Friday, December 30, 2016

2016ல் என்ன செய்தேன்

2016 பெரிசாக ஒன்றும் செய்யவில்லை என்பதே பெரிய விஷயமாக எனக்குப் படுகிறது. ’பெரிய’ என்ற

வார்த்தைக்கு ஏற்றார் போல் சொல்ல வேண்டும் என்றால், வருட ஆரம்பத்தில் பெரிய நம்பிகள் திருநட்சத்திரத்திரத்துக்கு பெரிய நம்பிகள் திருமாளிகையில் இருந்தேன். வருடக் கடைசியில் அதே பெரிய நம்பிகள் திருநட்சத்திரத்திரம், அதே திருமாளிகையில் நிறைவாக நிறைவு செய்தேன்.

சித்திரை மாதம், ஸ்ரீஉடையவர் திருநட்சத்திரத்துக்கு ஒரு நாள் முழுக்க ஸ்ரீபெரும்பூத்தூரில் இருந்தேன். ஸ்ரீராமானுஜர் பக்கம் இருந்த கூட்டம் அதிகமாக இருக்க என்னையும் உள்ளே வைத்து கதவைச் சாத்திவிட்டார்கள். குழந்தையைத் தூக்கி கொஞ்சம் தூரத்தில் உடையவருடன் அடியேன் இருந்தது பெரும் பேறு. காஞ்சிபுரத்திலிருந்து சில மைல் தொலைவில் சாலைக் கிணற்றுக்கு சென்ற போது அதை நிர்வகிப்பவரைக் கண்டு நாம் என்ன பெரிய சாதனைச் சாதித்துவிட்டோம் என்று கூனி குறுகினேன்.

வருடக் கடைசியில் ஸ்ரீ மணவாள மாமுனிகள் திருவரசுக்கு சென்று சில மணி நேரம் உலாவினேன். மாடுகள் சாலையில் அடிப்பட்டால் அதைக் கருணையுடன் பார்க்காமல், எவ்வளவு கிலோ என்று பார்க்கும் சமூகத்தில் நண்பர் வீரராகவன் போன்ற நல்ல உள்ளங்கள் அடிபட்ட மாட்டுக்கு உதவி செய்து, அதை நடக்கும் நிலமைக்குக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு நம்பெருமாள் என்றும் துணை இருப்பார். சீதா என்ற மாட்டுக்கும், ரங்கா என்று கன்றுக்குட்டிக்கும் அமுதன் விரட்டிச் சென்று தழை கொடுத்தான்.
( மணவாள மாமுனிகள் திருவரசு பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன் )

2015 காட்டிலும், 2016 எல்லோரும் ரொம்ப பிஸியாக வருஷம் என்று சொல்ல வேண்டும். எப்போது யாரைப் பார்த்தாலும் மொபலை தடவிக்கொடுத்துக்கொண்டு இருந்தார்கள். அடியேனும் அப்படியே இருந்தேன். பத்திரிக்கை ஜோக்குகள் திராபையான இந்தக் காலத்தில் மீம்ஸ் தமிழரின் நகைச்சுவை உணர்வு இன்னும் இருக்கிறது என்பதைக் காண்பிக்கிறது. பல மீம்ஸ் ரொம்ப இண்டலிஜெண்ட் வடிவமைப்பு.

ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா தவிர மற்ற எல்லாப் பத்திரிகையிலும், எப்போது திறந்தாலும் அதில் நயந்தாரா காட்சியளித்தார். கல்கி, குங்குமம், துக்ளக் தவிர மற்ற பத்திரிகைகள் ஓசியில் கிடைத்தால் மட்டுமே புரட்டினேன். நாளிதழில் பெருமாலும் முதல் பக்கம் பிளிப்கார்ட், அமேசான் அல்லது ஏதோ ஒரு ஆன்லைன் வர்த்தகம் ஆக்கிரமித்துக்கொண்டது. 2016 தீவாவளி முதல் 2017 பொங்கல் வரை கல்கியில் 11 வாரம் ‘நெருங்காதே நீரிழிவே’ எழுதியது நல்ல அனுபவம். கல்கி ஆசிரியர் வெங்கடேஷ் எழுதச் சொல்லியிருக்காவிட்டால் எழுதியிருக்க மாட்டேன், அதற்காகப் பல புத்தங்கள் படித்திருக்க மாட்டேன்.
ஒரு சிறுகதை கூட எழுதவில்லை என்று நினைத்திருந்தேன். ஐஸ்பாக்ஸ்(ஜன்னல் இதழ்), சாஸ்திரி பவன் என்று இரண்டு ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன். நாமக்கல் அடையார் ஆனந்த பவனில் ஒருவர் நீங்க தானே ‘சுஜாதா தேசிகன்’ என்று விசாரித்துவிட்டுப் போனார்.

காசுக்கு அரசியல் கூட்டம் போய், காசு எடுக்க எல்லா ஏ.டி.எம்மிலும் கூட்டத்தை பார்க்க முடிந்தது. அதே போல் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளைப் பார்க்க. ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளைப் பார்க்க அவன் அருளும், சிபாரிசும் உள்ளூர்க் காரர்களுக்கே தேவைப்பட்டது. கோயில் முழுக்க எங்குப் பார்த்தாலும் ரூ50, 250, 2500, 5000 என்று போர்டுகள் எரிச்சலை ஏற்படுத்தியது. அன் பாக்ஸிங்' (unboxing) போது பளிச் என்று வெளியே எடுக்கும் மொபைல் போன் மாதிரி அம்மா ஆட்சியில் ஸ்ரீரங்கம் கோயில் அன் பாக்ஸ் செய்யப்பட்டது.

ரிடையர் ஆகி மூட்டு வலியுடன் போகலாம் என்று தள்ளிப்போடாமல், பதினைந்து நாள் ஸ்ரீவேளுக்குடி அவர்களுடன் யாத்திரை சென்றது, மிகுந்த மன நிறைவும், பல படிப்பினையும் கொடுத்தது. யாத்திரையின் போது சில வித்தியாசமான பண்டங்களை சாப்பிட்டது மறக்க முடியாதது. ஆசார டயட் என்று எழுதியது பலரை சென்று சென்றடைந்தது.

யார் வீட்டிலாவது டிவி சுவிச் ஆன் செய்தால், சீரியல் அல்லது விளம்பரம் ஓட்டிக்கொண்டு இருந்தது. ஆண்களுக்கு சிகரேட் பிடிப்பது, டாஸ் மார்க் போல பெண்களுக்கு சீரியல் பார்ப்பது. எனக்கு ரொம்ப நெருக்கமானவர்கள் கலைஞர் டிவியில் ஸ்ரீராமானுஜர் சிரியலுக்கு உதவுகிறார்கள் என்று தெரிந்த பின் சில  சில எபிசோடுகளை யூடியூப்பில் பார்த்தேன். குடும்பத்துடன் ’ஜோக்கர்’ படத்துக்கு சென்று பாதியில் திரும்பினேன்; ’கபாலி’யை முழுசாக பார்த்தேன்.

இந்த வருஷம் ஐபோனிலிரிந்து ஆண்டராய்டுக்கு மாறினது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது. அம்மா சின்னமா மன்னிக்கவும் ’சின்ன ஆம்மா’ என்பதை ஜீரணிக்க முடியவில்லை. கூகிள், அரசியல் இரண்டும் வியப்பளிக்கிறது, அனுபவிக்கனும்...ஆராய கூடாது.

சில தினங்களுக்கு முன் ஸ்ரீரங்கா ரங்கா கோபுரம் என்ற நான்முகன் கோபுர வாசலில் பபிள் பரோட்டா செய்வதைப் பார்த்தேன். அதையே பார்த்துக்கொண்டு இருந்த என்னைப் பார்த்து ‘சார் பார்சல் வேண்டுமா’? என்றார்.

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்! 

Wednesday, November 30, 2016

முடி - பாஞ்சாலி முதல் பதஞ்சலி வரை

சில மாதங்களுக்கு முன் ’கொம்பன்’  படத்தைப் பார்த்தேன். அதில் ஒரு வசனம் “மீசைய முறுக்கிட்டு திரியற இவிங்கள போல நீயும் உருப்படாம போவ” எனக்கு மீசை இல்லை, அதனால் பக்கத்தில் இருந்தவரைப் பார்த்தேன். படத்தில் நடிப்பவர்கள் எல்லோர் முகத்திலும் புசுபுசுவென்று முடியும், சண்டைக்குச் சட்டையை கழட்டினால் நெஞ்சிலே அதே புசுபுசு. ”நீ என்ன பெரிய கொம்பனா?  அல்லது உன் தலையில் என்ன பெரிய கொம்பா மொளச்சிருக்கு” என்று பேசுகிறோம்.  மீசைக்கும் கொம்புக்கும் என்ன சம்பந்தம். இருக்கிறது. அதைப் பற்றி பிறகு சொல்கிறேன்.

சினிமாவில் ஒருவனுக்குத் தலை நிறைய முடி இருந்தா அவன் நகரத்துப் பொறுக்கி; மூஞ்சி முழுக்க இருந்தா கிராமத்து ரவுடி; கிராப் வெட்டியிருந்தால் போலீஸ்; பங்க் என்றால் தாதா என்ற அடையாளங்கள் இருக்கிறது. எம்.ஜி.ஆர், ஜெய் சங்கர் படங்களில் எக்ஸ்டராவாக கண்ணத்தில் ஒரு மச்சம் இருக்கும். சிலருக்கு மச்சத்தின் நடுவில் ஒரு முடி வளரும். ஏன் என்று தெரியாது.

தேவர் மகனில் சிவாஜி சாருக்கு அடுத்ததாகக் கமல் சார் வாரிசாக மாறும் போது தலையில் ’பங்க்’கை எடுத்துவிட்டு அப்பா மாதிரி மீசை வைத்துக்கொண்டு முடி திருத்திக்கொண்டு வருவார். ஊரே அவரைப் பார்த்து வணக்கம் சொல்லும். இதற்குப் பெயர் தான் ‘முடி’சூட்டுவிழா.

ரஜினி சார்னாலே ஸ்டைல்தான். நின்னா ஸ்டைல். விரலை அசைச்சா ஸ்டைல்.  தலையைக் கோதினா ஸ்டைல் என்று சொல்லுவார்கள். சூட்டு கோட்டு போட்டுக்கொண்டு கபாலி ஸ்டில்ஸ் வந்த போது எல்லோரும் மிரண்டார்கள்.  ’சால்ட்,பெப்பர்’ விக், தாடி இல்லாமல் ரஜினி சாரை யோசித்துப்பாருங்கள். பாடல் காட்சியை மியூட் செய்து பார்க்கும் எஃபெக்ட் கிடைக்கும். சிவாஜியில் மொட்டை ரஜினி( அது வேற ஸ்டைல்) பற்றி பிறகு சொல்கிறேன்.

தமிழ் ஹீரோ பயங்கர கோபத்தில் வில்லனைப் பார்த்து சவால் விடும் போது கை எங்கே எட்டுகிறதோ அங்கே இரண்டு மூன்று மயிரை பிடுங்கி ( அல்லது ஆக்‌ஷன் செய்து ) ஊதிவிட்டு “நீ எனக்கு இதற்குச் சமம்” என்று சொல்லும் போது வில்லன் கண்கள் சிகப்பாகும்.

ஆனால் எந்த ஹீரோயினும் இந்த மாதிரி செய்வதில்லை. மாறாக பொமரேனியன் நாய்க் குட்டி மாதிரி அதை பிடுங்காமல், தடவிக் கொடுப்பதை திரைப்பட விழாக்களில் பார்க்கலாம். அவர்களுக்கு கோபம் வந்தால், பாஞ்சாலி காலம் முதல் கூந்தலை அவிழ்த்துவிட்டு முடிய மாட்டேன் என்று சபதம் போடுவார்கள்.

தடய அறிவியல் விஞ்ஞானிகள். கொலை நடந்த இடத்தில் தடவி தடவி எடுத்து, ஆர்சனிக், பாதரசம், ஈயம் போன்ற விஷங்களையும், போதைப் பொருளான ஹெராயின், கோக்கெயின் பல நாட்கள் ஏன் பல வருஷங்கள் கூட தங்கியிருக்குமாம். பல ரசாயன சோதனைகள் மூலம் அதைப் பிரித்து எடுத்து உயிரோடு இருந்தால் உங்களையும் பிரித்து மேய்ந்துடுவார்கள்.
ஆனால் ஒரு முடியை பிடுங்கினால் அதன் வேரில் ஒட்டிக்கொண்டு இருக்கும் டி.என்.ஏயை வைத்து யாருடைது என்று கண்டுபிடித்துவிடலாம். இரட்டைக் குழந்தையாக இருந்தால் கொஞ்சம் கஷ்டம்!

நெப்போலியன் 1821ல் இறந்து போனார். எப்படி என்பது பெரிய புதிராக இருந்தது. மருத்துவர்கள் வயிற்றில் புற்றுநோய் என்றார்கள். செயின்ட் ஹெலனா என்ற  தீவில் ஆங்கிலேயர்கள் 1815ல் நெப்போலியனைச் சிறையில் வைத்திருந்தார்கள். அப்போது நெப்போலியன் டைரி எழுதினார். ஐம்பது வருடத்துக்கு முன்பு கிடைத்தது. அதில் தனக்கு தாகம் அதிகமாகிக்கொண்டே இருந்தது, நிறைய முடி கொட்டியது, உடம்பு பருமன் ஆனது என்று குறிப்பு இருந்தது. டயட் பிரச்சனை இல்லை ஆனால் அவர் டயட்டில் ஏதோ கலந்தது தான் பிரச்சனை. ஸ்வீடிஷ் விஞ்ஞானிகள் இதைப் படித்த போது ஆர்செனிக் விஷத்தின் அறிகுறி மாதிரி இருக்கிறதே என்று சந்தேகப்பட்டார்கள். உண்மையில் என்ன நடந்திருக்கும் என்று கண்டறிய  நெப்போலியன் முடியைச் சோதிக்க முடிவு செய்தார்கள். புகைப்படம் கூட வராத அந்த காலத்தில் ஞாபகார்த்தமாக நண்பர்கள், காதலர்கள் தங்கள் முடிகளைக் கொடுத்தார்கள். அதை வாங்கிக்கொண்டவர்கள் (யானை முடி மோதிரம் மாதிரி) அதை மோதிரம், வளையலில் பிணைத்து மயிரே போச்சு என்று இல்லாமல் அதைப் பத்திரமாக வைத்துக்கொண்டார்கள்.

