Skip to main content

மண் சொல்லும் கதை


சம்பிரதாயத்தில் ஆழ்வார் என்றால் அது நம்மாழ்வாரைத்தான் குறிக்கும். ஆனால் சீர்காழிக்கு அருகிலிருக்கும் திருவாலி திருநகரியில் அப்படி இல்லை. அவர்களுக்கு ஆழ்வார் என்றால் அவர் திருமங்கை மன்னன் தான்.

‘திவ்யம்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘divine’ என்று அர்த்தம் கொள்ளலாம். தமிழில் தெய்வத்தன்மை. ஆழ்வார்களை நாம் திவ்யசூரிகள் என்று அழைக்கிறோம். அவர்கள் பாடிய பாசுரங்களை ‘திவ்ய’ பிரபந்தம் என்கிறோம். ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த ஸ்தலங்களை திவ்ய தேசம் என்கிறோம். நன்றாக கவனித்தால் ஆழ்வார்கள் சம்பந்தம் இருந்தால் மட்டுமே அது திவ்யமாகிறது!.

ஆழ்வார்களில் திவ்யமான ஆழ்வார் யார் என்றால் அது திருமங்கை ஆழ்வார் தான். மிகப் பல திவ்ய தேசங்களுக்கும் நேரில் சென்று சேவித்து அர்ச்சாரூபமாக இருக்கும் எம்பெருமானைப் பாடிய நம் மங்கை மன்னனின் அர்ச்சாரூபத்தை திருவாலி திருநகரியில் பார்க்கும்போது  அது நிஜ ஆழ்வாராகவே “உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்று கேட்கத் தோன்றும்.

சில மாதங்கள் முன்பு ஸ்ரீ.உ.வே. எம்பார் ராமானுஜன் ஸ்வாமி அவர்கள் முகநூல் வழியாக “திவ்யமான திருமங்கை ஆழ்வார் வாழும் திவ்யதேசமான எங்கள் ஊர் வேடுபறியை தரிசிக்க வர வேண்டும்” என்று இன்பாக்ஸில் ’சிறியதிருமடல்’ அழைப்பு ஒன்றை எனக்கு அனுப்பினார்.

டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட், வெயில், அலுவலக வேலை போன்ற சால்ஜாப்புகளை பதிலாக அனுப்பினேன். ஆனாலும் அவர் விடாமல் தொலைப்பேசியில் இரண்டு முறை “எப்போது வருகிறீர்கள்?” என்று கேட்டவுடன் கிளம்பிவிட்டேன்.

“மயிலாடுதுரையிலிருந்து ‘மங்கை மடம்’ பேருந்தில் வாருங்கள்” என்ற அறிவுரைக்கு ஏற்றார்போல் பேருந்துக்குக் காத்துக்கொண்டிருந்த நேரம். ஆகாசத்தில் மணியோசை கேட்டது. ‘அட என்ன தெய்வீகம்!’ என்று நினைக்கும்போது “பாப்பா பாப்பா” என்ற பைரவா பாட்டு அந்த மணியோசைக்கு பிறகு ஒலிக்கத்தொடங்க, பேருந்து நிலையத்தின் டிவி முன்பு கூட்டம் கூடி கூலிங்கிளாஸ் பாட்டை ரசிக்க ஆரம்பித்தது.

எட்டு மணிக்கு பேருந்து வந்த போது, எனக்கு முன் பல வயதானவர்கள் சுறுசுறுப்பாக முதலில் ஏறிக்கொண்டார்கள். “மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ” என்று அலறிக்கொண்டு பஸ் புறப்பட்டது. என் முன் அமர்ந்திருந்த கல்லூரிப் பெண்ணின் கையிலிருந்த புத்தகம் என்ன பாடம் என்று படிக்க முயன்றேன். ஆனால் அதற்கு மேல் வட்டமான ’தயிர்சாதம் மாவடு’ டிபன் பாக்ஸ் மறைத்துக்கொண்டது. அந்தப் பெண் இறங்கும்போது கவனிக்கமுடிந்ததில் ‘சுற்றுச்சூழல் அறிவியல்’. கல்லூரிக்கு அருகில் ஓடிய வாய்க்கால் தொடங்கி ஊர் முழுவதும் எங்கும் தண்ணீர் இல்லை. அதற்கு பதில் பிளாஸ்டிக் கேரிபேக்!


