திருப்பாவை - 28 ( சீறி அருளாதே )
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்,
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை — ஏலோர் எம்பாவாய்.
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது;
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை — ஏலோர் எம்பாவாய்.
சிரி என்ற இரண்டு எழுத்துக்களைப் பெரிதாக்கினால் ’சீறி’ என்ற வார்த்தை வரும். இரண்டும் வெவ்வேறு, முரண்பட்டதும் கூட.
சீறி என்பது கோபம், சினம் என்ற அர்த்தத்தில் வந்தாலும் சீறி என்பது அதிகமான கோபம் என்ற பொருளில் வருகிறது.
பாம்பு ”ஸ்ஸ்ஸ்” என்று சீறியது என்கிறோம். சீறி என்பது கோபத்துடன் கொஞ்சம் BGM சேர்த்தால் வருவது. சத்தமாகத் திட்டும் போது “ரொம்ப சீறாதப்பா” என்று சொல்லுகிறோம்.
உடையவருக்கு ஒரு முறை கோபம் வந்தது !
ஸ்ரீபாஷ்யம் எழுத ஆரம்பிக்கும் போது கூரத்தாழ்வானிடம் “நான் சொல்லும் அர்த்தம் உமக்கு ஏற்புடையது இல்லை என்றால் எழுத வேண்டாம்” என்று சொல்லி உடையவர் ஸ்ரீபாஷ்யத்தின் அர்த்தங்களைச் சொல்ல சொல்ல அதைக் கூரத்தாழ்வான் பட்டோலைப் படுத்துகிறார்.
ஓர் இடத்தில் ஆத்மா பற்றி உடையவர் ஒரு கருத்தைக் கூற அதை ஆழ்வான் எழுதாமல் மௌனமாக இருக்க எம்பெருமானாருக்கு சட் டென்று கோபம் வந்து அவரைக் கொஞ்சம் தள்ளியும் விட்டுவிடுகிறார்.
”எம்பெருமானார் என் ஆசாரியன், நான் அவருக்குத் தாசன். ஆதனால் அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்” என்று ஆழ்வான் பதில் ஏதும் பேசாமல் கைகூப்பி உடையவரின் கோபத்தை ஏற்றுக்கொண்டு நியாமான அர்த்தத்தைக் கூற உடையவரின் மனம் சமாதானம் ஆகி தவற்றை உணர்ந்து மாற்றி எழுதச் சொல்ல கூரத்தாழ்வானும் தொடர்ந்தார் என்பது குருபரம்பரை முதலிய நூல்களில் இருக்கிறது.
மேல்கோட்டை பக்கம் இந்தச் சம்பவத்துடன் இன்னொரு விஷயமும் சொல்லுவார்கள்.
ஆழ்வானிடத்து இப்படி செய்துவிட்டோமே என்று உடையவர் மிகவும் கலங்கி வருந்தினார். ஏன் கோபம் வந்தது என்று சிந்தித்து பார்க்கத் தொடங்கினார். காரணம் தெரியவில்லை. இன்று மடத்தில் என்ன உணவு உண்டோம் என்று யோசித்தார். புடலங்காய் பால் கூட்டு.
புடலங்காய் சாத்வீகமாக உணவு அதனால் பாதகம் இல்லை. இருந்தாலும் கிடாம்பி ஆச்சானிடம் ( திருக்கோஷ்டியூர் நம்பியால் எம்பெருமானாருக்குத் தளிகை அமுது பண்ணி சமர்ப்பிக்க நியமிக்கப்பட்டவர் )
“புடலங்காய் இங்கிருந்து வந்தது ?” என்று கேட்க அதற்கு ஆச்சான்
“ஒரு பாகவதர் மடத்துக்குக் கொடுத்தார்”
“அவரை அழைத்துக்கொண்டு வா”
பாகவதர் வந்த போது அவரிடம் புடலங்காய் எங்கிருந்து வந்தது என்று கேட்க அதற்கு அவர் காவிரி கரையோரமாகத் தோட்டத்தில் விளைந்தது என்று சொல்ல.
“சரி அந்தப் புடலங்காய் பயிரிடப்பட்ட இடத்துக்கு நான்கு பக்கமும் தொண்டி பார்த்துவிட்டு வாருங்கள்” என்று அனுப்பினார்.
