Skip to main content

சோலைக் கிளி

 

சோலைக் கிளி சோலைக் கிளி 


ஸ்ரீ வைஷ்ணவத்தில் கிளிக்குத் தனி இடம் உண்டு. திருப்பாவையில் ஆண்டாள் ‘இளம்’கிளியே என்று தன் தோழியைக் கூப்பிடுகிறாள். 


திருப்பாவையில்  ’பொல்லா அரக்கன்’( இராவணன்) என்றால் ’நல்ல அரக்கன்’ ( விபீஷணன் ) என்று ஒருவன் மறைமுகமாக இருப்பது போல, ’இளம் கிளி’ என்றால் மூத்த கிளி ஒன்று மறைந்து கொண்டு இருக்கிறது. அதை கடைசியில் சொல்லுகிறேன்.


நம் ஆசாரியர்களை ‘பேசித்தே பேசும் ஏக கண்டர்கள்’ என்பார்கள். நம் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தமே அது தான். ’சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ மாதிரி புதிதாக எதையும் பேச மாட்டார்கள் நம் பூர்வாசாரியர்கள் என்ன சொன்னார்களோ அதையே தான் திருப்பித் திருப்பிச் சொல்லுவார்கள். 


கிளிக்கு பேச எப்படிப் பேசக் கற்றுக்கொடுக்கிறார்கள் ?  

கிளியைக் கண்ணாடிக்கு முன் நிறுத்தி,  தன்னைத் தானே கிளி கண்ணாடியில் பார்த்துக்கொள்ளும். அப்போது பேசப் பயிற்சி கொடுப்பவர் சில வார்த்தைகளைப் பேசுவார். கண்ணாடியில் தெரியும் இன்னொரு கிளி தான் பேசுகிறது என்று நினைத்து பதிலுக்குக் கிளி பேசத் தொடங்கும். 


நாளடைவில், கிளியின் மூளையில் நம்முடைய குரல் இன்னொரு கிளியின் குரல் என்று பதிவாகி, நாம் என்ன பேசினாலும் உடனே கிளி அதைத் திரும்பச் சொல்ல ஆரம்பிக்கும். 


கிளிக்குப் பின்னால் நாம் இருந்து பேசுவதைப் போல ஆசாரியர்களுக்குப் பின்னால் இருப்பவர் பெருமாளே. ஆசாரியர்களின் வாக்கு எல்லாம் பெருமாளின் வாக்கு அதையே நமக்கு உபதேசமும் செய்கிறார்கள். 


ஆண்டாளின் கிளி ஏன் இடது கையில் இருக்கிறது ? 

ஒரு தாய் தன் குழந்தையை இடது கையில் இடுக்கிக்கொண்டு வலது கையால் ஆசையாகக் கதை சொல்லி ஊட்டுவாள், அதே போல ஆண்டாள் தன் கிளிக்கு ‘இன் அடிசிலொடு பால் அமுது’ ஊட்டியிருக்கிறாள். அப்போது தானே அது தெம்பாகத் திருவரங்கத்துக்குத் தூது போக முடியும் !


ஆண்டாளைப் போல ஸ்ரீராமானுஜரும் ஒரு கிளியை வளர்த்துள்ளார். குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழிக்கு அவர் அருளிய அருமையான வெண்பாவில் 


இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே 

தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் 

சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் 

குலசே கரனென்றே கூறு


இன்னமுதம் ஊட்டிய பைங்கிளியே என் நாயகனான ‘குலசேகரன்’ என்னும் பெயரைக் கூறுமாறு கொஞ்சுகிறாள் ’இராமாநுச நாயகி’. 


ஸ்ரீராமானுஜர் வளர்த்த கிளி பைங்கிளி என்றால் திருமங்கை ஆழ்வாருடைய கிளி ‘மென்’கிளி 


சொல் உயர்ந்த நெடு வீணை முலை மேல் தாங்கி

தூ முறுவல் நகை இறையே தோன்ற நக்கு

மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே

மென் கிளிபோல் மிக மிழற்றும் என் பேதையே  


என் பெண்  வீணையைத் தாங்கிக் கொண்டு, முத்துபோல் மென் முறுவல் ; மெல்லிய விரல்கள் சிவக்கும்படி வீணையைத் தடவி அருமையான இசையைக் கொடுக்கும் என் ’மென்கிளி’ யை ( போல இருக்கும் என் பெண்ணை ) பார்த்தீர்களா ? என்று பரகால நாயகியின் தாயார் கேட்பதாக அமைந்துள்ளது இந்தப் பாசுரம். 


