய் ரசித்துவிட்டு அன்று இரவு உறங்கச் சென்றேன்.
விடியும் வரை ஸ்வாமி தேசிகனை பற்றி மேலும் சில தகவல்கள்.
''ஆங்கிலத்தில் அதிகமாக உபயோகப்படுத்தும் எழுத்து ''E என்று 'frequency distributionவைத்துக் கண்டுபிடிப்பார்கள். 'E' எழுத்துக்கு 12.7%'. 'இந்த E எழுத்தைப் பற்றி இன்னொரு தகவல். 'Georges Perec' என்றவர் 1969ல், La Disparition( A void ) என்னும் 200 பக்கம் கொண்ட நாவலை ஃபிரஞ்சு மொழியில் எழுதினார். அதில் ஆங்கில எழுத்து 'e' கிடையாது. இன்னொரு அதிசயம் இருக்கிறது. Gilbert Adair என்பவர் அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அதிலும் ஆங்கில எழுத்து 'e' கிடையாது.
’E’ இல்லாமல் ஒரு நாவலை எழுதிவிடலாம் ஆனால் ஸ்வாமி தேசிகன் பற்றிச் சொல்லாமல் ஓர் உபன்யாசம், காலட்சேபம் செய்வது என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாதது. தன் வாழ்நாளில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட படைப்புகளை ஸம்ஸ்க்ருதம், தமிழ் மற்றும் மணிப்ரவாளத்தில் அருளியுள்ளார்.
ஸ்தோத்ரங்கள் - 28
வேதாந்த கிரந்தங்கள் - 14
வ்யாக்யாத கிரந்தங்கள் 8
ரஹஸ்ய கிரந்தங்கள் 31
தமிழ் பிரபந்தங்கள் - 24
காவியங்கள் 4
நாடகம் 1
அனுஷ்டான கிரந்தங்கள் - 2
மொத்தம் 112
மறுநாள் காலை சூரியோதயத்தின் போது காவிரிக்கரைக்கு துலா ஸ்நானம் செய்ய கிளம்பினேன். ஆல மரத்தின் மீது “கீசுகீ சென்றெங்கும்” சத்தம் வேறு வித்தியாச சத்தத்துடன் ”கலந்து பேசின பேச்சரவம்” கேட்க என்ன என்று பார்த்த போது கிளிகளும் மரத்துக்கு மேல் ஒரு கருடனும் இருப்பதைக் கண்டேன்.
Image may contain: 1 person, smiling
கருடனைப் பார்த்த போது ஸ்வாமி தேசிகனுடைய ஞானம் நினைவுக்கு வந்தது. ஸ்வாமி தேசிகனுடைய வைராக்கியம் பற்றி முன்பு பார்த்தோம் அதே போல் ஸ்வாமி தேசிகனின் ஞானம் அளவிட முடியாதது. கருடனுக்கும் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம் ?
கிடாம்பி அப்புள்ளார் ஸ்ரீதேசிகனுக்கு ஆசாரியன் என்று பார்த்தோம். அவர் ஸ்ரீதேசிகனுக்கு கருட மந்திரத்தை உபதேசித்தார். ஸ்ரீதேசிகன் இந்த மந்திரத்தை திருவஹீந்திரபுரத்துக்கு சென்று அங்கே இருக்கும் ’ஔஷாதாத்ரி’ என்ற சிறிய மலை மீது அமர்ந்து ஜபிக்க தொடங்கினார். பெரிய திருவடியின் அனுக்ரஹம் அவருக்குக் கிடைத்தது. கருட பகவான் ப்ரத்யக்ஷமாகி அவருக்கு ஸ்ரீஹயக்ரீவ மந்திரத்தை உபதேசம் செய்து ஒரு ஹயக்ரீவ விக்கிரகத்தையும் கொடுத்து மறைந்தார்.
ஸ்ரீ தேசிகன் அதே ஔஷதகிரியில் ஹயக்ரீவ மந்திரத்தை ஆயிரமாயிரம் தடவை ஸ்தா ஜபித்துக்கொண்டு தியானத்தில் இருந்தார். ஸ்ரீஹயக்ரீவர் மகிழ்ந்து, பிரத்யக்ஷமாகி தனது ”திருவாய் அமுதத்தை” அவருக்கு பிரசாதித்து அருளினார் அதற்குப் பிறகு ஸ்ரீதேசிகருடைய திருவாக்கிலிருந்து ப்ரவாயமாக ஸ்தோத்திரங்களும் பகவத் விஷயமும் பெருக்கெடுத்தோடியது.
இருபது வயதுதில் எல்லாவற்றையும் கற்றறிந்தார். குருபரம்பரையில் ஸ்ரீ ஆளவந்தார், ஸ்ரீராமானுஜர் அதற்குப் பிறகு ஸ்ரீவேதந்த தேசிகனுக்கு மட்டுமே இந்தப் பெருமை உண்டு.
ஹயக்ரீவரிடம் ஞானம் பெற்ற ஸ்ரீதேசிகன், ”“செய்ய தமிழ் மலைகள் நாம் தெளிய ஓதி தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோம்” ” என்று வடமொழி வேதாந்தங்களை எவ்வளவு கஷ்டப்பட்டு கற்றாலும், அவற்றால் கலங்கிய ஞானமே உண்டாகும். ஆழ்வார் செயல்களைக் கொண்டு தான் தெளிவு பெற்றேன் என்கிறார் ஸ்ரீ தேசிகன். திருவாய் அமுதத்தை பிரசாதித்த ஸ்ரீ தேசிகன் திருவாய்மொழியின் சாரப்பொருளை ‘த்ரமிடோப நிஷத் தாத்பர்ய ரத்னாவளி’, ‘திரமிடோ பநிஷத் ஸாரம்’ என்ற நூல்களில் விளக்கியுள்ளார். பரம நாத்திகனும் ஒரு முறை திருவாய்மொழியை சேவித்தால் பகவானிடத்தில் ஈடுபடச் செய்துவிடும் என்கிறார்.
“கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன்” என்று திருமங்கை ஆழ்வாரை மனதில் தேக்கிக் கொண்டவர்; திருப்பாணாழ்வாரின் “அமலனாதி பிரான்” பாசுரங்களுக்கு முநிவாஹன போகம் என்று உரையை அருளிச் செய்தார். ஸ்ரீ கோதா ஸ்துதி என்று ஆண்டாளைக் கொண்டாடுகிறார். பாதுகா ஸஹஸ்ரத்தில் பெரும்பாலும் ஆழ்வார்கள் கொண்டே அருளிச்செய்துள்ளார். பிரபந்த சாரம் என்று ஆழ்வார்கள் அவதரித்த நாள், ஊர், மாதம், பிரபந்தங்களின் எண்ணிக்கை என்ற சுலபமான அதே சமயம் அருமையான செய்யுளை அருளியிருக்கிறார். “சந்தமிகு தமிழ் மறையோன் துப்புல் தோன்றும் வேதாந்த குரு” என்று அருளிச் செயல்களில் தன்னை அறிமுகப்படுத்திகொண்டுள்ளார்.
Image may contain: bird
ஸ்நானம் செய்துவிட்டு ஸ்வாமி தேசிகன் அமர்ந்து அனுஷ்டானம் செய்த ஆல மரத்தின் பக்கம் ஸ்ரீரங்கம் நோக்கி அமர்ந்துகொண்டு கிளிகள் ஒலி எழுப்பத் தலைக்கு மேலே கருடன் சுற்றிக்கொண்டு இருக்க அபீதிஸ்தவம் இரண்டு முறை பாராயணம் செய்தேன்.
No automatic alt text available.
பிறகு ஆல மரத்துக்கு அடியில் வளர்ந்திருக்கும் துளசியின் இலைகளை இரண்டை பிரசாதமாக எடுத்துக்கொண்டேன். ஸ்ரீதேசிகன் அமர்ந்த மரத்தடியில், ஸ்ரீதேசிகனை நேரில் தரிசித்த மரத்தின் மரப்பட்டை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தேன்.
சூரியன் மெல்ல மெல்ல வந்து பயிர்களின் மீது படும் போது வண்ணங்கள் மாறுவதைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு கோயிலுக்கு திரும்பினேன். ஸ்வாமி தேசிகன் வாத்தியங்கள் இசைக்கப் புறப்பாடு கண்டருளினார்.
Image may contain: plant, outdoor and nature
பெருமாளின் புறப்பாடு போது பொதுவாக இரண்டு திருச்சின்னம் ஊதுவார்கள், ஆனால் காஞ்சியில் ஒன்று தான். காஞ்சியில் இந்தத் திருச்சின்னம் ஊதும் போது ஸ்ரீதேசிகனுக்கு வரதனின் அழகு கண்ணில் தோன்றி திருச்சின்ன மாலை என்று ஒன்றை அருளினார். அதைச் செவியுற்ற வரதன், எனக்கு ஒரு திருச்சின்னம் போதும், இன்னொன்று தேசிகன் அருளியது இருக்கிறதே என்று சொன்னாராம்.

