Skip to main content

நேர்மை

சமிபத்தில் படித்த நல்ல பதிவு நண்பர் பிரதீப் எழுதியது.தலைப்பு நேர்மை. இதை தமிழ் கூறும் நல்லுலகம் கவனித்ததா என்று தெரியவில்லை. இதை இங்கு பிரசுரிக்கிறேன். அனுமதி தந்த பிரதீபுக்கு நன்றி. இப்போது கூட லேட் இல்லை நாம் மாறலாம்.


Rental Reciept, Medical Bill, Savings proof என்று எல்லா officeகளிலும் அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது. நான் பணிபுரியும் இடத்திலும் மார்ச் 15க்குள் எல்லாவற்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். நான் இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனங்களை ஒப்பிட்டால் இது கொஞ்சம் சர்வ ஜாக்கிரதையான நிறுவனம் ஆகத் தான் இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது. அவர்கள் அத்தாட்சிகளைப் பெறும் முறையையும் ஒழுங்கையும் வைத்துத் தான் சொல்கிறேன். மக்கள் தங்களுக்கு வழங்கப்படும் HRA, Medical Allowanceக்காக ஒரு நயா பைசா வரி கட்டாமல் அனைத்தையும் அடைய நடத்தும் நாடகங்கள் இருக்கிறதே..7 பேர் சேர்ந்து ஒரு வீட்டில் 6,000 வாடகைக்கு தங்கிக் கொண்டு, rent reciept என்றவுடன் ஆளாளுக்கு 6,000 போட்டுக் கொள்வதும், இவனுக்கு அவன் கையெழுத்து இடுவதும், அவனுக்கு இவன் கையெழுத்து இடுவதும் சர்வ சாதாரணம். அப்படி ஒரு 12 மாதத்திற்கான குப்பையையும் அள்ளி ஆபிஸில் சமர்ப்பித்து விட்டால் போதும், கொஞ்சம் வரியை விலக்கி விடலாம். இந்த மாதிரி நாடகங்களில் நடித்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆனால் அது கமலஹாசனையோ, ஓம்பூரியையோ சிவகாசி, ஆதி போன்ற படங்களில் நடிக்க வைத்தால் அவர்களுக்கு எப்படிக் கசக்குமோ அதே கசப்புணர்ச்சியுடன் தான் நடித்தேன்..அதற்காக இன்றும் வருந்துகிறேன். இன்னும் வருந்துவேன். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது என்று என்னை நீங்கள் வியப்பாய் பார்ப்பது எனக்குப் புரிகிறது...
என் அலுவலகத்தில் அவர்கள் இந்த அத்தாட்சிகளை சமர்ப்பிக்க சொன்ன விதம் இந்த மாதிரி சால்ஜாப்புகளை கொஞ்சம் குறைக்கும் போலிருக்கிறது. HRA விலும், Medical Bill லும் வரி விலக்கு வேண்டுபவர்கள் செய்ய வேண்டியவை:


 



20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் வாடகை ஒப்பந்தப் பத்திரம்.


2,500 க்கு வாடகை செலுத்தினால் செக்கில் செலுத்தி இருக்க வேண்டும். அந்த செக் நம்பரை வாடகை ரசீதில் குறிப்பிட வேண்டும்.


மருந்து ரசீது 500 ரூபாய்க்கு மேல் தாண்டினால் டாக்டரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


கண்ணாடி, லென்ஸ் போன்ற செலவுகள் 1,500 ரூபாயை தாண்டக்கூடாது.


ஹார்லிக்ஸ், பூஸ்ட் போன்ற வஸ்துக்கள் மருத்துவச் செலவில் காட்டக் கூடாது.


