சம்பிரதாயத்தில் ஆழ்வார் என்றால் அது நம்மாழ்வாரைத்தான் குறிக்கும். ஆனால் சீர்காழிக்கு அருகிலிருக்கும் திருவாலி திருநகரியில் அப்படி இல்லை. அவர்களுக்கு ஆழ்வார் என்றால் அவர் திருமங்கை மன்னன் தான். ‘திவ்யம்’ என்ற சொல்லுக்கு ஆங்கிலத்தில் ‘divine’ என்று அர்த்தம் கொள்ளலாம். தமிழில் தெய்வத்தன்மை. ஆழ்வார்களை நாம் திவ்யசூரிகள் என்று அழைக்கிறோம். அவர்கள் பாடிய பாசுரங்களை ‘திவ்ய’ பிரபந்தம் என்கிறோம். ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்த ஸ்தலங்களை திவ்ய தேசம் என்கிறோம். நன்றாக கவனித்தால் ஆழ்வார்கள் சம்பந்தம் இருந்தால் மட்டுமே அது திவ்யமாகிறது!. ஆழ்வார்களில் திவ்யமான ஆழ்வார் யார் என்றால் அது திருமங்கை ஆழ்வார் தான். மிகப் பல திவ்ய தேசங்களுக்கும் நேரில் சென்று சேவித்து அர்ச்சாரூபமாக இருக்கும் எம்பெருமானைப் பாடிய நம் மங்கை மன்னனின் அர்ச்சாரூபத்தை திருவாலி திருநகரியில் பார்க்கும்போது அது நிஜ ஆழ்வாராகவே “உங்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா?” என்று கேட்கத் தோன்றும். சில மாதங்கள் முன்பு ஸ்ரீ.உ.வே. எம்பார் ராமானுஜன் ஸ்வாமி அவர்கள் முகநூல் வழியாக “திவ்யமான திருமங்கை ஆழ்வார் வாழும் திவ்யதேசமான எங்கள...