Skip to main content

கல் சொல்லும் கதை

கல் சொல்லும் கதை

image


கோயில் என்றால் அது திருவரங்கம் தான். இன்றும் நாராயணா என்று சொல்லுவதைக் காட்டிலும், திருவரங்கம் என்றால் மனதில் ஒரு கிளர்ச்சி ஏற்படுகிறது. அடுக்குமாடிக்குடியிருப்பு வாங்கும் போது சின்ன அளவில் ’மினியேச்சர் மாடல்’ ஒன்று வைத்திருப்பார்கள். குட்டியாக பார்க்க அழகாக இருக்கும். திருவரங்கம் வைகுண்டத்தின் மினியேச்சர் மாதிரி. அதனால் தான் பூலோக வைகுண்டம் என்கிறோம்.

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அனைத்து உலகங்கள் உய்யச்*
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்*
மருவிய பெரிய கோயில் மதில் திருவரங்கம் என்னா*
கருவிலே திரு இலாதீர்! காலத்தைக் கழிக்கின்றீரே.

அதாவது ஸ்ரீராமருக்கு ஏற்ற இடம் திருவரங்கம் ‘பெரிய’ கோயில். திருவரங்கம் என்று சொல்லவில்லை என்றால் நீங்க பிறந்ததே வேஸ்ட் என்று சொல்லிவிட்டார். திருவரங்கம் என்ற சொல் எப்படி நம் மனதை வசீகரிக்குமோ அதைவிட வசீகரிப்பவர் நம்பெருமாள்.

அந்த நம்பெருமாளை அரையர் ”மந்தாரம் கண்டால் மறையும் பெருமாள்” என்பார். அதாவது நம்பெருமாள் புறப்பாட்டின் போது ’மப்பும் மந்தாரமாக’ மழை வருவது மாதிரி இருந்தால் உடனே நம்பெருமாள் கோயிலுக்கு உள்ளே சென்றுவிடுவார். ஒரு மழைத் துளி கூட அவர் முகத்தில் படாதபடி ஸ்ரீரங்கத்தில் வாழ்பவர்கள் அவரை காத்துக்கொண்டு இருக்கிறார்கள். அதனால் தான் ஆண்டாள் திருவரங்கத்தில் வாழ்பவர்களை “நல்லார்கள் வாழும் நளிரரங்கம்” என்கிறாள்.

இப்பேர்ப்பட்ட திருவரங்கத்துக்கும், நம்பெருமாளுக்கும் ஆபத்து வந்தது.

image

கல் சொல்லும் கதை

படத்தில் இருக்கும் கல்லை பற்றி தெரிந்துக்கொள்ளும் முன் அதற்கு பின்னால் 800 வருட சரித்திரம் இருக்கிறது.

உங்களை சுமார் 800 ஆண்டுகள் பின்னோக்கி ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து செல்ல போகிறேன்.

ஸ்ரீரங்கத்தில் ராமானுஜருக்கு பிறகு எம்பார், பட்டர், நஞ்சீயர், நம்பிள்ளை ஆகியோர் ஸ்ரீராமானுஜரின் நியமனப்படி கோயில் நிர்வகித்து வந்தார்கள்.
நம்பிளையின் சிஷ்யர்களில் இரு கண்களாக போற்றப்படுபவர் இருவர் - வடக்குத் திருவீதிப்பிள்ளையும், பெரியவாச்சான் பிள்ளையும்.

வடக்கு திருவீதிப்பிள்ளைக்கும் அவர் மனைவி ஸ்ரீரங்கநாச்சியாருக்கும் கிபி 1205ல் ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் பிள்ளை லோகாசாரியார் அவதரித்தார். இவரும் இவர் தம்பி அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் ஆகிய இருவரும் ஸ்ரீவைஷ்ணவ தொண்டிற்கு குடும்ப வாழ்கை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக திருமணம் செய்யாமல் பிரம்மசாரியாகவே ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தை வளர்த்தனர். இருவரும் ஸ்ரீரங்கத்தின் இருகண்களாக விளங்கினார்கள்.

ஸ்ரீரங்கத்தில் பிள்ளைலோகாசார்யர் தம் சிஷ்யர்களுக்கு உபதேசங்கள் செய்து வந்த காலத்தில் டில்லியை ஆட்சி செய்த முகம்மதிய மன்னன் கியாசுதீன் துக்ளக் தன் மகன் உலூக்கானை இளவரசனாக முடிசூட்டினான்.
( இவனே பின்னாளில் முகமதுபின் துக்ளக் என்று பெயர் சூட்டிக்கொண்டான்). கிபி 1321ல் தென் இந்தியாவின் மீது படையெடுக்க விரும்பினான். அவனுடைய முக்கிய குறிக்கோள் தங்க வைரங்களின் கருவூலமாக திகழும் கோயில்களைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே. கிபி1323 ஆம் ஆண்டு ஆனி மாதன் 22ஆம் தேதி டில்லியிலிரிந்து பல போர்வீரர்களுடனும், 60,000 குதிரைப்படையுடன் புறப்பட்டான்.

தொண்டை மண்டலத்தை சேதப்படுத்திய உலூக்கான் திருச்சியை நோக்கி விரைந்தான். வழியிலுல்ல சிவ, விஷ்ணு ஆலயங்கள், குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை பாழ்படுத்தினார்கள், அந்தணர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், பெண்கள் கற்பை இழந்தார்கள், கோயில் விக்ரஹங்களை உடைத்து நொறுக்கினார்கள். நீர் நிலைகளை பாழ்படுத்துவதன் மூலம் நீர் ஆதாரமின்றி கொடிய பஞ்சம் தலையெடுக்கும், அதனால் மக்கள் மடிந்துப்போவார்கள் என்பது முகம்மதியர்களின் போர்முறைகளில் ஒன்றாகும்.

ஸ்ரீரங்கத்தை நோக்கி முகம்மதிய படை வருகிறது என்ற செய்தி கேட்டு அரங்கனுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து நிகழலாம் என்று அஞ்சி, ஸ்ரீரங்கநாராயண ஜீயர், அர்சகர்கள், திருகோபுரத்து நாயனார், ஸ்ரீபிள்ளைலோகாசாரியார், ஸ்ரீவேதாந்த தேசிகனும் மற்றும் சிலர் ஒன்றுக் கூடி அழகிய மணவாளன் முன்பு இங்கேயே இருப்பதா ? அல்லது கோயிலை விட்டு புறப்படுவதா ? இதில் எது விருப்பம் என்று திருவுள்ளச் சீட்டு போட அதில் பெருமாள் கோயிலில் இருப்பதே விருப்பம் என்று வந்தது. அதன் பின் வழக்கம் போல் கோயில் வேலைகள், உத்ஸவம் என்று ஈடுபட்டனர்.

