Skip to main content

நடுநாட்டு கரும்புச்சாறு

சாலை ஓரத்தில் இருக்கும் கரும்புச்சாறு இயந்திரத்தைப் பார்த்திருப்பீர்கள். கரும்பை உருளைகளுக்கு ( roller ) நடுவில் புகுத்தி சாற்றைச் சக்கையாக பிழிந்து தருவார்கள். பல நாள் கரும்புச்சாறு பருக ஆசை, சென்ற சனிக்கிழமை காரில் கிளம்பினேன்.
ஈரிருபதாம் சோழம் ஈரொன்பதாம் பாண்டி
ஓர் பதின்மூன்றாம் மலை நாடு ஓரிரண்டாம் - சீர் நடு நாடு
ஆறோடு ஈரெட்டுத் தொண்டை அவ்வட நாடு ஆறிரண்டு
கூறு திருநாடு ஒன்றாக் கொள்.
என்று பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் பாசுரம் இதில் நடுநாட்டு திருப்பதி இரண்டு என்று இருப்பதைப் பார்க்கலாம்.
சில மாதங்கள் முன் என் பையனுக்குமுதல் ஆழ்வார்கள் கதையை சொன்ன போது அவன் கேட்ட கேள்வி “இன்னும் அந்த இடைகழி இருக்கிறதா ?” அப்போது தான் நினைவுக்கு வந்தது இந்த திவ்ய தேசத்தை அடியேன் இன்னும் சேவிக்கவே இல்லை என்று !.
ஸ்ரீவேதாந்த தேசிகன் பிரபந்தசாரத்தில்
தண் கோவல் இடை கழிச் சென்று
இணையில்லா மூவருமாய் இசைந்தே நிற்க
நடுவில் இவர் ஒருவரும் என்று அறியா வண்ணம்
நள்ளிருளில் மால் நெருக்க நந்தா ஞானச்
சுடர் விளக்கு ஏற்றி அன்பே தகளியான
தொடை நூறும் எனக்கு அருள் துலங்க நீயே
என்று குறிப்பிடுகிறார்.
[மூவருமாய் இசைந்தே நிற்க ]முதல் ஆழ்வார்களான பொய்கை, பூதம் பேய் என்ற உருளைகளுக்குள் சிக்கிய [மால் நெருக்க] பெருமாள் என்னும் கரும்பு பிழியப்பட்டு நமக்கு [அன்பே தகளியான தொடை நூறும் எனக்கு அருள் துலங்க] கிடைத்தது கரும்புச் சாறு! அதுவும் ஞானத்தமிழில் - இஞ்சி, எலுமிச்சை சேர்த்த கரும்புச்சாறு மாதிரி. ( கரும்புச் சாறு உவமை வேதாந்த தேசிகன் சொன்னது! )
முதல் முறை என்பதால் திருக்கோவலூரை சுற்றிக் காண்பிக்க யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து ஃபேஸ்புக்கில் இரண்டு வரி எழுதியதற்குப் பலர் என்னைத் தொடர்பு கொண்டது பெருமாள் திருவுள்ளம் என்று நினைத்துக்கொண்டேன்.
ஜெகன்நாதன் ஸ்வாமி ஜீயர் திருமாளிகையில் கைங்கரியம் செய்பவர் தொடர்பு கிடைத்தது. நான் வந்துவிட்டேன் என்று தகவல் கிடைத்து என்னை வரவேற்று கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.
ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீவேளுக்குடி கிருஷ்ணன் வேதபாடசாலையில் இருந்தவர் திருக்கோயிலூர் ஜீயர் அழைக்க இங்கே ஜீயர் மடத்தில் கைங்கரியம். எப்படி பாகவதர்களை உபசரிக்க வேண்டும் என்று இவர் ஒரு பாடசாலையே நடத்தலாம். வாயில் பிரபந்தமும், கோயிலில் மூலை முடுக்கு எல்லாம் அழைத்துக்கொண்டு சென்று அடியேனுக்கு எந்தத் தகவலும் விட்டுவிடக் கூடாது என்று “இங்கே வாமனர், ஆஞ்சநேயர், ஸ்தல விருட்சம்”, “இடுக்கு வழியா சக்கரத்தாழ்வார் உற்சவர் .. இன்று திருமஞ்சனம் அதனால் இங்கே”, “இதோ பாருங்கோ கல்வெட்டுகள்” என்று பரபரப்பும், ஆர்வமுமாகச் சுற்றி காண்பித்தார்.
