கம்ப்யூட்டர் வயதுக்கு வந்துவிட்டதா ? - 1. கூகுள் ஆண்டவரும் ஏ.ஐ ஆசாரியனும்!
இன்றைய நாளிதழ்களைப் புரட்டினால், தினசரி தங்க நிலவரத்துக்கு அடுத்து அதிகம் அடிபடும் வார்த்தையாக 'ஏ.ஐ' (A.I) வந்துவிட்டது. 'செயற்கை நுண்ணறிவு' என்கிற தமிழ்ச் சொல் இருந்தாலும், பீட்சா, பர்கர் மாதிரி ஏ.ஐ என்பது நம் அன்றாட வார்த்தையாகி வீட்டில் புழங்க ஆரம்பித்துவிட்டது. எல்லாவற்றுக்கும் 'கூகுள் ஆண்டவரை'க் கேட்டுக்கொண்டிருந்த காலம் மெல்ல மலையேறி, இப்போது 'ஏ.ஐ ஆசாரியன்' என்று சொல்ல ஆரம்பித்துவிட்டோம்.
தினமும் செய்திதாளில், அலுவலகத்தில், நண்பர்களுடன் ஏ.ஐ குறித்து படிப்பது, பேசுவதை அவ்வப்போது எழுதலாம் என்று இருக்கிறேன். சாதாரண பாமரனுக்கு புரியும் வண்ணம் எழுத வேண்டும் என்பதே என் எண்ணம்.
நான் கல்லூரியில் படிக்கும் போது, ‘வங்கிகளில் நீங்கள் போடும் கையெழுத்தை ஒரு ஸ்கேனர் கருவி மூலம் பழைய கையெழுத்தோடு ஒப்பிட்டு, அது நிஜமா, போலியா என்று கம்ப்யூட்டரே சொல்லிவிடும்’ என்று ஒரு கட்டுரை எழுதிப் பலத்த கைத்தட்டல் வாங்கியிருக்கிறேன். இன்றைக்குப் பார்த்தால் அது எவ்வளவு ‘சில்லரைத்தனமான’ விஷயம் என்று எனக்கே சிரிப்பு வருகிறது.
அதேபோல, செயற்கை அறிவு பற்றிய படிப்பில் எனக்கும் ஒரு ஆர்வம் ஏற்பட்டு, லிஸ்ப் (LISP), ப்ரோலாக் (ProLog) போன்ற அதற்கான கம்ப்யூட்டர் மொழிகளைக் கற்றுக் கொண்டேன். கம்ப்யூட்டரில் ‘ஹலோ’ என்று டைப் அடித்தால், உடனே அது திரையில் ‘ஹலோ டா எப்படி இருக்கே!’ என்று காட்டும். நான் ‘நலம்’ என்றால், ‘சந்தோஷம்’ என்று அது பதில் சொல்லும்படி ப்ரோக்ராம் செய்து, கம்ப்யூட்டரைப் பேச வைத்துவிட்டேன் என்று உலகை ஜெயித்தது போல் பூரிப்படைந்திருக்கிறேன்.
இந்தச் செயற்கை நுண்ணறிவின் வரலாறு 1950-களுக்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது. நவீன கம்ப்யூட்டர்கள் முளைத்த அந்த ஆதிகாலத்திலிருந்து, நம்ம ஓ.பி.எஸ்ஸின் அரசியல் பயணம் மாதிரி ஏ.ஐ-யிலும் உற்சாகமும் ஏமாற்றமும் ஒரு அலை போல மாறி மாறி வந்துகொண்டே இருந்தன.
இந்த ஏ.ஐயை உருவாக்குவதில் விஞ்ஞானிகள் ஆரம்பத்தில் இரண்டு முக்கியப் பாதைகளில் பயணித்தார்கள். ஒன்றை 'லாஜிக்' (Logic) பாதை என்றும், மற்றொன்றை 'பயாலஜி' (Biological) பாதை என்றும் சொல்லலாம்.
