Skip to main content

வடுக நம்பியும் ஸ்ரீவைஷ்ணவ நம்பியும்

ஓவியம் !

சிலவற்றை பார்க்கும் போது ’கண்டதும் காதல்’  மாதிரி ஒர் ஈர்ப்பு வந்துவிடும். ஏன் என்று தெரியாது. 

இயற்கை காட்சியாக  இருக்கலாம், ஓவியமாக இருக்கலாம். அது ஓர் உணர்வு.
சில நாள்களுக்கு முன் வாட்ஸ்-ஆப்பில் அப்படி ஒரு படம் வந்தது.
ஸ்ரீராமானுஜர் பெருமாளுக்கு ஸ்ரீசூர்ணம் சாத்துவது மாதிரி. கண்டதும் காதலித்து, தூரத்தில் ஷெனாயில் தேஷ் ராகம் கேட்ட உணர்வை அது ஏற்படுத்தியது.  

பெருமாளுக்கு பல கல்யாண குணங்கள் இருக்கிறது என்று படித்திருக்கிறோம். அதில் ’சௌலப்யம்’ என்பது ஒன்று.  எளிமையான விளக்கம் - பெருமாள் எளிமையானவர் என்பது தான். 

மனித உருவில் வந்து நம் கண்களுக்கும் காட்சி கொடுக்கும் எளிமையானவன்.  படத்திலும்  அதே எளிமை!. 

அதே போல பெருமாளின் இன்னொரு குணம் ’வாத்சல்யம்’ அதாவது தாய் பசு கன்றிடம் நக்கிக் கொடுத்து அன்பை வெளிப்படுத்துவது மாதிரி. 
படத்தில் இருக்கும் ஸ்ரீரமானுஜரிடம் அதை பார்க்கலாம்.

இந்த படத்தில் இருக்கும் பெருமாள்  திருகுறுங்குடி அழகிய நம்பி !
உள்ளே ஒன்றும் இல்லை என்றாலும் குழந்தைகள் அடிக்கடி ஃபிரிட்ஜை திறப்பது மாதிரி பெரியவர்கள் வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் என்று பிஸியாக இருக்கும் இந்த காலத்தில் பெருமாளின் சௌலப்யம், சௌசீல்யம், வாத்சல்யம் போன்ற குணங்களை எல்லாம் அனுபவிக்க நேரம் இருப்பதில்லை.. இந்த வார்த்தைகளை சட்டென்று  கேட்டால் கூகிளை நாடுவோம். பெருமாள் கடைசி ஆப்ஷனாக தன் அழகை காண்பித்து நம்மை வசியம் செய்கிறார்!. 

அங்கம் அங்கமாக அழகாக இருப்பதற்கு பெயர் சௌந்தரியம் ;  முழுவதும் அழகாக இருப்பதற்கு பெயர் லாவண்யம் - உதாரணம் வேறு யாரும் இல்லை நம் திருக்குறுங்குடி அழகிய நம்பி தான். 


தலைப்பில் வடுக நம்பி பற்றி சொல்லிவிட்டு அவரைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நினைப்பது எனக்கு புரிகிறது.

வடுக நம்பி பற்றி சுருக்கமாக பார்த்துவிட்டு பிறகு திருக்குறுங்குடிக்கு பயணம் செய்யலாம்.

வடுக நம்பி என்ற பெயரை கேட்டவுடனேயே  ஸ்ரீராமானுஜருடன் சம்பந்தபபட்டவர் என்று பலருக்கு நினைவு வரலாம். பல புத்தகங்களில் இராமானுஜரின் சீடர்களில் ஒருவர் என்றும் அந்தரங்க காரியதரிசி என்றும் குறிப்பிடுகிறார்கள். தவறு.

ஒருவருக்காக வேலை செய்யும் போது அதை பக்தியுடன் செய்தால் அந்த காரியத்துக்கு பெயர் -  கைங்கரியம். அது தான் வடுக நம்பியிடம் இருந்தது. அதற்குக் காரணம் உடையவரிடம் இருந்த அளவு கடந்த ஆசாரிய பக்தி.

