Skip to main content

ஒரு மாணவனின் (நிஜமான) கதை

 ஒரு மாணவனின் (நிஜமான) கதை



சென்ற ஆண்டு ’பதம் பிரித்த பிரபந்தம்' புத்தகம் வெளிவந்த போது,
‘சாமி எனக்கு ஒரு பிரபந்தம் புத்தகம் வேண்டும்’ என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது. ‘டிரஸ்ட்க்கு பணம் அனுப்பிப் பெற்றுக்கொள்ளவும்’ என்று பதில் அனுப்பினேன்.

வருடக் கடைசியில் புத்தகம் எல்லாம் தீர்ந்த சமயம் அதே நபர் ‘புத்தகம் இருக்கா ?” என்று கேட்ட போது அவர் புத்தகங்களை வாங்க வில்லை என்று தெரிந்துகொண்டேன்.

அவரிடம் தொலைப்பேசியில் ஏன் முன்பே வாங்கவில்லை என்று கேட்ட போது அவர் கூறியது.

“சார், எங்கள் ஊர் கோயில் சந்நிதி ஒன்றில் பிரபந்தப் புத்தகம் வைத்து வழிபட்டு வந்தோம். சில ஆண்டுகளுக்கு முன் கோயிலைப் புனருத்தாரணம் செய்த போது புத்தகம் காணாமல் போனது. எங்களுக்கு எல்லாம் மிகுந்த மனவருத்தம். உங்கள் டிரஸ்ட் வெளியிட்ட புத்தகத்தைப் பார்த்தவுடன் அதை எங்கள் கோயிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று ஆசை.
எனக்கு இரண்டு புத்தகம் வேண்டும், கோயிலுக்கு ஒன்று மற்றொன்று எனக்கு. பணம் சேர்ந்த பிறகு வாங்கலாம் என்று இருந்தேன். அதற்குள் தீர்ந்துவிட்டது என் துரதிஷ்டம்” என்றார்.

“நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்?”

“நான் ஸ்டூடண்ட் சாமி. எம்.ஏ வரலாறு முதலாம் ஆண்டு படிக்கிறேன்” .

”புத்தகத்துக்கு உங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்ள முடியாது. இரண்டு புத்தகங்கள் உங்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கிறேன்” என்றேன்.

“கோயிலுக்கு வேண்டுமானால் இலவசமாக அனுப்புங்கள். என் பிரதிக்கு நான் சேர்த்து வைத்த பணத்தை அனுப்புகிறேன் அதற்குப் பிறகு எனக்கு அனுப்புங்கள்” என்றார் பிடிவாதமாக. (அவர் கூறிய கோயிலின் விவரங்களைத் தனியாகக் கீழே தந்துள்ளேன்.

பணம் அனுப்பினார். புத்தகத்தை அனுப்பினேன். கோயிலுக்கு அனுப்ப வேண்டிய புத்தகம் இன்றைக்கு நாளைக்கு என்று என் சோம்பல் காரணமாகத் தள்ளிப் போனது. ஒரு வாரத்துக்கு முன் ஸ்ரீபெரும்புதூர் உடையவர் திருவடிகளில் சமர்பித்த புத்தகத்தை அவருக்குத் தபால் மூலம் அனுப்பி வைத்தேன்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீராமானுஜர் திருநட்சத்திரம் அன்று ஆண்டாளின் தித்திக்கும் திருப்பாவை வெளியீடு முடிந்து பேருந்தில் பெங்களூரு நள்ளிரவில் திரும்பிக்கொண்டு இருந்த போது

”இரவு கால் பண்ணுகிறேன் சாமி, ஒரு பெரிய ஆச்சரியம் நடந்தது” என்று வாய்ஸ் மெசேஜ் கூட ஒரு படத்தை அனுப்பியிருந்தார்.
அவரிடம் பேசிய போது, பூரிப்புடன் கூறிய விவரங்களைக் கீழே தந்துள்ளேன்.