Image may contain: one or more people and outdoor
மீண்டும் ஸ்வாமி தினமும் அனுஷ்டானம் செய்யும் காவிரிக்கரைக்கு வந்தோம். திருமஞ்சனம், தீர்த்தவாரி என்று அடுத்தடுத்து அனுபவித்துவிட்டு பிரியாவிடை கொடுத்துவிட்டுத் திரும்பினேன்.
தன் வாழ்நாள் முழுவதும் சற்றும் ஓய்வில்லாமல் வடமொழி, தென்மொழி என்று மொத்தம் 112 கிரந்தங்கள் அருளியுள்ளார். ஒரு இரவில் ஒரு யாம காலத்திற்குள் ( மூன்று மணி காலம் ) ஸ்ரீரங்கநாத பாதுகையைப் பற்றி பாதுகா ஸ்ஹஸ்ரம் இயற்றி, வேதாந்தாசார்யர் என்ற விருதை அரங்கனும், ’ஸ்ர்வதந்த்ரஸ்வதந்தரர், கவிதார்க்கிககேஸரி’ என்ற விருதை ரங்க நாச்சியாரும் கொடுத்து கவுரவித்துள்ளார்கள். கோணலான கற்களை சாமர்த்தியமாகப் பொருத்தி கிணறு கட்டினார், பக்தி, ஞான, வைராக்கியத்துடன் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த இந்த மஹான் ஒரு
’ஸ்ரீவைஷ்ணவ ஃபலூடா’