“சரி அந்தப் புடலங்காய் பயிரிடப்பட்ட இடத்துக்கு நான்கு பக்கமும் தொண்டி பார்த்துவிட்டு வாருங்கள்” என்று அனுப்பினார்.
தோண்டிய பொழுது, ஓர் இடத்தில் வேர்பகுதியில் ஒரு நாய் எலும்பு ஒன்று சுற்றிக்கொண்டு இருப்பதைக் கண்டுபிடித்து உடையவரிடம் கூறினார்கள். எம்பெருமானார் இது தான் காரணம் என்று புரிந்தது.
தான் ஆழ்வானிடம் கோபப்பட்டதற்காக மூன்று நாள் உபவாசம் இருந்தார்.
தான் ஆழ்வானிடம் கோபப்பட்டதற்காக மூன்று நாள் உபவாசம் இருந்தார்.
அதனால் தான் நாம் உண்ணும் உணவு சாத்வீகமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் நம் குணத்தை அது மாற்றிவிடும். கீதாச்சாரியன் கீதையில் இதைப் பற்றி விரிவாகச் சொல்லியிருப்பது எல்லோருக்கும் தெரிந்ததே.
கூரத்தழ்வான் திருவாய்மொழி போன்ற காலக்ஷேபம் செய்யக் கிராமங்களுக்கு செல்வார். ஒரு முறை ராஜேந்திரம் என்ற கிராமத்துக்கு சென்றார். ராஜேந்திரம் பல பிராமணர்கள் வசிக்கும் சதுர்வேதி மங்கள கிராமம். எல்லோரும் வேத விற்பானவர்கள்.
கிராமத்தில் ஒரு பிராமணருக்கு மிகுந்த சோகம். அவருடைய ஒரே பையன் குடுமி, பூணூல். திருமண் எல்லாம் களைந்துவிட்டு பௌத்த மதத்துக்குச் சென்றுவிட்டான். பல வருடங்களாக அவன் வீட்டுக்கும் வருவதில்லை.
பையனின் கையால்அந்திமகிரியை பெறக் கூடிய புண்ணியம் இல்லை என்று மிகுந்த வருத்தத்தில் இருந்தார் அவர் தகப்பனார். இப்படி மிகுந்த வருத்ததில் இருக்கும் போது கதவைத் தட்டிவிட்டு உள்ளே பன்னிரண்டு திருமணுடன் உள்ளே வந்த பையனை பார்த்து தந்தை திடுக்கிட அந்தப் பையன் தந்தையின் காலில் விழுந்து ”ஷமிக்க வேண்டும்” என்று கண்ணீர் விடுகிறான்.
தந்தைக்கு ஒன்றும் புரியவில்லை “யார் உன்னை இப்படி மாற்றியது ?” என்று கேட்க பையானால் பேச முடியவில்லை பிறகு தந்தை “வரும் வழியில் ஆழ்வானைக் கண்டாயோ ?” என்று கேட்டார். பையன் ”ஆமாம் வரும் வழியில் அவரைப் பார்த்து சேவித்தேன்” என்றான்.
ஆழ்வான் யாருக்கும் உபதேசம் செய்ய வேண்டாம். அவரைப் பார்த்தாலே போதும் அவருடைய தேஜஸ் அப்படி !
ஆழ்வானும் அவருடைய பத்தினி ஆண்டாளும் பாதயாத்திரை சென்று ஸ்ரீரங்கத்துக்குத் திரும்பிக்கொண்டு இருக்கிறார்கள். நல்ல வெயில், பசி, சரி ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம் என்று தேடும் போது ஒரு வீட்டு வாசலில் திருமண் சாத்திக்கொண்டு இரு ஸ்ரீவைஷ்ணவர் அங்கே தென்பட சரி அவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று பிரசாத கட்டைத் திறந்து சாப்பிட ஆயத்தமாகிறார் ஆழ்வான்.
