பெங்களூருவில் தியாகராஜர்
என்னுடைய சின்ன வயதில் பலருடைய உபன்யாசங்களுக்கு என் தகப்பனார் அழைத்துச் செல்வார். அருமையான தமிழில் புகுந்து விளையாடுவார்கள். ”இராமன் என்ன செய்தான் தெரியுமா ?” என்று பட்டிமன்றத்தில் பேசுவது போலவே இருக்கும். ராமாயணம், மஹாபாரதம் கதைகள் தெரிந்தது ஆனால் பக்தி வளரவில்லை.
ஒரு முறை ஐஸ் அவுஸ் பக்கம் ஸ்ரீகிருஷ்ண பிரேமி அவர்களுடைய உபன்யாசத்துக்கு என் அப்பாவுடன் சென்றிருந்தேன். பக்த மீரா, சூர்தாஸ் பற்றிய அவர் உபன்யாசத்தின் போது கண்ணில் இரண்டு சொட்டு கண்ணீர் வந்தது.
இதே இரண்டு சொட்டு கண்ணீர் என் பையனுக்கு வரவேண்டும் என்று அவனுடன் நேற்று ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் இசை நாடகத்துக்கு என் பையனுடன் சென்றிருந்தேன்.
நாடகத்தில் ஒரு காட்சி.
இரவோடு இரவாகத் தியாகராஜ ஸ்வாமிகள் நித்தியம் ஆராதனை செய்யும் ஸ்ரீராம விக்ரகத்தை அவர் மூத்த அண்ணன் காவிரியில் போட்டுவிட, மறுநாள் காலை தியாகராஜ ஸ்வாமிகள் விக்ரகத்தைக் காணாமல் துடிதுடிக்க அந்தக் காட்சி முடிந்த பின் மேடையில் லைட் மெதுவாக fadeout ஆகி முழுவதும் இருட்டாக... அரங்கில் நிசப்தம். அந்தச் சமயம்.. அரங்கில் ஒரு சின்ன பெண் குழந்தை ‘ராமா’ என்று கூப்பிட அரங்கம் மொத்தமும் குதுகுலித்தது.
இன்று ‘ஹவுஸ் ஃபுல்’, டிக்கெட் தீர்ந்துவிட்டது என்பதைவிட இதுவே இந்த இசை நாடகத்தின் வெற்றியாக நான் கருதுகிறேன்.
சுமார் 250 வருடம் முன் வாழ்ந்த இந்த இசை மேதையின் கீர்த்தனைகளை பற்றித் தெரிந்தவர்களுக்கு அவர் எப்பேர்ப்பட்ட பக்திமான் என்று அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் வாழ்கையில் நடந்த சம்பவங்களை தொகுத்து சுமார் 2 மணி நேரத்தில் ஒரு காப்ஸ்யூலாக நமக்குத் தருகிறார் அதை இயக்கி நடிக்கும் திரு டி.வி.வரதராஜன். ( வீரபாண்டியன் என்றால் சிவாஜியை என்பது போல் தியாகராஜர் என்றால் அது திரு வரதராஜனாக இருக்கும்).
கேப்ஸ்யூலுக்கு மேல் இரு வர்ண கலர் தொப்பி போல இந்த நாடகத்துக்கு இசையும், படமும்.
அசுர ஆலாபனையும் பயங்கர ஸ்வரங்கள் எதுவும் இல்லாமல் தெளிவான உச்சரிப்புடன், பாவத்துடன் பாடியிருக்கிறார்கள். குறிப்பாகப் பாம்பே ஜெயஸ்ரீ. They were able to connect the musical mood with the auidence. ஹிந்து கேஷவ் படங்கள் சினிமா effect தருகிறது !. சரியான இடத்தில் சரியான கீர்த்தனைகளுடன், படமும் நடிப்பும் தியேட்டர் அனுபவத்தை வேறு தளத்துக்கு எடுத்துச் செல்கிறது.
நாடகத்தில் நடித்த அனைவரும் மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக அவர் பெண்ணாக வரும் சீதாம்மா கொஞ்சக் கூட மிகை இல்லாமல் நடித்திருக்கிறார்.
ஸ்ரீராமர், ஸ்ரீலட்சுமணன், சீதை, அனுமார் தியாகராஜர் இல்லத்திலேயே வந்து தங்குவது கதையை நகர்த்திச் செல்ல நல்ல உத்தி. அதில் வரும் நகைச்சுவை எல்லாம் ரசிக்கும்படியாகவே இருந்தது. பிச்சைக்கும், பிட்சைக்கும் உள்ள வித்தியாசம், ராமனுக்கும், கிருஷ்ணருக்கும் உள்ள வித்தியாசம் எல்லாம் கைதட்டல் பெறுகிறது.
தியாகராஜரின் சிஷ்யனாக வரும் ராகவனை நாடகத்தில் ஸ்வாமிகள் ‘மண்டு மண்டு’ என்று செல்லமாக திட்டினாலும். அது கொஞ்சம் உறுத்தலாகவே அடியேனுக்கு இருந்தது. ஸ்ரீராமர் மீது அளவு கடந்த பக்தியில் இருக்கும் ஒருவர் அவரைத் திட்டியிருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதுவும் ராகவன் என்று பெயர் வைத்திருந்தால் அவர் மனம் இடம் கொடுக்காது.