நான் வந்திருக்கிறேன் என்று தெரிந்து கோஷ்டியிலிருந்து எழுந்து வந்திருக்கிறார் என்று தெரிந்து திக்குமுக்காடிவிட்டேன். ( அந்த அபசாரத்துக்கு அடியேன் தான் காரணம் என்று கொஞ்சம் வருத்தமும் கூட ). இவர்களைப் போல நல்ல உள்ளங்கள் சம்பந்தம் கிடைத்தால் பெருமாள் ஏன் ’நெருக்கி’ உரசமாட்டான் ?
பேயாழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று பாடும் போது ”திரு”வாகிய நாச்சியாரைத் தான் முதலில் பாடுகிறார். நாம் எப்பொழுதும் நாச்சியாரைத் தான் முதலில் சேவிக்க வேண்டும். இந்தக் கோயிலில் நிச்சயமாக.
பூங்கோவல் நாச்சியார்(மூலவர்), புஷ்பவல்லி தாயார்(உறவர்) சன்னதிக்குப் போகும் வழியில் உள்ள மண்டபம் நடுவில் தூண் எதுவும் இல்லாமல் கட்டிய அதிசயத்தைப் பார்க்க முடிந்தது. புஷ்பவல்லி தாயார் என்ற பெயருக்கு ஏற்றார் போல் அடியேனுக்கு புஷ்ப மாலை பிரசாதம் தந்து பெருமாளை சேவிக்க அனுப்பிவைத்தாள்.
மூலவர் திருவிக்கிரமன் வலது காலை மேலே உயர்த்திக்கொண்டும், வலக் கையில் சங்கமும், இடக் கையில் சக்கரமும் ஏந்தி மற்ற திவ்ய தேசம் போல இல்லாமல் சற்றே வேறுபட்டு இருக்கிறார் ( பெரும்பாலும் மாறி இருக்கும் ). மேலும் ஒரு வித்தியாசத்தையும் கவனிக்கலாம் - பெருமாள் திருக்கையில் இருக்கும் சக்கரம், சங்கம் ஒரே மட்டத்தில் இருக்கும் ஆனால் இங்கே சங்கம் ஒரு படி தாழ்ந்து அபய ஹஸ்தமா அல்லது சங்கை பிடித்துக்கொண்டு இருக்கிறாரா என்று குழப்பமே நமக்கு மிஞ்சுகிறது.
சங்கம் என்பது ஞானத்தைக் குறிக்கும், பெருமாள் சங்கத்தை உயர்த்திப் பிடிக்காமல் கைக்கு எட்டும் தூரத்தில் சங்கத்தைப் பிடித்துக்கொண்டு முதல் ஆழ்வார்களுடன் சங்கமித்ததால் முதன்முதலில் திவ்யபிரபந்தம் தீந்தமிழில் விளைந்து விளையாடத் தொடங்கி ஞான விளக்கு ஏற்றப்பட்டது என்பதில் ஆச்சரியம் கிடையாது !
”இங்கே இடைக்கழி எங்கே ?” என்று கேட்க நீங்க நின்றுகொண்டு இருக்கும் இடம் பெருமாள் இருக்கும் இடம் தான் அந்த இடைக்கழி. பிறகு அதுவே கோவிலானது என்றார் அர்ச்சகர். இந்தப் பெருமாளுக்கு இன்னொரு பெயர் உண்டு அது “இடைக்கழி ஆயன்” ! உயர்ந்த பெருமாளை பார்த்து நமக்கு வியர்க்க விறுவிறுக்கக் கூடாது என்பதற்காக ஏ.ஸி போட்டிருக்கிறார்கள்.
