Skip to main content

பாவம் போக்கும் பாலம்

எங்கும் ராமர் கலர்

“உன்னை தண்ணியில்லா காட்டுக்கு மாத்திருவேன் பார்த்துக்க” என்ற மெரட்டலுக்கு அடிபணியாத சினிமா கதாநாயகன் மாற்றப்படும் இடமான இராமநாதபுரத்துக்கு தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்புல்லாணி திவ்யதேசம். எந்த கல்லுரியிலும் தமிழில் முனைவர் பட்டம் வாங்காத ஆண்டாள்

“ஓத மாகடல் வண்ணா உன் மண
    வாட்டி மாரோடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினா யெங்கள்
    சிற்றில் வந்து சிதையேலே - 520

என்று எந்த எஞ்சினியரிங் காலேஜிலும் பட்டம் வாங்காத ஸ்ரீராமருக்கு உதவ வந்த வானர சேனையினால் கட்டப் பட்ட சேது என்று மங்களாசாசனம் செய்கிறார்.

‘ஸேது’ என்றால் வடமொழியில் “அணை” என்று பொருள். “ஆஸேது ஹிமாசலம்” என்று பழங்கால வழக்கு 400கிமீ தள்ளி, தற்போது “இமயம் முதல் குமரி வரை” என்று மாறிவிட்டது.

“திருஅணை காண அருவினை இல்லை” என்ற பழமொழிக்கு சுலபமான அர்த்தம் - இராமர் கட்டிய இத் திருஅணையை பார்த்தால் நம் பாவங்கள் போகும். பார்த்தாலே பாவங்கள் போகும் என்கிறார்கள். நான் பார்த்து, குளித்துவிட்டு என்னுடைய பாவ கவுண்டரை ரிசெட் செய்துவிட்டு திரும்பினேன்.
கோடியில் இருக்கும் தனுஷ்கோடி

திருப்புல்லாணிக்கு இதுவே என் முதல் பயணம். காலை ஏழு மணிக்கு பெங்களூரிலிருந்து சேலம், நாமக்கல், திருமங்கலம் வழியாக திருப்புல்லாணி சென்ற போது மாலை ஆறு மணி ஆகிவிட்டது.

“திருப்புல்லாணியில் ஹோட்டல் எதுவும் இல்லை... வரும் வழியில் இராமநாதபுரத்திலேயே ஏதாவது டிபன் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுங்கள்” என்றார்கள். தேடியதில் சரியான ஹோட்டல் கிடைக்காமல், பெருமாளை சேவிக்க கிளம்பினோம். புல்லானி பெருமாள் புளியோதரை தந்து அருளினார்.

ஆதிஜெகந்நாதப் பெருமாள்
திரேதாயுகத்தில் ஸ்ரீராமர் சேவித்த ஆதிஜெகந்நாதப் பெருமாள்(ஸ்ரீராமரே சேவித்த பெருமாள் அதனால் ‘ஆதி’ஜெகந்நாதப் பெருமாள் என்று திருநாமம்), கலியுகத்தில் எனக்கு மாலை ஏழு மணிக்கு காட்சி தந்தார்.


திருப்புல்லாணி ஒரு சிறிய ஊர். வால்மீகிராமாயணம் தொடங்கி,  கம்பர், துளசி, அனந்தராமாயணம், அத்யாத்ம ராமாயணம், மஹாவீர சரிதம்... என்று எந்த மொழியில், எந்த இராமாயணமாக இருந்தாலும் சேதுவின் பெருமையை எழுதாமல் இருக்க முடியாது.

விபீஷணன் சரணாகதி நடந்த ஸ்தலம், கடற்கடவுள் சக்கரவர்த்தி திருமகனிடம் சரணமடைந்த இடம். ஸ்தல வரலாறுகளை எடுத்துக்கொண்டால் ரிஷிகள் ஆதிஜகந்நாதனை சரணமடைந்து என்று பல சிறப்புக்களை பெற்று ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு முக்கியமான சித்தாந்தமான சரணாகதியை போற்றும் ஸ்தலமாக ஏற்றம் பெருகிறது.

