Skip to main content

நேற்று புத்தகக் காட்சியில்...

ஸ்ரீபெரும்புதூரிலிருந்து வழிநெடுகிலும் எம்.ஜி.ஆர் சிரித்த முகத்துடன் என்னை புத்தகக் காட்சிக்கு வரவேற்றார். வடபழனியில் டிராஃபிக் நெரிசலில் ஆபீஸ் கூட்டம் தவித்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாமல் ஹார்ன் அடித்து தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொண்டு இருந்தார்கள்.

"என்ன டிராபிக் ஜாம்?" என்று ஆட்டோ ஓட்டுபவரிடம் கேட்டேன்

"தெர்ல சார்"

பெங்களூர் மாதிரி காலைப் பனி கூட கிடையாதே என்று பார்த்தபோது 'கலை இலக்கியப் பகுத்தறிவு' பேனர் முழு சிக்னலையும் மறைத்ததால் வந்த வினை.



தி.நகரில் போன தடவைக்கு இந்த தடவை இன்னும் அதிக கூட்டம் வந்திருக்கிறது. பொங்கல் தான் முடிந்துவிட்டதே இன்னும் எதற்கு கூட்டம் என்றால் 'தை' பிறந்துவிட்டது என்றார்கள். ஒரு 'ஜயண்ட் வீல்', 'டில்லி அப்பளம்' ஸ்டால் இருந்தால் தி.நகரை நிரந்திர சுற்றுலாப் பொருட்காட்சி ஸ்தலமாக அறிவித்துவிடலாம். ஆட்டோ டிரைவர் ஏதோ ஒரு பில்டிங்கைக் காண்பித்து, சார் இதையும் 'சரவணா ஸ்டோர்ஸ் வாங்கிட்டார்கள்' என்றார். அது வந்துவிட்டால் தி.நகரை எழுபடை வீடாக ஆகும் வாய்ப்பு இருக்கிறது. தேங்காய் தலையை சீவி மண்டை ஓடு மாதிரி தேங்காய் பூவை தண்ணீர் தெளித்து விற்பனை இந்த முறை புதுசு. மற்றபடி சென்னை மாறவில்லை என்பதற்கு அடையாளமாக சரவண பவன் சாம்பார் சாதத்தில் நிச்சயம் காய்ந்த மிளகாய் ஒன்று வந்துவிடுகிறது.

புத்தகக் கண்காட்சி (புத்தகக் காட்சி என்று தான் சொல்ல வேண்டுமாம்!) 'Q'வில் நின்று கொண்டு இருந்தபோது என் முன் இருந்தவர் செல்பேசியில் பேசியது..

"சார் நான் அர்ஜெண்ட் வேலையா வேளச்சேரியில் இருக்கேன்.."

"..."

"ஆமாம்"

"......"

"வருவதற்கு 2-3 மணி நேரம் ஆகும் சார்... "

டிக்கெட் வாங்கிக்கொண்டு உள்ளே சென்ற போது நாடகத் திரை மாதிரி எல்லா கடைகளிலும் விலக்கிக்கொண்டு இருந்தார்கள்.

என்ன புத்தகம் வாங்கினேன் என்று சொல்லப்போவதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு ரசனை இருக்கும். உங்களுக்கு பிடித்த புத்தகம் எனக்கு பிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் விரும்பி படித்த புத்தகத்தை இப்போது படித்தால், இதையா நான் அன்று அப்படிப் படித்தேன் என்று நினைக்கிறோம். இருந்தாலும் கீழே சில புத்தகங்களின் பெயர்கள் வரலாம்.

எல்லாப் புத்தக ஸ்டாலிலும் எனக்குத் தெரிந்த நண்பர்கள் சொன்னது, "புத்தக சேல்ஸ் ரொம்ப டல்" என்பதுதான். இதற்குக் காரணம் தெரியவில்லை. ஆனால் ஏதோ நல்லது நடக்கப்போகிறது என்று மட்டும் எனக்கு தோன்றுகிறது. புத்தகம் விலை எல்லாம் அதிகமாகிவிட்டது என்றார் இன்னொரு நண்பர். இன்னும் அதிகமாக வேண்டும். அப்போதுதான் மக்கள் யோசிக்க ஆரம்பிப்பார்கள். தங்களுக்கு எந்தப் புத்தகம் வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை மட்டும் யோசித்து வாங்க ஆரம்பிப்பார்கள். இல்லை 'பிக் பஜார்' போல எதுக்கும் இருக்கட்டும் என்று கண்டதையும் வாங்கிப் போட்டுக்கொண்டு போவார்கள்.

