Skip to main content

சென்னை அனுபவங்கள்

சென்னையில் இரண்டு வருடம் குப்பையுடன் முகநூலில் இதையும் கொட்டினேன். ஒரு இடத்தில் இருக்கட்டுமே என்று இங்கே. படிக்க வேண்டிய கட்டாயம் எதுவும் இல்லை.


----------


”கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து” என்று தொடங்கும் திருப்பாவை பாடல் காலை 4 மணிக்கு நினைவுக்கு வந்தது.
இன்று கறந்த பாலில் காபி சாப்பிடுவது என்று முடிவு செய்தேன்.
வீட்டுக்கு எதிரில் இருக்கும் ஆவின் பூத்தில் விசாரித்தேன்.
“கறந்த பால் தான்... சார் ஆனா பாக்கெட்டில் இருக்கு” கூடவே ஒரு கொசுறு கேள்வி
“எதுக்கு சார்... ஏதாவது மருந்துக்கா?”
என்ன பதில் சொல்லுவது என்று தெரியாமல்..
”சும்மா டிரைப் பண்ணலாம் என்று.. உடம்புக்கு நல்லது”
“அப்போ ஆரோக்கியா பால் வாங்கிக்கோங்க.. திக்கா இருக்கும்.”
பாக்கெட் பால் வாங்க வந்திருந்த ஒரு தாத்தா உதவ முன்வந்தார்.
“இங்கிருந்து ஸ்ட்ரெயிட்டா மூன்றாவது ரைட் அங்கே உள்ளே போனா ஒரு வீட்டில் கிடைக்கும்”
சரியாக மூன்றாவது ரைட் போன போது அங்கே ஒரு மாடு இருந்தது. அந்த வீடாக தான் இருக்கும் என்று அங்கே சென்றேன். என்னை பார்த்த மாடு சூடாக ஒன்றுக்குப் போனது. என் பாட்டி அதைக் கையில் எடுத்துத் தலையில் தெளித்துக் கொள்வாள் என்று நினைவு வந்தது. மூச்சா போன மாடு அங்கே இருக்கும் குப்பை தொட்டியில் இருந்த வஸ்துக்களைச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. அதில் ஒரு மாதவிடாய் டயப்பர் அடக்கம்.
வீட்டிலிருந்து வெளியே வந்தவர் என்ன என்று விசாரிக்க.
“பால்”
”இந்த வீடு இல்லை... அங்கே மணல் கொட்டியிருக்கு பாருங்க அந்த வீடு என்று காண்பித்தார்”
அங்கே சென்று போது வாயில் நுரையுடன் கூடிய டூத்பிரஸுடன், ஒருவர் வெளியே வந்து துப்பிவிட்டு ”என்ன வேண்டும்?” என்று பேஸ்ட் வாசனையுடன் கேட்க
“பால்’
”மாடு இன்னும் வீட்டுக்கு வரவில்லை வீட்டுக்கு வெளியே வந்து தெரிவில் பார்த்துவிட்டு ... அந்த மாடு தான் எழு மணிக்கு வாங்க” என்றார்.
ஓடி வந்துவிட்டேன்.
நாதமுனிகள் 4000 தேடி அலைந்ததைவிட இது என்ன கஷ்டமா ? அதனால் தேடலை தொடர்ந்தேன்.
நாதமுனிகள் என்று நினைத்துக்கொண்டவுடன், பழைய சைக்கிளில் பளிச் மஞ்சள் திருமணுடன் வந்த ஒருவர் . கறந்த பால் கிடைப்பது கஷ்டம்... “பேசாம சேலையூர் மடத்துக்குப் போங்க” அங்கே மாடு இருக்கு..கேட்டுப்பாருங்க” என்றார்.
பஞ்சகச்சம் திருமணுடன் போக வேண்டும் என்பதால் அந்த ஆப்ஷனை ஒத்திப்போட்டேன்.
இந்த விஷயங்களைப் பெண்களிடம் தான் கேட்க வேண்டும் அப்போது தான் சரியான பதில் கிடைக்கும் ஒரு பூ விற்கும் பெண்மணியிடம் கேட்டேன்.
”மணிமேகலை தெருவில கேட்டுப்பாருங்க” என்று விரலால் மேப் வரைந்து காண்பித்தார்.
மணிமேகலை தெரு மாடுகளும் மாடு சார்ந்த இடமும் என்று மாட்டுத்தொழுவம் வாசனை காட்டிக்கொடுத்தது.
ஒரு வீட்டில் மாடுகள் ஒழுங்காகக் கட்டப்பட்டு வைக்கோல், புன்னாக்குச் சாப்பிட்டுக்கொண்டு இருந்தது. அந்த இடமே ஒரு மினி கிராமம் மாதிரி இருந்தது.
வயதான ஒரு தாத்தா, தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு, தன் தலைக்கு மேலே நீண்ட மூங்கில் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் “என்ன வேண்டும் என்று கேட்க”
“பால்”
உள்ளேயிருந்து ஒரு சின்னப் பெண் ஓடி வந்து
 “இன்னும் ஆஃபனவர் ஆகும்” என்று நுணிநாக்கு ஆங்கிலம் பேசியது பெரிய வியப்பாக இருந்தது.
உள்ளே இருந்த பாட்டியிடம் தாத்தா வீட்டுக்கு கறந்த பால் இருந்தா கொடுத்துவிடு என்று சொல்ல பாட்டி பாலை எடுத்து வந்தாள்.
“எதுல வாங்கிப்பீங்க ?.. பாத்திரம் இருக்கா ?”
கேரி பேக் கலாசாரத்தில் வளர்ந்த நான் பாத்திரம் பற்றி யோசிக்கவில்லை.
“பாத்திரம் கொண்டு வரலை... . திரும்ப வரேன்”
பாட்டி முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது
”பாத்திரத்தில் பால் வாங்கி அதில் இரண்டு முறை காபி சாப்பிட்ட பின் முடிவு செய்தேன்.
அடுத்து ஒரு மாடு வாங்க வேண்டும் என்று.

