Skip to main content

தூப்புல் குலமணி ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் ஒரு நாள்


அப்பாவுக்குத் திருமணம் ஆவதற்கு முன்பே தேசிகன் என்று எனக்குப் பெயர் வைத்துவிட்டார். அதாவது பிறக்கப் போகும் முதல் பையனின் பெயர் தேசிகன் என்று தீர்மானித்துவிட்டார். இதை என் அப்பாவே என்னிடம் சொல்லியிருக்கிறார்.
”பெண்ணாகப் பிறந்திருந்தால் என்ன செய்திருப்பே?” என்று ஒரு முறை கேட்டதற்கு . ”பெருமாள் ஏமாற்ற மாட்டார்” என்றார் நம்பிக்கையுடன். அவருக்கு ஸ்ரீ வேதாந்த தேசிகன் மீது இருந்த பற்று அப்படி.
பெயரில் என்ன இருக்கிறது என்று நினைக்கலாம். கொஞ்சம் பின்னோக்கி ஸ்ரீ ராமானுஜர் சரித்திரத்தை புரட்டலாம்.
ஸ்ரீஆளவந்தார் திருநாடு அலங்கரித்த சமயம். அவருடைய மூன்று விரல்கள் மடங்கியிருந்தது பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஸ்ரீராமானுஜர் ஆளவந்தாரின் ஆசையை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவேன் என்று சொல்ல, மடங்கிய விரல்கள் விரிந்தன.
அந்த மூன்று ஆசைகள்
 • நம்மாழ்வாரின் திருநாமத்தை சூட்ட வேண்டும்.
 • பராசர பட்டர், வேத வியாசர் திருநாமங்களை சூட்ட வேண்டும்
 • ஸ்ரீபாஷ்யத்துக்கு உரை
இதில் முதல் இரண்டு ஆசைகள் - பெயர் சூட்ட வேண்டும் என்பது ! பாஷ்யம் எழுதுவது போல கஷ்டமானது கிடையாது.

சில வருடங்கள் முன் பெரியவாச்சான் பிள்ளையின் திருநட்சத்திரம் அன்று சேங்கனூரில் ஸ்ரீகிருஷ்ண பிரேமி ஸ்வாமிகளைச் சந்தித்த போது ”சௌக்கியமா?” என்றார் என்னை பார்த்து. ( அது தான் முதல் சந்திப்பு ! )
“சின்ன வயதில் உங்கள் உபன்யாசம் கேட்டிருக்கிறேன்.. இன்று தான் உங்களை நேரில் சந்திக்கிறேன்” என்றேன்.
”திருநாமம்?”
“தேசிகன்”
கை கூப்பி வணங்கினார்.
இந்த மாதிரி என் பெயரை கேட்கும், அர்ச்சகர், ‘பண்ணி வைக்கும்’ வாத்தியார் என் பெயரை கேட்டவுடன் ‘கை கூப்பும்’ ஒரு வித ரிப்லக்ஸ் ஆக்‌ஷனை ( reflex action ) ’குருகூர் சடகோபன் சொன்ன’ என்று கோஷ்டி சேவிக்கும் போது மட்டுமே பார்த்திருக்கிறேன்.
ஸ்ரீ தேசிகனின் திருக்குமாரர் ‘ஸ்ரீ குமார வரதாச்சாரியார்’. தேசிகனுக்கு காஞ்சி வரதன் மீது கொண்ட பிரேமையினால் வைத்த பெயர். தேசிகனுக்குப் பிடித்த காஞ்சி வரதன் சன்னதியில் இந்த மாதம் 21ஆம் தேதி ( 21.9.2018 ) ஸ்ரீ வேதாந்த தேசிகனின் 750 திருநட்சத்திரம் அன்று ஒரு நாள் முழுவதும் ஸ்ரீ தேசிகனுடன் இருந்தேன்.
இந்தப் பயணத்தை முன்பே தீர்மானிக்கவில்லை. ஸ்ரீ தேசிகன் 1000வது ஆண்டுக்கு நானும் இதைப் படிக்கும் நீங்கள் இருக்கப் போவதில்லை, அதனால் ‘இப்போதே எம்மை’ என்று ஆண்டாள் சொல்லுவது போலக் கிளம்பிவிட்டேன்.
ஸ்ரீராமானுஜரின் 1000 + ஸ்ரீ தேசிகனின் 750 என்று ஒரு ’டபிள் தமாக்கா’வாக அமைந்தது.
விடியற்காலை, பட்டுப்புடவை விளம்பரங்களைக் கடந்து பேருந்து நிலையத்தில் கடைகளில் ஆப்பிள்களை அடுக்கிக்கொண்டு இருக்கும் போது காஞ்சிபுரம் வந்து சேர்ந்தேன்.
6.30 மணிக்கு வரதன், தாயார் விஸ்வரூப தரிசனத்துடன் துவாதசிக்குத் தீர்த்தம் கொடுத்து அருளினார்கள். அதை முடித்துக்கொண்டு ஸ்ரீ அஹோபில மடம் சென்ற போது அடியேனுடைய ஆசாரியன் அங்கே மாலோலன் விஸ்வரூப தரிசனத்துடன் பாலும் கொடுத்த தெம்பில் நேராக தூப்புலுக்கு சென்ற போது ஸ்ரீ வேதாந்த தேசிகன் விளக்கொளி பெருமாளுக்கு மங்களாசாசனம் செய்ய ஆயத்தமாகிக்கொண்டு இருந்தார்.
’தூப்புல்’ வேதாந்த தேசிகன் அவதாரஸ்தலம். அதனால் பூவின் வாசனை போல தூப்புல் தேசிகனுடன் ஒட்டிக்கொண்டு விட்டது. ’தூப்புல்’ தூய்மை வாய்ந்த புல் - தூப்புல், இது வைதிகர்கள் உபயோகிக்கும் தர்ப்பத்தை குறிக்கும். தூப்புல் குலம் என்றும் சொல்லுவர்.


