Skip to main content

இடிந்த வீடு, கிழிந்த புத்தகம்

இடிந்த வீடு, கிழிந்த புத்தகம்
No automatic alt text available.
நேற்று ஒரு கோயிலுக்கு சென்றிருந்தேன். கோயில் அர்ச்சகர் “தேவரீருக்கு எந்த ஊர்” என்று கேட்ட போது யோசிக்காமல் “ஸ்ரீரங்கம்” என்றேன். நான் பிறந்த கிட்டதட்ட ஐந்து வயது வரை செகந்திராபாத்தில் தான் இருந்தேன்.
சுஜாதாவின் ஸ்ரீரங்கத்து தேவதைகளின் முன்னுரையில் இப்படி எழுதியிருப்பார் “நான் பிறந்த ஊர் சென்னை, ஆனால் வளந்து படித்தது ஆளானது எல்லாம் ஸ்ரீரங்கத்தில் தான். ‘நேட்டிவ் ப்ளேஸ்’ என்று ஏதாவது மனுவில் கேட்டால் ‘ஸ்ரீரங்கம்’ என்று தான் எழுதுகிறேன்.
சுஜாதா பிறந்தது திருவல்லிக்கேணியில். அங்கு அவரைத் தூக்கி வளர்த்தவர் கணித மேதை ராமானுஜத்தின் மனைவி. சுஜாதா ஒரு கட்டுரையில் அதை எழுதியிருக்கிறார்.
'அப்பாவின் ஆஸ்டின்' என்ற சுஜாதாவின் சிறுகதையைப் படித்திருப்பீர்கள். அதில் சுஜாதாவின் அப்பா அழுக்கு கலரில் ஒரு ஆஸ்டின் கார் வாங்குவார். குடும்பத்தில் எல்லோரும் அதன் கலரை மாற்றச் சொல்லியும் மாற்றாமல் இருப்பார். பிறகு ரிடையர் ஆன பிறகு விற்றுவிடுவார். அவர் ஏன் நாங்கள் எல்லோரும் சொல்லியும் கலர் மற்றவில்லை என்று எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் பிறகு "He had a message for us" என்றார் ஒரு முறை என்னிடம்.
இதே போல நாங்கள் திருச்சியில் வாடகை வீட்டில் தான் இருந்தோம். ரொம்ப பழைய வீடு. நாங்களும் மற்றவர்களும் எவ்வளவு செல்லியும் என் அப்பா கடைசி வரை அந்த வீட்டை மாற்றவில்லை.
”ஒரு நாள் அம்மா ...போனில் நாம் இருந்த வீட்டை இடிக்க ஆரம்பிச்சாச்சு.” என்றாள். கட கட என்று இடித்து கிடு கிடு என்று அங்கே ஒரு பிளாட் வந்தது.
இன்று நாங்கள் வாழ்ந்த வீடு இங்கே தான் இருந்தது என்று குத்து மதிப்பாக தான் எங்களால் சொல்ல முடியும். ஆழ்ந்து யோசித்தால் சுஜாதா சொல்லுவது போல என அப்பா “He had a message for us" என்று தோன்றுகிறது.
திருவல்லிக்கேணியில் இருக்கும் நண்பர் சம்பத் அவர்கள் சுஜாதா திருவல்லிக்கேணியில் இருந்த வீட்டை இடிக்க தொண்டங்கியிருக்கிறார்கள் என்று சொன்னார். அதைப் பற்றி கட்டுரையும், படங்களும் பதிவு செய்திருக்கிறார். இன்று காலை இதைப் படிக்கும் போது ’கொஞ்சம்’ வருத்தமாக இருந்தது. சில சமயம் இவை எல்லாம் நமக்கு ஒரு விதத்தில் ஏதையோ உணர்த்துகிறது !
2008, பிப்ரவரி 28- விடியற்காலை இரண்டு மணி இருக்கும். ஆஸ்பத்திரியிலிருந்து மொத்தமாக வெளியே வந்து, பார்க் செய்த பைக்கை எடுக்கும்போது அங்கே இருந்த வாட்ச்மென் ஒரு சலாம் போட்டுச் சிரிக்க, பையிலிருந்த பத்து ரூபாயைக் கொடுத்தேன். கையிலிருந்த பிரபந்தப் புத்தகத்தை எடுத்து பெட்ரோல் டாங்க் மேல் இருக்கும் பையில் சொறுகிவிட்டு கிரீம்ஸ் ரோட்டில் பைக் ஓட்டிக்கொண்டு நேராக மவுண்ட் ரோடு வந்தபோது சில வாகனங்கள் வேகமாக ஓடிக்கொண்டிருந்தன. இடது பக்கம் திரும்பி சத்தியம் தியேட்டர் பக்கம் வந்த போது பெட்ரோல் டாங்க் பையில் பிரபந்தப் புத்தகம் இல்லை. திரும்பவும் மவுண்ட் ரோடு போய் இருட்டில் எங்கே விழுந்திருக்கும் என்று தேட- லாரிகளும், வெளியூர் பேருந்துகளும் வேகமாக ஓடிக்கொண்டு இருந்தன.. யாரையாவது கேட்கலாம் என்றால் சாலை மனித நடமாட்டம் இல்லாமல் காலியாக இருந்தது. சென்ற பாதை முழுவதும் பார்க்கலாம் என்று பைக்கை ஒன்வேயில் ஓட்டிக்கொண்டு சென்றபோது ஒரு ஆட்டோ நடுரோட்டில் நின்றுகொண்டிருந்தது. ஆட்டோ டிரைவர் கையில் கந்தலாக அந்தப் பிரபந்த புத்தகம்.
"சார் அது என்னுடையது!" என்றேன்.
"சாரி கீழே கடந்தது.. லாரியோ பஸ்ஸோ ஏற்றிட்டது."
கொத்தாக அவரிடம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தேன். அந்தப் புத்தகத்தை இன்னும் ஒட்டாமல் அப்படியே ஒரு பையில் வைத்திருக்கிறேன். பிரபந்தம் புத்தகம் கிழிந்ததற்கான காரணம்தான் இன்னும் தெரியவில்லை!
இதைப் படித்துவிட்டு சுஜாதாவின் தம்பி ( திரு எஸ்.ராஜகோபாலன் ) எனக்கு எனுப்பிய கடிதத்தில் ஒரு பகுதி
“Read your latest write up on Rangarajan. Even after 3 years, i find it difficult to realise his absence from this world. .......The incident you have mentioned in the last paragraph seems to suggest that a message has been given by him to you because at that time he had already passed away. As i told you it may be a message that even a precious book can get torn and destroyed by a mindless lorry. It may mean that he has told you not to worry about the book in the physical form since the message contained in the book is more important thus asking you to be less sentimental when you lose material things in life”
- சுஜாதா தேசிகன்
10.9.2018
படம்: Sampathkumar Srinivasan

Comments

  1. கட்டுரை மனதை உருக்குகிறது.
    தேசிகன், ஒரு சின்ன உதவி--சுஜாதாவின் “ ஹாஸ்டல் தினங்கள் “ நாவல் எங்கு கிடைக்கும்?

    ReplyDelete

Post a Comment