Skip to main content

நினைவு அலைகள் – ஒரு வரலாற்றுப் பொக்கிஷம்

திருவேங்கிமலை சேஷ செளந்தர ராஜன், TSS Rajan (1880–1953). வடகலை ஐயங்கார். ஸ்ரீரங்கத்தில் வளர்ந்து, சென்னை ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம், பிறகு பணி நிமித்தம் ரங்கூனுக்குச் சென்று கஷ்டப்பட்டு, மேல்படிப்புக்காக லண்டன். இந்தியா வந்த பிறகு ஏழைகளுக்கு மருத்துவம், ராஜாஜியுடன் நட்பு, காந்தியுடன் பழக்கம். உப்பு சத்தியாகிரம் - 18 மாதம் சிறை, மந்திரிப் பதவி, விவசாயம் என்று அவர் வாழ்க்கைப் பயணம் முழுக்க புஃபே சாப்பாடு மாதிரி வரலாற்றுக் குறிப்புகள் பரவிக் கிடக்கின்றன.

“Autobiography is probably the most respectable form of lying” என்பார்கள். பழைய சுயசரிதை என்றால் அதன்  ‘இங்ரெடியண்ட்ஸ்’ என்று நாம் நினைப்பது - கொஞ்சம் பொய், நிறைய சலிப்பு, புரியாத தமிழ். ஆனால் ராஜன் அவர்களின் சுயசரிதை அப்படி இல்லை. இன்று வந்த தினத்தந்தி மாதிரி எல்லோரும் படிக்கக் கூடிய தமிழில் எளிமையாக இருக்கிறது. பொய் கலக்காத அக்மார்க் சுயசரிதை. டைரிக் குறிப்பு போல இல்லாமல்,  ‘நினைவு அலைகளாக’ அவர் அனுபவத்தைக் கொண்டு பல  ‘ஸ்ரீரங்கத்து தேவதைகளை’ உருவாக்க முடியும்! இதுதான் இந்தப் புத்தகத்தின் Unique Selling Point.

வெள்ளை கோபுரம் - 200 ஆண்டுகளுக்கு முன்

ஸ்ரீரங்கத்தில் தன் பள்ளி நாட்களை விவரிக்கும் இடங்களில் ஒரு குழந்தையாக எழுதியிருக்கிறார் ராஜன். வாத்தியார் ஒருவர் அவரை அடித்துக்கொண்டே இருப்பது, வெள்ளைக் கோபுரம் கருப்பாகக் காட்சியளித்தது, அதில் ஒரு பொந்தில் கிளியைப் பார்க்க ஏணி போட்டு பொந்தில் கைவிட, அது கடிக்க, ரத்தம் வந்த அனுபவம். வகுப்பிலிருந்து வந்து கிளியைப் பார்க்க அடிக்கடி “சார் ஒண்ணுக்கு” என்று சாக்கு சொல்லுவது. ஷேசராயர் மண்டபத்தில் இருக்கும் குதிரையின் மீது ஏறி சவாரி செய்து பள்ளிக்குத் தாமதமாகப் போனது என்று ஸ்ரீரங்கத்தை முழுவதும் அனுபவித்திருக்கிறார்.

பள்ளிக்கூடம் என்றால் மேஜை நாற்காலி, பலகை என்று நினைப்போம். ராஜன் படித்த காலத்தில் மணல் மீது உட்கார்ந்து, மணல் மீது எழுதும் பள்ளிக்கூடம். சித்திரைத் தேர் மீது ஏறும் படிக்கட்டுக்குக் கீழே நிழலாக இருக்கும் இடம்தான் பள்ளிக்கூடமாம்.

நூறு வருடத்துக்கு முன்பே ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசிக்குப் பலர் கடைவிரித்திருக்கிறார்கள். பட்டாணியும் வேர்க்கடலையும் வறுக்கும் வாசனை ராஜனைச் சுண்டி இழுக்க பட்டாணிக் கடையைச் சுற்றிசுற்றி வந்திருக்கிறார். வீட்டிலிருந்து பாட்டிக்குத் தெரியாமல் நெருப்பும் தண்ணீரும் கொடுத்து பட்டாணிக்காரருக்கு உதவி செய்தும் ஒரு பிடி பட்டாணி கூடக் கிடைக்கவில்லையாம். வீட்டில் கேட்டால் வாங்கித் தர மாட்டார்களாம். ஏன் என்ற காரணத்தை இப்படிக் கூறுகிறார்.

