Skip to main content

மீசை


ஓர் நவராத்திரி தினம். லேலையூர் அஹோபில மடத்தில் இருந்தேன். இரவு கிட்டதட்ட 9.45 இருக்கும். அடியேனுடைய ஆசாரியன் (46வது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் ) அனைவருக்கு நல்லாசி அருளி, அட்சதை, பிரசாதம் தந்துவிட்டு சயனத்துக்குச் சென்றுவிட்டார்.

’மயிரே போச்சு’ என்பது சொல் கெட்ட வார்த்தையாகி அரை நூற்றாண்டு ஆகப் போகிறது.
திருமணம் முடிந்து ஐந்தாம் வருடத்தில், மீசையில் ஒரு வெள்ளை மயிர் எட்டிப்பார்த்தது. அதை வெட்டிவிட்ட பிறகு பல எட்டிப்பார்க்க மூக்கு அடியில் கிட்டதட்ட டால்மேஷன் குட்டிகளாக இருக்க டை, டிரிம் என்று பல முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தேன்.
“அத்திம்ஸ்” என்று மனைவியின் கசின்ஸ் “அத்திம்பேர்” என்று ’பேர்’ சொல்லிக் கூப்பிடும் போது மீசை மட்டும் இல்லை, காது பக்கமும் டால்மேஷன் குட்டி போட தொண்டங்கியிருந்தது என்று புரிந்துக்கொண்டேன்.
”அடடா சேவிக்க முடியாமல் போய்விட்டதே… “ என்று அங்கே இருந்தவர்களிடம் கேட்டேன்.
“ஆசாரியன் சயனத்துக்கு ( தூங்க ) சென்றிருப்பாரே.... இருங்கள்..” என்று உள்ளே சென்றார்.
கொஞ்சம் நேரம் கழித்து வெளியே வந்து “சீக்கிரம் வாங்கோ.. “ என்று அழைத்துச் சென்றார்.
உள்ளே ஜீயர் படுக்கையில் உட்கார்ந்துகொண்டு இருந்தார்.
நானும், என் மனைவியும் சேவித்தோம். அவர் அடியேனையே புன்முறுவலுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்.
“மூக்குக்குக் கீழே கருப்பாக என்னது ?” என்றார்.
ஒரு நிமிடத்துக்குப் பிறகு அவர் என் ‘மீசையை’ தான் சொல்லுகிறார் என்று புரிந்தது.
“அது வந்து… “ என்று ஏதோ சொல்ல ஆரம்பித்து “எடுத்துவிடுகிறேன்… “ என்று ஆசியை வாங்கிக்கொண்டு வேகவேகமாக கிளம்பினேன்.
“இங்கே வா” என்று கூப்பிட்டார்
அருகே சென்றேன்
“… நானோ சன்யாசி… இப்படி மீசையுடன் வந்தால்… நான் திரும்ப போய் குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம்…. என்னால் இந்த வயதில் இந்த நேரத்தில் இதைச் செய்ய முடியுமா ? நான் சொன்னதை… தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.. சொல்ல வேண்டியது என் கடமை“ என்றார்.
என்ன விதமான ஆசாரியன் என்ற பிரமிப்புடனே மறுநாள் மீசையை எடுத்தேன். அதன் பின் நுரையுடன் காபி குடித்தாலும் உடனே துடைத்துக்கொண்டேன்.
உற்றார், உறவினர்கள், அலுவலகத்தில் என்னை பத்து செகண்ட் கூட பார்த்தார்கள்.
“ஏன் தேசிகன்.. உங்களுக்கு மீசை தான் அழகு” என்று பொய் சொன்னார்கள். ஆனால் தற்காலிகமாக i had lost my identity என்று உணர்ந்தேன். எது identity ? மீசையா ?
தொண்டரடிப்பொடி ஆழ்வாரிடம் கேட்கலாம்.