‘மங்க மடம்’ என்று அதில் இருக்கும் ’கை’யை எடுத்துக்காட்டி இறங்கிவிட்டார் கண்டெக்டர். “பத்து நிமிஷத்தில திருநகரி போயிடலாம்” என்ற ஆட்டோவில் திருநகரிக்குப் பயணமானேன்.


‘மங்கை மடம்’ என்பது திருமங்கையாழ்வார் காலத்தில் அவர் ஸ்ரீவைஷ்ணவர்கள் 1008 பேருக்கு ததியாரதனம்(உணவளித்த) செய்த இடம்!.  ததியாராதனத்திற்குத் தேவையான வாழையிலைகளை இலையமதுகூடம் என்ற இடத்திலும் காய்கறிகளை பெருந்தோட்டம் என்ற இடத்திலும் விளைவித்தார். இந்த இடங்கள் எல்லாம் பலியாகாமல் பாகுபலி காலத்திலேயும் இருப்பதற்கு காரணம் பெரிதாக இங்கே கார்ப்பரேட் கம்பெனிகள் வராதது தான்.

[ திருமங்கையாழ்வார் ததியாராதனை செய்த ஊர் என்று எப்படி ?
தேரடி தெருவில் யார் வீட்டு முன்பாக நடந்தாலும். வாங்கோ உள்ளே வந்து கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு போங்கோ என்று அன்பாக இருக்கிறார்கள். ]

திருமங்கையாழ்வார் ஏன் ததியாராதனம் செய்தார் என்ற சிறுகுறிப்பை கீழே தந்துள்ளேன். அடியேன்  ஆட்டோவில் பயணிக்கும் நேரத்தில் அதைப் படித்துமுடித்துவிடலாம்.


திருமங்கை ஆழ்வார் சிறுகுறிப்பு: 

சோழமண்டலத்தில் திருக்குறையலூர் என்ற சிற்றூரில் கள்ளர் குடியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், பௌர்ணமி, வியாழக்கிழமை அன்று இவ்வாழ்வார் பிறந்தார். இவருக்கு பொற்றோர்கள் வைத்த பெயர் ‘நீலன்’. இவரது வீரத்தைப் பார்த்து மகிழ்ந்த சோழ மன்னர் நீலனை தன் படைத்தளபதியாக ஆக்கியதுடன் திருவாலிநாட்டு மன்னனாகவும் ஆக்கினார்.

அதே சமயம் கபில முனிவரின் சாபத்தால் பூமியில் குழுதவல்லி என்ற பெயரில் பெண் ஒருத்தியின் அழகையும், அறிவையும் கேள்விப்பட்ட திருமங்கையாழ்வார் அவளை திருமணம் செய்ய விரும்பினார். குமுதவல்லியோ தன்னை திருமணம் செய்யவேண்டுமானால் ஓர் ஆசார்யனிடம்  பஞ்சசம்ஸ்காரம் ஆன ஸ்ரீவைஷ்ணவனாக இருக்க வேண்டும் என்ற நிபந்தைனை விதித்தார்.

நீலன் மீது இருந்த பயம் காரணமாக, பஞ்ச சம்ஸ்காரம் செய்துவைக்க யாரும் முன்வரவில்லை. மங்கை மன்னன் திருநறையூருக்குச் சென்று அங்கே எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் பிரார்த்தித்து அப்பெருமானிடமிருந்து பஞ்சசம்ஸ்காரம் பெற்றார். நேராக குமுதவல்லியிடம் சென்று திருமணம் செய்துக்கொள் என்றார்.

ஆனால் குமுதவல்லியோ, அது போதாது 1008 ஸ்ரீவைணவர்களுக்கு ஒரு வருட காலம் தினமும் ததியாராதனம் (அமுது படைக்க வேண்டும்) என்று மீண்டும் ஒரு நிபந்தனையை விதித்தார். ஆழ்வார் குமுதவல்லியிடம் கொண்ட காதல் மிகுதியால் அதற்கும் இசைந்தார்.

