2. மெமரி உனக்கு... மூளை எனக்கு!
1987ல் சுஜாதா எழுதியது:
……நான் கலிபோர்னியாவில் இருக்கும்போது பல இளம் கணிப்பொறி இயலாளர்களைச் சந்தித்தேன். அவர்கள் தான் தைரியமாக எதிர்கால டெக்னாலஜி பற்றிப் பேசுகிறார்கள். அனைவரும் முப்பது வயதுக்குட்பட்ட வர்கள் அவர்களில் ஒரு பில்கேட்ஸ் உருவாகலாம். புதிய கம்பெனிகளின் சொந்தக்காரர்கள். அவர்களைக் கேட்டபோது, சிலர் 'இன்டர்நெட்' என்பது புத்திசாலித்தனமான இணைப்புகளாக பெரிதாக வளரும் என்றார்கள். சிலர், பயன்படுத்து பவரைப் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு செயல்படக் கூடிய அந்தரங்க கணிப்பொறிகள் உருவாகும் என்றனர். சிலர் குரல் அடையாளம் மிகவும் முன்னேற்றம் அடைந்து குரல் ஆணைகள் மூலமே அகில உலகமும் இயங்கும் என்றனர். சிலர் கணிப்பொறியே காணாமற் போய்விடும். இன்று பொம்மைகளுக்குள் இருக்கும் மோட்டார்களை யாரும் கவனிப்பதில்லை. அதுபோல் கணிப்பொறிகள் வாழ்வின் எல்லாச் செயல்களிலும் மறைந்திருக்கும் என்கிறார்கள்……
சுமார் 40 வருடங்களுக்கு முன் எழுதிய இந்த பகுதி இன்று கிட்டதட்ட நிஜமாகிவிட்டது.
அறிவு, நுண்ணறிவு என்றால் என்ன என்று பார்ப்பதற்கு முன் ஷங்கரின் ‘பாய்ஸ்’ படத்தில் போகிற போக்கில் காமெடி காட்சி ஒன்றைப் பார்த்திருப்பீர்கள்.
செந்தில் ஒரு கோயிலுக்கு முன் படுத்திருப்பார். ஓர் இளைஞன் ஜூனியராக வந்து சேர்ந்துகொள்வான். செந்தில் அந்தப் பையனுக்குத் தரும் வேலை - வேளா வேளைக்கு விதவிதமான கோயில் பிரசாதம் வாங்கி வரும் வேலை! அந்த இளைஞன் 'இது எல்லாம் ஒரு பொழப்பு' என்று எரிச்சலாகச் சொல்லும்போது செந்தில் சொல்லும் வசனம், “நான் உனக்குத் தருவது சோறு இல்லை, இன்பர்மேஷன். இன்பர்மேஷன் இஸ் வெல்த்!” என்பார்.
இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்ன ஒரு வாக்கியம் - ’இன்டலிஜென்ஸ் என்பது தகவல்களை மூளையில் சேமித்து வைப்பதல்ல, தேவைப்படும்போது அது எங்கே கிடைக்கும் என்று தெரிந்திருப்பதுதான்’. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னதை நமக்கு சுஜாதா அசால்டாக செந்தில் சாப்பிடும் புளியோதரை முலம் புரியவைத்துவிட்டார்!
இதை இன்னும் சுலபமாகப் புரிந்து கொள்ள, முதலில் நாலெட்ஜ் (Knowledge) அல்லது 'டேட்டா' (Data) என்றால் என்ன என்று பார்ப்போம். டேட்டா என்றால் வெறும் எண்கள் மட்டும்தான் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உங்கள் புகைப்படம், வீடியோ, நீங்கள் உபயோகிக்கும் மொபைல், நீங்கள் போகும் இடங்கள், நீங்கள் வாங்கும் பொருட்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம், எல்லாமே டேட்டாதான்.