பங்குனி உத்ஸவம் ஆரம்பித்து எட்டாம் நாள் பன்றியாழ்வான்(வராகப் பெருமாள்) கோயிலில் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்த சமயம், அங்கே பன்னிராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் குழுமியிருந்தார்கள். அந்த சமயத்தில் முகம்மதியர்கள் சமயபுரம் கடந்து வருகிற செய்தி கேட்டு ஏற்கனவே 12 ஆண்டுகளுக்கு முன் மாலிக் கபூர் என்பவன் ஊரையும் கோயிலையும் துவம்சம் செய்துவிட்டு போனது நினைவுக்கு வந்து அவர்களுக்கு நடுக்கத்தை கொடுத்தது. அவர்களுக்கு முதலில் தோன்றிய எண்ணம் தங்களை காத்துக்கொள்ளுவது இல்லை கோயிலையும், பெரிய பெருமாள், நம்பெருமாள், தாயாரை எப்படி காப்பது என்பது தான். உடனே செயல்பட்டார்கள்.

அழகிய மணவாளனையும் ஊரைவிட்டு வெளியேற்ற முடிவு செய்தார்.
நம்பெருமாள் ஊரை விட்டு வெளியேறுகிறார் என்ற செய்தி கூடி இருந்த ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு தெரிந்தால் அவர்கள் அனைவரும் வருத்தமடைந்து பெருமாளைப் பின்தொடர்ந்தால் அது பேராபத்தில் முடிந்துவிடும் என்று கருதி பிள்ளைலோகாசரியர் ஒரு சிறு தந்திரம் செய்தார். சன்னதிக்கு முன்பாக இருக்கும் திரைச்சீலையை தொங்கவிடச் செய்து, ஆலய மணியை அடிக்கச் செய்தார். இதனால் பெருமாளுக்குத் திருவாராதனம் நடைபெற்றுக்கொண்டு இருப்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது. திரைச்சீலைக்கு மறுபுறம் திருகோபுரத்து நாயனாரும், பிள்ளைலோகாசாரியாரியரும் அவருடை அந்தரங்க சிஷ்யர்கள் அழகியமணவாளனுக்குத் தீங்கு நேரதபடி அவர்கள் வகுத்த திட்டத்தின்படி பெருமாளையும், நாச்சிமார்களையும் தயார் நிலையில் இருந்த மூடுபல்லக்கில் எழுந்தருளிப்பண்ணிக்கொண்டு யாரும் அறியாத வண்ணம் ஸ்ரீரங்கத்தை காவேரி ஆற்றின் தெற்கு கரையிலுள்ள மாரச்சிபுரம் அடைந்து, பிறகு மணப்பாறை மற்றும் வேலூர் மார்க்கமாக தென் திசை நோக்கி கொடிய மிருகங்கள், காடுகள் என்று பாராமல் விரைந்தார்கள்....

அதே சமயம் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளை காக்க ஒரு குழு பிள்ளைலோகாச்சாரியாருடன் செல்ல ஸ்ரீரங்கத்திலிருந்து தங்கி செல்பட்டவர்களுக்கு தலைமை தாங்கியவர் சுதர்சன பட்டர் கோயிலை நோக்கி ஓடினார். பெரிய பெருமாளுக்கு முன் சுவர் ஏழுப்பி, தாயரை விலவ் மரத்துக்கு அடியில் புதைத்து.. அவருக்கு வயதாவிட்டது அதனால் என்ன செய்வது என்று தெரியாத சுதர்சன பட்டர் ஸ்ரீபாஷ்யத்திற்கு எழுதிய ‘ஸ்ருத பிரகாசிகை’ என்ற உரையையும் ( நடாதூர் அம்மாள் காலட்ஷேப குறிப்புகள் ) பட்டரின் இரண்டு புதல்வர்களையும் காப்பாற்றும் பொறுப்பை ஸ்ரீவேதாந்த தேசிகரிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் பன்றியாழ்வான் சன்னதிக்கு சென்ற போது அங்கே 12000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டு அந்த இடமே போர்களமாக அவரும் அங்கேயே கொல்லப்பட்டு பரமபதித்தார்.

வேதாந்த தேசிகன் ஊரைவிட்டு கிளம்பும் முன் உலூக்கான் படை ஸ்ரீரங்கத்தை ஆக்கிரமித்துக்கொண்டு கோரதாண்டவம் ஆடியது. எந்த இடத்தில் தங்கினாலும் தனக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்திருந்தார். அதனால் தானும் இரண்டு குழந்தைகளும் பிணக்குவியல்களுக்கு (சரியாக சொல்ல வேண்டும் என்றால் dead and the dying) நடுவே பிணமாக கிடந்தார். உலூக்கான் படை அந்த இடத்தை விட்டு அகன்ற பின்னர் சத்தியமங்கலம் வழியாக மேல்கோட்டை வந்தடைந்தார் வேதாந்த தேசிகர். கூடவே கையில் ‘ஸ்ருத பிரகாசிகை’ ஓலைச்சுவடியையும், பட்டரின் இரண்டு குழந்தைகளும். ( இதனால் தான் ஸ்ரீபாஷ்யத்தை சேவிக்கும் முன் இன்றும் ஸ்ரீவேதாந்த தேசிகரின் தனியங்கள் சேவிக்கப்படுகிறது )

ஸ்ரீபிள்ளைலோகாசரியர் மற்றும் அவரது சீடர்கள் காட்டுவழியில் செல்லும் போது திருடர்கள் தாக்கிப் பெருமாளுடன் வந்த நகைகள், பாத்திரங்களை அபகரித்து சென்றனர். பிள்ளைலோகாசாரியாரும் தம்மிடமிருந்தவற்றையும் திருடர்களிடம் கொடுத்து அவர்களுக்கு உபதேசங்களையும் வழங்கினார். அவர்கள் திருந்தி அபகரித்த செல்வத்தைத் திருப்பித்தந்த போதும் பெற்றுக்கொள்ளாமல், அழகிய மணவாளனை விட்டுவைத்தார்களே என்று உகந்து திருமாலிருஞ்சோலையை நோக்கி விரைந்தார்கள். அப்போது நம் பிள்ளைலோகாசாரியருக்கு வயது 118 !

பல நாட்ககளுகளுக்கு பின் கடும் பயணத்தை மேற்கொண்ட பின் திருமோகூருக்கு அருகில் ஆனைமலை அடிவாரத்தில் ஜ்யோதிஷ்குடி என்ற கிராமத்தை சென்றடைந்தனர். காடும், குகையும், செந்தாமரை குளமும் அதன் அருகில் வற்றாத சுனையும் அமைந்த அந்த இடமே உகந்தது என்று உணர்ந்தார்கள்.

