திருப்பாவை ஜீயர் வெளியிட்ட ’தித்திக்கும்’ திருப்பாவை
ஸ்ரீ ராமானுஜரின் 1006ஆம் திருநட்சத்திரம் (சித்திரை திருவாதிரை,25.4.2023) அன்று ’அணிபுதுவை’ என்று ஆண்டாள் போற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘ராமானுஜ தேசிக முனிகள்’ அறக்கட்டளை வெளியீடான ‘தித்திக்கும் திருப்பாவை’ ‘திருப்பாவை ஜீயர்’ திருக்கரங்களால் ’ஒரு மகள் தன்னையுடைய’ என்று பெரியாழ்வார் ஸ்ரீ ஆண்டாளுக்கு ஸ்ரீதனமாகக் கொடுக்கப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற ’நாச்சியார் மாளிகை’யில் வெளியிட, முதல் பிரதியைச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியான கோதை நாச்சியார் பெற்றுக்கொண்டாள்.
இதுவரை நீங்கள் படித்தது அலங்காரமாக எழுதியது போலத் தோன்றும். ஆனால் அன்று இது நிஜமாகவே நடந்தது. சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
சில மாதங்கள் முன் ’தித்திக்கும் திருப்பாவை’ புத்தகம் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்த போது ’அதற்கென்ன கொண்டு வந்துவிடலாம்’ என்று வழக்கம் போல ஆர்.என்.ஆர் (ரங்கநாதன் & ரங்கநாயகி ) பிரிண்டர்ஸ் ராஜன் நம்பிக்கை தர, ’மணக்கால் நம்பி’ திருநட்சத்திரம் அன்று ஆரம்பிக்கப்பட்டு பங்குனி உத்திரத்தின் போது நிறைவு பெற்றது. ஸ்ரீ உ.வே பட்டணா ஸ்வாமிகள் வாழ்த்துரை வழங்க, மருத்துவர் ஸ்ரீ.உ.வே.வேங்கடேஷ் ஸ்வாமிகளும் அணிந்துரையைக் கொடுக்க, நண்பர்கள் உதவ புத்தகம் அச்சுக்குச் சென்று குறிப்பிட்ட தேதியில் கைக்கு வந்தது.
ஸ்ரீராமானுஜருக்கு பல பெயர்கள் இருந்தாலும் அவர் தன்னை எல்லோரும் ’திருப்பாவை ஜீயர்’ என்று அழைப்பதையே விரும்பினார். தித்திக்கும் திருப்பாவை புத்தகத்தை வெளியிட்டவரும் அவரே!
ஸ்ரீராமானுஜருக்கு ஆண்டாள் மீதும் திருப்பாவையின் மீதும் உள்ள ஈடுபாடு பிரசித்தம். ஸ்ரீராமானுஜருக்கு பல பெயர்கள் இருந்தாலும் அவர் தன்னை எல்லோரும் ’திருப்பாவை ஜீயர்’ என்று அழைப்பதையே விரும்பினார். பலருக்குத் தெரிந்திருந்தாலும் இன்னொரு முறை அவற்றை அனுபவிப்பதில் தவறில்லை.
ஸ்ரீராமானுஜர் தினமும் மாதுகரத்துக்குச் செல்லும் போது திருப்பாவையை அனுசந்தானம் செய்துகொண்டு செல்வது வழக்கம். ஒரு நாள் ’உந்துமத களிற்றன்’ என்ற திருப்பாவை சேவித்துக்கொண்டு ஆசாரியன் திருமாளிகை வாசலில் வந்த போது ’செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்’ என்று பாடி முடிக்க, ஆசாரியனின் மகள் கை வளை குலுங்கக் கதவைத் திறப்பதும் ஒரே சமயம் நிகழ, ராமானுஜர் அவளை நப்பின்னை என்றே நினைத்து சாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்).
