Skip to main content

ஹார்ட் டிஸ்க் ஃபெய்லியரும், நம்பிள்ளை ஈடும் !

நம்பிள்ளை - பின்பழகராம் பெருமாள் சீயரோடு - ஸ்ரீரங்கம்


வடுக நம்பிகள் பற்றிய கட்டுரை எழுதி முடிக்கும் சமயம். கணினி கண்ணனை போல நீலமானது. கூடவே சர சர என்று எழுத்துக்கள் வரத் தொடங்கியது. கீதையோ என்று படிக்க ஆரம்பித்தேன். கீதை இல்லை,  ஹார்ட் டிஸ்க்கில் ஏதோ பிரச்சனை என்றது அந்த எழுத்துக்கள்.


கிட்டதட்ட நான்கு நாளாக எழுதிக் கட்டுரை  ஒரு நொடியில் போய்விட்டதோ! என்று கொஞ்சம் பதறினேன். ஃபைல் அல்லோகேஷன் டேபிளில் பிரச்சனையா அல்லது ஏதாவது மெக்கானிக்கல் பிரச்சனையா என்று யோசிக்கத் தோன்றவில்லை. நினைவுக்கு வந்தது நம்பிள்ளை தான்!.

நம்பிள்ளை ஞாபகம் ஏன் வந்தது என்று தெரிந்துகொள்ள நம்பிள்ளை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்வோம். .

நம்பிள்ளை என்றவுடன் நமக்குக் கூடவே நினைவுக்கு வருவது  ‘ஈடு’ என்ற வார்த்தை தான். ’ஈடு’ என்ற வார்த்தை எதனுடனாவது சேர்ந்து தான் வரும்.
உதாரணம் - காப்பீடு, குறியிடு, முறையீடு, முதலீடு, தலையீடு, வெளியீடு, இழப்பீடு.

நம்பிள்ளை ’ஈடு’ பகவத் விஷயமான திருவாய்மொழியுடன் எப்போதும் சேர்ந்தே வரும். ஈடு என்பதற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கிறது.

திருவாய்மொழிக்கு ஈடான உரை அதனால் ஈடு;

திருவாய்மொழியில் நம்மாழ்வார் ஈடு என்ற வார்த்தையைக் கவசம் என்ற பொருளில் உபயோகிக்கிறார் அதனால் திருவாய்மொழிக்குக் கவசம் போன்றது என்பது இன்னொன்று விளக்கம்

கடைசியில்  பெருமாளிடத்து நம்மை ஈடுபடச் செய்வது அதற்கு ‘ஈடு’ ...எது எப்படியோ, நம்பிள்ளை ஈட்டுக்கு ’ஈடு இணையில்லை’   ஈட்டுக்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

ஸ்ரீராமானுஜர் காலத்துக்கு முன்பு வரை திவ்ய பிரபந்தங்களுக்கும் குறிப்பாக எழுத்து வடிவில் உரை இல்லை. “ஓராண்வழியாக” ஆசாரியர், தங்கள் சிஷ்யர்களுக்கு அதன் விஷேச அர்த்தங்கள் சொல்லப்பட்டு வந்தது.

ஆளவந்தார் காலத்தில் சிலரைக் கொண்ட திரளில் விளக்கம் செய்துள்ள குறிப்பு இருக்கிறது. ஆனால் பாசுரப் பொருள்களைச் சிலருக்கே விரித்துரைக்கும் நிலமையை முழுவதுமாக மாற்றி அமைத்த பெருமை நம் ராமானுஜரையே சாரும். அவர் காலத்தில் தான் முதன் முதலில் திவ்யபிரந்தங்களுக்கு எழுத்து வடிவில் உரை வந்தது. குறிப்பாகத் திருவாய்மொழிக்கு.

வட மொழியில் பல நூல்களை எழுதிய ராமானுஜர் தமிழ்நூல்களில் எதற்கும் உரை எழுதவில்லை என்ற கூற்று ஒன்று ஆராய்ச்சியாளர்களிடம் இருக்கிறது. ஸ்ரீராமானுஜர் ஆழ்வார் பாசுரங்களை சிந்தித்தவாறே இருந்தார் என்பதற்குப் பல சான்றுகள் இருக்கிறது. திவ்ய பிரபந்தங்களுக்கு முதல் முதலில் வியாக்கியானமே உடையவர் ஏற்படுத்தியது தான்.