வாசல் தெளித்துக்கோலம், ஆடு, மாடு மயில் !
காலை ஆறு மணிக்கு வீட்டு வாசலை தெளித்து கோலம் போடுவதை பார்க்க முடிந்தது. வண்டியில் பால் வருகிறது, அதை பாத்திரத்தில் வாங்கிக்கொள்கிறார்கள். தெருவில் பசுக்களும், ஆடுகளும் உங்களை பழைய உலகத்துக்கு அழைத்துச் செல்கிறது. ஆடு மாடு மட்டும் இல்லை மயில்களும்! ( கூடவே சில கேரி பேக் குப்பைகளும் )
எங்கும் மயில்கள்

”வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை” என்று தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடுவது இந்த ஸ்தலத்துக்கு இன்னும் பொருந்தும். கோயில் மீது, நடக்கும் பாதை என்று எல்லா இடங்களிலும் மயில்கள் பலவற்றை பார்க்க முடிந்தது. மயில்களையும், தேசிகன் சன்னதியும் கடந்து கோயில் நுழைந்தவுடனேயே அதன் வாசனையும் அமைப்பும் நம்மை பழைய காலத்துக்கே அழைத்துச் செல்கிறது.

கோயிலுக்கு செல்லும் முன் ‘சக்கரதீர்த’ புஷ்கரணி அழகாக காட்சி அளிக்கிறது. இதைப் பற்றி கடைசியில் விரிவாக.
கோயிலுக்குள் சேதுபதிகள்

சன்னதிக்குள் நுழைந்தவுடன் ஸ்ரீஆதி ஜகந்நாதர் நம்மை வரவேற்கிறார். துவஜஸ்தம்பத்துக்கு பக்கத்தில் இரு பக்கங்களிலும் பெரிய கற்கம்பங்களில் சில ஸ்தானீகர்களின் வடிவங்களை பார்க்க முடிகிறது. ஸ்ரீமத் ஆண்டவன், ஸ்ரீமத் அழகியசிங்கர்கள், ஸ்ரீ வானமாமலை ஜீயர் என வைணவ ஆசார்யர்கள் அனைவருக்கும் இஷ்டமான பத்மாஸினி தாயார்.  பெரும் வரப்ரசாதி. எந்த வரம் கேட்டாலும் அபார கருணையுடன் அனுக்ரஹம் செய்து, ரிட்டன் டிக்கெட் வாங்குவதற்குள் நிறைவேற்றிவிடுவாள்!)

அமைதியான ஆண்டாள் சன்னதி
தாயரை சேவித்துவிட்டு வெளியே வந்தால் எல்லா ஊர்களிலும் போலவே ஆண்டாளுக்கும் ஒரு சந்நிதி பூட்டி இருக்கிறது. ஆடிப் பூரத்தன்று மட்டும் இவளைத் தேடிப் பெருமாள் வந்து சேர்த்தி திருமஞ்சனம். ஆண்டாளை டிஸ்டர்ப் செய்யாமல் அந்த பக்கம் ஸ்தல விருட்டமான அரச மரத்தை கொஞ்ச நேரம் பார்த்துக்கொண்டு இருந்தேன். ’மரங்களின் நான் அரசனாக இருக்கிறேன்’என்கிறான் கண்ணன். இந்த மரம் அடர்ந்து படர்ந்து எல்லோரையும் மன்னித்து ஆசிர்வதிக்கும் மரமாக இருந்தது.

