Skip to main content

காஞ்சிபுரத்து அணில்கள்

காஞ்சிபுரம் 
குரங்குகள் மலையை நூக்கக்
குளித்துத் தாம் புரண்டிட்டு ஓடித்
தரங்க நீர் அடைக்கல் உற்ற
சலம் இலா அணிலும் போலேன்

ஸ்ரீராமருக்கு பாலம் கட்ட குரங்குகள் அணை போடக் கல்லைத் தூக்கிப் போகின்றன. அதைப் பார்த்த அணில்கள் மலையைத் தூக்க இயலாத அணில் கூட்டம் கடலில் உள்ளே சென்று தங்கள் உடலை ஈரமாக்கிப் பின் அந்த ஈர உடலில் மண்ணைப் புரட்டிக்கொண்டு ஓடிச் சென்று மண்ணை உதறி அணைகட்ட உதவுகின்றன.

நான் அந்த அணில் போல் நான் இல்லையே என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளிய திருமாலையில் வருத்தப்படுகிறார். சிலரைப் பார்க்கும் போது நமக்கு அந்த எண்ணம் ஏற்படுகிறது. அடியேனுக்கு இந்த மாதிரி ஓர் அனுபவம் காஞ்சிபுரத்தில் ஏற்பட்டது. அதைச் சொல்லும் முன் என் பயணக் குறிப்பு சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

விமானம், புஷ்கரணி
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம், பெருமாள் கோயில் என்றால் அது காஞ்சிபுரம். ஆழ்வார்களைத் தவிர, வேதாந்த தேசிகன் ( திராமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி ), கூரத்தாழ்வான் (வரதராஜ ஸ்தவம்), ஸ்ரீமணவாள மாமுனிகள் (ஸ்ரீ தேவராஜ மங்களம், ஸ்ரீகாஞ்சி தேவப்பெருமாள் தோத்திரம்) என்று பாடியுள்ளார்கள்.

திருக்கச்சி நம்பிகள் தேவராஜ அஷ்டகம் பாடியதோடு அல்லாமல், அவருக்கு ஆலவட்டக் கைங்கரியம் (விசிறுதல்) செய்து, அருளாளனிடம் நம் உடையவருக்கு "ஆறு வார்த்தைகள்' பெற்றுத்தந்தார். திருகச்சி நம்பிகளுக்கு ஆலவட்ட கைங்கரியம் செய்ய நியமித்தவர் ஸ்ரீ ஆளவந்தார்.

கருமாணிக்க சன்னதி
அடியேன் கோயிலுக்குள் சென்ற போது கருமணிக்க சன்னதியை தேடிச் சென்றேன். அங்கே தான் ஸ்ரீஆளவந்தார் முதன்முதலில் இளையாழ்வாரைப் பார்த்து “ஆம் முதல்வன் இவன்” என்று கடாக்ஷித்த இடம். அதைப் பற்றி சுருக்கமாக - ஒரு முறை ஸ்ரீஆளவந்தார் பேரருளாளனையும், பெருந் தேவி தாயாரையும் சேவித்துக் கொண்டு பிரதட்சணமாக வரும்போது, அங்கே யாதவ பிரகாசர் தன்னுடைய சிஷ்யர்களுடன் பிரதட்சணமாக போக ஸ்ரீஆளவந்தார் திருக்கச்சி நம்பிகளை நோக்கி “இவர்களில் இளையாழ்வார் யார் ?” என்று கேட்டார். அதற்கு திருக்கசச்சி நம்பிகள் ”அதோ சிவந்த நெடிய திருவடிகள், அகன்ற திருமார்பு, அழகிய திருவாயுடன், திருமண் சாற்றிக்கொண்டு பொலிவுடன் நடுவே இருக்கிறார்” என்று காட்டியருள, ஸ்ரீஆளவந்தாரும் ‘ஆம் முதல்வன் இவன்’ குளிரக்கடாக்ஷித்து அருளினார். ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆசாரியன் ஒரு கண்ணால் நம்மை நோக்கினாலே அதற்கு ஈடு, இணை எதுவும் கிடையாது என்பர். இங்கே ஸ்ரீஆளவந்தார் ஸ்ரீராமானுஜரை தன் இரண்டு கண்களால் நோக்கி கடாக்ஷித்தார் என்றால் ?