ஸ்ரீராமானுஜருக்கு பிள்ளையைப்  போன்ற சீடரான ’திருக்குருகைப் பிரான் பிள்ளான்’ ஒரு முறை உடையவரை வணங்கி மடியொதுக்கி வாய் புதைத்து
“ஒரு விண்ணப்பம் !” என்றார்.
“என்ன ?”
“தாங்கள் பிரம்மசூத்திரத்துக்கு ஸ்ரீபாஷ்யம் அருளியசெய்தது மாதிரி திருவாய்மொழி முதலான திவ்வியப் பிரபந்தங்களுக்கும் வியாக்கியானம் அருளிச்செய்ய வேண்டும்”
“செய்யலாம் ஆனால் அடியேன் வியாக்கியானம் செய்தால்..ஆழ்வார்களுடைய அருளிச்செயல்களுக்கு இது தான் பொருள் என்று ஒரு வரம்பு வந்துவிடும். …இதற்கு மேல் எதுவும் இல்லை என்று எல்லோரும் நினைத்துவிடுவார்கள்.. ஆழ்வார்களுடைய அருளிச்செயல்கள் பக்தி பெருகும் பொக்கிஷங்கள்.. அதற்கு அடியேன் உரை எழுதினால் வேலி போட்ட மாதிரி ஆகிவிடும்… பேசாமல் நீரே திருவாய்மொழிக்கு வியாக்கியானம் ஒன்றை செய்யும்” என்று நியமித்தார்.

பிள்ளானும் ஆறாயிரப்படி என்னும் வியாக்கியானத்தை அருளினார். இதுவே முதல் வியாக்கியானம் ஆகும்.

இதற்குப் பிறகு வந்த வியாக்கியானம் ஒன்பதினாயிரப்படி இதை அருளியவர் எம்பெருமானாருடைய பிரதான சிஷ்யரான கூரத்தாழ்வானின் திருக்குமாரரான பட்டரின் சீடரான  நஞ்சீயர் ( இவரைப் பற்றி வேறு ஒரு சமயம் விரிவாகப் பார்க்கலாம் ) ஆழ்வார் கருத்துக்களைச் விரிவாக விளக்கினார்.

நஞ்சீயர் காலம் வரை ஆசாரியர்களின் கருத்து வேற்றுமைகள் இருக்கவில்லை, ஆனால் நஞ்சீயர் காலத்துக்கு பிறகு வரத் தொடங்கியது.

நஞ்சீயருக்குப் பிறகு நம்பிள்ளை ஸ்ரீரங்கத்தில் திவ்யபிரபந்தங்களின் பொருளை பலருக்கு உபதேசித்தார். அவருடைய பிரதான சிஷ்யர்களான பெரியவாச்சான் பிள்ளை ‘இருபத்து நாலாயிரப்படி’ அருளினார். ( பெரியவாச்சானுடன் ஒரு நாள் என்ற கட்டுரையை விருப்பம் இருப்பாவர்கள் படிக்காலாம் )

நம்பிள்ளையின் மற்றொரு சிஷ்யரான வடக்குத் திருவீதிப் பிள்ளை திருவாய்மொழிக்கு நம்பிள்ளை ஆற்றிய கால்டசேபங்களைக் அடிப்படியாகக் கொண்டு ‘ஈடு முப்பத்தாறாயிரப்படி’ என்று அருளினார்.

இவை எல்லாம் மணவாளமாமுனிகள் காலம் வரை ரஹஸ்யமாகவே உபதேசிக்கப்பட்டு வந்தது. பிறகு மாமுனிகளால் உலகெங்கும் பரவி இன்று ரைட் க்ளிக்கினால் பிடிஃப் (PDF) வடிவில் வந்து விழுகிறது.

நம்பிள்ளை இன்றைக்கு 870 ஆண்டுகளுக்கு முன் காவிரியின் தென்கரையிலுள்ள நம்பூர் என்ற கிராமத்தில் ‘வரதராசர்’ என்ற திருநாமத்துடன் 105 காலம் வாழ்ந்தார்.
அவரை ‘நம்பூர் வரதாசர்’ என்று அழைப்பர்.

குருபரம்பரையில் பட்டர் , நஞ்சீயர், நம்பிள்ளை என்ற வரிசை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதனால் பட்டர் பரமபத்தித்த பின்னர் தான் நம்பிள்ளை அவதரித்தார் என்ற எண்ணம் வரும். ஆனால் பட்டர் வாழ்ந்த காலத்திலேயே நம்பிள்ளையும் வாழ்த்திருக்கிறார். இத்தகவல் குருபரம்பரையில் இல்லாதது வியப்பே!. இதைத் அவருடைய வியாக்கியானங்களில் வரும் ஐதிகங்களைக் கொண்டு நாம் தெரிந்துகொள்ளலாம்.

இந்தத் தகவல்களை கொண்டு தான் நம்பிள்ளையின் கதையை உங்களுக்குச் சொல்ல போகிறேன்.