உதாரணமாக கிழக்கு பதிப்பகம் முன்பு மாதிரி இல்லாமல் தங்கள் வெளியீட்டைக் குறைத்துள்ளது. பெருமாலும் எல்லா ஸ்டால்களிலும் பல புத்தகங்கள் சென்றமுறையே பார்த்தவைதான். புதிதாக அதிகம் இல்லை, இல்லை என் கண்ணுக்கு தெரியவில்லை.

பார்க்கும் கடைகளில் எல்லாம் "எப்படி?" புத்தகங்கள் தான்...

"டைம் மேனேஜ்மெண்ட் செய்வது எப்படி?" (காலை ஐந்து மணிக்கு எழுந்து பல் தேய்த்து முடித்துவிட்டாலே முடிந்து கதை. இதற்கு எதற்கு புத்தகம்?),
"உங்கள் மேலதிகாரியுடன் எப்படி ஃபோனில் பேச வேண்டும் ?" ( டிக்கெட் கவுண்டர் உரையாடலை பார்க்கவும் )
"வெளிநாட்டுக்கு போக என்ன  செய்ய வேண்டும் ?"
"எந்த மொபைல் வாங்கலாம்"
"வீடு வாங்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?"
"எப்படி லோன் எடுக்க வேண்டும்?"
"வீட்டில் மின்சாரம் எப்படி சேமிக்கலாம்"
"வீட்டை தூய்மையாக வைத்திருப்பது எப்படி ?"
"சிறந்த அப்பாவாக இருப்பது எப்படி?"
"யோகா எப்படி செய்ய வேண்டும்"
....

என்று அடுக்கிக்கொண்டே போகிறது.

பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பாரதியார் கவிதைகள், திருக்குறள், பகவத் கீதை, அகராதி ,அ-அம்மா டிவிடி, ரெய்க்கி, நாடி, வாஸ்து, ரஜினி 12.12.12 மலர்கள்,   போன்றவற்றை நீக்கிவிட்டால் நமக்கு இருப்பது வெறும் 30 ஸ்டால்கள்தான். அந்த முப்பது ஸ்டால் அந்த 300 ஸ்டால்களில் எங்கே என்று கண்டுபிடிப்பது தான் நம்முடைய சவால் அதனால்தான் போனவர்கள் எல்லாம் சோர்ந்து போய் தாகமும் பசியும் எடுத்து லிச்சி ஜூஸ் குடித்தேன், மசாலா தோசை சாப்பிட்டேன் என்று எழுதிக்கொண்டு இருக்கிறார்கள்.

பல உலக உளவுப் பிரிவு ரகசியங்கள், தீவிரவாதிகள் புத்தகங்கள் ஒரே சைஸில் இருக்க, நடுவில் நண்பர் பா.ராகவனின் அன்சைஸ் புத்தகத்தைத் தேடினேன், அதே சைசில் கிடைத்தது. நான் நேற்று வாங்கிய முதல் புத்தகம். காரணம் நகைச்சுவைக் கட்டுரைகள். திரும்பி வரும் போது ரயிலில் முதல் கட்டுரை படித்து பார்த்தேன். நிச்சயம் நம்மை ஏமாற்றாது என்ற எண்ணம் வந்துவிட்டது.

விகடனில் "வட்டியும் முதலும்" நல்ல விற்பனை ஆகிறது. பலர் அதைத் தொடராகப் படித்து நன்றாக இருப்பதால் வாங்குகிறார்கள். சினிமாவில் வரும் ரிபீட் ஆடியன்ஸ் மாதிரி இது.

சுஜாதாவின் மலர் ஒன்றை வாங்கிக்கொண்டேன். உயிர்மையில் பாக்கெட் மணியில் வாங்க பாக்கெட் சைஸ் சுஜாதா அடுக்கியிருந்தார்கள்.

கிழக்கு, விகடன் ஸ்டால்களில் பார்த்த போது "மூலம்:.....; தமிழில்:..... " என்ற மொழிப்பெயர்ப்புப் புத்தகங்களை வாங்க விரும்புகிறார்கள். நீதி: மற்ற மொழியில் இருந்தால் நல்லதாகத்தான் இருக்கும் என்ற நம்பிக்கை. தமிழில், மொழிபெயர்ப்பு சுமாராக இருந்தாலும் அதிகம் கெடுக்க முடியாது; மொழிபெயர்ப்பு என்றால் பெஸ்ட் செல்லர்ஸைத்தான் செய்வார்கள் என்ற நம்பிக்கைகள் தான் காரணம். ஆங்கிலப் படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்து ஒரு மினிமம் கியாரண்டியாக வருவது போலத் தான் இவையும்.

