Skip to main content

நவதிருப்பதி

கடந்த வாரம் திருநெல்வேலி, மதுரையை சுற்றியுள்ள பாண்டிய நாட்டு திவ்வியதேசங்களுக்கு சென்றிருந்தேன். முதல் நாள் திருநெல்வேலியில் நவ திருப்பதி என்றழைக்கப்படும் ஒன்பது திவ்வியதேசங்கள், மறு நாள் மதுரையில் இருக்கும் மூன்று திவ்வியதேசங்கள் என மொத்தம் பன்னிரெண்டு. சனிக்கிழமை மதுரையிலிருந்து புறப்பட்டு போகும் வழியில் திருநெல்வேலி 146 கீமீ என்ற போர்டை பார்த்த போது காலை மணி 11:30; கயத்தாறு என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தோம் என்ற இடத்தை கடந்து சென்று கொண்டிருந்தோம். இந்த இடத்தில் தான் வீரபாண்டிய கட்டபொம்மனை தூக்கில் போட்டதாக சொல்கிறார்கள். இப்போது இந்த இடத்தில் ஏர்டெல் டவர் இருக்கிறது. திருநெல்வேலி வருவதற்குள் அதை பற்றிய ஒரு சிறு குறிப்பு...




மதுரைக்கு முன் பாண்டியர்களுக்கு தலைநகராக திருநெல்வேலி இருந்திருக்கிறது. ஊர் சுற்றிவர நெல் பயிர்கள் வேலி போல சூழ்ந்திருந்த காரணத்தினால் திருநெல்வேலி என்ற பெயர் பெற்றது. தாமிரபரணிக்கு மேற்கு பக்கத்தில் திருநெல்வேலியும் கிழக்கு பக்க்கத்தில் பாளயங்கோட்டையும் அமைந்துள்ளது. கிபி 16, 17, 18 ஆம் நூற்றாண்டுகளில் நாயக்கர்கள் இந்த ஊரை ஆண்டிருக்கிறார்கள். கிபி 1560 ஆம் ஆண்டு விஸ்வநாத நாயக்கர், பல கோயில்களை கட்டியுள்ளார்.



 



மதுரையிலிருந்து திருநெல்வேலிக்கு போகும் வழியெல்லாம் பசுமை - இருபக்கமும் வாழை பயிர்கள். கொய்யா மரங்கள், (கொய்யாவை சுற்றி அணில் கடிக்காமல் இருக்க பிளாஸ்டிக் பை கவசம்), ஜெயலலிதா கொடுத்த இலவச சைக்கிளில் மாணவிகள் ஸ்கூலுக்கு செல்வதை கடந்து சென்ற போது முதல் கோயிலை அடைந்தோம் - திருவரகுணமங்கை

திருவரகுணமங்கை கோயில் வந்தவுடன் வேனிலிருந்து ஒரே ஓட்டமாய் ஓடி கோயிலுக்குள் சென்றோம் காரணம் பலத்த மழை. திருவரகுணமங்கை என்ற கோயில் நத்தத்தில் இருக்கிறது. திருவரகுணமங்கை என்றால் யாருக்கும் தெரியாது, நத்தம் என்று சொன்னால் தான் அடையாளம் காண்பிப்பார்கள். மூலவர் விஜயாஸனப் பெருமாள், ஆதிசேஷன் குடை பிடிக்க வீற்றிருந்த திருக்கோலம்.



 



புளிங்குடி கிடந்து வரகுணமங்கையிருந்து வைகுந்தத்துள் நின்றுதெளிந்த சிந்தை அகங்கழியாதேஎன்னையாள்வாய் எனக்கருளி...

 




என்று நம்மாழ்வார் திருவாய்மொழில் (9-2-4, 3571) மங்களாசாசனம் செய்துள்ளார்.



இந்த கோயிலை முடித்துவிட்டு திருபுளிங்குடி சென்றோம். "நிலமகளும் மலர்மகளும் வருடும் நின் மெல்லடியை இந்தக் கொடியவினை செய்த பாவியேனும் பிடிக்க வேண்டுமென்று கூவுகிறேன். அந்தோ நீ வராதிருக்கின்றாயே" என்று நம்மாழ்வாரால் திருவாய்மொழில் (9-2-10, 3577) பாடப்பெற்ற இத்தலம் திருவரகுணமங்கையிலிருந்து 1 கிமி தூரத்தில் இருக்கிறது. சயனத்திருக்கோலத்தில் காய்சினவேந்தன். திருவயிற்றிலுருந்து தாமரைக்கொடி தனியாக கிளம்பிச் சென்று சுவற்றிலுள்ள பிரம்மாவின் தாமரைமலருடன் சேர்ந்து கொள்வதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த கோயிலின் தனி சிறப்பு. வெளி பிரகாரத்தில் உள்ள ஒரு ஜன்னல் வழியாக உற்று பார்த்தால் காய்சினவேந்தனின் பாதங்களை தரிசிக்கலாம். ராமானுஜர் இவ்வூருக்கு வந்து பெருமாளை சேவித்துவிட்டு வெளிப்புரத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்த அர்ச்சகர் மகளைக் கண்டு குருகூர் இன்னும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று கேட்டார். அதற்கு அந்த பெண் "முக்கோலேந்தி துவராடையணிந்த மூதறிவாளர்..." என்று நம்மாழ்வார் பாசுரத்தை சுட்டிக்காட்டி "நம்மாழ்வார் பெருமாளை கூப்பிடும் தூரத்தில் இருக்கு" என்று கூறியது இந்த கோயிலில் தான்.