பட்டர் வாழ்ந்த காலத்தில் நம்பிள்ளையும் வாழ்தார். அப்போது பட்டரிடம் கேட்ட அரும்பொருள்கள் அவர் மனதில் ஆழப் பதிந்து, பட்டரின் அருளுரைகளை செமிக்கும் கிடங்காக அது இருந்தது. பட்டர் பரம்பதித்த பிறகு நஞ்சீயர் ஆசாரியரானார்.   பட்டர் போலவே நஞ்சீயர் காலஷேபங்களை  நம்பிள்ளை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருந்தார்.

நஞ்சீயர் பட்டரின் ஆணைப்படி திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப்படி என்ற வியாக்கியானத்தை இயற்றியிருந்தார். அதை ’படிக்கும் படியாக’ இன்னொரு படி(copy) ( அப்போது எல்லாம் ஸிராக்ஸ் கிடையாது ! ) எடுத்தால் நன்றாக இருக்கும் என்று விருப்பப்பட்டார். பள்ளியில் அழகாகக் கையெழுத்து இருக்கும் மாணவனைக் கொண்டு ரிகார்ட்  நோட்ஸ் எழுதித் தர சொல்லுவது போல

“அழகாகப் பிரதி எழுதித் தருவாருண்டோ ?” என்று சிஷ்யர்களை கேட்டார் நஞ்சீயர்.
“இங்கே அடிக்கடி வரும் நம்பூர் வரதர்” என்று சிஷ்யர்கள் அவரை அறிமுகப்படுத்தினார்கள்.
நம்பூர் வரதரிடம் “ஒரு கிரந்தம் எழுதிக் காட்டும்” என்று நஞ்சீயர் விண்ணப்பிக்க
வரதராஜர் எழுதிக் காட்டினார்.
எழுத்துக்கள் முத்து போன்று இருந்ததைக் கண்டு மிகுந்த சந்தோஷமாக அவரைத் தேர்ந்தெடுத்தார். பகவத் விஷயமாக இருப்பதால் இவரிடம் இதை எப்படித் தருவது என்று தயங்கினார் நஞ்சீயர்.

குறிப்பறிந்த நம்பூர் வரதராசர் “அடியேனைத் தேவரீர் திருவுள்ளக் கருத்தின்படியே திருத்திப் பணிகொள்ளல் ஆகாதோ?” என்றார்

நஞ்சீயரும் மகிழ்ச்சியுடன் அவரைத் திருத்திப் பணி கொண்டு, பட்டோலையில் எழுதின ஒன்பதினாயிரப்படியை ஒரு முறை காலஷேபம் சாதித்து, இப்படியே தப்பாமல் எழுதித் தாரும்” என்று சுவடிக்கட்டை அவரிடம் ஒப்படைத்தார்.

”அடியேன் ஊருக்குச் சென்று கவனமாக எழுதிக் கொண்டு வருகிறேன்” என்று விடைபெற்று ஊருக்குக் காவேரியை கடந்து செல்லும் போது நடுவில் வெள்ளப்பெருக்கு அதிகமாக சுவடிக்கட்டை தலையில் கட்டிக்கொண்டு நீந்திக் கடக்கும் போது அது நழுவி காவிரியில் அடித்துச் சென்றது.

என் ஹார்ட் டிஸ்க் பிரச்சனை கொடுத்த சமயம் எனக்கு இந்தச் சம்பவம் தான் நினைவுக்கு வந்தது. விஷயமே இல்லாத நமக்கு இவ்வளவு வருத்தம் என்றால் பகவத் விஷயத்துக்கு  நம்பிள்ளை என்ன மாதிரி மனகஷ்டத்தில் இருந்திருப்பார் ?

கரையை  அடைந்த வரதராசர் “பட்டோலை போய்விட்டதே! ஆசாரிய அபச்சாரம் ஆகிவிட்டதே இனி என்ன செய்வது ?” பதட்டதுடன் வருத்தமும் சேர்ந்துக்கொண்டது.

தமது இல்லம் சென்று, திருவாராதனப் பெருமானுக்கு ஆராதனம் செய்தபின் உண்ணாமல் படுத்துறங்கினார்.

“வருந்த  வேண்டாம்... உம்முடைய ஆசாரியனை முன்னிட்டு நீ எழுத ஆரம்பியும், உம் நினைவில் உம்முடைய ஆசாரியன் சொன்னவற்றை ஒன்றும் தவறாது எழுத உதவுவோம்!” என்று கனவில் உத்திரவாதம் கொடுத்தார் நம்பெருமாள்!

வரதராசர் எழுத தொடங்கினார். ஆசாரியர் அருள், நம்பெருமாள் துணையிருக்கஞாபக் சக்தியை கொண்டு 8-10 நாளில் தவமாக எழுதி முடித்தார்.

வரதரசர் தமிழில் வல்லவர்,  பல இடங்களில் சில விசேஷ அர்த்தங்களையும் ’எக்ஸ்டரா டாப்பிங்காக’ சேர்த்து எழுதி சுவடிக்கட்டை நஞ்சீயர் திருக்கரத்தில் சேர்ப்பித்தார்.

