இலக்கியக் கூட்டத்துக்கு வந்த பூனை !
வாசகசாலை 11வது நிகழ்வில் இன்று நான் கோபிகிருஷ்ணனின் ஒரு ரூபாய்க்கு ஒரு கதை பற்றிப் பேசினேன். மொத்தம் 21 பேர் வந்திருந்தார்கள். அதில் ஒரு பூனையும் அடங்கும்.
வெகு நாட்கள் கழித்து நண்பர் மணிகண்டனை சந்தித்து பேசியது இனிமை.
நான் பேசியதை முன்பே கட்டுரையாக எழுதிக்கொண்டு சென்றுவிட்டேன். அதை கீழே கொடுத்துள்ளேன். விருப்பம் இருப்பவர்கள் படித்துக்கொள்ளலாம்.
என்னையும் பேச அழைத்த அவர்களுக்கு நன்றி.
-சுஜாதா தேசிகன்
9.9.2018
9.9.2018
ஒரு ரூபாய்க்கு ஒரு கதை
பரிட்சையில் சாய்ஸ் மாதிரி மூன்று கதைகளை கொடுத்து ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள் என்ற போது இந்தக் கதையை எடுத்ததற்கு முதல் காரணம்
இது மிகச் சிறிய கதை.
இது மிகச் சிறிய கதை.
சிந்து பைரவியில் சுலக்ஷ்னா ‘கத்திரிக்கா கிலோ என்ன விலை’ என்பது போல் தான் என் சிறுகதை ஞானம்.
கோபி கிருஷ்ணன். பெருமாள் பெயராக இருக்கிறதே என்பது இன்னொரு காரணம்.
கதையின் தலைப்பு ‘ஒரு ரூபாய்க்கு ஒரு கதை’ தலைப்பைப் பார்த்த போது கமலஹாசனின் “ஒரு கோடி ரூபாய் கனவு” என்ற காஸ்டிலியான தலைப்பு தான் உடனே ஞாபகத்துக்கு வந்தது.
கதையைச் சுருக்கமாக பிறகு சொல்லுகிறேன். அதற்கு முன் கோபி கிருஷ்ணன் பற்றி நீங்கள் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
கோபி கிருஷ்ணன் என்ற பெயரை எனக்கு முதலில் அறிமுகம் செய்து வைத்தவர் ‘சுஜாதா’
ஒரு முறை அவரிடம் “ நல்ல சிறுகதைகளை சிபாரிசு செய்யுங்களேன்” என்ற போது பல சிறுகதைகளை கட கட என்று வாய்ப்பாடு போல ஒப்பித்தார். அதில் ஒன்று கோபி கிருஷ்ணன் எழுதிய கதை. உடனே சென்று கோபி கிருஷ்ணன் புத்தகத்தை வாங்கி கதையை படித்த போது இதில் என்ன பிரமாதமாக இருக்கிறது என்று தான் எனக்குத் தோன்றியது.
அந்தக் கதையை என்னைப் போல இன்றைய தமிழ் வாசகனுக்குப் படிக்க கொடுத்தால் ”சாதாரண கதையாக இருக்கு” என்பான்.
தமிழ் சினிமாவில் கடைசி 20 நிமிடத்துக்கு முன் ஒரு பாட்டு வர வேண்டும் என்று பழக்கப்பட்ட நமக்கு ( என்னைப் போன்றவர்களுக்கு ) சிறுகதை என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்று நம் ஏற்கனவே முடிவு செய்து படிக்கிறோம். இதனால் ஏமாற்றமே மிஞ்சும்.
நான் பள்ளியில் படிக்கும் போது ஆங்கில வகுப்பு எடுத்த ஆசிரியர் சில நல்ல ஆங்கில சிறுகதைகளை படித்து அதில் உள்ள சுவையை எங்களுக்குச் சொல்லுவார். சிறுகதையின் முதல் பாராவை மட்டுமே கிட்டதட்ட இரண்டு வாரத்துக்கு எடுப்பார். அப்போது சிறுகதையை ஓவராயில் செய்யப்படும் சைக்கிளை போல போஸ்ட் மார்ட்டமே செய்துவிடுவார்.
சக்கரைப் போட்டுக் காபி சாப்பிட்டவர்களுக்கு சக்கரை இல்லாத காபி முதலில் கசக்கும். ஆனால் அது பழகிவிட்டால், மீண்டும் சக்கரைப் போட்ட காபியை விரும்ப மாட்டார்கள். அது போல தான் சிறுகதை வாசிப்பும்.
