Skip to main content

ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்

ஸ்ரீவைஷ்ணவத்தில் மூன்று சொற்களை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா. இந்த மூன்று சொற்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்   பற்றி தெரிந்துகொள்ள வேண்டும். 
மேலே படிக்கும் முன் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள் - இந்தக் கட்டுரையில் பல ஆசாரியர்களின் பெயர்கள் வரப் போகிறது அதனால் கொஞ்சம் நிதானமாகப் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன் 
(முடிந்தால் ஒரு பேப்பர் பேனா கொண்டு குறிப்பு எடுத்துக்கொண்டு வாருங்கள்) 

பிள்ளை என்றால் என்ன ? லோகாசார்யார்   என்றால் என்ன ? என்று பார்த்துவிடலாம். அதற்கு சற்றே பின் சென்று நம்பிள்ளை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.  இங்கேயும் ‘நம்’ என்றால் என்ன ‘பிள்ளை’ என்றால் என்ன என்று பார்க்க வேண்டும் ! 

குருபரம்பரையில் பட்டர் ( கூரத்தாழ்வான் திருக்குமாரர்) , நஞ்சீயர், நம்பிள்ளை என்ற வரிசை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் பட்டர் பரமபத்தித்த பின்னர் தான் நம்பிள்ளை அவதரித்தார் என்ற எண்ணம் வரும். ஆனால் பட்டர் வாழ்ந்த காலத்திலேயே நம்பிள்ளையும் வாழ்த்திருக்கிறார். இதைத் அவருடைய வியாக்கியானங்களில் வரும் ஐதிகங்களைக் கொண்டு நாம் தெரிந்துகொள்ளலாம். இந்தத் தகவல்களை கொண்டு தான் நம்பிள்ளையின் கதையை உங்களுக்குச் சொல்ல போகிறேன். 

நஞ்சீயர் பட்டரின் ஆணைப்படி திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்ற வியாக்கியானத்தை அருளினார். அதை ’படிக்கும் படியாக’ இன்னொரு படி(copy) ( அப்போது எல்லாம் ஸிராக்ஸ் கிடையாது ! ) எடுத்தால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்பட்டார். பள்ளியில் அழகாகக் கையெழுத்து உடைய மாணவனைக் கொண்டு ரிகார்ட் நோட்ஸ் எழுதித் தர சொல்லுவது போல
“அழகாகப் பிரதி எழுதித் தருவாருண்டோ ?” என்று சிஷ்யர்களை கேட்டார் நஞ்சீயர். 
“இங்கே அடிக்கடி வரும் நம்பூர் வரதர்” என்று சிஷ்யரை அவரை அறிமுகப்படுத்தினார்.
நம்பூர் வரதரிடம் “ஒரு கிரந்தம் எழுதிக் காட்டும்” என்று நஞ்சீயர் விண்ணப்பிக்க 
அவரும் எழுதிக் காட்டினார். 
எழுத்துக்கள் முத்து போன்று இருந்ததைக் கண்டு மிகுந்த சந்தோஷமாக அவரைத் தேர்ந்தெடுத்தார். பகவத் விஷயமாக இருப்பதால் இவரிடம் இதை எப்படித் தருவது என்று தயங்கினார் நஞ்சீயர்.
குறிப்பறிந்த நம்பூர் வரதராசர் “அடியேனைத் தேவரீர் திருவுள்ளக் கருத்தின்படியே திருத்திப் பணிகொள்ளல் ஆகாதோ?” என்றார்
நஞ்சீயரும் மகிழ்ச்சியுடன் அவரைத் திருத்திப் பணி கொண்டு, பட்டோலையில் எழுதின ஒன்பதினாயிரப்படியை ஒரு முறை காலஷேபம் சாதித்து, இப்படியே தப்பாமல் எழுதித் தாரும்” என்று சுவடிக்கட்டை அவரிடம் ஒப்படைத்தார்.
”அடியேன் ஊருக்குச் சென்று கவனமாக எழுதிக் கொண்டு வருகிறேன்” என்று விடைபெற்று ஊருக்குக் காவேரியை கடந்து செல்லும் போது நடுவில் வெள்ளப்பெருக்கு அதிகமாக சுவடிக்கட்டை தலையில் கட்டிக்கொண்டு நீந்திக் கடக்கும் போது அது நழுவி காவிரியில் அடித்துச் சென்றது.
தன் ஆசாரியர் தன்னை நம்பிக் கொடுத்த பொக்கிஷத்தை நழுவவிட்ட நம்பூர் வரதராசர் என்ன மாதிரி மனகஷ்டத்தில் இருந்திருப்பார் ? கரையை அடைந்த வரதராசர் “பட்டோலை போய்விட்டதே! ஆசாரிய அபசாரம் ஆகிவிட்டதே இனி என்ன செய்வது ?” பதட்டத்துடன் வருத்தமும் சேர்ந்து பதற்றம் அடைந்தார். 
தமது இல்லம் சென்று, திருவாராதனப் பெருமானுக்கு ஆராதனம் செய்தபின் உண்ணாமல் படுத்துறங்கினார்.
“வருந்த வேண்டாம்... உம்முடைய ஆசாரியனை முன்னிட்டு நீ எழுத ஆரம்பியும், உம் நினைவில் உம்முடைய ஆசாரியன் சொன்னவற்றை ஒன்றும் தவறாது எழுத உதவுவோம்!” என்று கனவில் உத்திரவாதம் கொடுத்தார் நம்பெருமாள்!
ஆசாரியர்கள் உபதேசம் செய்ததை எல்லாம் எவ்வளவு முறை அவர் கேட்டிருப்பார் !  வரதராசர் எழுதத் தொடங்கினார். ஆசாரியர் அருள், நம்பெருமாள் துணையிருக்கஞாபக் சக்தியைக் கொண்டு தவமாக எழுதி முடித்தார்.
வரதரசர் தமிழில் வல்லவர், பல இடங்களில் சில விசேஷ அர்த்தங்களையும் ’எக்ஸ்டரா டாப்பிங்காக’ சேர்த்து எழுதி சுவடிக்கட்டை நஞ்சீயர் திருக்கரத்தில் சேர்ப்பித்தார். நஞ்சீயரும் அதனை அவிழ்த்து படித்துப் பார்த்தார். மூலப்பிரதியை காட்டிலும், பல இடங்களில் சொற்களுக்குத் விசேஷார்த்தங்களும் இருப்பதைக் கண்டு 
“வேறு மாதிரி இருக்கிறதே உண்மையைச் சொல்லும்?” என்று கேட்க 
வரதராசரும் அச்சத்துடன் தயங்கி நிற்க 
“அஞ்ச வேண்டாம்; உண்மையைச் சொல்லும்” என்று கேட்க நடந்தவற்றைச் சொன்னார் நம்பூர் வரதர்.
நஞ்சீயர் வரதாராசருடைய அறிவும் ஆற்றலையும் வியந்து திருவுள்ளமுகந்து “இவர் நம் பிள்ளை” என்று தழுவிக்கொண்டார். அன்று முதல் வரதராசர் ‘நம் பிள்ளை’யானார்.
நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவர் தம் ஏற்றத்தால் - அன்புடையோர்
சாற்று திருநாமங்கள் தான் என்று நன் நெஞ்சே
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று ( உபதேசரத்தின மாலை - 50 )
என்கிறார் மணவாள மாமுனிகள்
இந்த நம்பிள்ளையே தான் லோகாசாரியன் என்ற அழைக்கப்பட்டார்.  அந்த கதையை பார்க்கலாம். 
நம்பிள்ளையின் ஈட்டில் பல வரலாற்றுத் தகவல்கள், அந்த கால வாழ்க்கை முறை நமக்குக் கிடைக்கிறது. ஆனால் அதைவிட முக்கியம் அவருடைய வாழ்க்கை குறிப்பில் ஸ்ரீவைஷ்ணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லும் பாடங்கள் தான். நம்பிள்ளை நஞ்சீயர் சொன்ன definition படி ஒரு சிறந்த ஸ்ரீவைஷ்னவராக வாழ்ந்தார் என்பதற்கு அவர் வாழ்கையில் நடந்த சம்பவங்களே எடுத்துக்காட்டு. திருவரங்கம் இராசமகேந்திரன் திருச்சுற்றில் பெரிய பெருமாளின் திருவடிக்கீழ் ஒரு நான்கு கால் மண்டபத்தூணில் சாய்ந்து கொண்டே திருவாய்மொழி காலஷேபம் நிகழ்த்துவார். எங்கே மக்கள் பெருந்திரளாக கூடினர். 


