Skip to main content

ஆசார டயட்


ஆசாரமாக இருந்தாலே பல வியாதிகள் நம்மை அண்டாது.
ஆசாரம் இருப்பது ஏதோ ஐயர், ஐயங்கார் சமாச்சாரம் என்று ஒதுக்கிவிடுகிறோம்.

கல்கி கட்டுரையைப் படித்துவிட்டு பலர் ”என்ன டயட் சார்?”  என்று கேட்கிறார்கள்.

டயட் எடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முடிந்தவரை ஆசாரமாக இருப்பதும். ஆசாரமாக இருந்தால் உடல், மனம் அழுக்காகாமல் இருக்கும்.

ஏகாதசி அன்று முக்கியமான கோயிலின் முக்கியமான அர்ச்சகர் வெஜிடபுள் பிரியாணி பச்சை வெங்காய பச்சடியுடன்சாப்பிடுவதை பார்த்தேன். அதே போல யாத்திரையில் குடுமி வைத்த வைதீகர் முட்டை ஆம்லட் போடும் கடையில் காலில் செருப்புடன் டீ போட்டுக்கொண்டு இருந்தவருடன் டீ வாங்கிக் குடித்தார்,  தன் மடியான வெள்ளி டம்பிளரில் !



சாலையோர பரோட்டா கடைகளில் போலீஸ்காரர்கள் சாப்பிடுவதைப் பார்க்கலாம். உடனே ஆகார நியமம், அர்த்தபஞ்சகம் போன்றவற்றை சொல்லப் போகிறேன் என மிரட்சி அடைய வேண்டாம். இன்று கோயில் அர்ச்சகர் முதல் போலீஸ் ஏட்டு வரை பலரும் தொப்பையும் தொந்தியுமாக இருப்பதற்குக் காரணம் இதுவே. கண்ட இடங்களில் கண்ட குப்பைகளைச் சாப்பிடுவதால் தான்.

அர்ச்சகருக்கு யூனிப்பார்ம் திருமண், பஞ்சகச்சம், காவல் துறையினருக்கு காக்கி. இவர்கள் இந்தச் சீருடையில் இருந்தால் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டுத் தவறு செய்ய மாட்டார்கள் என்று நம்புகிறோம். நெறிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்றால் ”நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்” என்ற உணர்வு ஏற்படுகிறது.

வீட்டில் மின்விசிறி மீது அழுக்கு படிந்தவுடன் அது சுற்றும் வேகம் குறைந்துவிடும். துடைத்தவுடன் வேகமாகச் சுற்றிவதை கவனித்திருக்கலாம். இல்லை என்றால் அடுத்த முறை கவனித்துவிடுங்கள். அதே போல் அழுக்கு படிந்த டியூப் லைட்டை ஈரத் துணியால் துடைத்தவுடன் அதிக பிரகாசமாக ஒளிவீசும். ஒழுங்காக மெயின்டெயின் செய்யவில்லை என்றால் பிரச்சனை தான். பிறகு பெரிசாக செலவு வைக்கும்.

நம் உடலும் அதே போல் தான். சரியாகப் பராமரிக்கவில்லை என்றால் பல உபாதைகள் வந்து, பல மருத்துவர்களை தேடிச் சென்று அவர்களுக்கு வரவு வைப்போம். இதை லைப் ஸ்டைல் பிரச்சனை என்று ஸ்டைலாக சொல்லிக்கொள்கிறோம்.

ஆசாரமாக இருந்தாலே பல குப்பைகளை நாம் தேடி செல்ல மாட்டோம் என்பது தான் உண்மை. எல்லா உடல் உபாதைகளுக்கு குட்பை சொல்லிவிடலாம். எனக்குத் தெரிந்த உதாரணங்கள் சிலவற்றை சொல்லுகிறேன்.