“ஸ்ரீரங்கம் பிராமணர்கள் பெருத்த ஊர். பூணூல் போடாத சிறுவர்களும், கல்யாணமாகாத சிறுமிகளுமே வறுத்த பட்டாணியை வாங்கலாம். மற்றவர்கள் வாங்க மாட்டார்கள். வைதீகம் பழுத்த வீடுகளில் பட்டாணியைத் தொடமாட்டார்கள்.”

கடைசியில் அவர் பட்டாணி எப்படிச் சாப்பிட்டார் என்ற சுவாரசியமான கதை புத்தகத்தில் உள்ளது.

ராஜன் குடும்பம் ஏழ்மையில் இருந்திருக்கிறது. அஹோபில மடத்தில் இரண்டு அறைகளில் வாடகை இல்லாமல் குடித்தனம் நடத்தியிருக்கிறார்கள். புரட்டாசி உற்சவத்தின்போது அஹோபில மடத்தில் இருக்கும் ஸ்வாமி தேசிகன் வெளியே வரக் கூடாது என்ற நீதிமன்ற உத்தரவு பற்றிக் குறிப்பிடும் ராஜன், யாரோ ஒரு வெள்ளைக்காரத் துரை சொன்ன தீர்ப்பை வேதவாக்காக எடுத்துக்கொண்டு இரு கலையாரும் கட்டுப்படுவது வேடிக்கை என்கிறார்.

“ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியப் பரம்பரையில் இருகலையார்களும் இருந்திருக்கிறார்கள். இவ்வளவு ஒற்றுமை இருந்தும் ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம் போன்ற பெரிய விஷ்ணு ஷேத்திரங்களில் இரு கூட்டத்தினருக்கும் விவாதம் ஓயாமல், நீதிமன்றத்து நடவடிக்கைகள், கிரிமினல் வழக்குகள், சிவில் வழக்குகள்... வக்கீல்களுக்கும் இதனால் நல்ல வருமானம். கோர்ட்டுகளுக்கு வேலையும் வருமானமும். கட்சிக்காரர்களுக்குப் பொய்ச்சாட்சிகள்... வைஷ்ணவ மதமோ கொள்கையோ, இந்து மதமோ ஆசாரமோ இன்னதென்று கனவு காண்பது கூட இல்லாத... முஸ்லீம், கிறிஸ்துவ நீதிபதிகளிடத்து நியாயம் கோருவதற்கும் பின்வாங்கமாட்டார்கள். இந்த கோஷ்டிச் சண்டைகளில் பெரும்பாலோர் பழையகாலத்து மடிசஞ்சிகள்.”

புரட்டாசி உற்சவத்தில் கிடைக்கும் புளியோதரைக்காக இரண்டு மணி நேர ‘சேவா காலத்’தையும் கேட்டுக்கொண்டு இருந்திருக்கிறார். அதேபோலக் கோயிலில் கிடைக்கும் தோசை, வடை பிரசாதத்துக்கு ஆசைப்பட்டு, ஆழ்வார், ஆசாரியர்களை தோளில் தாங்கும் ‘ஸ்ரீபாதம் தாங்குவார்(’1) ஆக
( ஸ்ரீபாதம் தாங்குவாருக்கு உத்திரவாதமாக தீர்த்தம் பிரசாதம் கிடைக்கும்!) இருந்திருக்கிறார்.  அதனால் இவரை ‘ஆழ்வார் தூக்கி’ என்று பள்ளியில் ஏளனம் செய்திருக்கிறார்கள்.