‘யதிராஜ வைபவம்’ என்று இவர் ஸ்ரீராமானுஜரைப் பற்றி இயற்றிய 114 ஸ்லோகங்களில் உடையவருடைய வாழ்க்கை பிரபாவத்தை மிக அழகாக விளக்கியுள்ளார் -
கடைசி ஸ்லோகத்தில் :

“தனது அந்தரங்கசிஷ்யர்களில் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கைங்கர்யத்தில் நியமித்த ஸ்ரீமானான யதிராஜர், மிகவும் தகுதியற்ற என்னையும் தமக்குப் பால் காய்ச்சும் கைங்கரியத்தில் நியமித்தருளினார்; இது என்ன ஆச்சரியம்! அத்துடன் தன்னடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியவனாகவும், மிகுந்த அன்புடையவனாகவும், தனக்கு நல்லது செய்பவனாகவும் கொண்டு என்னையும் ரக்ஷிக்கிறவரான அவர் பல்லாண்டு வாழ்க!” 

என்கிறார் வடுக நம்பி.

 மதுரகவி ஆழ்வார் எப்படி நம்மாழ்வாரை தவிர வேறு ஒருவரையும் தெய்வமாக கொள்ளாமல் “தேவுமற்றறியேன்” என்று இருந்தாரோ,  நம் வடுக நம்பியும் ஸ்ரீராமானுஜரே என்றிருந்தார்.

“வடுக நம்பி, ஆழ்வானையும் ஆண்டானையும் இருகரையர் என்பர்” என்று ஸ்ரீபிள்ளை லோகாசார்யரின் ஸ்ரீ வசன பூஷணத்தில் கூறுகிறார். இருகரையர் என்றால் Double minded person. ஆற்றிலே ஒரு கால் சேற்றிலே ஒரு கால் என்பது போல,  ஆழ்வானும், ஆண்டானும் எம்பெருமான், எம்பெருமானார் இருவரையும் பற்றினர்.  அதைப் பார்த்து  வடுக நம்பி ஆழ்வானையும், ஆண்டானையும் பார்த்து நகைப்பதாகக் கொள்ள வேண்டும்.

வடுக நம்பியின் ஆசாரிய நிஷ்டைக்கு சில சம்பவங்களை சொல்கிறேன்… .

ஒரு முறை திருவெள்ளரைக்கு  சென்று கொண்டிருந்த ஸ்ரீராமானுஜர் தன் திருவாராதனம் செய்யும் பெருமாளை வடுக நம்பியிடம் கொடுத்து எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருமாறு நியமித்தார். ஒரு கூடையில் வடுக நம்பி,  திருவாராதனப்பெருமாளுடன், உடையவர் திருவடிநிலைகளையும் ( பாதுகைகள் ) ஒன்றாக எழுந்தருளப் பண்ணிக்கொண்டுவந்தார். திருவராதனம் செய்ய வடுக நம்பியிடம் பெருமாளை வெளியே எழுந்தருளப் பண்ணும் படி உடையவர் கூற, . வடுக நம்பி கூடையை திறந்து முதலில் ஸ்ரீராமானுஜருடைய பாதுகைகளை வெளியே எடுத்தார். பிறகு பெருமாளை வெளியே எழுந்தருளப் பண்ணினார்.

இதைப் பார்த்த உடையவர் திடுக்கிட்டு “வடுகா! என்னுடைய பாதுகைகளையும், பெருமாளையும் இப்படி ஒன்றாக வைப்பது தகுமோ?” என்று வருத்தப்பட்டார். இதற்கு வடுக நம்பி “அது உங்களுடைய பெருமாள், இது என்னுடைய பெருமாள்!” என்றாராம்.

ஸ்ரீராமானுஜருடன் இருந்த ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் “ஓம் நமோ நாராயணாய” என்ற திருமந்திரைத்தை உச்சரிக்க, பக்கத்தில் இருந்த வடுக நம்பி “எம்பெருமானார் இருக்க எம்பெருமான் திருநாமத்தை சொல்லலாமோ ?” என்று கூறி எழுந்து சென்றுவிட்டாராம்.