மேம் பொருள் போக விட்டு, மெய்ம்மையை மிக உண்ர்ந்து
ஆம் பரிசு அறிந்துகொண்டு, ஐம்புலன் அகத்து அடக்கிக்
காம்புஅறத் தலைசிரைத்து, உன் கடைத்தலை இருந்து வாழும்
சோம்பரை உகத்தி போலும்; சூழ் புனல் அரங்கத்தானே!
’இது தான்யா திருமாலை’ என்று பட்டிமன்றத்தில் சொல்லுவது போல பெரியவாச்சான் பிள்ளை என்கிறார்.
இந்தப் பாசுரம் ஒரு விதமான encryptic பாசுரம் இதை de-cryptic செய்தால் விரிந்து நமக்குப் பல அர்த்தங்களைக் கொடுக்கும். கொஞ்சம் யோசித்து பார்த்தால் தொண்டரடிப் பொடி என்ற பெயருக்கு இந்த பாசுரமே அட்நாதம் என்பதும் புரியும்.
மேம் பொருள் போக விட்டு - ’மேம் பொருளை’ விட வேண்டும் என்கிறார். எது மேம் பொருள் ? நம் உடம்பு தான். ஒரு ஷாபிங் மாலில் தீவிபத்து என்றால் உடனே நாம் என்ன செய்வோம் நாம் உடைமைகளை விட்டுவிட்டு ஓட்டமாக ஓடுவோம். அதே போல வெள்ளம், புயல் என்றால் உடனே ஹெலிக்காபடரில் பாதுகாப்பது எம் உடம்பை தானே ! பிழைத்தால் போதும் என்பது தான் எல்லோருக்கும் இருக்கும் ஒரே எண்ணம். உயிர் இருந்தால் உப்பு மாறித் உண்ணலாம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.. (உப்பு விற்றுப் பிழைக்கலாம் உண்ணலாம் என்று பொருள்)
அடுத்தது ஆழ்வார் “மெய்ம்மையை மிக உணர்ந்து” - அழியாத ஆத்மா தான் என்ற உண்மையை உணர வேண்டும். ‘மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிறார் திருவள்ளுவர். இங்கே ‘மிக’ உணர்ந்து என்கிறார் ஆழ்வார். இந்த ஆத்மா பெருமாளுக்கு அடிமை என்பது சுமாராக உணர்வது. நன்றாக உணர வேண்டியது என்பது இந்த ஆத்மா அடியார்களுக்கு அடிமை என்பது தான் ‘மிக உணர்ந்து’ மிக உணர்ந்ததால் தான் அவருக்குத் ’தொண்டரடிப்பொடி’ என்று பெயர். அது தான் அவர் identity !
”ஆம் பரிசு அறிந்துகொண்டு” - இந்த ஆத்மாவுக்கு நாம் தேடித்தரும் பரிசு எது ? பகவத், பாகவத கைங்கரியம் தான்.
”ஐம்புலன் அகத்து அடக்கிக்” - கைங்கரியம் செய்யும் போது ஐம்புலனும் நம்மை அதைச் செய்யவிடாமல் நீ நான் என்று போட்டிப் போட்டுக்கொண்டு நமக்கு தொந்தரவு செய்யும் ஆசை காட்டும். அதை அடக்க வேண்டும்.
”காம்பு அறத் தலை சிரைத்து” - அபிமானத்தை அறவே விட வேண்டும். சிகை அலங்காரம் தான் நம் அகங்காரத்தை பெருக்குகிறது. ஆண்கள் பின் பாக்கெட்டில் சின்ன சீப்பு, பெண்கள் முடியை தோதிவிடுவதும் இதற்குச் சாட்சி. கூகிளிடம் முடி என்று கேட்டாலே இதைத் தான் சொல்லுகிறது.
முன்னாள் பாரத பிரதமர் சந்திரசேகரிடம் ‘devils advocate’ புகழ் கரன் கரண் தாப்பர் எவ்வளவோ கேள்விகள் இருக்க அவர் கேட்ட மிக முக்கியமான கேள்வி ‘நீங்க ஏன் தலை சீவுவது இல்லை’ என்று சமீபத்தில் படித்தேன்.