நஞ்சீயரும் அதனை அவிழ்த்து படித்துப் பார்த்தார். மூலப்பிரதியை காட்டிலும், பல இடங்களில் சொற்களுக்குத் விசேஷார்த்தங்களும் இருப்பதைக் கண்டு
“வேறு மாதிரி இருக்கிறதே  உண்மையைச் சொல்லும்?” என்று கேட்க
வரதராசரும் அச்சங்கொண்டு தயங்கி நிற்க
“அஞ்ச வேண்டாம்; உண்மையைச் சொல்லும்” என்று கேட்க நடந்தவற்றைச் சொன்னார் நம்பூர் வரதர்.

நஞ்சீயர் வரதாராசருடைய அறிவும் ஆற்றலையும் வியந்து திருவுள்ளமுகந்து “இவர் நம் பிள்ளை” என்று தழுவிக்கொண்டார். அன்று முதல்  வரதராசர்  ‘நம் பிள்ளை’யானார்.

நம்பெருமாள் நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை
என்பர் அவர் தம் ஏற்றத்தால் - அன்புடையோர்
சாற்று திருநாமங்கள் தான் என்று நன் நெஞ்சே
ஏத்ததனைச் சொல்லி நீ இன்று ( உபதேசரத்தின மாலை - 50 )

என்கிறார் மணவாள மாமுனிகள்

நம்பிள்ளையின் ஈட்டில் பல வரலாற்று தகவல்கள், அந்த கால வாழ்க்கை முறை நமக்கு கிடைக்கிறது. ஆனால் அதைவிட முக்கியம்  அவருடைய வாழ்க்கை குறிப்பில் ஸ்ரீவைஷ்ணவர் எப்படி இருக்க வேண்டும் என்று நமக்கு சொல்லும் பாடங்கள் தான். சிலவற்றை உங்களுடன் பகிர்கிறேன்.

நஞ்சீயர் நம்பிள்ளையை தன் பிள்ளையைப் போல திருவாய்மொழியையும், மற்ற பிரபந்தங்களையும் ஊட்டி வளர்த்தார். நம்பிள்ளையின் உரைத்திறனை அவர் நஞ்சீயரின் உரையாடல்களில் தெரிந்துகொள்ளலாம். அவை “practice what you preach” ரகங்கள்.

நம்பிள்ளை கேள்வி: “ஸ்ரீவைஷ்ணவன் என்று ஒருவன் தன்னை எப்போது நினைத்துக்கொள்ளலாம் ?”

நஞ்சீயர் பதில்: மூன்று விஷயங்கள்
வைகுண்டத்தில் இருக்கும் பெருமாளும்,  கோயிலில் இருக்கும்  பெருமாளும் ( அர்ச்சாவதாரம் ) ஒன்று தான் என்று எப்போது ஒருவன் நினைக்கிறானோ அப்போது.
தன் மனைவி, குழந்தைகளிடம் கொண்டிருக்கும் அதே அன்பை மற்ற  ஸ்ரீவைஷ்ணவர்களிடமும காண்பிக்கும்  போது.
எந்த ஸ்ரீவைஷ்ணவன் தன்னை திட்டினாலும் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு, திட்டியவரை ஸ்ரீவைஷ்ணவராக ஏற்றுக்கொள்ள வேண்டும்

( தெருவில் குழந்தைகள் மண் உருண்டையை பிரசாதமாக கொடுத்து அதை ஸ்ரீராமானுஜர் ஏற்றார் என்பதை இங்கே நினைத்துப்பாருங்கள் )

நம்பிள்ளையின் கேள்வி -  ”பாகவத அபசாரம் என்றால் என்ன ?”

நஞ்சீயர் பதில்  : “ மற்ற ஸ்ரீவைஷ்ணவர்களையும் நம்மைப் போன்றவர்கள் என்று நினைப்பதே பாகவத அபச்சாரம்!. பாகவதர்கள் நம்மைக் காட்டிலும் பல மடங்கு மேலானவர்கள் என்று ’தொண்டரடிப்பொடியாக’ உள்ளத்தால் நினைக்க வேண்டும்.