ஆண்டாளைப் பார்த்து “நீயும் சாப்பிடலாமே “ என்று சொல்ல அதற்கு ஆண்டாள் திருமண் மட்டுமே பார்த்து இந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து பிரசாதம் சாப்பிட உங்களை மாதிரி அடியேனுக்கு முடியாது. உள்ளே இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர் நெற்றியில் தான் திருமண் இருக்கிறது ஆனால் அவர் நிஷ்டை எப்படி இருக்கிறது ? அவர் பகவன் நிஷ்டரா அல்லது பாகவத நிஷ்டரா ? அவர் பாகவத நிஷ்டராக இல்லாமல் இருந்தால் இந்த இடத்தில் எப்படி நான் உணவு உண்ண முடியும் என்று கூற அதற்கு ஆழ்வான் ஆண்டாளின் கையை பிடித்துக்கொண்டு
“உன்னைப் போல் எனக்கு ஞானம் வர நம்பெருமாளிடம் பிரார்த்தனை செய்து எனக்கு இதை வாங்கித் தரவேண்டும்” என்றாராம்.
பாசுரங்கள் கூடவே ஆசாரிய ஐதீகங்கள் எல்லாம் சேர்த்து படித்தால் நாம் எப்படி வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று சுலபமாக புரியும்.
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள் கறவைகள் பின் சென்று என்கிறாள். கறவைகள் என்றால் ஆசாரியர்களைக் குறிக்கும்.மஹாலக்ஷ்மியே நமக்கு முதல் ஆசாரியன். பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால் தான் ஆண்டாள் கறவைகள் பின் சென்று என்கிறாள்.
இந்தப் பாசுரத்தில் ‘கோவிந்தா’ என்கிறாள். கோ என்றால் பசு - விந்தன் என்றால் காப்பவன் = கோவிந்தன் ! இன்னொரு பொருள்
கோவிந்தன் என்றால் வாக்குக்குத் தலைவன் என்று பொருள் ஆசாரியன் நமக்கு உபதேசங்களை கேட்டு அவர் வழியில் பின் செல்ல வேண்டும். ஆசாரியர்களுக்கு இன்னொரு பெயர் ‘கோ’ ஸ்வாமி என்பதாகும் அதனால் தான் என்னவோ ஆண்டாள் கோவிந்தன் என்ற நாமத்தை 27, 28, 29 ஆகிய பாடல்களில் அழைக்கிறாள் போலும்.
கோவிந்தன் என்றால் வாக்குக்குத் தலைவன் என்று பொருள் ஆசாரியன் நமக்கு உபதேசங்களை கேட்டு அவர் வழியில் பின் செல்ல வேண்டும். ஆசாரியர்களுக்கு இன்னொரு பெயர் ‘கோ’ ஸ்வாமி என்பதாகும் அதனால் தான் என்னவோ ஆண்டாள் கோவிந்தன் என்ற நாமத்தை 27, 28, 29 ஆகிய பாடல்களில் அழைக்கிறாள் போலும்.
கோவிந்தன் என்பது த்வயம் போல. அதில் மட்டும் தான் தாயாரைச் சிபாரிசுக்கு அழைத்து பெருமாளை அடைகிறோம். மூன்று முக்கிய மந்திரங்கள் இருக்கிறது வேதத்துக்குப் பிடித்த மந்திரம் திருமந்திரம், பெருமாளுக்கு - சரமஸ்லோகம்; ஆசாரியர்களுக்கு த்வயம் !
கோவிந்தன் என்பது தான் பெருமாளுக்குப் பிடித்த பெயர் அதனால் ஆண்டாள் முன்பு நாராயணன், மாதவன், கேசவன் என்று அழைத்ததை ”சிறுபேர் அழைத்தனவும்” என்பதைத் தெரியாமல் அந்தப் பெயர்களை சொல்லிவிட்டோம், அதனால் கோபம் கொண்டு எங்களை “சீறி அருளாதே” என்கிறாள்.
பெருமாள் பாகவத அபசாரம் செய்தால் மட்டுமே சீறுவார் உதாரணம் பிரகலாத ஆழ்வானுக்குச் சீறினார். ஆனால் இங்கே ஆண்டாள் நாராயணன், மாதவன், தாமோதரன் என்று சொன்னதற்கு எதற்கு சீற வேண்டும் ?
’அழைத்தனவு’ம்’ என்று ஒரு ‘ம்’ மை சேர்த்திருக்கிறாள் ஆண்டாள். எதனால் ? உன்னை மட்டும் இல்லை என் தேழிகளையு’ம்’ ( பாகவதர்களை ) ‘பேய்ப் பெண்ணே’ ‘செவிடோ’ ‘ஊமையோ’ என்று தகாத வார்த்தைகளைச் சொல்லிவிட்டேன் அதனால் எங்கள் மீது சீறியருளாதே என்கிறாள்.