இன்றைக்குச் சரியாக 750 ஆண்டுகளுக்கு முன் கிபி 1268ல் புரட்டாசி திருவோணத்தில் திருப்பதியில் பிரம்மோத்சவம் முடிவுறும் “திருவோண திருவிழவில்” விபவ ஆண்டில் விபவத்துடன் ஸ்ரீராமானுஜருடைய சீரிய கருத்துக்களை அழுத்தமாக சொல்ல அவதரித்தார்.
திருவேங்கடவன் திருநட்சத்திரமும் கன்னியாச்ரவணம் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து தேசிகாவதாரம் ஒரு அர்ச்சாவதாரத்தின் விபவாதரம் என்று எண்ணும் படி இருக்கிறது. பெரியாழ்வார் பல்லாண்டில் “திருவோணத்தான் உலகு ஆளும் என்பார்களே” என்ற திருவாக்கை மெய்பித்தருளிய அவதாரம் தேசிகனுடையது எனலாம்.
கீதையில் கண்ணன் “எப்போது எல்லாம் தர்மத்திற்கு வாட்டமும், அதர்மம் வளர்ச்சி பெறுகிறதோ அப்போது எல்லாம் நான் உலகில் தோன்றுகிறேன்” என்றருளினான். அதை நிலை நாட்ட மணி ஓசையுடன் நம் குலமணி தேசிகன் அவதரித்தார்.

நான் போன சமயம் ஸ்ரீ தேசிகன் அஞ்சலி முத்திரையுடன் இருந்தார். தேசிகன் அருளிய ’அஞ்சலி வைபவம்’ நினைவுக்கு வந்தது. தேசிகன் வரதனைச் சேவிக்க கிளம்பிக்கொண்டு இருப்பதால் இன்று அவர் அஞ்சலிக்கு மாறியிருந்தார்.
ஸ்வாமி தேசிகனும், நம்மாழ்வாரும் பொதுவாக எல்லா திவ்ய தேசங்களிலும் ஞான முத்திரையுடன் தான் காட்சி அளிப்பார்கள். உடையவர் முதன் முதலில் உடையவர் ’வேதார்த்த சங்கிரகம்’ நூலைத் திருமலையில் அருளியதால் திருமலையில் மட்டும் ஞான முத்திரையுடன் நமக்குக் காட்சி அளிக்கிறார்.


உடையவர் இயற்றியவற்றுள் ஸ்ரீபாஷயம் என்பது மிக முக்கியமாகக் கருதப்படுகிறது. முன்பு பார்த்த ஆளவந்தாரின் மூன்று ஆசைகளில் ஒன்று பிரம்மசூத்திரத்துக்கு பாஷ்யம் எழுத வேண்டும் என்பது.
இந்த நிகழ்ச்சி நடந்து கிட்டதட்ட 250 ஆண்டுகள் கழித்து காஞ்சி வரதாரசப் பெருமாளின் சன்னதியில் நடாதூர் அம்மாள் தம் சீடர்களுக்குக் காலட்சேபம் செய்துகொண்டு இருக்கிறார். அன்று ஸ்ரீபாஷ்ய காலட்சேபம்.
அங்கே நல்ல தேஜ்ஸுடன் ஐந்து வயதுக் குழந்தை தன்னுடைய மாமாவான கிடாம்பி அப்புள்ளாருடன் உள்ளே நுழைகிறார்கள். [ நடாதூர் அம்மாளுடைய சிஷ்யர் கிடாம்பி அப்புள்ளார். ஸ்ரீராமானுஜரின் முக்கிய சிஷ்யர்களுள் கிடாம்பியாச்சான் என்பவர் வம்சத்திலே தோன்றியவர் தோதாத்ரியம்மையார். இவருடன் பிறந்தவர் ‘அப்புள்ளார்’ எனப்படும் ஆத்ரேய ராமானுஜாசார்யார். தாய் மாமனமாகிய இவரே நம் தேசிகனுக்கு சகல சாஸ்திரங்களையும் திறம்படக் கற்பித்து ஆசாரியராவார்]
கால்டஷேபத்தை நடதூர் அம்மாள் நிறுத்துவிட்டு குழந்தையின் அழகைப் பார்த்து “யார் இந்தக் குழந்தை ?” என்று கேட்க ”என்னுடைய மருமகன்” தான் என்கிறார் அப்புள்ளார் கூடவே இந்தக் குழந்தைக்கு பாடம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைக்கிறார்.
அதற்கு அம்மாள், தனக்கு வயதாகிவிட்டது அதனால் உன் மருமகனுக்கு நீயே ஆசிரியராக இருந்து பாடம் எடு என்று நியமித்துவிட்டு, தொடர்ந்து காலட்சேபத்தை தொடர முற்படும் போது நிறுத்திய இடம் நினைவுக்கு வரவில்லை. அப்போது சிறுவன் உள்ளே நுழைந்த போது தான் என்ன கேட்டானோ அதை அப்படியே ஒப்பிக்கிறான். நடாதூர் அம்மாள் சிறுவனை அணைத்துக் கொண்டு ”ஸ்ரீவைஷ்ணவ கொள்கையைப் பரவச் செய்து, பெரும் புகழுடன் விளங்குவாய்” என்று ஆசிர்வதிக்கிறார். அவர் ஆசீர்வாதம் பலித்தது. அந்தச் சிறுவன் தான் ஸ்ரீ வேதாந்த தேசிகன்.

தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகன் வரதனை மங்களாசாசனம் செய்ய புறப்படுவதற்கு தயாராகிக்கொண்டு இருக்கும் போது விளக்கொளி பெருமாள் சன்னதியை சுற்றி வலம் வந்தேன். சுவற்றில் ஸ்ரீ தேசிகனின் வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயங்களை ஓவியமாகத் தீட்டியிருந்தார்கள். இதை எல்லாம் சேர்த்தால் ஒரு காமிக்ஸ் புத்தகம் மாதிரி இருக்குமே என்று காமராவில் கவர்ந்துகொண்டு வெளியே வந்த போது ஓர் இடத்தில் தூப்புல் ( தர்ப்பம் ) செழிப்பாக வளர்ந்துள்ளதை ரசிக்கும் போது வான வேடிக்கை சத்தம் கேட்க…. தேசிகனை அழைத்து வர வரதன் அனுப்பிய பல்லக்கு வந்திருந்தது.
ஸ்ரீ தேசிகனுடன் சேர்ந்து விளக்கொளிப் பெருமாளுக்கு ‘அந்தரத்தமரர்கள் கூட்டங்கள் இவையோ” என்பது போல கூட்டமாகப் பல்லாண்டும், ஆண்டாளின் திருப்பாவையை சொல்லும் போது அந்த இடம் மினி வைகுண்டம் மாதிரியே காட்சி அளித்தது.
கோஷ்டி முடிந்து கொஞ்சம் நேரம் ஓய்வு எடுக்கும் போது வெளியே மீண்டும் வாண வேடிக்கை ஒலிக்க வெளியே சென்று பார்த்தால் நம் தேசிகனை காணவில்லை.
விசாரித்த போது பல்லக்கில் அவர் கிளம்பிவிட்டார் என்றார்கள்.
ஓர் ஆட்டோவை பிடித்து
“தேசிகனை துரத்துப்பா” என்றேன் அவருக்குப் புரியவில்லை.
”பல்லக்கில் போகிறாரே..”
“ஓ… சாமிய துரத்தணுமா ஏறிக்கோங்க சாமி” என்றார் .
அவருக்கு எல்லாமே சாமி தான். ஆட்டோவில் போகும் போது காஞ்சிபுரம் முழுக்க சாமி-2 போஸ்டர்கள்.
சாமியை, மன்னிக்கவும் தேசிகனைத் துரத்திக்கொண்டு ஆட்டோவில் போகும் சமயம் அவரைப் பற்றி மேலும் தகவல்களை பார்த்துவிடலாம்.

எல்லாக் கோயில்களுக்கு வெளியே கருடாழ்வார் பெருமாளுக்கு முன் இருப்பதைப் பார்க்கலாம். ‘புள்ளரையன் கோயில்’ என்கிறாள் ஆண்டாள். கருடாழ்வாருக்கு பெரிய திருவடி என்ற பெயரை கேள்விப்பட்டிருப்பீர்கள், அவருக்கு இன்னொரு பெயர் - வேத ஸ்வரூபன். பெருமாளுக்குக் கண்ணாடி போல அவர் முன்பே இருப்பவர்.
பெருமாளே “உன்னைப் பார்த்தால் என்னை நானே கண்ணாடியில் பார்ப்பது போல இருக்கிறது” என்று நினைப்பாராம். அப்பேர்பட்ட கருடாழ்வார் தேசிகனுக்கு திருவயிந்திபுரத்தில் ‘வேதத்தின் உட்பொருளை’ அவர் ‘நெஞ்சுள் நிறுத்தினான்’ என்பது போல அவருக்கு ஸ்ரீஹயக்ரீவமந்திரத்தை உபதேசிக்க, ஸ்ரீஹயக்ரீவரோ அவருடைய நாக்கில் தன் திருவாய் அமுதத்தை இவருக்கு ஊட்ட, பெருங்காயம் சாப்பிட்ட வாயில் பெருங்காய வாசனை வருவது போல ஹயக்கீரவர்


திருவாய் அமுதத்தை பிரசாதித்த ஸ்ரீ தேசிகன் திருவாய்மொழியின் சாரப்பொருளை நமக்கு தந்ததில் வியக்க ஒன்றும் இல்லை.
வேதத்தைப் படிக்க வில்லை என்றால் பரவாயில்லை. நம் ஸ்வாமி தேசிகன் எப்படி வாழ்ந்தார் என்று தெரிந்துகொண்டாலே நாம் வேதத்தைக் கற்றுக்கொண்டதற்கு சமம் என்பார்கள் பெரியோர்கள்.
ஒரு முறை திருவரங்கத்தில் அத்வைத வித்வான்கள் ஸ்ரீராமானுஜ சித்தாந்தத்தைக் கண்டித்து வாதம் செய்து குழப்பம் ஏற்படுத்த, ஸ்ரீவைஷ்ணவ பெரியோர்களின் வேண்டுகோளுக்கு இசைந்து, ஸ்வாமி தேசிகன் காஞ்சியிலிருந்து திருவரங்கம் வந்தார். முதலில் ’எதிராஜ ஸ்ப்ததி’ இயற்றி உடையவரை வணங்கிவிட்டு எட்டு நாட்கள் இடைவிடாமல் வாதம் செய்து அவர்களை வென்றார்.
வேதாந்தத்துக்கு அதாவது தமிழ், சமிஸ்கிரதம் என்ற உபய வேதாந்தத்துக்கும் அதாரிட்டியான ஆசாரியன் இவரே என்று பெரிய பெருமாள் அவருக்கு ’வேதாந்தாச்சார்யர்’ என்ற பட்டத்தை கொடுத்தார். தேசிகன் என்றால் ஆசாரியன் என்று பொருள். அதுவே வேதாந்த தேசிகன் என்று இன்று நிலைத்துவிட்டது.
அஹோபில 44ஆம் பட்டம் அழகியசிங்கர் ”அடை மொழியின்றி வழங்கப்படும் ’தேசிக’ என்ற சப்தம் நம் ஸ்ரீநிகமாந்த மஹா குருவையே குறிக்கும். இப்படி இந்த ’தேசிக’ சப்தம்
ஈரரசு ( இரு பொருள்) படாதபடிச் செய்த பெருமை நம் ஸ்வாமி ஸ்ரீ தேசிகனுக்கே உரியதாகும்” என்கிறார்.
யதோதகாரி, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் கோயில் அருகே மீண்டும் நம் தேசிகனுடன் சேர்த்துவிட்டார் அந்த ஆட்டோ ஓட்டுனர். அங்கிருந்து காஞ்சி வரதன் கோயிலுக்கு தேசிகனுடன் நடக்கும் போது வழியில் வரும் பேருந்துகளிலிருந்து மக்கள் வழிவிட்டு அவர் போகும் திசையில் எல்லாம் “கோவிந்தா” என்று சொல்ல ஊரே ஸ்வாமி தேசிகனை கொண்டாடியதைப் பார்க்க முடிந்தது.


