Skip to main content

முழு வீச்சில் வேதாளம்

விக்கிரமாதித்தன் பத்தாவது மாடியில் ஒரு புது ஃபிளாட் வாங்கியிருந்தான். பால்கனியில் பக்கோடா, டீ சாப்பிட்டுக்கொண்டு குமுதம் நடுப்பக்கத்தைப் படித்துக் கொண்டிருந்தான், பார்த்துக்கொண்டிருந்தான் என்பது தான் சரியான வார்த்தை பிரயோகமாக இருக்கும்.


வேதாளம் எட்டிப் பார்த்தது.



"ஐயோ! இங்கேயும் வந்துட்டையா?" என்று அதிர்ச்சியில் விக்கிரமாதித்தன் கத்தினான்.
 
"புது வீடு நன்றாகத் தான் இருக்கிறது!"


"இருக்காதா பின்ன, எல்லாம் மார்பிள், கிரானைட்"


"தமிழில் பேசு, மார்பிள் - சலவைக் கல், கிரானைட் - கருங்கல்"


"ஐயோ!"


"உனக்குத் தெரியுமா ? இந்த மார்பிள், கிரானைட்டில் கதிர் வீச்சு இருக்கிறது!"


"ஆரம்பிச்சுட்டையா உன் வேலையை" என்று விக்கிரமாதித்தன் கடுப்பானான். வேதாளம் வழக்கம் போல் தொடந்தது...


"மார்பிள் ( சலவைக் கல் ), கிரானைட் ( கருங்கல் ) ஆகியவற்றில் கொஞ்சம் கதிரியக்கமுள்ள மூலப் பொருட்கள் (Radioactive elements) வெவ்வேறு விகிதத்தில் இருக்கின்றன. 


"யுரேனியம்(uranium), தோரியம்(Thorium) இவற்றில் தான் இருக்குன்னு நினைச்சேன்"


"அது ஜேம்ஸ் பாண்ட் படத்தோட பாதிப்பு" என்று வேதாளம் சிரித்து மேற்கொண்டு சொல்ல ஆரம்பித்தது..


"ஒரு கிலோ கருங்கல்லில் சுமார் அறுபதிலிருந்து எழுபது அணுக்கள் யுரோனியமும் பத்து அணுக்கள் தொரேனியமும் இருக்கின்றன. அதில் கதிர்வீச்சு விநாடிக்கு விநாடி இருக்கிறது.  இந்தக் கதிர்வீச்சுகளிலிருந்து ராடான் என்ற வாயு உற்பத்தியாகிறது. சலவைக் கல்லில் கருங்கல்லில் இருக்கும் அளவைவிட பத்தில் ஒரு பங்கு தான் கதிர்வீச்சு இருக்கிறது. நம் திசு(tissue) கதிர்வீச்சினால் உறுஞ்சும் சக்தியை(energy) மில்லிரெம்ஸில்(millirems) என்று அளக்கிறார்கள். காற்று, தண்ணீரில் கூட கதிர்வீச்சு இருக்கிறது. ஏன் உன் மனைவியிடம் கூட இருக்கிறது!"


"என்ன?"


"ஆமாம். சண்டைபோடாமல், எட்டு மணி நேரம் மனைவி பக்கத்தில் படுத்துத் தூங்கினால் 2 mrems கதிர்வீச்சு இருக்கும். இது நம் உடலில் இருக்கும் பொடாஸியத்தால் (சாம்பலச்சி) வருகிறது. அணுமின் நிலையத்திலிருந்து ஐம்பது மைல் தூரத்தில் இருப்பவர் 0.009mrems அளவிற்கு கதிர்வீச்சுக்கு ஆளாக்கபடுகிறார்; புகைபிடிப்பவருக்கு 16,000 mrems; சொத்தைப் பற்களுக்குப் போடும் மூடி(cap) மற்றும் பற்களை வெண்மையாக்கக் காண்பிக்கும்(whitening agents) மருத்துவப் பொருட்களில் யுரேனியம் கலந்திருக்கிறது. நீங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்தால் ஒவ்வொரு 1000 மைல்களுக்கு 1 mrem; நியூயார்க் கிராண்ட் செண்ட்ரல் ஸ்டேஷன் 120 mrem - அங்கு உபயோகப் படுத்தியுள்ள கருங்கற்களில் நிறைய யுரேனியம் இருக்கிறது. 


"வயத்தில புளியக் கரைக்கிற" என்று விக்கிரமாதித்தன் முகத்தில் கலவரம் தெரிந்தது.