பெருமாள் புன்னகையுடன் நமக்கு ஞானத்தை வழங்கக் காத்துக்கொண்டு இருக்க ”அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி ” என்பது போல தூக்கிய திருவடிக்கு மேலே பிரம்மா திருவடியை ஆராதனம் செய்கிறார். பெருமாளின் இன்னொரு பாதத்தை சேவித்துக்கொள்ளுங்கள் என்ற போது கீழே பார்த்தேன். இரண்டு சின்ன கைகள் பாத பூஜை செய்வது போல இருக்க யார் என்று தெரிந்துகொள்ள கீழே உட்கார்ந்து பார்த்தேன் “அவர் தான் மஹாபலியுடைய மகன் நமுச்சி மஹாராஜா” என்றார் அர்ச்சகர். பெருமாளின் பின்னங்கையில் ஒரு விரலை உயர்த்திப் பிடித்துக்கொண்டு “இன்னும் ஒரு அடியை எங்கே வைப்பது ?” என்று கேட்கிறார் பாருங்கோ என்ற போது எங்கே நம் தலையில் வைத்துவிடுவாரோ என்று பயந்துகொண்டு எழுந்துவிட்டேன். அருகே இன்னும் நிறையப் பேர் சூழ்ந்துகொண்டு இருக்க அடியேனைச் சுற்றியும் பக்தர்கள் சூழ ( சனிக்கிழமை ! ) பிறகு வரலாம் என்று கிளம்பினேன்.
வரும் போது விஷ்ணு துர்கை சன்னதி என்று கூறி “கற்புடை மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில் சூழ் நெடுமருகில்” என்று திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த துர்க்கை என்றார் ஜெகநாத ஸ்வாமி. இந்த ஒரு வைஷ்ணவ ஸ்தலத்தில் மட்டும் தான் விஷ்ணு துர்கை சன்னதி இருக்கிறது. எம்பெருமானுக்கு ரக்ஷகியாக ( காவல் தெய்வமாக ) இருந்து வருகிறாள்.
வாமனர், லக்ஷ்மி நரசிம்மர், லக்ஷ்மி வராகர், ஆண்டாள், உடையவர், விஷ்வக்‌சேனர், மணவாளமாமுனிகள், ஆஞ்சநேயர் சன்னதி, குட்டி அனுமார், காட்டு ராமர் சேவித்துவிட்டு வெளியே வந்தால் ஸ்ரீவேணுகோபாலன் சன்னதி பூட்டியிருந்தது. மீண்டும் ஜெகனாத ஸ்வாமி எங்களுக்காகச் சாவியை வாங்கிக்கொண்டு வந்து திறந்த போது ”இரண்டு பேரும் சேர்ந்து ஓடிப்போலாமா ?” என்பது போல மிக அழகான கிருஷ்ணரை சேவிக்க முடிந்தது.
மதியம் ஆதி திருவரங்கம் கோயிலுக்குப் புறப்பட்டேன். போகும் வழியில் இரண்டு சாலை பிரிய அங்கிருந்த ஒரு பெண்மணியிடம் வழி கேட்டேன். வழியைக் காண்பித்து “நானும் அங்கு தான் செல்கிறேன்” என்றாள்.
“சரி ஏறுங்க வண்டியில்” என்று அந்தப் பெண்மணியை ஏற்றிக்கொண்டு சென்றேன்.
“… ஒவ்வொரு சனிக்கிழமையும் இந்தக் கோயிலுக்கு வருவேன்… இன்று ஏதோ தப்பான பஸ்ஸில் ஏறிவிட்டேன்..அவர்கள் இந்த இடத்தில் என்னை இறக்கிவிட்டார்கள்… எப்படிப் போவேன் என்று யோசிக்கும் போது நீங்க வந்தீங்க..” என்றாள்.
இருவரும் பெருமாளுக்கு நன்றி சொல்லிவிட்டு பெரிய ரங்கநாதரைச் சேவித்துவிட்டு வந்தோம்.
