Skip to main content

சுஜாதா தேசிகன்

சுஜாதா தேசிகன்
ஓர் அன்பர் சில நாள் முன் இன்பாக்ஸில் ‘சுஜாதா தேசிகன்’ என்ற பெயரை நீங்களே வைத்துக்கொண்டீர்களா ? என்றார். சுஜாதா தேசிகன் என்ற பெயர் நானே வைத்துக்கொண்டதில்லை. அதற்கு ஒரு கதை இருக்கு.
ரஜினி மாதிரி எழுத்துலகில் சுஜாதா சூப்பர் ஸ்டார். மற்றவர்கள் அவரை போல எழுதினாலும் அவர்கள் நளினி காந்த் மாதிரி தான்.
’சுஜாதா தேசிகன்’ என்ற இந்தப் பெயருக்கு ஒரு நீண்ட வாலாறு இருப்பதால் அதை முறைப்படி ஆவணப்’படுத்துவது’ தானே முறை. சுஜாதா, தேசிகன் என்ற இரண்டு பெயர்களையும் விவரிக்க வேண்டியதால் சற்றே பெரிய கட்டுரை. ஞாயிற்றுக்கிழமைகளில் படிப்பது உத்தமம்.
சுஜாதா தேசிகன்
-oOo-.-oOo-.-oOo- -oOo--oOo-


சுஜாதா !
கை நிறையச் சம்பளத்தில் பைக் வாங்கிய போது பின் சீட் காலியாக இருக்கிறதே என்று என் அப்பா எனக்குப் பெண் பார்க்க ஆரம்பித்தார். மிடில் கிளாஸ் அப்பாக்களைப் போல ஸ்ரீந்ருஸிம்ஹப்ரியா, ஸ்ரீரங்கநாத பாதுகா போன்ற பத்திரிக்கையில் நான் ’ரொம்ப டீசண்டான, குட் லுங்கிங் ( காக்கைக்கு.. ) பையன் என்று விளம்பரம் செய்தார். எதற்கும் இருக்கட்டுமே என்று ”நல்ல பெண்ணாக’ இருந்தா சொல்லுங்கள் என்று வீட்டுக்கு வந்தவர்களிடம் சொல்லியும் வைத்தார்.
சென்னையில் வேலை என்றாலும் வார இறுதியில் திருச்சி தான் புகலிடம். அந்த வாரம் அப்பா சின்ன ஃபைலை என் முன்னே வைத்து “பருடா” என்றார்.
உள்ளே பாரத்வாஜம், ஆத்ரேயம், கௌசிகம், வாதூலம் என்று பல புரியாத பெயர்கள் இருந்தது. ( என் அப்பா என்னை டீசண்டான பையன் என்று விளம்பரப்படுத்தியதால் பெண்ணின் பெயர்களை இங்கே குறிப்பிட வில்லை )
”இப்ப எதுக்குப்பா ? ” என்றேன் ( மீண்டும் டீசண்ட் !)
“ஏன் ? ஆபீஸுல யாரையாவது பார்த்துவைச்சிருந்தா அம்மாகிட்ட சொல்லிடு”
“ஜாதகத்தைப் பார்த்து எப்படி பெண்ணை செலக்ட் செய்ய முடியும் ?”
”படிப்பு எல்லாம் பார்த்து முதல்ல செலக்ட் செய் அப்பறம் அவர்களிடம் மேற்கொண்டு பேசலாம்”
“எப்படிப்பா ?”
ஒரு ஜாதகத்தை எடுத்து “இந்த பெண் அமேரிக்கா மாப்பிள்ளை கிரீன் கர்ட் தான் வேண்டுமாம்.. இது உனக்கு ஒத்து வராது..” என்று எலிமிஷேனை ஆரம்பித்தார்.
என்னோட உயரமான பெண்களை எல்லாம் ஓரம் கட்டினேன் ( கல்யாணத்தில் ஸ்டூல் போட்டு நின்றால் நன்றாகவா இருக்கு? ).
அப்படி பார்த்துக்கொண்டு வந்த போது தென்கலை பாரத்வாஜம்... என்ற அந்த ஜாதகம் வந்த போது கணினியில் ’சர்ச் அல்காரிதம்’ குறிப்பிட்ட ’எலிமெண்ட்’ வந்த உடனே நிற்பது போல நின்றேன்.
“இந்தப் பெண்” என்று ஜோசிய கிளி எடுக்கும் சீட்டு போல ஒன்றை எடுத்த போது என் அப்பாவுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது
சந்தேகத்துடன் “இந்தப் பெண்ணை உனக்கு முன்பே தெரியுமா ?”