ஒரு முறை இந்த இடத்தில் நம்பிள்ளை காலஷேபம் செய்த போது, பெரிய பெருமாள் ஜயவிஜயர்களுக்கு அருகிலிருந்து எட்டிப் பார்க்க முற்பட்ட போது அங்கே விளக்கு பிடித்திருக்கு ‘திருவிளக்கு பிச்சன்’ மீது பெருமாள் இடித்துவிட “இப்படிச் செய்யலாமோ ? உள்ளே எழுந்தருளும்” என்று நியமிக்கப் பெரிய பெருமாளும் உள்ளே சென்று மறுபடியும் சயனித்தார்.
“நம் பெருமாள் கோஷ்டியோ நம்பிள்ளை கோஷ்டியோ” என்று மக்கள் வியந்து பேசினார்கள். இன்றைக்கும் விஷயம் அறிந்தவர்கள் அந்த இடத்தை வணங்கிவிட்டுச் செல்வதை பார்க்கலாம். 
முதலியாண்டானின் திருப்பேரனார் கந்தாடைத் தோழப்பர் பெரிய பெருமாள் சன்னதிக்கு முன் நம்பிள்ளை பெரிய கோஷ்டியுடன் வர அதைக் கண்டு பொறாமைப் பட்டார் தோழப்பர். 
 ஒரு முறை நம்பிள்ளையை கடும் சொற்களால் கடிந்துகொண்டார்.
பெருமாள் சேவித்துவிட்டு நம்பிள்ளை மனது கஷ்டப்பட்டு அமைதியாக தம் அகத்துக்குச் சென்றுவிட்டார். தோழப்பருடைய மனைவி சிறந்த அறிவாளி. நம்பிள்ளையின் சொற்பொழிவுகளைக் கேட்டவள். இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு கணவரிடம் முகம் கொடுக்காமல் இருந்தாள். தோழப்பர் “ஏன்?” என்று கேட்க 
அவள் ”ஆழ்வாரின் அவதாரம் போன்ற நம்பிள்ளையிடம் எப்படி அபசாரம் படலாம் ? உம்மோடு வாழவே பிடிக்கவில்லை ?” என்றாள்
தோழப்பரும் மனம் வருந்தி ”நம்பெருமாளின் காலில் விழுந்துவிடலாம்” என்று முடிவு செய்தார் அதற்கு அவள் மனைவி 
“குளத்தில் துலைத்துவிட்டு குட்டையில் தேடலாமோ ?” என்று கூறி “நம்பிள்ளை திருவடிகளிலே விழுவதே வழி” என்று மனைவி சொன்னதை ஆமோதித்த தோழப்பர்.
பொழுது சாய்ந்த பின் மனைவியுடன் வீட்டுக் கதவை திறக்க அங்கே திண்ணையில் நம்பிள்ளை படுத்துக்கொண்டு இருப்பதைக் கண்டார்.
எதற்கு வந்திருக்கிறார் என்று தெரியாமல் மீண்டும் கடும் சொற்களால்
“கோயிலில் இன்று நான் பேசியதற்கு என்னைப் பழிவாங்க இங்கு வந்தீரோ ?” என்று கேட்க 
“அப்படி இல்லை பெரிய பெருமாள் சன்னதியில் ஸ்ரீராமானுஜ தேக சம்பந்தம் உடைய முதலியாண்டானுடைய திருப்பேரனாரான தங்கள் திருவுள்ளம் கலங்கும் படி நடந்துகொண்ட பாவியை மன்னிக்க வேண்டும்” என்று நம்பிள்ளை காலில் விழ, மயிர்க்கூச்செறியத் தோழப்பர் நம்பிள்ளையை வாரியணைத்துக் கொண்டு “இவ்வளவு நாளும் உம்மைச் சிலருக்கே ஆசாரியன் என்று நினைத்திருந்தேன்; இப்போது உலகுக்கெல்லாம் நீரே ஆசாரியராவதற்குத் தகுதி பெற்றவர்” என்று இன்று அறிந்தேன். இனி உம்மை உலகம் “லோகாசாரியர்” என்று அழைக்கட்டும் என்று தாமும் தன் மனைவியும் நம்பிள்ளையைக் கௌரவித்து சிஷ்யர்களானார்கள்.
உபதேசரத்தின மாலையில் இந்த நிகழ்வை 
தன்னுபுகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் - பின்னை
உலகாரியன் என்னும் பெயர் நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்று மேல் ( 51 ) 
என்கிறார் மாமுனிகள்.
இதுவரை பார்த்தது, நம்பிள்ளை நஞ்சீயரின் சிஷ்யர், இவருக்கு ‘நம் பிள்ளை’ என்ற பெயர் நஞ்சீயர் அருளியது, சிறந்த ஸ்ரீவைஷ்ணவ பண்புகளுக்கு ’லோகாசாரியர்’ என்ற திருநாமம் பெற்றார். 
 நம்பிள்ளைக்கு இரண்டு சிஷ்ய ரத்தினங்கள். 