பிறகு ஸ்ரீஆளவந்தார் பேரருளாளன் சன்னதிக்குச் சென்று ‘‘ஸ்ரீ வைஷ்ணவ தரிசனத்திற்கு நமக்கு ஸ்ரீராமானுஜரைத் தந்தருள வேண்டும்’’ என்று பிரார்த்தித்தார். அப்போது ’முக்தகம்’ என்ற விசேஷ ஸ்லோகத்தை அருளிச்செய்தார். [ யஸ்ய ப்ரஸாதகலயா பதிர: ச்ருணோதி பங்கு: ப்ரதாவதி ஜவேந ச வக்தி மூக: |அந்த: ப்ரபச்யதி ஸூதம் லபதேச வந்த்யா தம் தேவமேவ வரதம் சரணம் கதோஸ்மி |]

அதன் பொருள்  ”எந்த பேரருளாளப் பெருமாளுடைய அநுக்ரஹத்தினால் செவிடன் கேட்கும் சக்தி பெறுகிறான்; முடவனும் விரைந்தோடுவான்; ஊமையும் பேசவல்லவனாவான்; குருடனும் காணப் பெறுவான், மலடியும் மக்கள் பெறுவாள். இப்படிப்பட்ட அநுக்ரஹம் செய்தருளவல்ல பேரருளாளப் பெருமாளை சரணமடைகிறேன்”

நாம் ஏதாவது கேட்டாலே தரும் பேரருளாளன், ஸ்ரீஆளவந்தார் கேட்டால் தராமல் இருப்பாரா ? ஸ்ரீராமானுஜரை நம் ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்துக்கு தந்தருளினார்.

ஸ்ரீஆளவந்தார் ஸ்ரீராமானுஜரை முதன்முதலில் சந்தித்த அந்தச் சுற்றுக்கு ஸ்ரீஆளவந்தார் திருச்சுற்று என்றே பெயர்,

வராஹ சன்னதிக்கு பக்கம் இருக்கும்
கிருஷ்ணர் சன்னதி
ஸ்ரீஆளவந்தார் ஸ்ரீராமானுஜரை குளிரக்கடாக்ஷித்த இடத்தில் சிறிது நேரம் இருந்துவிட்டு பின் பேரருளாளன் சன்னதிக்கு சென்று ஒரு ஓரத்தில் திகட்ட திகட்ட அவரைச் சேவித்து ஸ்ரீசடகோபன் தீர்த்த பிரசாதங்களை சந்தோஷத்துடன் சுவீகரித்துக் கொண்டு அனந்த சரஸ் புஷ்கரணி கரையோரத்தில் பல அழகிய ஆனால் சிதிலம் அடைந்த சில சன்னதிகளைச் சேவிக்க சென்றேன்.

மேற்கு பக்கத்தில் கிருஷ்ணர், வராஹ சன்னதிகளும் வடக்கு பக்கத்தில் ஸ்ரீரங்கநாதர் சன்னதியும் பாழடைந்த நிலையில் இருக்கிறது. கிழக்கு பக்கத்தில் சக்கரத்தாவாழ் சன்னதியைப் பராமரித்துள்ளார்கள்.

வராஹ சன்னதி
இளையாழ்வார் மனைவிக்கும் பெரிய நம்பிகள் மனைவிக்கும் மனவேற்றுமை வர இளையாழ்வார் இல்லறத்தை துறந்திட முடிவு செய்தார். மேற்கு பக்கம் இருக்கும் வராஹ சன்னதியின் கரையில் தான் இளையாழ்வார் த்ரிதண்ட காஷாயத்தை ஏற்றுச் சந்நியாச தர்மத்தை ஏற்றுக்கொண்டு ‘ஸ்ரீராமானுஜன்’ என்ற திருநாமம் பெற்றார். அந்த வராஹ சன்னதிக்கு சென்று வரதனை ஓட்டை வழியாகத் தரிசித்துவிட்டு ஸ்ரீராமானுஜர் ஸ்ரீபெரியநம்பிகளுடன் வசித்த திருமாளிகையை பார்க்கக் கிளம்பினேன்.

ஸ்ரீராமானுஜர், ஸ்ரீபெரிய நம்பிகள்
ஒன்றாக இருந்த திருமாளிகை
கோயிலின் பின்புறம் என்று வழி சொல்ல அங்கே சென்றேன். உடையவர் திருமாளிகை என்று வெல்டிங் செய்த கேட் முன் பெரிய பசுமாடு ஒன்று இருந்தது. அக்கம் பக்கம் உள்ளே செல்ல முடியுமா என்று விசாரித்தேன். சாவி யாரிடம் இருக்கிறது என்று தெரியாமல், திருமாளிகைக்கு முன் பசுமாடு என்ன புண்ணியம் செய்ததோ என்று எண்ணிக்கொண்டு வெளிப்புறம் பிரசித்திப்பெற்ற ’ராமானுஜர் கிணற்றை’ சேவித்துவிட்டு மீண்டும் ஸ்ரீவரதராஜ கோயிலுக்குச் சென்றேன்.