மரங்களின் அரசன் 
பல யுகங்களுக்கு முன் இந்த ஸ்தலம் தர்பக் காடாக இருந்தது. காலவர் என்ற மஹரிஷிக்கு ஜோதி வடிவாக விஷ்ணு காட்சி தந்தார்.  பின்னர் அந்த ஜோதி வடிவமே அனைவரும் அறியும் வகையில் அரசமர ரூபமாக இன்றும் காட்சி அளிக்கிறது. அதே போல இந்த ஸ்தலத்தில் தவம் செய்த கண்ணுவர், புல்லர் என்ற மஹரிஷிகளுக்கும் விஷ்ணு ப்ரத்யக்ஷம். ஜெகந்நாதராக  நாராயணன் காட்சி அளித்த முதல் தலம் என்பதால் அவர் ஆதிஜெகந்நாதன். ஸ்தல புராணத்தில் குறிப்பிட்ட அந்த மரம் இன்றும் இருப்பது நாம் காண வேண்டிய அதிசயங்களில் ஒன்று.
தாயார் 

பொதுவாக அரசமரம் மேல்நோக்கி வளரும். ஆலமரம் போல் விழுதுகள் விடுவதோ விழுதுகள் தொடும் இடங்களில் மரம் உண்டாவதோ கிடையாது. ஆனால் திருப்புல்லாணியில் தல விருட்சமாக இருக்கும் இந்த அரச மரமோ மேல் நோக்கி அதிகம் வளராமல் அதன் கிளைகள் தரை நோக்கி வளைந்து தாழ்ந்தே வளர்கின்றன. அப்படித் தரையைக் கிளைகள் தொடும்போது, ஏதேனும் ஒரு கிளை தரையில் வேர்விட்டு, புதிய மரம் உண்டாகி, அது பெரிதானவுடன் தாய் மரம் பட்டுப்போய், பின் புதிய மரத்தின் கிளைகள் தரையைத் தொட்டு புது மரம் உண்டாகி என்று இப்படி இந்த மரம் இடம் விட்டு இடம் மாறுகின்ற அற்புதம் இங்கு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

மரத்துக்கு கீழே தான் பஞ்சாயத்து நடக்கும், ஆனால் இந்த மரமே ஒரு பஞ்சாயத்தை தீர்த்துவைத்துள்ளது.

ஒரு பஞ்ச காலத்தில் தமிழ் நாட்டு அந்தணர்கள் வடக்கே சென்ற போது அங்கே சரஸ்வதி புத்திரன் சாரஸ்வதன் ஓதிய வேதத்துக்கும் இவர்கள் ஓதியதற்கும் முரண்பாடு ஏற்பட அவர்கள் பிரம்மாவிடம் சென்று கேட்க அவரும் குழம்பி அவர் திருமாலையே கேட்போம் என்று சென்றார்கள். விஷ்ணு இந்த மரத்தடியில் யார் வேதம் சொல்லும் போது இலைகள் ஆடாமல் அசங்காமல் இருக்கிறதோ அதுவே சரி என்று சொல்ல. சாரஸ்வதன் சொன்ன போது இலைகள் அசங்காமல் இருக்க அவர் சொல்லும் வேதமே சரி என்பது புராணக் கதை.

விஷ்ணுவின் மார்பில் எப்போது லக்ஷ்மி குடிக்கொண்டு இருப்பது போல அரசமரத்துடன் வேம்பும் இங்கே இணைந்து இருக்கிறது. அரச மரமும் கூடவே வேம்பும் அதன் மருத்துவ குணங்களையும் யாராவது ஆராயலாம்.
திருகச்சி, திருப்புட்குழி போன்ற இடங்களில் தலவிருட்ஷமாக அரச மரம் விளங்குகிறது என்பது கொசுறு தகவல்.
சயன ராமர் 

இந்த கோயிலில் எங்கும் நுணுக்கமான சிற்ப கலையை காணலாம்.
குறிப்பாக தர்ப்பசயன ராமரும் அவருடைய நாபீகமலத் தண்டின் அமைப்பும் வியக்க வைக்கிறது. தர்பப்ப புல்லில் சயனித்துக்கொண்டு இருப்பதால் இவர் தர்ப்பசயன ராமர். திருவடி பவ்வியமாக ஸ்ரீஆஞ்சநேயர். சயன ராமரை பார்த்தவுடன் ஸ்ரீரங்கம் பெரிய பெருமாளை நினைவுப்படுத்தும் தோற்றம்.
நாங்கள் சென்ற போது கூட்டமே இல்லாத காரணத்தால் சேவித்துக்கொண்டே இருந்தோம். இராமர் இராவணை வீழ்த்த செல்ல வேண்டும் நம்மால் அவருக்கு லேட்டாக கூடாது என்பதால் கிளம்பினோம்.