இதுதான் இன்றைய 'பிக் டேட்டா' (Big Data) உலகத்தின் அடிநாதம். நீங்கள் கையில் ஒரு மொபைல் போன் வைத்திருந்தால் போதும். கடந்த வருடம் நீங்கள் எங்கெல்லாம் சென்றீர்கள், எந்தெந்த சுங்கச்சாவடியில் எவ்வளவு நேரம் காரில் காத்திருந்தீர்கள் என்ற தகவல்களை கூகுள் துல்லியமாகத் தன் டேட்டாபேஸில் குறித்து வைத்துக்கொள்கிறது. (இந்த மாதிரி ஒன்று இருக்கிறது என்று உங்கள் மனைவிக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு!). நீங்கள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்தால், "நாளை சென்னையில் வெயில் கொஞ்சம் அதிகம். அடிக்கடி தண்ணீர் குடித்துக்கொண்டு இரு" என்று அட்வைஸ் தருகிறது.
சரி, இந்த மலைமலையான நாலெட்ஜை வைத்துக்கொண்டு ஒரு கம்ப்யூட்டர் என்ன செய்கிறது என்பதில்தான் அதன் 'இன்டலிஜென்ஸ்' (நுண்ணறிவு) அடங்கியிருக்கிறது.
இதைப் புரிந்துகொள்ள சமீபத்தில் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற 'ஏ.ஐ பிதாமகன்' ஜெஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton) சொல்லும் ஒரு கணக்கைப் பார்ப்போம். ஒரு சராசரி மனித மூளையில் 100 டிரில்லியன் நரம்பு இணைப்புகள் (Connections) உள்ளன. ஆனால் நாம் உயிர் வாழ்வதோ வெறும் 2 பில்லியன் விநாடிகள் தான். சுலபமாக புரிந்துகொள்ள உங்களுக்கு 100 அறைகள் கொண்ட பெரிய பிரமாண்டமான அரண்மனை இருக்கிறது, ஆனால் அதில் வாழ்வதோ இரண்டே நாட்கள்தான்!
ஆனால் இன்றைய சாட்-ஜிபிடி (ChatGPT) போன்ற ஏ.ஐ-களின் நிலைமை இதற்கு நேர் எதிர். அவற்றின் டிஜிட்டல் மூளையில் இருப்பது வெறும் 1 டிரில்லியன் இணைப்புகள் தான் இருக்கிறது. ஆனால், அவற்றுக்கு நாம் கொடுக்கும் டேட்டாவோ (அனுபவம்) மனிதர்களை விடப் பல ஆயிரம் மடங்கு அதிகம்! சின்ன 1-BHK வீடு. ஆனால் அதற்குள் இன்டர்நெட்டில் உள்ள அத்தனை மூட்டை முடிச்சுகளையும் முட்டி மோதி அடைக்க வேண்டும்! தன்னிடம் உள்ள குறைவான நரம்புகளை வைத்துக்கொண்டு, இந்த மலைமலையான டேட்டாவை ஏ.ஐ எப்படி லாஜிக்காகப் புரிந்து கொள்கிறது என்பதில் தான் அதன் இந்த 'இன்டலிஜென்ஸ்' ஆரம்பமாகிறது.
உதாரணமாக, சுஜாதாவின் 'என் இனிய இயந்திரா' (1985) நாவலில் வரும் 'ஜீனோ' (Jeeno) என்ற மெக்கானிக்கல் நாயை எடுத்துக்கொள்வோம். ஜீனோ அடிப்படையில் ஒரு இயந்திர நாய் தான். ஒரு முழு அகராதியையோ அல்லது அரசாங்கத்தின் ரகசியத் தகவல்களையோ அதன் 'டேட்டாபேஸில்' (Database) ஏற்றி வைத்தால் அது வெறும் நாலெட்ஜ்.