நிபந்தனையின் பேரில் அமுது படைக்கத் துவங்கினார். இதனால் அரண்மனையின் நிதிநிலை சரிந்தது. இதனால் சோழ மன்னனுக்குக் கப்பங்கட்ட முடியவில்லை. கோபமடைந்த அரசன் அமைச்சர்களுடன் தன் படையை அனுப்பி ஆழ்வாரைப் பிடித்துவரும்படி கூறினார். ஆழ்வார் அவர்களைப் புறமுதுகிட்டு ஓடசெய்தார். ஆழ்வாரின் வீரத்தில் வியந்த மன்னன் நேரில் சென்று நீ கப்பங்கட்டிவிடு என்று அறிவுரை கூறி, இதுவரை கப்பம் கட்டாததற்கு மூன்று நாள் சிறையில் அடைத்தார்.

மங்கை மன்னன் கனவில் தோன்றிய காஞ்சிபுரத்து எம்பெருமான் பொருளுதவி செய்வதாகக் கூறினார். திருமங்கையாழ்வார் சோழ மன்னனின் அனுமதிப்பெற்று படையினருடன் காஞ்சிபுரம் சென்ற ஆழ்வார், பெருமாள் கூறிய இடத்தில் தோண்டவும் பெரும் புதையல் கிடைத்தது அப்புதையலை வைத்து மன்னனுக்குக் கப்பம்கட்டியது போக மீதியை அமுது படைக்க வைத்துக்கொண்டார் இதனை அறிந்து வியந்த சோழ மன்னன் பணத்தைத் திருப்பிக் கொடுத்து அமுது படைக்க வைத்துக்கொள் என கூறினார். அந்தப் பணமும் தீர்ந்துபோக, தன் அமைச்சர்கள் துணையுடன் பணக்காரர்களிடம் வழிப்பறிக் கொள்ளையடித்து அமுது படைத்துக்கொண்டிருந்தார்.

ஒரு முறை பெருமாள் பிராட்டியுடன் மணக்கோலத்தில் வந்தார்.  ஆழ்வார் தன் படையினருடன் அந்தத் தம்பதிகளை மிரட்டி நகைகளைப் பறித்துக்கொண்டார். ஆனால் கால் அறுகாழியை(மெட்டி) மட்டும் பெருமாள் கழட்டவில்லை. ஆழ்வாரும் அறுகாழியைக் கழட்டும்படி மிரட்ட, “என்னால் முடியவில்லை முடிந்தால் நீயே கழட்டிக்கொள்” என்றார்.

ஆழ்வாரும் குனிந்து தன் பற்களால் விரலைக்கடித்து அறுகாழியை இழுத்து எடுத்தார். “எம் கலியனோ?”  என்று பெருமாள் ஆழ்வரைப் பார்த்து வியந்தார். பின்பு தாம் கொள்ளைகொண்டவற்றைச் சுமையாகக் கட்டி எடுக்கப் பார்த்தார். சுமையை அசைக்கவே முடியவில்லை. பெருமாளை நோக்கி, “நீ ஏதோ மந்திரம் செய்துள்ளாய்; அது என்ன மந்திரம், சொல்?” என்று கேட்டார். பெருமாள் ஆழ்வாரை அருகே அழைத்து, அவர் செவியில் திருஎட்டெழுத்தாகிய திருமந்திரத்தை உபதேசித்து அவரை ஆட்கொண்டார் என்கிறது குருபரம்பரை.


மேலே ஆழ்வார் கொள்ளையடித்து, உபதேசம் பெற்ற சம்பவத்தை மையமாக வைத்து நடத்தப்படும் உற்சவத்துக்கு பெயர் “திருவேடுபறி” உற்சவம். இன்றும் பல திவ்ய தேசங்களில் நடைபெறுகிறது உதாரணம் ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி. அங்கே நடைபெறும் வேடுபறி எல்லாம் மிமிக்கிரி நிகழ்ச்சி மாதிரியே. திருவாலி திருநகரியில் அடியேன் சேவித்த வேடுபறி ‘A class apart’

அன்றைய நாளில் அடியேன் அனுபவித்த காட்சிகள் - பிற்பகல் திருவாலியில் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயாருக்கும் ஸ்ரீவயலாலிமணவாளனுக்கும் விமர்சையாக கல்யாண உற்சவம், கோஷ்டி நடைபெற்றது. பின்னர் மாலை பொழுதுசாயும் வேளையில் பல்லக்கில் திருமணமான புதுமணத் தம்பதிகள் திருநகரிக்குப் பயணம் செய்கிறார்கள். .