பெரிய ஹோட்டல் தான். ’செவ்ரலேயும், சிட்டியும்’ பார்க்கிங் இல்லாமல் தவித்துக்கொண்டு மக்கள் சாதாரண பாவ் பாஜிக்கு நூறு ரூபாய், எக்ஸ்டரா பாவுக்கு எக்ஸ்டரா கொடுக்கும் இடம். அங்கே பார்த்த காட்சி இது - கொத்த மல்லி கட்டின் இடுப்பில் கட்டிய பகுதியை வெட்டித் தள்ளிவிட்டு இலைகளைப் பொடிசாக நறுக்கிக் தள்ளினார். என்ன திறமை என்று எண்ணினேன். வெட்டியதை அப்படியே ஒருவர் அள்ளிக்கொண்டு பாவ் பாஜி, ஜீரா ரைஸ் என்று எல்லா பண்டங்கள் மீதும் தூவி கொடுத்தார். இதில் என்ன தப்பு என்று குழம்ப வேண்டாம். அவர் கொத்தமல்லி கட்டை அலம்பவே இல்லை!. பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்டு, டெம்போவில் புகை, அழுக்கை உள்வாங்கிக்கொண்டு - நம் பண்டங்கள் மீது தெளிப்பது வெறும் அழுக்கும் பூச்சிக்கொல்லியும் தான்.

நான்வெஜ் சேர்ந்து சமைக்கும் மல்டி-குசைன் உணவகளுக்கு சமீபகாலமாகச் செல்வதில்லை. ஒன்று நான் சைவம் அதனால். இன்னொன்று சுத்தம் இங்கே சுத்தமாக இருப்பதே இல்லை. அதனால் தான் கிச்சனுக்கு வெளியே ”அனுமதி இல்லை” என்ற போர்ட் இருக்கும். மாமிசம் சமைக்கும் இடங்களில்  அதன் கழிவுகளையும் சரியாக அகற்றாமல்...நாற்றமும் அழுக்கின் உறைவிடமாகத் திகழ்கிறது.

ஈக்கள் இல்லாத கோழிப்பண்ணைகளோ, ஈ மொய்க்காத மீன் கடையோ பார்க்க முடியாது. இங்கிருந்து ஆரம்பிக்கிறது பிரச்சனை.

ஹோட்டல்களில் சர்வர்கள் பெரும்பாலும் டாய்லெட் சென்றுவிட்டு கைகளை சுத்தமாகக் கழுவுவது இல்லை. அதே கையை டம்பிளர் தண்ணீரில் விட்டுக்கொண்டு இலையை அலம்பிக்கொள்ளுங்கள்’ என்பார்கள்!.

ஃபேஸ்புக், டிவிட்டர் தலைமுறைக்கு மெக்டொனால்ட், டாமினோஸ் சுத்தமாகக் கொடுக்கும் எந்த உணவும் உடலுக்கு நல்லதில்லை. அவற்றுடன் குடிக்கும் கோக், பெப்சி எல்லாம் டாஸ்மாக்கிற்கு சமம். சதாம் காலத்திய ரசாயன ஆயுதங்களைவிட இது கொடியது. அமெரிக்கா நமக்கு இழைத்துக்கொண்டு இருக்கும் மிகப்பெரிய தீங்கு இது. தினமும் பிரட் என்பது இன்று சாப்பிட வேண்டியிருக்கிறது, முன்பு எல்லாம் யாருக்காவது ஜுரம் வந்தால் தான் பிரட். எந்த வகை பிரட்டும் மிக மிக கெடுதல்.

மேக்கப் சமாசாரங்கள் விற்க வேண்டும் என்று இந்தியாவிற்கு ‘மிஸ் இந்தியா’ கொடுத்துச் செய்த சூழ்ச்சி போல தான் கேக், பேக்கரி ஐட்டம் விற்கப் பிறந்த நாள், திருமண நாள் கொண்டாட்டங்கள். முன்பு எல்லாம் பிறந்த நாளைக் கோயிலுக்கு சென்று கொண்டாடுவோம் இன்று அப்படி இல்லை. கேக், பேக்கரி ஐட்டங்கள் எல்லாம் sweet poison! இவற்றை நம் குழந்தைகளுக்கு தினமும் கொடுத்துக்கொண்டு வந்தால் இன்னும் ஐந்து வருடத்தில் அவர்களுக்கு ஒபிசிட்டியுடன் டயபட்டீஸும் நிச்சயம்.