சீதையைத் தேடி வந்த இராமன் சமுத்திரராஜனை வேண்டி மூன்று நாட்கள் உபவாசம் இருந்தும் அவன் வராததால் சினமுற்ற இராமர் வில்லை எடுக்க சமுத்திரராஜன் தன் பத்தினியுடன் வந்து சரணடைந்த இடம் இங்கே தான். இராவணனின் ஒற்றர்கள் சுகன், சாரணன் இருவரும்இராமனின் தேஜஸைப் பார்த்து நீ சாதாரண மானுடனாக தெரியவில்லை நீர் யார் என்று கேட்க அவர்களுக்கு இராமன் தான் ஆதிசேஷனில் பள்ளிகொண்ட தோற்றத்தைக் காட்டித்தர அவர்களும் இங்கே சரணடைந்தனர். வார்த்தைகளால் விவரிக்க இயலாத அழகனை நாங்களும் சரணடைந்து பக்கத்தில் இருக்கும் சந்தான கோபாலன் சன்னதிக்கு சென்றோம்.

எல்லா கோயிகளிலும் சின்னதாக சந்தான கோபாலன், வேண்டிக்கொண்டால் குழந்தைப் பிறக்கும் என்று அர்ச்சகர் குட்டி கிருஷ்ணரை காண்பிப்பார். ஆனால் இங்கே  தசரதன் புத்திர காமேஷ்டி யாகத்தின் போது ஆதிஜெகந்நாதனை வேண்டி சந்தான கோபால ப்ரதிஷ்டை செய்து வழிபட்டு பெருமாள் - பெரிய சந்தான கோபாலன். முதல் முறை இவ்வளவு பெரிய சந்தான கோபாலனை பார்க்கிறேன்!.

பட்டாபிராமன்
அதன் பக்கம் பட்டாபிராமன் சன்னதி இருக்கிறது. சுமார் 200 வருடங்களுக்கு முன் வந்த சன்னதி இது!.

சீதையைத் தேடிக் கொண்டு கடும் சினத்துடனும், துக்கத்துடனும் இராமன் இருந்த கோலம், அதனால் ஊரில் பல பிரச்சனைகள் பல வர இந்த சீதையுடன் பட்டாபி ராமன் சந்நிதி கட்டப்பட்ட பின் தான் பிரச்சனைகள் இல்லையாம்!.

சேதுக்கரை
திருப்புல்லாணியிலிருந்து நான்கு கிமீ தூரத்தில் சேதுக்கரை என்றழைக்கப்படும் கடற்கரை உள்ளது. இந்த கடற்கரையிலிருந்து கடலை பார்க்கும் போது நமக்கு ஒரு விதமான பிரமிப்பு ஏற்படுகிறது. இந்த கடல் ராஜனுக்கு கர்வம் வந்ததில் துளிக்கூட வியப்பே இல்லை. இராமர் கோபட்ட காரணத்தாலோ என்னவோ
அலைகள் எதுவும் இல்லாமல் சேது சாதுவாக இருக்கிறது.

பெரும்பாலும், இங்கே வருபவர்கள் எல்லாம் தங்கள் பாவங்களுடன் பழைய துணிகளையும் விட்டு செல்கிறார்கள். பாவங்களை பெருமாள் பார்த்துக்கொள்கிறார், பழைய துணிகளை ஒருவர் ஆழ்கடலில் நீந்துபவர்கள் அணியும்கண்ணாடியை அணிந்துக்கொண்டு தேடி எடுக்கிறார்.