“சாமி அன்று உடையவர் திருநட்சத்திரம். நீங்கள் அனுப்பிய புத்தகம் வந்தால் அதை உடையவரிடம் சமர்ப்பித்து கோயிலின் பள்ளியறையில் ( கண்ணாடி அறை) வைக்கலாம் என்று ஆசை ஆனால் புத்தகம் கைக்குக் கிடைக்கவில்லை. ரொம்ப நேரம் காத்துக்கொண்டு இருந்தேன், பிறகு என்னுடைய புத்தகத்தை எடுத்து வந்துவிடலாம் என்று வீட்டுக்கு சென்றேன். என்னுடைய புத்தகத்துடன் வீட்டு வாசலுக்கு வந்த போது தபால்காரர் நீங்கள் அனுப்பிய புத்தகத்தை என்னிடம் கொடுக்க. அதை மிகுந்த சந்தோஷத்துடன் எடுத்துக்கொண்டு கோயிலுக்குச் சென்றேன். உடையவர் பல்லக்கில் பவனி வர தயாராக இருந்தார். அவரிடம் புத்தகத்தை வைத்தேன். அன்று உடையவர் பல்லக்கில் நீங்கள் அனுப்பிய புத்தகத்துடன் தான் பவனி வந்தார். பிறகு புத்தகத்தை பெருமாள் தாயாருடன் எழுந்தருளும் பள்ளியறை ஊஞ்சலில் வைத்துவிட்டோம். இன்றும் அந்த ஊஞ்சலில் பிரபந்தம் புத்தகம் இருக்கிறது. பக்தர்கள் தினமும் வந்து சேவித்துவிட்டுப் போகிறார்கள்” என்றார்.


 

“உங்கள் அப்பா என்ன செய்கிறார் ? படிப்புக்கு என்ன செய்கிறீர்கள். நான் உங்களுக்கு உதவலாமா ?” என்றேன்

“அப்பா இல்லை. அம்மா தங்கை மட்டும் தான். வீட்டில் இருக்கிறார்கள். காலை வீடு கட்டும் பணிகளுக்கு மேற்பார்வையாளராக வேலை பார்க்கிறேன். பூக்கடை ஒன்றில் பூ மாலைகள் கட்டிக்கொடுக்கிறேன்” என்றார்.

“அட, மாலை கட்ட தெரியுமா ?” என்றேன்.

”கோயிலில் இருக்கும் நந்தவனத்தை நான் தான் பராமரிக்கிறேன். கோயிலுக்கும் மாலைகள் கட்டித் தருகிறேன்” .

தொண்டரடிப்பொடியாழ்வாரும், பெரியாழ்வாரும் இவரைப் பார்த்துக்கொள்வார்கள்!

- சுஜாதா தேசிகன்
2.5.2023

-------------------------------------------------------------------------
கோயில் பற்றிய குறிப்பு

அருள்மிகு வீழி வரதராஜ பெருமாள் தேவஸ்தானம்

திருமலைராஜன்பட்டினம். கோயில் சுமார் 180 வருடப் பழமை வாய்ந்தது.

மூலவர் திருநாமம் : ஸ்ரீ வீழி வரதராஜபெருமாள் ;

உற்சவர் திருநாமம் :பேரருளாளன்,திருவீழியாழ்வான்

தாயார் திருநாமம்: ஸ்ரீ பெருந்தேவி நாச்சியார் ஸ்ரீ செங்கமல தாயார்

ஸ்ரீ சௌரி ராஜ பெருமாள் தனி சன்னதி கொண்டு இருப்பது மிகச் சிறப்பு

தீர்த்தம்: பெருமாள் தீர்த்தம்(பிடாரி குளம்),இந்திரத் தீர்த்தம்,

ஸ்தல விருட்சம்:திருவீழியாழ்வார்(வீழி)

காரைக்கால் திருமலைராஜன்பட்டினத்தில், ஸ்ரீவீழி வரதராஜ பெருமாள் கோவில், பார்ப்பவர்களைப் பக்தி பரவசப்படுத்தும் அழகிய ஐந்து நிலை மாடங்களோடு, கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்தக் கோவில் கர்ப்பக்கிரகத்தில் அன்பு மலையாய், அருள்மா கடலாய், ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் தரிசனம் தருகின்றார் பேரருளாளன் வீழி வரதராஜ பெருமாள். விழுதி மரம் செழித்த காட்டினில் முன்னாளில் பெருமாள் கோவில் கொண்டிருந்தார். (விழுதி என்பதுதான் காலப்போக்கில் வீழியானது).