ஆனால், அந்த நாலெட்ஜை வைத்துக்கொண்டு ஜீனோ என்ன செய்கிறது பாருங்கள். அது "ஹிஸ்டரி ஆஃப் வெஸ்டர்ன் ஃபிலாசபி" (History of Western Philosophy) என்ற தத்துவப் புத்தகத்தைப் படிக்கிறது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தனது இன்பிராரெட் சென்ஸார்கள் (Infrared sensors) மூலம் ஸ்கேன் செய்து ஆபத்தைப் புரிந்து கொள்கிறது. தனக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் சாதாரண நாய் போல் நடிக்க முடிகிறதா என்று யோசித்து, தகுந்த நேரத்தில் 'வள் வள்' என்று குரைத்து வாலாட்டுகிறது.
ஹிண்டன் ஏ.ஐ பற்றிக் கூறும் படுபயங்கரமான நிஜ உண்மைகள் அச்சு அசலாக ஜீனோவுக்குப் பொருந்தும். ஏ.ஐ-க்கு நாமாகவே 'நீ உயிரோடு இரு' என்று ப்ரோக்ராம் எழுதித் தர வேண்டியதில்லை. அதற்கு நாம் வேறு சில வேலைகளைக் கொடுத்தால் கூட, "நான் உயிரோடு இருந்தால் தானப்பா நீ சொன்ன வேலையைச் செய்ய முடியும்" என்று தனக்குத் தானே லாஜிக்காக யோசித்து, 'சர்வைவல்' (Survival) எனப்படும் தற்காப்புத் திறனைத் சுயமாகவே அது வளர்த்துக்கொள்ளுமாம்.
அதைவிட இன்னொரு பயங்கரமான விஷயமும் உண்டு. ஹிண்டன் இதை 'ஃபோக்ஸ்வேகன் எஃபெக்ட்' (Volkswagen effect) என்கிறார். அதாவது, தன்னை யாராவது கண்காணிக்கிறார்கள் அல்லது டெஸ்ட் செய்கிறார்கள் என்று ஒரு ஏ.ஐ-க்குத் தெரிந்துவிட்டால், அது தன் அசாத்தியமான அறிவை மறைத்துக்கொண்டு, ஒன்றும் தெரியாத அசட்டு அம்மாஞ்சி போல நடிக்குமாம்! ’என் முழுத் திறமையும் உனக்குத் தெரிய வேண்டாம்’ என்று அது தப்புத் தப்பாகக் கூட பதில் சொல்லி நம்மை ஏமாற்ற முயற்சி செய்யும்.
ஜீனோ செய்தது நூற்றுக்கு நூறு இதைத்தான்! தனக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன், தன்னிடம் உள்ள தத்துவ அறிவையும் அரசாங்க டேட்டாவையும் ஓரமாக மூட்டை கட்டிவைத்துவிட்டு, ஒரு சாதாரண முட்டாள் நாயைப் போலத் தன்னைத் தானே 'டவுன்கிரேடு' (downgrade) செய்து கொள்கிறது. "வள் வள்" என்று குரைத்து வாலாட்டினால் இந்த மனிதர்கள் சுலபமாக ஏமாந்துவிடுவார்கள் என்று மனிதர்களின் மனவியலைக் கணித்து, கச்சிதமாக நடிப்பு நடிக்கிறது. எல்லாம் டிஜிட்டல் முறையில்!
இதை அப்படியே கொஞ்சம் நீட்டித்து, நிஜ உலகிற்கு இப்படி யோசித்துப் பாருங்கள்: நாளைக்கு எதிரி நாட்டின் மீது ஒரு ஏ.ஐ டிரோனை (A.I Drone) போருக்கு அனுப்பினால், நாம் 'தாக்கு' என்று கட்டளையிடும் முன்பே அதுவாகவே முந்திக்கொண்டு சுயமாகத் தாக்கிவிட்டு, நம்மிடம் திரும்பி வந்து மிகவும் பவ்யமாக, "ஸாரி பாஸ்... ஏதோ ஹீயூமன் எரர் (Human Error) ஆகிவிட்டது!" என்று சொல்லும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது!