ஆஞ்சநேயர் 
கடற்கரையில் ஸ்ரீஆஞ்சநேயர் கூப்பிய கைகளுடன் தனி கோயிலில் கடலை நோக்கி காட்சி தருகிறார். ஆஞ்சநேயர் சன்னதியிலிருந்து கடலை பார்ப்பது விவரிக்க இயலாத காட்சி.

திருப்புல்லாணியிலிருந்து ஊருக்கு திரும்பும் போது நண்பர் ’திருப்புல்லாணி ரகுவீரதயாள்’ ஸ்வாமி கூப்பிட்டு ”சின்னக் கோயில் ஸ்ரீநிவாசப் பெருமாளை சேவித்தீர்களா?” என்றார்.

”இல்லையே அது எங்கே இருக்கிறது ?”
சொன்னார்.
ஸ்ரீநிவாச பெருமாள் கோயில்

வண்டியை  திரு’”U”’ அடித்து ஸ்ரீநிவாசப் பெருமாளை சேவிக்க சென்றோம். கோயிலுக்கு எதிர்புறம் பெரிய ஆலமரம் அமைதியாக இருக்க கோயில் பாழடைந்து காணப்படுகிறது. நின்ற திருக்கோலத்தில் சங்கு சக்கரங்கள் இடம் வலம் மாறிக் காணப்படுகிறது. பெருமாளின் திருமேனியைச் சுற்றி வளைவாகத் திருமாலின் தசாவதாரங்கள் என்று இந்த மூர்த்தியை இந்திய அரசாங்க புதைப் பொருளாராய்ச்சி துறை பாராட்டியுள்ளார்கள்.
பாராட்டிய சிற்பம்

அகஸ்தியர் 


இன்னும் சில காலத்தில் இந்த கோயிலே புதையுண்டு போவதற்கான அறிகுறி தென்படுகிறது. இந்த கோயில் சன்னதியில் சக்கரத்தாழ்வார், விஷ்வக்ஸேனர், பக்ஷிராஜன், நம்மாழ்வார், உடையவர் என்ற பெரிய கோஷ்டியே இருக்கிறது. பெருமாள் ஸந்நிதிக்குப் பக்கம் அகத்தியர் சிலை, தீர்த்தம் உள்ளது.
ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் பின் புறம்

கோயில் இந்த நிலமையில் இருக்க சற்றுத்தொலைவில் சிகப்பு கலர் ஃபைபர் கேபிள் போடுவதற்கு தோண்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆல மரம் - கோயிலுக்கு எதிர்புறம்

இந்த சன்னதிக்கு பக்கம் சற்று தூரத்தில் ”மட்டுக்கு அடங்கா மூனீஸ்வரர் ஆலயத்தை கடந்து செல்லும் போது அங்கே உள்ள சின்ன குளத்துக்கு பக்கத்திலு சேதுசமுத்திரக் கரையிலும் சில சிலைகளைப் பார்த்து துணுக்குற்றேன். நம் நாட்டு ஹெரிடேஜ் இது ! நாளை இவை கடத்தப்பட்டு மோடி அரசு திரும்ப கொண்டு வர வேண்டும்.
சேதுக்கரையில் சிற்பங்கள்

அட - சிற்பங்கள் தான். 

தனுஷ்னோடிக்கு டெம்போவேனில் 150/= க்கு அழைத்துச் செல்கிறார்கள். போகும் வழி எல்லாம் “ஒரு தெய்வம் தந்த பூவே” சினிமா பாட்டு நினைவுக்கு வருகிறது. ”இங்கிருந்து இலங்கை 18கிலோ மீட்டர் தூரம் தான்” என்ற நம் நாட்டின் கோடியான தனுஷ்கோடியில் பாழடைந்த போஸ்ட் ஆபீஸ், ஆங்கிலேயர்கள் காலத்தில் போடப்பட்ட ரயில் பாலம், ராமர் பாலம் கட்டிய மிதக்கும் கல் எல்லாம் பார்த்துவிட்டு வரும் போது அங்கே ஓர் குடிசையின் உள்ளே போர்ட்டபிள் டிவிடி பிளேயரில் இளைய தளபதி விஜய் யாருக்கோ சவால் விட்டுக்கொண்டு இருந்தார். வெளியே  இந்தியாவின் கோடியிலும் ஒருவர் முப்பது ரூபாய் இளநீரை பேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
தனுஷ்கோடி போகும் பாதை 

பாம்பன் பாலத்திலிருந்து கீழே பார்த்தால் சமுத்திர தண்ணீர் முழுக்க ராமர் கலராக காட்சி அளிக்கிறது.