தேசிகனின் பல்லக்கு கீழ் குடுமி, திருமண்ணுடன் குட்டி தேசிகன் மாதிரி அவர் நிழலில் கூடவே வந்துகொண்டு இருந்ததைப் பார்க்க வியப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது.
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது. ஸ்வாமி தேசிகனே திருவேங்கடத்தான் அம்சம் தானே ! அந்தச் சிறுவனை வணங்கிவிட்டு “உன் பேர் என்ன ?” என்றேன்
என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு “வகுளாபரணன்” என்றான். ஸ்வாமி தேசிகனுடன் நம்மாழ்வார் துணைக்கு வருகிறார் போல என்று நினைத்துக்கொண்டேன்.

அஹோபில மடத்தை கடக்கும் போது 46 பட்டம் ஸ்ரீ அழகிய சிங்கர் நம் தேசிகனுக்கு மங்களாசாசனம் செய்ய காத்துக்கொண்டு இருந்தார். அவருடன் சேர்ந்து தூப்புல் ஸ்ரீ வேதாந்த தேசிகனை சேவிப்பது மிக இனிமையான அனுபவமாக அமைந்தது.
“சுடரொளி பரந்தன சூழ்திசை யெல்லாம்” என்பது போல பட்டாசுகள் வெடிக்கத் தேசிகன் வரதராஜன் கோயிலுக்கு உள்ளே பிரவேசித்தார்.


முதலில் அங்கே இருக்கும் ராமர் சன்னதிக்கு எழுதருளி ரகுவீர கத்யம் சாதிக்க அது உள்ளே பட்டாசு மாதிரி கேட்டது. ஹயக்ரீவர் அவர் நாக்கில் கொஞ்சம் அழுத்தியே எழுதிவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன்.
மற்ற சன்னதிகளுக்கு மங்களாசானம் செய்துவிட்டு பெருந்தேவி தாயார் சன்னதிக்கு சென்று ஸ்ரீ ஸ்துதி சேவித்துவிட்டு வெளியே வரும் போது தேசிகன் கிட்டதட்ட எல்லாவற்றுக்கும் ஸ்லோகம் எழுதியிருக்கிறார் என்று வியப்பே மிஞ்சியது.
நரசிம்மர் சன்னதியில் மங்களாசாசனம் செய்துகொண்டு இருக்கும் போது ஒருவர் என்னிடம் வந்து “யார் சாமி இது ?” என்றார்.
”இவர் தான் வேதாந்த தேசிகன் - ஆசாரியன்”
“இவருக்கும் ராமானுஜருக்கும் என்ன வித்தியாசம் ?”
“ராமானுஜருக்குப் பிறகு 250 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை மாதிரியே அவதரித்தவர்” என்று அவரிடம் நம் ஸ்ரீவைஷ்ணவ குருபரம்பரை பற்றி சிறு நேரம் பேசிய பின் அவர் தன் மொபலைத் திறந்து ஒரு படத்தை காண்பித்தார் அதில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி அளித்தார்.
”எந்தக் கோயில்?” என்றேன்.
“கோயில் இல்லை, எங்கள் வீட்டில்.. எனக்குப் பெருமாள் மீது ரொம்ப ஆசை.. பெருமாள் பெயர் எல்லாம் தெரியாது… இதை வீட்டுக்கு வாங்கிவந்துவிட்டேன்… எப்படி ஆராதனம் செய்வது என்று எல்லாம் தெரியாது”
“உங்களுக்குப் பிரேமை இருக்கு, அதனால் ஆராதனம் பற்றி எல்லாம் கவலைப் படாமல்.. பராசரபட்டர் மாதிரி செய்யுங்கள்” என்று பட்டர் செய்த ஆராதனம் என்ன என்று சொன்னேன். கூடவே ஸ்ரீவைஷ்ணவம் பற்றியும் கொஞ்சம் நேரம் பேசினேன்.
“உங்களுக்கு எவ்வளவு பசங்க?” என்றேன்
நான் நாகர்கோவிலில் பிஸினஸ் செய்கிறேன். என் பையன் LKG படிக்கிறான். அவனை டாக்டர், என்ஜினியர் ஆக்குவதைவிட. அவனுக்கு ஸ்லோகம், பிரபந்தம் எல்லாம் சொல்லித்தர வேண்டும் என்றார். என்ன ஒரு conviction என்று வியப்பாக இருந்தது.
“உங்கள் பையனுக்கு என் ஆசிகள். அவனுக்குத் திருப்பாவை முப்பதும், கண்ணி நுண் சிறுத்தாம்பு இது இரண்டையும் சொல்லித்தந்துவிடுங்கள். இதை மனதில் விதைத்தால் மற்றவை எல்லாம் பெருமாளே பார்த்துக்கொள்வார்” என்று தட்டிக்கொடுத்துவிட்டு நகர்ந்த போது தேசிகன் நரசிம்மருக்கு மங்களாசாசனம் செய்து முடித்து வரதனைச் சேவிக்க கிளம்பிக்கொண்டு இருந்தார். கூட சென்றேன்.
ஸ்வாமி தேசிகன் பேரருளாளன் சன்னதி கர்பக்கிரகம் உள்ளே நுழைந்து அவர் காலடியில் இருக்க இந்த கண்கொள்ளா காட்சியைக் காண கூட்டம் அலை மோதியது. சேவித்துவிட்டு வெளியே வருபவர்கள் முகத்தில் ஆனந்தமும், உடம்பில் வேர்வையும் அவர்களை உற்று நோக்கினால் நெரிசலில் கொஞ்சம் இளைத்தும் இருந்தார்கள்.
இதற்குப் பிறகு தேசிகன் தூப்புல் கிளம்பும் வரை பெருமாளையே பார்த்துக்கொண்டு இருப்பார்.


