Skip to main content

எம்.எஸ்.சுப்புலஷ்மி - 100

எம்.எஸ் என்றவுடன் நினைவுக்கு வருவது ”குறையொன்றுமில்லை”, ”வேங்கடேச சுப்ரபாதம்”, ”அன்னமாச்சாரியா கீர்த்தனைகள்”, ”மீரா பஜன்” என்று சொல்லிக்கொண்டே போகலாம். மற்றவர்களிடம் ( எல்லோரையும் சொல்லவில்லை) இந்த மாதிரி உருப்படியான உருப்படி எதுவும் இல்லை. திருமணம் ஆன புதிதில் என் மனைவி எனக்கு அவர் பாடிய ”சூர்தாஸ் பஜன்களை” அறிமுகம் செய்து வைத்தார். இன்று வரை இதற்கு இணையாக நான் எதையும் கேட்டதில்லை. ( உதாரணத்துக்கு இதைக் கேட்டுப்பாருங்கள் https://mio.to/album/MS.+Subbulakshmi/Surdas+Bhajans  )
சங்கீதம் ரசிக்க முதலில் சாரீரம் நன்றாக இருக்க வேண்டும். உச்சரிப்பு ஒழுங்காக, குரல் பிசிறு தட்டாமல் தேவை இல்லாமல் மேல் ஸ்தாயிக்குப் போய் எவரஸ்டை தொட்ட எடுமண்டு இல்லரியுடன் எல்லாம் போட்டி போடக் கூடாது.  திறமை காட்டுகிறோம் பேர்வழி என்று வேர்த்துக்கொட்டிக்கொண்டு ஸ்வரங்களுடன் ஜிம்னாஸ்டிக் வேலைக் கூடாது. இவை எல்லாம் செய்தால் பாவம் என்ற முக்கியமான விஷயம் காணாமல் போய்விடும்.

இன்று பாடும் பல கலைஞர்கள் ( சண்டைக்கு வந்தாலும் பரவாயில்லை ) பாவம் என்ற ஒன்று மிஸ்ஸிங். அப்படியே இருந்தாலும் செயற்கையாக இருக்கிறது அல்லது சில பாடல்களில் மட்டுமே எட்டிப்பார்க்கிறது. பாடலில் என்ன இருக்கிறது என்று புரிந்துகொண்டு பாட வேண்டும் அப்போது தான் பாவம் வரும். மைக் முன்னால் சின்ன காகிதத்தில் பிட் அடித்தால் வரவே வராது. மவுஸ் பிடித்த குழந்தை கம்யூட்டர் சைன்ஸ் செய்யும் என்று சொல்லுவது மாதிரி தான்.

எம்.எஸ். அவர்கள் பாடல்களை கேட்கும் போது நமக்குப் பரவசம் ஏற்படுகிறது என்றால், பாவத்துக்கு அவர் முக்கியத்துவம் தந்தது தான். அவர் பாடல்களில் ஸ்வரம், சங்கதி எல்லாம் சின்னதாக இருக்கும் ஆனால் கேட்டுக்கொண்டே இருக்கலாம். அழகான பூவைப் பார்க்கும் போது என்ன உணர்வு ஏற்படுகிறதோ அதே ஓர் நல்ல இசையைக் கேட்கும்போதும் ஏற்படும் வேண்டும். எம்.எஸ். இசை உணர்வுப்பூர்வமானது.

திருமணம் ஆகி சில மாதங்களில் நடந்த நிகழ்ச்சி இது. என் மனைவி கர்நாடக சங்கீதத்தை எம்.எஸ் அவர்களின் மகள் திருமதி ராதா விஸ்வநாதனிடம் பல வருடங்கள் முறைப்படி கற்றுக்கொண்டு இருந்தார். திருமணம் ஆன பிறகு ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் என் மனைவியை இசை பயிலக் கூட்டிச் செல்வது என் முக்கிய அலுவல்களில் ஒன்று ( ஓலா இல்லாத காலம் !)

ஒரு மதியம் கிளாஸ் முடியும் தறுவாயில், எம்.எஸ் தன் மகளின் வீட்டிற்குள் நுழைந்தார். முதன்முதலாக அவரை நேரில் பார்த்தேன். அவர் முன் உட்கார மனமில்லாமல், நான் எழுந்து நின்றேன். பிறகு, தரையில் அமர எத்தனித்த என்னை எம்.எஸ் தன் அருகில் இருந்த இருக்கையில் அமருமாறு கூறி விட்டு புது மாப்பிளையை நலம் விசாரித்துவிட்டு என் மனைவியைப் பாடுமாறு பணித்தார்.

என் மனைவி ( என்ன தைரியம் ) எம்.எஸ் ஏற்கனவே அற்புதமாகப் பாடியிருந்த சூர்தாஸின் ஒரு பஜன்-ஐ பாடிக் காட்டினார். அதை முழுவதும் கேட்டு ரசித்துப் பாராட்டினார். அந்த இசை சகாப்தத்தின் அருகில் அமர்ந்திருந்த அக்கணங்களில், என் மனதில் தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளில் வடிப்பது கடினம். அவரிடம் விடைபெறுவதற்கு முன், அவரை வணங்கி ஆசிகள் பெற்றுக் கொண்டோம். போகும் போது எங்களை அவர் இல்லத்திற்கு ஒரு முறை வரும்படியும் கேட்டுக் கொண்டார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி -  100வது பிறந்த நாள் பதிவு.

( படம் : விகடன் )
Comments

  1. இன்னொரு எம் எஸ் இல்லை என்பதே அவர்களின் பெருமை..

    ReplyDelete

Post a Comment