"பயப்படத் தேவையில்லை. இதனால் நமக்கு பாதிப்பு இல்லை. சரி கம்மியாகக் கதிர்வீச்சு உள்ள கருங்கல் எங்கு கிடைக்கிறது தெரியுமா ? எகிப்து மற்றும் இந்தியாவில் தான் கிடைக்கிறது" என்றது வேதாளம்.


"சீக்கிரம் கிளம்பு; இல்லை, உன்னை பால்கனியிலிருந்து தள்ளிவிட்டுவேன்!" என்று விக்கிரமாதித்தன் வேதாளத்தை எச்சரித்தான்.


"இது என்ன உயரம், ஒரு ஆயிரம் அடி இருக்குமா ?"


"தெரியாது, என்கிட்டே அவ்வளவு பெரிய ஸ்கேல் கிடையாது" விக்கிரமாதித்தன் கடுப்படித்தான்.


"சரி ஒரு பாரோ மீட்டர்(Baro Meter - வாயு பாராமனி) இருந்தால் கொடு, நான் எவ்வளவு என்று அளந்து சொல்லுகிறேன்,ம்" என்றது வேதாளம்.


"ஒளராத! பாரோ மீட்டரை வெச்சு எப்படி உயரத்தை அளக்க முடியும் ?" என்றான் விக்கிரமாதித்தன்.


வேதாளம் சிரித்துக்கொண்டு "ஒரு பெரிய கயிரை எடுத்துக்கொள்; ஒரு பக்கத்தில் பாரோ மீட்டரைக் கட்ட வேண்டும், இப்போது கயிற்றை கட்டிடத்தின் மேலிருந்து கீழே இறக்க வேண்டும், முனை தரையைத் தொட்டவுடன் கயிற்றின் அளவை அளக்க வேண்டும்"


"என்ன நக்கலா ?"


"இதைவிட ஒரு சுலபமான வழி இருக்கிறது. பாரோ மீட்டரை பால்கனியிலிருந்து கீழே போடு. ஒரு ஸ்டாப் வாட்சைக் கொண்டு அது கீழே விழ எவ்வளவு நேரம் ஆகிறது என்று பார்க்க வேண்டும் பிறகு S=1/2at 2 என்ற சூத்திரத்தை(formula) வைத்துக் கண்டுபிடிக்கலாம்"


"அப்படியா ?" விக்கிரமாதித்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. வேதாளம் விடுவதாக இல்லை


"இன்னொரு முறை இருக்கிறது. பாரோ மீட்டரை மொட்டைமாடியில் எடுத்துக்கொண்டு போய் நிற்க வை, கீழே விழும் நிழலை அளந்து பார். பிறகு உன் வீட்டின் நிழலை அளந்து பார். பிறகு ஒன்றுக்கொன்றுள்ள தராதரம் (proportion)வைத்து சுலபமாகக் கண்டுபிடித்துவிடலாம்"


"o o" என்று விக்கிரமாதித்தன் முழித்தான். வேதாளம் தொடர்ந்தது..


"ஒரு கயிற்றை பாரோமீட்டரில் கட்டி, கடிகாரத்தின் பெண்டுலம் போல் ஆட்ட வேண்டும். அதிலிருந்து 'g' ( புவியீர்ப்பு ) கண்டுபிடிக்க வேண்டும். அதிலிருந்து வீட்டின் உயரத்தைக் கண்டுபிடிக்கலாம்"


இதற்கு மேலும் விட்டால் வேதாளம் ஏதாவது பேசிக்கொண்டு இருக்கும் என்று நினைத்து, விக்கிரமாதித்தன் வேதாளத்தை பால்கனியிலிருந்து தூக்கிப் போட்டான்.  வேதாளம் பறந்து கொண்டே சொன்னது...


"கீழ் மாடியில் பாரோமீட்டரில் காற்றழுத்தம் எவ்வளவு என்று பார். பின் மேல்மாடிக்குப் போய்ப் பார். காற்றழுத்தம் மேலே போகப் போக கம்மியாகும்; அதை வைத்து வீட்டின் உயரத்தைக் கண்டுபிடிக்கலாம்" என்று சொல்லிப் பறந்தது.


விக்கிரமாதித்தன் மீதி பக்கோடாவைச் சாப்பிட ஆரம்பித்தான்.


மற்ற விக்கிரமாதித்தன் வேதாளம் பதிவுகள் ]

Comments