நெப்போலியன் பேரரசர் இல்லையா ? அவரும் தன் முடியை சிலருக்கு கொடுத்து வைத்திருந்தார். அவர் இறந்த போது பிணத்திலிருந்து கூட சிலர் அதை எடுத்து( சரியான வார்த்தை பிடுங்கி) நினைவுப் பரிசாக வைத்துக்கொண்டார்கள். கிட்டத்தட்ட 150 வருடங்கள் கழித்து, தடயவியல் விஞ்ஞானிகள் அவரது முடி இழைகளைச் சோதனை செய்தார்கள். அதில் அதிக அளவு ஆர்சனிக் விஷம் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். ஆர்சனிக் என்றால் என்ன என்று குழம்ப வேண்டாம் - இன்றும் நாம் பூச்சிக்கொல்லி, செடிக்கொல்லி முதலான பொருள்களில் பயன்படுத்துகிறோம். நெப்போலியன் சாவில் மயிரை பியித்துக்கொள்ளும் மேலும் ஒரு எக்ஸ்ட்ரா திருப்பம் இருக்கிறது தேடிப் படித்துவிடுங்கள்.

ஆண்களின் தலையில் வளர்ந்தால் அதற்குப் பெயர் முடி;  பெண்களின் தலையில் வளரும் போது அது கூந்தாலாகிவிடுகிறது. சிலர் பொதுவாக கேசம் என்பார்கள். சமஸ்க்ருதத்திலிருந்து தமிழுக்கு வந்தது என்று நினைக்கிறேன் அந்த ஆராய்ச்சியை டிவிட்டர் டாக்டரேட் ஆசாமிகளுக்கு விட்டுவிடுகிறேன்.

”கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி” தொடங்கி ”கூந்தல் மீசை ஒன்றாக ஊசி நூலில் தைப்பேனே ” ஐ பாடல் வரை பெண்களுடைய முடிக்குக் கூந்தல் என்று தான் பெயர்.  ”பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள்” என்ற திருமங்கையாழ்வார் அருளிச்செய்த திருநெடுந்தாண்டகத்தில் கூந்தல் வாசனைப் பெற்றால் வண்டுகள் பூக்களுக்கு பதில் கூந்தலை தேடி வந்து தலைக்கு மேல் ரீங்காரம் செய்கிறது என்கிறார். கவிஞர்கள் தேன் தடவி எழுதினார்களா அல்லது பெண்கள் எண்ணெய்க்கு பதில் தேனையே எண்ணெய்யாக தடவினார்களா என்று தெரியாது. பெண்கள் கூந்தலுக்கு வண்டுகள் வருகிறது. “நாற்றத் துழாய்முடி நாராயணன்” என்கிறாள் ஆண்டாள். நாராயணாக இருந்தாலும் அது முடி தான். முடி ஆண்மை.

முடி என்பது சாதாரணமாக உபயோகிக்கலாம். மயிர் ? இரண்டும் ஒன்றைக் குறிக்கும் ஆனால் மயிர் என்ற வார்த்தையை அப்படி உபயோகிக்க முடியாது. உதாரணமாக அறிவியல் தேர்வில் ”வெள்ளை முடி வளர்வது வயதாகிவிட்டதைக் குறிக்கும்” என்று எழுதலாம். இங்கே முடிக்குப் பதில் மயிர் என்று மாற்றிப் பாருங்கள். நிச்சயம் வாத்தியார் மதிப்பெண் போட மாட்டார். மசிர் என்று உபயோகித்தால் அந்த வாத்தியார் வீட்டுக்கே வந்துவிடுவார்.

அதே வார்த்தையுடன் ‘ப்’ சேர்த்து ’மயிரைப்’ கூடவே ஒரு  <பீப்>  சேர்த்தால்  இலக்கண விதி பிரகாரம் அது கெட்ட வார்த்தையாகிவிடும். அதே போல் மயிர் கூட ஆண்டியை சேர்த்தால் மயிராண்டி என்று ஊர்க் கலவரமே வரலாம். இலங்கையில் இது மசிராண்டியாம். கூடவே “சிரை” “பிடுங்கு”  என்று மயிரைத் தினமும் தமிழ் கூறும் நல்லுலகம் அலங்கரிக்கிறது.  எனக்குத் தெரிந்தவரை மயிரை நல்ல வார்த்தை ஆக்க ஒரே வழி இருக்கு  “மயிர் இழையில் உயிர் தப்பினார்”  மேலும் சில வார்த்தை இருக்கலாம்.

சாப்பாட்டில் முடி இருந்தால் பெரிய பிரச்சனை தான். மாமியார் மருமகள் இரண்டு பேரும் சேர்ந்து செய்தால். “உங்க அம்மாவுடையது தான்” என்று மனைவியும். “அவளோடுது தான்” என்று அம்மாவும் ஒற்றை மயிருக்கு மயிர்பிடிச் சண்டை போட்டுக்கொள்ளலாம். சாப்பாட்டில் மயிர் என்றால் ஆசார குறைச்சல், யாருடையாதாக இருந்தாலும் சாப்பாட்டை விட்டு எழுந்துவிட வேண்டும். ஆனால் அம்மா, மனைவி நாக்கையும் நம் நாக்கையும் கட்டுப்படுத்த முடியாது.

புத்திசாலி மனைவியாக இருந்தா “பாருங்க வெள்ளை முடி” உங்க அம்மாவுடையது என்று ஷெர்லாக் ஹோம்ஸ் ஸ்டைலில் கண்டுபிடிக்கலாம். மைக்ரோ ஸ்கோப்  வழியாகப் பார்த்தால் அது ஆண், பெண், வயது, டை அடித்ததா என்று சகலமும் கண்டுபிடித்துவிடலாம். மயிர்பிடிச் சண்டையினால் உதிர்ந்த முடியா என்று கூட கண்டுபிடிக்கலாம்.

சாப்பாட்டில் முடி என்றால் அருவெறுப்பாக கருதும் நாம். திருப்பதியில் காணிக்கையாக செலுத்தும் முடி வருடந்தோறும் பல கோடிக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலிருந்து L-Cysteine என்ற அமீனோ அமிலத்தை எடுத்து சாக்லேட் செய்ய உபயோக்கிறார்கள். செயற்கை முறையில் கிடைக்கிறது ஆனால் நம் முடியிலிருந்து எடுப்பது ஆர்கனிக் வகை இல்லையா ? வெளிநாட்டிலிருந்து மச்சினர் கொண்டு வரும் சாக்லேட்டை ’திருப்பதி பிரசாதம்’ போல சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறோம்.


’தல’ப்பாகட்டி பிரியாணி கடைகளுக்கு போட்டியாகச் சிகை அலங்கார கடைகள் எங்குப் பார்த்தாலும் வளர்ந்திருக்கிறது. நம்முடைய முடி குறைய குறைய அவர்களுக்கு வளர்ச்சிதான். சுருட்டையை நேர்செய்வதும், நேராக இருப்பதைச் சுருட்டிவிடுவதும் கலர் அடிப்பதும் வாட்ஸ் ஆப் ஃபார்வர்ட் மாதிரி டைம்பாஸாகிவிட்டது. உங்கள் மரபணுக்கள் உங்கள் முடியின் கலரை முடிவு செய்கிறது. ஊருக்கு ஊர் கலர் மாறுபடுகிறது. நம்மூரில் கருப்பு வெளிநாடுகளில் பொன்னிறம் என்று பார்த்திருப்பீர்கள். நல்ல வேளையாக நமக்குப் பொன்னிறமாக இல்லை, பழைய காலத்தில் ரோமானியர்கள் பொன்னிறமாக இருக்கும் முடியைப் பார்த்தால் உடனே “யார் அங்கே” என்று ஓர் அடிமை கூப்பிட்டு பொன்னிற முடியை முழுவதும் வெட்டி விக் செய்தார்கள். அது மட்டும் இல்லை மொட்டையான பிறகு அவனை அடிமையாக்கிக்கொண்டார்கள். மீண்டும் வளர்ந்த பிறகு அறுவடை செய்ய தான்.

எங்கள் வீட்டில் காய்கறி குப்பை எல்லாம் ஒரு தொட்டியில் போட்டு அதை அழுகிப்போகச் செய்து காம்போஸ்ட் உரம் செய்யும் போது அதில் மக்காதது சாக்லெட்ட் பேப்பர், இன்னொன்று தலை முடி. அகழ்வாராய்ச்சிகளில் தேடிக்கொண்டு போகும் போது பழமையான எலும்புக்கூடுகளுடன் முடிகள் கிடைத்துள்ளது.

“முடியில என்ன இருக்கு?” என்று கேட்டால் சட்டென்று பதில் சொல்லத் தெரியாது. 88% ’கெரட்டின்’ என்ற புரதம் தான் முடி, நகம், கொம்பு என்று எல்லாவற்றிலும் இருக்கிறது. அதுவும் இறந்த புரதம்.
காத்துப் புகாத இடத்தில் வைத்திருந்தால் பல நூற்றாண்டுகள் அழுகாமல் அப்படியே இருக்கும். பண்டைய கிரேக்கர்களும், ரோமானியர்களும் முடியில் தான் உயிர் இருக்கிறது என்று நம்பினார்கள். எல்லாப் புராணங்களிலும் முடியுடன் தான் வர்ணிக்கிறார்கள்.  ”அழகான கூந்தலுடன்” என்று வர்ணிக்கப்படுகிறாள் ஆத்தோர் என்ற எகிப்திய கடவுள். பைபிளில் சாம்சன் நீண்ட முடியை வெட்டினால் அவர் வலிமையை இழந்துவிடுவார். நாய்க்குடை காளான் மாதிரி கிளியோபாட்ரா ஹேர்ஸ்டைல் எல்லோருக்கும் தெரியும். தெய்வீக ஆசீர்வாதம் மூலம் வந்தது என்கிறார்கள். பிறகு மந்திரதந்திரங்கள், ஸ்பெஷல் எண்ணைத் தைலம் என்று அதைப் பாதுகாத்தாள். அமேசான் காடுகளில் உள்ள அரிய வகை மூலிகையால் தயார் செய்த தைலமாக கூட இருக்கலாம். பதஞ்சலியில் கூட ஏதோ தைலம் இருக்கிறது.

ஹென்னா என்ற மருதாணியை இன்றைய மம்மிக்கள் பலர் ஆர்கானிக் டையாக அடித்துக்கொள்கிறார்கள். எகிப்திய மம்மிகள் இதையே பல ஆயிரம் வருஷங்களுக்கு முன் செய்திருக்கிறார்கள். சவுக்கார் பேட்டையில் அதிகம் பேர் உபயோக்கிறார்கள். ரோமானியர்கள் மர சாம்பல், சோடியம் பைகார்பனேட் கொண்டு கலர் அடித்துக்கொண்டார்கள். துப்பாக்கி வந்த காலத்தில் அதன் மருந்தையும் ( Gunpowder) போராக்ஸையும் வினீகர், மிருக ரத்தத்துடன் கொஞ்சம் எண்ணைச் சேர்த்து கொதிக்க வைத்து வெள்ளை முடியை கலர் செய்தார்கள். வெறுப்படைய வேண்டாம், இப்போதும் நமக்குக் கிடைக்கும் டைகளிலும் இது போன்று பல விஷயங்கள் உள்ளே அடங்கியிருக்கிறது.

இன்று பெரிதாக ஒன்றும் மாறவில்லை. பெண்கள் தங்கள் முடியை பேணி பாதுகாக்கிறார்கள். ஒரு பெண்ணிடம் “நிறையக் கொட்டிவிட்டது போல” என்று அவள் கூந்தலைப் பற்றி பேசிப்பாருங்கள். உங்களுக்கு அன்று “bad hair day” தான். ஆண்கள் சளைத்தவர்கள் இல்லை. மேற்கு மாம்பலம், முதல் தாம்பரம் வரை மின்சார ரயிலில் போனால் இரண்டு பெரிய பாஸ்போர்ட்சைஸ் போட்டோவை பார்க்கலாம். ஒன்றில் சோகமாக வழுக்கை மண்டையும் பக்கத்தில் சிரித்துக்கொண்டு தலை முடியுடன், கீழே  “Before" "After" என்பதைப் பார்க்கலாம்.

இன்றும் பொது இடங்களுக்கு விக் வைத்துக்கொள்ளும் நடிகர்கள். தொப்பி போட்ட அரசியல் வாதிகள், சத்குருக்கள், பாபாக்கள், ஸ்ரீஸ்ரீக்கள் எல்லோருக்கும் பொதுவான ஓர் அம்சம் மற்றும் எல்லோருக்கும் ஒரு இமேஜ் கொடுக்கிறது இந்த முடி சமாசாரம் தான்.

கூகிளில் முடி என்றால் இது தான் கொட்டுகிறது... 
முடி கொட்டுவது பற்றி எனக்குக் கவலை இல்லை என்று ஆண்கள் வெளியே சொன்னாலும், அவர்களுக்கு உள்ளூர கவலை இருக்கவே செய்கிறது. முதல் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேருவிற்கே இந்தக் கவலை இருந்திருக்கிறது ( பார்க்க அவர் எழுதிய கடிதம் ). வெள்ளை கருப்பாகவும் ஏன் வழுக்கையில் கூட முடி முளைக்கவும் அவருக்கும் ஹீலர் பாஸ்கர் மாதிரி ஒருவர் கிடைத்திருக்கிறார்.

நேரு... 
விவாகரத்துக்கும் வழுக்கைக்கும் சம்பந்தம் இருக்கவே செய்கிறது. ”வழுக்கை விழ வாழ்க்கையில் அதிகம் வழுக்கி விழுகிறார்கள்” என்று திருவள்ளுவர் மாதிரி இரண்டே வரியில் எழுதிவிடலாம். பிரச்சனை திருவள்ளுவர் மாதிரி அவர்களுக்கு முடி இல்லாதது தான் என்கிறது புள்ளிவிவரம். கஷ்டம் வந்தால், மயிரே போச்சுன்னு இருப்போம் ஆனால் பிரச்சனை முளைப்பது அந்த மயிரே முளைக்காத போது தான்  பல ஆண்கள், மிச்சம் இருப்பதையும் எடுத்துவிட்டு, ஃபிரஞ்ச் தாடி வைத்துக்கொண்டு வலம் வருகிறார்கள். சிவாஜி ரஜினி மாதிரி. இதன் உளவியல் காரணத்தை ஆராய்ச்சி செய்யலாம். நம் கவலையை சொன்னால் ”நீங்க வாழ்க்கையில் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கு, இதுக்கே கவலைப்பட்டா ?” என்று அறிவுரை.