ஒரு கதை எப்படிப் படிக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டால் ’pleasure of reading’ என்ன என்று தெரியும். Pleasure of reading அதிகமாக அதிகமாக எழுதிப் பார்க்கலாமே என்று தோன்றி திரைப்பட எடுக்கப் பையை தூக்கிக்கொண்டு சென்னை வரும் இளம் இயக்குனர்கள் மாதிரி பலர் கவிதை எழுத ஆரம்பித்து பிறகு அவர்களே எழுத்தாளராகிறார்கள்.
எழுத்தாளருக்கு ‘pleasure of reading’ and ‘pleasure of writing’ இரண்டுமே இருக்கும், இரண்டுமே வேண்டும். இல்லை அவர்கள் எழுத்தாளர்களாக மாட்டார்கள், நடுவர்களாக இருப்பார்கள்.
கோபி கிருஷ்ணன் ஒரு பேட்டியில் இப்படிச் சொல்லுகிறார்
”எழுதும்போது மன நிறைவு ஏற்படுகிறது. அப்போது எந்த வேண்டாத சிந்தனையும் வருவ தில்லை. முழுமையான பிடிப்பு ஏற்படுகிறது. ஒரு நல்லுணர்வு அது. இதுவரை நான் எழுதியவை எனக்கு திருப்திகரமாகவே இருக்கின்றன. எனக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அதைப் பற்றி நான் எழுத மாட்டேன். என் பாணியை மாற்றிக் கொள்வதிலும் எனக்கு விருப்பம் இல்லை!''
உளவியல், சமூக சேவை இதில் முதுகலைப்பட்டம் பட்டம் பெற்றவர் கோபி கிருஷ்ணன். ஆனால் மனநோயாளி, அதற்குத் தொடர்ந்து மாத்திரை உட்கொண்டு வாழ்ந்திருக்கிறார். எந்த வேலையிலும் நிரந்தரம் இல்லை. நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார் ( திருப்பித் தரவில்லை ). ஆனால் “உன் பணத்தை திருப்பித் தருகிறேன்” என்று சொல்லியிருக்கிறார். ஒரு ஆங்கிலோ இந்திய பெண்ணை திருமணம் செய்துகொண்டு மண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று தெரிகிறது. தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். சமுதாயத்தின் மீது அவருக்கு ஒரு வெறுப்பு இருந்திருக்கிறது. அமைதியாக இருந்தாலும் உள்ளே பல எண்ண ஓட்டங்கள் இருந்திருக்கிறது.
தமிழில் மனநோய் என்று ஏதோ நோய் மாதிரி சொன்னாலும், ஆங்கிலத்தில் இது டிஸாடர். அப்செஸிவ் கம்பள்ஸிவ் டிஸார்டர் (OCD) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். எப்போதும் சுத்தமாக இருப்பது, அடுக்கி வைத்த பொருட்கள் எல்லாம் அப்படியே இருக்க வேண்டும்… இதை அவர் எழுத்தில் பார்க்கலாம்.
சற்று யோசித்தால் இந்த மாதிரி மனநோய் நம் எல்லோருக்குமே இருக்கிறது. அவை வெளியே தெரிவதில்லை. அவ்வளவே! நல்லவர்கள் போல அல்லது மேதாவி போல நடிக்கிறோம்.
பொதுவாக இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு காரணம் அவர்கள் வாழ்ந்த சூழல், சிறுவயதில் நடந்த ஏதாவது ஒரு சம்பவம், தாய் தந்தை கூட ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம்.
கோபி கிருஷ்ணன் ஆழ் மனத்தில் அவருக்குத் தோன்றியவை எல்லாம் அப்படியே பதிவு செய்திருக்கிறார் என்று தான் நான் நினைக்கிறேன்.
ஓவியத்தில் ஒரு வகை இருக்கிறது. கண்ணை மூடிக்கொண்டு என்ன தோன்றுகிறதோ அதை வரைவது. மனதில் கோடு, வட்டம், பூக்கள், நட்சத்திரம் ஏன் பிக் பாஸ் மும்தாஜ் கூடத் தெரியலாம். அதை ஒரு கொலாஜ் மாதிரி வரைய வேண்டும். இந்த ஓவியத்தைப் பார்க்கும் போது இது என்னப்பா ஓவியம் என்று தோன்றும்.