பாலத்தில் ரயில் 

”வில்லால் இலங்கை மலங்கச்சரம் துரந்த” என்று பெரிய திருமொழியில் திருமங்கை ஆழ்வார் வில்லால் இலங்கையையே கலக்கமடித்த அம்புகளை ஏவிய ராமர் பின்னே சென்றுவிட்டது என் நெஞ்சம் அது மீண்டும் வரும் வரை யார் பழித்தாலும், ஏசினாலும், அவன் பொய் வார்த்தையை கேட்டுக்கொண்டு இருப்பேன் என்கிறாள் பரகால நாயகியாக. நமக்கும் அதே எண்ணம் ஏற்படுகிறது.

தனுஷ்கோடி படங்கள் 






குடிசையில் விஜய் படம். 


பிகு:
ஆழ்வார்கள் மங்களாசனம் தவிர, ஸ்ரீ ஆளவந்தார், வேதாந்த தேசிகன் போன்றவர்கள் இந்த ஸ்தலத்தை குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் இந்த ஸ்தலத்தில் பெரியநம்பிகள் வாசம் செய்துள்ளார்.  ஆளவந்தார் குமாரர் தெய்வத்துக்கரசு நம்பி இங்கேயே வாழ்ந்து திருநாடு ஏகினார் என்ற தகவலும் உண்டு. மணவாள மாமுனி அவதார ஸ்தலம் சிக்கல் கடாரம் திருப்புல்லாணியிலிருந்து 30 கி.மீ. தொலைவில் இருக்கிறது.அடுத்த முறை சென்று சேவிக்க வேண்டும்.


சக்கர தீர்த்தம் ஒரு சிறுகுறிப்பு:

சக்கர தீர்த்தம் இன்றைய நிலை
கோயிலுக்கு வெளியே ஐந்து ஏக்க சதுர வடிவில் விரிந்து இருக்கும் புஷ்கரணிக்கு சக்கர தீர்த்தம் என்ற பெயர். தற்கால வரலாறு ஒன்றும் இருக்கிறது. நிச்சயம் எல்லோரும் படிக்க வேண்டும்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த புஷ்கரணி ஒரு சின்ன குட்டையாக, சேறும் சகதியுமாக, பக்கத்தில் இருக்கும் கடல் நீரைக் காட்டிலும் உப்பாக இருந்தது. நீர் நிறம் சில சமயம் சிகப்பாக மாறும்,  அப்போது வியாதிகள் பெருகுவதற்கான அறிகுறி!. இதே குட்டையில் சில சமயம் தாங்க முடியாத துர் நாற்றம் கிளம்பும் அது பெரு மழை பெய்வதற்கான வானிலை அறிக்கை.

கடுமையான வயிற்று நோய்களுக்கு அருமையான மருந்து என்று கரையில் தானக விளையும் உப்பை வடதேசத்திலிருந்து வரும் ‘லாட சந்யாசிகள்’ சித்ரா பௌர்ணமி சமயத்தில் சேகரித்து செல்வார்கள்.

பின் நோக்கி ஸ்தல புராண காலத்துக்கு சென்றால் இங்கே மாலி, சுமாலி என்ற அசுரர்களை விஷ்ணு தன் சக்ராயுதத்தை கொண்டு வீழ்த்த,  சக்கரத்தாழ்வான் இத்திருகுளத்தில் தன் மாசடைந்த திருமேனியை நீராடிப் போக்கிக்கொண்டார் அதனால் இந்த குளத்துக்கு பெயர் சகக்ர தீர்த்தம். பின்பு ராமரே இந்த குளத்தில் நீராடி ஜெகந்நாதனை வழிப்பட்டதால் இந்த குளத்தில் குளித்தால் சகல நன்மைகளையும் பெருவார்கள் என்று அருளினார்.