ஒருவர் வடக்கு திருவீதி பிள்ளை 
இன்னொருவர் பெரியவாச்சான் பிள்ளை
(மேலே உள்ள நம்பிள்ளை கோஷ்டி படத்தில் ஒரு முறை தேடிப் பாருங்கள்)
 நம்பிள்ளை பெரியவாச்சான் பிள்ளையிடம் வியாக்கியானம் எழுத நியமித்தார். ஆசாரியன் அருளால் வியாக்கியானம் எழுதினார். அதே சமயம், வடக்கு திருவீதி பிள்ளை ஒவ்வொரு நாளும் பகலில் கேட்டு அனுபவித்து அதன் அர்த்தங்களை இரவு எழுதிக்கொண்டு வந்தார். 
பெரியவாச்சான் பிள்ளை நம்பிள்ளையிடம் திருவாய் மொழி வியாக்கியானத்தை எழுதிச் சமர்ப்பிக்கும் போது வடக்கு திருவீதிபிள்ளையும் ஒன்றை எழுதிவைத்திருக்கிறார் என்று சொல்ல நம்பிள்ளை அதை வாங்கிப் பார்க்கும் போது அவர் திருவாக்கில் உதிர்ந்த முத்துக்களைப் பொறுக்கி மிகச் சுருக்கமாகவும் இல்லாமல், மிக விரிவாகவும் இல்லாமல் ஆனைக்கு அழகு செய்து புறப்பட்டது போல் மிகவும் அழகாய் ச்ருதப்ரகாசிகை கணக்கில் இருப்பதைக் கண்டு மிகவும் உகந்து வடக்கு திருவீதிப் பிள்ளையை பார்த்து 
“நன்றாக பட்டோலைப் படுத்தினீர் ஆனாலும் நம்முடைய அனுமதியில்லாமல் எழுதியதால் அது என்னிடமே இருக்கட்டும்” என்று வாங்கி தன்னுடன் வைத்துக்கொண்டார். 
அதை படித்துப் அனுபவிக்கச் சிஷ்யர்கள் விருப்பட்டார்கள்.  ஈயுண்ணி மாதவன் என்பாவர் நம்பெருமாளிடம் சென்று அழுதுகொண்டு நிற்க. நம்பெருமாள் பதறிப் போய் ”என்ன வேண்டும்?” என்று கேட்க நம்பிள்ளையிடமிருந்து ஈடு வேண்டும் என்று வேண்டினார். 
ஒரு நாள் நம்பிள்ளை நம்பெருமாளைச் சேவிக்கும் போது, அவருக்குத் தீர்த்தம் பிரசாதங்களுடன், “ஈடு முப்பத்தாறாயிரத்தை ஈயுண்ணி மாதவருக்கு ப்ரஸாதியும்” என்று நியமிக்க, நம்பிள்ளை அந்த ஓலைச் சுவடிகளை ஈயுண்ணி மாதவரிடம் கொடுத்தருளினார். 
இன்று நாம் படிக்கும் நம்பிள்ளை ஈடு கிடைத்ததற்கு ஈயுண்ணி மாதவனும், நம்பெருமாளுமே காரணம். நம்பிள்ளை திருவாக்கில் உதிர்த்த முத்துக்களை ’ஈடு’ என்று அழகாக எழுதியவர் வடக்கு திருவீதிபிள்ளை.
வடக்கு திருவீதிபிள்ளை என்ற ஆசாரியர் அனுக்கிரகம் நமக்கு இருந்தால் எல்லாச் சாஸ்திரங்களின் அர்த்தங்களும், பொருளும் புரிந்து ஞானம் கிடைக்கும் என்கிறது அவருடைய தனியன். 
அவரைப் பற்றி மேலும் கொஞ்சம் பார்க்கலாம்… 
வடக்கு திருவீதிபிள்ளை திருமணம் ஆனவர் ஆனால் சிற்றின்பத்தில் நாட்டம் இல்லாமல் பிரமசரியத்தை கடைப்பிடித்தார். அவருடைய தாயார் நம்பிள்ளையிடம் சென்று ஸ்ரீவைஷ்ணவ சொத்தை பாதுகாக்க தன் மகனுக்குப் புத்திர பாக்கியம் கிடைக்க பிராத்தித்தாள். 
நம்பிள்ளை வடக்கு திருவீதிபிள்ளையிடம் அறிவுறுத்த ஆசாரியன் ‘சொல்’ நமது ‘கடமை’ என்று இல்லறத்தில் ஈடுபட்டு, பன்னிரண்டாம் மாசத்தில் ஐப்பசி திருவோணத்தில் வடக்கு திருவீதிபிள்ளைக்கு ஒரு திருக்குமாரர் அவதரித்தார். ( காலம் கிபி 1205). 
ஆசாரியன் அனுகரஹத்தால் கிடைத்த ’பிள்ளை’க்கு தன் ஆசாரியன் திருநாமமான ‘லோகாசார்யர் பிள்ளை’ என்று சூட்டினார். அதுவே கால போக்கில் ‘பிள்ளை லோகாசார்யர்’ என்று மாறியது. ( வடக்கு திருவீதிப் பிள்ளைக்கு மற்றொரு திருகுமாரர் அவதரித்தார் அவர் அழகிய மணவாளப் பெருமாள் நாயனார். அவரைப் பற்றி பிறகு ஒரு சமயம் எழுதுகிறேன் ) 



ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யரின் பதினெட்டு அருளிச்செயல்களையும் ’அஷ்டதச ரகசியம்’ என்று போற்றப்படுகிறது.  ஸ்ரீபாஷ்யத்தின் சாரத்தை தத்வத்ரயம் என்று அருளினார். 

அதிலிருந்து அச்சாவதாரம் பற்றி அவர் என்ன சொல்லுகிறார் என்று சிலவற்றை சுருக்கமாக பார்க்கலாம். 

தத்வத்ரயத்தில் அர்ச்சாவதாரமாவது - 'தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம்' என்கிறபடியே சேதநர்க்கு அபிமதமான த்ரவ்யத்திலே விபவவிசேஷங்கள் போலன்றிக்கே தேச கால அதிகார நியமமில்லாதபடி ஸந்நிதிபண்ணி, அபராதங்களைக் காணாக்கண்ணிட்டு, அர்ச்சகபரதந்த்ரமான ஸமஸ்த வ்யாபாரங்களையும் கொண்டு கோயில்களிலும் க்ருஹங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலை.
சுலபமான தமிழில் இது என்ன என்று பார்க்கலாம் :
அர்ச்சாவதாரமாவது  : கோயிலில் இருக்கும் பெருமாள் அச்சாவதாரம். 

’தமருகந்தது எவ்வுருவம் அவ்வுருவம்’ என்பது பொய்கை ஆழ்வாரின் பாசுரம். எந்த உருவத்தில் நீ என்னைப் பார்க்க விரும்புகிறாயோ அர்ச்சாவதாரத்தில் அதே உருவத்தில் நான் காட்சி தருகிறேன் என்கிறார் .  உதாரணம் ஒன்றை பார்க்கலாம்.  ஒரு முறை ஸ்ரீராமானுஜர் ஸ்ரீரங்கம் வீதியில் வரும் போது சிறுவர்கள் மண் கோயில், பெருமாள் என்று விளையாடும் போது உடையவர் அதை விழுந்து வணங்கினார் என்பதை இங்கே நினைத்தால் உங்களுக்கு ஆழ்வாரின் இந்தப் பாசுர அர்த்தம் உடனே விளங்கும். 