எலும்பு மஜ்ஜைக்கு அடுத்து அதிகமாக நம் உடம்பில் வளரும் திசு முடி தான். முடியின் மயிர்க்கால்களுக்கும் நரம்புகளுக்கும் தொடர்பு உண்டு அதனால் தான் தலையை மசாஜ் செய்த பின் அந்த ’ஃபீல் குட்’ கிடைக்கிறது. சராசரி ஒருவருக்கு 125,000 தலையின் மேற்பகுதியில் மயிர்க்கால்கள் இருக்கிறது. வருடத்துக்கு ஒவ்வொன்றும் 12 செ.மி வளர்கிறது. ஆக 125,000 x 12cm  = 15,00,000cm அதாவது மொத்தம் 15km. எது வளர்கிறதோ இல்லையோ, பிறந்த நாளுக்குப் பிறந்த நாள் 15km முடி வளர்கிறது கிட்டதட்ட மூன்று மணிநேரம் வேகமாக நடந்தால் கடக்க கூடிய தூரம்.

ஆனால் இவ்வளவு வளரும் முடி கொட்டவும் செய்கிறது. தினமும் 30 முதல் 100 முடி கொட்டுகிறது என்கிறார்கள். சட்டையில், தோள்பட்டையில், சாப்பாட்டில்,  சீப்பில், குளியலறை சிங்க், வாஷ்பேசின் என்று எல்லா இடங்களிலும் பார்க்கலாம். வீட்டைச் சுத்தம் செய்யத் தொடங்கினால் காணாமல் போன பல பொருட்கள் கிடைப்பதுடன் முடி பந்துகள் கிடைப்பது நிச்சயம். தலை முடி அதிகம் இருப்பவர்கள், சரவணபவன் போன்ற சில ஹோட்டல்களில் தலை முடி விழாமல் இருக்கத் தொப்பி போடுகிறார்கள். தலை முடி இல்லாதவர்கள் சவுரி போடுகிறார்கள்.

சவுரி பெண்களுக்கே சொந்தம். விக் ஆண்களுக்கு. ஒரே எஸ்சப்ஷன் சௌரிராஜப் பெருமாள்!. அதற்கு ஒரு சின்ன ஸ்தல புராணமும் இருக்கிறது. ரங்க பட்டர் கோயில் அர்ச்சகர் பெருமாளுக்கு தினமும் மாலை சாற்றி ஆராதனை செய்த பின் தன் காதலிக்கு அந்த மாலையைச் சாற்றினார். ஒரு நாள் திடீர் என்று சோழ மன்னன் கோயிலுக்கு வர ராஜமரியாதை செய்ய என்ன செய்வது என்று தெரியாமல், காதலிக்கு அணிவித்த மாலையை மன்னருக்கு அணிவித்தான். அதில் சில தலை மயிர் இருக்கவே, ”இது என்ன ?” என்று மன்னன் கேட்க அர்ச்சகரும் இது பெருமாளுடைய திருமுடி தான் என்று புருடா விட. மன்னன் உற்சவரைச் சோதிக்க பெருமாள் தலையில் நிஜமாகவே திருமுடி இருப்பதைக் கண்டான்.  நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமங்கையாழ்வார் என்று ஐந்து ஆழ்வார்கள் திருகண்ணபுரம் சௌரிராஜ பெருமாளைப் பாடியிருக்கிறார்கள். சௌரி என்றால் யுகந்தோறும் அவதரிப்பவன் என்று பொருள்.

கண்ணபுரம் செல்வேன் கவலையெல்லம் மறப்பேன்
கண்ணனின் சன்னிதியில் எந்நேரமும் இருப்பேன் என்று சீர்காழி கூடப் பாடியிருக்கிறார்
(https://www.youtube.com/watch?v=ICVg0kARly4 )

விக் வைத்த மாதிரி இருக்கும் இந்தக் கால நங்கைகள் “மாலை சாற்றினாள் கோதை மாலை மாற்றினாள்!” என்று கல்யாணத்தில் மாலை மாற்றும் முன் தலைக்கு சவுரி மாற்றிக்கொள்கிறார்கள். முன்பு சிலர் சவுரியை வீட்டில் மாட்டி வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன். கரூர் தான்தோன்றிமலை இதற்கு ஃபேமஸ் அடிவாரத்தில் இருக்கும் ஒரு தெருவிற்கு பெயரே சவுரிமுடி தெரு!

உள்ளங்கை, உள்ளங்கால், உதடுகளில் முடி வளரவே வளராது. அப்படி வளர்வதாக இருந்தால், பெண்கள் தேய்க்கும் எண்ணைக்கு தலையில் வளர்கிறதோ இல்லையோ, உள்ளங்கையில் சவுரி முடியே வளர்ந்திருக்கும். சாதாரண முடி தானே என்று நினைத்தாலும் அதன் பயன்கள் பல. பள்ளியில் வாத்தியார் குட்டும் போது அதிகமாக வலிக்காமல் தலை முடி காப்பாற்றுகிறது. புருவங்கள்,  கண் இமைகள் தூசு விழாமல் காக்கும் வைப்பர். மூக்கு வழியாக தூசு நுரையீரலுக்குச் செல்லாமல் மூக்கு முடி காப்பாற்றுகிறது. அக்குளில் இருப்பது வேர்வையைச் சுலபமாக ஆவியாக்க உதவுகிறது. காது முடி நாற்பது வயதுக்கு மேல் தான் வளரும். சாதனை படைத்து கின்னஸுக்கு போய்விட்டது. அதைப் பற்றி முன்பே எழுதிவிட்டேன்.

முடி வெட்ட வெட்ட வளர்கிறது என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், அப்படி இல்லை. அப்படி இருந்தால் தினமும் வெட்டிக்கொண்டு, ஷேவ் செய்துகொண்டு இருக்க வேண்டியிருக்கும். வருடத்துக்கு நான்கு சீசன் இருப்பது மாதிரி முடி வளர்ச்சிக்கும் நான்கு பருவம் - வளரும், உடையும், செயலற்று இருக்கும், பிறகு உதிரும். இதற்கு anagen, catagen, telogen, exogen என்று பெயர். எல்லா முடியும் ஒரே சமயத்தில் வளர்வதில்லை. அப்படி வளர்ந்தால் ?  ”போன வெள்ளிக்கிழமை வழுக்கையா பார்த்தேன்.. பரவாயில்லை அதுக்குள்ள வளர்ந்துவிட்டது.. எனக்குத் தான் லேட். நீங்க என்ன டயட் எடுக்கிறீர்கள்” என்ற விசாரிப்புக்கள் இருக்கலாம். ஆண்களுக்கு வேகமாகவும், பெண்களுக்கு மெதுவாகவும் வளருமாம். ஒரு மனிதன் வாழ்நாளில்  ஐந்து மாதம் ஷேவ் செய்கிறான். பெண்கள் எவ்வளவு வருடம் தலை சீவுகிறார்கள் என்று கணக்கு போட்டு பார்த்துக்கொள்ளுகள். 100gm வெயிட்டை ஒரு முடி தாங்குமாம். அதனால் தான் நமக்கு இவ்வளவு தலைகனமோ ?

ஒரு வெள்ளை முடியைப் பிடுங்கினால் இரண்டு வளரும் என்பது கட்டுக்கதை. பா.ரா போன்ற முதிர்ந்த(வயதில் இல்லை) எழுத்தாளர்கள் இதற்குப் பதில் சொல்லலாம்.  சரோஜாவின் சவுரி என்று -க.நா.சு சிறுகதை ஒன்றை எழுதியிருக்கிறார். அடியேன்  ’சாஸ்திரி பவன்’ என்று ஒரு கதை எழுதியதாக நினைவு முடியைப் பற்றி இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு ஆனால் அது எல்லாம் இன்னொரு சமயம்.  இத்துடன் இந்த கட்டுரையை ‘முடி’த்துக்கொள்கிறேன்.

Friday, September 16, 2016

எம்.எஸ்.சுப்புலஷ்மி - 100

எம்.எஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது ”குறையொன்றுமில்லை”, ”வேங்கடேச சுப்ரபாதம்”, ”அன்னமாச்சாரியா கீர்த்தனைகள்”, ”மீரா பஜன்” என்று சொல்லிக்கொண்டே போகலாம். மற்றவர்களிடம் ( எல்லோரையும் சொல்லவில்லை) இந்த மாதிரி உருப்படியான உருப்படி எதுவும் இல்லை. திருமணம் ஆன புதிதில் என் மனைவி எனக்கு அவர் பாடிய ”சூர்தாஸ் பஜன்களை” அறிமுகம் செய்து வைத்தார். இன்று வரை இதற்கு இணையாக நான் எதையும் கேட்டதில்லை. ( உதாரணத்துக்கு இதைக் கேட்டுப்பாருங்கள் http://mio.to/album/MS.+Subbulakshmi/The+Spiritual+Voice+Of+M.S.Subbulakshmi+-+Surdas+Bhajans+(2010) )

சங்கீதம் ரசிக்க முதலில் சாரீரம் நன்றாக இருக்க வேண்டும். உச்சரிப்பு ஒழுங்காக, குரல் பிசிறு தட்டாமல் தேவை இல்லாமல் மேல் ஸ்தாயிக்குப் போய் எவரஸ்டை தொட்ட எடுமண்டு இல்லரியுடன் எல்லாம் போட்டி போடக் கூடாது.  திறமை காட்டுகிறோம் பேர்வழி என்று வேர்த்துக்கொட்டிக்கொண்டு ஸ்வரங்களுடன் ஜிம்னாஸ்டிக் வேலைக் கூடாது. இவை எல்லாம் செய்தால் பாவம் என்ற முக்கியமான விஷயம் காணாமல் போய்விடும்.

இன்று பாடும் பல கலைஞர்கள் ( சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை ) பாவம் என்ற ஒன்று மிஸ்ஸிங். அப்படியே இருந்தாலும் செயற்கையாக இருக்கிறது அல்லது சில பாடல்களில் மட்டுமே எட்டிப்பார்க்கிறது. பாடலில் என்ன இருக்கிறது என்று புரிந்துகொண்டு பாட வேண்டும் அப்போது தான் பாவம் வரும். மைக் முன்னால் சின்ன காகிதத்தில் பிட் அடித்தால் வரவே வராது. மவுஸ் பிடித்த குழந்தை கம்யூட்டர் சைன்ஸ் செய்யும் என்று சொல்லுவது மாதிரி தான்.

எம்.எஸ். அவர்கள் பாடல்களை கேட்கும் போது நமக்குப் பரவசம் ஏற்படுகிறது என்றால், பாவத்துக்கு அவர் முக்கியத்துவம் தந்தது தான். அவர் பாடல்களில் ஸ்வரம், சங்கதி எல்லாம் சின்னதாக இருக்கும் ஆனால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அழகான பூவைப் பார்க்கும் போது என்ன உணர்வு ஏற்படுகிறதோ அதே ஓர் நல்ல இசையைக் கேட்கும்போதும் ஏற்படும் வேண்டும். எம்.எஸ். இசை உணர்வுப்பூர்வமானது.

திருமணம் ஆகி சில மாதங்களில் நடந்த நிகழ்ச்சி இது. என் மனைவி கர்நாடக சங்கீதத்தை எம்.எஸ் அவர்களின் மகள் திருமதி ராதா விஸ்வநாதனிடம் பல வருடங்கள் முறைப்படி கற்றுக்கொண்டு இருந்தார். திருமணம் ஆன பிறகு ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் என் மனைவியை இசை பயிலக் கூட்டிச் செல்வது என் முக்கிய அலுவல்களில் ஒன்று ( ஓலா இல்லாத காலம் !)

ஒரு மதியம் கிளாஸ் முடியும் தறுவாயில், எம்.எஸ் தன் மகளின் வீட்டிற்குள் நுழைந்தார். முதன்முதலாக அவரை நேரில் பார்த்தேன். அவர் முன் உட்கார மனமில்லாமல், நான் எழுந்து நின்றேன். பிறகு, தரையில் அமர எத்தனித்த என்னை எம்.எஸ் தன் அருகில் இருந்த இருக்கையில் அமருமாறு கூறி விட்டு புது மாப்பிளையை நலம் விசாரித்துவிட்டு என் மனைவியைப் பாடுமாறு பணித்தார்.

என் மனைவி ( என்ன தைரியம் ) எம்.எஸ் ஏற்கனவே அற்புதமாகப் பாடியிருந்த சூர்தாஸின் ஒரு பஜன்-ஐ பாடிக் காட்டினார். அதை முழுவதும் கேட்டு ரசித்துப் பாராட்டினார். அந்த இசை சகாப்தத்தின் அருகில் அமர்ந்திருந்த அக்கணங்களில், என் மனதில் தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பது கடினம். அவரிடம் விடைபெறுவதற்கு முன், அவரை வணங்கி ஆசிகள் பெற்றுக் கொண்டோம். போகும் போது எங்களை அவர் இல்லத்திற்கு ஒரு முறை வரும்படியும் கேட்டுக் கொண்டார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி -  100வது பிறந்த நாள் பதிவு.

( படம் : விகடன் )

Sunday, August 28, 2016

பாவம் போக்கும் பாலம்

எங்கும் ராமர் கலர்

“உன்னை தண்ணியில்லா காட்டுக்கு மாத்திருவேன் பார்த்துக்க” என்ற மெரட்டலுக்கு அடிபணியாத சினிமா கதாநாயகன் மாற்றப்படும் இடமான இராமநாதபுரத்துக்கு தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்புல்லாணி திவ்யதேசம். எந்த கல்லுரியிலும் தமிழில் முனைவர் பட்டம் வாங்காத ஆண்டாள்

“ஓத மாகடல் வண்ணா உன் மண
    வாட்டி மாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினா யெங்கள்
    சிற்றில் வந்து சிதையேலே - 520

என்று எந்த எஞ்சினியரிங் காலேஜிலும் பட்டம் வாங்காத ஸ்ரீராமருக்கு உதவ வந்த வானர சேனையினால் கட்டப் பட்ட சேது என்று மங்களாசாசனம் செய்கிறார்.

‘ஸேது’ என்றால் வடமொழியில் “அணை” என்று பொருள். “ஆஸேது ஹிமாசலம்” என்று பழங்கால வழக்கு 400கிமீ தள்ளி, தற்போது “இமயம் முதல் குமரி வரை” என்று மாறிவிட்டது.

“திருஅணை காண அருவினை இல்லை” என்ற பழமொழிக்கு சுலபமான அர்த்தம் - இராமர் கட்டிய இத் திருஅணையை பார்த்தால் நம் பாவங்கள் போகும். பார்த்தாலே பாவங்கள் போகும் என்கிறார்கள். நான் பார்த்து, குளித்துவிட்டு என்னுடைய பாவ கவுண்டரை ரிசெட் செய்துவிட்டு திரும்பினேன்.
கோடியில் இருக்கும் தனுஷ்கோடி

திருப்புல்லாணிக்கு இதுவே என் முதல் பயணம். காலை ஏழு மணிக்கு பெங்களூரிலிருந்து சேலம், நாமக்கல், திருமங்கலம் வழியாக திருப்புல்லாணி சென்ற போது மாலை ஆறு மணி ஆகிவிட்டது.