[ வரதன் முன் தேசிகன் எப்படி இருப்பார் என்பதை அடியேன் கொஞ்சம் போட்டோ ஷாப் செய்திருக்கிறேன் ( பார்க்கப் படம் ) ]
இன்னும் இரண்டு மணி நேரம் கழித்து தான் புறப்பாடு என்று பேசிக்கொண்டார்கள். அதுவரை தேசிகனுடைய வைராக்கியம் பற்றி பார்க்கலாம்.
வைராக்கியம் என்றால் என்ன என்று கேட்டால் உடனே பதில் செல்ல முடியாது. கொஞ்சம் யோசிப்போம். ஞான, பக்தி வைராக்கியம் என்று கேள்விப்பட்டிருப்போம்.
சுலபமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் தாய், தந்தை, தாத்தா, பாட்டி, மாமா, நண்பர்கள் என்று எல்லோரிடத்திலும் நமக்கு அன்பு இருக்கும் ஆனால் காதல் என்பது மனைவி(அ) காதலியிடம் மட்டுமே இருக்க முடியும். பெருமாளிடம் காட்டும் காதல் தான் வைராக்கியம். நம்மாழ்வார், திருமங்கையாழ்வார் அதனால் தான் நாயகி பாவத்தில்
பெருமாளிடம் அன்பு காட்டினார்கள். ஆண்டாளுக்கு அந்தப் பிரச்சனை எல்லாம் இல்லை அவள் பெண்ணாக இருப்பதால் added advantage !. பிள்ளை உறங்காவில்லி தாஸர் அரங்கனைப் பார்த்த போது தன் காதலியிடம் வைத்த அன்பைப் பெருமாளிடம் டைவர்ட் செய்தார். பட்டரிடம் அருளிச்செயலுக்கு வியாக்கியானம் அருள வேண்டும் என்று கேட்க அதற்கு அவர் ‘முலை உள்ள ஒருவர் தான்’ எழுத முடியும் என்றாராம். அதாவது பெருமாளை காதலிக்கும் ஒருவர் தான் எழுத முடியும் என்று பொருள்.
ஒரு பொருளைப் பற்றி அறிவு ஏற்பட்டால் அது ஞானம். அப்பொருளிடத்து அன்பு ஏற்பட்டால் அதுவே பக்தி. அந்தப் பொருளின் அருமை பெருமைகளை உணர்ந்து மற்ற பொருட்களின் மீது நமக்குப் பற்றற்ற தன்மை ஏற்பட்டால் அதுவே வைராக்கியம். இங்கே பொருள் என்பது பெருமாள். அது மூன்றும் பூர்ணமாக பெற்றவர் நம் ஸ்வாமி தேசிகன்.
தன் ஆயுள் முழுவதும் ஸ்வாமி தேசிகன் உஞ்சவிருத்தி செய்து தான் வாழ்க்கை நடத்தினார். அவர் சன்னியாசம் வாங்கவில்லை ஆனால் இல்லத்துறவி ! ஒரு நிகழ்ச்சியை பார்க்காலம் -
அவர் வாழ்ந்த காலத்தில் செல்வந்தராகவும், வேதாந்தியாகவும் இருந்த வித்யாரண்யர் ஸ்வாமி தேசிகனின் ஏழ்மையைப் போக்கி இவரையும் செல்வந்தராக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசனைச் சந்திக்க வேண்டும் என்று ஒரு கடித்ததை அனுப்பினார். ஸ்வாமி தேசிகன் அதற்குப் பதிலாக ‘வைராக்கிய பஞ்சகம்’ என்று ஐந்து ஸ்லோகங்கள் எழுதினார்.
அதில் ’மூதாதையர்கள் காட்டிய வரதராஜர் என்ற பேரருளாளப் பெருஞ்செல்வம் இருக்க நான் எதற்குக் கையேந்த வேண்டும்?’ என்கிறார். வைராக்கியமே இவருடைய செல்வம்!.
நம் ஆசாரியர்களின் வாழ்க்கையில் வைராக்கியத்தை பல இடங்களில் பார்க்கலாம். ஸ்ரீவைஷ்ணவத்தில் வைராக்கியம் பெருமாளிடம் மட்டும் இல்லாமல் ஆசாரியர்களிடம் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும்.
’ஆசாரிய தேவோ பவ’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆசாரியனைத் பெருமாளாக வழிபடு என்று சொல்லுவார்கள். ஆசாரிய ரூபத்தில் பெருமாள் என்பது தான் சரியான interpretation. சில உதாரணங்களை பார்க்கலாம்.
ஆளவந்தார் திருநாட்டை அலங்கரித்த சமயம். தன் மானசீக ஆசாரியரான ஆளவந்தாரைச் சேவிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை என்று ஸ்ரீராமானுஜர்
அரங்கனிடம் கோபம் கொண்டு அவரைச் சேவிக்காமல் காஞ்சிக்குத் திரும்பினார்.
கூரத்தாழ்வான் பார்வை இழந்து மீண்டும் ஸ்ரீரங்கம் திரும்பினார்.அப்போது ஒரு நாள் பெரிய பெருமாளைச் சேவிக்க சென்றவரைக் கோயில் வாசலில் காவலர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
“ராமானுஜ சம்பந்தம் உள்ளவர்களைக் கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்பது மன்னரின் உத்தரவு. உங்களுக்கும் ராமானுஜருக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னீர்களேயானால் கோயிலுக்குள் போகலாம்”
அதற்குக் கூரத்தாழ்வான் ”பெருமாளின் சம்பந்தத்தை விட என் ஆசாரியன் ராமானுஜ சம்பந்தமே முக்கியம்” என்று சொல்லிவிட்டு புறப்பட்டார்.
இது எல்லாம் ஆயிரம் வருடம் பழைமை வாய்ந்த விஷயங்கள். 21ஆம் விளிம்பிலும் இந்த மாதிரி வைராக்கியத்தை பார்க்கலாம்.