அழகிய மணவாளனைப் பின் தொடர்ந்து வரும் முகம்மதியர்கள் மதுரையையும் தாக்ககூடும் என்பதாலேயே மதுரை நகரின் எல்லைப் பகுதியான ஜ்யோதிஷ்குடியில் ஒரு குகையில் மறைவாக அழகியமணவாளனை எழுந்தருளப் செய்து திருவாராதனம் செய்தார். அப்போது நம்பெருமாள் திருமுகத்தில் வியர்வை அரும்பியது. தம்மோடு தொடர்ந்து வந்த திருமலையாழ்வாரின் திருத்தாயரான மூதாட்டியைப் பெருமாளுக்கு விசிரிவிடச் சொன்னார். அவள் பெருமாளின் திவ்யமான திருமேனி வியர்க்குமோ ? என்று வினவ அதற்கு பிள்ளைலோகாசார்யர் ”வேர்த்துப் பசித்து வயிறசைந்து” என்ற ஆண்டளின் பாசுரத்தை ( நாச்சியார் திருமொழி 12-6) நினைவுறுத்தினார். அவளும் விசிர பெருமாளுக்கு வியர்வை அடங்கியது.

இதற்கிடையில் உலூக்கான் நடத்திய படுகொலைகளும் அடித்த கொள்ளைளும் ரத்ததை உறையச் செய்பவை.

வாசகர்களுக்கு ஓர் எச்சரிக்கை: அடுத்த சில பகுதிகளில் அதிக ரத்தம் சம்பந்தமான விஷயங்கள் இருக்கிறது.

மதுராவிஜயம் என்ற காவிய நூல் ஒரு வரலாற்று ஆவணம் அதிலிருந்து முகம்மதியர்களால் கோயில்களுக்கு இழைக்கப் பட்ட கொடுமைகள் சிலவற்றை சுருக்கமாக இங்கே தருகிறேன். 
(பிகு: மதுராவிஜயம் என்றால் என்ன ? )
'திருவரங்கத்தில் அரவணைமேல் துயில் கொள்ளும் அரங்கனது உறக்கம் கலையாதிருப்பதற்காக மேலேயிருந்து விழுந்த கற்களை ஆதிசேஷன் தன் தலைமேல் தாங்கி நின்றான்.  அந்த கோயிலில் மற்ற கடவுள் சிலைகளுக்கு ஏற்பட்ட ஆபத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. திருக்கோயிலின் கதவுகளைப் பூச்சிகள் செல்லரித்துக் கொண்டிருந்தன. மஹா மண்டபங்களிலும் தோரண வாயில்களிலும் செடி கொடிகள் வளர்ந்து தொங்கிக்கொண்டு இருந்தன.
ஒரு காலத்தில் மிருதங்கத்தின் ஒலி பரவியிருந்த இடத்தில் குள்ள நரிகள் ஊளையிடும்  ஓசை பரவியிருந்தது. திருவரங்கனுடைய திருப்பாதங்களை வருடிச் சென்ற காவிரியாறு தன்னுடைய  போக்கை மாற்றிக் கொண்டு முகம்மதியர் மேற்கொண்ட அழிவைப் பிரதிபலிப்பதுபோல பல கிளைகளாக பிரிந்துப் பாயுமிடங்களிலெல்லாம் வெள்ளப் பெருக்கெடுத்து விளைநிலங்களைப் பாழ்படுத்திச்சென்றது. அழிவை ஏற்படுத்திய முகம்மதியர்களுக்கு எந்த வகையிலும் தான் சளைத்தவள் அல்ல என்று சொல்லுவது போல இருந்தது காவிரி நதியின் இந்தச் செயல்.
திருவாய்மொழியில் ”வடமொழி மறை வாணர் வேள்வியுள் நெய் யழல்வான்புகை போய் திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும்” என்ற பெருமையை உடைய திருவரங்கத்தின் திருவீதிகளில் மாமிசத்தை வாட்டுவதால் ஏற்படும் புகையும் படையெடுத்து வந்த முகம்மதியப் படைவீரர்கள் குடித்துக் கும்மாளமிடும் ஒலியுமே நிறைந்திருந்தன.
மதுரையைச் சூழ்ந்திருந்த பசுமை நிறைந்த காடுகள் அழிக்கப்பட்டன. நெடிதுயர்ந்த தென்னை மரங்கள் வெட்டப்பட்டு அவை இருந்த இடங்களில் நீண்ட இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்ட அவற்றில் இரக்கமின்றிக் கொல்லப்பட்ட மனிதர்களின் தலைகள் பொருத்தப்பட்டிருந்தன….காதும் மூக்கும் அறுக்கப்பட்டு அந்தணர்கள் அவலக்குரல் ஒலித்துக் கொண்டிருந்தது. ….அழகான மங்கையர் தாமரபரணி ஆற்றில் குளித்திடும் போது பெருகி ஓடிய நீரில் அவர்கள் மேனியிலிருந்து கரைந்து வந்த சந்தனம் எங்கும் நறுமணம் பரப்பிக் கொண்டு சென்ற நிலைமாறி, முகமதியர்களால் வெட்டப்பட்ட பசு மாட்டின் சிவந்த குருதி நீரில் கலந்து அந்த நீரில் வெண்மை நிறைத்தை சிவப்பு நிறமாக்கிக் கொண்டிருந்தது… “
2005ல் சுஜாதா ”யாராவது கோவிந்தா கூட்டத்தின் பாடல்களை உன்னிப்பாகப் படியெடுத்தால், கி.பி. 1323-ல் முகமதியர் படையெடுப்பின்போது 13,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி பற்றி ஏதாவது செய்தி கிடைக்கலாம். அல்லது வெள்ளைக் கோபுரத்தில் ஏறி இரண்டு ஜீயர்களும், அழகியமணவாள தாசர் என்பவரும் தற்கொலை செய்து கொண்ட செய்திகூட ஒளிந்திருக்கலாம்” என்று ஆனந்த விகடனில் எழுதிய போது பல எதிர்ப்பு வந்தது.
இது எல்லாம் கட்டுக்கதை என்று ஒதுக்குபவர்கள்  Ibn Batuta, the Moorish traveler வெளிநாட்டு யாத்திரை குறிப்பின் ஒரு பகுதியில் முகமதியர்களின் கொடுமைகளை விவரிக்கிறது. இந்த குறிப்புகள் நேரில் அவர் தன்னுடைய கண்களால் கண்ட காட்சிகள். கண்களில் நீர் வர வைக்கிறது.
பட்டுடா பல ஊர்களுக்குச் சென்றபோது இந்துக்களுக்கு எதிரான அட்டூழியங்களை தாம் கண்டபடியே விவரித்து உள்ளார்
"அடர்ந்த காடுகளின் ஊடே செல்லும்போது ஆங்கிருந்த கடவுள் நம்பிக்கை உடையோர் கைதிகளாக அழைத்து வரப்பட்டனர். அவ்வாறு அழைத்து வரப்பட்ட கைதிகள் அவரவர் மனைவி மற்றும் குழந்தைகளோடு இழுத்து வரப்பட்டனர். இவர்கள் அனைவரும் நான்கு திசை களிலும் முள் வேலிகளால் மூடப்பட்ட மைதானத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். மூன்றடி உயரத்திற்கு எழுப்பப் பட்ட உயரமான இடத்திலிருந்து அவர்கள்மீது தீப்பந்தங்கள் எறியப்பட்டன.
இவர்கள்மீது முகம்மதியர்கள் தங்கள் கையில் கிடைத்த தீப்பந்தங்களோடு முரட்டுப் போர் நடத்திடுவர். இவர்களுக்கு உதவியாக சுல்தானின் முகம்மதியப் படை வீரர்களும் கலந்து கொண்டு தாக்குதல்களைத் நடத்திடுவர். மறுநாள் காலை அவர்கள் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து நான்கு வாசல்கள் வழியாக அவர்கள் வெளியேற்றப் படுவர். அப்போது அவர்கள் கையில் இருந்த நாணல் செடிகொண்டு கம்பங்களில் பிணைத்திடுவர். அவ்வாறு பிணைக்கப்பட்டவர்களுக்கு முன்பு வெட்டிச்சாய்க்கப்படுவர். சிறு குழந்தைகளை இரக்க மின்றிக் கொன்று அவர்களுடைய அன்னையின் மார் பகங்களில் தூக்கியெறிவார்கள். இவ்வாறான படுகொலை நடந்த பிறகு மீதமுள்ள இந்துக்கள் அந்த இடத்தில் கொண்டு வரப்பட்டு மீண்டும் கொல்லப்படுவர்.
அடுத்த குறிப்பு இன்னும் மோசம் :
சுல்தானோடு உரையாடிக் கொண்டிருந்த போது, சுல்தானுக்கு வலதுபுறம் Gaziயும், இடதுபுறம் நானும் நின்று கொண்டிருந்தேன். அப்போது கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு இந்துவும், அவனுடைய மனைவியும், ஏழு வயது நிரம்பியிருந்த அவர்களுடைய மகனும் சுல்தான் முன்பு கொண்டு வந்து நிறுத்தப்பட்டனர். அப்போது அந்த இந்துவினுடைய தலையைச் சீவிக் கீழே விழச் செய்திடுமாறு ஆணையிட்டு சைகை புரிந்தான் சுல்தான். அதன்பின் அவனுடைய மனைவியும், மகனும் இவ்வாறே கொல்லப் பட்டனர். இந்தக் காட்சியை என் கண் கொண்டு காண இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டேன்" என்கிறார். இந்த குறிப்புக்களை படித்தால், உல்லுகானின் படை ஸ்ரீரங்கம் வந்த போது என்ன செய்திருக்கும் என்று ஒருவாறு வாசகர்கள் யூகிக்கலாம்.