ஸ்ரீரங்கத்தில் உடையவர் பெரிய பெருமாள் வடிவழகை சேவித்துக்கொண்டிருக்கும் போது, உடையவருடைய வடிவழகை நம்பி சேவித்துக்கொண்டிருப்பாராம். ஒரு நாள் இதை கவனித்த உடையவர் “பெருமாளுடைய கண்ணழகைப் பார்” என்ற போது
“என் அமுதினைக் கண்ட கண்கள்* மற்று ஒன்றினைக் காணாவே.”  என்று நம்பி அருளிச்செய்தாராம்.

பிரசாதம் உட்கொண்டபின் கையை அலம்பிச் சுத்தம் செய்யக் கூடாது என்பது வழக்கம். அதனால் எம்பெருமானார் அமுது செய்த சேஷ ப்ரஸாதத்தை வடுக நம்பி உண்ட பின் தன் தலையிலே கைகளை துடைத்துக்கொள்வாராம். இதை ஒருநாள் கவனித்த உடையவர் கோபிக்க அன்று நம்பி தம் கைகளை அலம்பி சுத்தம் செய்தார்.
மறுநாள் உடையவர் கோயில் பிரசாதத்தை நம்பியிடம் தர அதை சாப்பிட்ட பின் கைகளை அலம்பிய போது “வடுகா! என்செய்தாய் ?” என்று எம்பெருமானார் கேட்க  “நேற்று அருளிச்செய்தபடி செய்தேன்” என்றாராம்.
“உம்மிடம் தோற்றோம்!” என்றாராம் உடையவர்.

ஒருநாள் திருவீதி புறப்பாட்டின் போது பெருமாள்  மடத்து  வாசலில் எழுந்தருள “வடுகா! பெருமாளை சேவிக்க வா” என்று உடையவர் அழைக்க, அப்போது திருமடைப்பள்ளியில் உடையவருக்குப் பால்காய்ச்சிக் கொண்டிருந்த வடுகநம்பி “உம்முடைய பெருமாளை சேவிக்கவந்தால், என்னுடைய பெருமாளுக்கு பால் பொங்கிவிடுமே!” என்று பதில் சொன்னாராம்.

இப்படி ஸ்ரீராமானுஜரிடத்து மிகுந்த பக்தி கொண்டிருந்தவரான வடுகநம்பி பரமபதித்த செய்தியை சில ஸ்ரீவைஷ்ணவர்கள் அருளாளப் பெருமாள் எம்பெருமானாரிடம்  “வடுகநம்பி திருநாட்டுக்கு எழுந்தருளிவிட்டார்” என்று கூறிய உடனே அவர் அதிர்ச்சியாகி மூர்ச்சை அடைந்தார். பிறகு உணர்வு திரும்பியபின் வடுக நம்பி உடையவரிடத்தில் பரம பக்தி கொண்டிருந்தார்.  எனவே அவரைத் திருநாட்டுக்குப் போனாரென்று சொல்லக்கூடாது. அவர் உடையவர் திருவடிகளை அடைந்தார் என்றே கூற வேண்டும் என்றாராம். ( அதனால் தான் “ஆசாரியன் திருவடியடைந்தார்” என்று நாம் இன்றும் சொல்கிறோம்)

உடையவர் தனக்கு ஏதாவது தேவை என்றால் அவர் வாஞ்சையுடன் வடுகநம்பியை “வடுகா வடுகா” என்று அழைப்பாராம்.


”திருவரங்கம் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே” என்றபடி கோயிலில் பல நிர்வாக  சீர்த்திருத்தங்களை செய்த பின் சோழநாட்டு திருப்பதிகளை மங்களாசாசனம் செய்த பின் பாண்டிய நாட்டு திவ்ய தேசங்களை தரிசித்துக்கொண்டு வரும் போது திருநெல்வேலிக்கு தெற்கே இருபது மைல் தூரத்தில்திருக்குறுங்குடிக்கு வந்து சேர்ந்தார்.  திருக்குறுங்குடி அழகிய நம்பியை சேவிக்க ஸ்ரீராமானுஜரின் திக்விஜயத்தில் வாசகர்களை சேர்ந்துகொள்ள அழைக்கிறேன்.