“இல்லப்பா”
ஜாதகத்தை வாங்கிப் பார்த்து “அத்தானே பார்த்தேன்” என்றார்
அதில் பெண்ணின் பெயர் ‘சுஜாதா’ என்று இருந்தது. மேலும் படித்துவிட்டு அவா தென்கலை “வடகலையை ஒத்துப்பாலா என்று தெரியலை ! ஹை ஹோப்ஸ் வைச்சிக்காதே எதற்கும் இன்னும் கொஞ்சம் செலக்ட் செய்து வை”
எதற்குமே டென்ஷன் ஆகாத என் அம்மா ”இப்பாவே டிசைட் செய்துடாதடா… பெண்ணைப் பார்த்து பேசிட்டு அப்பறம் டிசைட் செய்”
“இல்லமா இந்தப் பெண் தான்”
”நீ சொல்லிட்டே… அவ சம்மதிக்கணுமே!”
”பெண்ணோட ஹைட் என்ன ? பார்த்தியா ?” என்று ஊசிப்பட்டாசை கொளுத்து போட அந்த ஜாதகத்தில் எவ்வளவு தேடியும் ஹைட் என்ற வார்த்தையே இல்லை.
ஏதோ கல்யாணத்துக்கு வந்த ஏதோ மாமா ”இங்கே கொடுங்க” என்று மூக்குக் கண்ணாடியை கீழே இறக்கி ஜாதகத்தைப் படிக்க ஆரம்பித்தார் “அப்பா பலாபூர்… அம்மா காஞ்சிபுரம்.” நிச்சயம் அவளாம் ஹைடாக இருப்பா ”உன் ஹைட் என்னடா ?”
“5.6 மாமா”
“பெண் 5.8 வரை இருக்கலாம் பிரச்சனை இல்லை... ஏதாவது ஷூ, கூ பேட்டா நீயும் ஹைடாகிவிடலாம்.. அதுக்கு மேல இருந்தா தான் கொஞ்சம் கஷ்டம். அவா ஒத்துகணும் பாரு..” என்று எரிச்சலைக் கிளப்பினார்.
“மாமா பெண்ணு ஹைட் கம்மியா இருந்தா ?”
“அப்ப பிரச்சனை இல்லை. ஜாதகத்துல ஹைட் போடாதற்கு அது கூட ரீசனாக இருக்கலாம். இப்ப உங்க அப்பா அம்மாவையே எடுத்துக்கோயேன்…” என்று ஆரம்பித்த போது ”ஒரு நிமிஷம் இருங்கோ மாமா” என்று நழுவினேன்.
சாயந்தரம் வீட்டுக்கு வந்த ’தெரிந்த மாமி’ “சரியா போச்சு…இந்த ஃபேமிலியை எனக்கு நன்னா தெரியும்” என்று ஜாதகத்தில் இருந்த மொத்தத்தையும் வாய்ப்பாடு போல பார்க்காமல் ஒப்பித்த மாமிக்கு சிக்கரி கலக்காத காபி கொடுத்து
“பெண்ணு தென்கலை.. ஒத்துப்பாளா ?” என்று முதல் சந்தேகத்தில் ஆரம்பித்தேன்.
“நீ கவலையே படாதே.. நான் பேசறேன்.. என் பேச்சை அவ தட்டவே மாட்டா”
“மாமி பெண்ணின் ஹைட் தெரியுமா ?” என்றாள் என் அம்மா
மாமி என்னைப் பார்த்து “எங்கே இப்படி வந்து என் முன்னே நில்லு”. கோர்ட்டில் சாட்சி கூண்டில் நிற்பது மாதிரி கைக்கட்டி நின்றேன்.
“இந்த ஹைட் தான் இருப்பா.. நான் பார்க்கும் போது அவ ஒன்பதாவதோ பத்தாவதோ படித்துக்கொண்டு இருந்தா.. அதுக்கு அப்பறம் ஹைட் ஆகியிக்க மாட்டா.. எதுக்கும் கேட்டு சொல்றேன்” என்றாள் சந்தேகமாக.
ஒரு வாரத்தில் மாமி மேலும் பல தகவல்களுடன் வீட்டுக்கு வந்தாள்.
“கேட்டுட்டேன் ஹைட் 5.7… நீ என்ன சொன்னே 5.6 ?”
“கிட்டதட்ட 5.6.. போன வாரம் எடுத்தது… இன்னிக்கு சரியா எடுத்து சொல்றேன்”
“பெண் அழகாக இருப்பாளா ?” என்று என் அம்மா கேட்க அதற்கு மாமி “உங்க அழகெல்லாம் வராது மாமி நல்லா இருப்பா.. உங்க பையனுக்கு சரியா இருக்கும்”
அம்மா “பெண்ணை நேரில் பார்க்கணும்”
“நீ வேன்னா பார்த்துக்கோ.. ஐ ஹவ் டிசைடட் ” என்றேன்.