முக்கூர் அழகியசிங்கர் என்று அன்புடன் அழைக்கப்பெற்ற 44ஆம் பட்டம் அழகியசிங்கர் ஸ்ரீரங்கம் ராயகோபுரத்தை 1987 ஆம் ஆண்டு ராஜகோபுரமாக்கினார் என்பது உங்களுக்குத் தெரிந்த விஷயம். 85 வயதில் கோபுரத்தை கட்டத் தொடங்கி, தன் 92 வது
வயதில் இதை கட்டி முடித்தார் என்பது ராஜகோபுரத்தைவிடப் பெரிய ஆச்சரியத்தைத் தந்தது. அதைவிட ஆச்சரியம், கோபுரம் கட்டியதற்கு கோயில் மரியாதை ஏற்க மறுத்துவிட்டார். காரணம் ஸ்ரீரங்கம் கோயிலில் வேதாந்த தேசிகனுக்கு கிடைக்காத மரியாதை தனக்கு வேண்டாம் என்ற ’தேவு மற்று அறியேன்’ வைராக்கியம் !
ஸ்ரீரங்கம் கோயிலில் தேசிகன் ஏன் உள்ளேயே இருக்கிறார் என்று காஞ்சி வரதராஜ பெருமாளிடம் கேட்க அதற்கு அவர் ஒரு விடையைச் சொன்னார். அதற்கு முன் மேளம் கொட்டும் சத்தம் கேட்க வாருங்கள் ஸ்ரீ பேரருளாளன், ஸ்ரீ வேதாந்த தேசிகனுடன் மீண்டு பயணிக்கலாம்.
நாம் வீட்டுக்கு வரும் நெருங்கிய உறவினரை நாம் வீட்டு வாசல் வரை வந்து வழி அனுப்பிவைப்போம். என் அம்மா எனக்கு நாற்பத் வயதானாலும் தெருக்கோடியில் திரும்பும் வரை ‘டாட்டா’ காண்பித்துக்கொண்டு இருப்பார். ஸ்ரீ பெருந்தேவி தாயார்- பேரருளானனுடன் தேசிகனுடைய உறவு அத்தகையது.

4 நாதஸ்வரம், 5 சாக்ஸ், 6 தவில் என்று தடபுடலாக ஸ்ரீ பேரருளாளனை பார்த்துக்கொண்டு இஞ்ச் இஞ்சாக ஸ்வாமி தேசிகன் நகரும் காட்சி ஒரு தனி அனுபவம். கிட்டதட்ட ஒரு மணி நேரம் கழித்து ஸ்ரீ பெருந்தேவி தாயார் சன்னதிக்கு வெளியே வந்தவுடன் தாயார் கீழே இறங்கி தேசிகனை வழி அனுப்ப வருகிறார்.

சற்று நேரத்தில் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ பேரருளாளன் திருமஞ்சன மண்டபத்தில் வீற்றிருக்க அவர்களிடமிருந்து விடை பெற்று கொண்டு ஸ்வாமி தேசிகன் துப்புல் புறப்படுகிறார்.

பிரிய மனம் இல்லாமல், மிக மிக மெதுவாகப் பின்னோக்கி ஆமை போல நகர்ந்து செல்லுகிறார். அப்போது பேரருளாளன் ( பெருந்தேவி தாயார் சிபாரிசாக இருக்கும் ) நம் தேசிகனுக்கு புஷ்ப வ்ருஷ்டி செய்ய தேவப்பெருமாள் பெருந்தேவித் தாயாரிடம் இருந்து விடை பெற்று கொண்டு ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் துப்புல் புறப்படுகிறார். பிரியாவிடை

இரவு 10.30மணிக்கு ஸ்வாமி தேசிகன் புஷ்ப பல்லாக்கில்(தேவப்பெருமாள் ஏற்பாடு ! ) தூப்புல் புறப்பட அவருடன் கொஞ்ச தூரம் பின் சென்றேன். மீண்டும் அஹோபில மடத்து வாசலில் 46 பட்டம் அழகியசிங்கருடன் மீண்டும் ஸ்வாமி தேசிகனை சேவித்துவிட்டு பதினோறு மணி பஸ்ஸில் கிளம்பினேன்.தேவ பெருமாள் சொன்ன ரகசியத்தை உங்களுடன் பகிந்துக்கொள்கிறேன். ஆசாரியனுக்குக் கைமாறு செய்வது என்பது சாதாரண ஜீவன் இல்லை அந்த பரமாத்மாவே செய்ய முடியாது. இதை நான் சொல்ல வில்லை வேதாந்த தேசிகனே சொல்லுகிறார்.