கோபி கிருஷ்ணனின் எழுத்து பென்சிலில் சரக் சரக் என்று கோடு போடுவது போல. அடுத்த கோடு எப்படி இருக்கும் என்று யூகிக்க முடியாது. திடீர் என்று கோடு போடுவதை நிறுத்துவிடுவார். மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் அவுட் லைன் போட்டு அதன் மீது வரைவார்கள் ஆனால் கோபிகிருஷ்ணனிடம் அது கிடையாது.
சொன்னால் நம்ப மாட்டீர்கள் மேலே சொன்ன இந்த வரிகளை எழுதிவிட்டு சுஜாதா என்ன சொல்லியிருக்கிறார் என்று தேடி எடுத்த போது கணியாழி கடைசிப்பக்கத்தில் சுஜாதா இப்படிச் சொல்லுகிறார்.
கோபி கிருஷ்ணனின் கதைகளில் சொல்லும் போக்கில் அடுத்த வரியை எதிர்பார்க்க முடியாத ஆச்சரியத்தை நான் ரசிக்கிறேன். முன்பே யோசித்து உருவம் உள்ளடக்கம் என்றெல்லாம் தீர்மானித்து எழுதுவது இப்போது வழக்கொழிந்து போய்விட்டதற்கு கோபிகிருஷ்ணன் கதைகள் உதாரணம். கதை அவரை எழுதிக் கொண்டு போகிறது
( 1997 கணையாழி)
( 1997 கணையாழி)
இந்தக் கதை என்ன என்று பார்க்கலாம். இந்தக் கதையை அப்படியே படித்தால் ஐந்து நிமிடம் ஆகும். நான் சொன்னால் பதினைந்து நிமிடம் ஆகும். பரவாயில்லை சொல்லுகிறேன்.
-o0o--o0o--o0o-
ஒரு அலுவகலத்தில் வேலைக்குச் சேர்கிறார். மொபெட்டில் போகிறார். அங்கே அவருடைய ஒரு சக பெண் ஊரியருக்கு போலியோவினால் பாதிக்கப்பட்டவர். (இளம்பிள்ளை வாதம். அவள் பெயர் மார்க்ரெட்.
அவள் செயற்கை அவயங்கள் அணிந்திருக்கிறாள். இரண்டு தாங்கும் கட்டைகளை ஊன்றி தான் நடக்கிறாள். அனாதை. வயது 24. இவள் மகளைவிட 6 வயது அதிகம்.
ஏதாவது இரு விதத்தில் உதவ வேண்டும் என்று நினைக்கிறார். தினமும் பேருந்தில் கஷ்டப்பட்டு வருவதற்குள் பதில் தன்னுடைய மொபெட்டின் பின் இருக்கையில் மார்கெரெட்டை அழைத்து வருகிறார்.
ஒரு நாள் மொபெட்டில் பெட்ரோல் போடுகிறார். ஒரு லிட்டர் பெட்ரோல், இரண்டு ஆயில் போடுகிறார். 31.50/=. அவர் பரசில் சரியாக 50 ரூபாய், 50 பைசா தான் இருந்தது. பங்கில் சில்லறை கொடுக்க மாட்டார்கள். ஒரு ரூபாய் நிச்சயம் தேவை. மார்கெட் என்னிடம் சில்லறை இருக்கிறது என்று கொடுக்கிறாள். இது ஒரு பெரிய விஷயம் இல்லை. எல்லோர் வாழ்கையில் நடப்பது தான். பிரச்சனை இங்கே தான் ஆரம்பிக்கிறது. அவருக்கு அந்த ஒரு ரூபாய்யை எப்படியாவது திருப்பி தரவேண்டும் என்று மனம் அடித்துக்கொள்கிறது.
மெனக்கட்டு அந்த ஒரு ரூபாயைத் திருப்பி தர அதை மார்கெட் திரும்ப வாங்கிக்கொள்ளவில்லை.
அதுவே அவருக்கு மிகுந்த மன உலைச்சலை தருகிறது. எப்படியாவது அந்த ஒத்த ரூபாயைத் திரும்ப தர வேண்டும் என்று முயற்சிக்கிறார். எப்போது மார்கெட்டை பார்க்கும் போதும் அந்த ஒரு ரூபாய் நினைவுக்கு வருகிறது அதனால் அவருக்கு விசித்திர கற்பனைகள் வேறு வருகிறது.
ஒரு நாள் அவளிடம் தன் பிரச்சனையை சொல்லிவிடுகிறார். அவளோ அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், என்னிடம் தர வேண்டாம். அந்தக் காசை சர்ச்சில் காணிக்கையாகச் செலுத்திவிடுங்கள் என்கிறாள்.