ஒரு இடத்தில் அவர் தனக்கு “நல்ல தமிழ் அறிவு பெருப்பாலும் இளவயதில் பாசுரங்களைக் கேட்ட பழக்கத்தினால் உண்டானது” என்கிறார். எழுத்தாளர் சுஜாதாவும் இதையே சொல்லியிருக்கிறார். தமிழை வளர்ப்பதற்கு பக்தி இலக்கியம்தான் சரியான வழி என்று தோன்றுகிறது.
‘குமாஸ்தாவாக ஆனால் போதும்’ என்று இவர் அப்பா சொல்ல, இவரோ சென்னை ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து,  ‘ராகிங்’ அனுபவித்திருக்கிறார். ’ராகிங்’ நூற்றாண்டுக்கு முன்பே இருந்திருக்கிறது என்றும், இன்றும் தொடர்கிறது என்றும் தெரிகிறது. வெள்ளைக்காரர்களால் நம் நாட்டுக்கு வந்த இன்னொரு கெட்ட விஷயம் இது.

மருத்துவப்படிப்பு முடித்த பின் அரசாங்கக் கடனை அடைக்க ரங்கூனுக்கு (பர்மா) மனைவி குழந்தைகளுடன் சென்று, அங்கே மருத்துவமனையில் பலர் சாகக் கிடக்கும் இடத்தில்  “இன்னிக்கு எவ்வளவு பேர் செத்தார்கள்?” என்று கணக்குப் பார்க்கும் வேலை. மலம், மூத்திரம் போவதற்கு வசதியாக ஓட்டை போட்ட மரக் கட்டிலில் படுத்துக்கொண்டு இன்னிக்கோ நாளைக்கோ என்று இருக்கும் நோயாளிகள் கீழே மலமும் மூத்திரமும் ஓடிக்கொண்டு இருக்க... என்று விவரிக்கும் இடங்கள் எல்லாம் நம்மைக் கலங்கச் செய்கின்றன.

தன் கல்யாணம் வெகு விமர்சையாக நடக்கவேண்டும் என்று கனவு காண்கிறார். தினமும் பெண் வீட்டுக்குமுன் பந்தல் போடுகிறார்களா என்று பார்த்துக்கொண்டு இருக்க, பெண் வீட்டாரோ கல்யாணத்துக்கு ஒருநாள் முன்பு கூடப் பந்தல் போடவில்லையாம். பெண் வீட்டுக்குச் சென்றபோது ‘யார், மாப்பிளையா?’ என்று தூக்கக் கலக்கத்துடன் இவரை வரவேற்றிருக்கிறார்கள். பெண் லட்சணமாக இருந்தது மட்டும்தான் ஒரே ஆறுதல்!

மருத்துவ மேல்படிப்புக்கு லண்டனுக்கு கப்பல் பயணம், கிடைத்த நண்பர்கள், சாப்பாடு என்று பயணக் குறிப்புக்களை மிக விரிவாக எழுதியுள்ளார்.

சைவம் என்பதால் இவர் கப்பலில் அதிகம் சாப்பிடவில்லை. கிட்டதட்ட உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். தற்போது உண்ணாவிரத மகிமையைப் பலர் எழுதுகிறார்கள் ஆனால் 1947ல் அதுவும் மருத்துவராக இவர் எழுதியிருப்பது மிகுந்த நம்பிக்கையைத் தருகிறது.

“மனிதன் உடல் வளர்ப்பதற்காகத் தேவையான உணவு மிகவும் சொற்பம். அரசனாக இருந்தாலும், ஆண்டியாக இருந்தாலும் சற்றேறக்குறைய ஒரே அளவுதான் உண்ணக்கூடும். பொருள் உடையவன் பல வகைப்பட்ட உணவை அடிக்கடி சாப்பிட்டபோதிலும் அது நாவிற்கு மட்டிலும் ருசிப் பழக்கம் அதிகரிப்பதைத் தவிர வேறு குணம் இல்லை. உண்ணாவிரதம் இருப்பது மனிதர்களுக்கு ஏற்பட்ட பழக்கங்களில் ஒன்று. அது மதக் கோட்பாடு, அநுஷ்டானம் இவைகளையொட்டிக் கையாளப்பட்டு வருகின்றது. பட்டினி சுக வாழ்வு தரும் என்பதை இன்னும் உலகம் அறியவில்லை. வியாதியின் நிமித்தம் மருத்துவர்கள் உணவைக் குறைத்து வைத்தியம் செய்வது எல்லோருக்கும் தெரிந்ததுதான். உடல் உழைப்பு அதிகமின்றி மூளை வேலை அதிகம் உள்ளவர்களுக்குக் குறைந்த உணவு தேக ஆரோக்கியத்தை நிலை நிறுத்துவதோடு, மற்ற நோய்கள் வராமலும் பாதுகாக்கும்.”