அம்மா ”கெக்கே பிக்கே என்று பேசாதே” என்ற போது அவள் முகத்தில் பீதியை பார்க்க முடிந்தது.
என் பிடிவாதத்தை உணர்ந்துகொண்டு மறுவாரம் மாமியை அழைத்துக்கொண்டு திடீர் என்று சென்னைக்கு சென்று நைசாக பெண்ணைப் பார்த்துவிட்டு வந்தாள்.
அம்மாவிடம் விசாரித்தேன்.
“அவா வீட்டுல எல்லாம் ஏதேதோ வாத்தியத்தை வெச்சிண்டு வாசிச்சுண்டு இருக்கா… பெண்ணு ஓ.கே .. உனக்கு பிடிக்குமானு தெரியலை” என்றாள்.
“அந்த பெண்ணு தான்” என்றேன்.
ஒரு வாரத்தில் "எதுவாக இருந்தாலும் அங்கேயே பெண்ணை பார்த்துக் கேட்டு விடு" என்று அம்மாவின் அறிவுரையுடன் பெண் பார்க்கச் சென்றேன்.
சென்ற இடத்தில் பெரிய அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. நான் பெண் பார்க்க வரும் செய்தி எப்படியோ தினத்தந்தியில் வந்துவிட்டது போல் அந்த காலனி கதவு, ஜன்னல் இடுக்கிலிருந்து எல்லோரும் என்னை எட்டிப் பார்த்து சிரிக்க, அந்த காலனி நாய்க் குட்டி என்னைப் பார்த்து செல்லமாக வாலையாட்டியது!
பெண் வீட்டில் ஒரு பெரிய கூட்டம் காத்துக்கொண்டு இருந்தது. இப்படியும், அப்படியும் எல்லோரும் ஒடிக் கொண்டு இருக்க, சிலர் வலுக்கட்டாயமாக என்னைக் கேசரி சாப்பிடவேண்டும் என்று என்னுடன் போராடிக் கொண்டு இருக்க, அந்தக் கூட்டத்தில் எது பெண் என்று நான் தேடிக்கொண்டு இருந்தேன்.
அங்கு இருந்த பாட்டி என்னிடம் "பெண்ணைப் பிடித்திருக்கா?"
"எது பாட்டி பொண்ணு?"
"அங்கே தலையை குனிந்து கொண்டு, பச்சை புடவை"
அதற்குள் பெண் திடீர் என்று பாட ஆரம்பித்தாள். பாடி முடித்தவுடன் எதற்கோ எல்லோரும் பலமாக கைதட்டினார்கள்.
“அவ பாடியது என்ன கீர்த்தனை தெரியுமா ?” என்றார் பக்கத்தில் இருந்த மாமா.
”எம்.எஸ்” என்றவுடன் என்னிடம் இருந்த பஜ்ஜி தட்டை எடுத்துக்கொண்டு சென்றார்.
அதற்குள் என் அம்மா என்னைப் பெண்ணுடன் எதாவது பேசு என்று அடம்பிடிக்க, கொஞ்சம் தைரியத்தை வர வைத்துக்கொண்டு, பஸ் ஸ்டண்ட் பிள்ளையாருக்கு தேங்காய் உடைப்பதாக வேண்டிக்கொண்டு கிட்டே சென்று என்ன பேசுவது என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். சட்டென்று ஒரு கேள்வி உதயமாக,
"எங்கு பி.காம் படிச்ச?"
கொஞ்சநேரம் யோசித்து விட்டு அந்த பெண் "காலேஜில்" என்று மெதுவாகப் பதில் சொல்ல...கொஞ்சம் திக்கு முக்கு ஆடினேன்.
”பெண்ணைப் பிடித்துவிட்டது…கிளம்புகிறோம்” என்று நான் மணிரத்தினம் மாப்பிளை மாதிரி சொன்ன போது பெண் வீட்டில் கொஞ்சம் ஆடிப் போய்விட்டார்கள். ( போய்விட்டு கடிதம் போடுகிறோம் என்று சொல்லுவது தானே தமிழர் பண்பாடு )
வானிலை அறிக்கை ரமணன் போல “சார் ஒரு நாற்பத்தி எட்டு மணி நேரம் டைம் கொடுங்க பெண்ணிடம் பேசிவிட்டு சொல்றேன்” என்றார் பெண்ணின் அப்பா.
”யோசித்து நல்ல முடிவா சொல்லுங்க” என்று கிளம்பிய போது போது பஜ்ஜி தட்டை எடுத்துக்கொண்டு போன பெண்ணின் மாமா மீண்டும் காட்சி அளித்தார்.