அபிமதமான த்ரவ்யத்திலே  - பெருமாள் கல், மரம் அல்லது சித்திரமாக என்று எதில் இருந்தாலும் அந்தத் திரவியம் முக்கியமில்லை. எப்படிச் செய்தாலும் பெருமாள் அதில் வருகிறார்.  மீண்டும் ஒர் உதாரணம் : நவராத்திரி சமயம் மாம்பழம், கிளி, கண்ணன் என்று பல மண் பொம்மைகள் பார்த்திருப்பீர்கள். எல்லாம் மண் என்று நமக்குத் தெரிந்தாலும்  நாம் கடைக்காரரிடம் அந்தக் கிளி என்ன விலை, மாம்பழம் என்ன விலை, கண்ணன் என்ன விலை என்று தான் கேட்போம். ”இந்த மண்ணு என்ன விலை” என்று கேட்பதில்லை. மண் என்ற திரவியத்தை பார்க்காமல், மண் பொம்மையின்  உருவத்தைப் பார்ப்பது போல நாம் அர்ச்சாவதாரத்தில் நம்பெருமாள், பேரருளாளன் என்று பார்க்கும் போது அது எந்தத் திரவியத்தால் என்று பார்க்காமல் பெருமாளின் சொரூபத்தை பார்க்க வேண்டும். ரத்தம், சதை மாமிசங்களின் கலவை தான் மனிதன் ஆனால் நாம் ஒவ்வொருவரையும் பெயர் ( மிஸ்டர் கிருஷ்ணசாமி ) கொண்டு, அவர் பதவிக் கொண்டு ( சார் ) , சாதி அடைமொழியுடன்(ராமசாமி ஐயங்கார் ) அழைக்கிறோம்.  ’மாமிசமே’ என்று என்றாவது அழைக்கிறோமா ? இல்லையே ! உருவம் தான் முக்கியம் அது எதால் செய்யப்பட்டிருப்பது என்று பார்ப்பதில்லையே. பெருமாளை நாம் உலோகமாக பார்ப்பது சரியாகுமா ? 
அடுத்த முறை கைக்குழந்தை பெருமாளைப் பார்த்து கைகூப்பும் போது அதன் முகத்தைப் பார்த்தால் அர்த்தம் விளங்கும். 
விபவவிசேஷங்கள் போலன்றிக்கே தேச கால அதிகார நியமமில்லாதபடி ஸந்நிதிபண்ணி  :  ஸ்ரீராம, கிருஷ்ண அவதாரங்களில் பெருமாள் தோன்றி பிறகு மறைந்துவிட்டார் ஆனால் அச்சாவதாரத்தில் மட்டும் தான் மறையாமல் நமக்காகக் காட்சி கொடுத்துக்கொண்டு இருக்கிறார். 
அபராதங்களைக் காணாக்கண்ணிட்டு - அர்ச்சாவதாரங்களில் பெருமாளிடம் நாம் பயப்படாமல், பல அபராதங்களைச் செய்கிறோம்,  அது விக்ரகம் தானே என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். இங்கே காணாக்கண்ணிட்டு என்ற சொல் மிக அருமையான சொல் - பெருமாளுக்குத் தெரியும் ஆனால் தெரியாதது போல நடித்துக்கொண்டு இருக்கிறார் அர்ச்சாவதாரத்திலே. 
 அர்ச்சகபரதந்த்ரமான ஸமஸ்த வ்யாபாரங்களையும் கொண்டு கோயில்களிலும் க்ருஹங்களிலும் எழுந்தருளியிருக்கும் நிலை - தன்னை முழுமையாக அர்ச்சகர்களிடம் ஒப்படைத்துவிட்டார். என்ன தளிகை எத்தனை மணிக்கு சமர்ப்பித்தாலும் சாப்பிட்டுக்கொண்டு தான் ஏறி இறங்க வேண்டும் என்றாலும் அவர்களை நம்பியே இருக்கிறார். ஏன் எப்படிச் செய்கிறார் ? நம்மிடம் சுலபமாக பழக இது தான் சிறந்த வழி என்று அர்ச்சாவதாரத்தை எடுத்துக்கொண்டு நமக்குக் கருனையுடன் இருக்கிறார். 
 ஸ்ரீவசன பூஷணத்தில் ஸ்வாமி பிள்ளை லோகாச்சாரியார் சொல்லவதை பார்க்கலாம். 
"பூர்த்தியுள்ள தும் அர்ச்சாவதாரத்திலே; ஆழ்வார்கள் பலவிடங்களிலும் ப்ரபத்திபண்ணிற்றும் அர்ச்சாவதாரத்திலே. பூர்ண மென்கையாலே, எல்லாக்குணங்களும் புஷ்கலங்கள். ப்ரபத்திக்கு அபேஷிதங்களான ஸௌலப்யாதிகள் இருட்டறையில் விளக்குப்போலே ப்ரகாஸிப்பது இங்கே. பூர்த்தியையும் ஸ்வாதந்த்ரியத்தையுங் குலைத்துக்கொண்டு தன்னை அநாதரிக்கிறவர்களைத் தான் ஆதரித்துநிற்கிற இடம். 
ஆழ்வார்கள் கண்ணன், ராமரின் குணங்களை அனுபவித்தாலும், அவர்கள் “உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே” என்றும் “நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே” என்று பிரபத்தி ( சரணடைந்தது ) திவ்ய தேசங்களில் தான்.  நினைத்தால் அவருக்கு எல்லாம் நடக்கும் ஆனால் அப்படி நினைக்காமல் தன் சொரூபத்தைக் காட்டாமல், ”நீயே பார்த்து ஏதாவது செய்” என்று பக்தன் என்ன வேண்டும் என்றாலும் செய்யட்டும் என்று பேசாமல் இருக்கிறார்.  

இப்படிப் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார் போற்றிய அர்ச்சாவதாரத்துக்கு ஆபத்து அதுவும் நம்பெருமாளுக்கு வந்தால் ? வந்தது.  
ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான். ( இவனே பின்னாளில் முகமதுபின் துக்ளக் என்று பெயர் சூட்டிக்கொண்டான்). 
கிபி 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுத்தான்.  கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதம் 22ஆம் தேதி டில்லியிலிருந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.  தொண்டை மண்டலத்தைச் சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். வலியிலுள்ள சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோயில் விக்கிரகங்களை உடைத்து நொறுக்கினார்கள். 
ஸ்ரீரங்கத்தை நோக்கி முகம்மதிய படை வருகிறது என்ற செய்தி கேட்டு அரங்கனுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நிகழலாம் என்று அஞ்சி, ஸ்ரீரங்கநாராயண ஜீயர், அர்ச்சகர்கள், திருகோபுரத்து நாயனார், பிள்ளைலோகாசார்யார்  , ஸ்ரீ வேதாந்த தேசிகன் மற்றும் சிலர் ஒன்று கூடி திட்டம் தீட்டினார்கள். 
திருவரங்கனின் மூலவரைக் காப்பதற்காக கருவறை வாசலை கல்சுவரால் அடைத்து, சுவருக்கு முன்பு தற்காலிகமாக ஒரு விக்கிரகத்தை வைத்தனர். ஸ்ரீரங்க நாச்சியார் மூலவரையும், திருவாபரணங்களையும் வில்வ மரத்தின் அடியிலே பாதுகாப்பாக வைத்து, மற்றைய ரகசிய அறைகளையும் அடையாளம் தெரியாமல் செய்தார்கள். 