“திருப்புல்லாணியில் ஹோட்டல் எதுவும் இல்லை... வரும் வழியில் இராமநாதபுரத்திலேயே ஏதாவது டிபன் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுங்கள்” என்றார்கள். தேடியதில் சரியான ஹோட்டல் கிடைக்காமல், பெருமாளை சேவிக்க கிளம்பினோம். புல்லானி பெருமாள் புளியோதரை தந்து அருளினார்.

ஆதிஜெகந்நாதப் பெருமாள்
திரேதாயுகத்தில் ஸ்ரீராமர் சேவித்த ஆதிஜெகந்நாதப் பெருமாள்(ஸ்ரீராமரே சேவித்த பெருமாள் அதனால் ‘ஆதி’ஜெகந்நாதப் பெருமாள் என்று திருநாமம்), கலியுகத்தில் எனக்கு மாலை ஏழு மணிக்கு காட்சி தந்தார்.


திருப்புல்லாணி ஒரு சிறிய ஊர். வால்மீகிராமாயணம் தொடங்கி,  கம்பர், துளசி, அனந்தராமாயணம், அத்யாத்ம ராமாயணம், மஹாவீர சரிதம்... என்று எந்த மொழியில், எந்த இராமாயணமாக இருந்தாலும் சேதுவின் பெருமையை எழுதாமல் இருக்க முடியாது.

விபீஷணன் சரணாகதி நடந்த ஸ்தலம், கடற்கடவுள் சக்கரவர்த்தி திருமகனிடம் சரணமடைந்த இடம். ஸ்தல வரலாறுகளை எடுத்துக்கொண்டால் ரிஷிகள் ஆதிஜகந்நாதனை சரணமடைந்து என்று பல சிறப்புக்களை பெற்று ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு முக்கியமான சித்தாந்தமான சரணாகதியை போற்றும் ஸ்தலமாக ஏற்றம் பெருகிறது.

வாசல் தெளித்துக்கோலம், ஆடு, மாடு மயில் !
காலை ஆறு மணிக்கு வீட்டு வாசலை தெளித்து கோலம் போடுவதை பார்க்க முடிந்தது. வண்டியில் பால் வருகிறது, அதை பாத்திரத்தில் வாங்கிக்கொள்கிறார்கள். தெருவில் பசுக்களும், ஆடுகளும் உங்களை பழைய உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. ஆடு மாடு மட்டும் இல்லை மயில்களும்! ( கூடவே சில கேரி பேக் குப்பைகளும் )
எங்கும் மயில்கள்

”வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடுவது இந்த ஸ்தலத்துக்கு இன்னும் பொருந்தும். கோயில் மீது, நடக்கும் பாதை என்று எல்லா இடங்களிலும் மயில்கள் பலவற்றை பார்க்க முடிந்தது. மயில்களையும், தேசிகன் சன்னதியும் கடந்து கோயில் நுழைந்தவுடனேயே அதன் வாசனையும் அமைப்பும் நம்மை பழைய காலத்துக்கே அழைத்துச் செல்கிறது.

கோயிலுக்கு செல்லும் முன் ‘சக்கரதீர்த’ புஷ்கரணி அழகாக காட்சி அளிக்கிறது. இதைப் பற்றி கடைசியில் விரிவாக.
கோயிலுக்குள் சேதுபதிகள்

சன்னதிக்குள் நுழைந்தவுடன் ஸ்ரீஆதி ஜகந்நாதர் நம்மை வரவேற்கிறார். துவஜஸ்தம்பத்துக்கு பக்கத்தில் இரு பக்கங்களிலும் பெரிய கற்கம்பங்களில் சில ஸ்தானீகர்களின் வடிவங்களை பார்க்க முடிகிறது. ஸ்ரீமத் ஆண்டவன், ஸ்ரீமத் அழகியசிங்கர்கள், ஸ்ரீ வானமாமலை ஜீயர் என வைணவ ஆசார்யர்கள் அனைவருக்கும் இஷ்டமான பத்மாஸினி தாயார்.  பெரும் வரப்ரசாதி. எந்த வரம் கேட்டாலும் அபார கருணையுடன் அனுக்ரஹம் செய்து, ரிட்டன் டிக்கெட் வாங்குவதற்குள் நிறைவேற்றிவிடுவாள்!)

அமைதியான ஆண்டாள் சன்னதி
தாயரை சேவித்துவிட்டு வெளியே வந்தால் எல்லா ஊர்களிலும் போலவே ஆண்டாளுக்கும் ஒரு சந்நிதி பூட்டி இருக்கிறது. ஆடிப் பூரத்தன்று மட்டும் இவளைத் தேடிப் பெருமாள் வந்து சேர்த்தி திருமஞ்சனம். ஆண்டாளை டிஸ்டர்ப் செய்யாமல் அந்த பக்கம் ஸ்தல விருட்டமான அரச மரத்தை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன். ’மரங்களின் நான் அரசனாக இருக்கிறேன்’என்கிறான் கண்ணன். இந்த மரம் அடர்ந்து படர்ந்து எல்லோரையும் மன்னித்து ஆசிர்வதிக்கும் மரமாக இருந்தது.

மரங்களின் அரசன் 
பல யுகங்களுக்கு முன் இந்த ஸ்தலம் தர்பக் காடாக இருந்தது. காலவர் என்ற மஹரிஷிக்கு ஜோதி வடிவாக விஷ்ணு காட்சி தந்தார்.  பின்னர் அந்த ஜோதி வடிவமே அனைவரும் அறியும் வகையில் அரசமர ரூபமாக இன்றும் காட்சி அளிக்கிறது. அதே போல இந்த ஸ்தலத்தில் தவம் செய்த கண்ணுவர், புல்லர் என்ற மஹரிஷிகளுக்கும் விஷ்ணு ப்ரத்யக்ஷம். ஜெகந்நாதராக  நாராயணன் காட்சி அளித்த முதல் தலம் என்பதால் அவர் ஆதிஜெகந்நாதன். ஸ்தல புராணத்தில் குறிப்பிட்ட அந்த மரம் இன்றும் இருப்பது நாம் காண வேண்டிய அதிசயங்களில் ஒன்று.
தாயார் 

பொதுவாக அரசமரம் மேல்நோக்கி வளரும். ஆலமரம் போல் விழுதுகள் விடுவதோ விழுதுகள் தொடும் இடங்களில் மரம் உண்டாவதோ கிடையாது. ஆனால் திருப்புல்லாணியில் தல விருட்சமாக இருக்கும் இந்த அரச மரமோ மேல் நோக்கி அதிகம் வளராமல் அதன் கிளைகள் தரை நோக்கி வளைந்து தாழ்ந்தே வளர்கின்றன. அப்படித் தரையைக் கிளைகள் தொடும்போது, ஏதேனும் ஒரு கிளை தரையில் வேர்விட்டு, புதிய மரம் உண்டாகி, அது பெரிதானவுடன் தாய் மரம் பட்டுப்போய், பின் புதிய மரத்தின் கிளைகள் தரையைத் தொட்டு புது மரம் உண்டாகி என்று இப்படி இந்த மரம் இடம் விட்டு இடம் மாறுகின்ற அற்புதம் இங்கு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

மரத்துக்கு கீழே தான் பஞ்சாயத்து நடக்கும், ஆனால் இந்த மரமே ஒரு பஞ்சாயத்தை தீர்த்துவைத்துள்ளது.

ஒரு பஞ்ச காலத்தில் தமிழ் நாட்டு அந்தணர்கள் வடக்கே சென்ற போது அங்கே சரஸ்வதி புத்திரன் சாரஸ்வதன் ஓதிய வேதத்துக்கும் இவர்கள் ஓதியதற்கும் முரண்பாடு ஏற்பட அவர்கள் பிரம்மாவிடம் சென்று கேட்க அவரும் குழம்பி அவர் திருமாலையே கேட்போம் என்று சென்றார்கள். விஷ்ணு இந்த மரத்தடியில் யார் வேதம் சொல்லும் போது இலைகள் ஆடாமல் அசங்காமல் இருக்கிறதோ அதுவே சரி என்று சொல்ல. சாரஸ்வதன் சொன்ன போது இலைகள் அசங்காமல் இருக்க அவர் சொல்லும் வேதமே சரி என்பது புராணக் கதை.

விஷ்ணுவின் மார்பில் எப்போது லக்ஷ்மி குடிக்கொண்டு இருப்பது போல அரசமரத்துடன் வேம்பும் இங்கே இணைந்து இருக்கிறது. அரச மரமும் கூடவே வேம்பும் அதன் மருத்துவ குணங்களையும் யாராவது ஆராயலாம்.
திருகச்சி, திருப்புட்குழி போன்ற இடங்களில் தலவிருட்ஷமாக அரச மரம் விளங்குகிறது என்பது கொசுறு தகவல்.
சயன ராமர் 

இந்த கோயிலில் எங்கும் நுணுக்கமான சிற்ப கலையை காணலாம்.
குறிப்பாக தர்ப்பசயன ராமரும் அவருடைய நாபீகமலத் தண்டின் அமைப்பும் வியக்க வைக்கிறது. தர்பப்ப புல்லில் சயனித்துக்கொண்டு இருப்பதால் இவர் தர்ப்பசயன ராமர். திருவடி பவ்வியமாக ஸ்ரீஆஞ்சநேயர். சயன ராமரை பார்த்தவுடன் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளை நினைவுப்படுத்தும் தோற்றம்.
நாங்கள் சென்ற போது கூட்டமே இல்லாத காரணத்தால் சேவித்துக்கொண்டே இருந்தோம். இராமர் இராவணை வீழ்த்த செல்ல வேண்டும் நம்மால் அவருக்கு லேட்டாக கூடாது என்பதால் கிளம்பினோம்.

சீதையைத் தேடி வந்த இராமன் சமுத்திரராஜனை வேண்டி மூன்று நாட்கள் உபவாசம் இருந்தும் அவன் வராததால் சினமுற்ற இராமர் வில்லை எடுக்க சமுத்திரராஜன் தன் பத்தினியுடன் வந்து சரணடைந்த இடம் இங்கே தான். இராவணனின் ஒற்றர்கள் சுகன், சாரணன் இருவரும்இராமனின் தேஜஸைப் பார்த்து நீ சாதாரண மானுடனாக தெரியவில்லை நீர் யார் என்று கேட்க அவர்களுக்கு இராமன் தான் ஆதிசேஷனில் பள்ளிகொண்ட தோற்றத்தைக் காட்டித்தர அவர்களும் இங்கே சரணடைந்தனர். வார்த்தைகளால் விவரிக்க இயலாத அழகனை நாங்களும் சரணடைந்து பக்கத்தில் இருக்கும் சந்தான கோபாலன் சன்னதிக்கு சென்றோம்.

எல்லா கோயிகளிலும் சின்னதாக சந்தான கோபாலன், வேண்டிக்கொண்டால் குழந்தைப் பிறக்கும் என்று அர்ச்சகர் குட்டி கிருஷ்ணரை காண்பிப்பார். ஆனால் இங்கே  தசரதன் புத்திர காமேஷ்டி யாகத்தின் போது ஆதிஜெகந்நாதனை வேண்டி சந்தான கோபால ப்ரதிஷ்டை செய்து வழிபட்டு பெருமாள் - பெரிய சந்தான கோபாலன். முதல் முறை இவ்வளவு பெரிய சந்தான கோபாலனை பார்க்கிறேன்!.

பட்டாபிராமன்
அதன் பக்கம் பட்டாபிராமன் சன்னதி இருக்கிறது. சுமார் 200 வருடங்களுக்கு முன் வந்த சன்னதி இது!.

சீதையைத் தேடிக் கொண்டு கடும் சினத்துடனும், துக்கத்துடனும் இராமன் இருந்த கோலம், அதனால் ஊரில் பல பிரச்சனைகள் பல வர இந்த சீதையுடன் பட்டாபி ராமன் சந்நிதி கட்டப்பட்ட பின் தான் பிரச்சனைகள் இல்லையாம்!.

சேதுக்கரை
திருப்புல்லாணியிலிருந்து நான்கு கிமீ தூரத்தில் சேதுக்கரை என்றழைக்கப்படும் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையிலிருந்து கடலை பார்க்கும் போது நமக்கு ஒரு விதமான பிரமிப்பு ஏற்படுகிறது. இந்த கடல் ராஜனுக்கு கர்வம் வந்ததில் துளிக்கூட வியப்பே இல்லை. இராமர் கோபட்ட காரணத்தாலோ என்னவோ
அலைகள் எதுவும் இல்லாமல் சேது சாதுவாக இருக்கிறது.

பெரும்பாலும், இங்கே வருபவர்கள் எல்லாம் தங்கள் பாவங்களுடன் பழைய துணிகளையும் விட்டு செல்கிறார்கள். பாவங்களை பெருமாள் பார்த்துக்கொள்கிறார், பழைய துணிகளை ஒருவர் ஆழ்கடலில் நீந்துபவர்கள் அணியும்கண்ணாடியை அணிந்துக்கொண்டு தேடி எடுக்கிறார்.

ஆஞ்சநேயர் 
கடற்கரையில் ஸ்ரீஆஞ்சநேயர் கூப்பிய கைகளுடன் தனி கோயிலில் கடலை நோக்கி காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சன்னதியிலிருந்து கடலை பார்ப்பது விவரிக்க இயலாத காட்சி.

திருப்புல்லாணியிலிருந்து ஊருக்கு திரும்பும் போது நண்பர் ’திருப்புல்லாணி ரகுவீரதயாள்’ ஸ்வாமி கூப்பிட்டு ”சின்னக் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளை சேவித்தீர்களா?” என்றார்.