மழை நின்றுவிட்டது. இரட்டை திருப்பதி என்று அழைக்கப்படும் திருதொலைவில்லிமங்கலம் என்ற இடத்திற்கு கிளம்பினோம். இங்கு இரண்டு கோயில்கள் சேர்ந்தே ஒரு திவ்வியதேசமாக கருதப்படுகிறது. முதல் கோயில் தாமிரபரணி நதிக்கரையில் உள்ளது. தேவபிரான் என்ற ஸ்ரீநிவாசன் நின்ற திருக்கோலம். இரண்டாவது கோயில் வாய்க்கால் கரையிலேயே உள்ளது. மூலவர் அரவிந்தலோசனன் என்னும் செந்தாமரைக்கண்னன், வீற்றிருந்த திருக்கோலம். இந்த கோயிலகள் இருக்கும் இடத்தில் அவ்வளவாக வீடுகள் கிடையாது. இந்த கோயில்கள் இருக்கும் இடம் முன்பு ஒரு யாகசாலையாக இருந்தது என்றும் அதனால் இந்த கோயில்களில் துவாரபாலகர்கள் கிடையாது என்று அர்ச்சகர் சொன்னார். நம்மாழ்வார் திருவாய்மொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார் ( திருவாய்மொழி 6-5-1(3271), 6-5-8( 3278 ) )



இந்த கோயிலை சுற்றி உள்ள நந்தவனத்தில் முல்லை, மகிழம்பூ, விருச்சி போன்ற பூக்கள் அழகாக வளர்ந்திருப்பதை காணலாம். (உபயம் TVS). இந்த கோயில் அருகே உள்ள குப்பை தொட்டியில் "மக்கும் குப்பை" "மக்காத குப்பை" என்று தமிழில் சுற்றுபுரசூழல் பாதுகாக்கப்படுகிறது. நகரத்தில் இருக்கும் நாம்தான் அலட்சியப்படுத்திகிறேம். ( பார்க்க படம் )



அடுத்ததாக நம்மாழ்வார் திருவாய்மொழியில் (8-2-4, 3561) பாடப்பெற்ற ஸ்தலமாகிய திருக்குளந்தை என்ற இடத்திற்கு சென்றோம். திருக்குளந்தை என்றால் யாருக்கும் தெரியாது பெருங்குளம் பெருமாள் கோயில் என்று கேட்டால் வழி சொல்கிறார்கள். சோரனானன் மீது நர்த்தனம் புரிந்ததால் இப்பெருமாளுக்கு சோரநாதன் என்ற திருநாமம் வந்தது ( சோர நாட்டியன் ). தூய தமிழில் மாயக் கூத்தன். இங்கு இருக்கும் யானைக்கு வாழைப்பழம் கொடுத்து அதை ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம். சிரித்து போஸ் கொடுத்தது. ( பார்க்க படம் )



மகர நெடுங்குழை நாதன் இருக்கும் இடமான தென் திருப்பேரைக்கு அடுத்ததாக சென்றோம். நம்மாழ்வாரால் 11 பாசுரங்களில் பாடப் பெற்ற ஸ்தலம் இது ( திருவாய்மொழி 7-2 3359-69 ). நிகரில் முகில் வண்ணன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. ஸ்ரீரங்கநாதனின் அழகை முகில் வண்ணன்(அழகுடையவன்) என்று பாடிய நம்மாழ்வார், இப்பெருமாளை நிகரில் முகில் வண்ணன் (அரங்கநாதனின் நிகராக அழகுடையவன் ) என்று பாடியுள்ளார். ( மகர நெடுங்குழை நாதன் என்றால் என்ன என்று ஆராய்ந்ததில் மீன் வடிவிலான நீண்ட காதணிகளை அணிந்தவன் என்று பொருள் ). இந்த கோயிலில் கவிபிச்சு ஐய்யங்கார் எழுதிய ஒரு கவிதை சுவற்றில் தேர் வடிவில் எழுதியிருக்கிறார்கள். என்ன என்று புரியவில்லை. யாராவது விளக்கினால் நன்றாக இருக்கும். திருச்சிக்கு பக்கத்தில் திருப்பேர் நகர் என்ற திவ்வியதேசம் இருப்பதால், இத்தலத்தை தென் திருப்பேரை என்று அழைக்கிறார்கள்.



