Skip to main content

உடுப்பியில் இரண்டு நாள்

கிறுஸ்துமஸ் லீவுக்கு உடுப்பி போகலாம் என்று முடிவு செய்து திடீர் என்று குடும்பத்துடன் காரில் கிளம்பினோம்.

"வழி எல்லாம் தெரியுமா ?"

"அது தான் GPS இருக்கே .. "

"இப்படித் தான் போன தடவை அதை நம்பி போனோம்.. பாதி வழியில ரோடு பிளாக்... மாமி திரும்ப வீட்டுக்கு வழி சொல்லிடுத்து"

( GPSல் பெண் குரலில் வழி சொல்லும் அதை மாமி என்று அழைப்போம், மாமாவிற்கும் மாற்றிக்கொள்ளலாம் !)

சனிக்கிழமை காலை 6 மணிக்கு உடுப்பி கிளம்பினோம். பெங்களூர் - நீலமங்களா - சென்னராயப்பட்டனா, ஹாசன், ஷிர்டி காடு வழியாக மங்களூர் - உடுப்பி என்ற வழியில் போனோம். 420 கிமீ தூரம்.

உடுப்பி என்றால் நினைவுக்கு வருவது ஹோட்டல் இன்னொன்று கிருஷ்ணர். .

கிருஷ்ணர் கோயில் எப்படி இருக்கும் எங்கே தங்கப் போகிறோம் என்ற எந்தத் தகவலையும் கூகிளில் பார்க்காமல் புறப்பட்டேன். உடுப்பி போய்ச் சேர்ந்தபோது மதியம் 3 மணி ஆகிவிட்டது. தங்குவதற்கு எல்லா மடங்களும், ஹோட்டல்களும் 'ஹவுஸ் ஃபுல்' என்று போர்ட் மாட்டியிருந்தார்கள். ஏதோ ஒரு மடத்தில் சில மணி நேரம் சற்றே இளைப்பாற ஒரு ரூம் குடுத்தார்கள்.

ஏதோ ஒரு ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோஷ்டி கோயிலுக்குள் பஜனையுடன் செல்ல நாங்களும் அவர்களைத் 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்று தொடர்ந்தோம்.

கோயில் உள்ளே வெளிச்சம் அவ்வளவாக இல்லாமல் இருட்டாக இருந்தது. கோடியில் சின்னதாக ஒரு விக்ரகம் தெரிந்தது.
"கிருஷ்ணர் உங்களுக்கு தெரிகிறதா ? எனக்கு ஒன்றும் தெரியலையே"
சரியா பார் "அங்கே பார் முகம், கை கூட தெரிகிறது" என்றேன்.

நன்றாக சேவித்துவிட்டு வெளியே திண்ணையில் வந்து உட்கார்ந்தோம்.

"சார் கிருஷ்ணர் கோயிலுக்கு எப்படி போகணும்?" என்று எங்களை மாதிரி டூரிஸ்ட் ஒருவர் வழி கேட்க நாங்கள் தரிசித்த கோயிலைக்  காண்பித்தோம். எங்கள் பக்கத்தில் இருந்தவர் (உள்ளூர் ஆசாமி ) இது கிருஷ்ணர் கோயில் இல்லை இது அனந்தேஸ்வரர் கோயில். கொஞ்சம் தூரம் தள்ளி கிருஷ்ணர் கோயில் இருக்கு என்று காண்பித்தார்.

"எப்படி உங்களுக்கு கிருஷ்ணர் கை கால் எல்லாம் தெரிந்தது" என்றாள் என் மனைவி.

"உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் - எல்லாம் கண்ணன்" என்று நம்மாழ்வார் சொன்னதை சொல்லிப்பார்த்தேன். அவர்கள் நம்பாமல் சிரித்தார்கள்.

கிருஷ்ணர் கோயில் போகும் முன் அதை பற்றி ஒரு சின்ன வரலாற்றுச் சுருக்கம்.

உடுப்பி பக்கம் இருக்கும் மால்பே கடலில் துவாரகையிலிருந்து வந்த ஒரு கப்பல் புயலில் சிக்கிக்கொண்ட சமயம் மத்வாச்சாரியார் கடற்கறையில் இருந்து அதை காப்பாற்றினார். கப்பலில் இருந்தவர்கள் அவருக்கு நன்றியைத் தெரிவிக்க என்ன வேண்டும் என்று கேட்க கப்பல் ஓரத்தில் கோபி சந்தனத்தால் கற்கள் இருப்பதை பார்த்து அதை வேண்டும் என்று கேட்டார். அதனுள்ளே இருந்துதான் இன்று நாம் பார்க்கும் ஸ்ரீகிருஷ்ணரின் விக்கிரகம் வந்ததாக சொல்கிறார்கள். இன்றும் மத்வ சமூகத்தினர் கோபி சந்தனத்தால்தான் திலகம் இட்டுக்கொள்கின்றனர். கோபி சந்தனம் துவாரகாவிலிருந்து இன்றும் இங்கே வருகிறது. ( கிலோ 30ரூபாய் ). இந்த திருமேனி ருக்மணியால் பூஜிக்கப்பட்ட கிருஷ்ணரின் சாளக்கிராமத்தாலான திருமேனி என்றும் நம்பப்படுகிறது.