நாம் திருவாராதனம் செய்யும் போது நம் செய்த குற்றம், தாழ்வுகளை எல்லாம் சொல்லி மன்னிப்பு கேட்கிறோம். கத்யத்ரயத்தில் ஸ்ரீராமானுஜர் நமக்காகப் பல வித அபசாரங்களுக்குப் பெருமாளிடம் ஷமிக்க பிராத்திக்கிறார். கருமை நிறமான கண்ணனும் black hole போல நாம் சொல்லும் குறைகளை எல்லாம் பொறுமையாக கேட்டுக்கொண்டு குறை ஒன்றும் இல்லாதவனாக இருக்கிறான்.
சம்பிரதாயத்தில் பெருமாள் எதைச் செய்தாலும் அது அருள் தான். அவனுக்கு நம் மீது கோபம் வந்தால் அதுவும் அருளே அதனால் தான் சீறி அருளாதே! என்கிறாள் ஆண்டாள். ஆழ்வார் பாசுரங்களை அருளிச்செயல் என்கிறோம். அது அவனுடைய வாக்கு !
அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே.
அருளினான் அவ் அரு மறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே.
மதுரகவி ஆழ்வார் சொன்ன பாசுரத்தை ஒரு முறை அதில் எவ்வளவு அருள் என்று அவன் அருளுக்கு ஒரு முறை படித்துவிடுங்கள். மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் ஆழ்வார்கள் வாழி, அருளிச்செயல் வாழி என்கிறார்.
மதுரகவி ஆழ்வார், சபரி போல ஆசாரியன் பின் செல்ல வேண்டும். மதுரகவி ஆழ்வார் சரி, சபரி எங்கே ஆசாரியன் பின் சென்றாள் என்று தோன்றும்.
ஸ்ரீராமாயணத்தில் வரும் சபரி மதங்க மகரிஷியின் அனுக்கிரகத்தை பூரணமாகப் பெற்றாள். மதங்க மகரிஷி விடைபெற்றுப் போகும் முன் சபரியிடம் ”ராம” என்ற நாமத்தை உபதேசித்தார்.
சபரி ”இதற்கு என்ன அர்த்தம் ?” என்று கேட்க அதற்கு மகரிஷி “இந்த அர்த்தமே உன்னைத் தேடி வரும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
சபரி ”இதற்கு என்ன அர்த்தம் ?” என்று கேட்க அதற்கு மகரிஷி “இந்த அர்த்தமே உன்னைத் தேடி வரும்” என்று சொல்லிவிட்டு மறைந்தார்.
அவளும் பல வருடங்களாகக் காத்துக்கொண்டு இருந்து ஸ்ரீராமரை பார்த்து பழங்களை கொடுத்த கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
அப்போது தன் யோகத்தால் தன்னையே எரித்துக்கொண்டு ஸ்ரீராமரிடன் என்ன கேட்டாள் ? தெரியுமா ? ஸ்ரீராமர் அங்கேயே இருக்கிறார் அவர் திருவடியை கேட்கவில்லை, ”என் ஆசாரியன் எனக்கு முன்பே புறப்பட்டு போய்விட்டார் அவர் திருவடியை அடைய வேண்டும்” என்று கேட்கிறாள்! முதல் முதலில் ஆசாரியன் திருவடியை அடைந்து பின் சென்றவர் சபரியாக தான் இருக்கும்.
கூரத்தாழ்வான் பரமபதம் புறப்படும் சமயம் நாக்கு உலர்ந்து, ஏதும் கூற இயலாமல் எம்பெருமானாரின் திருவடிகளைப் பற்றியிருந்தார். அப்போது ஆழ்வானின் செவியில் எம்பெருமானார் த்வயமந்திரத்தை உச்சரித்தார். அங்கே இருந்த சிஷ்யர்கள் மனதில் “இப்படியாக நமது செவிகளில் எம்பெருமானார் த்வயமந்திரத்தை உச்சரிக்கும் பேறு கிட்ட என்ன செய்ய வேண்டுமோ!=” என்று எண்ணியபடி நின்றனர். அவர்களுடைய எண்ணத்தை அறிந்துகொண்ட ஸ்ரீரமானுஜர் அவர்களிடம் “ஆழ்வானின் ஸ்வபாவம் என்ன என்பதை நீங்கள் அறிவீர்கள்” ஓர் அரசிலங்குமாரன் வாயில் கற்பூரத்தைப் போட்டு கொள்ளாமல் இருந்தால் அவன் நாக்கு உலர்ந்து போய்விடும். அதே போல ஆழ்வானுக்குத் த்வயம் தான் தான் கற்பூரம், நாக்கு உலந்து போகாமல் இருக்க த்வயத்தை ஓதினேன். ஆழ்வான் மோக்ஷம் செல்ல உபாயமாக அதை நான் உச்சரிக்கவில்லை என்று கூறினார்.