“சார் கொஞ்சம் இங்கே வாங்கோ” என்றார்
பெண் பாடியது என்ன ராகம் என்று கேட்டால் என்ன சொல்லுவது என்று பதறிக்கொண்டு
“என்ன மாமா”
“இங்கே இந்த தென்னை மரம் பக்க கொஞ்சம் நில்லுங்க.. “
மாடல் ஆர்டிஸ்ட் மாதிரி இரட்டை விரலில் ஒரு கண்ணால் மூடிக்கொண்டு ரேக்கி மருத்துவம் போல ஏதோ செய்தார்.
“ஒண்ணுமில்லை.. ஹைட் சரியா இருக்கா என்று பார்த்தேன்…”
”தென்னை மரத்தைவிட என் ஹைட் கொஞ்சம் கம்மி தான்”
வீட்டுக்கு வந்த போது என் அம்மா “என்னடா இது எல்லா எதிர்லேயும்... தென்னை மரத்துக்குப் பக்கம் எல்லாம் நிற்க வெச்சு பார்க்கரா … இந்த சம்மதம் வேண்டுமா ?” என்றாள்.
”ஐ ஹாவ் டிசைட்டட்” என்றேன் தீர்மானமாக.
”அந்த சுஜாதா பேரில என்ன தான் இருக்கோ” என்று அலுத்துக்கொண்டாள்.
முப்பத்தாறு மணி நேரத்தில் பெண்ணின் அப்பா என் ஆபிஸுக்கு வந்தார்.
“சார்.. எங்களுக்கு ஓ.கே… ” ( கவனிக்க ஓ.கே ) என்று கிளம்பி சென்றவர் யூ-டர்ன் அடித்து “ஒரு ரிக்வஸ்ட்” என்றார்.
“தப்பா நினைச்சுக்காதீங்க.. உங்க சரியான ஹைட் என்ன … ”
“பெண்ணின் மாமா அன்று விரலில் அளந்தாரே…”
“அவர் தான் எங்களைக் கொஞ்சம் கன்ஃயூஸ் செய்துவிட்டார்” என்றார்
“கொஞ்சம் இருங்கோ… “ என்று அலுவலகத்தில் எலக்டிரீஷியனிடம் ‘மெஷரிங் டேப்’ வாங்கி ஒதுக்குப்புறமான கான்பிரன்ஸ் ரூமுக்கு சென்று
”நீங்களே அளந்துகொள்ளுங்கள்” என்ற போது வருங்கால மாமனாருக்கு வெலவெலத்து போய்விட்டது.
தைரியத்துடன் அளாந்து “கிட்டதட்ட 5.7” இருக்கீங்க ”தாங்ஸ்” என்று திரும்பி பார்க்காமல் சென்றார். நான் அவர் பின்னாடி சென்று ’டேப்’ என்றேன். சாரி என்று திருப்பி கொடுத்தார்.
அம்மாவிடம் ஆபிஸில் நடந்ததைச் சொன்னேன்.
“ஏண்டா உனக்கு இந்தப் பெண்ணே தான் வேணுமா ?” என்றது “உனக்கு பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா? ” என்று காதில் விழுந்தது.
“ஆமாம்” என்பதற்குப் பிறகு பத்திரிக்கை அடித்து முதல் பத்திரிக்கை ஆசாரியனுக்கும் அடுத்த பத்திரிக்கையை என் குருவாகிய சுஜாதாவிற்கு கொடுக்க என் அப்பவுடன் சென்றேன்.
எழுத்தாளர் சுஜாதாவிற்கு நான் திருமணம் செய்துகொள்ள போகிறேன் என்று தெரியும் ஆனால் பெண்ணின் பெயர் ’சுஜாதா’ என்பதை மட்டும் சொல்லாமல் சின்ன சஸ்பென்ஸாக வைத்திருந்தேன்.
அவரிடம் பத்திரிக்கை கவரை கொடுத்து அமைதியாக அவர் ரியக்‌ஷனை பார்த்துக்கொண்டு இருந்தேன். பத்திரிக்கையைத் திறந்தவர் லேசான புன்னகையுடன்
"உன் தலை எழுத்து அப்படி என்றால் மாற்ற முடியாது" என்றார்.
திருமணத்திற்கு வந்து வாழ்த்திவிட்டு என் அப்பாவிடம் "எனக்கும் தேசிகனுக்கும் ஆண்டாள் சொல்லுவது போல “ஒழுக்க ஒழியாத உறவு” என்று ஆசிர்வதித்துவிட்டுச் சென்றார். .