உல்லு கானின் படை, காஞ்சிபுரத்தை கபளீகரம் செய்துவிட்டு திருவரங்கம் நோக்கி வந்தது. அன்றும் ஸ்ரீரங்கத்தில் விழாக்கோலம். ஸ்ரீரங்கத்தில் வருட முழுவதும் விழாக்கள் தானே. படைகள் சமயபுரம் வந்திவிட்டது என்று செய்தி வந்த போது அங்கே இருந்த பெரியவர்கள் பதட்டதுடன் என்ன செய்வது என்று பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

உல்லு கான் கோயிலுக்குள் நுழைந்ததும் அவன் உற்சவர் விக்கிரகத்தைத்தான் தேடினான். உற்சவர் இல்லாத்தால் கோபத்தில் அங்கே கூடியிருந்த அனைத்து ஸ்ரீவைஷ்ணவர்களையும் கொன்றுகுவித்தான். அன்று மட்டும் ஸ்ரீரங்கத்த்தில் 12,000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டனர். இதைப் “பன்னீராயிரம் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம்” என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.

 ஆசாரியபுருஷர்கள் தாங்கள் இதை செய்தோம் இப்படி வாழ்ந்தோம் என்று எந்த சுயசரிதையை எழுதிக்கொள்ளவில்லை. அவர்களுக்கு அது முக்கியமில்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் திவ்யபிரபந்தமும், ஸ்ரீபாஷ்யமும் அதனை ஒட்டிய உரைகளுமே. நம்பிள்ளை ஈட்டில் அடிக்குறிப்புக்களை கொண்டு பல வரலாற்று தகவல்களை அறிந்துகொள்ள முடிகிறது.  அதை வைத்து தான் அவர்கள் வாழ்ந்த காலத்தை ஒருவாறு அனுமானிக்கலாம்.

நம் நாட்டில் வரலாறு குழந்தைகளுக்கு சரியாக சொல்லிக்கொடுப்பதில்லை. நாம் படிக்கும் வரலாறு என்பது அசோகர் மரம் நட்டார், அக்பர் கையில் ரோஜாப்பூ, பாடங்கள் தான். கோபணார்யனைப் பற்றியும் அவரைப் பற்றிய கல்வெட்டு ஒன்று இன்றும் ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது என்று எவ்வளவு பேருக்கு தெரியும் ? ஸ்ரீரங்கத்தில் இருப்பவர்களுக்கு அங்கே 644 கல்வெட்டுக்கள் இருக்கிறது, அதில் தமிழ், மராத்தி, ஒரியா, கன்னடம், வடமொழி, மணிபிரவாளம் என்று பல மொழிகளில் இருக்கிறது என்று ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்களுக்குக் கூட தெரியாது என்று நினைக்கிறேன்.

மாலிக் கபூர், துக்ளக், மதுரை சுல்தான்கள் செய்த கொடூரங்களை வரலாற்று பாட நூல்களில் ‘they plundred’ என்று சுலபமாக எழுதி பத்து மார்க் வாங்கிவிட்டு வரலாற்றை படித்துவிட்டோம் என்று நினைக்கிறோம்.

(பிகு: துக்ளக் பற்றிய நம் பாட நூல் என்ன சொல்லுகிறது ?)

ஸ்ரீரங்கத்தில் பன்னீராயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் தலை துண்டிக்கப்பட்ட செய்தி கேட்டு பிள்ளைலோகாசார்யர் மிகவும் வருந்தினர். ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஏற்பட்ட துயரத்தாலும், வயோதிகத்தாலும் வழிநடை அலுப்பினாலும் உடல்தளர்ந்து நோய்வாய்ப்பட்டார். தமக்கு அந்திம காலம் நெருங்வதை உணர்ந்ததும் தம் திருமேனியை துறக்க நம்பெருமாளிடம் விடைபெற்றுக்கொண்டார். நம்பெருமாள் திருவாய் மலர்ந்து “உமக்கும், உம் ஸ்பரிசம் பட்டவர்களுக்கும் திருக்கண்ணால் நோக்கியவர்களுக்கும் மோட்ஷம் தந்தோம்” என்று அருளினார். கருணை உள்ளம் கொண்ட இவர் தன் கண்களூக்கு எட்டியவரை மரம், செடி கொடிகளையும், சிற்றெறெம்புகளையும், ஸ்பர்சித்து அவற்றுக்குத் தம்மோடு ஒரு சம்பந்தத்தை ஏற்படுத்தி அவைகளுக்கும் மோட்சம் பெற அருளினார்.

