பாட்டியின் தீபாவளி தீபாவளி திருநாள் நாயக்கர் காலத்தில்தான் தமிழகத்தில் தொடங்கி இருக்கும் என்று எங்கோ படித்த ஞாபகம். என் பள்ளி காலத்தில் இருந்த தீபாவளி வேறு, இன்று நான் பார்க்கும் தீபாவளி வேறு. தீபாவளி கொண்டாட்டங்களை கெடுத்ததில் முக்கிய பங்காற்றியது ‘இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என்ற கொலைகாட்சிககளுக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. தீபாவளிகள் பல கொண்டாடியிருந்தாலும், திருச்சியில் சிறுவயது தீபாவளி கொண்டாட்டங்கள்தான் இன்னும் நினைவில் இருக்கிறது. பட்டாசு வெடிக்கும் அந்த நாள் மட்டும் தீபாவளி இல்லை, முதலிரவு கணவன்போலச் சில மாதங்களுக்கு முன் எதிர்பார்ப்புகளிருந்து தீபாவளி தொடங்கிவிடும். பட்டாசு லிஸ்ட், புதுத் துணியுடன் தீபாவளி ரிலீஸ் சினிமாவும் அதில் பிறகு சேர்ந்துகொண்டது. அலைப்பேசி இல்லாத அந்தக் காலத்தில் வரும் தொலைப்பேசி அழைப்பில் ’கங்கா ஸ்நானம் ஆச்சா’ என்ற விசாரிப்புகள் இன்று ‘ஹாப்பி தீபாவளி’ ’வாட்ஸ் அப்’ல் சுருங்கிவிட்டது. தீபாவளிக்கு என்ன டிரஸ் என்று முடிவு செய்வது பிரம்ம பிரயத்தனம். அந்த வருஷம் வந்த சினிமாவிற்கும் டிரஸ்ஸுக்கு நிச...