--------------------------------------------------------------------------
தாம்பரத்தில் நான் வசிக்கும் இல்லம் வெள்ளம் வந்த போது வாசல் கேட் பூட்டியிருந்தது. நான் அப்போது வீட்டில் இல்லை. தண்ணீர் அதிகம் வரவே அக்கம் பக்கம் இருந்தவர்கள் அந்த கேட்டை திறந்து தண்ணீருக்கு வழி செய்திருக்கிறார்கள். தங்கள் வீடு முழுகக் கூடாது ஆனால் பக்கத்து வீடு(பூட்டியிருக்கிறது என்பதால்) முழுகினால் பரவாயில்லை என்ற எண்ணம். என் நண்பர் எனக்கு போன் செய்தார்.
“சார் முடிந்தால் திரும்ப மூடுங்கள்... நான் தி.நகரில் மாட்டிக்கொண்டு இருக்கேன்”
என் நண்பர் திரும்ப கேட்டை பூட்ட... அப்போது சிலர்
“உன் வீடா இது கண்டுகாத கம்முனுகிட” என்று சென்னை தமிழில் அறிவுரை கூறியிருக்கிறார்கள். ( இதில் நிறைய பீப் மொழிகளும் அடங்கும்).
மழை, செம்பரம்பாக்கம் ஏரி என்று வெள்ளத்துக்கு காரணம் சொன்னாலும், இந்த மாதிரி மக்களும் ஒரு விதத்தில் சென்னை வெள்ளத்துக்கு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.
பிகு: ஸ்ரீபாஷ்யம் மேஜை மீது புக்-மார்க்குடன் அப்படியே இருந்தது ஆச்சரியம்.
----------------------------------------------------------------------------------------------
சென்னை மழை, வெள்ளத்தின் போது பல இடங்களில் தண்ணீர் வீட்டுகுள் புகுந்த நிலையிலும் பல வயதானவர்கள் கரண்ட், தொலைப்பேசி இல்லாமல் ஒரு மெழுகுவத்தியுடன் பக்கத்து வீட்டு நண்பர்கள் கொடுத்த சாப்பாடு, பிஸ்கெட், காபியை சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள். ( எனக்கு தெரிந்த நண்பர்கள் உறவினர்களை கூட அப்படி தான் ‘மேனேஜ்’ செய்தார்கள் )
”பேசாம ஒரு வாரத்துக்கு எங்க வீட்டுக்கு வந்துடுங்க” என்று எவ்வளவு கூப்பிட்டும் அவர்கள் மற்ற நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கு செல்லவில்லை. தங்கள் வீட்டுலேயே இருக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.
“இங்கே எதற்கு தனியா கஷ்டப்படனும்... பேசாம அமெரிக்கா வந்துவிடுங்க என்று ரொம்ப நாளா சொல்றோம் .. .. வர மாட்டேங்கிறாங்க” என்று அமெரிக்கா சென்ற பிள்ளைகள் அலுத்துக்கொள்கிறார்கள். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அடுத்த வீட்டுக்கு போகாத அவர்கள் எப்படி அமெரிக்கா போவார்கள் என்று யோசிக்க வேண்டும்.
----------------------------------------------------------------------------------------------------------
”என்ன சார் மழை பயங்கரமா இருக்கு இப்ப சென்னை போகிறீர்களே என்று பலருடைய எச்சரிக்கையும் மீறி இன்று இரவு பெங்களூரிலிருந்து சென்னை வந்து சேர்ந்தேன். ரயில் 30 நிமிடம் தான் தாமதம். செண்டரல் ஸ்டேஷன் காலியாக ....
தம்பிக்கு போன் செய்து பேசினேன்.
”வீட்டுக்கு முன் மரம் விழுந்துவிட்டது கவுன்சிலரை கூப்பிட்டு பேசினேன் என்றான்.
“சார் வீட்டுக்கு முன் மரம் விழுந்திவிட்டது”
“அட்ரஸ் சொல்லுங்க”
“நம்பர்... “
“சார் உங்க வீட்டு முன் தான் மரத்தை வெட்டிக்கொண்டு இருக்கேன்” என்றார் கவுன்சிலர்.
சென்னை நகரமே அலம்பிவிட்ட மாதிரி இருந்தது. செண்டரல் ஸ்டேஷனிலிருந்து தி.நகர் வரை தண்ணீர் எல்லாம் வடிந்து இருக்கிறது. டிவிட்டரில் போட்ட படம் எல்லாம் மார்பிங்காக இருக்குமோ என்று சந்தேகமாக இருக்கிறது :-)
ஆட்டோ டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன்
“ஆமாம் சார் இரண்டு நாளா தண்ணீ””
“சவாரி ?”
”.. இந்த மாதிரி சமயத்துல தான் சார் கொஞ்சம் காசு பார்க்க முடியும்”
“நேக்கா ஓட்டினா தண்ணீ பெரிய பிரச்சனை இல்லை சார்”
டிவியில் மழை பற்றி விவாதம்,, ஃபேஸ்புக்கில் அரசு இயந்திரம் ரிப்பேர் ஆகிவிட்டது என்ற பேச்சு
ரயிலில் பக்கத்து சீட் பெரியவர் “இன்னும் ஒரு வருடத்திற்கு தண்ணீர் பிரச்சனை இருக்காது” என்றார்.
பள்ளிகளுக்கு விடுமுறைவிட்ட பின் மழைக்கு என்ன வேலை ? வந்துவிட்டேன்.
----------------------------------------------------------------------