பிள்ளைலோகாசாரியாரியரும் அவருடை அந்தரங்க சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேராதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும், நாச்சிமார்களையும் மூடுபல்லக்கில் எழுந்தருளிப்பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் ஸ்ரீரங்கத்தைக் காவேரி ஆற்றின் தெற்கு கரையிலுள்ள மாரச்சிபுரம் அடைந்து, பிறகு மணப்பறை மற்றும் வேலூர் மார்க்கமாகத் தென் திசை நோக்கி கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்து யானை மலை அடிவாரத்தில் ஜ்ஜோதிஷ்குடி என்ற ஊருக்குச் சென்று சேருகிறார்கள் ( கொடிக்குளம் ). அங்கேயே நம்பெருமாளுக்கு நித்திய திருவாராதனம் முதலியவற்றைச் செய்கிறார். 
கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை அலங்கரித்து ஜ்யோதிஷ் குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளிபடுத்தித் திருவரசு எழுப்பினார்கள். 
பிறகு நம்பெருமாள் மதுரை அழகர் மலை, கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் திருக்கணாம்பியில் சில காலம், பிறகு திருநாராயணபுரம் பிறகுத் திருமலை, சிங்கபுரம்(செஞ்சிக்கு அருகில்) பிறகு மீண்டும் 48 வருடம் கழித்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். 
 ஸ்ரீரங்கம் நம்பெருமாளைக் காக்க ஒரு குழு பிள்ளைலோகாச்சாரியாருடன் செல்ல ஸ்ரீரங்கத்திலிருந்து தங்கி செல்பட்டவர்களுக்கு தலைமை தாங்கியவர் சுதர்சன பட்டர் கோயிலை நோக்கி ஓடினார். அவருக்கு வயதாவிட்டது அதனால் என்ன செய்வது என்று தெரியாத சுதர்சன பட்டர் ஸ்ரீபாஷ்யத்திற்கு எழுதிய ‘ஸ்ருத பிரகாசிகை’ என்ற உரையையும் ( நடாதூர் அம்மாள் காலட்சேப குறிப்புகள் ) பட்டரின் இரண்டு புதல்வர்களையும் காப்பாற்றும் பொறுப்பை ஸ்ரீவேதாந்த தேசிகரிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் பன்றியாழ்வான் சன்னதிக்குச் சென்ற போது அங்கே 12000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டு அந்த இடமே போர்க்களமாக அவரும் அங்கேயே கொல்லப்பட்டு பரமபதித்தார்.


வேதாந்த தேசிகன் ஊரைவிட்டுக் கிளம்பும் முன் உலூக்கான் படை ஸ்ரீரங்கத்தை ஆக்கிரமித்துக்கொண்டு கோரதாண்டவம் ஆடியது. எந்த இடத்தில் தங்கினாலும் தனக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்திருந்தார். அதனால் தானும் இரண்டு குழந்தைகளும் பிணக்குவியல்களுக்கு (சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் dead and the dying) நடுவே பிணமாக கிடந்தார். உலூக்கான் படை அந்த இடத்தை விட்டு அகன்ற பின்னர்  சத்தியமங்கலம் வழியாக மேல்கோட்டை வந்தடைந்தார் வேதாந்த தேசிகர். கூடவே கையில் ‘ஸ்ருத பிரகாசிகை’ ஓலைச்சுவடியையும், பட்டரின் இரண்டு குழந்தைகளும். ( இதனால் தான் ஸ்ரீபாஷ்யத்தை சேவிக்கும் முன் இன்றும் ஸ்ரீவேதாந்த தேசிகரின் தானியங்கள் சேவிக்கப்படுகிறது )
கட்டுரை ஆரம்பத்தில் மூன்று சொற்களை பார்த்தது நினைவிருக்கலாம் - பிரமாணம், பிரமேயம் மற்றும் பிரமாதா
பிரமாணம் என்றால் ஆதாரம். பிரமாண பத்திரம் என்கிறோம் அது தான் ஆதாரம். பெருமாளை அறிந்துகொள்ள ஆதாரம் எது ? வேதங்கள், ஆழ்வார் அருளிச்செயல்கள், ஸ்ரீபாஷ்யம் முதலானவை. 
பிரமேயம் என்றால் சொல்லப்படும் பொருள். அதாவது சொத்து. மற்ற அவதாரங்களில் நாம் அவருக்குச் சொத்து ஆனால் அர்ச்சாவதாரத்தில் அவர் நம் சொத்து. 
பிரமாதா என்பவர் அந்த ஆதாரம் கொண்டு பொருளை அளந்தறியவன் - பதிவாளர் ( registrar ) என்று வைத்துக்கொள்ளுங்கள். நமக்கு நம் சொத்தை ஆதாரம் கொண்டு காட்டிக்கொடுப்பவர்கள் ஆசாரியர்கள். 


ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்   பிரமேயத்தைக் காத்துக்கொடுத்தார், ஸ்ரீ வேதாந்த தேசிகன் பிரமாணத்தைக் காத்துக்கொடுத்தார் இவர்கள் இருவரும் நம் பிரமாதாக்கள்.  
முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார், ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்   மற்றும் ஸ்ரீ வேதாந்த தேசிகன் மூவரும் திருவோண திருநட்சத்திரம் ! 
பொய்கை ஆழ்வார் காஞ்சியில் திருவெஃகாவில் அவதரித்தவர். ஸ்ரீ வேதாந்த தேசிகன் காஞ்சியில் திருத்தண்காவில் அவதரித்தவர். 
நம் ஸ்ரீ பிள்ளை லோகாசாரியருக்கும் காஞ்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று நினைக்க வேண்டாம் இருக்கிறது 
ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஸ்ரீவஷன பூணமம் அவதாரிகையில் இதைச் சொல்லுகிறார். மீண்டும் ஒரு கதை. 
ஒரு நாள் காஞ்சிபுரத்தில் மணப்பாக்கத்து என்பவர் காஞ்சி தேவப்பெருமாளிடம் ரகசிய அர்த்தங்களைக் கேட்க அவரும் சில அர்த்தங்களைச் சொல்லிவிட்டு மீதம் உள்ள அர்த்தங்களை இரண்டு ஆற்றுக்கு நடுவில்(திருவரங்கம்) வசித்துவாரும் அங்கே உமக்கு உபதேசிக்கிறோம் என்றார். அவரும் திருவரங்கம் சென்று அங்கே இருந்த வேளையில், ஒரு நாள் காட்டழகிய சிங்கர் கோயிலில் ஸ்ரீ பிள்ளை லோகாசாரியர் தன் சிஷ்யர்களுக்கு ரஹஸ்யார்த்தங்களை உபதேசிப்பதைக் கேட்ட போது ஏற்கனவே தேவப் பெருமாள் அருளிச்செய்த அர்த்தங்களாகவே இருப்பதைக் கேட்ட மணப்பாக்கத்து நம்பி பிள்ளைலோகாசார்யார் திருவடிகளில் விழுந்து வணங்கி ”அவரோ நீர்” என்று கேட்க பிள்ளைலோகாசார்யர் ”ஆம் செய்வது என் ?”  (ஆமாம், என்ன செய்ய வேண்டும் ?) என்று மறு கேள்வி கேட்ட போது தேவ பெருமாளே பிள்ளைலோகாசாரியராக அவதரித்துள்ளார் என்று தெரிந்துகொண்டார். காட்டு அழகியசிங்கர் கோயில் தான் ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்   பல ரகசியங்களை இங்கே தான் சாதித்துள்ளார். அதனால் அதை ரகசியம் விளைந்த மண் என்பார்கள். ( இங்கே தான் ஸ்ரீ ராமானுஜ நூற்றந்தாதியும் அமுதனார் அருளினார் ) 