டி.வி.எஸுக்கு காத்துக்கொண்டு மண்டபம்
உடையவரைச் சேவிக்க போகும் வழியில் அம்மிக் குழவி சைசில் ஒன்றைக் காண்பித்து “குடலை இட்லி வாங்கிக்கோங்க” என்றார் பிரசாதம் விற்கும் மண்டபத்தில் இருந்த மாமா. “உடையவர் சன்னதிக்கு எப்படிப் போகவேண்டும்?” என்றேன். கொஞ்சம் ஏமாற்றத்துடன் “கார்த்தால மட்டும் தான் திறப்பார்கள்” என்றார்.

உடையவர் சன்னதி ஆழ்வார் திருச்சுற்றில் ஒதுக்குப்புறமாகப் பெரிய கதவால் மூடியிருந்தது. அதன் பக்கம் ஒரு பாழடைந்த மண்டபம் “டிவிஎஸ்” போன்றவர்களுக்குக் காத்துக்கொண்டு இருக்கிறது.

கல் சங்கலி 
திருகச்சி நம்பிகள்
கோயிலுக்கு வெளியே கல் சங்கிலி, நூறு கால் மண்டபத்தில் திருகச்சி நம்பிகள் சிற்பத்தை பார்த்துவிட்டு காஞ்சிபுரத்தில் உடையவரைச் சேவிக்காமல் கிளம்புகிறோமே என்று நினைத்துக்கொண்டு உடையவர் தீர்த்த கைங்கரியம் செய்த சாலைக் கிணறு இருக்கும் திசை நோக்கிப் பயணித்தேன்.
சாலைக் கிணறு போகும் வரை அதன் வரலாற்றைச் சுருக்கமாக பார்த்துவிடலாம். யாதவபிரகாசர், ராமானுஜர் மீது அசுயை கொண்டு ஸ்ரீராமானுஜரை காசிக்கு அழைத்துச் சென்று அவரைக் கங்கையில் தள்ளிக்  கொல்ல திட்டம் தீட்டினார். ஆனால் குருவின் சதித்திட்டம் கோவிந்தன் என்ற எம்பார் மூலம் ராமானுஜருக்குத் தெரியவர அவரிடமிருந்து தப்பிக்க திக்கு தெரியாமல் ஓடினார். அப்போது ஒரு வேடுவ தம்பதியை எதிர்கொண்டார். அவர்களும் நாங்கள் ’நல்வழி காட்டுகிறோம்’ என்று கூட அழைத்துச் சென்றார்கள். சாயங்காலம் ஒரு அரசமரத்தின் அடியில் தங்கினார்கள். அப்போது  களைப்பினால் வேடுவச்சி பருக நல்ல தண்ணீர் வேண்டும் என்று கேட்க, அதற்கு வேடுவன் அருகில் நல்ல நீர் நிறைந்த கிணறு இருக்கிறது காலை பருகலாம் என்று சமாதானம் செய்தான். நமக்கு பேருதவி புரிந்தவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிய ராமானுஜர் பொழுதுபுலர்ந்தவேளையில் சீக்கிரம் எழுந்து, வேடுவ தம்பதிகளை கிணற்றுப் பக்கம் அழைத்துக்கொண்டு சென்றார்.