ஹீரோ சென்னைக்கு வருகிறார் என்றவுடன் செண்டரல் ஸ்டேஷன், எல்.ஐ.சிக்கு பிறகு அண்ணா மேம்பாலம் என்ற ஜெமினி மேம்பாலத்தை நமக்கு தமிழ் சினிமா காட்ட தவறியதில்லை.
சில வருஷம் முன் பாலத்திலிந்து பஸ் ஒன்று கீழே விழுந்துவிட்டது என்று கூட்டம் கூடியது. பிறகு ஒரு லாரி என்று நினைக்கிறேன்.
அமெரிக்கா மீது ஏதாவது கோபம் என்றால் உடனே அந்த மேம்பாலம் சுற்றியும் அதன் மீதும் போலீஸ் கெடிபிடி அதிகமாக இருக்கும்.
இலங்கை பிரச்சனைக்கு போராட்டம், அமெரிக்காவில் தீவிரவாதி தாக்குதல் என்று தொடர் பிரச்சனைக்கு பிறகு என்று நினைக்கிறேன் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு என்று நான்கு போலீசார் ஏகே 47 வைத்துக்கொண்டு அதன் மீது டியூட்டியில் நிரந்திரமாக வெயில், மழை என்று பாராமல் பாதுகாப்பு கொடுக்க ஆரம்பித்தார்கள்.
தற்போது ’சரவணா ஸ்டோர்ஸ்’ விளம்பரம் செய்யப்பட ஒரு சின்ன பிளாஸ்டிக் கூண்டுக்குள் நின்றுக்கொண்டு இருக்கிறார்கள். அப்படி நிற்பவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர். தினமும் அங்கே செல்லும் வாகனங்களில் புகை, வெயில் என்று அவர்களை நினைத்தால் பாவமாக இருக்கும். அவர்களுடைய உடல் நலம் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு முறையும் பாலத்தை கடக்கும் போதும் நினைத்துக்கொள்வேன்.
சென்னை விமான நிலையம் முன்பு இருக்கும் பாலத்தின் மீதும் இந்த மாதிரி ஒரு ஏற்பாடு செய்யப்படலாம்.
இந்த மாதிரி பாலத்தின் மீது பாதுகாப்பு கொடுக்கும் இடம் உலகில் வேறு எங்காவது உள்ளதா என்று தெரியவில்லை.
சகிப்புத்தன்மை இல்லை என்று பலர் திருப்பி தரும் தேசிய விருதுகளை சகிப்புத்தன்மையோடு இருக்கும் அந்த காவலர்களுக்கு அளிக்கலாம். அல்லது அட்லீஸ்ட் மாசுக்கு-மாஸ்க் ஒன்று தரலாம்
------------------------------------------------------



Comments