நம்மாழ்வாரின் கிளி குழந்தை போல ’மழலைக்’ கிளி


ஒழிவு இன்றித் திரு மூழிக்களத்து உறையும் ஒண் சுடரை

ஒழிவு இல்லா அணி மழலைக் கிளிமொழியாள் அலற்றிய சொல்


பராங்குச நாயகியாகிய நம்மாழ்வார் திருமூழிக்களத்து பெருமாளைப் பாடியது “அணி மழலைக்  கிளிமொழியாள்”  போன்று அலற்றிய என்கிறார் ஆழ்வார். 


திருக்கண்ணமங்கையாண்டான் ஆண்டாளை ‘சோலைக் கிளி’ என்கிறார். அவருடைய நாச்சியார் திருமொழி தனியன்: 


கோலச் சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்

சீலத்தனள்* தென் திருமல்லி நாடி* செழுங்குழல் மேல்

மாலைத் தொடைதென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய

சோலைக் கிளி* அவள் தூய நல் பாதம் துணை நமக்கே.


தென் திசைத் திருமல்லி நாட்டுத் தலைவி ஆண்டாள். அழகான சங்கை நோக்கிக் கண்ணனின் சிவந்த உதட்டின் குணம் பற்றிக் கேட்டாள். செழுமையான தன் கூந்தலில் அணிந்த மாலையை அரங்கனுக்குக் கொடுத்தாள். ’சோலைக்கிளி’ போன்ற இனிய பேச்சுடைய கோதையின் தூய பாதமே நமக்குத் தஞ்சம் !


ஆண்டாளை ஏன் சோலைக் கிளி என்கிறார் திருக்கண்ணமங்கை ஆண்டான் ? தொண்டரடிப்பொடி ஆழ்வார் தான் காரணம். 

வண்டினம் முரலும்  சோலை,

          மயிலினம் ஆலும் சோலை,

கொண்டல் மீது அணவும் சோலை,

         குயிலினம் கூவும் சோலை,

அண்டர் கோன் அமரும் சோலை

         அணி திருவரங்கம் என்னா

மிண்டர் பாய்ந்து உண்ணும் சோற்றை 

         விலக்கி நாய்க்கு இடுமின் நீரே 

சோலை என்றால் அது திருவரங்கம்! ஆண்டாள் ஸ்ரீரங்கத்துக் கிளி !  சோலைக் கிளி என்று சொன்னதில் என்ன வியப்பு ? 


கடைசியாக யார் அந்த மூத்த கிளி ?


விஷ்ணு புராணம் அருளியவர் பராசரர். அதைக் கொண்டு பதினெட்டு புராணங்களையும், வேதத்தையும் வகுத்துக் கொடுத்தவர் அவருடைய புதல்வர் வியாசர். 


கிளி கடித்துப் போட்ட பழத்தின் சுவை கூடுதலாக  இருப்பது போல வியாசர் அருளிய கனிகளைக் கடித்து எச்சில் படுத்தி சுவையைக் கூட்டி நமக்குப் பாகவதமாகக் கொடுத்தவர் அவருடைய புதல்வரான கிளி வடிவில் இருக்கும் சுகப் பிரம்ம மகரிஷி. இவரே வயதான கிளி.


அந்த வயதான  கிளிக்கு ‘அடிசிலொடுபால் அமுது ஊட்டி’ கூடவே கண்ணன் கதைகளைச் சொல்லி ஆண்டாள் வளர்க்க அது ‘இளங் கிளியாக’ மாறியதில் என்ன வியப்பு ? 


நண்பர் எதிராஜன் சமீபத்தில் ஒரு கிளி படம் ஒன்றை அனுப்பினார். அதை ஆண்டாளுடன் சேர்த்த போது அக் கிளி ஆண்டாளின் இடது கையில் அமர்ந்து இன்னொரு கிளிக்குத் திருப்பாவையை ஊட்டிவிடுவது போலக் காட்சி அளித்தது. கிளி படத்துக்கு ஸ்பெஷல் நன்றி. Comments