1993 வரை சிறு குட்டையாக இருந்த இந்த தீர்த்தத்தை ஒரு சிறு தெப்பக்குளமாக அமைத்துத் தருவதாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு கிருஷ்ணன் (ஸ்ரீ அஹோபில மடம் சிஷ்யரும்கூட) வேலையைத் துவக்கினார். அப்படித் தோண்டும் போது படிகள் ஒவ்வொன்றாக தென்பட்டு,  கிட்டதட்ட 27 படிகள் காட்சி கொடுக்க அன்றைய முதல்வரிடம்(அம்மா) சொல்லித் திட்டத்தையே மாற்றி முழு அளவில் வேலை நடந்தது. பல ஆண்டுகளாக மண்ணையும் குப்பையை கொட்டி பாழாகியிருந்த ராமர் நீராடிய குளத்தை சீராக்கி பிரமிக்க வைத்தார் கிருஷ்ணன்.

குளம் சீரானதே தவிர அதில் மழை நீர் மிகவும் குறைவாகவே நிரம்பியது. ஊரில் தண்ணீர் கஷ்டம் வேறு. அப்படியும் 1996ல் ஸ்ரீமத் ஆண்டவன் வந்திருந்தபோது அவர்தான் இங்கு முதலில் நீராடினார்.

பெரியதிருமொழியில் திருமங்கை ஆழ்வார் ”பொன்னங்கழிக்கானல்” என்று அழைக்கபட்ட ஓடை ஒன்று இந்த ஊருக்கு வெளியே இன்றும் இருக்கிறது.
சேமிக்காமல் அதிகம் செலவு செய்து போண்டியானவன் போல், மழைக் காலத்தில் அதில் தண்ணீர் வெள்ளமாய் பெருகி கடலில் கலந்து, பின் வறண்டு கிடக்கும்.

முன்னாள் அமைச்சர் திரு தமிழ்க்குடிமகன் இங்கு வந்திருந்தபோது இந்த ஓடையிலிருந்து வாய்க்கால் வெட்டி திருக்குளத்தில் சேர்த்தால் பிரச்சினை குறையும் என்று கோரினார்கள் ஊர் மக்கள். அவரும் உத்தரவிட்டார். ஆனால் அரசு இயந்திரங்கள் வழக்கம் போல மக்கர் செய்தது.  1997லிருந்து 2002 வரை ஒன்றும் நடக்கவில்லை.

2002ல் கோவில் சம்ப்ரோக்ஷணம் வந்தது, வழக்கம் போல் தண்ணீர் கஷ்டம் நிலவ. மீண்டும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தப்பட்டது. ஆனால் (இயற்பியல்) விதி விளையாடியது; ”water always flows from higher level to lower level” என்ற விதியின் படி ஓடை கீழ் மட்டத்திலும் ஊரில் உள்ள குளம் 12 அடி உயர மேல் மட்டத்திலும் இருந்தால் தண்ணீர் குளத்துக்கு வர முடியவில்லை.

ஓடையிலிருந்து குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வர முடிவு செய்த போது கீழக்கரை முஸ்லீம் ஒருவரின் வயல் வழியாக வரவேண்டிய சூழ்நிலை. அந்த முஸ்லீம் அன்பர் “ஊருக்கு நன்மை என்றால் வயல் முழுவதும் பாழானாலும் பரவாயில்லை” என்று பெருந்தன்மையோடு சம்மதித்தார். ஆனால் அப்படியும் நேரடியாக குளத்துக்கு தண்ணீரை கொண்டு வர முடியவில்லை. ஊருக்கு வெளியே ஒரு சம்ப் ( தமிழில் தொட்டி ) கட்டி, அதில் சேகரித்து பின் அதை ஒரு மோட்டார் மூலம் இறைத்து சக்ர தீர்த்ததுக்கு முன் இருக்கும் மதகு குட்டம் என்னும் 13 ஏக்கர் ஊரணி ( ஊரின் அன்றாட தேவைக்கான நீர் ஆதாரம் !) நிறைந்து பின் அதிலிருந்து சக்ர தீர்த்தம் குளம் நிரம்பியது!