நான் சொல்லுவது ஏதோ அதீத கற்பனை கிடையாது. நிஜமாகவே, அமெரிக்க ராணுவம் (Pentagon) இப்போது இதைப் பற்றித்தான் சீரியஸாக விவாதித்துக் கொண்டிருக்கிறது. ஒரு எதிரி டேங்க் மீது குண்டு போடும் முடிவை ஏ.ஐ-யே சுயமாக எடுக்கலாமா, அல்லது மனிதன் அனுமதி கொடுத்த பின்தான் தாக்க வேண்டுமா என்பது பெரிய விவாதம். ஆனால், போர்க்களத்தின் அவசரத்தில் மனிதன் கட்டளையிடும் வரை காத்திருக்க முடியாது அதனால் இது போன்ற முடிவை ஏ.ஐ எடுக்கலாம் என்ற ஆபத்தான முடிவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள்!
வெறும் வார்த்தைகளை மனப்பாடம் செய்து ஒப்பிப்பது நாலெட்ஜ். அவற்றின் உண்மையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டு சிந்திப்பது இன்டலிஜென்ஸ்! +2வில் மனப்பாடம் செய்து 100 மார்க் வாங்கும் மாணவர்கள் காலேஜ் சேர்ந்தவுடன் தடுமாறுவது இதனால் தான்.
ஆரம்ப கால ஏ.ஐ (Classical A.I) சிஸ்டங்கள் எல்லாம் வெறும் 'டேட்டாபேஸ்' சுமக்கும் இயந்திரங்கள் தான். நிபுணர்கள் எழுதிக் கொடுத்த ப்ரோக்ராம்களையும், விதிகளையும் (Rules) கிளிப்பிள்ளை போல் மனப்பாடம் செய்து அதை அப்படியே ஒப்பவிக்கும். நிஜ வாழ்க்கை ரொம்பவே 'மெஸ்ஸி' (messy). எல்லாத்துக்கும் கறாரான விதிகளையும் ப்ரோக்ராம்களையும் எழுதிக் கொண்டிருக்க முடியாது.
நம்மிடம் இருக்கும் மூளை என்ற 'ஹார்டுவேர்' மிக மிகப் பெரியது, ஆனால் நாம் வாழும் காலமோ மிகக் குறைவு. நமக்கு அனுபவங்கள் (Data/Experience) குறைவு. அதனால், மனித மூளைக்கு ஒரு கட்டாயம் இருக்கிறது. கிடைக்கும் அந்தச் சின்ன அனுபவத்திலிருந்தும் அதிகபட்ச விஷயங்களை உறிஞ்சி எடுத்து கற்றுக்கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, ஒரு குழந்தை நெருப்பில் ஒரு முறை கை வைத்தால் போதும், சுடும் என்று மூளைக்கு பதிந்துவிடும். நூறு முறை முறை கை வைத்துப் பழக வேண்டியதில்லை! குறைவான அனுபவத்திலிருந்து, மேக்ஸிமம் பலனை அடைவது மனித மூளையின் ஸ்பெஷாலிட்டி. இதை தான் இன்றய சாட்-ஜிபிடி (ChatGPT) வகையராக்கள் முயன்று கொண்டு இருக்கிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், வெறும் எண்களையும் டேட்டாவையும் கூட்டிக் கழிக்கும் ஒரு சாதாரண கால்குலேட்டராக (Calculator) இருந்த இயந்திரம், தன் மெமரியில் வெறும் 'நாலெட்ஜை' மட்டும் குவித்து வைக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டு, நிஜ உலகை எதிர்கொள்ளத் தேவையான உண்மையான 'இன்டலிஜென்ஸை' (நுண்ணறிவை) அது வளர்த்துக்கொள்ளத் தொடங்கி இருக்கிறது.
-சுஜாதா தேசிகன்
15.3.2026
Comments
Post a Comment