திருவாலியிலிருந்து திருநகரி சுமார் 4 கிமீ. தூரம் ஆனால் போகும் பாதை? ( பார்க்க படம் )

பல்லக்கு நடந்து செல்லவில்லை, ஓடியது. ஊர் இளைஞர்கள் எப்படி அப்படி ஓடுகிறார்கள் என்று பிரமிப்பாக இருக்கிறது. அடியேனுக்கு அவர்கள் பின் ஓட முடியவில்லை - காரணம் -  வேகம், இருட்டு  மற்றும் சாலை முழுக்க சின்னச் சின்னக் கற்கள். செருப்பில்லாத கால்களுக்கு, கற்கள் குத்துவது  பழக்கப்பட்டபோது பல்லக்கு வயலுக்குள் இறங்கியது!

பாத்திக்கட்டி நாத்து நட்டு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. எல்லாம் பருத்திச் செடிகள். இவர்கள் ஓடுமிடமெல்லாம் பயிர்கள் நாசமாயின.

“ஐயோ செடிகள்  எல்லாம் நாசம் ஆகிவிட்டதே” என்றேன்.

பக்கத்தில் இருந்தவர், “பதிலுக்கு ஆழ்வார் பலமடங்காக கொடுத்துவிடுவார்..” என்றார் பதிலாக.

“இப்படி நாசம் செய்தால் வயலுக்கு சொந்தக்காரர் சும்மா இருப்பாரா?”

“அட நீங்க வேற... பெருமாள் அவர்கள் வயல் வழியாகச் செல்ல காத்துக்கொண்டிருக்கிறார்கள்”

நானும் வயலில் இறங்கினேன். கணுக்கால் வரை சேறு. காலை எடுத்து பல்லக்குடன் ஓட முற்பட்டேன். அப்போது தான் தெரிந்தது அது சேறு மட்டுமில்லை, நல்ல களிமண்ணும் கூட.

நான் ஓடுவதை யாராவது பார்த்திருந்தால் காதலியை ரொம்ப நாள் பிரிந்த ஹீரோ காதலியைப் பார்க்க ஓடும் ஸ்லோ மோஷன் காட்சி எஃபெக்ட் கிடைத்திருக்கும். பெருமாளைத் தேடினேன்... தூரத்தில் தீவெட்டிகள் தெரிந்தன.

களிமண்ணில் நடப்பதே இவ்வளவு கஷ்டமாக இருக்கிறது அதில் வேலை செய்யும் விவசாயிகள்? சற்று நேரத்தில் காலில் களிமண்ணினால் ஆன செருப்பு இலவசமாகக் கிடைத்தது. ஒரு பத்து நிமிடத்திற்குப் பிறகு அடுத்த வயலில் இறங்கினேன். அங்கே நெற்கதிர்கள் அறுத்துப்போட்டிருந்தார்கள்.

களிமண்ணுடன் நெற்கதிர்களும் ஒட்டிக்கொண்டு, அடியேன் பஞ்சகச்சத்துடன்...  அந்த தமாஷை இருட்டுதான் காப்பாற்றியது. சற்றுநேரத்தில் பெருமாள் ஏதோ ஒரு வீட்டின்முன் மரியாதையை வாங்கிக்கொண்டிருந்தபோது எப்படியோ அவரைக் கண்டுபிடித்து அவருடன் சேர்ந்துவிட்டேன்.

திருமணங்கொல்லை என்ற இடத்திற்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்து மீண்டும் நடைபயணம் திருநகரிக்கு... கொள்ளையடிக்க ஆழ்வாரை அழைத்துக்கொண்டு வர...

திருநகரியில் ஆழ்வார் கையில் வேலுடன், தன் ஆடல்மா குதிரையின் மீது அமர்ந்துக்கொண்டிருக்க, அங்கே ஆழ்வாரின் சிஷ்யர்கள் நீர்மேல் நடப்பான், தாளூதுவான், தோலா வழக்கன், நிழலில் மறைவான் போன்றவர்கள் ஒற்றர்களாக வந்து ஆழ்வாரிடம் புதுமணத் தம்பதிகள் நிறைய ஆபரணங்களுடன் இருக்கிறார்கள் கொள்ளை அடிக்கலாம் என்று சொன்னவுடன் அதிவேகமாக ஆழ்வார் புறப்படுகிறார்!.

பெருமாள் வேகத்திற்கு அவர் பின்னால் ஓடமுடியவில்லை. ஆடல்மா குதிரைக்கு ஈடுகொடுக்க முடியுமா?

