கோலோச்சும் செங்கோல் !
’செவிக்கினிய செஞ்சொல்’ என்றால் அர்த்தம் புரிகிற மாதிரி இருக்கும். ஆனால் ‘செஞ்சொல்’ என்றால் என்ன என்று கேட்டால் முழிப்போம். இதே போல் தான் ‘செம்மொழி’, ‘செந்தமிழ்’ போன்ற வார்த்தைகளும்.
செஞ்சொல் என்றால் செம்மையான என்று பொருள். ’செமையா’ இருக்கு என்று நாம் அன்றாடம் உபயோகிக்கும் செம்மை இல்லை, செம்மை என்றால் உள்ளதை உள்ளபடி செல்லுவது எதுவோ அது தான் செம்மை. செங்கோல் என்றால் என்ன என்று புரிந்திருக்கும்.
ஒரு முறை வைகுண்டத்திலிருந்து புறப்பட்ட பெருமாள் பத்ரியில் கொஞ்சம் காலம் இருந்தார். அதிகக் குளிர் யாரும் வரவில்லை, கீழே இறங்கி வந்து திருமலையில் கொஞ்சம் நேரம் நின்றார் அங்கேயும் ( அப்போது ) கூட்டம் வரவில்லை. கீழே இறங்கி வந்து ஸ்ரீரங்கத்தில் ’தேமே’ என்று படுத்துக்கொண்டு விட்டார்.
இன்றும் ஸ்ரீரங்கத்திலிருந்து தான் வைகுண்டத்தையே ரங்க’ராஜா’வாக அரசாட்சி செய்கிறார். நம்பெருமாள் ஸ்ரீரங்கத்தில் தன் லீலையை நடத்துவதற்கு ஆதாரம் ஆண்டாள் பாசுரம் தான்.
பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும்
அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம் பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எம் கோல்-வளையால் இடர் தீர்வர் ஆகாதே
இதன் பொருள் : அலை கடலாலே சூழப்பட்ட இப்பூமண்டலமும், பரமபதமும் சிறிதும் குறையாதபடி நிர்வகிக்கும் எம் பெருமாள் (நம் பெருமாள்) செங்கோல் உடைய திருவரங்கத்தில் பள்ளிகொண்டிருப்பவரான பெரிய பெருமாள்.
அதனால் தான் எந்த பெருமாளுக்கும் இல்லாத செங்கோல் நம்பெருமாளிடம் இருக்கிறது. எங்குச் சென்றாலும் ( நாச்சியார் திருக்கோலம் உட்பட) அது அவருடன் கூடவே வரும்.
வனவாசம் முடிந்து ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் அன்று இளையபெருமாளிடம் ”தர்ம ரஹஸ்யங்களை அறிந்தவனே நமது முன்னோர்களால் ஆளப்பட்டு வந்த இந்த ராஜ்யத்தை என்னுடன் நீயும் சேர்ந்து பரிபாலனம் செய், உன்னை யுவராஜாவாக நியமிக்கிறேன்” என்கிறார் ஸ்ரீராமர். ஆனால் லட்சுமணர் இளவரசர் பட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் கைங்கரியம் தான் பண்ணுவேன் என்றார். அதனால் பரதனுக்கு யுவராஜ பட்டாபிஷேகம் செய்து வைத்தார்.
ஸ்ரீ ராமாயணத்தில் ஒன்றைக் கவனிக்கலாம். லக்ஷ்மணன் ’இளையபெருமாள்’ என்றும் பரதனை ’பரதாழ்வான்’ என்றும் கொண்டாடுவார்கள். ஆனால் மிகச் சமீபத்தில் அதாவது கிட்டதட்ட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தான் லக்ஷ்மணனுக்கு ‘ஆழ்வார்’ பட்டமும், அரசாட்சியும் கிடைத்தது !
ஆயிரம் வருடங்களுக்கு முன் ஸ்ரீராமருக்கு’அனுஜனாக’ ( தம்பியாக )படி கொண்ட கீர்த்தி இராமாயணம் என்னும் பத்தி வெள்ளம்
குடி கொண்ட கோயில் இராமாநுசன்
என்று ஸ்ரீ ராமாயணத்தைத் தன் திருவுள்ளத்தில் தேக்கி அவதரித்தார்.
ஸ்ரீ ராமாயணத்தில் ‘ஆழ்வார்’ என்ற திருநாமத்தைத் தவறவிட்டார் ஸ்ரீ ராமானுஜராக அதைத் தவறவிடவில்லை. இளைய ’ஆழ்வார்’’ என்ற திருநாமம் அவருக்குக் கிடைத்தது.
இளையாழ்வார் காஞ்சியிலிருந்து திருவரங்கம் வரும்போது ரங்க’ராஜன்’ விஷ்வக்சேனரை அனுப்பி அழைத்து வரச் செய்து, நம்பெருமாள் சந்தனு மண்டபம்வரை எழுந்தருளி இளையாழ்வாரை வரவேற்று தன் கையிலிருந்த செங்கோலை உடையவரிடம் கொடுத்து 'உபய விபூதி ஐஸ்வரத்தையும் உமக்கும் உம்முடையோர்க்கும் தந்தோம்’ என்று ஆட்சி செய்யும் பொறுப்பை இளையாழ்வாரிடம் ஒப்படைத்து அவரை ’உடையவராக்கினார்’.
(ஒரு சிறு குறிப்பு: விஷ்வக்ஸேனர் வாழி திருநாமத்தில் ஒரு வரி ‘எழிற் பிரம்பின் செங்கோலை ஏந்துமவன் வாழியே’ அதாவது பெருமாளின் சார்பில் அவனுடைய ’செங்கோலை’ வைத்துக்கொண்டு அரசை வழி நடத்துவதாக வாழி திருநாமம் அமைந்திருக்கிறது).
ஸ்ரீராமவதாரம் போது இளையபெருமாளுக்கு யுவராஜாவாகப் பட்டாபிஷேகம் செய்ய முடியாத குறையை ஆயிரம் வருடங்களுக்கு முன் இளையாழ்வாருக்கு நம்பெருமாள் ஆட்சி செய்யும் பொறுப்பை செங்கோலை ஒப்படைத்து நிறைவேற்றினார்!
காந்தி கொண்டு வர நினைத்த ஸ்ரீராமராஜியம் மலர்ந்திட வாழ்த்துக்கள்.
ஜெய் ஹிந்த்
- சுஜாதா தேசிகன்
28.5.2023
புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறந்த நாள்
Comments
Post a Comment