ஒரு நாள் நம்பிள்ளை நஞ்சீயரிடம் ஸ்ரீபாஷ்யம் கேட்டுக்கொண்டு இருந்தார்.
பெருமாளுக்குத் திருவாராதனம் செய்யும் நேரம், தளிகை ஆகிவிட்டது. நஞ்சீயர் நம்பிள்ளையிடம் “நீரே இன்று பெருமாளுக்கு திருவாராதனம் செய்யும்” என்றார்.
“அடியேனுக்கு முழுமையாகத் தெரியாது…” என்றார் நம்பிள்ளை
“எனக்கு மட்டும் முழுமையாகத் தெரியுமா என்ன ?  த்வய மஹா மந்திரத்தை சொல்லி அவனுக்கு எதைக்கொண்டுத்தாலும் கேள்வி கேட்காமல் ஏற்றுக்கொள்ளும் எளியவன், சுலபன் அவன் என்று
பரிவது இல் ஈசனைப் பாடி*
விரிவது மேவல் உறுவீர்!*
பிரிவகை இன்றி நல் நீர் தூய்*
புரிவதுவும் புகை பூவே.
என்ற திருவாய்மொழியை எடுத்துக்காட்டாகச் சொல்கிறார்.
[நல்ல நீரைத் தூவி, புகையை புகைத்துப் பூவை அவன் திருவடிகளில் அவன் சுலபன், சுலபமாக ஏற்றுக்கொள்வான்! ]
மேலும் பல உடையாடல்கள் இருக்கிறது. பிறகு ஒரு சமயம் விரிவாக எழுதுகிறேன்.

நஞ்சீயர் தம் வாழ்நாளில் நூறுமுறை திருவாய்மொழிக்கு காலஷேபம் சாதித்தார். ஒரு முறை கூட தப்பாமல் அதை நூறுமுறையும் கேட்டார் நம்பிள்ளை. நூறாவது முறை நடந்த பின் தன் ஆசாரியருக்கு பெரும் சிறப்புடன் சதாபிஷேகம் செய்து மகிழ்ந்தார் நம்பிள்ளை.

ஆழ்வார் அருளிச்செயல்களுக்கு சில சமயம் நம்பிள்ளை தமக்கு நெஞ்சிற்பட்ட வேறு பொருளைக் நஞ்சீயரிடம்  கூறுவார். நஞ்சீயரும் அதைப் பாராட்டுவார். சீடர்கள் சிலர், இது போல ஆசாரியன் சீடனைப் பாராட்டிப் பேசலாமோ ? என்று கேட்க ‘வளர்த்ததனால் பயன் பெற்றேன்’ என்று திருமங்கையாழ்வார் கிளியை கைகூப்பி வணங்கியதை குறிப்பிடு, சிஷ்யன் ஆனாலும் தகுந்த பொருளைக் கூறினால் பாராட்டலாம் என்றார்.

நம்பிள்ளை நஞ்சீயர் சொன்ன definition படி ஒரு  சிறந்த ஸ்ரீவைஷ்னவராக வாழ்ந்தார் என்பதற்கு அவர் வாழ்கையில் நடந்த சம்பவங்களே எடுத்துக்காட்டு.

’நம் கூரத்தாழ்வான்’ போல இவரும் முக்குறும்புகள் அற்ற நற்பண்புகளை உடையவராக இருந்திருக்கிறார். குலச்செருக்கு, கல்விச்செருக்கு, செல்வச்செருக்கு ஆகிய வஞ்ச முக்குறும்புகளையும் அடியோடு ஒழித்து ’அடக்கம் அமரருள் உய்க்கும்’படி விளங்கினார். 



திருவரங்கம் இராசமகேந்திரன் திருச்சுற்றில் பெரிய பெருமாளின் திருவடிக்கீழ் ஒரு நான்கு கால் மண்டபத்தூணில் சாய்ந்து கொண்டே திருவாய்மொழி காலஷேபம் நிகழ்த்துவார். எங்கே மக்கள் பெருந்திரளாக கூடினர்.
“நம் பெருமாள் கோஷ்டியோ நம்பிள்ளஒ கோஷ்டியோ” என்று மக்கள் வியந்து பேசினார்கள். இன்றைக்கும் விஷயம் அறிந்தவர்கள் அந்த இடத்தை வணங்கிவிட்டுச் செல்வதை பார்க்கலாம். ( பார்க்கப் படம் )

ஒரு முறை இந்த இடத்தில் நம்பிள்ளை காலஷேபம் செய்த போது, பெரிய பெருமாள் ஜயவிஜயர்களுக்கு அருகிலிருந்து எட்டிப் பார்க்க முற்பட்ட போது அங்கே விளக்கு பிடித்திருக்கு ‘திருவிளக்கு பிச்சன்’ மீது பெருமாள் இடித்துவிட “இப்படிச் செய்யலாமோ ? உள்ளே எழுந்தருளும்” என்று நியமிக்கப் பெரிய பெருமாளும் உள்ளே சென்று மறுபடியும் சயனித்தார்.