பழனியப்பா பிரதர்ஸ் பதிப்பகத்தில் 'சாணக்கியரும் சந்திரகுப்தனும்' என்ற மொழிப்பெயர்ப்புப் புத்தகத்தை வாங்கிக்கொண்டேன்.

ஞாநி கருத்துக்கள் சில எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும், அவர் எழுத்து நம்மை யோசிக்க வைக்கும், ஏமாற்றாது. ஞாநி அவர்களின் சைக்கிள் பற்றிய ஒரு கட்டுரையை இணையத்தில் சில மாதங்களுக்கு முன் படித்தேன். அதை ஒத்த மற்ற கட்டுரைகளுக்காக 'நகர்வலம்' என்ற புத்தகத்தை வாங்கினேன். புத்தகம் பெரிதாக இருக்கும் என்று எண்ணினேன் ஆனால் மெலிதாக இருந்தது எனக்குப் பெரிய ஏமாற்றம். போகும் போது, "ஓட்டுப் போட்டுவிட்டு போங்க" என்றார்.

Indian Book House-இல் ஏதோ ஒரு அமர் சித்தர காமிக்ஸ் பற்றி விசாரித்தேன். எங்களிடம் இல்லை. நீங்கள் உங்களுக்கு வேண்டியதை Flipkartல் வாங்கிக்கொள்ளுங்கள் எங்களைவிட அவர்கள் நிறைய டிஸ்கவுண்ட் கூட கொடுப்பார்கள் என்று ஒருவர் வழிகாட்டினார்.


சில 'சிறந்த' விருதுகளுக்குப் பரிந்துரைக்கிறேன்.

சிறந்த வரவேற்பாளர்: முக்தா சினிவாசன், திருக்குடந்தை பதிப்பகம். "உள்ளே வந்து பார்த்துவிட்டு போங்க" என்று எல்லோரையும் அழைத்துக்கொண்டு இருந்தார். புத்தகம் எடுத்து பணம் கொடுக்கும் போது, இது ஒரு காப்பி தான் இருக்கு, உங்க அட்ரஸ் கொடுத்துவிட்டு போங்க, இரண்டு நாளில் ஸிராக்ஸ் அனுப்புகிறேன் என்றார்!

சிறந்த சுற்றுப்புற சூழல் பதிப்பகம்: ஈஷா யோக மையம். தொட்டியில் ஒரு செடி வைத்திருந்தார்கள்.

சிறந்த சிறுவர் பகுதி: 10 வயதுச் சிறுவன் தான் எடுத்த விலங்கு, பறவை படங்களை புத்தகமாகப் போட்டிருக்கிறான். சென்னை ஃபிலிம் ஸ்கூல் பதிப்பகம்.

சிறந்த சமூக சேவை: படிக்காத அந்த 65 வயசு முதியவர் பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டில், படித்தவர்களாகிய நாம் கீழே போடும் புக் மார்க், நோட்டிஸ், காபி கப் குப்பைகளைப் பொறுமையாக சுத்தம் செய்துகொண்டு இருந்தார்.

சிறந்த கண்டனம்: 12 வயது ஆன ஒரு சின்னப் பையன் தூக்க முடியாமல் ஒரு பெரிய கட்டு புத்தகத்தை ஒரு ஸ்டாலுக்கு எடுத்துப் போய்க்கொண்டு இருந்தான்.

சிறந்த பேனர்: எழுத்தாளர் பாலகுமாரன்.

சிறந்த விற்பனை: வட்டியும் முதலும் - விகடன் பிரசுரம்

சிறந்த டயலாக்: "இந்த வருஷம் ரொம்ப மந்தம்"

சிறந்த சந்திப்பு: பல வருஷமாக ஈ-மெயில், ஃபோனிலேயே பேசிக்கொண்டு இருந்துவிட்டு நேரில் சந்தித்த நண்பர் அருண்

சிறந்த நடைபாதை சந்திப்பு: எஸ்.ராமகிருஷ்ணன்

சிறந்த ஸ்டால் சந்திப்பு: மனுஷ்ய புத்திரன், ஞாநி

சிறந்த உதவி: விகடன் கொடுக்கும் பெரிய துணிப் பை

சிறந்த சுறுசுறுப்பான ஆசாமி : ஹரன் பிரசன்னா. தன்னுடைய டேபிள், பக்கத்தில் இருக்கும் டேபிள் இரண்டையும் ஒரே ஆளாக அலுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தார்.