கிபி 1323ல் ஆனி மாதம் தனது 118வது வயதில் திருநாட்டுக்கு எழுந்தருளினார். அவர்களுடைய சிஷ்யர்கள் நம்பெருமாளின் திருமாலை, திருப்பரிவட்டம் கொண்டு அவருடைய சரம திருமேனியை அலங்கரித்து ஜ்யோதிஷ் குடியில் மலை அடிவாரத்தில் திருப்பள்ளிபடுத்தித் திருவரசு எழுப்பினார்கள்.

வேர்ச் சுடுவர்கள் மண் பற்றுக் கழற்றாப்போலே ஞானியை விக்ரகத்தோடே ஆதரிக்கும்” என்பது ஸ்ரீவசனபூஷ்ணத்தின் வாக்யம். இதன் பொருள் - குளிர்ச்சிக்காகவும், வாசனைக்காகவும் வெட்டிவேரை பயன் படுத்தும் போது வேரிலுள்ள மண்ணைக் கழுவி தனியாக பிரித்து எடுக்காமல் அப்படியே சூடிக்கொள்வார்கள். அது போல பகவான், ஆசாரியர்களின் திருமெனியை தன் பக்கத்தில் வைத்து ரக்‌ஷித்துக்கொண்டு இருக்கிறான். அகவே ஆசாரியர்கள் திருமேனியை திருபள்ளிபடுத்திய இடத்திற்கு திருவரசு என்பார்கள் 

நம்பெருமாள் பிறகு மதுரை அழகர் மலை, கோழிக்கோடு(கேரளம்), தமிழ்நாடு-கர்நாடகம்-கேரளா மாநிலம் சங்கமிக்கும் இடத்தில் இருக்கும் திருக்கணாம்பியில் சில காலம், பிறகு திருநாராயணபுரம் பிறகு திருமலை, சிங்கபுரம்(செஞ்சிக்கு அருகில்) பிறகு மீண்டும் 48 வருடம் கழித்து ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார். ஸ்ரீரங்கம் வந்து சேர்வதற்கு முன் கொள்ளிடக்கரையின் வடப்பகுதியில் மண்ணச்ச நல்லூரில் போகும் மார்கத்தில் அழகிய மணவாளம் என்ற கிரமத்தில் சில மாதங்கள் இருந்தார் அங்கே ஒரு வண்ணானால் அழகிய மணவாளனுகு சூட்டப்பட்ட பெயரே நம்பெருமாள் என்பது.

வாசகர்களை திரும்பவும் இருபதாம் நூற்றாண்டுக்கு அழைக்கிறேன். சும்மார் 35-40 வருடங்கள் முன் நடந்த சில நிகழ்வுகளை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன்.

1994-95ஆம் ஆண்டு மதுரையில் ஸ்ரீ உ.வே இரா.அரங்கராஜன் ஸ்வாமிகள் ஜ்ஜோதிஷ்குடி பற்றி அந்திமோபாய நிஷ்டை, யதீர்ந்திர ப்ரவண ப்ராபாவம் போன்ற வரலாற்று நூல்கள் கொண்டு எந்த இடம் எங்கே என்ற ஆய்வு மேற்கொள்கிறார். . ஒரு நாள் எதேர்சையாக ஒரு நில உரிமையாளரிடம் பேசும் போது அவர் இருக்கும் கிராமத்தில் இருளில் ஒலிவிடும் ஜோதிவிருட்சம் நிறைய இருக்கிறது என்று சொன்னவுடன் சட்சென்று ஒரு பொறி தட்டி அங்கே செல்கிறார் பேராசிரியர் அரங்கராஜன். பசுமையான கிராமம், அங்கே ஒரு சின்ன தாமரை குளம் அதற்கு பக்கம் சின்ன பெருமாள் கோயில் இருப்பதை காண்கிறார். கோயிலுக்கு உள்ளே சென்று பார்த்த போது உள்ளே நிறைய பாம்பு சட்டைகளும், பெரிய பல்லிகளின் சத்தமும் விடாமல் கேட்டுக்கொண்டே இருக்கிறது.

image

வேதநாராயண பெருமாளும் பிள்ளைலோசாரியார்

அங்கே வேதநாராயண பெருமாளும் அவர் பக்கம் கைகளை கூப்பிக்கொண்டு ஒரு சின்ன விக்ரஹமும் தென்படுகிறது. ஊர் மக்கள் அவரை பிரம்மா என்றும் அவர் ஒரு பிரம்ம ரிஷி என்றும் கூறுகிறார்கள். பேராசிரியர் அந்த திவ்ய விக்ரஹத்தை ஆராய்ந்து பார்க்கும் போது வேட்டியில் புற்றாக கட்டெறும்புகளும், இரண்டு கைகளிலும் சக்க்ரம் சங்கு பொறிக்கப்பட்டு இருப்பததை பார்க்கிறார். அவர் வேறு யாரும் இல்லை நம் பிள்ளைலோகாச்சாரியர் என்று முடிவு செய்து அவர் திருவரசு எங்கே என்று தேடுகிறார்.

சற்று தூரத்தில் ஒரு கல்மேடு தெரிகிறது அதனை சுற்றி கற்களும் அதன் மீது ஒரு அருவாளை சொருகி வைத்திருப்பதை பார்க்கிறார். கிராம மக்கள் அங்கே ஒரு முனிவர் அடக்கம் செய்த இடம் என்று கூறுகிறார்கள். அதுவே பிள்ளைலோகாசார்யர் திருவரசு என்று கண்டுபிடிக்கிறார்.

image

நம்பெருமாள் இருந்த இடம்..

அதற்கு பக்கம் ஒரு சின்ன குகை தென்படுகிறது. கிராம மக்கள் அங்கே ஒரு காலத்தில் பெருமாள் இருந்தார் என்று கூறுகிறார்கள். அந்த குகை போன்ற அமைப்பில் பாதங்கள் செதுக்கியிருக்கிறது. அதுவே நம் அழகிய மணவாளனுக்கு வேர்த்துக்கொட்டிய இடம் என்று கண்டுபிடிக்கிறார்.

தொடர்ந்து ஒரு மாத காலம் அடிக்கடி அந்த கிரமத்துக்கு சென்று அங்கே இருக்கும் வயதானவர்களை பேட்டி காண்கிறார். அவர்கள் செல்லும் செவி வழி செய்திகளையும் வரலாற்று நூல்களையும் ஒப்பு நோக்கி ஜ்ஜோதிஷ்குடி என்ற ஊர் யானை மலை அடிவாரத்தில் இருக்கும் கொடிக்குளம் என்ற கிராமம் தான் என்று முடிவுக்கு வருகிறார்.

image

நம்பெருமாள் இருந்த குகை

கள்ளர் பற்று என்ற கிராமத்தை ’மூச்சு இல்லாத கிராமம்’ என்று குறிப்புடன் கலெக்டர் அலுவலகம் சென்று ஆய்வு செய்யும் போது காணாமல் போன கிராமம் என்ற வரிசையில் குறிப்புக்களை பார்க்கிறார். அதுவே பிள்ளைலோகாசார்யர் போகும் போது நம்பெருமாளின் நகைகளை கொள்ளை அடித்த கூட்டம் இருந்த கள்ளர்கள் வசித்த கிராமம்!