திருக்குறுங்குடி அழகிய நம்பியை சேவித்த போது அர்ச்சகரிடம் ஆவேசித்து
“ராம, கிருஷ்ண’  என்று பல அவதாரங்களை எடுத்தும் என்னால் மக்களை திருத்த முடியவில்லை. ஆனால் நீரோ இத்தனை பேரையும் எப்படி திருத்தினீர் ? அதன் ரகசியத்தை சொல்லும்” என்று கேட்க அதற்கு உடையவர்

”கேட்கும் அளவில் கேட்கப் பட்டால், சொல்லும் அளவில் சொல்லுவோம்” என்றவுடன் நம்பி உடனே தனது ஆசனத்தை விட்டுக் கீழே இறங்கி ஸ்ரீரமானுஜருக்கு ஒரு ஆசனம் போட சொல்லி அவரை ஆசார பீடத்தில் அமர்த்தி, தான் கீழே சிஷ்யன் போல அமர்ந்தார்.
திருக்குறுங்குடி நம்பி என்ற ஸ்ரீவைஷ்ணவ நம்பி

ராமானுஜர் தன் ஆசாரியனான பெரியநம்பி அதில் எழுந்தருளியிருப்பதாக பாவித்து பெருமாளின் திருசெவியில் ’திருமந்திரம், ‘த்வய’ மஹா மந்திரங்களை உபதேசம் செய்தார்.

நம்பியும் கேட்டு உகப்படைந்தவராய் “ நாம் இராமானுசனை உடையேன்” என்று அருளிசெய்ய, எம்பெருமான், எம்பெருமானாரின் சிஷ்யர் ஆனார்.

ஸ்ரீராமானுஜர் அவருக்கு “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்று திருநாமம் அருளி. தமது அபச்சாரங்களை பொருத்தருள வேண்டும் என்று வேண்டினார். நம்பியும் அவருக்கு தீர்த்த ப்ரஸாதமும், திருமாலை ப்ரஸாதமும் ஸ்ரீசடகோபனும் ப்ரஸாதித்து விடை கொடுத்தனுப்பினார்.

இன்னும் முடியவில்லை. மீண்டும் உடையவருடன் திருவனந்தபுரம் பயணிக்கலாம்.

திருவனந்தபுரம் சென்ற யதிராஜர் அனந்த பத்மநாபனை சேவித்தார். அங்கே சில காலம் இருந்து, கோயிலில் பல சீர்த்திருத்தங்களையும் செய்ய முற்பட்ட போது அங்கே இருந்த நம்பூதிரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெருமாளிடம் முறையிட்டனர். பெருமாளும் நம்பூதிரிகள் வாத்சல்யத்தில் மயங்கி அவர்கள் பக்கம் சேர்ந்துகொண்டார்!.

உடையவர் இரவு படுத்துறங்கும் போது இரவோடு இரவாக அவரை பெரிய திருவடியாம் கருடாழ்வாரைக் கொண்டு திருகுறுங்குடியில் ஒரு சிறு கற்பாறையின் மீது கிடத்திவிட,  காலை விழித்தெழுந்த உடையவர் இடம் மாறியதைக் கண்டு “வடுகா! வடுகா!” என்று அழைத்த போது வடுக நம்பியாய் உருவெடுத்து கைகட்டி வாய் பொதித்து, குனிந்து ”அடியேன்! தாஸன்” என்று வடுக நம்பி போல பணிவன்புடன் இருந்தாராம் திருக்குறுங்குடிநம்பி!.
திருப்பரிவட்டப்பாறை

“அனந்தபத்ம நாபனின் திருவுள்ளம் இது என்றால் நாம் என்ன செய்ய முடியும்” என்று நித்திய அனுஷ்டானங்களை முடித்துவிட்டு ஸ்ரீராமானுஜர் திருமண்காப்பு தரித்துக்கொண்டு தினமும் வடுக நம்பிக்கும் தன் கையால் தான் சாத்துவாராம்.
வடுக நம்பிக்கு தினமும் கிடைத்த பாக்கியம் அன்று ஸ்ரீவைஷ்ணவ நம்பிக்கும் கிடைத்தது! மீண்டும் ஒரு முறை அந்த படத்தை இப்போது நீங்கள் பாருங்கள்!