தென் திருப்பேரையிலிருந்து ஆழ்வார் திருநகரி போகும் வழியில் ஒரு கிளைப் பாதையில் 2 கீமீ சென்று மதுரகவியாழ்வார் பிறந்த இடமான திருக்கோளூர் வந்தடைந்தோம்.

"வைத்தமாநிதியாம் மது சூதனனையே யல்ற்றிகொத்தவர் பொழில் சூழ் குருகூர் சடகோபன் சொன்ன என்று நம்மாழ்வார் 12 பாசுரங்களில் மங்களாசாசனம் செய்துள்ளார். இதில் இருக்கும் பெருமாள் பெயர் வைத்தமாநிதிப் பெருமாள். சயனத்திருக்கோலம். குபேரனின் தொலைந்த செல்வத்தை பாத்துகாத்து அளந்ததால் தலைக்கு மரக்கால் வைத்து படுத்துள்ளார் என்று கூறுவர். தொலைந்த செல்வத்தை கையில் மை தடவி எங்குள்ளது என்று பார்ப்பது போல் மூலவர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இழந்த செல்வத்தை பெற இப்பெருமாளை வழிபட்டால் இயலும் என்ற நம்பிக்கை உண்டு. மரக்கால் வைத்து பெருமாள் பள்ளி கொண்டுள்ளது இங்கும் சோழ நாட்டுத் திவ்விய தேசமான திரு ஆதனூரில் மட்டுமே இருக்கிறது

திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரிக்கு சென்ற போது சாய்ந்திரம் ஆகிவிட்டது. நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமானதால் ஆழ்வார் திருநகரி என்று பெயர் பெற்றது. சடகோப அந்தாதியில் ( கம்பர் எழுதியது என்று நம்பப்படுகிறது) குருகூர் என்றே எடுத்தாண்டுள்ளார். திருவழுதி வள நாட்டை குருகன் என்ற அரசன் ஆண்டமையால் அவன் நினைவாக குருகபுரி ஆயிற்றென்றும் வரலாற்றுச் சான்றுகள் உண்டு. குருகு என்ற தமிழ் சொல்லுக்கு நாரை, கோழி, சங்கு என்ற பல பொருளுண்டு.



 


 இங்குள்ள மூலவர் ஆதிப்பிரானின் கால்கள் பூமியுள் இருப்பதாக ஐதீகம். நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை எழுத நினைத்த நாதமுனிகள், மதுரகவி ஆழ்வாருடைய "கண்ணி நுண் சிறுத்தாம்பு" என்ற பத்து பாடலை பல்லாயிரம் முறை சேவித்தவுடன் நம்மாழ்வாரே நேரில் வந்து அருள நாதமுனி அவற்றை எழுதினார் என்று கூறப்படுகிறது. நம்மாழ்வார் மூலவர் வடிவம் தாமிரபரணி நீரை காய்ச்சி அதில் மதுரகவி ஆழ்வார் தன் சக்திகளை அளித்து உருவாக்கிய சிற்பம் என்று நம்பப்படுகிறது. சின்ன வயசில் என் அப்பாவுடன் இந்த கோயிலுக்கு சென்றிருக்கிறேன். இது இரண்டாவது முறை. இந்த கோயிலில் இருக்கும் புளிய மரத்தின் பொந்தில் தான் நம்மாழ்வார் 16 ஆண்டுகள் வீற்றிருந்தார் பின் மதுரகவி ஆழ்வார் காசியிலிருந்து திரும்பி வந்துக்கொண்டிருந்த போது வானத்தில் ஒரு ஒளி தெரிவதை கண்டு அதை நோக்கி நடந்து குருகூர் வந்ததும் ஒளி மறைந்துவிட்டது. ஊரில் ஏதாவது விசேஷம் என்று கேட்டார். அதற்கு ஊர்கார்கள் இந்த ஊர் புளிய மரத்தில் சிலகாலமாக ஒரு குழந்தை அன்ன ஆகாரமின்றி ஒரு புளிய மரத்தின் பொந்தில் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்று சொன்னார்கள். புளியமரத்தின் பொந்தில் இருந்த யோக நிலையில் இருந்த குழந்தையிடம் "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?"

"அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று நம்மாழ்வார் கூறியவுடன், மதுரகவியாழ்வார் நம்மாழ்வாரின் சீடனானார் என்கிறது குருபரம்பரை

இங்குள்ள புளிய மரம் 'உறங்கா புளி' என்றழைக்கப்படுகிறது. இந்த புளிய மரம் பூக்கும் ஆனால் காய்க்காது, மற்ற புளிய மரத்தை போல் இரவில் மூடிக் கொள்வதில்லை ( நான் சென்றபோது இதை கண்கூடாக பார்த்தேன் ). அங்குள்ள அர்ச்சகரிடம் ஒரு ஸ்பெஷல் பர்மிஷன் வாங்கி புளிய மரத்தின் அமைந்திருக்கும் வேலிக்குள் சென்று அதன் கிளைகளையும் அடிபாகத்தையும் தொட்டுபார்த்தேன். ஏதோ பல நூற்றாண்டுகள் பின்நோக்கி சென்ற ஒரு அனுபவம். பேசாமல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு குடும்பதுடன் இங்கே வந்துவிடலாம் என்று எண்ணினேன்.



 


கடைசியாக ஸ்ரீவைகுண்டம் வந்து சேர்ந்த போது மத்தியானம் பெய்த மழையால் கோவில் முழுவதும் தண்ணீர் தேங்கியிருந்தது. வேஷ்டியை மடித்து கட்டிக்கொண்டு உள்ளே சென்றபோது கோஷ்டி பிரபந்தத்தை சேவித்துக்கொண்டிருந்தார்கள். கோஷ்டி முடிந்த பின் அரவணை பிரசாதம், கொடுத்தார்கள். மற்ற எல்லா கோயில்களிலும் பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளிக்கொண்டிருப்பார் அனால் இந்த கோயிலில் இருக்கும் வைகுண்ட நாதன் நின்ற திருக்கோலத்தில் ஆதிசேஷன் குடைபிடிக்கும் வண்ணத்தில் இருக்கிறார். இங்கு உள்ள பெருமாள் திருமேனியை உருவாக்கிய சிற்பி அப்பேரழகில் பெரிதும் மயங்கி செல்லமாக கன்னத்தில் கிள்ளி விட்டார், அந்த வடுவை எம்பெருமான் கன்னத்தில் இன்றும் காணலாம். ஸ்ரீவைகுண்டம் மண்டபங்களில் இருக்கும் சிற்பங்கள் மிக அழகானவை. நாயக்கர், பாண்டியர்களின் கை வண்ணத்தை அதில் காணலாம். திருவேங்கடமுடையான் சன்னிதியில் ராமர், ஹனுமார் சிற்பங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. ராமர் ஹனுமார் தோள் மேல் கை போட்டுக்கொண்டிருக்கும் சிற்பத்தை பாருங்கள் - எவ்வளவு அழகு.






வைகுண்ட நாதனை சேவித்துவிட்டு புறப்பட்ட போது மாலை 8:30.



மதுரை வந்து சேர்ந்த போதுதான் என் நண்பர் திருநெல்வேலி அல்வா வாங்கி வரச் சொன்னது நினைவிற்கு வந்தது. அவருக்கு நிஜமாகவே அல்வா தான்.



பிகு: என்னுடன் நவ திருப்பதி சுற்றி பார்க்க முடியாதவர்களுக்கு இணையத்தில் சுற்றி பார்க்க ஏற்பாடு செய்துள்ளேன். கீழ் காணும் சுட்டியில் கிளிக் செய்து பாருங்கள்.



நவ திருப்பதி செல்லும் வழி


அதில் ஒவ்வொரு கோயிலின் மேலும் கிளிக் செய்து கோவிலை சுற்றி பார்த்து, பெருமாளையும் சேவிக்கலாம்.


[ சில படங்கள் www.navathirupathi.org என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டது ]


[ Update ]
நண்பர் திருமலை ராஜன் அவர்கள் ரத கவிதைக்கு மரத்தடியில் எழுதியிருக்கும் விளக்கத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.


கோவிலில் வரையப்பட்ட ரத பந்தனத்தை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் வரிசைப்படி படித்து, பின் தேரின் உச்சியில் இருந்து நடுவரி கீழ் நோக்கிப் படித்தால் பின்வரும் கவிதை கிடைக்கிறது.



இணையொத்து வாழ்வோர்க் கிடரைத் தவிர்க்கும்
பணைகாண் சீர்செல்வம் பாலிக்குங் குணமீந்த
வாதழைக்கு மெல்லோர்க்கும் ஆந்தனமிப் பார்
வாழ் சுவாமி குழைக்காதர் துணை


இந்தக் கவிதை தமிழறிஞரும் வைணைவ இலக்கியங்களை நூல் வடிவில் கொணர்ந்தவரும், கம்பன் புகழ் பரப்பியவருமான பி.ஸ்ரீச்சாரியார் அவர்களின் தந்தை பிச்சுவையங்கார் அவர்களால் இயற்றப்பட்டுள்ளது.

Comments

  1. navathiruppathi sthalathai suttiparthathupol mahilchi, thankyou for in visit

    ReplyDelete

Post a Comment