”இல்லையே அது எங்கே இருக்கிறது ?”
சொன்னார்.
ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்

வண்டியை  திரு’”U”’ அடித்து ஸ்ரீநிவாசப் பெருமாளை சேவிக்க சென்றோம். கோயிலுக்கு எதிர்புறம் பெரிய ஆலமரம் அமைதியாக இருக்க கோயில் பாழடைந்து காணப்படுகிறது. நின்ற திருக்கோலத்தில் சங்கு சக்கரங்கள் இடம் வலம் மாறிக் காணப்படுகிறது. பெருமாளின் திருமேனியைச் சுற்றி வளைவாகத் திருமாலின் தசாவதாரங்கள் என்று இந்த மூர்த்தியை இந்திய அரசாங்க புதைப் பொருளாராய்ச்சி துறை பாராட்டியுள்ளார்கள்.
பாராட்டிய சிற்பம்

அகஸ்தியர் 


இன்னும் சில காலத்தில் இந்த கோயிலே புதையுண்டு போவதற்கான அறிகுறி தென்படுகிறது. இந்த கோயில் சன்னதியில் சக்கரத்தாழ்வார், விஷ்வக்ஸேனர், பக்ஷிராஜன், நம்மாழ்வார், உடையவர் என்ற பெரிய கோஷ்டியே இருக்கிறது. பெருமாள் ஸந்நிதிக்குப் பக்கம் அகத்தியர் சிலை, தீர்த்தம் உள்ளது.
ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் பின் புறம்

கோயில் இந்த நிலமையில் இருக்க சற்றுத்தொலைவில் சிகப்பு கலர் ஃபைபர் கேபிள் போடுவதற்கு தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆல மரம் - கோயிலுக்கு எதிர்புறம்

இந்த சன்னதிக்கு பக்கம் சற்று தூரத்தில் ”மட்டுக்கு அடங்கா மூனீஸ்வரர் ஆலயத்தை கடந்து செல்லும் போது அங்கே உள்ள சின்ன குளத்துக்கு பக்கத்திலு சேதுசமுத்திரக் கரையிலும் சில சிலைகளைப் பார்த்து துணுக்குற்றேன். நம் நாட்டு ஹெரிடேஜ் இது ! நாளை இவை கடத்தப்பட்டு மோடி அரசு திரும்ப கொண்டு வர வேண்டும்.
சேதுக்கரையில் சிற்பங்கள்

அட - சிற்பங்கள் தான். 

தனுஷ்னோடிக்கு டெம்போவேனில் 150/= க்கு அழைத்துச் செல்கிறார்கள். போகும் வழி எல்லாம் “ஒரு தெய்வம் தந்த பூவே” சினிமா பாட்டு நினைவுக்கு வருகிறது. ”இங்கிருந்து இலங்கை 18கிலோ மீட்டர் தூரம் தான்” என்ற நம் நாட்டின் கோடியான தனுஷ்கோடியில் பாழடைந்த போஸ்ட் ஆபீஸ், ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட ரயில் பாலம், ராமர் பாலம் கட்டிய மிதக்கும் கல் எல்லாம் பார்த்துவிட்டு வரும் போது அங்கே ஓர் குடிசையின் உள்ளே போர்ட்டபிள் டிவிடி பிளேயரில் இளைய தளபதி விஜய் யாருக்கோ சவால் விட்டுக்கொண்டு இருந்தார். வெளியே  இந்தியாவின் கோடியிலும் ஒருவர் முப்பது ரூபாய் இளநீரை பேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
தனுஷ்கோடி போகும் பாதை 

பாம்பன் பாலத்திலிருந்து கீழே பார்த்தால் சமுத்திர தண்ணீர் முழுக்க ராமர் கலராக காட்சி அளிக்கிறது.

பாலத்தில் ரயில் 

”வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த” என்று பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் வில்லால் இலங்கையையே கலக்கமடித்த அம்புகளை ஏவிய ராமர் பின்னே சென்றுவிட்டது என் நெஞ்சம் அது மீண்டும் வரும் வரை யார் பழித்தாலும், ஏசினாலும், அவன் பொய் வார்த்தையை கேட்டுக்கொண்டு இருப்பேன் என்கிறாள் பரகால நாயகியாக. நமக்கும் அதே எண்ணம் ஏற்படுகிறது.

தனுஷ்கோடி படங்கள் 


குடிசையில் விஜய் படம். 


பிகு:
ஆழ்வார்கள் மங்களாசனம் தவிர, ஸ்ரீ ஆளவந்தார், வேதாந்த தேசிகன் போன்றவர்கள் இந்த ஸ்தலத்தை குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இந்த ஸ்தலத்தில் பெரியநம்பிகள் வாசம் செய்துள்ளார்.  ஆளவந்தார் குமாரர் தெய்வத்துக்கரசு நம்பி இங்கேயே வாழ்ந்து திருநாடு ஏகினார் என்ற தகவலும் உண்டு. மணவாள மாமுனி அவதார ஸ்தலம் சிக்கல் கடாரம் திருப்புல்லாணியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது.அடுத்த முறை சென்று சேவிக்க வேண்டும்.


சக்கர தீர்த்தம் ஒரு சிறுகுறிப்பு:

சக்கர தீர்த்தம் இன்றைய நிலை
கோயிலுக்கு வெளியே ஐந்து ஏக்க சதுர வடிவில் விரிந்து இருக்கும் புஷ்கரணிக்கு சக்கர தீர்த்தம் என்ற பெயர். தற்கால வரலாறு ஒன்றும் இருக்கிறது. நிச்சயம் எல்லோரும் படிக்க வேண்டும்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த புஷ்கரணி ஒரு சின்ன குட்டையாக, சேறும் சகதியுமாக, பக்கத்தில் இருக்கும் கடல் நீரைக் காட்டிலும் உப்பாக இருந்தது. நீர் நிறம் சில சமயம் சிகப்பாக மாறும்,  அப்போது வியாதிகள் பெருகுவதற்கான அறிகுறி!. இதே குட்டையில் சில சமயம் தாங்க முடியாத துர் நாற்றம் கிளம்பும் அது பெரு மழை பெய்வதற்கான வானிலை அறிக்கை.

கடுமையான வயிற்று நோய்களுக்கு அருமையான மருந்து என்று கரையில் தானக விளையும் உப்பை வடதேசத்திலிருந்து வரும் ‘லாட சந்யாசிகள்’ சித்ரா பௌர்ணமி சமயத்தில் சேகரித்து செல்வார்கள்.

பின் நோக்கி ஸ்தல புராண காலத்துக்கு சென்றால் இங்கே மாலி, சுமாலி என்ற அசுரர்களை விஷ்ணு தன் சக்ராயுதத்தை கொண்டு வீழ்த்த,  சக்கரத்தாழ்வான் இத்திருகுளத்தில் தன் மாசடைந்த திருமேனியை நீராடிப் போக்கிக்கொண்டார் அதனால் இந்த குளத்துக்கு பெயர் சகக்ர தீர்த்தம். பின்பு ராமரே இந்த குளத்தில் நீராடி ஜெகந்நாதனை வழிப்பட்டதால் இந்த குளத்தில் குளித்தால் சகல நன்மைகளையும் பெருவார்கள் என்று அருளினார்.

1993 வரை சிறு குட்டையாக இருந்த இந்த தீர்த்தத்தை ஒரு சிறு தெப்பக்குளமாக அமைத்துத் தருவதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு கிருஷ்ணன் (ஸ்ரீ அஹோபில மடம் சிஷ்யரும்கூட) வேலையைத் துவக்கினார். அப்படித் தோண்டும் போது படிகள் ஒவ்வொன்றாக தென்பட்டு,  கிட்டதட்ட 27 படிகள் காட்சி கொடுக்க அன்றைய முதல்வரிடம்(அம்மா) சொல்லித் திட்டத்தையே மாற்றி முழு அளவில் வேலை நடந்தது. பல ஆண்டுகளாக மண்ணையும் குப்பையை கொட்டி பாழாகியிருந்த ராமர் நீராடிய குளத்தை சீராக்கி பிரமிக்க வைத்தார் கிருஷ்ணன்.

குளம் சீரானதே தவிர அதில் மழை நீர் மிகவும் குறைவாகவே நிரம்பியது. ஊரில் தண்ணீர் கஷ்டம் வேறு. அப்படியும் 1996ல் ஸ்ரீமத் ஆண்டவன் வந்திருந்தபோது அவர்தான் இங்கு முதலில் நீராடினார்.

பெரியதிருமொழியில் திருமங்கை ஆழ்வார் ”பொன்னங்கழிக்கானல்” என்று அழைக்கபட்ட ஓடை ஒன்று இந்த ஊருக்கு வெளியே இன்றும் இருக்கிறது.
சேமிக்காமல் அதிகம் செலவு செய்து போண்டியானவன் போல், மழைக் காலத்தில் அதில் தண்ணீர் வெள்ளமாய் பெருகி கடலில் கலந்து, பின் வறண்டு கிடக்கும்.

முன்னாள் அமைச்சர் திரு தமிழ்க்குடிமகன் இங்கு வந்திருந்தபோது இந்த ஓடையிலிருந்து வாய்க்கால் வெட்டி திருக்குளத்தில் சேர்த்தால் பிரச்சினை குறையும் என்று கோரினார்கள் ஊர் மக்கள். அவரும் உத்தரவிட்டார். ஆனால் அரசு இயந்திரங்கள் வழக்கம் போல மக்கர் செய்தது.  1997லிருந்து 2002 வரை ஒன்றும் நடக்கவில்லை.

2002ல் கோவில் சம்ப்ரோக்ஷணம் வந்தது, வழக்கம் போல் தண்ணீர் கஷ்டம் நிலவ. மீண்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால் (இயற்பியல்) விதி விளையாடியது; ”water always flows from higher level to lower level” என்ற விதியின் படி ஓடை கீழ் மட்டத்திலும் ஊரில் உள்ள குளம் 12 அடி உயர மேல் மட்டத்திலும் இருந்தால் தண்ணீர் குளத்துக்கு வர முடியவில்லை.

ஓடையிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்த போது கீழக்கரை முஸ்லீம் ஒருவரின் வயல் வழியாக வரவேண்டிய சூழ்நிலை. அந்த முஸ்லீம் அன்பர் “ஊருக்கு நன்மை என்றால் வயல் முழுவதும் பாழானாலும் பரவாயில்லை” என்று பெருந்தன்மையோடு சம்மதித்தார். ஆனால் அப்படியும் நேரடியாக குளத்துக்கு தண்ணீரை கொண்டு வர முடியவில்லை. ஊருக்கு வெளியே ஒரு சம்ப் ( தமிழில் தொட்டி ) கட்டி, அதில் சேகரித்து பின் அதை ஒரு மோட்டார் மூலம் இறைத்து சக்ர தீர்த்ததுக்கு முன் இருக்கும் மதகு குட்டம் என்னும் 13 ஏக்கர் ஊரணி ( ஊரின் அன்றாட தேவைக்கான நீர் ஆதாரம் !) நிறைந்து பின் அதிலிருந்து சக்ர தீர்த்தம் குளம் நிரம்பியது!

2002பின் இந்த குளங்கள் இரண்டும் வற்றவில்லை. மழை நீரால் நிரம்புகிறது. கூடவே அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளிலும் கிணறுகள் வற்றாமல் இருக்கிறது. ஊரில் எங்கு கிணறு தோண்டினாலும் நல்ல தண்ணீர் கிடைத்து ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் அடியோடு இல்லை. இந்தியாவிலேயே சிறந்த மழைநீர் சேகரிப்பு பரிசு இந்த ஊராட்சிக்குக் கிடைத்ததில் வியப்பு ஏதும் இல்லை.

இந்த வேலை எல்லாம் நடந்துக்கொண்டு இருந்த போது அந்த ஊரில் 102 வயது பெரியவர் - இவ்வளாவு படிகளா ? நான் சின்ன வயசில் கூட இதை எல்லாம் பார்த்ததில்லையே என்றாராம். திருப்புல்லாணி பற்றி ”புல்லானி அந்த்தாதி” இருக்கிறது அதில் இந்த குளத்தின் படிகளை பற்றிய குறிப்பு 82ஆம் பாடலில் வருகிறது!.

கோயிலுக்கு பக்கம் குளங்கள் எல்லாம் மழை நீர் சேகரிப்பு திட்டங்களே. அவைகளை போற்றி பாதுக்காக வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

சக்கர தீர்த்தம் என்ற பெயர் கொண்ட இந்த குளத்துக்கு “சக்கரை தீர்த்தம்” என்ற பெயர் பலகை தவறாக இருந்தாலும் பொருத்தமாகவே இருக்கிறது.

கடைசி தகவல்:  இவ்வளாவு தண்ணீர் இருந்தும், லாரித் தண்ணீர் வாங்குவதையும் மக்கள் நிறுத்தவில்லை. பழைய பழக்கம் !

இந்த பதிவில் அடியேனுக்கு பல தகவல்கள் கொடுத்து உதவியது நண்பர் திரு திருப்புல்லாணி ரகுவீரதயாள் ஸ்வாமி அவருக்கு என் நன்றிகள்.

படங்கள்: சில படங்கள் இணையத்திலிருந்து எடுத்தது; மற்றவை அடியேன் எடுத்தது.

Wednesday, August 17, 2016

நோ நான்சென்ஸ் டாக்டர்

இரண்டு வருஷம் முன்வேலை நிமித்தமாக, சென்னைக்கு வந்தவுடன் தொண்டை கட்டிக் கொண்டு, ஜுரம் வந்தது. தி.நகரில் பதினைந்து வருஷத்துக்கு முன் எனக்குப் பழக்கப்பட்ட டாக்டர் விஜயராகவனிடம் சென்றேன். கிளினிக் பெரிதாக மாறவில்லை, காத்துக்கொண்டு இருந்தபோது, பலகையில் இரண்டு வரி எழுதியிருந்ததைப் படித்து ஆச்சர்யப்பட்டேன்.

‘Sulphonylurea போன்ற டயபட்டீஸ் மருந்துகளைக் கொண்டு வரும் மெடிக்கல் ரெப்களுக்கு இங்கே அனுமதி இல்லை.’ அடுத்த வரி இன்னும் ஆச்சர்யத்தைக் கொடுத்தது. உங்களுக்கு டயபட்டீஸ் இருக்கா அதை ரிவர்ஸ் செய்யலாம்!”

டாக்டரிடம் விசாரித்தேன். ஞாயிற்றுக்கிழமை இதைப்பற்றிப் பேசுவேன். வந்து கேளுங்களேன்” என்றார்.

ஞாயிறு அவர் பேச்சைக் கேட்டபோது தெளிவு பிறந்தது. வாழ்நாள் முழுக்க மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கூற்றை முழுவதும் நிராகரித்தார்.

மேலும் – தினமும் காலை பிரட் சாப்பிடுங்கள், இரவு சப்பாத்தி சாப்பிடுங்கள், நிறையப் பழங்கள் எடுத்துக்கோங்க, வாக்கிங் போங்க, தினமும் ஆறு வேளை சாப்பிடுங்கள் போன்ற எல்லாவற்றையும் நிராகரித்தார்.

அவருடைய இரண்டு மணி நேரம் பேச்சின் சாராம்சம் இதுதான். மனிதன் நூறு வயது வாழப் பிறந்தவன். டயபடீஸ், ரத்த அழுத்தம், தைராய்ட் போன்றவை மாறிவரும் வாழ்க்கை முறையால் நம் உடல் நமக்குச் சொல்லும் எச்சரிக்கை சமிக்ஞைகள். டைப்-2 டயபடீஸ் போதுமான அளவு இன்சுலினைச் சுரப்பதில்லை என்று தப்பான ஆலோசனையின் பெயரில் மாத்திரைகள் கொடுக்கிறார்கள். இது முழுவதும் தப்பு. அதிக இன்சுலின்தான் பிரச்னையே !