ஸ்ரீவைஷ்ணவ (வடுக) நம்பி ஸ்ரீராமானுஜர் நீராடி களைந்த காவி வஸ்திரங்களை துவைத்து பாறையின் மீது ஆறபோட்டு அவருக்கு வேண்டிய உபகாரங்களை எல்லாம் செய்துமுடித்தார். இன்றும் அப்பாறை ‘திருப்பரிவட்டப்பாறை’ என்று அழைக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை விவரிக்கும் விதமாக ஸ்ரீரங்கம் ஸ்ரீராமானுஜர் சன்னதியில் இருக்கும் தஞ்சாவூர் படத்தை இங்கே கொடுத்திருக்கிறேன்.

ஸ்ரீவைஷ்ணவ நம்பி உடையவரிடம் எட்டு எழுத்து திருமந்திரத்தை பெற்று சிஷ்யனாக ஆசாரிய கைங்கரியம் செய்து ஆசாரிய சிஷ்ய லக்ஷணத்தை நமக்கு உபதேசித்துள்ளார் என்று நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஸ்ரீவைஷ்ணவ (வடுக) நம்பியுடன் கோயிலுக்கு சென்ற உடையவர், கூட வந்த நம்பியை காணாமல் எதிரே இருந்த அழகிய நம்பியை பார்த்த போது அவர் சாத்திய திருமண் காப்பு அழகிய நம்பியின் நெற்றியில் அவருக்கு மேலும் அழகு சேர்ப்பதைக் கண்டு நடந்ததை புரிந்துக்கொண்டார் உடையவர்.

அதே சமயம் திருவனந்தபுரத்தில் தன் ஆசாரியனான ராமானுஜரை காணாமல் வடுக நம்பியும் மற்ற சிஷ்யர்களும் பதட்டமாக இருக்க, திருக்குறுங்குடியில் உடையவர் இருப்பதை கேள்விப்பட்டு அங்கே நடையாய் நடந்து, நடந்த விஷயங்களை கேட்டறிந்தார்கள். ஸ்ரீராமானுஜரும், வடுக நம்பியும் ஸ்ரீவைஷ்ணவ நம்பியின் கல்யாண குணங்களில் ஒன்றான ‘சௌலப்யம்’ ( எளிமை), அழகையும் வியந்தனர்.

நம்மாழ்வாரே நம்பியின் அழகில் மோகித்து பத்து பாசுரங்கள் பாடியுள்ள போது ஸ்ரீராமானுஜர் வியந்ததில் ஆச்சரியம் இல்லை.

திருவாய்மொழி ஐந்தாம் பத்தில், பத்து பாசுரங்களிலும் திருக்குறுங்குடி நம்பியின் அழகை தான் பாடுகிறார்.

*எங்ஙனேயோ, அன்னை மீர்காள்!
என்னை முனிவது நீர்?*
நங்கள் கோலத் திருக் குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்*
சங்கினோடும் நேமியோடும்
தாமரைக் கண்களோடும்*
செங்கனி வாய் ஒன்றினோடும்,
செல்கின்றது என் நெஞ்சமே. 5.5.1

[ நம்முடைய அழகிய திருக்குறுங்குடி நம்பி சேவிக்கப் பெற்றேன். சங்கையும் சக்கரத்தையும் கைகளில் ஏந்தி நிற்கும் அவன் அழகு என்னைக் கொள்ளை கொண்டது. செந்தாமரைக் கண்களும் சிவந்த உதடுகளும் உடைய அவன் அழகை அனுபவித்து என் நெஞ்சம் இனி அவரை விட்டு மீளாது ]