மேலும் ஒரு நாள் அவருக்கு ஒரு கனவு வருகிறது. அதில் நம்பெருமாள் ஒரு பல்லக்கிலும், நகை ஆபரணங்கள் இன்னொரு பல்லக்கிலும் அடுத்த பல்லக்கில் வஸ்திரங்களும் எடுத்து செல்கிறார்கள். மூன்று மாட்டுவண்டிகளில் மாடுகளின் சலங்கை, மணிகள் கழற்றப்பட்டு ( சத்தம் போடாமல் போக வேண்டும் என்பதற்கு ) வயதான பெரியவர் ( பிள்ளை லோகாச்சார்யர் ) தீ பந்தத்துடன் முன்னே செல்கிறார். இந்த காட்சியை ஓவியர்கள் வைத்து ஒரு ஓவியமாக தீட்டுகிறார்.

image

ஓவியம்

இப்பேர்பட்ட இடத்துக்கு இந்த மாதம் ஐப்பசி திருவோணம் பிள்ளை லோகாச்சாரியர் திருநட்சதிரம் ( அக்டோபர் 21, 2015) அன்று சென்றிருந்தேன்

அன்று காலை திருமோகூர் பெருமாள் ஆப்தனை சேவித்துவிட்டு சென்றேன். `ஆப்தன்' என்பதற்கு நண்பன் என்று பொருள் உண்டு.
தன்னை வழிபடுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும், அவர்களது இறுதிக்காலத்திற்கு பிறகு வழித்துணைவனாகவும் இருப்பதால் இந்த பெயர். அவர் எனக்கு வழி சொல்லாமலா இருப்பார் ? அங்கே ஒருவரை விசாரித்ததில் மதுரை வேளான் கல்லூரிக்கு பிறகு ஒரு பெட்ரோல் பங்க் அதற்கு அடுத்த லெப்ட் என்று சிறு குறிப்பு எடுத்துக்கொண்டு அங்கே செல்லும் போது யானை மலை பிரம்மாண்டமாக காட்சி அளித்தது. யானை மலை மொத்தம் சுமார் 3 கிமி தூரம். அதை காமராவில் பானரோமிக்காக கவந்துக்கொண்டு, பலகையில் போகும் வழியை பார்த்துக்கொண்டு அங்கே சென்றேன்.

image

போகும் வழி..

உள்ளே சென்ற போது கிராம மக்கள் வழி சொன்னார்கள்.
“ஆந்த வழியில் சென்றால் பெரிய பள்ளம் கார் மாட்டிக்கும்”

யானை மலை அடிவரத்தில் ஆங்கிலத்தில் ‘serenity’ என்பார்களே அந்த அமைதி அங்கே குடிக்கொண்டிருந்தது. எங்கும் பசுமை, பறவைகள் ஒலியும், செடிகளில் தட்டான், வண்ணத்துப் பூச்சிகளும் இருந்தது.

அங்கே ஒரு தாமரை குளம்... அதன் முன் ஒரு பலகையில் ”யாரும் கோவில் குளத்தில் இறங்கக் கூடாது.. அசுத்தம் செய்யாதீர் என்று எழுதியிருக்கும் பலகையை படிக்கும் போது தூரத்தில் ஒரு பெரியவர் கையில் இருந்த அருவாளை கீழே வைத்துவிட்டு என் அருகில் வந்து
“சாமி செருப்பை கழட்டி வைத்துவிடுங்கள்.. அப்பறம் குளத்தில் இறங்க கூடாது” என்றார்.

image

தாமரைக் குளம்

கிராம மக்களுடன் பேசிய போது அந்த குளத்தை அவர்கள் பாதுகாத்து வருகிறார்கள். அதை சுத்தமாக வைத்துள்ளார்கள். அதில் யாரும் இறங்குவதில்லை. பக்கத்தில் உள்ள ஒரு சுனையில் என்றும் வற்றாத நீர் இருக்கிறது அதை அவர்கள் குடிக்க, சமையல் செய்ய மட்டுமே உபயோகப்படுத்துகிறார்கள். அதில் கை, கால் அலம்புவதில்லை. நம்பெருமாளுக்கு திருவாராதனத்துக்கு பயன்பட்ட குளம் ஆச்சே !

image

கிராம மக்கள் வேண்டுகோள்


நம்பெருமாள், பிள்ளைலோகாசார்யர் திருவரசு இருக்கும் இடம் என்று ஒரு எல்லைக்கு பிறகு யாரும் அங்கே செருப்பு போட்டுக்கொண்டு செல்ல கிராம மக்கள் அனுமதிப்பதில்லை .

image

நம்பெருமாள் பாதம்

தூரத்தில் நான்கு பேர் கீழே உட்கார்ந்துக்கொண்டு இருந்தார்கள். கிட்ட போய் பார்த்த போது சின்ன மைக் உதவியுடன் திருவாய்மொழி சேவித்துக்கொண்டு இருந்தார்கள்!

அங்கே இருந்த ஒரு ராமானுஜ அடியார்(ஸ்ரீராமன் ராமனுஜதஸர்) என்னை நம்பெருமாள் இருந்த குகைக்கு அழைத்துச் சென்றார். இரண்டு வருடம் முன்பு யானை மலையிலிர்ந்து யானை சைஸுக்கு ஒரு பெரிய கல் உருண்டு வந்து அந்த குகையின் மீது விழ அது பின்னமாகிவிட்டது என்றார். பழைய படம் இருக்கிறது அதை உங்களுக்கு மெயிலில் அனுப்புகிறேன் என்றார்.

image

திருவாய்மொழி ...

சில மணி நேரத்தில் பல அடியார்கள் அங்கே ஒன்று சேர்ந்து பிள்ளை லோகாசாரியர் திருவரசில் மீது அமைதிருக்கும் திவ்ய விக்ரஹத்துக்கு திருமஞ்சனம், சேவாகாலம், சாற்றுமுறை என்றூ இனிதே நடந்து முடிந்தது. அடியார்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் போது இருவரும் சேவித்துக்கொண்டார்கள். ராமானுஜர் காலத்துக்கே அழைத்து சென்ற அனுபவம்.

மணவாள மாமுனிகள் கிபி 1413ல் திருவரங்கத்திற்கு முதன்முறையாக எழுந்தருளியபோது ஆதிகேசவ பெருமாள் மாட வீதிக்குச் சென்று பிள்ளைலோகாசாரியர் திருமாளிகையிலிருந்து மணல் துகள்களைச் சேகரித்து தாம் காலசேஷபம் சாதிக்கும் இடத்தில் ”ரகசியம் விளைந்த மண்ணன்றோ” என்று கொண்டாடினார்.

