Skip to main content

ஊசியின் நிழல்

”ரெண்டு துணியை ஜாயின் பண்ணி ஒரு க்ளிப் போடுங்கோ ... ” என்று நண்பர் ரிஷபன் எழுதியதைப் படித்த போது எனக்கு “ஆண்டாள் ஞாபகம் தான் வருகிறது !” என்றேன்.

ஸ்ரீரங்கத்தில் உள்ளவர்களுக்கு இந்த அர்த்தம் உடனே புரிந்துவிடும். இது ஒரு விதமான ‘code word’. பெருமாளுக்கு அலங்காரம் செய்யும் போது இரண்டு துணிகளை ஒன்றாக ஊசி நூலைக்கொண்டு சேர்த்து தைக்கும் போது அர்ச்சக ஸ்வாமிகள் ‘ஊசியைக் கொண்டு வாரும்’ என்று சொல்லாமல். ‘ஆண்டாளைக் கொண்டு வாரும்’ என்று தான் சொல்லுவார்கள்.

பரமாத்மாவுடன் ஜீவாத்மாவைச் சேர்ந்து தைக்கும் கருவியாக ஆண்டாளின் திருப்பாவை இருக்கிறது என்பதானால் இருக்கலாம்.

ஊசி என்ற வார்த்தை சிலப்பதிகாரம், புறநானூறு போன்றவற்றில் இருக்கிறது ஆனால் ஆழ்வார்கள் அந்த வார்த்தையை உபயோகிக்கவே இல்லை ( என்று நினைக்கிறேன் ). ஸ்ரீராமானுஜர், நம்பிள்ளை காலத்தில் ஊசி என்ற வார்த்தை இருந்திருக்கிறது. அதன் ’பின்’னாடி ஓர் ஐதிஹ்யம் இருக்கிறது.

ஸ்ரீஎம்பார் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். எம்பாருக்கும் ஊசிக்கு என்ன சம்பந்தம் ?

எம்பாருக்கு தாம்பத்திய வாழ்வில் அவ்வளவு நாட்டம் இல்லை. உடையவர் அவரைக் கூப்பிட்டு ‘இருட்டும், தனிமையும் உள்ள போது மனைவியுடன் கூடியிரு’ என்று அறிவுறுத்தினார். ஆனால் எம்பாரிடம் எந்த மாறுதலும் இல்லை. கூப்பிட்டு விசாரித்தார் உடையவர்.
“எப்போது பெருமாள் என்னுடன் இருக்கிறார் அதனால் தனியாக இருக்க முடியவில்லை. பெருமாள் என் கூடவே  இருப்பதால் எப்போதும் வெளிச்சமாக இருக்கிறது” என்றார்.

இவருடைய பெருமையை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க உடையவர் சின்ன ஊசியை ஓர் இருட்டறையில் போட்டுவிட்டு அதனைத் தேடும் படி தன் சீடர்களை நியமித்தார். எல்லோரும் விளக்கை வைத்துக்கொண்டு தேடினார்கள். யாருக்கும் கண்டு பிடிக்க முடியவில்லை. பின்னர் கோவிந்தன் என்ற எம்பாரை அனுப்பினார் உடையவர். கோவிந்தன் கையில் விளக்கு ஏதும் இல்லாமல் உள்ளே சென்று நிமிஷத்தில் ஊசியை எடுத்து வந்து கொடுத்து எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

ஆழ்வார் பாசுரங்களில் ஊசி இல்லாவிட்டாலும், திருமழிசை ஆழ்வார் ஊசி கதை பற்றி தெரிந்திருக்கும்.

ஒரு நாள் சிவபெருமான் பார்வதியுடன் ரிஷபத்தின்மீதேறி வலம் வரும் போது அவர்களின் நிழல் திருமழிசை ஆழ்வார் மீது பட அவர் நகர்ந்தார். இதைப் கவனித் சிவபெருமானும், பார்வதியும் ஆழ்வாரைச் சந்தித்து ஏதாவது வரம் கொடுக்கிறோம் என்று சொல்ல அதற்கு ஆழ்வார் ”மோக்ஷம் தாருங்கள்” என்று கேட்க அதற்குச் சிவபெருமான் “அதை நாராயணன் தான் கொடுக்க முடியும். வேறு ஏதாவது கேள்” என்று கூற ஆழ்வார் கிண்டலாக ஊசியும் நூலையும் காட்டி “இந்த நூலை ஊசியில் நுழைக்க” வரம் கேட்க அதற்குப் பிறகு நடந்த விஷயங்கள், திருமழிசை ஆழ்வாருக்கு ‘பக்திசாரர்’ என்று திருநாமம் கிடைத்தது எல்லாம் உங்களுக்குத் தெரிந்த கதை தான்.