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர்
என்னை முனியாதே*
தென் நன் சோலைத் திருக் குறுங்குடி
நம்பியை நான் கண்டபின்*
மின்னு நூலும், குண்டலமும்,
மார்வில் திருமறுவும்,*
மன்னு, பூணும், நான்கு தோளும்,
வந்து எங்கும் நின்றிடுமே. 5.5.2

[ என் நெஞ்சை இரவல் வாங்கி அதன் வழியாக பார்த்தால் உங்களுக்கு புரியும். தென் திசையில் சோலைகள் சூழ்ந்த திருக்குறுங்குடியில் உள்ள நம்பியின் அழகை அனுபவித்தபின் மறக்கப முடியுமா அவன் பளபளக்கும் பூணூல், மகரகுண்டலம், மார்பில் ஸ்ரீவத்ஸம், அழகு ஆபரணங்கள், நான்கு தோள்களுடன் நான் போகுமிடமெல்லாம் வந்து நிற்கிறான்.]

மற்ற பாடல்களை உங்களுக்கு வீட்டு பாடமாக கொடுத்துவிடுகிறேன். ஏன் என்றால் நம்மாழ்வார் கடைசி பாசுரத்தில் இந்த பத்து பாசுரங்களையும் பாடினால் தான் நீங்கள் உண்மையான ஸ்ரீவைஷ்ணவன் என்கிறார்!

*அறிவு அரிய பிரானை,
ஆழி அம் கையனையே அலற்றி*
நறிய நன் மலர் நாடி, நன் குருகூர்ச்
சடகோபன் சொன்ன*
குறிகொள் ஆயிரத்துள் இவை பத்தும்
திருக்குறுங்குடி அதன் மேல்*
அறியக் கற்று வல்லார் வைட்டணவர்,
ஆழ்கடல் ஞாலத்துள்ளே. 5.5.11

[ சாதாரண அறிவால் அறிய முடியாத சக்கரபாணியை திருக்குருகூர் சடகோபன் ஆயிரம் பாசுரங்களில், திருகுறுங்கிடியைப் பற்றி பாடிய பத்து பாடல்களையும் கற்றவர்கள், உலகிலே உண்மையான வைணவர்களாய் விளங்குவர் ]


ஸ்ரீவைஷ்ணவத்தில் நம்பிகள் அதிகம். பெருமாளில் பல நம்பிகள் இருக்கிறார்கள். திருக்குறுங்குடி அழகிய  நம்பி அன்பில் வடிவழகிய நம்பி, நாச்சியார் கோவில் திருநாரையூர் நம்பி .. ஆசாரியர்களில் திருக்கச்சி நம்பிகள், பெரிய திருமலை நம்பி, பெரிய நம்பி, வடுக நம்பி என்று பலர் இருக்கிறார்கள். 

அடுத்த முறை ’நம்பி’ என்ற வார்த்தை நினைவுக்கு வந்தால் மதுரகவியாழ்வார் மாதிரி நம் வடுக நம்பியும், ஸ்ரீவைஷ்ணவ நம்பியும் உங்கள் நினைவுக்கு வந்து 
”நம்பி என்றக்கால் , அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே” என்றபடி உங்கள் நாவில் தேன் போல அமுதம் ஊறும். 

திருப்பதிக்கே லட்டு மாதிரி 8 எழுத்துக்கொண்ட ஸ்ரீவைஷ்ணவ நம்பிக்கே எட்டு எழுத்து உபதேசம் செய்ததால் வழக்கமாக அஞ்சலி முத்திரையுடன் இருக்கும் ஸ்ரீராமானுஜர் இங்கே. ”இனி திருப்போடெழில் ஞானமுத்திரை வாழியே” என்றபடி உபதேச முத்திரையில் இருக்கிறார்.

வேலும் கையுமாக இருக்கும் திருமங்கையாழ்வார் இங்கே அஞ்சலி முத்திரையில். அவருடைய திருவரசும் இங்கே தான் இருக்கிறது!. 
சித்திரையில் திருவாதிரை அன்று உடையவர் சேர்த்தியாக ஸ்ரீவைஷ்ணவ நம்பியுடன் திருமஞ்சனம் கண்டருளி திருமண்காப்பு சாத்தும் உற்சவம் நடைபெறுகிறது. 