லண்டனில் தெருக்கள் குப்பையாகவும், எல்லோரும் எச்சில் துப்பிக்கொண்டும் இருந்தார்கள் என்று அவர் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கிறது. லண்டனில்  ‘கறுப்பர்கள்’ நடத்தப்பட்ட விதம் பற்றியும் எழுதியுள்ளார். ஓர் ஆங்கிலேயத் தம்பதியின் நட்பு கிடைக்கிறது. பரஸ்பரம் உதவி செய்துகொள்கிறார்கள்.

திரும்பி இந்தியா கிளம்பும் முன் அந்த ஆங்கிலப் பெண்  “எனக்குக் கல்யாணம் ஆகாமல் நீங்களும் தனியாளாக இருந்தால் உங்களைத்தான் கல்யாணம் செய்துகொண்டிருப்பேன்” என்று சொன்ன பகுதிகள் ரசமானவை. இந்திய விடுதியில் நடக்கும் ரகசியக் கூட்டம் ‘ஹேராம்’ படத்தின் சில காட்சிகளை நினைவுபடுத்தியது.
இந்தியா வந்த பிறகு ‘கடல் தாண்டி’ சென்ற காரணத்துக்காக இவரை ஜாதிப் பிரஷ்டம் செய்து, பிராம்மண்யத்தை இழந்துவிட்டார் என்று கூறுகிறது ஐயங்கார் சமூகம்.

“என் சுற்றத்தார், உறவினர்,பெற்றோர்கள் உட்பட யாரும் என்னைத் தங்கள் வீட்டிற்கு அழைக்கவோ நான் தங்கியிருக்கும் இடம் வந்து என்னுடன் உண்டு களிக்கவோ மனம் துணியவில்லை. எங்கே தங்களையும் ஜாதியை விட்டு ஊரார் நீக்கிவிடுவார்களோ என்ற பயம். வந்து பார்த்துப் பேசிவிட்டுப் போவதோடு நின்றுவிட்டார்கள். எனக்கு என்ன செய்வதென்று விளங்கவில்லை” என்று தன் கொடுமையான அனுபவத்தை விவரிக்கிறார்.

இன்று ஸ்ரீரங்கத்தில் வீட்டுக்கு ஒருவர் அமெரிக்காவிலோ, சிங்கப்பூரிலோ, லண்டனிலோ இருக்கிறார்கள். ஜீயர், அரையர் வீட்டில் கூட பலர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார்கள். ஏன், பெருமாளே கூட பிட்ஸ்பர்க் பார்த்துவிட்டார்.

அந்தக் காலத்தில் பரண்யாசம்(2) செய்துகொள்ள வேண்டும் என்றால் ஜீயரை சேவித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தகவல் எனக்கு புதுசு. ராஜன் அவர்களின் அப்பா அஹோபில ஜீயரிடம் தனக்கு பரண்யாசம் செய்துகொள்ள விண்ணப்பிக்க, “உன் மகன் கடல் தாண்டிவிட்டான், நீயும் உன் மகனுடன் சேர்ந்து இருக்கிறாய்” என்று ஜீயர் மறுத்துவிட, ராஜனின் அப்பா ஜீயரை கண்டபடித் திட்டிப் பேசிவிட்டு வந்துவிடும் இடங்கள் ஆச்சரியமானவை.