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் ’நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்; நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன்’ என்று பாடிய ஆண்டாளின் ஆசையை அறிந்த திருப்பாவை ஜீயர் அவளின் விருப்பத்திற்கு ஏற்ப திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தடா அக்கார அடிசிலும், வெண்ணெய்யும் சமர்ப்பித்த பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் எழுந்தருளியபோது ஆண்டாள் ஆஸ்தனத்தை விட்டு வெளியே வந்து தன் ஆசையைச் செயல் படுத்திய ஸ்ரீராமனுஜரின் செயலுக்கு உகந்து ’வாரும் என் அண்ணலே’ என்று வரவேற்றார்.
இந்த வருடம் ’திருப்பாவை ஜீயர்’ திருநட்சத்திரம் அன்று ஒன்பது மணிக்கு ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த போது கண்ணன் ஸ்வாமிகள் அன்புடன் என்னை வரவேற்று முதலியாண்டான் திருமாளிகை மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். நாங்கள் உள்ளே நுழைய உடையவர் எழுந்தருளினார்.
திருமஞ்சனம், தீத்தவாரி, கோஷ்டி எல்லாம் முடிந்து திருப்பாவை ஜீயர் ஆண்டாளை மங்களாசாசனம் செய்யப் புறப்படும் சமயம், நேயமுடன் திருப்பாவைப் பாட்டு ஆறைந்தும் அடங்கிய ’தித்திக்கும் திருப்பாவை’ புத்தகங்களை அவரிடம் சம்பர்பிக்க, இன்முகத்துடன் ஆசீர்வதித்துவிட்டு ஆண்டாள் சந்நிதிக்கு புறப்பட்டார்.
’விட்டு சித்தன் தூய திரு மகளாய் வந்து அரங்கனார்க்குத் துழாய் மாலை முடி சூடிக் கொடுத்த’ ஆண்டாள், ரங்கமன்னாருடன் திருக்கல்யாணக் கோலத்திலும் அருகில் கூப்பிய கரங்களுடன் பெரிய திருவடியான கருடாழ்வாரும் இருக்க, தித்திக்கும் திருப்பவை புத்தகங்களை ’அன்புடனே அடியேனுக்கு அருள் செய் நீயே’ என்று ஆண்டாளின் திருவடிகளில் புத்தகங்களைச் சமர்ப்பித்த சமயம், திருப்பாவை ஜீயர் அங்கே ஆண்டாள் முன் மங்களாசாசனம் செய்ய எழுந்தருளினார்.
அரையர் ஸ்ரீ உ.வே நாதமுனி ஸ்வாமிகள் ஆண்டாளுக்கு மங்களாசாசனம் செய்ய அதை கேட்டருளிய ஆண்டாள் உடையவருக்குத் தன் மாலை பிரசாதங்களைத் தந்தருள உடையவர் வடபெருங்கோயிலுக்கு புறப்பட்டார்.
ஆண்டாள் திருவடியில் இருந்த புத்தகங்களை அடியேனிடம் கொடுத்த அர்ச்சகர் ”ஒரு புத்தகம் இன்று ஆண்டாள் திருவடியிலேயே இருக்கட்டுமே!’ என்று வாங்கிக்கொண்டார்.
அன்று தித்திக்கும் அண்ணனாக அக்கார அடிசில் கொடுத்தவர் இன்று தித்திக்கும் திருப்பாவையின் முதல் பிரதியை பட்டர்பிரான் கோதைக்கு பிறந்த நாள் பரிசாகக் கொடுத்தார்.
வடபத்திர சயனர் சந்நிதியில் திருப்பாவை ஜீயர் மங்களாசாசனம் செய்ய ’ஆலின் இலையாய்’ என்று அழகு தமிழில் ஆண்டாள் கூறிய வடபத்திர சயனர் திருவடிகளில் தித்திக்கும் திருப்பாவை சம்பர்பிக்கப்பட்டு அங்கிருந்து ஸ்ரீ பெரியாழ்வார் சந்நிதிக்கு திருப்பாவை ஜீயருடன் புறப்பட்டோம்.