கடைசியாக வடுக நம்பி திருநட்சத்திரம் - சித்திரையில் அஸ்வினி! பிறந்த இடம் மைசூர் பக்கம்  ஸாளக்கிராமம் என்ற ஊர். 

எம்பெருமானார் திருநாராயணபுரம் எழுந்தருளியபோது அங்கே அவருக்கு வரவேற்பு அவ்வளவாக இல்லை. மேல்கோட்டை பக்கம் மிதுலாபுரி  சாளக்கிராமம்  என்ற ஊரில் வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் நிரம்பியிருந்தார்கள். அவர்களைத் திருத்த வேண்டும் என்று எண்ணிய உடையவர் முதலியாண்டானைப் பார்த்து “அவர்கள் நீர் எடுக்கிற துறையிலே திருவடிகளை விளக்கிவாரும்” என்று நியமித்தார். அவரும் அப்படியே செய்தார். யார் எல்லாம் இவர்களை எதிர்த்தார்களோ புனிதமான தீர்த்தத்தை பருகியதால் மறுநாள் கிராமமே ஸ்ரீராமானுசரை அணுகி அவர் திருவடியை ஆச்ரயித்தார்கள். அவர்களில் ஒருவர் ஆந்தர பூர்ணர் எனும் வடுக நம்பி ! அவருக்கு ஸ்ரீவைஷ்ணவ தாத்பர்யங்களை உபதேசம் செய்தார்.

அங்கே திருவடிகளில் நித்யசேவை உண்டாகும் படி தம்மை ஆசிரயித்ததைக் கல்வெட்டிலே பொறித்து வைத்தார் ( இன்றும் இது அங்கே இருக்கிறது ) . எம்பெருமானார் மேலும் அங்கே மறைவாக ஓரிடத்தில் நிக்ஷப்த தீர்த்தம் உண்டாக்கிக் கொடுத்தார் ( இன்றும் ஸ்ரீராமானுசர் திருவடிகளாம் முதலியாண்டான் ஸ்பரிசம் பட்ட தீர்த்தம் அங்கே இருக்கிறது. ) 


மேலும் சில குறிப்புகள்: 


உபதேச முத்திரையில் எம்பெருமானார்


சில வருடங்கள் முன் திருப்பரிவட்டப்பாறையை சேவிக்க சென்றபோது புயல் மழை காரணமாக அங்கே பாலம் உடைந்து வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 
“அங்கே போகாதீங்க... திரும்ப வர முடியாது.. உங்களை அடித்துகொண்டு போய்விடும்” என்று எச்சரித்தார்கள்.  

இவ்வளவு தூரம் வந்துவிட்டு ‘திருப்பரிவட்டப்பாறை’ சேவிக்க முடியவில்லையே என்று ஏக்கமாக இருந்தது. 
பிறகு 2019ல்  திருக்குறுங்குடிநம்பியை சேவித்துவிட்டு பாறை பக்கம் சென்றேன். 

நடந்து சென்று பாறையின் மீது தண்ணீரால் திருமஞ்சனம் செய்தபோது அங்கே...  நீங்களும் அடியேனுடன் வந்து சேவித்துகொள்ளலாம்! ( பார்க்க வீடியோ )



- சுஜாதா தேசிகன்
சித்திரையில் அஸ்வினி! 


Comments

  1. பயனுள்ள பதிவு. நன்றி :)

    ReplyDelete
  2. அரிய பல தகவல்களை...இங்கு நாங்கள் அறிய கொடுத்தமைக்கு மிகவும் நன்றி...

    ReplyDelete
  3. வைணவ நம்பியையும் வடுக நம்பியையும், சிஷ்ய லக்ஷணத்தையும் இணைத்து எழுதிய பதிவு நல்லா இருந்தது.

    ReplyDelete
  4. மிக அருமையான பதிவு.

    ReplyDelete
  5. மிக அருமை. எழுத்து நடை ஈர்க்கிறது மனதை .

    ReplyDelete

Post a Comment