வேடுவர் “எங்களின் தாகத்தை தணித்துக் கொள்வதற்கு இந்தக் கிணற்றிலே இறங்கி எங்களுக்குத் தண்ணீர் எடுத்துத் தர வேண்டும்” என்று வேண்டினர்.
ராமானுஜரும் கிணற்றில் இறங்கி தன் இரண்டு திருக்கைகளாலும் கிணற்று நீரை அள்ளி மூன்று முறை தீர்த்தம் சமர்ப்பித்தார். அவர்களும் மண்டியிட்டுப் பருகி மறைந்தார்கள். இளையாழ்வாரும் கரையேறி அவர்களை தேடிப் பார்த்தார் கிடைக்காமல் வருந்தினார். ஜன நடமாட்டம் வரக்கண்டு, “இது என்ன இடம்? எந்த தேசம் ? எந்த ஸ்தலம் ?” என்று வினவினார்.
“அதோ தெரிகிறதே புண்யகோடி விமானம் ! இது சாலைக்கிணறு !” என்றனர்.
பெருமாளும் பிராட்டியுமாக தமக்கு வேடுவராக வந்து உதவி புரிந்ததை எண்ணிப் பிரமித்தார். அதன் பின் தினமும், சாலைக் கிணற்றிலே பெருமாள் திருவாராதனத்துக்குத் திருமஞ்சனம் சமர்ப்பித்துக்கொண்டிருந்தார். அந்தக் கிணறு இன்றும் செவிலிமேடு என்ற இடத்தில் இருக்கிறது வாருங்கள் செவிலிமேட்டிருக்கு செல்லலாம்.
சாலைக் கிணறு வழி !

செவிலிமேடு என்ற இடம் காஞ்சிபுரத்திலிருந்து சுமார் 4 கி.மி தூரத்தில் இருக்கிறது.

ஜி.வி. புயூட்டி பார்லர் என்ற வட தேசத்து ஐஸ்வரியா ராய் சிரித்துக்கொண்டு ’இராமானுசா’ என்று வடமொழி கலக்காத சுத்த தமிழில் வரவேற்கிறார். செவிலிமேடு என்ற கிராமத்தில் சுமார் ஐந்நூறு குடும்பங்கள் இருக்கலாம். அங்கே ராமானுஜரை எல்லோரும் ’எம்பெருமானார்’ என்று தான் அழைக்கிறார்கள். .

சுந்தரமூர்த்தி
ராமானுஜ நூற்றந்தாதி சேவிக்கும் பெண்கள்
நான் போன சமயம் அங்கே இருந்த உடையவர் கோயில் திறந்து இருந்தது.
“காரேய் கருணை இராமானுச,இக்கடலிடத்தில்
ஆரே யறிபவர் நின்னரு ளின்தன்மை அல்லலுக்கு
நேரே யுறைவிடம் நான்வந்து நீயென்னை உய்த்தபினுன்
சீரே யுயிர்க்குயி ராய், அடியேற்கின்று தித்திக்குமே”
மூர்த்தி பழைய படம் 

என்ற பாசுரத்தை மூன்று பெண்கள் சேவித்துக்கொண்டு இருந்தார்கள். காவி உடையில் ஒருவர் ”வாங்கோ” என்று என்னை அழைத்து தீர்த்தம் கொடுத்து  "ஸ்ரீமுதலியாண்டான்" சடாரி சாதித்தார்.

அவரிடம் பேச்சு கொடுக்க அவர் சொன்னதை அப்படியே உங்களுக்கு இங்கே தருகிறேன்.

“சார் என் பெயர் சுந்தரமூர்த்தி. தொழில் வெல்டிங் செய்வது. நேற்று கூட கண்ணில் பொறி பட்டுவிட்டது ( என்று சிவந்த கண்களைக் காண்பிக்கிறார் ). 2001ல வெல்டிங் செய்துவிட்டு நைட் நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது தீர்த்தக் கிணறு என்று ஒன்று இருக்கு என்று நண்பர் ஒருவர் சொன்னார். அப்போது தான் ராமானுஜர் என்ற பெயரை முதல் முதலில் கேள்விப்பட்டேன். அடுத்த நாள் சைக்கிள் எடுத்துக்கொண்டு கிணற்றை பார்க்க வந்தேன். பக்கத்தில் ஒரு கோயில் இருக்க அதைத் திறந்து உள்ளே சென்ற போது அதிர்ச்சியாக இருந்தது. உள்ளே சிலர் சீட்டாடிக்கொண்டு இருந்தார்கள். நிறையச் சரக்கு பாட்டில்கள். மனதுக்குக் கஷ்டமாக இருந்தது கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று இந்த கோயிலுக்கு நிறைய பேரைக் கூட்டிக்கொண்டு வந்து காண்பித்தேன். அப்போது எல்லாம் இது போல இல்லை, கோயில் மீது புதர் போல செடிகள் வளர்ந்து.. முனியன் என்று ஒருவர் ( ஏழை தான் ) கோயிலைச் சுத்தம் செய்ய ஐந்நூறு ரூபாய் சில்லறைக் காசுகளை மூட்டையாகக் கொடுத்தார். பின் சிலர் உதவி செய்ய கோயிலைச் சுத்தம் செய்தோம். உள்ளே சென்று ஒரு பை நிறைய நாளிதழ்களில் வந்த ராமானுஜர் பற்றிய செய்திகள், கட்டுரைகள், சாலைக் கிணறு பற்றி வந்த செய்திகளை என்னிடம் ஆர்வமாகக் காண்பித்தார்.