பெருமாளையே எட்டிபார்க்க வைத்த நம்பிள்ளை
ஒருமுறை பிள்ளையாத்தான் என்னும் செல்வர் நஞ்சீயரிடம் திருவாய்மொழி பொருள் கேட்க சென்றார். சீயர் அவரை நம்பிள்ளையிடம் அனுப்பினார். செல்வந்தரோ நம்பிள்ளையை தெண்டனிட்டு வணங்கத் தயங்கினார். நஞ்சீயர் துறவி அதனால் அவரை வணங்கலாம் ஆனால் நம்பிள்ளையோ தன்னைவிட இளையவர் குடும்பஸ்தர்  எப்படி அவரை வணங்குவது என்று தயங்கினார்.

இதை அறிந்த நஞ்சீயர், நம்பிள்ளையை அழைத்து செல்வந்தருக்கு ‘பாங்கானபடி’ பொருள் உரைக்குமாறு ஆணையிட்டார். நம்பிள்ளையும் நஞ்சீயரின் குறிப்பறிந்து, அச்செல்வந்தரை ஓர் இருக்கையில் உயர அமர்த்தித் தான் கீழே உட்கார்ந்துகொண்டு திருவாய்மொழியின் பொருளை உபதேசித்து வந்த போது திருவாய்மொழி (3.7.3) பாடல் வந்தது

நாதனை, ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனை* பொன் நெடும் சக்கரத்து எந்தை பிரான்தன்னை*
பாதம் பணிய வல்லாரைப் பணியும் அவர் கண்டீர்*
ஓதும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடையார்களே. ( 3.7.3 )

இதற்குச் சுலபமான அர்த்தம் - இப்பூவுலகில் வானுலகும் வணங்கத் தக்க என் தந்தையான எம்பெருமான், திருத்துழாய் மாலை சூடிச் சக்கரம் ஏந்தியவன் இப்பகவானைப் பணிந்து திருவடிகளைத் தொழும் அடியார்களுக்கு ஆட்பட்ட பரமபாகவதர்களே எல்லாப் பிறவிகளிலும் எம்மை ஆளும் தலைவர்கள் ஆவார்கள் என்று நம்பிள்ளை அடியார்களின் ஏற்றத்தை விரித்துரைக்க அதைக் கேட்ட செல்வந்தர் தன்னுடைய தவற்றை உணர்ந்து, நம்பிள்ளையை தெண்டனிட நம்பிள்ளை அதை ஏற்கவில்லை.

செல்வந்தர் நஞ்சீயரிடம் முறையிட்டு, நம்பிள்ளையின் திருவடிகளை வணங்கினார். திருவாய்மொழிக்குச் சீடரை வணங்கி உபதேசித்து பொருள் உரைத்த பண்பாளராக விளங்கினார் நஞ்சீயர்.

கூரத்தாழ்வான், முதலியாண்டானின் பேரன்களின் மீது பேரன்பு செலுத்திய இருவேறு நிகழ்ச்சிகள் நமக்கு மன நெகிழ்வை உண்டாக்கும்.

கூரத்தாழ்வான் பேரன் -  நடுவில் திருவீதிப்பிள்ளை பட்டர்  ; முதலியாண்டானுடைய பேரன் - கந்தாடைத் தோழப்பர். இருவரும் நம்பிள்ளையிடம் புலமைக்காய்ச்சலால் பொறாமையுற்று அவரிடம் விரோதம் பாராட்டினார்கள்.

நடுவில் திருவீதிப்பிள்ளை பெரிய வித்வான். ஒரு முறை சோழ அரசவைக்கு அழைக்கப்பட்டார். கூடப் பின் பழகிய பெருமாள் ஜீயரை அழைத்துச்சென்றார். அரசன் ஏதோ வேலைப்பார்த்துக்கொண்டே ஸ்ரீராமாயணத்தில் ஒரு சந்தேகம் கேட்டுவிட்டு தன் பணியில் மீண்டு ஈடுபடத் தொடங்கினான். பட்டருக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. ஜீயரிடம் “இதற்கு நம்பிள்ளை எப்படி பொருள் கூறுவார்?” என்று கேட்டார். ஜீயரும் அதற்கு நம்பிள்ளை எப்படி விளக்கம் சொல்லுவார் என்று எடுத்துக்கொடுக்க அதையே பட்டரும் அரசனிடம் சொல்ல, அரசன் மகிழ்ச்சியடைந்து பரிசுப் பொருள்களை வழங்கினான்.

பட்டர் நேராக ஸ்ரீரங்கம் விரைந்தார். பரிசுப்பொருள்களை நம்பிள்ளையின் திருவடிகளில் சம்பர்பித்து “தேவரீருடைய பொருளுரையில் பதினாயிரங் கோடியில் ஒன்றுக்குப் பெற்ற செல்வம் இது” என்று காலில் விழுந்தார்.

“கூரத்தாழ்வானின் திருபேரனான நீர் இப்படிச் செய்யலாமோ ?” என்று நம்பிள்ளை அவரை வாரி அணைத்துக் கொண்டார்.