Monday, August 15, 2016

ஆசார டயட்


ஆசாரமாக இருந்தாலே பல வியாதிகள் நம்மை அண்டாது.
ஆசாரம் இருப்பது ஏதோ ஐயர், ஐயங்கார் சமாச்சாரம் என்று ஒதுக்கிவிடுகிறோம்.

கல்கி கட்டுரையைப் படித்துவிட்டு பலர் ”என்ன டயட் சார்?”  என்று கேட்கிறார்கள்.

டயட் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முடிந்தவரை ஆசாரமாக இருப்பதும். ஆசாரமாக இருந்தால் உடல், மனம் அழுக்காகாமல் இருக்கும்.

ஏகாதசி அன்று முக்கியமான கோயிலின் முக்கியமான அர்ச்சகர் வெஜிடபுள் பிரியாணி பச்சை வெங்காய பச்சடியுடன்சாப்பிடுவதை பார்த்தேன். அதே போல யாத்திரையில் குடுமி வைத்த வைதீகர் முட்டை ஆம்லட் போடும் கடையில் காலில் செருப்புடன் டீ போட்டுக்கொண்டு இருந்தவருடன் டீ வாங்கிக் குடித்தார்,  தன் மடியான வெள்ளி டம்பிளரில் !

Friday, August 5, 2016

காஞ்சிபுரத்து அணில்கள்

காஞ்சிபுரம் 
குரங்குகள் மலையை நூக்கக்
குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற
சலம் இலா அணிலும் போலேன்

ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட குரங்குகள் அணை போடக் கல்லைத் தூக்கிப் போகின்றன. அதைப் பார்த்த அணில்கள் மலையைத் தூக்க இயலாத அணில் கூட்டம் கடலில் உள்ளே சென்று தங்கள் உடலை ஈரமாக்கிப் பின் அந்த ஈர உடலில் மண்ணைப் புரட்டிக்கொண்டு ஓடிச் சென்று மண்ணை உதறி அணைகட்ட உதவுகின்றன.

நான் அந்த அணில் போல் நான் இல்லையே என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலையில் வருத்தப்படுகிறார். சிலரைப் பார்க்கும் போது நமக்கு அந்த எண்ணம் ஏற்படுகிறது. அடியேனுக்கு இந்த மாதிரி ஓர் அனுபவம் காஞ்சிபுரத்தில் ஏற்பட்டது. அதைச் சொல்லும் முன் என் பயணக் குறிப்பு சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

விமானம், புஷ்கரணி
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம், பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சிபுரம். ஆழ்வார்களைத் தவிர, வேதாந்த தேசிகன் ( திராமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி ), கூரத்தாழ்வான் (வரதராஜ ஸ்தவம்), ஸ்ரீமணவாள மாமுனிகள் (ஸ்ரீ தேவராஜ மங்களம், ஸ்ரீகாஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம்) என்று பாடியுள்ளார்கள்.

திருக்கச்சி நம்பிகள் தேவராஜ அஷ்டகம் பாடியதோடு அல்லாமல், அவருக்கு ஆலவட்டக் கைங்கரியம் (விசிறுதல்) செய்து, அருளாளனிடம் நம் உடையவருக்கு "ஆறு வார்த்தைகள்' பெற்றுத்தந்தார். திருகச்சி நம்பிகளுக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்ய நியமித்தவர் ஸ்ரீ ஆளவந்தார்.

கருமாணிக்க சன்னதி
அடியேன் கோயிலுக்குள் சென்ற போது கருமணிக்க சன்னதியை தேடிச் சென்றேன். அங்கே தான் ஸ்ரீஆளவந்தார் முதன்முதலில் இளையாழ்வாரைப் பார்த்து “ஆம் முதல்வன் இவன்” என்று கடாக்ஷித்த இடம். அதைப் பற்றி சுருக்கமாக - ஒரு முறை ஸ்ரீஆளவந்தார் பேரருளாளனையும், பெருந் தேவி தாயாரையும் சேவித்துக் கொண்டு பிரதட்சணமாக வரும்போது, அங்கே யாதவ பிரகாசர் தன்னுடைய சிஷ்யர்களுடன் பிரதட்சணமாக போக ஸ்ரீஆளவந்தார் திருக்கச்சி நம்பிகளை நோக்கி “இவர்களில் இளையாழ்வார் யார் ?” என்று கேட்டார். அதற்கு திருக்கசச்சி நம்பிகள் ”அதோ சிவந்த நெடிய திருவடிகள், அகன்ற திருமார்பு, அழகிய திருவாயுடன், திருமண் சாற்றிக்கொண்டு பொலிவுடன் நடுவே இருக்கிறார்” என்று காட்டியருள, ஸ்ரீஆளவந்தாரும் ‘ஆம் முதல்வன் இவன்’ குளிரக்கடாக்ஷித்து அருளினார். ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆசாரியன் ஒரு கண்ணால் நம்மை நோக்கினாலே அதற்கு ஈடு, இணை எதுவும் கிடையாது என்பர். இங்கே ஸ்ரீஆளவந்தார் ஸ்ரீராமானுஜரை தன் இரண்டு கண்களால் நோக்கி கடாக்ஷித்தார் என்றால் ?

Monday, August 1, 2016

கண்களை திறக்கும் மூடிகள் !

யானை வாகனத்துடன்
திரு சுந்தரராஜன்
Recycle' என்ற வார்த்தைக்கு நச்சென்ற ஒரு தமிழ் வார்த்தை இல்லை.மறுசுழற்சி, மறுபயன்பாடு என்ற வார்த்தைகள் இருந்தாலும், அவை உபயோகித்தால் உடனே நம் மனதுக்குச் சட்டென்று அதன் பொருள் உறைப்பதில்லை.

’கபாலிடா’ போன்ற ஒரு வார்த்தையை நேற்று காஞ்சிபுரத்தில் இதற்கு கண்டுபிடித்தேன். அந்த வார்த்தை ‘’சுந்தரராஜன்’
அவர் வீட்டுக்குச் சென்று உட்கார்ந்த போது மாடிப்படியின் மேல் காஞ்சி தேவ பெருமாளும் தாயாரும் காட்சி தந்தார்கள். அடியேனின் பக்தி பெருமாள் தாயாருடன் காட்சி தரும் அளவிற்கு பிரமாதம் இல்லையே எப்படி என்று நினைத்து அவரிடம்

”மேலே பெருமாள்... “

“மூலவர் தான் மேலே போய் பாருங்க”

தேவராஜ பெருமாள் படிக்கட்டு மாதிரியே ஏறிக் கிட்ட சென்ற போது பல ஆச்சரியங்கள் கத்துக்கொண்டு இருந்தது.

தாயார் முகம் ஏதோ பழைய தண்ணி மக். பெருமாள் கீரிடம் ஏதோ பழைய பிளாஸ்டிக் கூடை, கை ஏதோ பழைய பைப் ( இனி நான் சொல்ல போகும் எல்லாவற்றிலும்‘பழைய’ என்ற வார்த்தையை சேர்த்துப் படிக்கவும் ).
கண்களுக்கு மூடிகள், துணிகள், துணி உலர்த்தும் கம்பி, அட்டைப் பெட்டி என்று ஒரு மினி வேஸ்ட்’ பேப்பர் கடையே அதில் இருந்தது.

இன்னொரு அறைக்குச் சென்ற போது அங்கே மேலும் பல ஆச்சரியங்கள் காத்துக்கொண்டு இருந்தது.

சின்ன குட்டி யானை, உற்சவ மூர்த்தி என்று எல்லாம் லைப் சைஸ் மாடல்கள். இந்த முறை உஷாராக
“இதை எல்லாம் எதை வைத்துச் செய்தீர்கள்?” என்றேன்

உற்சவர் 
மெழுகு, எம்சீல் சேர்த்து அவர் சொன்னவை எல்லாம் காயிலான் கடை சமாச்சாரம். சங்கு, சக்கிரம் ஏதோ சின்ன பிளேட் என்றார். உற்றுப்பார்த்தேன்.
பக்கத்தில் சீதையுடன் ராமர், லக்‌ஷ்மணர் ... “சார் இது..” என்று ஆரம்பிக்கும் முன் அவரே அதற்கும் பதில் சொன்னார் இது முழுக்க தர்மோகால்.
ஹாலில் ஓரத்தில் ஸ்டூல் சில அடுக்கிவைக்கப்பட்டு இருந்தது.
“வீட்டில் பெயிண்டிங் வேலை நடக்கிறது போல” என்றேன்.
இல்லை குதிரை வாகனம் செய்துகொண்டு இருக்கிறேன்.

மிரண்டு போனேன். அவரே தொடர்ந்தார்.

குதிரை வாகனம் In Making
”காஞ்சியில் நடக்கும் பிரம்மோற்சவ விழாவில் வரதராஜ பெருமாள் பல வாகனங்களில் பவனி வருவார். நாமளும் அதே மாதிரி ஒரு வாகனத்தைச் செய்து பார்க்கலாம் என்று சில வருஷம் முன் முடிவு செய்தேன். பிறகு அதில் உற்சவரை ஏளப் பண்ணிவிடுவேன். காஞ்சி புரத்தில் இருக்கும் வாகனம் என்ன அளவோ அதே அளாவு - லைப் சைஸ்”.

“கருட வாகனம், அனுமார் வாகனம், குதிரை, ஹம்ச வானகம் எல்லாம் முடிந்துவிட்டது. இந்த வருஷம் குதிரை வாகனம் செப்டம்பர் 30 ரெடியாகிவிடும் வந்து பாருங்கோ” என்றார்.

’கீசர்’ அட்டைப் பெட்டி ஒன்று கிடைத்தது அது தான் மூஞ்சி என்று காண்பித்தார். அதில் இரண்டு கண்களையும் ’மூடிகளால்’ திறந்துகொண்டு இருந்தது.

“அந்த குடை?”

“அது வெறும் அட்டை, துணி” என்றார்.

போய்விட்டு வருகிறேன் என்று வெளியே வந்தேன். அவர்கள் இல்லத்தின் வெளியே ஒரு உடைந்த தூணில் ஆஞ்சநேயர். வழக்கமாக மக்கள் அதன் மீது வெண்ணெய் தடவி பிசுக்காகியுள்ளார்கள்.

“இது .. “ என்று என் கேள்வியை மீண்டும் கேட்டேன்.

ஆஞ்சநேயர் 
“ஓ. அதுவா.. பழைய காலத்து தூண் என்று நினைக்கிறேன். கோயில் புனர்நிர்மாணம் செய்யும் போது அதை அகற்றியுள்ளார்கள் வீதியோரத்தில் கிடந்தது, மக்கள் அதன் மீது வெற்றிலை துப்பிக்கொண்டு இருந்தார்கள். கல்லை ஒருநாள் திருப்பிப் பார்த்தேன். ஆஞ்சநேயர் சிலை இருந்தது. சுத்தம் செய்து ஆளை வைத்து வீட்டு முன் நிற்க வைத்தேன். இன்று போவோர் வருவோர் எல்லாம் அதைச் சேவித்துவிட்டு போகிறார்கள். சிலர் தேங்காய் கூட உடைக்கிறார்கள்.

ஒரு சின்ன அகல் விளக்கு காற்றிலும் எறிந்துகொண்டு இருந்தது.
இதை எல்லாம் செய்யும் திரு ‘’சுந்தரராஜனின் வயது வெறும் 84.
கீதையில் ”அர்ஜுனா நான் எல்லா இடத்திலும் வியாபித்திருக்கிறேன்” என்கிறான் கண்ணன். அது நிஜம் தான்.

Tuesday, July 19, 2016

பனை மரம்

குணசீலத்தில் நுங்கு 
பனை மரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களில் இருக்கிறதா என்று தேட வேண்டும். ரயில், பேருந்து பயணங்களில் புறம்போக்கு நிலங்களில் பனை மரங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். நுங்கு வாங்கும் போது பனை இலை வாசனையுடன் முன்பு எல்லாம் நுங்கு கட்டித் தருவார்கள். இப்போது எல்லாம் கேரி பேக் தான். ஆனால் இந்த வருடம் குணசீலத்தில் ஒரு தாத்தா பனை ஓலையில் எங்களுக்கு நுங்கு கட்டித்தந்தார்.பனை மரம் பற்றிய குறிப்பு சங்க இலக்கியங்களிலும், ஆழ்வார் பாடல்களிலும் இருக்கிறது ரயில், பேருந்து பயணங்களில் புறம்போக்கு நிலங்களில் பனை மரங்கள் வளர்ந்திருப்பதைப் பார்க்கலாம். நுங்கு வாங்கும் போது பனை இலை வாசனையுடன் முன்பு எல்லாம் நுங்கு கட்டித் தருவார்கள். இப்போது எல்லாம் கேரி பேக் தான். ஆனால் இந்த வருடம் குணசீலத்தில் ஒரு தாத்தா பனை ஓலையில் எங்களுக்கு நுங்கு கட்டித்தந்தார்.

மடல் இலக்கியத்தில் மடல் ஏறுவோர் பனைஓலையைப் பயன்படுத்துவர் என்று இருக்கிறது. 
பனை மரத்தின் கிளையின் இரண்டு பக்கங்களிலும் கூரிய முள் போன்ற பாகங்களைக் கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின் கிளையால் குதிரை போன்ற உருவம் செய்து அதன் மேல் காதல் கொண்ட தலைவன் ஏறி அமர்ந்திருப்பான். இதன் கீழ் உருளை பொருத்தப்பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வதை மடல் என்பர். இது மேல் தலைவன் ஏறுவது மடல் ஏறுதல் என்பதாகும். இதை செய்தால் தலைவன் படும் துன்பம் தலைவிக்கு தெரியவரும். இந்த காலத்தில் காதல் தோல்வியால் தாடி வைத்துக்கொள்வது மாதிரி. 

பலராமன், வீடுமன் ஆகியோர் பனைக் கொடியை உடையோராக சித்தரிக்கப்பாடுள்ளார்கள். பனை எனும் சொல் அளவின் பெருக்கத்தைக் குறிக்கும் சொல்லாக திருவள்ளூவர் பயன்படுத்தியுள்ளார். 