எப்பேர்ப்பட்ட கூரத்தாழ்வான் கண்ணை இழந்த போது, உடையவர் அவரைப் பார்த்து
உமக்கு இந்த நிலையா ?” என்று கேட்ட போது அதற்குக் கூரத்தாழ்வான் ”யாராவது ஒரு ஸ்ரீவைஷ்ணவரின் நெற்றியிலுள்ள திருமண் கோணலாக உள்ளதே என்று நினைத்திருப்பேனோ என்னவோ” என்று பதில் அளித்தார். அவருக்கே இந்த நிலமை என்றால் நம் போன்றவர்களுக்கு ?
உமக்கு இந்த நிலையா ?” என்று கேட்ட போது அதற்குக் கூரத்தாழ்வான் ”யாராவது ஒரு ஸ்ரீவைஷ்ணவரின் நெற்றியிலுள்ள திருமண் கோணலாக உள்ளதே என்று நினைத்திருப்பேனோ என்னவோ” என்று பதில் அளித்தார். அவருக்கே இந்த நிலமை என்றால் நம் போன்றவர்களுக்கு ?
நாம் தினமும் உண்ணும் உணவு, பழகும் மக்கள், பார்க்கும், கேட்கும் ஆபாசங்கள் எல்லாம் நம்மை என்ன செய்யும் என்று விவரிக்க வேண்டாம். நாம் செய்யும் எல்லாம் நம் நிழல் போல பாவமாக நமக்குப் பின் வந்துகொண்டே இருக்கிறது.
சமீபத்தில் இரு ஸ்ரீவைஷ்ணவ அறிஞர்கள் ஒரு டிவி விவாத நிகழ்ச்சியில் பங்கு பெறும் செய்தி ஊடகங்களில் பரவ உடனே எனக்குத் தெரிந்த பல ஸ்ரீவைஷ்ணவ அன்பர்கள் அவர்களின் lineage என்ன என்று கூட பாராமல் பலவாறு வசை பாடினார்கள். சிலர் அந்தச் செய்தியை பல முறை வாட்ஸ் ஆப் போன்றவற்றில் “தீக்குறளை சென்றோதோம்!” என்று ஆண்டாள் சொன்னதை மறந்து பரப்பினார்கள். அதை எல்லாம் படிக்க அடியேனின் மனம் மிகுந்த வருத்தம் அடைந்தது.
நான் உண்ணும் உணவு எங்கிருந்து வருகிறது என்பதைப் பொருத்து நம் குணம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை ஸ்ரீராமானுஜர் சம்பவத்திலிருந்தும், கூரத்தாழ்வானின் தர்மபத்தினி ஆண்டாள் எங்கே உட்கார்ந்து உணவு உண்ணுகிறோம் என்பதும் முக்கியம் என்பதையும் பார்த்தோம்.
ஸ்ரீரங்கம் கோயில் பட்டர்கள் ஜீயர் ஸ்வாமிகள், அல்லது ஆசாரிய புருஷர்கள் பார்த்தால் கை கூப்புவார்களே அன்றி தண்டம் சமர்ப்பிக்க மாட்டார்கள் என்பது மரபு. ஸ்ரீராமர் ஆராதனை செய்த பெரிய பெருமாளை ஆராதனை செய்யும் பட்டர்கள் ஸ்ரீராமரின் பிரிதிநிதியாக கருதப்படுகிறார்கள் !
எல்லா ஆழ்வார்களும், ஆசாரிய புருஷர்களும் போற்றிய கோயில் என்றாலே அது ஸ்ரீரங்கம் என்ற கோயிலுக்கு வந்த ஒரு நாத்திக அரசியல் வாதிக்கு ஸ்ரீரங்கம் பட்டர்கள் பூர்ண கும்பம் பெருமாள் பிரசாதம் கொடுக்க அதை அவர் அழித்து அவமானப் படுத்தியவர் நடத்தும் நடத்தும் தொலைக்காட்சியில் எவ்வளவு பெரிய அறிஞர்களாக இருந்தாலும் அங்கே சென்று உட்கார்ந்தால் என்ன நடக்கும் என்பதற்கு அந்த விவாத நிகழ்ச்சியே சான்று.