ஸ்ரீ மணவாள மாமுனிகள் ஆழ்வார் திருநகரியிலிருந்து ஸ்ரீரங்கம் வந்த போது அவர் செய்த செயல் நம்மைப் பூரிப்பில் ஆழ்த்தும். நம் பல்லவராயன் மடத்தை நம்பெருமாள் மாமுனிகளுக்கு ஒதுக்கித் தர ( இன்று அங்கே தான் மணவாள மாமுனிகள் சன்னதி இருக்கிறது ). அங்கே ஒரு காலட்சேப கூடத்தை கட்ட தீர்மானித்தார். கட்டுவதற்கு மண் வேண்டும், என்ன மண் என்று ஸ்வாமி யோசிக்காமல், நேராகக் காட்டு அழகிய சிங்கர் கோயிலுக்குச் சென்று அங்கே ஒரு பிடி ’ரகசியம் விளைந்த’ மண்ணை எடுத்துக்கொண்டு வந்து அதைக் கொண்டு காலட்சேப கூடத்தை கட்டினார். திருமலையாழ்வார் கூடம் என்று இன்றும் அந்த மண்டபத்தைச் சேவித்துக்கொள்ளலாம். ஸ்வாமியின் உற்சவ திருமேனி சின்னதாக அவருக்கு எந்த வெளிப்புறப்பாடு எதுவும் கண்டருள மாட்டார், இது உடையவர் எழுந்தருளியிருந்த வீதி இதில் நமக்குப் புறப்பாடு கூடாது என்று அவர் வெளிப்புறப்பாடு கண்டருளுவதே இல்லை ( அவர் யதீந்திர ப்ரவணர் அன்றோ ) 


பிரமாணங்களை நிலை நாட்டப் பிரமாதாக்களாகிற ஆசாரிய பரம்பரையை ஏற்படுத்தி வைத்து பிரமேயமான எம்பெருமாளை கொண்டாடிட வைத்தார் எம்பெருமானார் என்கிற ஸ்ரீ ராமானுஜர்.  -  தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான்  வாழி என்கிறோம் ! 
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்  கிரந்தங்களில் கடுமையான ஓர் வாக்கியமும் கிடையாது என்பது பலருக்கு தெரியாத விஷயம்.  நாமும் அவரை போல் கடுமையாக எதுவும் பேசாமல் இருப்பதே நாம் அவருக்குச் செய்யும் மரியாதை. 
ஸ்ரீ பிள்ளை லோகாசார்யார்  திருவடிகளே சரணம் 
- சுஜாதா தேசிகன் 
( 17.11.2018 ) 
இன்று 24-10-2020 ஸ்ரீ பிள்ளைலோகாசார்யார் திருநட்சத்திரம்

Comments

  1. ஒவ்வொரு முறையும் தங்கள் பதிவை பார்த்து வியந்து உள்ளேன். இந்த வியப்பு 2004 முதல் இன்று வரை உள்ள வியப்பு. ஒரு முறை பெங்களூருவில் கைபேசியில் அழைத்து பேசி தங்கள் பதிவுகளை பாராட்டியுள்ளேன். எந்த ஒரு விஷயத்தையும் தொடர்ந்து இவ்வளவு காலம் எழுதுவதென்பது பெரிய விஷயம். தங்கள் அலுவலக நேரம் , சொந்த வேலைகள் , குழந்தைகள் , கோவில் , உறவினர் , மற்றும் பல என எண்ணற்ற கடமைகள் இருந்தும் தெடர்ந்து எழுதுவது என்பது செயற்கரிய விஷயம். நீங்கள் ஒவ்வொரு முறை எழுதும்பொழுதும் அதற்கு முன் நீங்கள் செய்யும் கரு பொருளுக்கான ஆய்வு , நீங்கள் எடுக்கும் படங்களின் தரம் , அதை எழுதி தட்டச்சு செய்யும் நேரம் என பெரு முயற்சி மற்றும் நேரம் செலவழிக்கிறீர்கள். ஆனால் அதற்கான பாராட்டு , வாசிக்கும் அன்பர்களின் கருத்து மிக குறைவு. ஒரு எழுத்தாளனுக்கு பாராட்டு , வலை பதிவுக்கான கருத்து , வலைப்பதிவு மற்றவர்களுடன் பகிர்தல் என்பவை மேலும் பல பதிவுகள் எழுதும் உந்து சக்தி. எது ஒன்றும் இலவசமாக கிடைத்தால் அதற்குரிய மதிப்பு பல பேர்களுக்கு தெரியாது. யாரையும் நான் இங்கு குறை சொல்வதற்கு இல்லை. பல சமயங்களில் நான் கூட மற்ற வேலை பளு காரணமாக கருத்துக்கள் பதிவிட தவறியதுண்டு. அது தவறு என்று எனக்கு தெரியும். ஆனால் முடிந்தவரை ஒரு இரு வரிகள் சொல்வதுண்டு. நீங்கள் சொல்கிற விஷயங்களை புத்தகமாக பதிவிட்டிருந்தாலோ அல்லது யூடுப்ப்பில் வீடியோவாக பதிவிட்டிருந்தாலோ நல்ல பலன் கிடைத்திருக்கும். எது எப்படியோ உங்களுக்கு அந்த பெருமாளின் கருணை நிச்சயம் கிடைக்கும். நெடு நாள் என் மனதில் இருந்ததை என்னால் இன்று கூற முடிந்ததில் மகிழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்கள் பாராட்டுக்கு. அடியேன் எதையும் எதிர்பார்த்து எழுதவில்லை. எழுத்து என்பது எனக்கு பிடித்த ஒன்று அதை தினமும் செய்வதால் ஒருவித மன அமைதி கிடைக்கிறது. அதுவும் ஸ்ரீவைஷ்ணவம் பற்றி எழுதும் போதும் நிறைய கிடைக்கிறது. என் எழுத்து சிலருக்கு உபயோகமாக இருந்தாலே எனக்கு மகிழ்ச்சி. உங்களை போல வாசகர்கள் 14 வருடம் தொடந்து வந்திருக்கிறார்கள் என்று நினைக்கும் போதும் மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.