காலவெள்ளத்தில் அக்கோவில் கரைந்திடவே, கவர நாயுடு சமூகத்தைச் சேர்த்த பெருமாள் அடியவர் ஒருவர் கனவில் தோன்றி, இவ்விடத்தில் இருக்கும் என் கோவிலைப் புனரமைப்பு செய்திட வேண்டும் என்று ஆணையிட்டார் அதன்படி பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு உருவானதுதான் வீழி வரதராஜ பெருமாள் திருக்கோவில். பேரருளாளன் சன்னதியின் பக்கத்தில் பெருந்தேவி நாச்சியார் ஸ்ரீ செங்கமலத்தாயார் சன்னதியும் ஸ்ரீ கோதை நாச்சியார் ஸ்ரீ ஆண்டாள் சந்நிதியும் அமைந்துள்ளது. பெருமாளுக்கு எதிரே ஸ்ரீ கருடாழ்வார் சந்நிதியும் வடக்கு பார்த்த சன்னதியாக ஸ்ரீ சர்வ வல்லப ஆஞ்சநேயர் (சுயம்பு) சன்னதி கொண்டுள்ளார் இது எங்கும் காணக்கிடைக்காத ஒன்று.

மற்றும் ஆலயத்தில் பிரகாரத்தைச் சுற்றி ஸ்ரீ பண்டரிநாதர் ஸ்ரீ சக்கரத்தாழ்வார், ஸ்ரீ யோக நரசிம்மர்,கல்வி செல்வத்தை வாரி வழங்கும் கல்வி கடவுள் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்,ஸ்ரீ காலிங்கநர்த்தனர்,ஸ்ரீ தும்பிக்கையாழ்வார் சந்நிதிகளும் அமைத்துள்ளது

முன்னொரு காலத்தில் அறநெறியோடு ஆட்சி புரிந்து வந்த ஒரு மன்னனுக்கு மகப்பேறு கிட்டவில்லை. இதனால் மிகவும் துன்புற்ற மன்னன், ஒரு மாமுனிவர் அறிவுறுத்தலோடு, ஸ்ரீவீழி வரதராஜ பெருமாளை, பிள்ளை வரம் வேண்டி கண்ணீர் மல்க வேண்டினார். மன்னனின் பக்தியைக் கண்டு, அவருக்குப் பிள்ளை வரத்தோடு எல்லா பெரும் வளங்களையும் அருளினார் பெருமாள். இன்றும் பிள்ளை வரம் வேண்டுவோர், பெருமாளை உள்ளன்போடு தரிசித்து, பிள்ளை வரம் மற்றும் அனைத்து ஆசிகளையும் பெற்றுச் செல்கின்றனர்.

இப்பெருமாள்கோவிலில் எல்லா மாதங்களும் விழா மாதங்களே. இவற்றுள் மாசிமகம் பெரு விழாவாக மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது இதில் வங்கக் கடலில் தீர்த்தவாரி உற்சவமும் பெருமாள் கருடனுக்குக் காட்சி தரும் நிகழ்ச்சியும் வங்கக் கடலில் கருடப் பருவதம் காணும் நிகழ்ச்சியும் நடைபெறும் தீர்த்தவாரிக்கு திருக்கண்ணபுரம் ஸ்ரீ சௌரிராஜபெருமாள் எழுந்தருள்வார் ஊர் எல்லையில் வீழி வரதராஜ பெருமாள் எதிர்கொண்டு அழைத்து மற்ற ஆறு பெருமாள்களுடன் சமுத்திரம் செல்வார்கள் பின் இரவு சௌரிராஜபெருமாள் வீழி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு எழுந்தருள்வார் அதனைத்தொடர்ந்து சௌரிராஜ பெருமாளுக்கு கைதலசேவையும் திருமஞ்சனமும் நடைபெறும் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கண்ணபுரத்தின் ஏழு மதில்கள் இருந்துள்ளது அதன் அடிப்படையில் ஏழாம் சுற்றின் நுழைவு வாயிலாகக் கூறப்படுவதுதான் இந்த ஸ்ரீ வீழி வரதராஜ பெருமாள் திருக்கோவில்.

இப் பெருமாள் கோவிலில் மகா மண்டபம் 1908-ம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டது அதில் அருள்மா கடலமுதன் ஸ்ரீ சௌரிராஜபெருமாள் சந்நிதி அமைத்துள்ளது சந்நிதியில் திருக்கண்ணபுரத்து அரையர் சுவாமிகள் திருவாராதனம் செய்த ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ஸ்ரீ சௌரிராஜ பெருமாள் விக்கிரகம் உற்சவராக உள்ளது மற்றும் மகா மண்டபத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்கள் சந்நிதியும், திரு பள்ளியறையும் அமைத்துள்ளது.

Comments