கன்னட பக்தர் கனகதாசர் ஒரு முறை பெருமாளை தரிசிக்க உடுப்பி வந்த போது பிராமணர்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி என்ற காரணத்தால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கிருஷ்ணனை சிறிய துவாரத்தின் மூலம் காண முயன்றார், ஆனால் அவருக்கு கிருஷ்ணனின் பின் பக்கம் தான் தெரிந்தது. மனமுருகிப் பாட ஆரம்பிக்க, கிருஷ்ணர் முகத்தை துவாரத்தை நோக்கி திருப்பினார். இதுவே இன்று 'கனகணகிண்டி' என்றழைக்கப்படுகிறது. நாமும் இந்த குட்டி கிருஷ்ணனை அந்த ஜன்னல் வழியாக தான் பார்க்க வேண்டும். எல்லா கோயில்களிலும் பெருமாளின் முகம் கோயிலின் வாசற்பக்கம் நோக்கியிருக்கும் ஆனால் உடுப்பியில் இது மாறி இருப்பதற்கு இதுவே காரணம். திருப்பாணாழ்வார் பக்தியும் இதனுடன் ஒத்துப்போவதை பார்க்கலாம்.

சிலவற்றை அனுபவிக்க வேண்டும். உடுப்பி கிருஷ்ணரும் அதே போல தான். அலங்காரம் செய்து, அலங்காரம் செய்யாமல் எப்படி பார்த்தாலும் அழகு. அதே மாதிரி பண்டரிபூர்.

கோயிலில் பல கறவைமாடுகள் இருப்பது வாசனையிலேயே தெரிகிறது. கோயில் குளத்துக்கு பக்கம் விறகுகளை தேர் போல அடுக்கி வைத்திருக்கிறார்கள் தினமும் அன்னதானத்துக்கு உபயோகப்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். கோயில் சுற்றி இருக்கும் தேரடிவீதியில் வாகனங்கள் அனுமதி இல்லை. அதனால் நிம்மதியாக இருக்கிறது. எல்லா கடைகளிலும் பிளாஸ்டிக் கவர் உபயோகப்படுத்துவதில்லை அதனால் கோயில் சுற்றி சுத்தமாக இருக்கிறது.

கோயில் பக்கம் ஹோட்டல்கள் இருக்கிறது. மங்களூர் போண்டா ( அவர்கள் பஜ்ஜி என்கிறார்கள்), மங்களூர் பன் கிடைக்கிறது. வித்தியாசமான உணவு.

மறுநாள் ஏழு கிலோமீட்டர் தூரத்தில் மால்பே கடற்கறைக்குச்  சென்றோம். கடல்நடுவே செயிண்ட்மேரீஸ் தீவுக்கும் சிறு படகுகளில் பயணித்தோம். உடுப்பி கோயிலில் பார்த்த அந்தத் தூய்மை இங்கே இல்லை. தீவு முழுக்க விஸ்கி பாட்டில்களும், லேஸ் சிப்ஸ் குப்பைகளும், காலி பெப்ஸி என்று FDI இங்கே வந்துவிட்டது. இவைகளைத்  தவிர இந்த தீவு நன்றாக இருப்பதற்கு இரண்டு காரணம் - எரிமலை பாறைக்குழம்பு படிவங்களும், தெளிவான தண்ணீரும்.

மால்பே கடற்கரையிலிருந்து தீவுக்குச்  செல்ல ஒருவருக்கு 150ரூபாய் வாங்குகிறார்கள். படகுகளில் உயர் காக்கும் "லைப் ஜாக்கெட்" பேருக்கு ஒன்று மாட்டியிருக்கிறார்கள். நடுகடலில் ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் பெரிய ரிஸ்க் தான். போவதாக இருந்தால் ஏதாவது சுலோகம் சொல்லிக்கொண்டு போவது நல்லது.

திரும்ப வரும் வழியில் மங்களூர் தாண்டியதும், மைசூர்-மேல்கோட்டை என்ற போர்டை பார்க்க ராமானுஜரை பார்க்க காரைத் திருப்பினேன். இன்னொரு சமயம் அதைப் பற்றி எழுதுகிறேன். (முன்பு மேல்கோட்டை சென்றது பற்றி இங்கே எழுதியிருக்கிறேன்)

( படங்கள் உடுப்பி, மால்பே கடற்கரையில் எடுத்தது )

Comments

 1. Nice! I did this trip during May 2009. Clubbed with Kukke Subramanya. It is just 12 kms from the NH after Sakleshpur. Traffic slows down a lot in that area. At Malpe beach we paid like 300 for a family to visit St Marys Island. The boat guy gave us all a can of soda! We stayed @ Kidiyur Lodge, decent and is know for its Neer Dosa. You dont get rooms from the temple sathirams it seems as there are people staying on an on forever there. We saw a ritual in the evening, where they bring flowers and water from a well, on an elephant.

  ReplyDelete
 2. Actually the trip was in May 2010 (!).

  Here is the link for my post on that trip.

  http://vijayashankar.blogspot.in/2010/05/madikeri-mangalore-udupi-visit.html

  ReplyDelete
 3. உங்களின் வலைப்பூவினை வலச்சரத்தில் இன்று அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை ம‌கிழ்வுடன் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
  http://blogintamil.blogspot.com/

  ReplyDelete
 4. நம்ம உடுபி பயணம் இங்கே.

  நேரம் இருந்தால் ஒரு பார்வை பாருங்க.

  http://thulasidhalam.blogspot.co.nz/2010/04/blog-post_13.html

  ReplyDelete

Post a Comment