-oOo-.-oOo-.-oOo- -oOo-
தேசிகன்
தமிழ் பாட புத்தகத்தில் இன்றும் ‘அ-அம்மா, ஆ-ஆடு, இ-இலை’ என்று இருப்பதை பார்க்கலாம். அந்தப் புத்தகத்தில் இருக்கும் அம்மா எப்போதும் கையில் ஒரு குழந்தையை வைத்திருப்பார். ஆடு, புல்லைத் தின்று கொண்டு இருக்கும். இப்படிப் படித்ததால் பிற்பாடு அம்மா, ஆடு என்றால் இந்தப் பிம்பம் நம் மனத்தில் “வாமா மின்னலு” என்பது மாதிரி வந்துவிட்டுப் போகும்.
உருவ வழிபாடு கூட இதுமாதிரி தான். விஷ்ணு, சிவன், பிரம்மா என்றால் உங்களுக்கு உடனே அவர்கள் எப்படி இருப்பார்கள் என்ற ஒரு பிம்பம் மனக்கண்ணில் வந்துவிட்டுப் போகும். அவரவர் வயதுக்குத் தகுந்தார் போல், விஷ்ணு என்.டி.ஆர் மாதிரியோ, சிவன் சிவாஜி அல்லது கமல் மாதிரியோ, அம்மன் கேஆர்.விஜயா அல்லது மீனா மாதிரியோ (ராகவேந்திரராக ரஜினி மட்டுமே) வருவார்கள். ஆனால் பிரம்மா? இன்றும் அவருக்கு பொருத்தமான நடிகர்கள் கிடையாது. இத்தனைக்கும் அவர் தலை கொஞ்சம் வெயிட்டானது.
திருவள்ளுவரையும் கம்பரையும் ஹுவான் சுவாங்கையும் (எலி வாலாய் பின்னல் போட்டிருப்பார்) சத்ரபதி சிவாஜியையும் ஷாஜகானையும் (இவர் ஒரு ரோஸ் வைத்திருப்பார்) அக்பரையும்கூட புத்தகங்களில் ஒரு உருவத்தைக் கொடுத்து, இவர் இப்படித்தான் இருப்பார் எனச் சொல்லி மனதில் பதிய வைத்திருக்கின்றனர். வழக்கமாக உட்கார்ந்திருக்கும் திருவள்ளுவர் கன்னியாகுமரியில் நிற்பதால், நம் மனது அவரை உடனே ஏற்றுக்கொள்ளவில்லையே!.
அடுத்து, “பேர்ல என்ன இருக்கு ?” என்ற கேள்வி நாம் எல்லோரும் அடிக்கடி உபயோகிக்கும் பிரயோகம். ”வாட்ஸ் இன் அ நேம்”? என்று ஷேக்ஸ்பியர் கேட்டதை அவரே மறந்து இருக்கக்கூடும். ஆனால் நாம் அதை மறக்கவில்லை.
நரசிம்மன், கோவிந்தராஜன், ஜெகந்நாதன், ராஜகோபாலாச்சாரி போன்ற பெயர்கள் கேட்டவுடன் உங்களுக்கு உடனே ஒரு வயதான பிம்பத்தைத் தரும். ஏன் என்றால் உங்களுக்குத் தெரிந்த இந்தப் பெயர்களில் இருப்பவர்கள், மாமாக்களோ, தாத்தாக்களோ. இதே பெயர்கள் தற்போது நரேஷ், கோவிந்த், ஜெகன், ராஜ் என்று சுருக்கப்பட்டதால் வயதும் கம்மியாகிவிட்டது போல் தோன்றுகிறது.
எவ்வளவுக்கு எவ்வளவு நீளமாக பெயர்கள் இருக்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு வயது அதிகமாகும். சில ‘விதி’விலக்குகள் இருக்கின்றன. என் பெயர் சிறியதுதான்; “தேசிகன்”. அதற்கே, “ஓ நீங்கதான் தேசிகனா? நான் கொஞ்சம் வயசானவரா எதிர்ப்பார்த்தேன்” என்று சொன்னவர்களின் லிஸ்ட் நீளம். ( பல ஆண்டுகளுக்கு முன் ! )
ரா.கி.ரங்கராஜன் அவர்களைச் சந்தித்தபோது, “உங்களுக்குக் கிட்டத்தட்ட ஐம்பது வயசு இருக்கும் என்று எதிர்பார்த்தேன்” என்றார். “நான் வேண்டும் என்றால், இன்னும் பதினொரு வருஷம் கழித்து உங்களை வந்து பார்க்கிறேன்” என்றேன். எப்படியோ தேசிகன் என்ற சிறிய பெயருக்கு வயசான பிம்பம் பலரின் மனதில் வந்துவிட்டது. நல்ல வேளை என் அப்பா “வேதாந்த தேசிகன்” என்று பெயர் வைக்கவில்லை. வைத்திருந்தால், “சார் உங்களுக்கு ஒரு வாக்கிங் ஸ்டிக் வாங்கி வைத்திருந்தேன்” என்று அழைத்து, என்னைப் பார்த்து விட்டு “வெச்சிக்கோங்கோ.. வயசானா உபயோகமா இருக்கும்” என்று தந்திருப்பார்கள். இவர்கள் இப்படி நினைத்துக்கொள்வதில் எனக்குத் துளிக்கூட வருத்தம் கிடையாது. ஆனால் பெண்கள்? பிரச்சினை அங்குதான். அதற்குமுன் பெண்களின் பெயர்களைப் பற்றியும் பார்த்துவிடலாம்.