ஒதுக்கிவைத்த காலகட்டத்தில் இவர் பெண்ணுக்குத் திருமணம் செய்ய முற்படுகிறார். ஆனால் வாத்தியார், சமையல் செய்பவர் யாரும் கிடைக்கவில்லை. பணம் அதிகம் கொடுத்து ஏற்பாடு செய்கிறார். இவர் வீட்டுக்கு வந்த வாத்தியார் பிரம்மாவுக்கு ‘லண்டன் பிரம்மா’ என்ற பட்டப்பெயர் கிடைக்கிறது; சமையல் செய்ய வந்தவருக்கு ‘லண்டன் சண்முகம்’ என்ற பெயர். இவர் உதவியால் சித்திரை தெருவுக்கு வந்த புது வேதாந்த தேசிகனுக்கு ‘லண்டன் தேசிகன்’ என்ற திருநாமம்!

எந்தக் காலத்திலேயும் மாமியார், மருமகள் மனஸ்தாபம் இருந்திருக்கிறது. கணக்கு ராமானுஜன் வாழ்கையிலும் இதைப் பார்க்கலாம். ராஜன் அதை முழுக்க விவரிக்காவிட்டாலும், சில இடங்களில் தெரிகிறது. ராஜனின் பெண் கல்யாணத்துக்கு அவருடைய சொந்த அம்மாவே வராததற்குக் காரணம் ‘தன் மனைவி மீது இருந்த பொறாமை’ என்கிறார்.

‘கலிகால அயோத்தி’ என்ற அத்தியாயம் முழுவதும் இவர் அயோத்திக்குச் சென்ற யாத்திரை பற்றி எழுதியிருக்கிறார். சில விஷயங்கள் மிகத் தைரியமாக சொல்லுகிறார் உதாரணத்துக்கு ஒரு பகுதி:

“அயோத்தியில் அவசியம் தரிசிக்கவேண்டிய இடம் ராம ஜனன ஸ்தானம். ..பிற்பகல் அங்கே சென்றேன். ...ராமன் அவதாரம் செய்த ஸ்தலத்தைத் தரிசிக்க வேண்டியது எனது கடமை என நினைத்து. ...ஊருக்கு வெளியே சுமார் ஒரு மைல் தூரம் சென்றதும் ஒரு மசூதி தென்பட்டது. அதைக் கடந்து சென்று அதன் பின்புறத்தில் பத்தடிச் சதுரமுள்ள ஒரு சிறு கட்டடத்தைப் பார்த்தேன். அந்த அறையின் தளம் பூமி மட்டத்திற்குக் கீழே இறக்கிக் கட்டப்பட்டு இருள் மண்டிக் கிடந்தது. ...இந்த அற்பமான இருட்டில்தான் தசரதச் சக்கரவர்த்தியின் மனைவி ராமனை ஈன்றெடுத்து வளர்த்திருப்பாள்? பார்ப்பவர் நகைக்கும்படியான ஓர் இடத்தில்... என்னை அறியாமலே என் கண்களில் நீர் ததும்பியது. ...ஒவ்வொரு நூற்றாண்டிலும் நமது நாட்டில், நமது மதத்தில் பிறந்து வளர்ந்துவந்த நம் சகோதரர்களைக் கோடிக்கணக்காக வேறு மதத்திற்குப் புகச் செய்து இழந்தோம். இழந்தது மட்டுமல்லாமல், அவர்களே நம் கோயில்களையும், புண்ணிய க்ஷேத்திரங்களையும், தெய்வங்களையும் ஹதம் செய்ய, நாம் பயந்து வாளா இருந்து வந்திருக்கிறோம். வட இந்தியாவில் எங்கே சென்று பார்த்தாலும், நம் புனித ஸ்தலங்கள் இடிக்கப்பட்டு, பாழாக்கப்பட்டு, அந்த இடத்திலேயே மசூதிகள் கட்டப்பட்டு... இவ்வளவு கொடுமைக்கு ஆளாகியும், நாம் துவேஷம் கொள்ளாமல் கூடியமட்டும் சேர்ந்து வாழ்ந்துவருகிறோம்.
ஹிந்து முஸ்லிம் ஒற்றுமை நாட்டிற்கு அவசியம். அதற்காக எவ்வளவு விட்டுக்கொடுக்கமுடியுமோ அவ்வளவு விட்டுக்கொடுக்க வேண்டியதும் நமது கடமை. இருந்தபோதிலும் நம் நாட்டினர் அநுபவித்திருக்கும் இன்னல்களையும் அவமானங்களையும் பார்க்கும்பொழுது மனம் வாடாமல் இருக்க முடியாது...”