திருமணங்கொல்லையில் வேடுபறி உற்சவத்தைக் காண அக்கம்பக்கத்து ஊர்களிலிருந்தெல்லாம் குழந்தைகுட்டிகளுடன் மக்கள் நள்ளிரவு 12.30 மணிக்கே கூடிவிட்டார்கள்.

“இந்த சைடுல வருவார், அப்படியே சுத்து சுத்துவார்”

“இங்கிருந்து பார்த்தா சரியா தெரியாது”

“அந்த மண்டபத்தில தான் ஆழ்வார் இருப்பார்... அந்த மண்டபம் பெருமாளுக்கு..”

சற்றுநேரத்தில் வரிசையாக சுமார் 500 தீப்பந்தகள் வரத்தொடங்கியபோது the crowd got electrified !

வேடுபறிக் காட்சிகளை விவரிக்க இயலாது. அதை அங்கே கண்டுகளிக்க வேண்டும். அடியேன் அதை பத்து நிமிட வீடியோவாகத் தொகுத்துள்ளேன். (பார்க்க வீடியோ)



திருமணங்கொல்லையில் தெய்வங்களுக்கு அரசான ஶ்ரீமந் நாராயணன் பெரிய பிராட்டியாருடன், புட்களுக்கும் திருவடிக்கும் அரசான ஶ்ரீகருடாவார் என்ற பெரிய திருவடி மீது அமர்ந்து மரங்களுக்கு அரசான திருஅரசமரத்தின்கீழ் மந்திரங்களுக்கு அரசான திருமந்திரத்தை (திரு எட்டெழுத்து மந்திரத்தை) ஆலிநாட்டுக்கு அரசான ஶ்ரீ திருமங்கைமன்னனுக்கு உபதேசம் பெற்ற இடத்தில்(திருமணங்கொல்லை) அடியேனும் இருந்தேன் என்பதே பெரிய பாக்கியமாகக் கருதுகிறேன்.


அங்கே வேடுபறி உற்சவத்தின் போது கோஷ்டியில் ‘வாடினேன் வாடி’ என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்தை சேவிக்கும் போது ஆழ்வாரே உருகிப் பாடுகிறாரோ என்ற பிரமிப்பு ஏற்படுகிறது. அதுவும் “நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்று சொல்லும்போது கூஸ்பம்ஸ்.

எட்டு எழுத்து மந்திரத்துக்கு அப்படி என்ன விஷேசம் ? பெருமாளுக்கு பல பெயர்கள் உண்டு. அவைகளுக்குள் முக்கியமான பெயர். நாராயணன். அஜாமிளன் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாராயணன் என்ற பெயரைத் தான் ஆழ்வார்களும் ஆசாரியர்களும் விரும்பினார்கள் என்று பிள்ளைலோகாசாரியர் முழுக்ஷுப்படியில் தெரிவிக்கிறார்.

‘வாண்புகழ் நாரணன்’, ‘வாழ்புகழ் நாரணன்’ என்கிறார் நம்மாழ்வார். ‘நலந்திகழ் நாரணன்’ என்கிறார் பெரியாழ்வார். ‘எட்டெழுத்தும் ஓதுவார்கள் வல்லார் வானமாளவே’ என்கிறார் திருமழிசை.

திருமங்கை மன்னன் “நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்”. கண்டுகொண்டது மட்டுமல்லாமல் அந்த நாமத்தை சேவித்தால் என்ன நன்மை கிடைக்கும் என்றும் பட்டியலிடுகிறார்.
(நாராயணன் என்னும் நாமம் பற்றி தனியாக கட்டுரை ஒன்று எழுதலாம்.)

''குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுயர் ஆயினவெல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள் விசும்பருளும்
அருளொடு பெருநிலமளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
நாராயணா என்னும் நாமம்''

அந்தச் சொல்லை கைகண்டு கொண்டுவிட்டால் போதும். நமக்கு நல்ல குலம் அமையும்; செல்வம் பெருகும். அடியவர்களுக்கு ஏற்படும் துயரங்கள் எல்லாம் மட்டமாகும் (நிலந்தரம்) பரமபதத்தைக் காட்டும். பெற்ற தாயைவிட அதிகமாகச் செய்யும். நாராயணன் என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் கண்டுகொண்டால் போதும். இதெல்லாம் உத்தரவாதம் என்கிறார்.