நம்பெருமாள், பிள்ளை லோகாச்சாரியர் கால் பதித்த அந்த இடத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து வந்தேன்.

image

ஸ்ரீரங்க ரங்க விமானம்...

திருநாராயண புரம் சென்ற வேதாந்த தேசிகன் என்ன ஆனார் ?

திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையில் தங்கியிருந்த வேதாந்த தேசிகர், ஸ்ரீரங்கத்தையும், பெரிய பெருமாளையும் பிரிந்து, புண்பட்டு, பரிவின் காரணமாக ‘அபீதிஸ் தவம்’ என்னும் உயர்ந்த ஸ்தோத்திரத்தை அருளினார். அதில் ஸ்லோகம் 22 ஒரு வரலாற்று ஆவணமாகவே கருதலாம்.

கலி ப்ரணிதி லக்ஷணை: கலித சாக்ய லோகாயதை:
துருஷ்க யவந ஆதிபி: ஜகதி ஜ்ரும்பமாணம் பயம்
ப்ரக்ருஷ்ட நிஜ சக்திபி: ப்ரஸபம் ஆயுதை: பஞ்சபி:
சஷிதி த்ரிதச ரக்ஷகை: சஷயப ரங்கநாத சஷணாத்

ஸ்ரீரங்கநாதா! கலி புருஷனுக்கு ஏவலாட்கள் போன்று பௌத்தர்கள் சார்வாகர்கள், துருக்கர்கள், யவநர்கள் முதலானோர் மூலமாக இந்த உலகத்தில் மிகுதியான பயம் வளர்ந்து வருகிறது. இப்படிப்பட்ட பயத்தை உன்னிடம் இருக்கும் மிகுந்த சக்தியுடையதும் அந்தணர்களைக் காப்பதற்கும் பயன்படும் உன் ஐந்து திருஆயுதங்களால் நொடிப்பொழுதில் பலமாக அழிப்பாயாக.


24ஆம் பாடலில் இங்கு உள்ள எதிரிகளோ அசுரர்களைக் காட்டிலும் மிக்க கொடுமை விளைவிப்பவர்களாயுள்ளார்கள். அவர்களால் பலர் பூஜித்த ஸ்ரீரங்க ரங்க விமானத்துக்கு ஏதாவது பெருந்தீங்கு விளையுமோ என்ற அச்சம் உண்டாகின்றது என்று வருத்தப்படுகிறார். இதையும் கங்கா தேவியின் மதுரா விஜயத்தில் ஸ்ரீரங்கம் பற்றிய குறிப்பையும் படித்தால் ஸ்ரீவேதாந்த தேசிகருக்கு இருந்த மனவருத்தம் agonyயை அறிந்து கொள்ளலாம். கங்கா தேவி போல தன் கண்ணால் கண்ட காட்சிகள் தான் தேசிகரை இப்படி எழுத வைத்திருக்க வேண்டும்.

திடபக்தியும் நம்பிக்கையுடன் எழுதிய இந்த ஸ்லோகங்களால் எதிரிகள் அழிந்து கோபணார்யர் உதவியுடன் கிபி 1371ல் ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்தார்.

நம்பெருமாளுக்கு அனைத்து தரப்பு மக்களும் உதவினார்கள். ஹரிஹரரும், விரப்பண்ண உடையாரும் திருப்பணிக்கு நிதி உதவி செய்தார்கள். விரப்பண்ண உடையார் துலாபாரக் காணிக்கையாக 17,000 பொற்காசுகள் அளித்தார். யானை பசிக்கு சோளப்பொறி போன்றது இந்த காணிக்கை. துருக்கர்கள் செய்த நாசங்கள் அவ்வளவு. அதனால் அனைத்து மக்களும் தங்களால் இயன்ற அளவு திருபணிக்கு காணிக்கை தரவேண்டும் என்று மன்னர் வேண்டுகோள் விடுத்தார். இதைத்தொடர்ந்து சித்திரை திருநாளின் போது அனைத்து மக்களும் சேர்ந்து நடைபாவாடை சாத்தினார்கள் (காணிக்கை உற்சவம்) 700 ஆண்டுகளுக்கு பின்பும் இந்த காணிக்கை உற்சவம் நடைபெறுகிறது. இந்த உற்சவத்தின் போது தானியங்களும், மாடுகளும் கோயிலுக்கு தானமாக தரப்படுகிறது.

image

கல்வெட்டு சிலாசாஸனத்தில்..

நம்பெருமாள் திருப்பிரதிஷ்டையின் நினைவாக சிலாசாஸனம் ( சிலாசாஸனம் பற்றிய குறிப்பு பிகு 3 ) ஒன்று இராஜமகேந்திரன் திருச்சுற்றில் இருக்கிறது. உத்தமநம்பியால் கோபணார்யனுக்கு அது தனியனாக ஸ்மர்பிக்கபட்டது என்றும், இல்லை இது வேதாந்த தேசிகன் செய்தது தான் என்று வேறு சிலரும் கூறுகிறார்கள் உத்தம நம்பியோ, ஸ்ரீவேதாந்த தேசிகரோ, இரண்டு பேரையும் அந்த கல்வெட்டை பார்க்கும் போது நாம் நினைத்துக்கொள்ள வேண்டும். எழுதியது என்று ஒரு புறம் இருக்க, அந்த கல்வெட்டு இருப்பதே பலருக்கு இன்று தெரியாது.

image

யானை மலை

image

யானை மலை

யானை மலை சில குறிப்புகள் - யானை மலை சுமார் 3கிமி நீளம் உள்ள ஒரே மலை.  அதில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கிபி 717 பழமை வாய்ந்த கல்வெட்டுகள் இருக்கிறது. சுமார் 10-12 வருடம் முன் சிலர் யானை மலையை கிரானைட் பாறைகளூக்கு மலைகளை குடைந்து எடுக்க திட்டம் தீட்டினார்கள். அப்போது அரங்கராஜன் ஸ்வாமிகளும் கிராம மக்களும் உண்ணா விரதம் போராட்டம் இருந்தார்கள். ஸ்ரீவைஷ்ணவ சமூகம் இவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறது.  

image

நம்பெருமாள் சென்ற பாதை...