தினைத் துணை நன்றி செயினும், பனைத் துணையாகக்
கொள்வர்-பயன் தெரிவார்


செய்யப்பட்ட உதவி சின்னதாக இருந்தாலும்,, அதன் பயனை உணர்ந்தவர் அதனைப் பனை மரம் அளாவு போன்றது என்கிறார். திருமழிசைப் பிரான் திருசந்த திருசந்த விருத்தத்தம் ( 813 ) பாடலில் இருக்கு என்றார்.
கரண்டம் ஆடு பொய்கையுள் கரும் பனைப் பெரும் பழம்
புரண்டு வீழ வாளை பாய் குறுங்குடி நெடுந்தகாய்
திரண்ட தோள்-இரணியன் சினங் கொள் ஆகம் ஒன்றையும் இரண்டு கூறு செய்து உகந்த சிங்கம் என்பது உன்னையே
நீர்க் காக்கைகள் உலாவும் பொய்கையில் கரிய பனம் பழங்கள் விழுவும், வாளை மீன்கள் அவற்றை நீர்க் காக்கையாகக் கருதி விழுங்கப் பாயும் திருக்குறுங்குடியில் எழுந்த பெரியோனே! ஆளரியாய்த் தேன்றி இரணியனை இரு கூறாக்கியது நீ தானே என்கிறார்.
மேலும் பனைமரம் மேலும் நம்மாழ்வார் திருவாய்மொழி ( 3010, 4-1-4 ) வருகிறது. ”பனைத்தாள் மதகளிறு அட்டவன் பாதம் பணிமினோ” பனைமரம் போன்ற கால்களை உடைய மதம்பொருந்திய யானையைக் கொன்ற கண்ணன் திருவடிகளை வணங்குங்கள் என்கிறார்.
அதே போல திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி ( 1876, 10-3-9 )
“ஏடு ஒத்து ஏந்தும் நீள் இலைவேல் எங்கள் இராவணனார் ஒடிப் போனார்” இங்கு ஏடு பனைஓலையை குறிக்கிறது. வாயு வேகத்தில் வந்த இராமபாணத்தால், பனை ஓலை காற்றில் பறப்பது போன்று, இராவணனின் வேல் ஆயிற்று என்கிறார் ஆழ்வார்

அபூர்வ மரம்! 
போன வருடம் டைம்ஸ் நாளிதழில் திண்டிவனம் பக்கம் ஒரு அபூர்வமான பனை மரம் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தியைப் படித்தேன். பனை மரம் பூத்து குலுங்கும் படம் போட்டிருந்தார்கள். இந்த அரிய வகையான பனை மரத்தின் விதையைப் பாதுகாத்து அதை நட்டு வளர்க்கத் தோட்டக்கலை முடிவு செய்திருக்கிறது என்றும் படித்தேன். இந்தப் பனை மரம் அதன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூத்து காய்க்கும் என்பது வியப்பளிக்கும் செய்தி. 120 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் பூக்கும் என்றும் இணைத்தில் படித்த போது தெரிந்தது.


ஆழ்வார் பாடல்களில் பனை மரம் பற்றிய குறிப்பு இல்லாது போனாலும் நாத முனி காலத்தில் ஆழ்வார் பாடல்களை ’பட்டோலைப்படுத்த’ இந்தப் பனை மரத்தின் ஓலைகள் பயன் படுத்தப்பட்டது. இன்னும் கூட பழைய ஓலைகளைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.

பனை ஓலைச்சுவடிகள் - மேல்கோட்டை
திரு.அரங்கராஜன் ஸ்வாமிகளிடம் பேசிக்கொண்டு இருந்த போது( நம்பிள்ளை உரைத்திறன் என்ற தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றவர்). படி எடுக்கும் போது ஏற்படும் தப்புக்கள் பற்றியும் அவர் சொல்லும் குறிப்புகள் சுவாரசியமானவை. பனை ஓலை சுமார் நூறு வருடம் தாக்குப்பிடிக்கும். குளிர் பிரதேசங்களில், நேபாளம், இமயமலை போன்ற இடங்களில் மேலும் சில வருஷம் இருக்கலாம். நம் ஆசாரியர்கள் பலர் எழுதியது சுவையாக இருக்க அதைக் கரையான் தான் சாப்பிட்டது என்று படித்திருக்கிறோம்.

இந்தச் சித்திரை மாதம் மேல்கோட்டையில் Academy of Sanskrit Research விஜயம் செய்த போது முதல் முறையாகப் பல ஓலைச்சுவடிகளைக் கையில் தொட்டுப் பார்த்தேன். எல்லா ஓலைச்சுவடிகளையும் பாதுகாத்து வைத்துள்ளார்கள். அதில் 400 வருடம் பழமையான நம்மாழ்வார் திருவாய்மொழியும் அடங்கும். ஓவியங்களுடன் ! வாழைமட்டை அளவு ஒரு கட்டு ஓலைச்சுவடியில் 1.75லட்சம் மஹாபாரத ஸ்லோகம் பார்க்க முடிந்தது. எல்லாவற்றையும் தைலம் தடவி பாதுகாக்கிறார்கள். பூச்சி வராமல் இருக்கப் பாம்பு உரித்துப் போட்ட தோலை அதன் மீது போர்த்தியிருப்பதை பார்த்தேன்.

ராமானுஜர் உபயோகித்த கூடை
மேல்கோட்டை ராமானுஜர் சன்னதியை நிர்வகிப்பவரின் வீட்டில் சில வருடங்கள் முன் தங்கியிருந்த போது அவர்கள் வீட்டுக் கோவில் ஆழ்வார் சன்னதியில் (வீட்டின் பெருமாள் அறை) ராமானுஜர் மடி மீது அமர்ந்த செல்வப்பிள்ளை விக்கிரகத்தைப் பார்க்க நேர்ந்தது. இவர்களின் இல்லத்தில்

இ-ரா-மா-நு-ச-ன் - கையெழுத்து !
ராமானுஜர் தன் கைப்பட எழுதிக் கொடுத்த ஓலைச்சுவடியில் 'இராமானுசன்' என்ற கையெழுத்து ஓலை ஒன்று இருக்கிறது. மேல்கோட்டையிலிருந்து 20 கிமீ தூரத்தில் இருக்கும் தொண்டனூர் கோயிலில் இராமானுசர் உபயோகப்படுத்திய ஓலைப்பெட்டியை இன்றும் பார்க்கலாம்.

அடுத்த முறை காரிலோ, ரயிலிலோ போகும் போது பனை மரத்தைப் பார்த்தால் சாதாரணமாக நினைக்காதீர்கள்! நமக்குப் பல பொக்கிஷங்களை அது தந்திருக்கிறது.

Wednesday, July 13, 2016

மாப்பிளையை வரவேற்ற மாமனார் !

ஒன்றாம் வகுப்புப் படிக்கும் போது எனக்கு ஆழ்வார்கள் அறிமுகமானார்கள். அந்த வயதில், திருப்பாவை முதல் இரண்டு பாடலும், கடைசி இரண்டு பாடலும் மனனம். அப்பாவுடன் சைக்கிளின் முன்சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் போது, திருப்பாவை, ஆழ்வார்களின் திருநட்சத்திரம், அவர்களுடைய அவதார ஸ்தலம், அவர்களைப் பற்றிய கதைகள் எல்லாம் சொல்லிக்கொண்டே வருவார்.

கல்லூரி காலத்தில் ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ள அழகு, பக்தி பற்றிய பேச்சு, அப்பாவுடன் அவதார ஸ்தல விஜயம் என ஆழ்வார்கள் என் கூடவே பயனித்தார்கள்.

ஆழ்வார்கள் கோஷ்டி
ஸ்ரீரங்கத்தில் ஒரு முறை (25 வருடம் முன்) வைகுண்ட ஏகாதசி பகல்பத்து, ராப்பத்து உற்சவத்தில் எல்லா ஆழ்வார்களையும் வரிசையாகப் பார்த்த போது அதுபோலவே வீட்டிலும் சின்னதாக மாடல் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை வந்தது. அதே மாதிரி மாடல் செய்ய, கூகிள் இல்லாத காலத்தில், ஆழ்வார்கள் அவதார ஸ்தலத்தில் உள்ள உற்சவர் படங்களை சேகரிக்கத் தொடங்கினேன். கிட்டதட்ட 16 வருடங்கள் முன்பிருந்தே ஆழ்வார்களின் அவதார ஸ்தலத்தில் உள்ளது போலவே சின்னதாக யார் செய்து கொடுப்பார்கள் என்று தேடத் தொடங்கினேன்.

பல இடங்களில் விசாரித்தபோது
“இவ்வளவு சின்னதா அதே மாதிரி செய்ய இப்ப ஆள் கிடையாது” அல்லது
”சார் இவ்வளவு சின்னதா செய்யும்போது நுட்பமா வராது” என்பார்கள். கும்பகோணம் பாத்திரக்கடைகளில் அழுக்கு படிந்த ஏற்கனவே செய்து வைத்த ’ஆழ்வார் செட்’டை காண்பிப்பார்கள்.
வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் செய்பவர்கள் “ஃபோட்டோவில் இருக்கறதைவிட பிரமாதமா செஞ்சுடலாம் சார் அட்வான்ஸ் கொடுங்க” என்பார்கள்.

2013ல் மலையாள திவ்ய தேச யாத்திரையின் போது எனது இந்த நீண்ட நாள் கனவு நனவாக வாய்ப்புக் கிடைத்தது. சொல்கிறேன்...

யாத்திரையின் கடைசி ஒரு மணி நேரம் எல்லோரும் தத்தம் ஸ்டாபில் இறங்கிக்கொண்டு இருந்தார்கள். பேருந்தே காலியாக இருந்தது. பேச்சு துணைக்கு ஒருவர் என் பக்கம் வந்து உட்கார்ந்தார். அவரிடம் வைகுண்ட ஏகாதசி பற்றி பேசிக்கொண்டு இருந்த போது ஆழ்வார்கள் பற்றிய என் கனவை அவரிடம் சொன்னேன்.

”எனக்கு யாரையும் தெரியாது, ஆனால் என் கூட வங்கியில் பணி செய்த ‘தேனுகா’ ஸ்ரீநிவாசன் கும்பகோணத்தில் இருக்கிறார். அவர் ஓவியம், சிற்பங்கள் மற்றும் கலை விமர்சகர். அவருக்கு யாரையாவது தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கும்” என்று அவர் தொலைப்பேசி எண்ணை என்னிடம் தந்தார்.

சில வாரங்கள் கழித்து, ஒரு நாள் காலை தேனுகாவை தொலைப்பேசியில் அழைத்தேன். என் விருப்பத்தை சொன்னேன்.
“இப்ப இது மாதிரி செய்ய யாரும் இல்லை, இருந்தாலும் நிறைய வேலை, பொறுமை வேண்டும். செய்வார்களா என்று தெரியாது.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என்றார்.

ஒரு மாதம் கழித்து திரும்பவும் அவருடன் தொலைப்பேசினேன் “உங்களுக்கு வித்தியாசங்கர் ஸ்தபதி தெரியுமா?” என்றார்.

“தெரியாது”

”நீங்கள் கேட்பது மாதிரி அவர்தான் செய்ய முடியும், இப்ப உள்ளவர்களுக்கு அந்த நுணுக்கம் எல்லாம் தெரியாது, எல்லாம் கமர்ஷியல் ஆகிவிட்டது”

”அவரிடம் கேட்க முடியுமா ?”

”அவருக்கு வயது ஆகிவிட்டது, தவிர அவர் ரொம்ப பிஸியா எங்காவது சுற்றிக்கொண்டு இருப்பார். இப்ப அவர் சிற்பம் எல்லாம் செய்வதில்லை. பன்னிரண்டு ஆழ்வார்கள் பெரிய வேலை, இந்த வேலை எல்லாம் எடுத்துப்பாரா என்று தெரியாது”

“கேட்டுப்பாருங்களேன்”

”சரி உங்க விருப்பத்தை அவரிடம் சொல்கிறேன். அவரை நான் வற்புறுத்த முடியாது”

ஒரு மாதம் கழித்து திரும்ப அவரிடம் கேட்டதற்கு, “சொன்னேன் அவர் யோசிக்கிறார். திரும்ப நான் அவரிடம் அதைப் பற்றி கேட்கவில்லை. விருப்பம் இருந்தால் அவரே என்னிடம் பேசுவார்”

“எதுக்கும் இன்னொரு முறை பேசிப்பாருங்களேன்”

சில வாரங்கள் கழித்து தேனுகாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்த்து. “ஸ்தபதியிடம் உங்க விருப்பத்தைச் சொன்னேன், உங்களை நேரில் பார்த்து பேசிய பிறகு முடிவு செய்வார்” என்றார்.

தேனுகா ஸ்ரீநிவாசன்
கும்பகோணம் சென்று தேனுகாவை முதல் முறை சந்தித்தேன். எளிமையான மனிதர்.  தன்னுடைய பைக்கில் சுவாமி மலைக்குப் போகும் வழியில் இருக்கும் வித்தியாசங்கர் ஸ்தபதியின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

செம்புப் பட்டைகள், சிற்பத்தின் கை, கால்கள், நவீன சிற்ப வடிவங்கள் என்று வீடு முழுக்க இறைந்து கிடந்தது.

நான்கு முழ காவி வேட்டி, தாடி, குங்குமப் பொட்டு என்று பார்க்க துறவி போலக் காட்சி அளித்தார் வித்தியாசங்கர் ஸ்தபதி.

ஸ்தபதியிடம் என் விருப்பத்தையும், நான் சேகரித்த படங்களையும் காண்பித்தேன். ஒவ்வொரு படத்தையும் அதன் லட்சணத்தையும் பார்த்து ரசிக்க ஆரம்பித்தவர், “இந்த ஆழ்வார் ராஜாவாக இருந்திருப்பார்.. நான் சொல்லுவது சரிதானே..?...இந்தச் சிற்பம் சோழர் காலத்துச் சிற்பம்.. என்ன அழகு!” என்று வியந்தோதினார். ஓர் ஆழ்வாரின் மூர்த்தியைப் பார்த்து “சில வருடங்களுக்கு முன் செய்தது.. இது பழைய சிற்பம் இல்லை” என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.

”எனக்கு நீங்கதான் செஞ்சு தரணும்” என்றேன்.


“நீங்க கேட்பது மாதிரி எல்லாம் செய்ய இப்ப ஆள் கிடையாது, இந்த வேலையை எடுத்துக்கொண்டால் தவம் போல செய்து முடிக்க வேண்டும். முன்ன மாதிரி உடம்பு ஒத்துழைக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் ஸ்ரீரங்கம் எல்லாம் போய்விட்டு வரேன். அங்கே இருக்கும் அழ்வர்களை எல்லாம் ஒரு முறை தரிசிக்கிறேன். “எனக்கு செய்யணும்னு உத்திரவு வந்தா உங்களை தேனுகா மூலம் தொடர்பு கொள்கிறேன்” என்றார்.