அகங்காரத்தைத் தொலைக்க தான் திருப்பதியில் மொட்டைப் போன்றவை எல்லாம். இனி என் உடம்பு அழகைப் பார்க்காமல், உள்ளத்தின் அழகைப் பார்க்க போகிறேன் என்று நினைக்க தான். அதைத் தான் ஆழ்வார் வேரோடு அறுக்க வேண்டும் என்கிறார். அதாவது செருக்கை தொலைக்க வேண்டும்!.
உன் கடைத்தலை இருந்து வாழும் - உன் கோயில் வாசலில் அடியார்களுக்குத் தொண்டு செய்து வாழும் வாழ்க்கை தான் மிக உயர்ந்த வாழ்க்கை - அதுவே ‘தொண்டரடிப் பொடி’ என்பதற்கு அர்த்தம்.
இந்த மாதிரி வாழுபவர்களை ‘வாழும் சோம்பரை உகத்தி போலும்’ என்று அவர்களுக்கு சோம்பேறிகள் என்று பெயர் தருகிறார் ஆழ்வார். தங்களுடைய நன்மைக்காகப் பாடுபடாமல், அடியார்களின் நன்மைக்காகவும், எம்பெருமானின் நன்மைக்காவும் மட்டுமே பாடுபடுவார்கள். அவர்கள் தான் சோம்பேறிகள். இது மாதிரி வாழ முடியுமா என்பவர்கள் திருக்கண்ண மங்கையாண்டான் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.
திருக்கண்ணமங்கையாண்டான் ஒரு வியாபாரி. ஒரு சமயம் தெருவில் ஒருவனுடைய நாயை மற்றொருவன் அடித்துவிட்டான். இதனால் இருவருக்கும் சண்டை வந்து ஒருவருக்கு ஒருவர் குத்திக்கொண்டு இறந்து போனார்கள். இதைக் கண்ட திருகண்ணமங்கையாண்டான் சாதாரண மனிதன் தன் அபிமான நாய்க்கே இப்படி சண்டை போட்டுக்கொண்டால், பெருமாள் நம் மீது எவ்வளவு அபிமானம் வைத்துப் பாதுகாப்பார் என்று எண்ணினார் ( அந்த நாயைப் போல நம்மை இங்கே நினைத்துக்கொள்ள வேண்டும் ) அதனால் வியாபாரத்தை விட்டுவிட்டு ( அதாவது தம்மை தாம் காப்பாற்றிக்கொள்ளும் செயல்களை ) திருக்கண்ணமங்கை பெருமாளிடம் சரணடைந்தார் என்று பிரசித்தம்.
அவ்வாறு பல சோம்பேறிகள் வாழ்ந்த காலம் அந்த காலம். ஸ்ரீரங்கத்திலும், பல திவ்ய தேசங்களிலும் பல சோம்பேறிகளை ஸ்ரீராமானுஜர் உருவாக்கி நமக்கு ஆசாரியர்களாக தந்துள்ளார்.
மணவாள மாமுனிகள் உபதேச ரத்தினமாலையில் “ஞானம் அனுட்டானம் இவை நன்றாகவே உடையன் ஆன குருவை அடைந்தக்கால் மாநிலத்தீர்!” என்று சாதித்தார். அதாவது, ஆசாரியன் என்னும் ஒருவர் ஞானத்தின் இருப்பிடமானவர் மட்டும் அல்லர். தானும் அனுஷ்டானங்கள் புரிந்து அடுத்தவர்களுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்பவர்.
சில வருடங்கள் முன் ஆசாரியனைச் சந்திக்கும் போது மீசை இல்லாமல். பஞ்சமஸ்காரம் செய்துகொண்டேன்.
ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசாரியனிடம் பஞ்ச சமஸ்காரம் செய்துகொள்ளும் நாளே பிறந்த தினம் !
- சுஜாதா தேசிகன்
23.8.2018

Comments

  1. Good one! Just one thing to be noted - if you drink coffee without sipping, there is no chance for the froth to stick like a moustache!

    ReplyDelete

Post a Comment