சிவபெருமானின் நிழலைப் பார்த்து ஆழ்வார் “மாயா அது சாயா” என்று நினைத்திருப்பார். நிழல் என்ற தமிழ் வார்த்தைக்கு ஹிந்தியில் சாயா என்று நினைக்கிறோம். தினமும் திருவாராதனம் செய்யும் போது பெரியாழ்வார் ‘திருமொழி-சென்னியோங்கு’ முடிவில்


வேயர் தங்கள் குலத்து உதித்த
  விட்டுசித்தன் மனத்தே*
கோயில் கொண்ட கோவலனைக்
  கொழுங்குளிர் முகில் வண்ணனை*
ஆயர் ஏற்றை அமரர் கோவை
  அந்தணர் தம் அமுதத்தினை*
சாயை போலப் பாட வல்லார்
  தாமும் அணுக்கர்களே.

என்பதில் ’சாயை’ என்ற வார்த்தை நிழலைக் குறிக்கிறது. இந்த நிழலுக்கும் எம்பாருக்கும் சம்பந்தம் இருக்கிறது.

உடையவர் ஒரு முறை திருக்கோட்டியூருக்கு நம்பியைச் சேவிக்க சென்றிருந்தார்.அந்தச் சமயம் ஸ்ரீரங்கத்துக்கு சில ஸ்ரீவைஷ்ணவர்கள் ஸ்ரீரங்கத்துக்கு விஜயம் செய்தார்கள்.

 எம்பாரிடம் “சாயை போலப் பாட வல்லார்  தாமும் அணுக்கர்களே.. ” என்ற பாசுரத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டார்கள். அதாவது “சாயை போலப் பாட வல்லார்” என்றால் “நிழல் போலப் பாடவல்லவர்கள்” என்று பொருள். நிழல் எப்படிப் பாடும் சரியாக அர்த்தம் பொருந்தவில்லையே என்று கேட்டார்கள்.

“இதற்கு உடையவரிடம் தான் அர்த்தம் கேட்டிலேன். தற்சமயம்  உடையவரோ திருக்கோட்டியூர் சென்றிருக்கிறார், அதனால் உடனே அவரிடம் கேட்டு சொல்ல அடியேனால் முடியாது. தெரியாது என்று சொல்லி உங்களை அனுப்புவதற்கும் மனமில்லை. சரி கொஞ்சம் இருங்கள்” என்று உள்ளே சென்றவர் திரும்பி வந்து விஷேச அர்த்தத்தைச் சொன்னார் “திருமொழிப் பாசுரங்களைப் பாட வல்லவர்கள் எம்பெருமானுக்குச் சாயை ( நிழல் ) போல நெருங்கியிருக்கும் பேறு பெறுவார்கள்” என்று எடுத்துரைத்தார்.

கைப்பேசி இல்லாத அந்த காலத்தில் உள்ளே சென்ற எம்பார் என்ன செய்தார் ? எம்பெருமானார் பாதுகைகளை எடுத்துத் தம் திருமுடி மீது வைத்து அவரின் திருவடிகளை தியானித்தார். பாசுரத்தின் பொருள் எம்பாருக்கு உடையவரின் அருளால் கிடைத்தது. உடையவரின் நிழல் போன்று அவருடனேயே எப்போதும் இருக்கும் ஸ்வாமி  எம்பாரும் ஒரு ’பக்திசாரர்’. எம்பெருமானாரிடத்து பக்தி!.

’பின்’ குறிப்பு:  ஊசிக்கும் எம்பெருமானாருக்கும் ஆண்டாளுக்கும் இன்னொரு தொடர்பு இருக்கிறது அது ”பெரும்பூதூர் மாமுனிக்குப் ’பின்னானாள்’ ( pin ) வாழியே”

Comments

  1. தாங்கள் ஆழ்வார்கள் பற்றியும் ஸ்ரீவைஷ்ணவம் பற்றியும் எழுதுவது எளிய நடையில் தங்கள் குருநாதரின் எழுத்துக்களை போல மிகவும் நன்றாக உள்ளது. உடையவர் மேல் கோட்டை சென்றது எதற்காக என்பது பற்றி தங்கள் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

    ReplyDelete

Post a Comment