85 வயது வித்தியாசங்கர் ஸ்தபதி பற்றி தேனுகா கூறியது:
"வித்தியாசங்கர் பூர்வீகம் சுவாமிமலை. இவருடைய அப்பா கௌரிசங்கர் ஸ்தபதி ஸ்ரீரங்கம் கோயிலோட ஆஸ்தான ஸ்தபதி. இவருடைய தாத்தா திருவெள்ளறையின் ஆஸ்தான ஸ்தபதி.

இவருடைய தந்தை ஸ்ரீரங்கம் யானை மண்டபத்தில் கோயிலில் பட்டறை அமைத்து வேலை செய்யும் போது, இவர் அங்கே விளையாடிக்கொண்டு இருப்பார். பிறகு ஸ்ரீரங்கம் சேஷராய மண்டபத்தில் திமிரிப் பாயும் குதிரைகளின் கற்சிலையை வியந்து ரசிக்க ஆரம்பித்தார்.

இவருடைய உறவினர்கள் அனைவரும் சிற்ப நேர்த்தியறிந்த ஸ்தபதிகளாகவும், ஆகம விதிப்படி கோயில் கட்டிட வேலை செய்தும் வாழ்ந்து வருகிறார்கள். செம்பொன்னாலும், ஐம்பொன்னாலும் செய்யப்பட்ட சிலைகளோடுதான் இவர்களது வாழ்க்கை!.

பால்ய வயது ஸ்ரீரங்க சிற்பச் சூழல் வித்தியாசங்கரின் சிற்ப உலகிற்கு வழிவகுத்தது. 1962-இல் சென்னை ஓவியக் கல்லூரியில் மாணவரானார். நவீன சிற்பங்கள் இவரை வெகுவாக கவர்ந்தாலும், மரபை விட்டுவிடவில்லை.

பிறகு கும்பகோணம் ஓவியக் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பல சிற்பங்களை வடித்து, பலரை ஆச்சரியப்படுத்தினார்.

வித்தியாசங்கர் ஸ்தபதி
’சுஹாசினி’ என்னும் இவரது சிற்பம் பார்ப்பவரைச் சுண்டி இருக்கும் தன்மை கொண்டது. பல்வேறு யெளவனக் கனவுகளுடன் புன்சிரிப்பில், சாமுத்ரிகா லட்சணகளைக் கொண்ட இப்பெண் தலையணையிட்டுப் படுத்திருக்கிறாள். துண்டித்து ஒட்டி வைக்கப்பட்ட இவள் கைகள் உடலின் பாகங்களாக ஒட்டிக்கொள்வது பார்ப்போரை அதிசயிக்க வைக்கும். (இவரது சிற்பங்கள் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம் ).

மத்திய அரசின் தேசிய விருது, தமிழக அரசின் கலைச்செம்மல் விருது என்று எண்ணற்ற விருதுகளை பெற்ற இவரது சிற்பங்கள் இந்தியா, க்யூபா, சிங்கப்பூர், மலேசியா போன்ற அருங்காட்சியகங்கள், கண்காட்சிகளில் இடம்பெற்றுவருகின்றன.

லலிதகலா அகதமியின் தென் மண்டலப் பிரிவு சென்னையில் சமீபத்தில் இவருக்கு "ஆர்டிஸ்ட் ரெசிடன்சி" எனும் மிகப் பெரிய கௌரவத்தை வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.

ஸ்ரீரங்கம் ஹை ஸ்கூலில் தன் ஓவியத்துக்காக ராஜாஜி கையால் பரிசு பெற்ற இந்த சிற்பி, இப்பவும் மாதம் இரண்டு முறை ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றுவிடுவார்; சிற்பங்களை பார்க்க தான்!.

ஸ்தபதியை சந்தித்து பிறகு இரண்டுமாதம் இதை பற்றி மறந்துவிட்டேன். ஒருநாள் தேனுகாவிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.

“ஸ்தபதி சரி என்று சொல்லிவிட்டார். கும்பகோணம் வந்தால் சந்தித்து மேற்கொண்டு பேசலாம்” என்றார்.

கும்பகோணம் சென்றேன். ஸ்தபதியிடம் தேனுகா அழைத்து சென்ற போது “அவர் ஒத்துக்க மாட்டார் என்றுதான் நினைத்தேன். உங்களுக்குச் செய்துதர வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கு. அதிர்ஷ்டம் தான்” என்றார்.

ஸ்தபதியிடம் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். தொண்டரடிப்பொடி ஆழ்வார் கையில் பூக்கூடை இருக்க வேண்டும் போன்ற ஒவ்வொரு ஆழ்வார் பற்றியும் சொல்லும் போது குறிப்பு எடுத்துக்கொண்டார்.

ஒரு மாதத்தில் மெழுகில் செய்த ஓர் ஆழ்வார் வார்ப்பு போட்டோவை தேனுகா எனக்கு அனுப்பினார். தொலைப்பேசியில் நான் கேட்ட (காது, மூக்கு எல்லாம் பெரிசா இருக்கே?) சந்தேகம் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்தார். சிற்பம் செய்வதில் இவ்வளவு இருக்கிறதா என்று வியந்தேன்.

இரண்டு மாதத்தில் எல்லா ஆழ்வார்களின் மெழுகு வார்ப்புப் படங்களை எனக்கு அனுப்பி “அருமையா வந்திருக்கு தேசிகன்” என்றார் தேனுகா.

மெழுகு வார்ப்பு எப்படி சிலையாகிறது என்று தெரியாதவர்கள் இந்த வீடியோவைப் பார்க்க சிபாரிசு செய்கிறேன்.


ஒவ்வொரு சிலை செய்யும் போதும், நாள்
திருமங்கை மன்னன்
மெழுகு வார்ப்பு
நட்சத்திரம், நேரம் எல்லாம் பார்த்துதான் செய்கிறார்கள். அதே போல சிலை செய்து முடித்த பின்பும் பூஜை செய்கிறார்கள். உலோகத்தை மெழுகு வார்ப்பில் ஊற்றி அது சிற்பமாக வெளிவருவது பிரசவம் மாதிரியான வேலை என்றார் ஸ்தபதி. ஒரு முறை ஏதாவது தவறு என்றால், திரும்ப மெழுகு வார்ப்பு செய்ய வேண்டும் !.

நான்கு மாதம் கழித்து ஆழ்வார்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கு நீங்கள் நேரில் வந்து அழைத்துக்கொண்டு போகலாம் என்று தேனுகா தொலைப்பேசினார். ஸ்தபதியை நேரில் பார்த்து ஆழ்வார்களை பெற்றுக்கொண்டு தேனுகாவிற்கு நன்றி சொன்னேன். கடந்த எட்டு ஒன்பது மாதங்களாக அவர் எனக்காக பல உதவிகள் செய்திருக்கிறார். ஸ்தபதி வீட்டுக்கு செல்வது, அவர் செய்யும் மெழுகு வார்ப்புப் படங்களை எனக்கு அனுப்புவது, நான் சொல்லும் திருத்தங்களை ஸ்தபதியுடம் சொல்லுவது என பல உதவி!. அவருக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று எண்ணி அவரிடம் என் விருப்பத்தைச் சொன்னேன்.

வீட்டுக்கு வந்த திருமங்கை மன்னன்
”அட அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். நான் எதுவும் செய்யலை... . உங்க ஆவல், விடாமுயற்சிக்கு உதவி செய்தேன்”

“இல்லை சார் என் நீண்ட நாள் கனவு இது, உங்கள் மூலமாக நிறைவு பெற்றிருக்கிறது. ஏதாவது செய்ய வேண்டும்” என்றேன் மீண்டும்.

“எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால்... என் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்

புத்தகம் எழுதுவாரா ? தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணிக்கொண்டேன்.

மாலை நான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்து “தோற்றம் பின்னுள்ள உண்மைகள் - தேனுகாவின் கலை இலக்கியப் படைப்புகள்” என்ற 400 பக்கப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். வாங்கிக்கொண்டேன்.

ஆழ்வார்களை ஸ்தபதியிடம் பெற்றுக்கொண்ட போது ”எனக்கு நம்பெருமாள், தாயார் ஆசாரியர்கள் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகர் வேண்டும்” என்றேன்
“உடம்பு ஒத்துழைத்தால் நிச்சயம் செய்து தருகிறேன்” என்று வழி அனுப்பிவைத்தார். வரும் வழியில் பல ஆழ்வரகளுடன் பல திவ்யதேசங்களுக்கு சென்று மங்களாசானம் செய்துவிட்டு ஆழ்வர்கள் வீட்டுக்கு விஜயம் செய்த அன்று (2014)பங்குனி உத்திரம்.

ஸ்தபதியிடம் மாலை மூன்று மணிக்கு ”பெங்களூர் வந்து சேர்ந்தேன்” என்று சொன்னவுடன் “உங்கள் தகவலுக்காக தான் காத்துக்கொண்டு இருந்தேன். இனிமேல் தான் சாப்பிடணும்” என்றார் அந்த 85 வயது முதியவர்.

தேனுகாவை பற்றி இதற்குமுன் எனக்கு அவ்வளவாக தெரியாது. ஊருக்கு வந்து அவருடைய புத்தகத்தைப் படித்தபோது அதில் முழுவதும், இசை, ஓவியங்கள், சிற்பம் பற்றி பல கட்டுரைகளை அவர் அடுக்கியிருந்தார். குறிப்பாக அவர் எழுதிய நாதஸ்வர ஆவணப்படம் பற்றிய அவர் அனுபவம் என்னை வெகுவாகக் கவர்ந்த்து. இவ்வளவு பெரியவரை நான் சாதாரணமாக உபயோகப்படுத்திவிட்டேனோ என்று உள் மனம் சொன்னது.

க.நா.சு, கரிச்சான்குஞ்சு போன்றவர்களிடம் பாராட்டுப் பெற்றிருக்கிறார். நாதஸ்வர இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், இளம்பிராயத்தில் நாதஸ்வர கலைப் பயிற்சியும், தாளக் கலைப் பயிற்சியும் பெற்றவர். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் கலை இளைஞர் பட்டம் பெற்றவர். 1990-இல் தமிழக அரசு விருதோடு மேலும் பல விருதுகளைப் பெற்றவர்.

ஆழ்வார்களுக்கு உடை எல்லாம் அணிவித்து அவருக்கு அதன் படங்களை அனுப்பினேன். சிற்ப உடை பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இதில் கூட முனைவர் பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்றார். சிற்பம் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளார் என்று நினைத்துக்கொண்டேன்.

"உங்களை பற்றி முழுவதும் தெரியாமல் போய்விட்டது. அடுத்த முறை சந்திக்கும் போது உங்கள் நாதஸ்வர அனுபவம் பற்றிப் பேச வேண்டும்" என்றேன்.

”தாராளமாக” என்றார்.

சில மாதங்கள் கழித்து ஒரு முறை ஸ்தபதியிடம் பெருமாள், ஆசாரியர்கள் பற்றிப் பேசலாம் என்று போன் செய்த போது எனக்கும் ஸ்தபதிக்கும் பாலமாக இருந்த திரு தேனுகா ஸ்ரீநிவாசன் காலமானார் என்பதை தெரிந்துகொண்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். ஸ்தபதியிடம் வேறு எதைப்பற்றியும் பேச மனம் இசையவில்லை

பிறகு பெருமாள், ஆசாரியர்கள் பற்றிய  நினைவு வந்துவிட்டுப் போகும். ஸ்தபதியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். மாதங்கள் பல ஓடின.
போன வருஷம்(2015) ஆரம்பத்தில் திருச்சிக்கு சென்ற போது உறையூர் நாச்சியாரைச் சேவித்துவிட்டு பேருந்துல் வரும் போது மொபைலில் ஃபேஸ்புக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். அகஸ்மாத்தாக  நம்பெருமாள் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சன படத்தைப் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு நாள் நம்பெருமாளுக்கு இரண்டு திருக்கைகள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் அந்தப் படத்தில் நான்கு திருக்கைகள்!
ஸ்தபதியிடம் பெருமாள் மூர்த்தியை வடிவம் செய்ய சொல்லும் போது, இதே போல நான்கு திருக்கைகளுடன் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நம்பெருமாளை விரல்களால் தடவ அவர் மொபைலில்  விஸ்வருபம் எடுத்தார் அவர் விஸ்வரூபம் எடுத்த சமயம் மொபைலில் ஸ்தபதியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.

“நீங்கப் போன வருஷம் வந்த போது பெருமாள், தாயார், ராமானுஜர், ஸ்ரீதேசிகர் வேண்டும் என்று சொன்னீர்களே? ஆரம்பிக்கட்டுமா ?” என்றார்.
வியப்பாக இருந்தது.

“உடனே” என்றேன்.

நம்பெருமாள் உபயநாச்சியாரகளுடன்
போன வருடம்(2015) ஆனி மாதம்  ”பெருமாள், தாயார், ஆசாரியர்களை அழைத்துக்கொண்டு போகலாம்” என்றார்.

ஸ்தபதியைச் சந்தித்த போது ”உங்கள் மூர்த்தியைச் செய்து கொடுக்கும் வரை  உடம்பு ஒத்துழைக்க வேண்டுமே என்று இருந்தது”

நம்பெருமாள் திருத்துழாய் பிரியன் என்று அவர் தோட்டத்திலிருந்து திருத்துழாயை பறித்து வந்து பெருமாளுடன் கட்டிக்கொடுத்தார்.( இது மாதிரி திருத்துழாயை நான் இதுவரை பார்த்ததில்லை. முளைக்கீரை மாதிரி இருந்தது ! ) அதைப் பெருமாளுடன் சேர்த்து வைத்துக் கட்டிக்கொடுத்தா

“ஒரு தீவிர விஷ்ணு பக்தனுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டேன்” என்று கண்ணீருடன் என்னை வழி அனுப்பிவைத்தார்.

ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவேதாந்த தேசிகன்
கும்பகோணத்தில் “லக்‌ஷ்மி நரசிம்மர்” என்று ஸ்டிக்கர் ஒட்டிய ஆட்டோவில் மஞ்சள் திருமண்ணுடன் சக்கிரவர்த்தி என்ற ஆட்டோ ஓட்டுநர் என்னைத் கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் வரை பேருந்தில் நிலையம் வரை வந்து சீட் பிடித்து அனுப்பிவைத்தார்.

பெரியாழ்வார் ஆண்டாள் 
பெரியாழ்வார் திருநட்சத்திரம் அன்று ஆசாரியர்களுடன், நம்பெருமாள் தாயாருடன் வீட்டுக்கு விஜயம் செய்ய, வீட்டில் பெரியாழ்வார் காத்துக்கொண்டு இருந்தார். மாப்பிளையை மாமனார் வரவேற்பது தானே முறை !

இன்று பெரியாழ்வார் திருநட்சத்திரம்