      Delete
  2. Could you write about Anandalwar?

    ReplyDelete
  3. Very good one sir. As said by Mr.Srinivasan above, I do not miss a single article of yours in this blog. Sometimes I even read many old articles again and again, if I do not see any new article of yours. It has become an habit to check your blog atleast once in a week. Wish you continue to write more and more. Pramanangalin moolam, Prameyathai ariya Acharyargalin arul aasi thevai. Perumalin aasi kooda pinnardhan. Thanks.

    ReplyDelete
  4. வணக்கம் சார்,
    பிள்ளை லோகாச்சாரியாரின் திருவரசு அமைந்துள்ள கொடிக்குளம் கிராமத்தில் வசிப்பவன் நான். அவரது நினைவு நாள் எந்த தேதியில் வருகிறது என்று சொல்லலாமா?

    நன்றி.

    அன்புடன்,
    கே.கே.மகேஷ்

    ReplyDelete
    Replies
    1. ஐப்பசியில் திருவோணம்.

      Delete
  5. மிக அ௫மை.... பல விசயங்கள்.... பரட்டிபோட்டு அலசல்......

    ReplyDelete
  6. 🙏🙏 அடியேன். இதைப்படித்தாலே புண்ணியம் என்றே நம்புகிறேன். இந்தக் கட்டுரையில் சில பாகங்கள் தேவரீர் ஏற்கனவே எழுதி நான் அனுபவித்திருக்கிறேன்.

    பெருமாள் உங்களுக்கும், ஆச்சாரியர்களுக்கு அருளியது போலே, மற்றோருக்கு வைணவ மஹாத்மியத்தையும் , நம் ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் பற்றி இன்றைய உலகுக்கு , இன்றைய தமிழில் விளக்க அனுகிரஹித்துள்ளார். பலரும் படித்து உய்யவேண்டும் என்பதே என் ஆசையும்.

    என் தம்பி, தங்கைகள், உறவினர்கள் மிகவும் ஆவலுடனும் பக்தியுடனும் உங்கள் பதிவுகளைப் படித்துவருகிறார்கள்.

    என் தம்பி சௌரிராஜன் எழுதியதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

    ReplyDelete
  7. இதுவும் வழக்கம் போல அருமை. இருப்பினும், இது கொஞ்சம் கூடுதல் special என்பதை சொல்லியே ஆகவேண்டும்.

    கட்டுரையில் திரு. தேசிகன் கொடுத்திருக்கும் எண்ணற்ற விஷயங்களை படிக்கும்போது --

    நம் ஆச்சார்ய புருஷர்களை எண்ணி நெக்குருகி நிற்பதா,

    நம்பெருமாள், தேவப்பெருமாள் அவ்வப்போது அவர்களிடம் பேசி, வழி நடத்தியதை சற்றே பொறாமையுடன் வியப்பதா,

    திரு சுஜாதா தேசிகனின் அபார ஈடுபாடு, அர்ப்பணிப்பு, உழைப்பு, வாசிக்கும் நாம் எல்லோரும் உணர்வு பூர்வமாக ஒன்றும் விதத்தில் அழகாக, எளிமையாக எழுதும் நேர்த்தி ஆகியவற்றை எண்ணி பிரமிப்பதா என்று

    ஒரு கலவையான எண்ணம் தோன்றுகிறது.

    எல்லாமே சரியான எண்ணங்கள் என்றாலும், எந்த எண்ணம் முதலில் சொல்லப்பட வேண்டும், எந்த எண்ணம் மேலோங்கி நிற்கிறது என்பதை விவரிக்க அடியேனால் முடியவில்லை.

    திரு தேசிகனின் எண்ணற்ற வாசர்கள் மற்றும் ரசிகர்களில் நானும் ஒருவன் என்பதில் அடியேனுக்கு பெருமை.

    ஸ்ரீ ரங்கநாச்சியார் சமேத நம்பெருமாள் அவருக்கு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்துடன் கூடிய நீண்ட ஆயுளை அருள அடியேன் பிரார்த்திக்கிறேன்.

    சௌரிராஜன்.

    ReplyDelete
  8. மிக அருமை. எத்தனை எத்தனை விசயங்கள் .

    ReplyDelete

Post a Comment