சிறந்த கூட்டம்: 100 ரூபாய்க்கு சில்லரை வாங்க க்யூவில் சலிக்காமல் நின்றுக்கொண்டு இருந்தவர்கள்.

சிறந்த புதுவரவு: குபேரன் பதிப்பகம். பச்சை டிரஸ் போட்டுக்கொண்டு ஒருவர் ஏதோ விளக்கிக்கொண்டு இருந்தார். முதுகில் லாப்டாப் சுமந்துக்கொண்டு இருந்தவர் அதை உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டு இருந்தார். நான்- ஈ படம் விற்பனை செய்கிறார்கள்!

சிறந்த அடுக்கிவைப்பு: 6th சென்ஸ் பதிப்பகம்.

சிறந்த ஈ-ஓட்டிய ஸ்டால் (வெளிநாடு) - Invicible Thinking

சிறந்த ஈ-ஓட்டிய ஸ்டால் (உள்ளூர்) - பல ஸ்டால்கள்

சிறந்த கலர்ஃபுல் ஸ்டால்: Infini Thoughts

சிறந்த பெரிய சைஸ் புத்தகம்: தமிழ(ஈ)ஞ்சலி; புரட்டிப் பார்த்தேன் முதல் பக்கம் ஒரு கவிதை. பிறகு எல்லாமே வெற்றுப் பக்கங்களாக இருந்தன. அட நல்லா இருக்கே என்று விலை கேட்டேன். விற்பனைக்கு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

படங்கள் கீழே:















Comments

  1. இட்லி வடையில் எழுதுற மாதிரியே இங்கனயும் எழுதிப்புட்டீங்களே !

    ReplyDelete
  2. புத்தக காட்சிக்கு போய் வந்த திருப்தியை ஏற்படுத்தியது உங்கள் எழுத்து. கூடவே வாத்தியாரின் எழுத்தை படித்த திருப்தியும்... மலர் வாங்கியிருப்பேன் பின்னர் கடையில் வாங்கிக்கொள்ளவேண்டியதுதான்.. ( பை தி பை... மலரில் உங்கள் கட்டுரை உள்ளதா?)

    ReplyDelete
    Replies
    1. புதிதாக ('சுஜாதாவிடம் கற்றதும், பெற்றதும்') எழுதிய ஒரு கட்டுரையும் முன்பு விகடனில் வந்த இரண்டு கட்டுரையும் பிரசுரம் ஆகியிருக்கிறது.

      Delete
    2. மிக்க நன்றி..'' வாத்தியாரிடம் கற்றதும் பெற்றதும்'' சுவாரசிய கட்டுரையை படிக்கும் நாளுக்கு காத்திருக்கிறேன் ...

      மற்ற இரண்டும் படித்திருந்தாலும் ..மலரிலும் படிக்க ஆவல்... உங்கள் சிற்றம் சிறு காலே / அப்போலோ கட்டுரை தாங்கிய விகடனை கண்ணீர் உகுத்த பக்கங்களோடு பத்திரமாக வைத்துள்ளேன்.....

      Delete
  3. I was waiting for this writeup. I was not able to visit book fair this year also.

    ReplyDelete
  4. very nice coverage !!!! suuuuuper...

    ReplyDelete
  5. இணையத்தில் மேய்ந்ததில் புத்தகக்(கண்)காட்சியைப் பற்றிய மிகச் சிறந்த பார்வை. நன்றி

    ReplyDelete
  6. ”சிறந்த” பட்டங்களை / விருதுகளை வழங்கி யாரோட சிஸ்யர் என்பதை நிரூபித்துவிட்டீர் :)

    ReplyDelete
  7. ரெண்டு டேபிளையும் பார்த்துக்கொண்டிருந்தேன் என்பதில் ஏதேனும் உள்குத்து இருக்கா ஜி?

    ReplyDelete
    Replies
    1. எந்த உள்குத்தும் இல்லை. எனக்கு பில் போட்டுவிட்டு, 'அலமாரி' சந்தா ரசிதையும் நீங்களே அந்த ( மெதுவாக எழுதிக்கொண்டு இருந்த) பெண்ணிடமிருந்து வங்கி சர சர என்று பூர்த்தி செய்தீர்கள். அதை தான் அப்படி சொன்னேன்.

      Delete
  8. Nice coverage! Excellent sense of Humor!! Super!!!

    ReplyDelete
  9. புத்தகக்காட்சியைப் பற்றிய சிறந்த பார்வை. திருப்தி!

    ReplyDelete
  10. திருப்தி! புத்தகக்காட்சியைப் பற்றிய சிறந்த பார்வை!

    ReplyDelete

Post a Comment