மீண்டும் திருவிக்ரமன் சன்னதிக்குப் போகும் முன் திருக்கோவலூர் ஒன்றான எம்பெருமான் ஜீயர் மடத்து வாசலில் ஸ்ரீமணவாள மாமுனிகள் சேவை சாதிக்க அவரைச் சேவித்துக்கொண்டேன்.
“படம் எடுத்துக்கொண்டீர்களா ?” என்று அர்ச்சகர் அன்புடன் விசாரித்தார்.
கோபுரத்துக்கு வாயிலில் கம்பீரமாக மணவாள மாமுனிகள் போஸ் கொடுக்க அடியேன் படம் எடுத்த பின் புறப்பட்டார்.
திருக்கோவலூர் எம்பெருமானார் ஜீயர் மடத்துக்கு விஜயம் செய்தேன். ஜீயர் ஸ்வாமி வைபவம் பற்றி சுருக்கமாக இங்கே தருகிறேன்.
சோழ மன்னன் ஆட்சிக் காலத்தில் திருகோவலூர் சைவ வழிபாட்டு ஸ்தலமாக மாற்றப்பட்டது.
திருவேங்கடத்தில் வடக்கே முல்குதிர் என்ற ஒரு கிராமத்தில் ‘கொண்டான் ஐய்யங்கார்’ தம்பதிக்குப் பிறந்த ஆண் குழந்தைக்கு இராமானுஜன் என்று திருநாமம் சாற்றினார்கள்.
ஆசாரியரிடம் பயின்று வந்த இராமானுஜன் ஒரு நாள் நடுப்பகலில் சூரிய வெப்பம் அதிகமாக இருந்ததால் ஆசாரியர் திருமாளிகைக்கு அடுத்த இல்லத்தின் இடைகழியில் கொஞ்சம் அயர்ந்துவிட்டார். பழைய இல்லம் ஆதலால் அதன் கூறை இடுக்கு வழியாகச் சூரிய ஒளி அவர் முகத்தில் பட அதை ஒரு பாம்பு படம் எடுத்து தடுத்துக் கொண்டிருந்தது.
நெடுநேரமாகியும் இராமானுஜர் காலக்ஷேபம் வராமல் இருக்க ஆசாரியர் சீடர்களை அவரை தேடப் பணித்தார். சீடர்கள் தாங்கள் கண்ட ஆச்சரியத்தை ஆசாரியரிடம் சொல்ல ஆசாரியர் நேரில் சென்று பார்த்து வியப்புற்றார். திருப்பதி ஜீயர் திருநாடு அலங்கரிக்க, இவரை ஜீயராக நிம்யமித்தார்கள்..
ஜீயரான சில வருடங்கள் கழித்து, இவர் கனவில் எம்பெருமான் தோன்றி திருக்கோவலூரை மீட்க வேண்டும் என்று நியமிக்க, இவர் சைவர்களிடம் வாதாடி அவர்கள் அதற்கு இணங்காமல் இவரைக் கொதிக்கும் சுண்ணாம்பு காளவாயில் இறங்க வேண்டும் என்று கூற, ஜீயரும் அதில் இறங்க அது ‘குளிர் அருவி வேங்கடமாக’ அவரை ஒன்றும் செய்யவில்லை. ஜீயர் பெருமையை உணர்ந்து, கல்திரையை திறந்தால் திருவிக்கிரமன் காட்சியளிக்க அங்கே இருந்த விளக்கு எரிந்துகொண்டு இருந்தது!.
இவர் வம்சத்தவர் தான் இன்றும் திருக்கோவலூரை நிர்வகிக்கிறார்கள். 25ஆம் பட்டம் ஜீயரைச் சேவித்தேன். ஜீயர் அடியேனுடன் சகஜமாக பேசிக்கொண்டு இருந்தது அடியேனின் பாக்கியம். ஜீயர் திருவாளிகைக்கு பின்புறம் கோசாலை வைத்து பராமரிக்கிறார்கள். அவர்கள் கொடுத்த மோரை சாப்பிட்டால் ஏன் கிருஷ்ணர் திருடினார் என்று அறிந்துக்கொள்ளலாம். ஜீயர் திருமாளிகையிலேயே உட்கார வைத்து பிரசாதம் சாதித்தார்கள். மாலை மீண்டும் திருக்கோவலூர் சென்று பெருமாளைச் சேவித்தேன். உள்ளே மீண்டும் பார்க்க முயன்று சரியாக பார்க்க முடியாமல் திரும்பினேன்.