நான் யாத்திரைக்குச் செல்லும் போது, யாரிடமாவது பத்து ரூபாய் வாங்கித் திருப்பி தந்தால், “என்ன சார் இதைப் போய் என்னிடம் தருகிறீர்கள்… கோயிலில் உண்டியலில் போட்டுவிடுங்கள்” என்பார்கள்.
சரி என்று அவரும் சீரியஸாக சர்ச்சுக்கு சென்று அங்கே ஒரு ரூபாயைக் காணிக்கையாக செலுத்துகிறார். ஆனாலும் அவருக்கு மனம் நிம்மதியடையவில்லை.
பிறகு ஒரு நாள் ஹோட்டல் போகிறார்கள். அங்கே மீண்டும் பில் 41 வர மார்கரெட் திரும்ப ஒரு ரூபாய் தருகிறேன் என்ற போது இவர் கிட்டதட்ட அலறிவிடுகிறார்.
கடைசியில் அவளுக்கு தன் வீட்டில் அவளுக்கு ஒரு விருந்து கொடுத்தால் தன்னுடைய ஒரு ரூபாய் கடனை அடைத்துவிடலாம் என்று அவளை விருந்துக்கு அழைக்கிறார். விருந்துக்குப் பிறகு அவர் மனைவியிடம் ‘விருந்துக்கு ஒரு ரூபாய் செலவு ஆச்சா’ என்பது போல கேட்கிறார். மனைவி இவரை ஒரு மாதிரி பார்க்கிறார்.
இவர் தற்காலிக பணியில் சேர்ந்தவர் அதனால் அவர் பிராஜக்ட் முடிந்தவுடன் பிரிய வேண்டிய சூழ்நிலை.
மார்கரேட் அவரிடம் ‘என்னை மறக்காமல் இருந்தா சரி’ என்று சொல்ல இவர் பாரதத்தில் ஒரு ரூபாய்கள் புழக்கத்தில் இருக்கும் வரை உன்னை என்னால் உன்னை எப்படி மறக்க முடியும் ? என்று மனதில் சுமையுடன் கதையை முடித்திருப்பார்.
-o0o--o0o--o0o-
-o0o--o0o--o0o-
ஒரு ரூபாய்க்கு ஏன் எவ்வளவு ஆர்ப்பாட்டம் என்று நமக்குத் தோன்றும்.
ஆனந்தம் என்று ஒரு படம் வந்தது அதில் நடிகை ஸ்நேகா கிட்டதட்ட பாக்கியராஜ் மாதிரி ஆடும் பாடலில் ஒரு வட்டத்தைப் பார்க்கும் போது என்னவெல்லாம் தனக்கு நினைவு வருகிறது என்று பட்டியலிட்டு பாடுவார்:
புல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலில் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவ்வந்தி பூவின் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒரு நாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம்
புல்லாங்குழலில் துளைகள் பார்த்தேன் ஒற்றை நாணயம்
துடிக்கும் கண்களில் கண்மணி பார்த்தேன்
கடிகாரத்தில் நேரம் பார்த்தேன்
செவ்வந்தி பூவின் நடுவில் பார்த்தேன்
தேசிய கொடியில் சக்கரம் பார்த்தேன்
இரவில் ஒரு நாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம்
கிட்டதட்ட இந்தக் கதையும் அதே மாதிரி தான்.
-o0o--o0o--o0o-
சில வருடம் முன் நாள் முழுவதும் CCUல் இருந்தேன். பேஷண்ட் உயிர் இழுத்துக்கொண்டு இருக்கும் போது உடனே அறையின் வெளியே ஒரு மஞ்சள் விளக்கு எரியும். அதன் பின் ஏற்படும் அழுகை எல்லாம் பார்த்த பின் வண்டி ஓட்டும் போது முன்னே போகும் வண்டி சைடு இண்டிகேட்டர் போட்டால் CCU அலறல் சத்தம் தான் எனக்குக் கொஞ்ச நாளைக்குக் கேட்டுக்கொண்டு இருந்தது.
கோபி கிருஷ்ணனின் கதையை படிக்க :
கோபி கிருஷ்ணனின் "ஒரு ரூபாய்க்கு ஒரு கதை" :http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_06.html
கோபி கிருஷ்ணனின் "ஒரு ரூபாய்க்கு ஒரு கதை" :http://azhiyasudargal.blogspot.com/2010/10/blog-post_06.html
There's certainly a lot to know about this topic.
ReplyDeleteI like all the points you've made.