'லாஜிக்' பாதை என்பது கறாரான, பழைய கணக்கு வாத்தியார் மாதிரி. மனிதர்கள் எப்படி லாஜிக்காகத் தர்க்கம் (reasoning) செய்கிறார்கள், எப்படி ஒரு முடிவுக்கு வருகிறார்கள் என்று பார்த்து, அதை அப்படியே கம்ப்யூட்டருக்குள் விதிகளாகத் திணிப்பது. கணிதத்தில் A = B மற்றும் B = C என்றால், A = C என்று ஒரு விதி போன்று. இதை வைத்துக்கொண்டு ஆரம்பகால கம்யூட்டர்கள் அசட்டு அம்மாஞ்சிகளாக இருந்தன. "எல்லா நாய்களுக்கும் நாலு கால் உண்டு. எங்கள் வீட்டு மேஜைக்கும் நாலு கால் உண்டு. எனவே மேஜை ஒரு நாய்!" என்று தர்க்கம் பேசி ’பல்பு’ வாங்கின. நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயத்தில் எல்லாவற்றுக்கும் 'IF This, THEN That' (இப்படி நடந்தால், அப்படி செய்) என்று ஆயிரக்கணக்கில் ரூல்ஸ் (Rules) எழுதினார்கள்.
ஆனால், இரண்டாவது பாதையான 'பயாலஜி' ரொம்பவே சுவாரஸ்யமானது. ஒரு சிறு குழந்தை உலகை எப்படிப் பார்த்துப் புரிந்து கொள்கிறது (perception) என்பதை அடிப்படையாகக் கொண்டது. குழந்தைக்கு நாம் 'ப்ரோக்ராம்' எழுதித் தருவதில்லை. அதுவாகவே தப்புத் தப்பாகப் பேசி, கீழே விழுந்து, திட்டுவாங்கி, சுயமாகக் கற்றுக்கொள்கிறது அல்லவா? அதுபோல, கணித சமன்பாடுகளை ஒதுக்கிவிட்டு, மனித மூளையின் நரம்புகளைப் (Neurons) போல கம்ப்யூட்டரை டிஜிட்டலாக மாற்றி, அனுபவத்தால் கற்க வைப்பது.
சுருக்கமாகச் சொன்னால்: முதல் பாதை கம்ப்யூட்டருக்கு விதிகளை மனப்பாடம் செய்ய வைத்தது. இரண்டாவது பாதை, கம்ப்யூட்டரை மனிதக் குழந்தையைப் போல தப்பு செய்து, அடி வாங்கி சுயமாகக் கற்க வைத்தது.
டெக்னிக்கலாகப் பேசுவதிலிருந்து சற்று விலகி, ஒரு நம்மாழ்வாரின் பாசுரத்தைப் பார்க்கலாம்.
அறிவினால் குறைவு இல்லா அகல் ஞாலத்தவர் அறிய
நெறி எல்லாம் எடுத்து உரைத்த, நிறைஞானத்து ஒரு மூர்த்தி
குறிய மாண் உரு ஆகி, கொடுங் கோளால் நிலங் கொண்ட
கிறி அம்மான் கவராத கிளர் ஒளியால் குறைவு இலமே
இந்தப் பாசுரத்தை இப்போது வந்திருக்கும் 'ஏ.ஐ ஆசாரியனிடம்' கொடுத்து அர்த்தம் கேட்டால், அது தன்னிடம் உள்ள டேட்டாவை(தகவல்களை) வைத்துக்கொண்டு சில வினாடிகளில் இப்படிச் சொல்லும்:
"நிறைந்த ஞானத்தை உடைய மூர்த்தியான கண்ணன், உலகில் உள்ள அறிவு படைத்த நமக்குக் கீதையை அருளினான்."