வேடுபறி உற்சவம் முடிந்தபின் கையிலிருந்த காகிதத்தில் சிறிது மண்ணை மடித்து பையில் வைத்துக்கொண்டேன். அந்த இடம் திருமந்திரம் விளைந்த மண். (பார்க்க படம்).  ரகசியம் விளைந்த மண் என்று ஒன்று இருக்கிறது ஸ்ரீரங்கத்தில் அதை பற்றி பிறகு ஒரு கட்டுரையில் விரிவாக எழுதுகிறேன். ]

திருமங்கையாழ்வார் அழகை அனுபவித்து ஸ்ரீ மணவாள மாமுனிகள் "வடிவழகு" என்ற சூர்ணிகையைப் பாடுகிறார். அதை இந்தப் பதிவில் ஸ்ரீராம பாரதியின் உறையுடன் (ஒலி ஒளி வடிவில்) மீண்டும் உங்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.



ராமானுச நூற்றந்தாதி இரண்டாம் பாசுரத்தில்

“குறையல் பிரான் அடிக்கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் மிக்க சீலம் அல்லால் உள்ளாது என் நெஞ்சு” என்பதை குறிக்கும் விதமாக

திருமங்கை ஆழ்வார் மார்பில் நம்மாழ்வாரும் பாதத்தில் ஸ்ரீராமானுஜரும் என இந்த ஆழ்வார் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.

திருமங்கையாழ்வார் மேலும் சில குறிப்புகள்: 

நம்மாழ்வாரின் பாசுரங்களில் அவர் பெருமாளிடம் கொண்டுள்ள மிகுதியான அன்பும், அச்சாவதாரத்தில் அவர் கொண்டுள்ள பேரார்வமும் நமக்குத் தெரிகிறது. அதுபோன்றே திருமங்கை மன்னனின் பிரபந்தங்களே, மற்ற ஆழ்வார்களின் பிரபந்தங்களைக் காட்டிலும், நம்மாழ்வாரின் பிரபந்தங்களைப் பெரிதும் ஒத்திருப்பதால் அவை ஆறங்கமாக விளங்குகின்றன என்று ஸ்ரீ மணவாள மாமுனிகள் உபதேச ரத்தின மாலையில் அனுபவிக்கின்றார்.

"மாறன் பணிந்த தமிழ் மறைக்கு மங்கையர்கோன்,
ஆறங்கம் கூற"
உபதேச ரத்தின மாலையில்(பாடல் 9)

இதையே வேதாந்த தேசிகன் "அறிவு தரும் பெரிய திருமொழி.." என்று தேசிக பிரபந்தத்தில் ( பாடல் 379 ) ஆனந்தப்படுகிறார்



 திருமந்திர உபதேசம் பெற்றதை ஸ்ரீ ராமானுஜர் (பெரிய திருமொழி தனியன் - 2) "மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள்
மங்கையர்கோன்" அனுபவிக்கிறார்.

திருமங்கையாழ்வார் திவ்ய பிரபந்தத்தில் அதிகம் எண்ணிக்கையுள்ள பாடல்களைப் பாடினவர். அதிகம் வைணவத் தலங்களுக்குச் சென்று தரிசித்தவர். வடநாட்டில் தேவப் பிரயாகை, நைமிசாரண்யம் பத்ரிகாசிரமத்திலிருந்து துவங்கி தென்னாட்டில் அத்தனை கோயில்களையும் தரிசித்துப் பாடியுள்ளார். அவர் சென்ற வரிசையிலேயே அதை எல்லாம் பாடியுள்ளார் என்பது மேலும் சிறப்பு.

இவ்வாறு விரைவாகப் பாடும் அகக்கவியாகவும், இனிமை ததும்பப் பாடும் மதுரகவியாகவும், விரிவான அளவில் பாடும் வித்தாரக் கவியாகவும், இரதபந்தம் பாடும் சித்திரக் கவியாகவும் இருப்பதால் "நாலுகவிப் பெருமாள்" என்று அழைக்கப் பெற்றார் என்கிறது திவ்விய சூரிசரிதம் பாடல் 9.