Image may contain: one or more people
ஸ்ரீவேதாந்த தேசிகன் தனியன் :
ஸ்ரீமான் வேங்கடநாதார்ய: கவிதார்க்கிக கேசரீ |
வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி ||
பொருள் : எதிர்த்து தர்க்கம் செய்யும் பண்டிதர்களுக்குச் சிங்கம் போலவும்,
ஞானம், பக்தி, வைராக்கியம் போன்ற சிறந்த செல்வத்தைப் பெற்றவரும்.
வேங்கடநாதன் என்ற திரு நாமம் உடையவரான ஸ்ரீ வேதாந்த தேசிகன் என் நெஞ்சில் எப்பொழுதும் வாழ்வாராக.
வஞ்சப் பரசமயம் மாற்ற வந்தோன் வாழியே!
மன்னுபுகழ் பூதூரான் மனம் உகப்போன் வாழியே!
கஞ்சத் திருமங்கை உகக்க வந்தோன் வாழியே!
கலியன் உரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே!
செஞ்சொல் தமிழ்மறைகள் தெளிந்து உரைப்போன் வாழியே!
திருமலைமால் திருமணியாய் சிறக்க வந்தோன் வாழியே!
தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன் வாழியே!
செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே!
நானிலமும் தான் வாழ நான்மறைகள் தாம் வாழ
மாநகரின் மாறன் மறை வாழ – ஞானியர்கள்
சென்னி அணி சேர் தூப்புல் வேதாந்த தேசிகனே!
இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்
Image may contain: food
பிகு: ஸ்ரீதேசிகனை படம் எடுப்பதைப் பார்த்த ஒருவர் என்னிடம் வந்து ஸ்ரீதேசிகன் சுண்டு விரலில் ஒரு மோதிரம் இருக்கு அதைப் படம் எடுத்துக்கொள்ளுங்கள். அதே போல் அஹோபில மடம் ஸ்ரீமத் ஆதிவன் சடகோப யதீர்தர மஹாதேசிகன் கையிலும் பார்க்கலாம். இதைப் பற்றி ஆராயுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றார். அடுத்த அசைன்மெண்ட்

Comments

 1. Wow. Wow. Soooo good Sir. I wish I could travel with you. Keep writing please ...

  ReplyDelete
 2. அருமை. ஒரு சந்தேகம். செந்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே! வா அல்லது தண்தமிழ் தூப்புல் திருவேங்கடவன் வாழியே! வா? எது சரி?

  ReplyDelete
  Replies
  1. சில வித்தியாசம் இருக்கும். பொருள் ஒன்று தான். எப்படி வேண்டும் என்றாலும் சொல்லலாம். இதில் சரி, தவறு கிடையாது.

   Delete
 3. Nicely written. Waiting for that article about the ring on little finger

  ReplyDelete
 4. Desikarai pottriya desikane innumoru 100 andu irrum.

  ReplyDelete
 5. Desikarai pottriya desikane innumoru 100 andu irrum.

  ReplyDelete
 6. Aacharyan thiruvadigale charanam. Aacharya vaibhavam thanthavaruku namaskarams

  ReplyDelete
 7. உங்கள் எழுத்து படிப்பவர்களையும் அந்த இடத்துக்கே அழைத்துச்சென்றுவிடுவதாக இருக்கிறது. ஸத்யாகாலத்துக்கு நானே நேரில் சென்று அனுபவித்து வந்தது போல உணர்ந்தேன். பல சுவையான தகவல்களுடன் அடுத்த அசைன்மெண்ட்டை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். _/\_

  ReplyDelete
 8. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. இவைகளையும், அதற்கேற்ற படங்களோடு வெளியிடலாம் (கட்டுரைகளை மணிபோல் கோர்த்து)

  ReplyDelete

Post a Comment