நம்பெருமாள் 48 ஆண்டுகள் சென்ற இடங்கள்.
1323 - ஸ்ரீரங்கம்,
1323 ( ஏப்ரல் - ஜூலை ) - ஜ்யோதிஷ்குடி
1323-25 - திருமாலிருஞ்சோலை
1325-26 - கோசிக்கொடு
1326-27 திரிகடம்புரா ( தேனை கிடம்பை )
1327-28 - புங்கனூர்வழியாக மேல்கோட்டை
1328-43 - மேல்கோட்டை ( 15 ஆண்டுகள் )
1344-70 - திருமலை ( 26 ஆண்டுகள் )
1371 செஞ்சி, அழகிய மணவாளம் கிராமம், ஸ்ரீரங்கம்


பிள்ளைலோகாசார்யருடன் வந்திருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்:
கூரகுலோத்தமதாஸர்
திருக்கண்ணங்குடிப்பிள்ளை
திருப்புட்குழி ஜீயர்
விளாஞ்சோலைப்பிள்ளை
நாலூர்ப்பிள்ளை
மணற்பாக் காத்து நம்பி
கொல்லி காவலதாஸர்
கோட்டூர் அண்ணர்
திருவாய்மொழிப் பிள்ளையின் திருத்தாயார்
திருக்கோபுரத்து நாயனார்

நமது CBSE பாடபுத்தகத்தில் முகமது பின் துக்ளக் பற்றிய பாடத்தில் ஒரு பகுதி:
Muhammad bin Tughlaq (1325-1351)
He was a very attractive character in the history of medieval. India owing to his ambitious schemes and novel experiments. His enterprises and novel experiments ended in miserable failuresbecause they were all far ahead of their time. He was very tolerant in religious matters. He maintained diplomatic relations with far off countries like Egypt, China and Iran. He also introduced many liberal and beneficial reforms. But all his reforms failed.

மதுரா விஜயம் சிறுகுறிப்பு:
மதுரை சுல்தான்களை வெற்றி கொண்ட வரலாறே மதுரா விஜயம் என்று கொள்ளலாம்.
சிருங்கேரி சங்கராசார்யாராகிய ஸ்ரீவித்யாரண்யரின் அருளாசியால் கிபி 1336ல் ஹரிஹரரு, அவனது தம்பி புக்கரும் விஜயநகர சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார்கள். துங்க பத்திரை நதிக்கரையில் விஜயநகரம் தலைநகரமாக ஸ்தாபிக்கப் பட்டது. அவ்வூரிலுள்ள விருபாஷ் தேவர் ( பரமெஸ்வரர் ) விஜயநகர மன்னர்களின் குலதெய்வமாவர். புக்கனுடைய அரசியின் பெயர் தேவாயி. இவர்களுக்கு பெரிய கம்பண்ணன், சிறிய கம்பண்ணன், சங்கமன் என்று மூன்று குழந்தைகள். கம்பண்ணின் மனைவி பெயர் தான் கங்காதேவி.
கிபி 1378ல் மதுரையை நோக்கிக் கிளம்பினான் கம்பணா. அவனுடன் 30,000 வீரர்களுடன் சென்றபோது, கம்பணாவின் மனைவி கங்காதேவியும் உடன் சென்றாள். அவள் நேரில் பார்த்த காட்சிகளை, சம்பவங்களை விவரித்து வடமொழியில் தேர்ச்சி பெற்ற கங்காதேவி அதை காவியமாக எழுதினாள். அதன் பெயரே மதுரா விஜயம். இதன் ஓலைச்சுவடிகள் திருவந்தபுரத்தில் உள்ள ஆவணக் காப்பகத்தில் 1916ஆம் ஆண்டு முழுவதும் கிடைக்கவில்லை. 109 முதல் 169வரை தான் கிடைத்தது. அதிலும் சில ஓலைச்சுவடிகள் காணவில்லை, கிடைத்த சிலவற்றிலும் கரையான் அரித்து ஓலைச்சுவடிகளை ‘Fill in the blanks’ ஆக்கின. கரையான் அரித்த ஓட்டைகளை ஆய்வு செய்து, சரியான எழுத்தை பூர்த்தி செய்து, 1916ல் ஹரிஹர சாஸ்திரி, ஸ்ரீநிவாச சாஸ்திரி இதை நூலாக பதிப்பித்தார்கள். கிடைத்த வரையில் இது வரலாற்று ஆவணம். பொக்கிஷம்.

 கல்வெட்டு சிலாசாஸனத்தில் எழுதியிருப்பது :
புகழ்நிறைந்த கோபாணார்யர் கறுத்த கோடுமுடிகளின் ஒளியாளே உலகை ஈர்க்கும் திருமலையிலிருந்து ரங்கநாதனை எழுந்தருளப் பண்ணி வந்து தன் தலைநகரமான செஞ்சியில் சிறிது காலம் ஆராதித்து, ஆயுதமேந்திய துலுக்கர்களை அழித்து ஸ்ரீதேவி, பூதேவிகளாகிய உபய நாய்ச்சிமார்களோடு கூடத் தம்முடைய திருவரங்கப் பெருநகரில் ப்ரதிஷ்டை செய்து, சிறந்த திருவாராதனங்களை மறுபடி தொடங்கி வைத்தார்.
புலிக்கரசனான கோபணன் உலகுகரசனான ரங்கராஜனை திருமலைத் தடத்திலிருந்து தன் தலைநகருக்கு எழுந்தருளச் செய்து தன் சேனையாலே துலுக்கர் சேனையை அடித்து விரட்டியவனாய் ஸ்ரீரங்க நகரை க்ருதயுகத்தில் பிரமனால் ஆராதிக்கபட்ட போது இருந்தது போல ப்ரதிஷ்டை செய்து நல்ல திருவாராதனங்களைச் செய்வித்தான்

image

நம்பெருமாள் இன்று... ( படம் நன்றி: sowbaktha )

 உதவிய சில புத்தகங்கள் 
1. கங்காதேவியின் மதுராவிஜயம் – தமிழாக்கம் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாச்சாரி.
2. Madhura Vijaya (or Virakamparaya Charita): An Historical Kavya - 1924
3.மதுரை சுல்தான்கள் – SP சொக்கலிங்கம், கிழக்கு பதிப்பகம்.
4.அரங்கமா நகருளானே – வேதா.T.ஸ்ரீதரன்.
5.Dr. Chitra Madhavan – கட்டுரைகள், ஒலி/ஒளிப்பதிவுகள்.
6.கோயிலொழுகு – ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாச்சாரி.
7.History of Srirangam Temple – VN Hari Rao
8.Sri Vedanta Desika: Makers of Indian Literature by M. Narasimhachary,Sahitya Academy, 2004.
9.குருபரம்பரா நூல்கள் ( தென்கலை, வடகலை )
10 Epigraphia Indica Vol.24

நம்பெருமாள் நடை அழகு ( நன்றி திரு. விஜயராகவன் கிருஷ்ணன்)

https://www.youtube.com/embed/8vKPdmU4j8U

அழகியமணவாளன் என்ற நம்பெருமாள்

- சுஜாதா தேசிகன்
20.3.2019
இன்று திருவரங்கம் பங்குனி உற்சவம் - 8ம் திருநாள்
1323ம் வருடம் இதே நாளில் தான் பன்னீராயிரவர் முடி திருத்திய பன்றியாழ்வான் மேட்டுக்கலகம் நடந்தது.
அவர்களை நோக்கி சாஷ்டாங்கமாக விழ வேண்டும்.
முகப்பு படம் நன்றி : Vijay Vibhav

image

ஸ்ரீரங்கம் கார்த்திகை மண்டபத்துக்கு நுழையும் போது தரையில் இந்த சேவிக்கும் சிற்பம் பிரமிக்க வைக்கிறது – படம் நண்பர் கோபால்

Comments