திருமங்கையாழ்வார் மற்றைய ஆழ்வார்களைக் காட்டிலும் பலவகை யாப்புகளைக் கையாண்டுள்ளார். பெரிய திருமொழியில் 108 பாடல்களில் 68 பாடல்கள் ஆசிரிய விருத்தத்தில் அமைந்தவை, கலி விருத்தத்தில் அமைந்தவை 15; கொச்சகக் கலிப்பாவால் அமைந்தது 18, கலிநிலைத் துறையால் அமைந்தவை 9, ஆசிரியத் துறையால் அமைந்தவை 3, வெண் துறை, வஞ்சி விருத்தம், கலித்தாழிசையில் ஒன்று. திருக்குறுந்தாண்டகம் 20 பாடல்களில் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்தினால் அமைந்தவை. திருநெடுந்தாண்டகம் 30 பாடல்களும் எண்சீர் ஆசிரிய விருத்தத்தினால் ஆனவை. திருவெழு கூற்றிருக்கை நிலைமண்டில ஆசிரியப்பாவால் ஆகியது. சிறிய/பெரிய திருமடல்கள் கலிவெண்பாவினால் ஆனது).


சில பயண குறிப்புகள் 

எனக்கு இந்த அனுபவத்தை சாத்தியாக்கியதற்கு காரணம் ஸ்ரீஉ.வே. எம்பார் ராமானுஜன் ஸ்வாமி.  அவர்களுக்கு 76 வயது!. கோயிலில் முதல்தீர்த்தக்காரர். இந்த வயதிலும் சுறுசுறுப்பாக பல பாகவதர்களுக்கு உதவி செய்கிறார். தன் கையால் காபி கலந்து கொடுக்கிறார். சில இடங்களில் படம் எடுக்கக் கூடாது என்றால் அதை மென்மையாகச் சொல்கிறார். இனிமையாகப் பேசுகிறார். நான் கவனித்த ஒன்றைப் பதிவு செய்ய வேண்டும்.

திருவாலியில் கோஷ்டி நடந்து முடிந்த பின்னார். பிரசாதம் வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். பொதுவாக கோஷ்டி முடிந்த பின் தான் மற்றவர்களுக்கு பிரசாதம். அவர்களுக்கு தான் முதல் மரியாதை. அன்று கோஷ்டியில்  இல்லாத ஒருவர் தனக்கும் கொஞ்சம் பிரசாதம் வேண்டும் என்று கைநீட்டினார். பொதுவாக மறுத்துவிடுவார்கள். ஆனால் அவருக்கு கொஞ்சமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் “இன்னும் கொஞ்சம் வேண்டும்” என்றார். மறுக்கப்பட்டது. இதை தூரத்திலிருந்து கவனித்துக்கொண்டு இருந்த எம்பார் ராமானுஜன் ஸ்வாமி பிரசாதம் கொடுத்துக்கொண்டு இருப்பவரைக் கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னார். பிறகு மறுக்கப்பட்டவருக்கு கை நிறைய பிரசாதம் வழங்கப்பட்டது.

வேடுபறி முடிந்து மறுநாள் ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள், தாயார் சேர்த்தி சேவித்துவிட்டு, கத்யத்ரயம் கோஷ்டியில் இருந்தேன். கோஷ்டிக்கு கல்கண்டு பிரசாதம் விநியோகித்தார்கள். என் பக்கத்தில் இருந்தவர் வாங்கிக்கொண்டார். நான் சும்மா இருந்தேன்.  “ஸ்வாமி நீங்களும் வாங்கிக்கொள்ளுங்கள்” என்றார் பக்கத்தில் இருந்தவர். நான் கை நீட்டினேன். கல்கண்டைக் கையில் எடுத்தவர் என் திருமண்காப்பைப் பார்த்து நகர்ந்துவிட்டார்.

திருநகரியில் கோயில் கிணற்றிலிருந்து பாட்டி தந்த அந்த கல்கண்டுத் தண்ணீரை விட இந்த கல்கண்டு இனித்துவிடப் போகிறதா என்ன ?

Comments

  1. அருமையா எழுதியிருக்கீங்க, தேசிகன். எனக்கு இவ்வேடுபறி பற்றித் தெரியும் தான். ஆனா உங்க நடையின் சுவாரசியம் இந்த நீண்ட இடுகையை முழுதும் வாசிக்கத் தூண்டியது. நன்றி.

    ReplyDelete
  2. Good experience and information

    ReplyDelete
  3. ராம்குமார்August 17, 2023 at 2:14 PM

    திரு மண் பற்றி பேசி திருமண் விஷயத்தில் முடித்தீரே. ஆலிநாடன் அருளட்டும்

    ReplyDelete

Post a Comment