நாடகத்தில் நடித்தவர்கள் அனைவருக்கும் சுற்றிப்போட வேண்டும்.
நாடகத்தில் தியாகராஜர் அவருடைய ஸ்ரீராம விக்ரகத்தைத் தேடிக்கொண்டு அலையும் போது ஸ்ரீரங்கம் வருகிறார் அப்போது ஸ்ரீரங்க சாயி என்ற பாடலை பாடுவதாக அமைத்துள்ளார் ( திரைக்கதை ! ).
தியாகராஜரும் ஸ்ரீரங்கமும் பற்றி நேற்று இரவு கொஞ்சம் படித்துக்கொண்டு இருந்தேன். மேல்கோட்டையில் இருந்த ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணாசாரியாரிடம் இரவு கேட்ட போது அவர் சொன்ன பல தகவல்கள் சுவாரசியம். சிலவற்றை இங்கே தருகிறேன்.
ஸ்ரீதியாகராஜருடைய ஜாதகத்திலிருந்து அவருடைய பிறந்த நாளை நிர்ணயிக்க முடிகிறது. தாய்க்கு நன்கு பாட தெரியும். புரந்தரதாஸரின் பாட்டுக்கள் பலவற்றை அவர் கற்று வைத்திருந்தார். மகாராஜாவுக்கு தியாகராஜர் ஸ்லோகம் வாசிக்க இவருடைய தந்தை பொருளை விளக்குவார். இதனால் ஸ்ரீராமாயனம் இவர் மனதில் நன்கு பதிந்துவிட்டது.
தியாகராஜரின் பல வாழ்க்கை குறிப்புகள் அவர் பாடலின் மூலமே நமக்குக் கிடைக்கிறது. எளிய வாழ்க்கை, உயர்ந்த நோக்கு ( simple liviing, high thinking ) அதனால் பக்தியும், தொண்டும் அவருக்கு வந்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. தியாகராஜர் பக்தி என்பது விவரிக்க முடியாதது. பக்திக்கு முன் ecstasy என்ற வார்த்தையை போட்டுக்கொள்ள வேண்டும்.
உஞ்சவ்ருத்தியின் மூலமாக உப்பு முதல் கற்பூரம் வரை அவர் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் சேகரித்ததாக மாளவ ஸ்ரீராகத்தில் ‘என்னாள்ளு திரிகேதி’ என்ற கீர்த்தனையில் அவரே கூறுகிறார்.
இவருக்கு 18வது வயதின் போது, காஞ்சிபுரத்திலிருந்து ஹரிதாஸ் என்ற ஒருவர் இவரை அணுகி ”96 கோடி முறை ராமநாமத்தை உச்சரி” என்று சொன்னதை தெய்வவாக்காக எண்ணி 21 ஆண்டுகளில் அதை முடித்தார். தினந்தோறும் சராசரி 1,25,000 முறை ராமநாமத்தை ஜபித்தார் ! இதைச் செய்து முடிக்க இவருக்கு உதவியது ஸ்ரீராமராக தான் இருந்திருக்க வேண்டும். இல்லை என்றால் இதைச் செய்திருக்க முடியாது.
மனம் உருகி ஒரு முறை கூப்பிட்டாலே ராமர் வருவார் இவ்வளவு முறை கூப்பிட்டால் ? பல முறை இவர் முன் ராமர் தோன்றி தரிசனம் அருளியிருக்கிறார். ’ஏல நீ தயராது’, ’கனு கொண்டினி’ போன்ற கீர்த்தனைகள் இந்த அனுபவத்தைக் கொண்டு அவர் பாடியது.
ஸ்ரீரங்கத்தில் இவருக்கு ஏற்பட்ட இரண்டு அனுபவம் மிக உருக்கமானது:
ஸ்ரீரங்கத்தில் ஒரு சித்திரை உதஸ்வத்தின்போது தியாகராஜர் ஸ்ரீரங்கத்துக்கு வருகை தந்தார். தெற்கு சித்திரை வீதியும் மேற்குச் சித்திரை வீதியும் சேரும் முனையிலுள்ள தேர்வடம் நோக்கிய சந்தில் அந்த வீடு இருந்தது. நம்பெருமாள் குதிரை வாகனத்தில் அங்கே வர வாயிலில் நின்று கொண்டு பார்த்த தியாகராஜர் மனம் நெகிழ்ந்து “ராஜு வெடலெஜூதமு ராரே…” என்ற பாடலைப் பாடி நின்றார். 16 ஸ்ரீபாதம் தாங்கிகள் தங்கள் தேள்களில் நம்பெருமாளைக் குதிரை வாகனத்தில் எழுந்தருளப் பண்ணிக்கொண்டு செல்ல, வாகனம் மேற்கு சித்திரை வீதியை நோக்கித் திரும்பியது .தியாகராஜர் நம்பெருமாளை அருகில் சென்று தரிசிக்க முயன்றார் ஆனால் திருப்பத்தில் தள்ளு முள்ளு ஏற்பட இவரை இடித்துச் தள்ளிச் சென்ற கும்பலில் சிக்கிக்கொண்ட தியாகராஜர் நம்பெருமாளை அண்மையில் சென்று சேவிக்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் நின்றுவிட்டார்.