ஆஞ்சநேயரை ஆசாரியர் ஸ்தானத்தில் வைக்கிறார் ஸ்ரீ வேதாந்த தேசிகன். ராமாயணத்தில் பெருமாள் பிராட்டியைப் பிரிந்து இருக்கும் போது ஆஞ்சநேயர் தான் இருவர்களுக்கு பாலமாக இருந்தார்.
ராவணனை வீழ்த்திய பின் அனுமார் சீதை பிராட்டியிடம் பெருமாள் காத்துக்கொண்டு இருக்கிறார் என்று சொன்ன போது பிராட்டி சொன்ன வார்த்தை “உனக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்” என்பது தான்
அதற்கு அனுமார் “இதையே தான் ராமரும் சொல்லி என்னைக் கட்டி அணைத்துக்கொண்டார்” என்கிறார்.
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் கண்ணன் என்றால் நம்பெருமாள் ஸ்ரீராமர்.
ஸ்ரீரங்கம் நம்பெருமாளைக் காக்க ஒரு குழு ஸ்ரீ பிள்ளைலோகாச்சாரியாருடன் செல்ல ஸ்ரீரங்கத்திலிருந்து தங்கி செல்பட்டவர்களுக்கு தலைமை தாங்கியவர் சுதர்சன பட்டர் கோயிலை நோக்கி ஓடினார். பெரிய பெருமாளுக்கு முன் சுவர் ஏழுப்பி, தாயாரை வில்வ மரத்துக்கு அடியில் எழுந்தருள செய்து (புதைத்து)... அவருக்கு வயதாவிட்டது அதனால் என்ன செய்வது என்று தெரியாத சுதர்சன பட்டர் ஸ்ரீபாஷ்யத்திற்கு எழுதிய ‘ஸ்ருத பிரகாசிகை’ என்ற உரையையும் ( நடாதூர் அம்மாள் காலட்ஷேப குறிப்புகள் ) பட்டரின் இரண்டு புதல்வர்களையும் காப்பாற்றும் பொறுப்பை ஸ்ரீவேதாந்த தேசிகரிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் பன்றியாழ்வான் சன்னதிக்குச் சென்ற போது அங்கே 12000 ஸ்ரீவைஷ்ணவர்கள் கொல்லப்பட்டு அந்த இடமே போர்க்களமாக அவரும் அங்கேயே கொல்லப்பட்டு பரமபதித்தார்.
வேதாந்த தேசிகன் ஊரைவிட்டுக் கிளம்பும் முன் உலூக்கான் படை ஸ்ரீரங்கத்தை ஆக்கிரமித்துக்கொண்டு கோரதாண்டவம் ஆடியது. எந்த இடத்தில் தங்கினாலும் தனக்கும் குழந்தைகளுக்கும் ஆபத்து என்பதை உணர்ந்திருந்தார். அதனால் தானும் இரண்டு குழந்தைகளும் பிணக்குவியல்களுக்கு (சரியாகச் சொல்ல வேண்டும் என்றால் dead and the dying) நடுவே பிணமாக கிடந்தார்.

உலூக்கான் படை அந்த இடத்தை விட்டு அகன்ற பின்னர் சத்தியமங்கலம் வழியாக மேல்கோட்டை வந்தடைந்தார் வேதாந்த தேசிகர். கூடவே கையில் ‘ஸ்ருத பிரகாசிகை’ ஓலைச்சுவடியையும், பட்டரின் இரண்டு குழந்தைகளும். இதனால் தான் ஸ்ரீபாஷ்யத்தை சேவிக்கும் முன் இன்றும் ஸ்ரீவேதாந்த தேசிகரின் தனியங்கள் சேவிக்கப்படுகிறது பல அர்ச்சாரூப திருமேனிகளில் ஒரு கையில் இருப்பது ஸ்ரீபாஷ்யம்.
அனுமாரை போன்ற தேசிகனுக்கு நம்பெருமாளின் மீது இப்பேர்ப்பட்ட தாக்குதல் என்றால் அவர் மனம் எப்படிப் புண்பட்டிருக்க வேண்டும் ?
திருநாராயணபுரம் என்னும் மேல்கோட்டையில் தங்கியிருந்த வேதாந்த தேசிகர், ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளும் பிராட்டியும் பிடிக்கப்பட்டு அதனால் புண்பட்டு பரிவின் காரணமாக ‘அபீதிஸ் தவம்’ என்னும் உயர்ந்த ஸ்தோத்திரத்தை அருளினார்.