ஆனால், இதே பாசுரத்தை ஒரு வைணவ ஆசாரியனிடம் கேட்டால், அவர் சொல்லும் அர்த்தமே வேறு.
"எங்களுக்கு அறிவில் ஒரு குறைவுமே இல்லை என்று நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரியும் அறிவில்லாதவர்களுக்கு அவன் கீதையை உரைத்தான்" என்று படிக்க வேண்டும் என்பார். அதுதான் இதில் உள்ள சுவாரஸ்யம்!
வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்ப்பது ஏ.ஐ இயந்திரத்தின் வேலை. ஆனால், அதிலுள்ள முரணை, மனித மனத்தின் அகங்காரத்தைப் புரிந்துகொண்டு உண்மையான பொருளை உணர்த்துவது மனித அறிவு.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வள்ளுவர் அழகாகச் சொன்னார்:
எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.
உண்மைத் தன்மையை ஆராய்ந்து அறிவதுதான் அறிவு.
இன்று இந்த 'ஏ.ஐ ஆசாரியன்' காலத்தில் நாம் வாழத் தொடங்கிவிட்டபடியால், வள்ளுவர் இப்போது இருந்திருந்தால் திருக்குறளை நமக்காகச் சின்னதாக இப்படி 'அப்டேட்' செய்திருப்பார்:
யந்திரம் எப்பொருள் கூறினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதே அறிவு!
வெறும் எண்களையும் டேட்டாவையும் கூட்டிக் கழிக்கும் ஒரு சாதாரண இயந்திரம், தன் மெமரியில் வெறும் 'நாலெட்ஜை' (தகவல்களை) மட்டும் குவித்து வைக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டு, நிஜ உலகை எதிர்கொள்ளத் தேவையான உண்மையான 'இன்டலிஜென்ஸை' (நுண்ணறிவை) வளர்த்துக்கொள்ளத் தொடங்கிய வரலாற்றுத் திருப்பம் இந்த சாட் ஜிபிடி காலம்.
1993-4ல் சுஜாதா எழுதியதைப் பாருங்கள்
….செய்தி வாசிப்பவர் டி.வி.ஸ்டூடியோவுக்கு வரவேண்டாம். அவர் போட்டோ போதும். அதை ஸ்கான் பண்ணிவிட்டு கணிப்பொறிக்குள் எடுத்துக் கொண்டு விட்டால் போதும்.' அனிமேஷன்' முறைகளின்படி வாயசைப்பு, கண் சிமிட்டல் இவையெல்லாம் கணிப்பொறி சேர்த்து விட, டைப் அடித்த செய்தியை வாசித்துக் காட்டும். எதிர்காலத்தில் கீழ்க்காணும் நபர்கள் டி.வி. செய்தி வாசித்தால் ஆச்சிரியமில்லை.
ராஜீவ் காந்தி ஸ்ரீதேவி கொல்லங்குடி கருப்பாயி உங்கள் மனைவி
எதிர்காலத்தில் உண்மை பொய் இரண்டிற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். இப்போதே அதிகம் வித்யாசமில்லைதான்…..
இன்று இவற்றை உங்கள் வீட்டு வாண்டு செய்துவிடும்.
முப்பது வருடங்களுக்கு முன் அவர் சொன்ன இந்த வார்த்தைகள் இன்று 'டீப்ஃபேக்' (Deepfake) வீடியோக்களில் மலையாள ஆண்டிகள் ரீல்ஸில் வலம் வருவதும், நடுரோட்டில் சிங்கம் முழுசாக மனிதனை முழுங்குவதும் சர்வசாதாரணமாக நடக்கிறது.
திடீரென்று வயதுக்கு வருவது போல ‘சாட் ஜிபிடி’ (ChatGPT) என்று ஒன்று வந்து உலகத்தையே புரட்டிப் போட்டுவிட்டது!
-சுஜாதா தேசிகன் 5.3.2026
Comments
Post a Comment