இவர் மருத்துவமனையை காந்தி திறந்துவைக்கும் முன் காந்திக்கு ஏற்பட்ட நெருக்கடி, ஆனால் காந்தி ‘வாக்கு கொடுத்துவிட்டேன்’ என்று திறந்து வைத்த சம்பவம், ஹரிஜன ஆலயப் பிரவேசத்திற்குத் தலைமை தாங்கி அதனால் இவருக்கும் பிராமண சமூகத்துக்கும் ஏற்பட்ட பிரச்சினைகள், காங்கிரஸ், அரசியல், மந்திரிப் பதவி, சட்டசபை அனுபவங்கள், தன் முதல் மகளுக்குக் கல்யாணம் செய்தபின்பு, தனக்கு ஓர் ஆண் குழந்தையை பிரசவித்துவிட்டு மனைவி இறந்துவிட, சில மாதம் கழித்து ஆண் குழந்தையும் இறந்து... இவ்வளவும் ஒருவர் வாழ்கையில் நடந்திருக்கிறது என்பதை படிக்கும்போது பிரமிப்பே மிஞ்சுகிறது. தன் மனசாட்சிக்கு எது சரியோ அதைச் செய்திருக்கிறார் ராஜன்.
கடைசியாக இவர் அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு, எதுவும் வேண்டாம் என்று கிராமத்தில் விவசாயம் செய்ய முற்படுகிறார்
“பிரபல வைத்தியனாக இருந்து காங்கிரஸில் ஈட்டுப்பட்டு சத்தியாக்கிரகம் செய்து, தீண்டாமையை ஒழிக்கப் பன்முறை சிறை சென்ற, அரசாங்க மந்திரியாகச் சிலகாலம் உத்தியோகம் வகித்த நான், முதுமைப் பருவத்தில் என்னை விவசாயியாக எண்ணி இந்தக் கிராமத்தில் வாழ்வதற்குப் போய்ச் சேர்ந்தது ஒரு பெரிய விந்தை. எனது வரவை உத்ஸாகத்தோடு கிராமவாசிகள் வரவேற்கவில்லை... அந்த ஊர் வேசிகளுக்குக் கூட என்னிடம் நன்மதிப்பு இல்லை...”

உப்புச் சத்தியாகிரகத்தில் ஈட்டுப்பட்டுச் சிறையில் இருந்த அனுபவம் திரைப்படக் காட்சிகளுக்கு நிகரானவை.

“கோயம்புத்தூர் மத்தியச் சிறையின் கிணற்றுத் தண்ணீர் மருந்து குடிப்பதைப் போல இருக்கும். அந்த தண்ணீரைக் குடித்துப் பழகுவதற்கு எனக்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆயிற்று. நான் இரவில் தாகத்திற்காகக் குடிப்பதற்கு நல்ல தண்ணீரென்று எண்ணி அந்த ஜெயில் தண்ணீரை எனது அலுமினியம் கூஜாவில் நிரப்பிவைப்பது வழக்கம். பாதி ராத்திரிக்குப் பிறகு அந்தக் கூஜா சொம்பிற்குள் வெடிக்கும் சப்தம் கேட்கும். விடியும் வரையில் பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவையாகச் சிறு வெடிச் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும்...”

அந்தத் தண்ணீரில் அப்படி என்ன விசேஷம் என்று தெரிந்துகொள்ள புத்தகம் வாங்கிப் படியுங்கள்.