ஸ்ரீமணவாள மாமுனிகளின் திருநட்சத்திர உற்சவத்தில் கலந்துகொண்டு தீர்த்தம், சடாரி பெற்றுக்கொண்டு மறுநாள் காலை திருவஹீந்திபுரம் புறப்படும் முன் காலை மீண்டும் திருக்கோவலூர் சென்றேன்.
அர்ச்சகர் அடியேனைப் பார்த்து “பாவம் நீங்க வரும் சமயம் எல்லாம் அடியேன் பிஸியாக இருந்தேன்” என்று கூறி பெருமாளை ஆர்த்தி எடுத்து பொறுமையாக ரசிக்க வைத்தார். இந்தப் படிக்கு கிட்டே வாங்கோ என்று கிட்டத்தட்ட உள்ளே அழைத்து இடது பக்கம் சுக்கிராச்சார்யார், மிருகண்ட மகரிஷி அவர் மனைவி, பொய்கையாழ்வார், புதத்தாழ்வார், பேயாழ்வா, கருடன் என்று பெரிய கோஷ்டியே சேவிக்க முடிந்தது.
திருக்கோவலூர் கல்வெட்டிகள் : கோயிலில் பல கல்வெட்டுகள் இருக்கிறது. இராமன் நரசிங்கன் பொன்னால் ஆன ஸ்தூபியை அமைத்துக் கொடுத்திருக்கிறான். பல கல்வெட்டுகள் நந்தா விளக்குகள் எரிக்கத் தானமாக வழங்கப்பட்டவை. ( உதாரணம் : விளக்கு ஏற்றுவதற்கு 96 ஆடுகள் வழங்கப்பட்டது என்றும் ஒரு கல்வெட்டு இருக்கிறது). இதே போல மேலும் பல கல்வெட்டுகள் ஐப்பசி மாதம் நடைபெறும் உற்சவத்துக்கு நன்கொடையாக அளித்தவை. முக்கியமான கல்வெட்டு இது - ஐந்தாம் குலோத்துங்க சோழன் திருநெடுந்தாண்டகம் ஓதுவதற்கு ஏற்பாடு செய்த செய்தி கல்வெட்டாக இருக்கிறது !
பிரியாவிடை கொடுத்துவிட்டு திருவஹீந்திபுரம் புறப்பட்டேன். அதைப் பற்றி பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன்.
சுஜாதா தேசிகன்
23-10-2017

படங்கள்: 
Comments

  1. நன்றி ஐயா...


    இப்பொழுது தான் fb வாசித்து...எப்பொழுது தளத்தில் பதிவீர்கள் என கேட்டேன்...நீங்கள் பதிவிட்டதையே அறியாமல்...    மிக அருமையான பகிர்வு...இதை வாசிக்கும் போது நேரில் சென்று காணும் அவா எழுகிறது...

    ReplyDelete
  2. அருமையான பதிவு! அனுபவித்து பதிவிட்டிருக்கீர்கள்! இடைக்கழி பற்றி எனக்கொரு ஐயம் உண்டு. இடைக்கழித்தான் பின்பு கோவிலானது எனில், பொய்கையாழ்வார் முதல் திருவந்தாதியிலே இரண்டு பாசுரங்களும், பூதத்தாழ்வார் இரண்டாம் திருவந்தாதியிலே ஒரு பாசுரமும் திருக்கோவலூருக்கு பாடியிருக்கிறார்களே! அப்படியென்றால், இவர்கள் எம்பெருமானை கண்ட பின்பு, அவர்கள் காலத்திலேயே இடைக்கழி கோவிலானதா? என்கிற சந்தேகம் எனக்கு உண்டு! ஸ்வாமிகள் தீர்த்துவைத்தால், என் அஃஞானம் விலகும்!

    ReplyDelete

Post a Comment