இதே போல முதலியாண்டானின் திருப்பேரனார் கந்தாடைத் தோழப்பர் பெரிய பெருமாள் சன்னதிக்கு முன் நம்பிள்ளை பெரிய கோஷ்டியுடன் வர அதைக் கண்டு பொறாமைப் பட்டார்  தோழப்பர். நம்பிள்ளையை  கடும் சொற்களால் கடிந்துகொண்டார்.

பெருமாள் சேவித்துவிட்டு நம்பிள்ளை  மனது கஷ்டப்பட்டு அமைதியாக தம் அகத்துக்குச் சென்றுவிட்டார். தோழப்பருடைய மனைவி சிறந்த அறிவாளி. நம்பிள்ளையின் சொற்பொழிவுகளைக் கேட்டவள். இந்த நிகழ்ச்சியைக் கேள்விப்பட்டு கணவரிடம் முகம் கொடுக்காமல் இருந்தாள். தோழப்பர் “ஏன்?” என்று கேட்க
அவள் ”ஆழ்வாரின் அவதாரம் போன்ற நம்பிள்ளையிடம் எப்படி அபச்சாரம் படலாம் ? உம்மோடு வாழவே பிடிக்கவில்லை ?” என்றாள்
தோழப்பரும் மனம் வருந்தி ”நம்பெருமாளின் காலில் விழுந்துவிடலாம்” என்று முடிவு செய்தார் அதற்கு அவள் மனைவி
“குளத்தில் துலைத்துவிட்டு குட்டையில் தேடலாமோ ?” என்று கூறி “நம்பிள்ளை திருவடிகளிலே விழுவதே வழி” என்று மனைவி சொன்னதை ஆமோதித்த தோழப்பர்.


பொழுது சாய்ந்த பின்  மனைவியுடன் வீட்டுக் கதவை திறக்க அங்கே திண்ணையில்  நம்பிள்ளை படுத்துக்கொண்டு இருப்பதைக் கண்டார்.

எதற்கு வந்திருக்கிறார் என்று தெரியாமல் மீண்டும் கடும் சொற்களால்

“கோயிலில் இன்று நான்  பேசியதற்கு என்னைப் பழிவாங்க இங்கு வந்தீரோ ?” என்று கேட்க
“அப்படி இல்லை பெரிய பெருமாள் சன்னதியில் முதலியாண்டானுடைய திருப்பேரனாரான தங்கள் திருவுள்ளம் கலங்கும் படி நடந்துகொண்ட பாவியை மன்னிக்க வேண்டும்” என்று நம்பிள்ளை காலில் விழ
இதைக்கேட்டு மயிர்க்கூச்செறியப் பெற்ற தோழப்பர் நம்பிள்ளையை வாரியணைத்துக் கொண்டு “இவ்வளவு நாளும் உம்மைச் சிலருக்கே ஆசாரியன் என்று நினைத்திருந்தேன்; இப்போது உலகுக்கெல்லாம் நீரே ஆசாரியராவதற்குத் தகுதி பெற்றவர்” என்று இன்று அறிந்தேன். இனி உம்மை உலகம் “லோகாசாரியர்” என்று அழைக்கட்டும் என்று தாமும் தன் மனைவியும் நம்பிள்ளையைக் கௌரவித்து சிஷ்யர்களானார்கள்.

உபதேசரத்தின மாலையில் இந்த நிகழ்வை
தன்னுபுகழ்க் கந்தாடை தோழப்பர் தம் உகப்பால்
என்ன உலகாரியரோ என்று உரைக்கப் - பின்னை
உலகாரியன் என்னும் பெயர் நம்பிள்ளைக்கு ஓங்கி
விலகாமல் நின்றது என்று மேல் ( 51 )
என்கிறார் மாமுனிகள்.




நம்பிள்ளையின் வாழ்கையில் மேலும் பல தகவல்கள் கொட்டிக்கிடக்கிறது ..

ஒரு சமயம் நம்பிள்ளை நோய்வாய்ப்பட்டார். தன்னிடம் ஆற்றல் இருந்தும் அதைக்கொண்டு நோயைத் தீர்த்துக்கொள்ளச் சிறிதும் விரும்பவில்லை. அவர் மீது பரிவுகொண்ட சிலர் மந்திரங்களைப் பிரயோகித்து பரிஹாரிக்க முயற்சி செய்த போது அதைத் தடுத்தார். அவருக்குத் துவயம் என்ற மந்திரத்தைத் தவிர மற்ற மந்திரங்களை அவர் நினைத்துப்பார்த்ததில்லை. ஆனால் துவயத்தை தம்முடைய உடல் நோயை தீர்க்கும் உபாயமாக்கிக்கொள்ள விரும்பவில்லை. நோயினால் திருமேனி இளைத்தது.
ஓர் அன்பர் “என்ன உடம்பு ஆரோக்கியம் இல்லையா ?” என்று விசாரித்த போது
“போர் செய்யவா போகிறேன்.. பெருமாளைச் சேவிக்க வேண்டிய அளவு ஆரோக்கியத்துக்கு இது போதும்” என்று பதிலளித்தார்.