கல்கி முன்னுரையில், “மனைவியை அழைத்துக்கொண்டு சர்க்கார் கடனைக் கழிக்கப் பர்மாவுக்குச் சென்றார். நானும் அவருடன் கூடச் சென்றேன். ...மேலதிகாரியின் மேல் கண்ணாடிக் குவளையையும் தர்மாமீட்டரையும் வீசி எறிந்தார். நானும் பக்கத்திலிரிந்து கண்ணாடி வெயிட்டைத் தூக்கி எறிந்தேன். மாஜிஸ்திரேட் அவரை ‘வெறும் சப்ஆஸிஸ்டெண்ட் சர்ஜன்’ என்று சொன்னபோது அவருக்கு வந்த ஆத்திரத்தைவிட எனக்கு அதிகம் வந்தது... அவர் கப்பலில் ஏறினபோது நானும் டிக்கெட் இல்லாமல் ஏறிவிட்டேன்.”

ராஜன் இல்லம் - திருச்சி
ராஜன் அவர்கள் வாழ்ந்த இல்லம் இன்னும் திருச்சியில் இருக்கிறது. அடுத்த முறை திருச்சி சென்றால் நிச்சயம் பார்த்துவிட்டு வாருங்கள்.

நினைவு அலைகள்
சந்தியா பதிப்பகம்
சென்னை
முதற்பபதிப்பு – 1947
விலை ரூ225/=









1. ஸ்ரீபாதம் தாங்குவார் - பல்லக்கில் பெருமாளைத் தோளில் தாங்கி வருபவர்களை ‘ஸ்ரீபாதம் தாங்குவார்’ என்று அழைப்பர்
2. பரண்யாசம் - வடகலைப் பிரிவினரின் சரணாகதி சம்பிரதாயம்.

- சுஜாதா தேசிகன்
ஏப்ரல் மாதம் வலம் இதழில் பிரசுரமானது. நன்றி வலம்

Comments

  1. புத்தக விமரிசனம் ரசிக்கும்படி இருந்தது. புத்தகம் வாங்கவேண்டும்.

    "பரண்யாசம் செய்துகொள்ள வேண்டும் என்றால் ஜீயரை சேவித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற தகவல் எனக்கு புதுசு" - இப்போவும் அப்படித்தான். நான் நினைக்கிறேன் அப்போ ஆசார்யன், நம் குற்றங்களை பகவான் மன்னிக்கப் ப்ரார்த்தித்துக்கொண்டிருக்கிறார். அவர் ப்ரார்த்தனை முடியுமட்டும், நாம் சேவித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

    'கடல் தாண்டுவது' - இப்போதைய காலகட்டங்களில் நிறைய COMPROMISEஆகிவிட்டது என்று நினைக்கிறேன். 20-25 வருடங்களுக்கு முன்புகூட, காஞ்சி பரமாச்சாரியார், எம்.எஸ்.எஸ்ஸின் கணவர் சதாசிவம் அவர்கள் கடல் தாண்டி பிரயாணம் செய்திருக்கிறார் என்பதால் அவருக்கு 'தீர்த்தம்' (பெருமாள் தீர்த்தம் என்று சொல்லிப் பழக்கம். சிவ பூசை செய்தபின் தரும் தீர்த்தம்) தரவில்லை.

    ReplyDelete
  2. இன்றைய தினத்தந்தி இருக்குமிடம் அன்றைய டி.எஸ்.எஸ். ராஜனின் வீடுதான்.

    ReplyDelete
  3. அருமையான பதிவு. நான் 50 வருடங்களுக்குமுன் நூலகத்தில் படித்து அனுபவித்தேன் பல முறை. சமீபத்தில் புதிய பதிப்பு வந்த்தும் வாங்கி மீண்டும் படித்து மகிழ்ந்தேன்.என்ன நேர்மை, தொண்டு ஆர்வம்? இன்றைய இளைஞர்கள் அவசியம் படிக்க வேண்டும்.திண்ணை
    இதழில் பாவண்ணன் அருமையான பதிவு அளித்துள்ளார். வாழ்த்துக்கள் தேசிகன் .சநிதியா பதிப்பகத்திற்கும் நன்றி

    ReplyDelete

Post a Comment