பெண்களின் பெயர்களை எடுத்துக்கொள்ளுங்கள்; “சுஜாதா” என்ற பெயர் எப்போதோ ஆண் பெயராகிவிட்டது என்று எழுத்தாளர் சுஜாதாவே என்னிடம் அடிக்கடி சொல்லியுள்ளார். சிம்ரன், ஸ்ரேயா, ஸ்நேகா எல்லாம் சீசனுக்குத் தகுந்தாற் போல அழகானவர்களின் பெயர்களைக் குறிக்கும். சில சமயங்களில் யாராவது இந்தப் பெயர்களை, தங்கள் பெயரென்று சொல்லிவிட்டால், படக்கூடாத இடத்தில் அமிர்தாஞ்சன் பட்ட மாதிரி இருக்கும். காரணம் நமக்கு இந்த பெயர்களினால் ஏற்படும் பிம்பம் தான்! விகடன், குமுதம் போன்ற பத்திரிகையில் பார்த்திருக்கலாம் தற்போது உள்ள “கதாநாயகன், கதாநாயகிகளுக்கு வயதானால்…” என்று போட்டு ஓவியர்கள் கற்பனை செய்து வரைந்திருப்பார்கள். அந்தப் படத்திலும் இளமை எட்டிப்பார்க்கும்.
மீரா, மாலதி, ரஞ்சனி, காயத்ரி, அனன்யா, ரூபா எல்லாம் நேரில் பார்க்காதவரை வயதைக் கண்டுபிடிக்க முடியாத பெயர்கள். இன்றைக்கும் என் பெண்ணின் பெயர் ஆண்டாள் என்றால் “ஏன் சார், சின்னப் பொண்ணுக்கு ஆண்டாள்னு பேர் வெச்சிங்க?” என்று வாரத்துக்கு ஒருவராவது கேட்டுவிடுகிறார். இத்தனைக்கும் ஆண்டாள் திருப்பாவை எழுதும் போது அவளுக்கு ஐந்தே வயது தான். . நதியா என்று ஒரு பெயரைக் கேட்டால், சினிமா நடிகை பிம்பம் உங்கள் மனசில் வரும். அதே நதியா நரசிம்மன் என்ற பெயரை கேட்டால்? ஒரு மரியாதை வரும். பெயருக்கு பின்னால் இருக்கும் நரசிம்மனுக்குக் கொடுக்கும் பயம் கலந்த மரியாதை. பெயருக்கு கூட பின்னால் பெயர் போடாமல் இருக்கும் பெண்கள்? நம்பாதீர்கள்.
பாட்டி என்றால், கோமளவல்லி, சூடாமணி, ரங்கநாயகி என்று இருப்பதுதானே மரபு?
ஒரு வீட்டுக்கு போகிறீர்கள் அங்கே ஒரு பாட்டி இருக்கிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள் “இவங்க தான் ஸ்ரேயா பாட்டி” என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்? “ஸ்ரேயா என்கிற பேத்திக்குப் பாட்டி என்றுதானே?” அந்தப் பாட்டிக்கே பெயர் “ஸ்ரேயா” என்றால்…எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும்? அதே அதிர்ச்சி எனக்கு சில வருடங்கள் முன் கிடைத்தது.
அப்போது நான் சென்னையில் இருந்தேன். வலைப்பதிவு எழுத ஆரம்பித்த காலம். யாராவது “நீங்க எழுதியது சூப்பர்” என்று மின்னஞ்சல் அனுப்பினால் நோபல் பரிசே விழுந்து விட்ட சந்தோஷம் ஏற்படும். ஒருநாள் என் வலைப்பதிவைப் பாராட்டி ஒரு பெண் வாசகர் எனக்குக் கடிதம் எழுதியிருந்தார். தானும் ஒரு எழுத்தாளர் என்று சொல்லியிருந்தார். கேட்கவா வேண்டும்?
“நான் மேல்கோட்டை செல்ல பெங்களூர் வருகிறேன்” என்றேன். உடனே அவர் கட்டாயம் தங்கள் வீட்டுக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பெண் ரசிகை, வீட்டுக்குக் கூப்பிட்டால் யாராவது மறுப்பர்களா? கொஞ்சம் யோசிக்கற மாதிரி பாவ்லா செய்துவிட்டு “சரி” என்றேன்.
