கல்லூரி காலத்தில் ஆழ்வார்களின் பாசுரங்களில் உள்ள அழகு, பக்தி பற்றிய பேச்சு, அப்பாவுடன் அவதார ஸ்தல விஜயம் என ஆழ்வார்கள் என் கூடவே பயனித்தார்கள்.
ஆழ்வார்கள் கோஷ்டி |
பல இடங்களில் விசாரித்தபோது
“இவ்வளவு சின்னதா அதே மாதிரி செய்ய இப்ப ஆள் கிடையாது” அல்லது
”சார் இவ்வளவு சின்னதா செய்யும்போது நுட்பமா வராது” என்பார்கள். கும்பகோணம் பாத்திரக்கடைகளில் அழுக்கு படிந்த ஏற்கனவே செய்து வைத்த ’ஆழ்வார் செட்’டை காண்பிப்பார்கள்.
வெளிநாட்டுக்கு எக்ஸ்போர்ட் செய்பவர்கள் “ஃபோட்டோவில் இருக்கறதைவிட பிரமாதமா செஞ்சுடலாம் சார் அட்வான்ஸ் கொடுங்க” என்பார்கள்.
2013ல் மலையாள திவ்ய தேச யாத்திரையின் போது எனது இந்த நீண்ட நாள் கனவு நனவாக வாய்ப்புக் கிடைத்தது. சொல்கிறேன்...
யாத்திரையின் கடைசி ஒரு மணி நேரம் எல்லோரும் தத்தம் ஸ்டாபில் இறங்கிக்கொண்டு இருந்தார்கள். பேருந்தே காலியாக இருந்தது. பேச்சு துணைக்கு ஒருவர் என் பக்கம் வந்து உட்கார்ந்தார். அவரிடம் வைகுண்ட ஏகாதசி பற்றி பேசிக்கொண்டு இருந்த போது ஆழ்வார்கள் பற்றிய என் கனவை அவரிடம் சொன்னேன்.
”எனக்கு யாரையும் தெரியாது, ஆனால் என் கூட வங்கியில் பணி செய்த ‘தேனுகா’ ஸ்ரீநிவாசன் கும்பகோணத்தில் இருக்கிறார். அவர் ஓவியம், சிற்பங்கள் மற்றும் கலை விமர்சகர். அவருக்கு யாரையாவது தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கும்” என்று அவர் தொலைப்பேசி எண்ணை என்னிடம் தந்தார்.
சில வாரங்கள் கழித்து, ஒரு நாள் காலை தேனுகாவை தொலைப்பேசியில் அழைத்தேன். என் விருப்பத்தை சொன்னேன்.
“இப்ப இது மாதிரி செய்ய யாரும் இல்லை, இருந்தாலும் நிறைய வேலை, பொறுமை வேண்டும். செய்வார்களா என்று தெரியாது.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க” என்றார்.
ஒரு மாதம் கழித்து திரும்பவும் அவருடன் தொலைப்பேசினேன் “உங்களுக்கு வித்தியாசங்கர் ஸ்தபதி தெரியுமா?” என்றார்.
“தெரியாது”
”நீங்கள் கேட்பது மாதிரி அவர்தான் செய்ய முடியும், இப்ப உள்ளவர்களுக்கு அந்த நுணுக்கம் எல்லாம் தெரியாது, எல்லாம் கமர்ஷியல் ஆகிவிட்டது”
”அவரிடம் கேட்க முடியுமா ?”
”அவருக்கு வயது ஆகிவிட்டது, தவிர அவர் ரொம்ப பிஸியா எங்காவது சுற்றிக்கொண்டு இருப்பார். இப்ப அவர் சிற்பம் எல்லாம் செய்வதில்லை. பன்னிரண்டு ஆழ்வார்கள் பெரிய வேலை, இந்த வேலை எல்லாம் எடுத்துப்பாரா என்று தெரியாது”
“கேட்டுப்பாருங்களேன்”
”சரி உங்க விருப்பத்தை அவரிடம் சொல்கிறேன். அவரை நான் வற்புறுத்த முடியாது”
ஒரு மாதம் கழித்து திரும்ப அவரிடம் கேட்டதற்கு, “சொன்னேன் அவர் யோசிக்கிறார். திரும்ப நான் அவரிடம் அதைப் பற்றி கேட்கவில்லை. விருப்பம் இருந்தால் அவரே என்னிடம் பேசுவார்”
“எதுக்கும் இன்னொரு முறை பேசிப்பாருங்களேன்”
சில வாரங்கள் கழித்து தேனுகாவிடமிருந்து எனக்கு அழைப்பு வந்த்து. “ஸ்தபதியிடம் உங்க விருப்பத்தைச் சொன்னேன், உங்களை நேரில் பார்த்து பேசிய பிறகு முடிவு செய்வார்” என்றார்.