இந்த கெடுபிடிகளை அனுசரித்து, இந்த முறையாவது நேர்மையாய் நடந்து கொள்வோம் என்று அதற்கேற்ப நான் நடந்து கொண்டேன். உரிய வாடகைக்கு வீட்டுக்காரரிடம் சொல்லி பத்திரம் தயாரித்தேன்.எல்லோரும் இப்படித் தானே மாறி இருப்பார்கள் என்று நீங்கள் நினைத்தால் கொஞ்சம் மெதுவாக உங்கள் தலையில் கொட்டிக் கொள்ளுங்கள். கள்ளன் பெருசா, காப்பான் பெருசா என்று ஒரு பழமொழி இருக்கிறது..நீ இவ்வளவு கெடுபிடி பண்றியா, இதோ எனக்கு வேற ரூட் இருக்கு என்று சாதாரண மக்களே அரசாங்கத்தை ஏமாற்றும் போது, சாப்·ட்வேர் இன்சினியர்கள் எந்த விதத்தில் குறைச்சல்னேன்? உள்ள போன அத்தன பேரும் குத்தவாளி இல்லீங்க; வெளியே உள்ள அத்தன பேரும் புத்தன் காந்தி இல்லீங்க என்று தலைவர் பாட்டு சரியாகத் தான் இருக்கிறது..யாரும் எதற்கும் சலைத்தவர்கள் இல்லை. பெங்களூரிலாவது வாடகை விஷ ஜுரம் வந்தது மாதிரி ஏறி கிடக்கிறது. சென்னையில் அவ்வளவு இல்லை தான்..கொடுப்பது 4000 இருந்தும் ஆளாளுக்கு 6,000, 7000 என்று வாடகை போட்டாயிற்று [அதில் 7 பேர் வாழ்வது வேறு விஷயம்!]சரி! இனி போலி பத்திரம் தயாரிக்க வேண்டும். பத்திரத்தில் எழுதிக் கொண்டால் வீட்டுக்காரர் அதை வருமானமாய் காட்டி அதற்கு வேறு வரி கட்ட வேண்டும். அதற்கு அவர் சம்மதிப்பாரா? இதில் கொடுக்கும் பணத்தை செக்கில் வேறு தர வேண்டும், இதெல்லாம் ஆவுறதில்லை. சரி 7 பேர் இருக்கோம், பாங்கில் அக்கவுண்ட் வைத்திருக்கும் ஒருத்தனை புடி..மாப்ளே நீ தாண்டா ஹவுஸ் ஓனர். பத்திரத்துல கையெழுத்து போட்றா. நான் உனக்கு 7000 ரூபாய்க்கு ஒரு செக் தர்றேன். அவ்வளவு தான். மேட்டர் ஓவர்.


ஏமாற்றுவது என்பது எவ்வளவு சுலபமாகி விட்டது. தப்பு என்பது எந்த அளவுக்கு நம் உடம்பில் ஊறி விட்டது. நேர்மை என்பதை நாம் மறந்து போய் பல நூற்றாண்டுகள் ஆகி விட்டதோ? அரசியல்வாதிகளை குறை சொல்வதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்களுக்கும் நமக்கும் என்ன பெரிய வித்தியாசம்? ஒரு சில ஆயிரங்களை காப்பாற்றுவதற்காக சட்டப்படி குற்றம் என்று தெரிந்தும் எந்த தைரியத்தில் இப்படி செய்கிறோம்? சுய ஒழுக்கம், நேர்மை, ஒழுக்கம் என்பது நம்மிடம் எப்போது வரும்? அது இல்லாமல் நாட்டின் முன்னேற்றத்தை பற்றிய கனவு வெறும் பகல் கனவு தானே? இவ்வளவு தப்புகளை செய்து கொண்டு நம்மால் எப்படி நிம்மதியாய் தூங்க முடிகிறது? இயக்கம், கொள்கை என்று ஆயிரம் பேசுபவர்கள் கூட தங்களுக்கு என்று வரும்போது சந்தர்ப்பவாதிகளாய் மாறி விடும் கொடுமை இந்த நாட்டில் தான் நடக்கிறது. அவன் சரியாக இல்லை, நான் ஏன் இருக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?


ஒரு ·பார்வேர்ட் மெயில் வந்தது. அப்துல் கலாமின் உருக்கமான பேச்சு, இந்தியாவின் முன்னேற்றத்தைப் பற்றிய அவர் கனவு என்று..அனுப்பியவனிடம் கேட்டேன்..நீ இந்த முறை சரியான rent reciept submit செய்தியா என்று? பதிலே இல்லை; வேலை அதிகம் போலும்.

Comments