பன மரத்துக்கு நடுவில்
புண்ய கோடி விமானம்
இப்போது தெரிகிறதா ?
நான் சைவம் தான், ஆனால் என்ன என்று தெரியவில்லை, ராமானுஜர் மீது அப்படி ஒரு பற்று. இந்தக் கோயில் வரதராஜ பெருமாள் கோயில் நிவாகத்துக்கு உட்பட்டது. ஆனால் எந்த உதவியும் கிடையாது. கோயிலின் மின்சார செலவை கூட ஒரு டீக் கடைக்காரர் ஏற்கிறார். பக்கத்தில் ஒரு மளிகை கடைக்காரர் அரிசி, பருப்பு தருகிறார். நான் தினமும் வந்து கோயிலை திறந்து சுத்தம் செய்து புஷ்பம் போடுகிறேன். இங்கே முன்பு சீட்டு, குடி என்று இருந்தவர்கள் கலாட்டா செய்ய வருவார்கள், அவர்களிடம் சண்டை போடாமல் அவர்களுக்கு அப்ப அப்ப ஏதாவது கொடுத்து ‘கவனித்து’ கொள்கிறேன். இந்த ராமானுஜருக்கு இரண்டு டிரஸ் தான் சார் இருக்கிறது!.

பாஷ்யம் என்று ஒருவர் முன்பு தினமும் வந்து கைங்கரியம் செய்தார். இப்ப அவருக்கு 70 வயது இருக்கும். அதனால் தினமும் வர முடிவதில்லை, திருவாதிரை மற்றும் ஞாயிறு மட்டும் வருவார்.

”தினமும் வந்து கைங்கரியம் செய்ய 300 ரூபாய் கேட்கிறார்கள். என்னிடம் அவ்வளவு பணம் இல்லையே சார்” என்றார்.

மலைப்பாக இருந்தது.

“உங்கள் ஊர் எது சார்?” என்று என்னைக் கேட்டார்

“ஸ்ரீரங்கம் என் சொந்த ஊர்” என்றேன்.

”ஸ்ரீரங்கமா !?” என்று ஆச்சரியப்பட்டு என் கையில் ஒரு விசிறியைக்  கொடுத்து “ஸ்ரீரங்கத்திலிருந்து வருகிறீர்கள், நம் ராமானுஜருக்கு நீங்க திருவாலவட்ட கைங்கரியம் செய்ய வேண்டும்” என்றார்.

சாலைக் கிணறு 
மெய்சிலிரித்துப் போனேன்.

”உள்ளே வாங்க என்று ராமானுஜருக்கு அருகில் அழைத்து, இங்கே இருந்து பாருங்கள் ராமானுஜருக்குத் தெரிந்த அதே கோபுரம் உங்களுக்கும் தெரியும்...பனை மரம் நடுவில் பாருங்கள்”

ராமானுஜர் பார்த்த அந்த புண்யகோடி விமானம் தெரிய 1000 வருடத்துக்கு முன் என்னை அழைத்துச் சென்றார் சுந்திரமூர்த்தி.

சாலைக் கிணறு
வாங்க சாலைக் கிணற்றை காண்பிக்கிறேன் என்று அழைத்துச் சென்றார். பெரிய கேட் போட்டு மூடியிருந்தது. அவர் உதவியுடன் மதில் சுவற்றை ஏறிக் குதித்து கிணற்றையும், சுந்தரமூர்த்தியை என்ற உண்மையான பாகவதரை சேவித்துவிட்டுக் கிளம்பினேன்.

வைகுண்ட ஏகாதசி முடிந்து, 12ஆம் நாள் அனுஷ்டான குள உற்சவம் இன்றும் நடக்கிறது. அந்த உற்சவத்தில் வரதராஜ பெருமாள் காலைக் கோயிலிலிருந்து புறப்பட்டு செவிலிமேடில் உள்ள ராமானுஜர் கோயிலை சென்றடைந்து, அங்குச் சாலை கிணறு தீர்த்ததில் பெருமாளுக்கும், திருமஞ்சனம் நடைபெறும். பிறகு ராமானுஜருக்குக் காட்சி கொடுத்ததை நினைவு கூறும் விதமாகப் பெருமாள் வேடுவர் திருக்கோலத்தில் திரும்பச் செல்கிறார்.