தேனுகா ஸ்ரீநிவாசன் |
செம்புப் பட்டைகள், சிற்பத்தின் கை, கால்கள், நவீன சிற்ப வடிவங்கள் என்று வீடு முழுக்க இறைந்து கிடந்தது.
நான்கு முழ காவி வேட்டி, தாடி, குங்குமப் பொட்டு என்று பார்க்க துறவி போலக் காட்சி அளித்தார் வித்தியாசங்கர் ஸ்தபதி.
ஸ்தபதியிடம் என் விருப்பத்தையும், நான் சேகரித்த படங்களையும் காண்பித்தேன். ஒவ்வொரு படத்தையும் அதன் லட்சணத்தையும் பார்த்து ரசிக்க ஆரம்பித்தவர், “இந்த ஆழ்வார் ராஜாவாக இருந்திருப்பார்.. நான் சொல்லுவது சரிதானே..?...இந்தச் சிற்பம் சோழர் காலத்துச் சிற்பம்.. என்ன அழகு!” என்று வியந்தோதினார். ஓர் ஆழ்வாரின் மூர்த்தியைப் பார்த்து “சில வருடங்களுக்கு முன் செய்தது.. இது பழைய சிற்பம் இல்லை” என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினார்.
”எனக்கு நீங்கதான் செஞ்சு தரணும்” என்றேன்.
“நீங்க கேட்பது மாதிரி எல்லாம் செய்ய இப்ப ஆள் கிடையாது, இந்த வேலையை எடுத்துக்கொண்டால் தவம் போல செய்து முடிக்க வேண்டும். முன்ன மாதிரி உடம்பு ஒத்துழைக்க வேண்டும். எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க நான் ஸ்ரீரங்கம் எல்லாம் போய்விட்டு வரேன். அங்கே இருக்கும் அழ்வர்களை எல்லாம் ஒரு முறை தரிசிக்கிறேன். “எனக்கு செய்யணும்னு உத்திரவு வந்தா உங்களை தேனுகா மூலம் தொடர்பு கொள்கிறேன்” என்றார்.
85 வயது வித்தியாசங்கர் ஸ்தபதி பற்றி தேனுகா கூறியது:
"வித்தியாசங்கர் பூர்வீகம் சுவாமிமலை. இவருடைய அப்பா கௌரிசங்கர் ஸ்தபதி ஸ்ரீரங்கம் கோயிலோட ஆஸ்தான ஸ்தபதி. இவருடைய தாத்தா திருவெள்ளறையின் ஆஸ்தான ஸ்தபதி.
இவருடைய தந்தை ஸ்ரீரங்கம் யானை மண்டபத்தில் கோயிலில் பட்டறை அமைத்து வேலை செய்யும் போது, இவர் அங்கே விளையாடிக்கொண்டு இருப்பார். பிறகு ஸ்ரீரங்கம் சேஷராய மண்டபத்தில் திமிரிப் பாயும் குதிரைகளின் கற்சிலையை வியந்து ரசிக்க ஆரம்பித்தார்.
இவருடைய உறவினர்கள் அனைவரும் சிற்ப நேர்த்தியறிந்த ஸ்தபதிகளாகவும், ஆகம விதிப்படி கோயில் கட்டிட வேலை செய்தும் வாழ்ந்து வருகிறார்கள். செம்பொன்னாலும், ஐம்பொன்னாலும் செய்யப்பட்ட சிலைகளோடுதான் இவர்களது வாழ்க்கை!.
பால்ய வயது ஸ்ரீரங்க சிற்பச் சூழல் வித்தியாசங்கரின் சிற்ப உலகிற்கு வழிவகுத்தது. 1962-இல் சென்னை ஓவியக் கல்லூரியில் மாணவரானார். நவீன சிற்பங்கள் இவரை வெகுவாக கவர்ந்தாலும், மரபை விட்டுவிடவில்லை.
பிறகு கும்பகோணம் ஓவியக் கலைக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
பல சிற்பங்களை வடித்து, பலரை ஆச்சரியப்படுத்தினார்.