2002பின் இந்த குளங்கள் இரண்டும் வற்றவில்லை. மழை நீரால் நிரம்புகிறது. கூடவே அக்கம் பக்கம் இருக்கும் வீடுகளிலும் கிணறுகள் வற்றாமல் இருக்கிறது. ஊரில் எங்கு கிணறு தோண்டினாலும் நல்ல தண்ணீர் கிடைத்து ஊரில் தண்ணீர்ப் பஞ்சம் அடியோடு இல்லை. இந்தியாவிலேயே சிறந்த மழைநீர் சேகரிப்பு பரிசு இந்த ஊராட்சிக்குக் கிடைத்ததில் வியப்பு ஏதும் இல்லை.

இந்த வேலை எல்லாம் நடந்துக்கொண்டு இருந்த போது அந்த ஊரில் 102 வயது பெரியவர் - இவ்வளாவு படிகளா ? நான் சின்ன வயசில் கூட இதை எல்லாம் பார்த்ததில்லையே என்றாராம். திருப்புல்லாணி பற்றி ”புல்லானி அந்த்தாதி” இருக்கிறது அதில் இந்த குளத்தின் படிகளை பற்றிய குறிப்பு 82ஆம் பாடலில் வருகிறது!.

கோயிலுக்கு பக்கம் குளங்கள் எல்லாம் மழை நீர் சேகரிப்பு திட்டங்களே. அவைகளை போற்றி பாதுக்காக வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையும் கூட.

சக்கர தீர்த்தம் என்ற பெயர் கொண்ட இந்த குளத்துக்கு “சக்கரை தீர்த்தம்” என்ற பெயர் பலகை தவறாக இருந்தாலும் பொருத்தமாகவே இருக்கிறது.

கடைசி தகவல்:  இவ்வளாவு தண்ணீர் இருந்தும், லாரித் தண்ணீர் வாங்குவதையும் மக்கள் நிறுத்தவில்லை. பழைய பழக்கம் !

இந்த பதிவில் அடியேனுக்கு பல தகவல்கள் கொடுத்து உதவியது நண்பர் திரு திருப்புல்லாணி ரகுவீரதயாள் ஸ்வாமி அவருக்கு என் நன்றிகள்.

படங்கள்: சில படங்கள் இணையத்திலிருந்து எடுத்தது; மற்றவை அடியேன் எடுத்தது.

Comments

  1. அருமையான பதிவு,அலுப்பு தட்டாமல் உள்ள நடை .ஆஸேது ஹிமாசலம் என இருக்க வேண்டும். ஸேது முதல் இமயம் வரை

    ReplyDelete
  2. மணவாள மாமுனிகள் அவதார ஸ்தலம் "ஆழ்வார்திருநகரி".நீங்கள் குறிப்பிட்டது போல் 'சிக்கல் கடாரம்' அல்ல, மணவாள மாமுனிகளின் திருத்தாயார் அவதரித்த ஊர் அது.மற்றபடி உங்கள் கட்டுரை பல தகவல்களுடன் சிறப்பாக இருக்கிறது

    ReplyDelete
  3. அருமையான இடமும்...சிறப்பான தகவல்களும்...

    ReplyDelete
  4. பெருமாளை சேவித்த அனுபவத்தை அங்கங்கே பாசுரங்களுடன், ஊரைச்சுற்றிய மற்ற சிறப்புக்களையும் வருணித்த விதம் அருமை. என் தாயாரின் பூர்வீகம் திருப்புல்லாணி.

    தங்களின் அடுத்த விஜயம் திருமாலிருஞ்சோலை கள்ளழகரான ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவிலாக அமையட்டும்

    ReplyDelete

Post a Comment