இதற்கிடையில் திருப்பத்தை தாண்டிய ஊர்வலம் திடீர் என்று நின்றுவிட்டது. ஸ்ரீபாதம் தாங்கிகள் எவ்வளவு முயன்றும் மேலே செல்ல முடியாமல் தவித்தார்கள். அப்போது அர்ச்சகர் ஒருவர் மீது ஆவேத்து “பரம பக்தர் ஒருவர் அங்கே நின்றுகொண்டிருக்கிறார் அவரை இங்குக் கொணர்ந்து நம்பெருமாளைச் சேவிக்க செய்வித்தால்புறப்பாடு தொடர்ந்து நடைபெறும்” என்று கூறினார். கோயில் அதிகாரிகளும், அர்ச்சகர்களும் இவரைத் தேடி தியாகராஜரைப் பெருமாள் முன் நிற்க வைக்க தியாகராஜர் மனம் நெகிழ்ந்து படியது தான் “வினராதா நா மனவி”. இந்தப் பாடல் முடிந்ததும் நம்பெருமாள் அங்கிருந்து புறப்பாடு கண்டருளினார். ( இந்தச் சம்பவத்தை நினைத்து இந்தப் பாடலை தேடிக் கேட்டுப்பாருங்கள் அனுபவமே தனியாக இருக்கும் )
மற்றொரு சமயம், தியாகராஜர் பெரிய பெருமாள் முத்தங்கியில் சேவை சாதிக்கும் அழகைப் பார்த்து “ஓ ரங்கசாயி” என்ற பாடலை பாடினார். இவருக்கு “ஓ” என்றால் நம் திருப்பாணாழ்வாருக்கு “ஐயோ” ( நீலமேணி ஐயோ!) - பெரிய பெருமாள் கொடுக்கும் ஆச்சரியம் ஏற்படுத்தும் வார்த்தைகள் இவை.
ஸ்ரீரங்கத்தில் நான்முகன் கோபுர வாசலில் (பிரசிதிப்பெற்ற ‘ரங்கா ரங்கா’ கோபுரம் ) வாசல் சுவரில் தியாகராஜருடைய ஐந்து கீர்த்தனைகள் தனியாக கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு பல வருஷங்கள் முன் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது, ஆனால் தற்போது அது இல்லை, புனர்நிர்மாணம் செய்யும் போது அதை எடுத்து எங்கோ ஆயிரம் கால் மண்டபத்தில் போட்டு வைத்துள்ளார்கள். தியாகராஜரையே மறந்துவிட்டோம். கல்வெட்டி எல்லாம் எம்மத்திரம் ?
திரு டிவி.வரதராஜன் அவர்கள் மீண்டும் தியாகராஜரை உயிர்ப்பித்து கொண்டு வந்துள்ளார். அடியேன் பார்த்தது 103 காட்சி. இந்த இசை நாடகம் நன்றாக மெருகேற்றி இன்னும் பல ஆயிரம் காட்சிகள் போட வேண்டும் அதற்கு இவருக்கும் இவர் குழுவிற்கும் ஸ்ரீராமரும், தியாகராஜரும் அருள்புரிய வேண்டும் என்று பிராத்திக்கிறேன்.
இந்த நாடகம் நடைபெறும் இடங்களில் தியாகராஜர் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம், சில பாடல்களுடன் ( ஏன் நாடகத்தில் உபயோகிக்கும் எல்லாப் பாடல்களையும் ) சிடியில் விற்பனை செய்தால் அடுத்த தலைமுறை தியாகராஜரை மறக்காமல் இருப்பார்கள்.
கர்நாடக கலைஞர்கள் கச்சேரியில் ராகம், தாளத்துடன், தியாகராஜர் வாழ்கையில் நடந்த சுவையான நிகழ்ச்சிகளை இரண்டு நிமிடம் சொல்லிவிட்டு கீர்த்தனைகளைப் பாடினால் அவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் பாவமும் பக்தியும் வளரும்.
தியாகராஜர் கீர்த்தனைகள் அவர் வாழ்க்கை சம்பவங்களை நமக்கு இலவசமாக விட்டு சென்றுள்ளார், அதை பணம் கொடுத்து நாம் தான் காக்க வேண்டும்.
- சுஜாதா தேசிகன்
( 29.10.2017 பூதத்தாழ்வார் திருநட்சத்திரம் )
( படங்கள் : நேற்று நான் எடுத்தது. கல்வெட்டு படம் இணையம், கார்ட்டுன் சித்திரங்கள் : கேஷவ் )
Enjoyed reading your description !wonderful ! Thanks for sharing
ReplyDeleteபல பல தகவல்களுடன்..மிக அழகான பகிர்வு...
ReplyDeleteExcellent..
ReplyDelete