வித்தியாசங்கர் ஸ்தபதி |
மத்திய அரசின் தேசிய விருது, தமிழக அரசின் கலைச்செம்மல் விருது என்று எண்ணற்ற விருதுகளை பெற்ற இவரது சிற்பங்கள் இந்தியா, க்யூபா, சிங்கப்பூர், மலேசியா போன்ற அருங்காட்சியகங்கள், கண்காட்சிகளில் இடம்பெற்றுவருகின்றன.
லலிதகலா அகதமியின் தென் மண்டலப் பிரிவு சென்னையில் சமீபத்தில் இவருக்கு "ஆர்டிஸ்ட் ரெசிடன்சி" எனும் மிகப் பெரிய கௌரவத்தை வழங்கி பெருமைப்படுத்தி உள்ளது.
ஸ்ரீரங்கம் ஹை ஸ்கூலில் தன் ஓவியத்துக்காக ராஜாஜி கையால் பரிசு பெற்ற இந்த சிற்பி, இப்பவும் மாதம் இரண்டு முறை ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றுவிடுவார்; சிற்பங்களை பார்க்க தான்!.
ஸ்தபதியை சந்தித்து பிறகு இரண்டுமாதம் இதை பற்றி மறந்துவிட்டேன். ஒருநாள் தேனுகாவிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.
“ஸ்தபதி சரி என்று சொல்லிவிட்டார். கும்பகோணம் வந்தால் சந்தித்து மேற்கொண்டு பேசலாம்” என்றார்.
கும்பகோணம் சென்றேன். ஸ்தபதியிடம் தேனுகா அழைத்து சென்ற போது “அவர் ஒத்துக்க மாட்டார் என்றுதான் நினைத்தேன். உங்களுக்குச் செய்துதர வேண்டும் என்று அவருக்குத் தோன்றியிருக்கு. அதிர்ஷ்டம் தான்” என்றார்.
ஸ்தபதியிடம் ஸ்ரீரங்கம், ஆழ்வார்கள் பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். தொண்டரடிப்பொடி ஆழ்வார் கையில் பூக்கூடை இருக்க வேண்டும் போன்ற ஒவ்வொரு ஆழ்வார் பற்றியும் சொல்லும் போது குறிப்பு எடுத்துக்கொண்டார்.
ஒரு மாதத்தில் மெழுகில் செய்த ஓர் ஆழ்வார் வார்ப்பு போட்டோவை தேனுகா எனக்கு அனுப்பினார். தொலைப்பேசியில் நான் கேட்ட (காது, மூக்கு எல்லாம் பெரிசா இருக்கே?) சந்தேகம் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்தார். சிற்பம் செய்வதில் இவ்வளவு இருக்கிறதா என்று வியந்தேன்.
இரண்டு மாதத்தில் எல்லா ஆழ்வார்களின் மெழுகு வார்ப்புப் படங்களை எனக்கு அனுப்பி “அருமையா வந்திருக்கு தேசிகன்” என்றார் தேனுகா.
மெழுகு வார்ப்பு எப்படி சிலையாகிறது என்று தெரியாதவர்கள் இந்த வீடியோவைப் பார்க்க சிபாரிசு செய்கிறேன்.
ஒவ்வொரு சிலை செய்யும் போதும், நாள்
திருமங்கை மன்னன் மெழுகு வார்ப்பு |
நான்கு மாதம் கழித்து ஆழ்வார்கள் எல்லாம் அருமையாக வந்திருக்கு நீங்கள் நேரில் வந்து அழைத்துக்கொண்டு போகலாம் என்று தேனுகா தொலைப்பேசினார். ஸ்தபதியை நேரில் பார்த்து ஆழ்வார்களை பெற்றுக்கொண்டு தேனுகாவிற்கு நன்றி சொன்னேன். கடந்த எட்டு ஒன்பது மாதங்களாக அவர் எனக்காக பல உதவிகள் செய்திருக்கிறார். ஸ்தபதி வீட்டுக்கு செல்வது, அவர் செய்யும் மெழுகு வார்ப்புப் படங்களை எனக்கு அனுப்புவது, நான் சொல்லும் திருத்தங்களை ஸ்தபதியுடம் சொல்லுவது என பல உதவி!. அவருக்கு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என்று எண்ணி அவரிடம் என் விருப்பத்தைச் சொன்னேன்.
வீட்டுக்கு வந்த திருமங்கை மன்னன் |
“இல்லை சார் என் நீண்ட நாள் கனவு இது, உங்கள் மூலமாக நிறைவு பெற்றிருக்கிறது. ஏதாவது செய்ய வேண்டும்” என்றேன் மீண்டும்.
“எனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றால்... என் புத்தகம் ஒன்றை வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார்
புத்தகம் எழுதுவாரா ? தெரியாமல் போய்விட்டதே என்று எண்ணிக்கொண்டேன்.
மாலை நான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்து “தோற்றம் பின்னுள்ள உண்மைகள் - தேனுகாவின் கலை இலக்கியப் படைப்புகள்” என்ற 400 பக்கப் புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். வாங்கிக்கொண்டேன்.
ஆழ்வார்களை ஸ்தபதியிடம் பெற்றுக்கொண்ட போது ”எனக்கு நம்பெருமாள், தாயார் ஆசாரியர்கள் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதேசிகர் வேண்டும்” என்றேன்
“உடம்பு ஒத்துழைத்தால் நிச்சயம் செய்து தருகிறேன்” என்று வழி அனுப்பிவைத்தார். வரும் வழியில் பல ஆழ்வரகளுடன் பல திவ்யதேசங்களுக்கு சென்று மங்களாசானம் செய்துவிட்டு ஆழ்வர்கள் வீட்டுக்கு விஜயம் செய்த அன்று (2014)பங்குனி உத்திரம்.
ஸ்தபதியிடம் மாலை மூன்று மணிக்கு ”பெங்களூர் வந்து சேர்ந்தேன்” என்று சொன்னவுடன் “உங்கள் தகவலுக்காக தான் காத்துக்கொண்டு இருந்தேன். இனிமேல் தான் சாப்பிடணும்” என்றார் அந்த 85 வயது முதியவர்.
தேனுகாவை பற்றி இதற்குமுன் எனக்கு அவ்வளவாக தெரியாது. ஊருக்கு வந்து அவருடைய புத்தகத்தைப் படித்தபோது அதில் முழுவதும், இசை, ஓவியங்கள், சிற்பம் பற்றி பல கட்டுரைகளை அவர் அடுக்கியிருந்தார். குறிப்பாக அவர் எழுதிய நாதஸ்வர ஆவணப்படம் பற்றிய அவர் அனுபவம் என்னை வெகுவாகக் கவர்ந்த்து. இவ்வளவு பெரியவரை நான் சாதாரணமாக உபயோகப்படுத்திவிட்டேனோ என்று உள் மனம் சொன்னது.
க.நா.சு, கரிச்சான்குஞ்சு போன்றவர்களிடம் பாராட்டுப் பெற்றிருக்கிறார். நாதஸ்வர இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், இளம்பிராயத்தில் நாதஸ்வர கலைப் பயிற்சியும், தாளக் கலைப் பயிற்சியும் பெற்றவர். கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் கலை இளைஞர் பட்டம் பெற்றவர். 1990-இல் தமிழக அரசு விருதோடு மேலும் பல விருதுகளைப் பெற்றவர்.
ஆழ்வார்களுக்கு உடை எல்லாம் அணிவித்து அவருக்கு அதன் படங்களை அனுப்பினேன். சிற்ப உடை பற்றி நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இதில் கூட முனைவர் பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள் என்றார். சிற்பம் பற்றி எவ்வளவு தெரிந்து வைத்துள்ளார் என்று நினைத்துக்கொண்டேன்.
"உங்களை பற்றி முழுவதும் தெரியாமல் போய்விட்டது. அடுத்த முறை சந்திக்கும் போது உங்கள் நாதஸ்வர அனுபவம் பற்றிப் பேச வேண்டும்" என்றேன்.
”தாராளமாக” என்றார்.
சில மாதங்கள் கழித்து ஒரு முறை ஸ்தபதியிடம் பெருமாள், ஆசாரியர்கள் பற்றிப் பேசலாம் என்று போன் செய்த போது எனக்கும் ஸ்தபதிக்கும் பாலமாக இருந்த திரு தேனுகா ஸ்ரீநிவாசன் காலமானார் என்பதை தெரிந்துகொண்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். ஸ்தபதியிடம் வேறு எதைப்பற்றியும் பேச மனம் இசையவில்லை
பிறகு பெருமாள், ஆசாரியர்கள் பற்றிய நினைவு வந்துவிட்டுப் போகும். ஸ்தபதியைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். மாதங்கள் பல ஓடின.