பெங்களூருக்கு வந்துவிட்டு சில மணிநேரத்தில் மேல்கோட்டை செல்ல வேண்டும். பெங்களூர் வந்து இறங்கியவுடன் அந்த பெண் வாசகிக்கு போன் செய்து பேசினேன். “ஓ! நீங்க ஜே.பி. நகரில் இருக்கீங்களா? நாங்க கோரமங்களா… நீங்க அப்படியே பி.டி.எம் பக்கமா வந்தீங்கனா ஈஸி. உங்களுக்காக சக்கரை பொங்கல் செஞ்சு ரெடியா வெச்சிருக்கேன்” என்று சொன்னார். (அன்று ’கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா’). நான் அட்ரஸ் குறித்துக்கொண்டு ஆட்டோவைப் பிடித்து, விசாரித்துக்கொண்டே அவர்கள் வீட்டைச் சென்றடைந்தேன்.
அவர்கள் வீட்டுக்குப் போகும்முன் என்ன நடந்தது என்று சொல்லியாக வேண்டும். நான் போனில் பேசுவதை என் மனைவி கேட்டுவிட்டு “யாரு” என்றாள் சின்னதாக. கல்யாணம் ஆன புதுசு; அதனால் சின்னதாக. முதல் அனுபவம் என்பதால் எனக்குத் தெரிந்த வாசகி என்று நான் உண்மையைச் சொல்லிவிட்டேன்.
“என்ன டிரஸ் இது? ரிசப்ஷனுக்கா போறீங்க? நல்ல யங்கா டி. ஷர்ட், ஜீன்ஸ் போட்டுகிட்டு காஷுவலா போங்க” என்ற அவள் விருப்பப்படியே டிரஸ் மாற்றிக்கொண்டேன். “எங்க ஆத்து மனுஷா வீட்டுக்கு வரும்போது மட்டும் இப்படியெல்லாம் வந்துராதீங்க” என்று சொல்லி வழி அனுப்பினாள்.
வாசகியின் வீட்டுக்கு முன் ஏதோ மரம், பக்கத்தில் மளிகை கடை, எதிர்த்த மாதிரி போலீஸ் ஸ்டேஷன் என்ற முக்கியமான லாண்ட்மார்க்குகள் இருந்ததால் அவர்கள் வீட்டைக் கண்டுபிடிப்பது மிகச் சுலபமாக இருந்தது. வீட்டுக் கதவைத் தட்டியவுடன் வயதானர் ஒருவர் கதவைத் திறந்தார்.
“என்ன வேண்டும்?”
“நான் தேசிகன்” என்று சொன்னவுடன், “ஓ, நீங்க தானா அது?” என்று அதிர்ச்சியாகப் ( அதே யங்க் அதிர்ச்சி ! ) பார்த்துக்கொண்டு இருக்க, ஒரு அம்மணி வந்து “நீங்க…” என்று ஆரம்பித்தபோது மீண்டும் “தேசிகன்” என்றேன். இவங்கதான் வாசகியா என்று அதிர்ந்த மனதை, “சே, அப்படி இருக்காது, அவங்க பொண்ணாயிருக்கும், வருவாங்க” என்று அவசர சமாதானம் செய்தேன்.
“என்ன தேசிகனா? உங்க பேரைக் கேட்டதும் நீங்க ஏதோ வயசானவரா இருப்பீங்கன்னு நினைச்சேன். அதுவும் நீங்க சுஜாதாவோட நெருங்கிய நண்பர், ஆழ்வார், பத்தி எல்லாம் எழுதறீங்க” என்று அந்த அம்மணி அடுக்கிக்கொண்டே போக… ஊர்ஜிதமாகிவிட்டது, இவர்தான். இவரேதான். இவ்வளவு சின்னவனாக நான் இருப்பது ஏதோ தெய்வகுற்றம் போல் பார்த்தார். நல்ல வேளையாக உதட்டுக்கு மேலே மீசை இருந்தது. இல்லை என்றால் சர்க்கரைப் பொங்கலுக்குப் பதில் சாக்லேட், பிஸ்கட் கொடுத்துவிட்டு எதிர்த்த போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பியிருப்பார்.
அதே அதிர்ச்சி எனக்கும் இருந்தது. “உங்க பேரும் ரொம்ப யங்கா இருந்ததால நான் டி-ஷர்ட் எல்லாம் போட்டுண்டு வந்தேன் பார்க்க இப்படி இருக்கீங்களே, நான் என்ன பாவம் செய்தேன்?” நினைத்தேன், ஆனால் சொல்ல முடியவில்லை!
அப்புறமாவது நான் சும்மா இருந்திருக்கலாம். என்ன பேசுவது என்று தெரியாமல் மேஜை மீது வைத்திருந்த ஒரு ஃபேமலி போட்டோவைக் காண்பித்து “இதுதான் உங்க பொண்ணா?” என்றேன்.