ஆனால் நாம் உடனே பொங்கி வாய்க்கு வந்த படி வசைபாடுவது தகாத வார்த்தைகளை உபயோகிப்பது எல்லாம் கூடவே கூடாது. அருளிச்செயல் வரும் வாயில் இந்த வார்த்தைகள் அதுவும் பாகவதர்களை பார்த்துச் சொல்லுவது பெருமாளை சீறிவே வைக்கும். கூடாது.
அமைதியாக அவர்கள் செய்தது தப்பே என்றாலும் அவர்களைக் கண்டிக்க நாம் ஆசாரியர்கள் கிடையாது. அவர்களை நீங்கள் வசைபாடியிருந்தால், அவர்களை என்றாவது பார்க்கும் போது அல்லது தொலைப்பேசியிலோ அல்லது மெயில் மூலமாகவோ மன்னிப்பு கேட்டுவிடுங்கள். தப்பில்லை.
ஸ்ரீராமானுஜ தாஸன் என்று அவர் சம்பந்தத்தை பெற்றிருக்கும் நாம் அவர்களிடம் துவேஷம் பாராட்டாமல் இருப்பது தான் ஆசாரியர்கள் (கறவைகள்) பின் சென்று, பெருமாளை ’சீறி அருளாதே’ என்று சொல்ல முடியும்.
இரண்டு பெரும் ஸ்ரீவைஷ்ணவ அறிஞர்களைப் பற்றிய வசைகளைப் படித்ததால் அடியேன் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தேன். சென்ற வாரம் மேற்கு மாம்பலத்தில் ‘பகவான் நாமா டிரஸ்டுக்கு” சென்று அங்கே 1008 கோடி ராம நாமம் பிரதிக்ஷ்டை செய்திருக்கிறார்கள் அதை இரண்டு முறை சுற்றினேன்.
ஸ்ரீவேதாந்த தேசிகன் ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரத்தில் த்வயாதிகாரத்தில் இப்படிக் கூறுகிறார்
“வேதாந்தத்துக்கு மேம்பட்ட சாஸ்திரம் கிடையாது.
நாராயணனுக்கு மேம்பட்ட தத்துவம் இல்லை ;
பாகவதர்களிலும் மேம்பட்ட தூய்மைதரும் பொருள் கிடையாது.
பாகவதர்கள் வாழும் இடங்களைக் காட்டிலும் சிறந்த இடம் இல்லை.
ஸ்த்வகுணத்தைக் காட்டிலும் ஆரோக்கியம் தருவது ஒன்றுமில்லை.
சிறந்த ஆசாரியனை அடைவதைக் காட்டிலும் சிறந்த மெய் ஞானம் இல்லை
மேக்ஷத்தைக் காட்டிலும் சிறந்த சுகம் அளிப்பது வேறு இல்லை
த்வயத்தை சொல்லுவதைக் காட்டிலும் சிறந்த மோட்சம் அளிப்பது வேறு இல்லை
நாராயணனுக்கு மேம்பட்ட தத்துவம் இல்லை ;
பாகவதர்களிலும் மேம்பட்ட தூய்மைதரும் பொருள் கிடையாது.
பாகவதர்கள் வாழும் இடங்களைக் காட்டிலும் சிறந்த இடம் இல்லை.
ஸ்த்வகுணத்தைக் காட்டிலும் ஆரோக்கியம் தருவது ஒன்றுமில்லை.
சிறந்த ஆசாரியனை அடைவதைக் காட்டிலும் சிறந்த மெய் ஞானம் இல்லை
மேக்ஷத்தைக் காட்டிலும் சிறந்த சுகம் அளிப்பது வேறு இல்லை
த்வயத்தை சொல்லுவதைக் காட்டிலும் சிறந்த மோட்சம் அளிப்பது வேறு இல்லை
கட்டுரையிலும், திருப்பாவையில் இது அனைத்தும் இருக்கிறது !
- சுஜாதா தேசிகன்
( 4.8.2018 )
( 4.8.2018 )
Comments
Post a Comment