போன வருஷம்(2015) ஆரம்பத்தில் திருச்சிக்கு சென்ற போது உறையூர் நாச்சியாரைச் சேவித்துவிட்டு பேருந்துல் வரும் போது மொபைலில் ஃபேஸ்புக்கை பார்த்துக்கொண்டு இருந்தேன். அகஸ்மாத்தாக நம்பெருமாள் உற்சவ மூர்த்தியின் திருமஞ்சன படத்தைப் பார்க்க நேர்ந்தது. இவ்வளவு நாள் நம்பெருமாளுக்கு இரண்டு திருக்கைகள் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் அந்தப் படத்தில் நான்கு திருக்கைகள்!
ஸ்தபதியிடம் பெருமாள் மூர்த்தியை வடிவம் செய்ய சொல்லும் போது, இதே போல நான்கு திருக்கைகளுடன் செய்ய வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். நம்பெருமாளை விரல்களால் தடவ அவர் மொபைலில் விஸ்வருபம் எடுத்தார் அவர் விஸ்வரூபம் எடுத்த சமயம் மொபைலில் ஸ்தபதியிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு வந்தது.
“நீங்கப் போன வருஷம் வந்த போது பெருமாள், தாயார், ராமானுஜர், ஸ்ரீதேசிகர் வேண்டும் என்று சொன்னீர்களே? ஆரம்பிக்கட்டுமா ?” என்றார்.
வியப்பாக இருந்தது.
“உடனே” என்றேன்.
நம்பெருமாள் உபயநாச்சியாரகளுடன் |
ஸ்தபதியைச் சந்தித்த போது ”உங்கள் மூர்த்தியைச் செய்து கொடுக்கும் வரை உடம்பு ஒத்துழைக்க வேண்டுமே என்று இருந்தது”
நம்பெருமாள் திருத்துழாய் பிரியன் என்று அவர் தோட்டத்திலிருந்து திருத்துழாயை பறித்து வந்து பெருமாளுடன் கட்டிக்கொடுத்தார்.( இது மாதிரி திருத்துழாயை நான் இதுவரை பார்த்ததில்லை. முளைக்கீரை மாதிரி இருந்தது ! ) அதைப் பெருமாளுடன் சேர்த்து வைத்துக் கட்டிக்கொடுத்தா
“ஒரு தீவிர விஷ்ணு பக்தனுடைய ஆசையை நிறைவேற்றிவிட்டேன்” என்று கண்ணீருடன் என்னை வழி அனுப்பிவைத்தார்.
ஸ்ரீராமானுஜர், ஸ்ரீவேதாந்த தேசிகன் |
பெரியாழ்வார் ஆண்டாள் |
ஆழ்வார்கள் விஜயம் - பங்குனி உத்திரம் ( 2014 )
பெருமாள், ஆசாரியர்கள் விஜயம் - பெரியாழ்வார் திருநட்சத்திரம், ஆனி ஸ்வாதி ( 2015 )
அடியேன் தாசன். மிக அருமை. அடியேனூடைய நீண்ட நாள் ஆசை இன்று தரிசனத்திற்கு பிறகு சற்று சமாதானம் ஆயிற்று. மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. அடியேன்
ReplyDeleteஅருமை....
ReplyDeleteமிக மிக அருமையான அனுபவம். நன்றி
ReplyDeleteஅடியேன்
Thanks Swamin.I stumbled upon your facebook post through some connection. Perumal's Kirubai- seems I had the bhagyam of reading this post today. Goosebumps. I just cant describe my feelings. Extremely happy reading such a nice post.
ReplyDeleteArumaiyilum arumai thankalin anubhavam.adiyen saitha bagyam ithai padipathil kidaithathu.danyan aanen.
ReplyDeleteமிக அருமை. மகளும் தந்தையாரும் எமது ஊர். எளிமையான விளக்கம்.
ReplyDeletePadikka padikka thithikum varigal !
ReplyDeleteமெய்சிலிர்க்க வைத்தது. ஒரு நாள் உங்கள் அகத்தில் நம்பெருமான், பிராட்டியுடன், பூர்வாச்சார்களை சேவிக்க வேண்டும். ஸ்தபதியின் கைபேசி எண் கிடைக்குமா? அடியெனுக்கும் சில விக்கிரகங்கள் செய்ய வெண்டும். தாஸன். ஆராவமுதன் ( நானும் என் மனைவி வழியில் பத்மா மோகனுக்கு உறவு. தங்களை அவர்கள் அகத்தில் பார்த்திருக்கிறேன். பரிச்சயபடாதது அடியென் துர்பாக்கியம் )
ReplyDeleteஅருமை. அனுபவம் மிக்க இனிது! அனுபவம் ஞாலத்தினும் மாணப் பெரிது!!
ReplyDelete