’அணிபுதுவைப் பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான்’ என்ற பெரியாழ்வார் சந்நிதியில் திருப்பாவை ஜீயர் மங்களாசாசனம் செய்து புறப்பட்ட சமயம் ’வில்லிபுத்தூர் விட்டு சித்தன் விரும்பிய சொல்லாக’ அர்ச்சகர் அடியேனிடம் பெரியாழ்வாரிடம் இன்று ’தித்திக்கும் திருப்பாவை’ ஒன்று இருக்கட்டுமே என்று பெரியாழ்வார் திருவடிகளில் கொண்டு சேர்த்தார்.
திருப்பாவைக்கு ஏன் இவ்வளவு ஏற்றம் என்பதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. முக்கூர் ஸ்ரீமதழகிய சிங்கர் அருளிய ஒரு விளக்கத்தை உங்களுக்குக் கூறுகிறேன். ’திரு’ என்றால் ஸ்ரீ மஹாலஷ்மியை குறிக்கும், அதே சமயம் ’திரு’ என்பது நாராயணையும் குறிக்கும். பாவை என்றால் உருவம் என்று பொருள். இதை விக்கிரகம் என்பார்கள். ஆகத் திருமகளுக்கும், திருமாலுக்கும் ‘திருப்பாவை’ யானது விக்கிரகம் என்று அர்த்தமாகிறது. மற்ற விக்கிரகங்கள் போல் அல்லாமல் ஆண்டாள் தன் வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்த பாசுரங்களால் செய்யப்பட்ட திவ்யமங்கள விக்கிரகம்.
ராமர், கிருஷ்ணர் போலவே திருப்பாவை என்பது ஒரு அவதாரம். ராமன் என்ற திருமேனியில் பகவான் இருக்கிறான். சீதை என்ற திருமேனியில் லஷ்மி இருக்கிறாள். ஆனால் திருப்பாவை என்ற திருமேனிக்குள் லஷ்மியும் நாராயணனும் மற்ற எல்லா அவதாரப் பெருமாளும் அதில் இருப்பது தான் இந்த அவதாரத்தின் பெருமை.
ஸ்ரீபராசரபட்டர் ஸ்ரீரங்கநாச்சியாரே எங்களை உம் பிறந்தகமான மிதிலாதேச பிரஜைகளாக நினைக்க வேண்டும் என்கிறார். பூமித்தாயின் அம்சமான ஆண்டாள் வசிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் வாசிகள் கொடுத்து வைத்தவர்கள்.
எல்லாக் கோயில்களிலும் ஆண்டாள் சந்நதி இருந்தாலும், அவதாரஸ்தலத்தில் ஸ்ரீபெரியாழ்வாரால் ஆராதிக்கப்பட்ட ஸ்ரீ ஆண்டாள் திருமேனிக்கு உண்டான ஏற்றம் என்பது தனிச் சிறப்பு. ஆண்டாள் அருகில் சென்றால் அவள் உங்களுடன் பேசுகிறாள்.
ஸ்ரீ பெரும்பூதூரில் தானுகந்த திருமேனியான ஸ்ரீராமானுஜருக்கு திருமண்காப்பு சாத்தும் காலங்களில் தானுகந்த திருப்பாவையையே முதலில் சேவிக்கிறார்கள். ஸ்வாமி எம்பெருமானார் திருப்பாவையின் மீது கொண்டிருந்த ஈடுபாடு அன்று மட்டும் இல்லை புத்தக வெளியீடு அன்றும் புலப்பட்டது.
இன்று யாம் வந்த காரியம் ஆராய்ந்து உள்ளம் புகுந்து குளிரச் செய்த திருப்பாவை ஜீயருக்கும், திருப்பாவையை தந்த பட்டர் பிரான் கோதைக்கும் தலையல்லால் கைமாறிலேன்.
- சுஜாதா தேசிகன்
29.4.2023
ஸ்ரீராம நவமி ( ஸ்ரீரங்கம்)
எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஸ்ரீ உ.வே கண்ணன் ஸ்வாமிகளுக்கும், உடன் இருந்த ஸ்ரீமதி பிரசன்னா அவர்களுக்கும் என் நன்றிகள்.
Comments
Post a Comment