விஜயநகர சின்னம் !
கல்வெட்டு
நாளைத் திருவாதிரை இங்கே திருமஞ்சனம் நடக்கும். கொஞ்சம் கூட்டம் வரும். நிறைய வேலை இருக்கிறது. இந்தாங்க என்று ஒரு சின்ன சீட்டைக் கொடுத்தார் அதில் இந்த வருடம் நடக்கும் எல்லாத் திருவாதிரை தேதிகளும் அச்சடித்திருந்தது.

மகேஷ்
சுந்தரமூர்த்தியின் நண்பர் மகேஷ் தொலைப்பேசி எண்ணை எனக்குக் கொடுத்து

“இவரிடம் பேசினால் மேலும் சில தகவல் கிடைக்கும்” என்றார். தொலைப்பேசினேன். அவர் கூறிய தகவல் மேலும் வியப்பளித்தது.
”நான் மென்பொருள் துறையில் இருக்கிறேன். இராமானுஜர் 1000 வது ஆண்டு வருகிறது அதனால் ஏதாவது செய்ய வேண்டும் என்று கொஞ்சம் நாள் வேலை செய்யாமல் இருக்கிறேன்.

“என்ன செய்ய போகிறீர்கள் ?”

“பெரிதாக ஒன்று இல்லை, கண்ணிநுண் சிறுத்தாம்பு 12 ஆயிரம் முறை சொல்லப்போகிறேன். அதற்கு அப்பறம் வேலையை தொடரப் போகிறேன்”
வியப்பாக இருந்தது.

”கோயிலுக்கு எதிர்த்த மாதிரி ஒரு குளம் இருக்கே?” என்று பேச்சை தொடர்ந்தேன்.

”அது ராமானுஜர் கோயில் அனுஷ்டான குளம்”. தினமும் ராமானுஜர் அனுஷ்டான குளத்தில் நீராடி, சாலைக் கிணற்றில் நீர் எடுத்து வந்து வரதராஜப் பெருமாளுக்குத் திருமஞ்சன கைங்கரியம் செய்து வந்தார்.
”சாலைக் கிணறு பக்கம் இருக்கும் ராமானுஜர் கோயில் பற்றி தகவல் கிடைக்குமா ?”

”கோயில் சுவற்றில் கல்வெட்டு இருக்கிறது. இன்று மத்தியானம் அங்கே போவேன் போட்டோ எடுத்து அனுப்புகிறேன். விஜயநகர பேரரசு சின்னம் கூட ஒரு கல்லில் இருக்கிறது உங்களுக்கு வாட்ஸ் ஆப் செய்கிறேன். அப்பறம் இந்த கோயில்  நடாதூர் அம்மாள் காலத்தது என்று நினைக்கிறேன். ராமானுஜருக்குப் பிறகு மற்ற ஆசாரியர்கள் இங்கே வந்து அனுஷ்டான குளத்தில் நீராடிவிட்டு, ராமானுஜரைச் சேவித்துவிட்டு சாலைக் கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டு போவார்கள்.

“ராமானுஜரை சேவித்துவிட்டா ?”

“அப்படித் தான் இருக்க வேண்டும். ஆசாரியர் தானே சார் பெருமாளைவிட பெரியவர்?”

இவர்களை பார்த்தால்,  தொண்டரடிப்பொடி ஆழ்வார் அணில்களை பார்த்து நாமும் அவைகளை போலக் கைங்கரியம் செய்ய முடியவில்லையே என்று ஏங்குவது தான் நினைவுக்கு வருகிறது.

பெரிதாக ஒன்றும் செய்ய வேண்டாம். மூர்த்திக்கு ஒரு போன் செய்து பாராட்டலாம் ! ( 9944013217 )

5.8.2016 - இன்றோ திருவாடிப்பூரம் !

Comments

  1. அடியவர் சேவை அரங்கன் சேவை...என்ற சுவாமிக்கே ..சேவை செய்யும் இந்த அடியார்கள் பேரு பெற்றோர்...

    வளர்க அவர்களின் திருத்தொண்டு..


    உங்கள் பதிவின் மூலம் எங்களுக்கும் சுவாமியும் தரிசனம் கிட்டியது...

    பதிவர்க்கு மிகவும் நன்றி...

    ReplyDelete

Post a Comment