ஆசாரமாக இருப்பவர்கள் லோக்கல் காய்கறிகளை மட்டுமே சாப்பிடுவார்கள். வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த காய்கறிகளை சாப்பிட மாட்டார்கள் உதாரணம் உருளை, கோஸ்... இன்று பெருமாளுக்கே ஸ்டிக்கர் ஒட்டிய பழங்கள் தான்!. மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் தான் இன்று பல பிரச்சனைகளுக்குக் காரணம். உதாரணம் கோதுமை.

ஆசாரமாக இருப்பவர்கள் பிளாஸ்டிக் கப்பில் காபி, டீ, பிளாஸ்டிக் கவரில் பால், தயிர் எல்லாம் சாப்பிட மாட்டார்கள். பிளாஸ்டிகில் அடைத்து ஷெல்ப் லைப்பை கூட்ட வேண்டும் என்றால் அதற்குச் செயற்கையாக பிராசஸ் செய்ய வேண்டும். ஃபிரிட்ஜ் போன்ற குளிர் ஊட்டப்பட்ட இடத்தில் அதை பாதுகாக்க வேண்டும். இல்லை கெட்டுவிடும். இன்று எந்த எண்ணையும் சிக்கு நாற்றம் அடிக்காமல் இருப்பதற்கு இது தான் காரணம். மரணம் அடைந்துவிட்டால் அமெரிக்காவிலிருந்து பையன்/பெண் வரும் வரை நம் உடலைப் பாதுகாப்பது போலத் தான் இதுவும். சென்னையில் இருந்த போது ஃபிரிட்ஜ் இல்லாமல் பழகிக்கொண்டேன் கஷ்டமாகத் தெரியவில்லை.

ஆசாரமாக இருப்பவர்கள் ஆற்றில் ஓடும் தண்ணீர், கிணற்றுத் தண்ணீர் தான் உபயோகிப்பார்கள். ஆனால் இன்று நான் சாப்பிடும் தண்ணீர் பல வடிவங்களில் இருக்கும் பிளாஸ்டிக்கில் அடைக்கப்பட்டு தான் வருகிறது. பிஸ்லேரி போன்ற நிறுவனங்கள் சுத்தமான தண்ணீர் என்று கொடுப்பது எல்லாம் சுத்தமான தண்ணீரே இல்லை. இன்று நாம் நம் நதிகளை அழித்துவிட்டு பாட்டில் தண்ணீருக்கு அலைந்துகொண்டு இருக்கிறோம். பிளாஸ்டிக் என்பது நச்சு பொருள் அதில் வரும் தண்ணீர் ?

ஆசாரமாக இருப்பவர்கள் ஏகாதசி போன்ற நாட்களில் உபவாசம் இருப்பார்கள். உபவாசம் இருந்தால் உடலுக்கு நல்லது. உடல் புத்துணர்ச்சி அடையும் நீண்ட நாட்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் வாழலாம்.

உட்கார்ந்துகொண்டு நாளிதழ் படிக்க வசதியாக
இன்று எல்லா இடங்களிலும் வெஸ்டர்ன் டாய்லெட் தான். காலை மடக்கி இந்தியன் டாயலெட்டில் அசைவுகள் இல்லாமல் பாலன்சுடன் அமர செல்ஃபி ஸ்டிக் மாதிரி ஓர் உபகரணம் ஒன்று பல இளைஞர்களுக்கு இன்று தேவைப்படும். நாம் உட்காரும் பகுதி நம் பின்னந்தொடையை தொட்டுக் கொண்டு இருக்கும். பின்னந்தொடையை சுத்தமே செய்வதில்லை.