திடபக்தியும் நம்பிக்கையுடன் எழுதிய இந்த ஸ்லோகங்களால் எதிரிகள் அழிந்து கோப்பணார்யன் மூலமாக நம்பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் எழுந்தருளிய போது உற்சவங்கள் பல நின்று போய் இருந்தது அத்யயனோத்ஸவம் எனப்படும் இராப்பத்துத் திருவிழாவை நடத்தவிடாமல் இடையூறு ஏற்பட்டது. மீண்டும் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகனை திருவரங்கத்துக்கு அழைத்து அவருடைய உதவியோடு உத்ஸவங்களை மீண்டும் தொடங்கினார்கள் ஸ்ரீராமானுஜர் விட்டு சென்ற ஸ்ரீரங்க செல்வத்தை மீண்டும் நிலை நிறுத்திய பெருமை நம் தேசிகனையே சாரும். ஸ்ரீராமர், சீதைக்கு ஆஞ்சநேயர் என்றால் நம்பெருமாள், தாயாருக்கு ஸ்வாமி தேசிகன் என்றால் மிகையாகாது.
ஸ்ரீரங்கம் பெரிய பெருமாள் தேசிகனை வேதாந்தாசார்ய பீடத்தில் அமரித்து அழகு பார்த்தார். தாயார் ஒரு படி மேலே சென்று நம் தூப்புல் சிங்கத்தை ‘ஸ்ர்வதந்திர ஸ்வதர்த்ர’ என்ற பட்டத்தை கொடுத்து ‘என்ன கைமாறு செய்யப் போகிறேன் (அனுமாருக்குச் சீதா பிராட்டி சொன்ன மாதிரி) என்று தன் கடாஷத்துக்கு பார்த்திரமாக ”எப்போதும் இங்கேயே இருந்துவிடும்” என்று சொல்லிவிட்டாள் என்று நினைக்கிறேன். அதனால் தான் இன்றும் தாயார் சன்னதிக்கு எதிர்புறம் இருக்கிறார்.

ஸ்ரீவைஷ்ணவத்தில் இரண்டு சிங்கங்களுக்கு பெருமை. ஒன்று நரசிம்மம், இன்னொரு சிங்கம் ’கவிதார்க்கிக சிங்கம்’. இந்த இரண்டு சிங்கமும் ஒன்றாகத் தாயார் சன்னதிக்கு முன் இன்றும் ஸ்ரீரங்கம் செல்வத்தை காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.


கவிதார்க்கிக சிங்கமான தேசிகன் சன்னதிக்குள்ளேயே தான் இருக்கிறார் என்று எல்லாம் நாம் கவலைப்பட தேவை இல்லை. சிங்கம் குகைக்குள் தான் இருக்கும். நாம் செய்ய வேண்டியது இந்த கவிதார்க்கிக சிங்கத்துக்கு நம் மனம் என்னும் குகையில் எப்போதும் வசித்துக் கொண்டிருக்கும்படி செய்வது தான். அவரை நெஞ்சில் நிறுத்துவிட்டால் அவர் நெஞ்சில் ‘கலியனுரை குடிகொண்ட கருத்துடையோன் வாழியே’ என்று திருமங்கை ஆழ்வார் வாசம் செய்கிறார். கலியனோ ‘கண்டுக்கொண்டேன் நாராயணா என்னும் நாமம்’ என்று நாராயணன் மஹாலக்ஷ்மியுடன் வாசம் செய்கிறான். இதைவிட வேறு என்ன வேண்டும் ?


பிகு: காஞ்சியில் பெருமாள், தாயார் முன்பு ஸ்ரீ வேதாந்த தேசிகன் பிரியாவிடை சேவிக்க முடியவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். ஸ்ரீரங்கத்தில் 365 நாளும் தாயார் முன்பு தேசிகன் அதே போல சேவை சாதிக்கிறார். அடுத்த முறை செல்லும் போது சேவித்துவிட்டு வரவும்.
சுஜாதா தேசிகன்
( 27.9.2018, ஸ்ரீ வேதாந்த தேசிகன் 750 சிறப்பு பதிவு )

Picture & art work:
YAAZH Photography
Mr. Vinodh Ranganathan, Kanchipuram Mr. Keshav Sujatha Desikan Cartoons are from Book VidyaVedha publications, with thanks.

Comments

 1. அனுபவித்து எழுதியுள்ளீர்கள்.திருப்புல்லாணி யில் ஸ்வாமியை அனுபவி க்கும் போது ஓரக்கண்ணால் தூப்புல் மற்றும் திருவஹீந்திர வைபவங்களை மனசுக்குள் திரும்ப ரீப்ளே பண்ணி பார்த்துக்கொண்டேன்..ஒரு விஷயமும் விடலை.மதியம் வரதனோட தேசிகனை சேர்த்தி விடுவா.மேலே ப்ரதஷண வளையத்தில் லட்டு பூந்தியா நிறைந்திருக்கும்.தூப்புல் அக்ரஹாரத்தில் ஸ்வாமி சந்நிதியில் ஒரு முரட்டு கலந்த சாதம் சாதிப்ப,அருமையா இருக்கும்.தேவராஜனுடன் ஸ்வாமி பிரியாவிடை உங்கள் கேமெராமூலம் எங்கள் இதயத்தில் நுழைந்து விட்டார்.இன்னிக்கு ஒரு நாள்தான் தேசிக பக்தர்குழாங்களுக்கு சந்நிதியில் தேசிக ஸ்தோத்ரங்கள் சொல்ல சான்ஸ் கிடைக்கும்.அதனால் எல்லோரும் பரக்க சாதிப்பள்.இவ்வருடம் தேசிக ப்ரந்தம் சேவிக்க கோர்ட் பெர்மிஷன் வந்து சேவிச்சாளாமே?..அழகான வர்ணனை.தன்யோஸ்மி

  ReplyDelete
 2. மிக அற்புதம்..


  படங்களுன் நிறைய தகவல்கள் அறிந்துக் கொண்டேன் ..

  மிகவும் நன்றி சுவாமி

  ReplyDelete
 3. I am referring to all you have written in your blog. I really do not know how to thank you. By a good deeds done in a previous birth I was born in Srivilliputtur & your Srimath Ramayanam in Andal's Thirupavai is something so extraordinary that I have words to praise it save perhaps to say it still give me ஆத்ம திருப்தி டto read ராமாயணம் & திருப்பாவை together - so to say. May Andal bless you KSS

  ReplyDelete

Post a Comment