“என்னது இது? இவ என் பேத்தி. பக்கத்தில் இருப்பதுதான் அவ குழந்தை” என்றார்.
இப்போது அவரும் பதிலுக்கு ஒரு கேள்வி கேட்பதுதானே சம்பிரதாயம்? கேட்டார்.
“திருச்சியில் எங்கே இருந்தீங்க?”
நான் சொன்ன பதிலைக் கேட்டு உடனே, “உங்க அப்பா நானி தானே?” என்றார் மகிழ்ச்சியாக.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. “ஆமாம்” என்று சொல்லிவிட்டு, அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று யூகிக்க முடியாமல் இருந்தபோது “நானி பையன் தேசிகனாடா நீ…அட, ஏண்ணா.. இவனைத் தெரியலை உங்களுக்கு? இவன் நானியோட பையன். என்னை உனக்குத் தெரியலையா? எப்படித் தெரியும்? நான் உங்காத்துக்கு வந்தபோது நீ சின்னப் பையன், டிரவுசர் போட்டுண்டு (நல்ல வேளை!) ஓடிண்டிருப்பே, உனக்கு என்னை நெனைவு இருக்காது…”
ஐயங்கார் எல்லாம் குளோஸ்டு கம்யூனிட்டி என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இவ்வளவு குளோஸா இருக்கும் என்று நினைக்கவில்லை. புரியாமல் “நீங்க யாருன்னு தெரியலையே?” என்று திரும்பவும் அப்பாவியாகக் கேட்டேன்.
“என்ன அப்படிக் கேட்டுட்ட.. ம்ம்… எப்படிச் சொல்றது? எங்க அம்மாவுக்கு உங்க பாட்டி அத்தை… அப்ப அம்மங்கா… நான் அம்மங்காவுட பொண்ணு.. ஒன்றுவிட்ட முறை பையன்” என்றார். என் அகராதியில் மாவடுக்கு அடுத்து அம்மங்கா சேர்ந்து கொண்டது.
அதற்குப் பிறகு தேசிகன் என்ற பெயரைச் சுருக்கி “தேசி” என்று மரியாதையாக கூப்பிட ஆரம்பித்தார். வயது கம்மியாகிவிட்டது இல்லையா?
கிளம்பும் போது “ஏய் தேசி, என்னைப் பற்றி எல்லாம் எழுத கூடாது.. எழுதினே நேராக உன் வீட்டுக்கு வந்து உன்னை அடிப்பேன்,” என்றார்.
எதற்குச் சொல்ல வருகிறேன் என்றால் பெயரில் என்ன இருக்கிறது என்று பலர் நினைக்கலாம், ஆனால் சில சமயம் உங்களை நீங்கள் அடையாளப்படுத்த இது தேவையாக இருக்கிறது.
-oOo-.-oOo-.-oOo-
சுஜாதா தேசிகன்
எழுத்தாளர் ‘கடுகு’ என்ற ’அகஸ்தியன்’ என்ற ’திரு பி.எஸ்.ரங்கநாதன்’ என் கதை ஒன்றை படித்துவிட்டு இவ்வாறு மெயில் அனுப்பியிருந்தார்:
“உங்கள் கதையைப் படித்தேன். இனிமேல், தேசிகன் என்ற பெயரைவிட, அத்துடன் கூட ஏதாவது சேர்த்துக்கொண்டு எழுதுவது பெட்டர். இல்லை என்றால் கிருஷ்ணமூர்த்தி, ராமசாமி போல இதுவும் பத்தோடு பதினொன்று அத்தோடு இதுவொன்று மாதிரி ஆகிவிடும்” என்று சொல்லிவிட்டு கூடவே சில பெயர்களை சிபாரிசு செய்துவிட்டு ”எனக்கு நீங்கள் “சுஜாதா தேசிகன்” என்ற பெயரை வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது” என்று பின்குறிப்பாகவும் ஆசீர்வாதமாகவும் எழுதியிருந்தார்.
-o0o- -oOo-
அனுபந்தம்
திருமணம் முடிந்து தீபாவளியோ, கார்த்திகையோ மாமனார் வீட்டில் கொழ கொழ என்று சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பு சாப்பிடும் போது மாமனார் காஷுவல் சிரிப்புடன்
“என் பெண்ணைத் தான் கல்யாணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தீங்களாமே.. மாமி சொன்னா” என்றார்
“ஆமாம். அவளுக்கு நிங்க வைத்த ’சுஜாதா’ என்ற அந்தப் பெயர் தான் காரணம்” என்றேன்.
- சுஜாதா தேசிகன்
19.8.2018

Comments

Post a Comment