ஹார்பிக் பொன்றவை போட்டு சுத்தம் செய்தாலே டாய்லெட்டில் இரண்டொரு கிருமி இருக்கும் என்று விளம்பரங்களில் பார்த்திருக்கிறோம். சுத்தம் செய்யாத நம் பின்னந்தொடையில் எவ்வளவு கிருமிகளோ ? ஆசாரமாக இருப்பவர்கள் வெஸ்டர்ன் யூஸ் செய்ய மாட்டார்கள்.

ஆசாரமாக இருப்பவர்கள் டிவி, சினிமா பார்க்க மாட்டார்கள். டிவி, சினிமா பார்த்தால் கண்ணைவிட மனம் கெட்டுவிடும். வேண்டாத எண்ணங்கள் வரும். ராத்திரி சரியா தூக்கம் வராது.
உங்களுக்கு ஞானம் கிடைக்காமல் “The Nation Wants To Know” போன்ற கேள்விகள் தான் விடையாகக் கிடைக்கும். குவாலிடி தூக்கம் போய்விடும். சரியான தூக்கத்தின் போது தான் நான் உடலில் பல பாகங்கள் ரிப்பேர் ஆகிறது. சரியாகத் தூக்கம் வரவில்லை எல்லாப் பிரச்சனையும் விஸ்வரூபம் எடுக்கும்.

நாம் சாப்பிடும் எல்லா உணவுகளையும் பெருமாளுக்கு கண்டருளப் செய்துவிட்டு சாப்பிட வேண்டும் இல்லை என்றால் பாவம் என்று கீதையில் சொல்லியிருக்கிறது. பாவ புண்ணியம் ஒரு பக்க இருக்க நாம் பெருமாளுக்கு சமர்பிக்கும் உணவு என்பதால் அதை சுத்தமாக செய்வோம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. அட்லீஸ்ட் குளித்துவிட்டு செய்வோம், செய்யும் போது நக்கி பார்க்க மாட்டோம்.

Comments

  1. இக்கால சூழலில் தவிர்க்க இயலாமல் சாப்பிட வேண்டியிருக்கிறது. இதிலும் சில கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டால் உடல் நலம் காக்கப்படும்.

    ReplyDelete
  2. அருமையான கட்டுரை. ஆகார நியமத்தை இவ்வளவு அழகாக, எளிதாக விளக்க சுஜாதா தேசிகனால் மட்டுமே முடியும்.

    ReplyDelete
  3. எப்பேர்ப்பட்ட ஆச்சாரமான ஹோட்டல்களிலும் மெஸ்களிலும் (கவனிக்க : ஆச்சாரமான) சுத்தம் என்பது சுத்தமாக இல்லை. பேச்சுலர் வாழ்க்கையில் ரூம் ஷேர் பண்ணிக்கொண்டு வாழ்பவர்கள் உண்மையில் பாவம். அவர்களுக்கு வேறு வழி இல்லை..

    மறுபக்கம், மக்கள் ஹோட்டலுக்கு போவது என்பது சுவையில் ஒரு வெரைட்டி வேண்டி, நாக்கை தொங்க போட்டு வம்பை விலைக்கு வாங்குகிறார்கள். ஹோட்டல் டேஸ்ட் வீட்டில் வருவதில்லை என்கிற கமெண்ட் கூடவே வருகிறது.

    இது விஷயமாக சங்கராச்சாரியார் தெய்வத்தின் குரலில் அழகாய் எழுதியிருக்கிறார்கள்.

    நல்லதோ கெட்டதோ.. சர்வம் க்ருஷ்ணார்ப்பணமஸ்து.

    உங்கள் பதிவு அருமை.. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. அத்தனைக் கருத்துக்களும் அருமை !அனைவரும்
    பின்பற்ற வேண்டியவை !

    ReplyDelete

Post a Comment