 நம்பிள்ளை வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொண்ட நாம் அவர் வாழ்ந்த காலம், ஊர்களை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளாமல்  அவர் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையில் சிலவற்றையாவது பின்பற்ற முயற்சிக்கலாம்.

அடுத்த முறை நாம் பெருமாளுக்கு தீப்பந்தம் பிடித்துவருபவர்களை ’தீவிட்டி தடியன்’ என்றும் அவர்களைக் கவுரவ குறைச்சலாகப் பார்ப்பதையும் விட்டு பெருமாளுக்கு கைங்கரியம் செய்பவர்களாக பார்க்க வேண்டும். பெரிய பெருமாளிடம் இடிபட்டுப் பேசிய குலம் என்று நாம் அவர்களைக் கருத வேண்டும்.

யாதவப்பிரகாசரை ஏதோ வில்லன் மாதிரி நினைத்து அவன் இவன் என்று நாம் ஸ்ரீரமானுஜரின் மீது இருக்கும் அபிமானத்தால் பேசுகிறோம், எழுதுகிறோம். யாதவபிரகாசர் ஸ்ரீராமானுஜரை ஆசர்யித்து ’கோவிந்த ஜீயர்’ என்ற திருநாமத்துடன் ஸ்ரீராமானுஜரின் நியமனத்தால் சந்நியாசிகளின் தர்மங்களை விளக்கும் ‘யதிதர்ம சமுச்சயம்’ என்னும் நூலை இயற்றினார். யதிகளுக்குக் கையேடாக விளங்குகிறது.

ஸ்ரீவைஷ்ணவ லட்சணம் என்று இதை எல்லாம் படித்துவிட்டு, கோயிலுக்கு வருபவர் என்’கலை’யா என்று  பார்ப்பதே அபச்சாரம்!



ஸ்ரீரங்கம் நம்பிள்ளை பகவத் விஷயம் சாதித்த இடம்
பஸ்ஸில் ஜன்னல் ஓரமாக சீட் பிடிப்பதற்கு கர்சீப் போடுகிறோம். வைகுண்டத்தில் சீட் பிடிக்க அடுத்த முறை ஸ்ரீரங்கம் சென்றால் நம்பிள்ளை அமர்ந்து காலஷேபம் சாதித்த 870 வருடம் பழமையான இடத்தைச் சேவித்துவிடுங்கள்.

நம்பிள்ளை சொன்னதால் ஒரு பெண்மணிக்கு  வைகுண்டத்தில் இடம் கிடைத்த கதை ஒன்றும் இருக்கிறது !

Comments

  1. Very nice Sir. Lovely writing. Can you please proof-read once again? Some typos have crept in. And in one or two places, sentence formation needs to be checked too. Otherwise, an excellent article. God bless you.

    ReplyDelete
    Replies
    1. ஆகா! அருமை! தயவுசெய்து நம்மாழ்வார் முதல் மணவாள மாமுனிகள் வரை ஆசார்ய பரம்பரையை விவாக எளிய தமிழில் எழுதும் படி பிரார்த்திக்கிறேன்.

      Delete
  2. Jagannathan RajagopalMarch 28, 2017 at 8:44 PM

    The beginning - you saw Krishnar in the blue screen of the monitor! Read again. Will read again. Awaiting tge next story indicated at the end!

    ReplyDelete
  3. Arumai.i am Sujatha's fan in lowkiha vishayam.Now in Nmika matters I am Sujathadesikan's fan.

    ReplyDelete
  4. Arumai.i am Sujatha's fan in lowkiha vishayam.Now in Nmika matters I am Sujathadesikan's fan.

    ReplyDelete
  5. sir please write about ramanujar full history if not possible kindly refer good books
    Ramesh R
    Thanjavur

    ReplyDelete
  6. Had tears rolling down my eyes when reading such articles. I am performing countless apacharas due to mukkurumbugal. Hope reading the life history of such Acharyas will enlighten me to come out from the catch of mukkurumbugal. Bhagavath vishayam Thiruvaimozhi. Bhagavatha vishayam Ramanuja Nootrandhathi and UpadesaRathinamalai. All Sri Vaishnavas must know these 3. Uyya Ore vazhi Udayavar Thiruvadi...

    ReplyDelete
  7. Forgot to mention in my last comment. You are doing an excellent job. I pray Namperumal to give you more time and knowledge to write more. All the best for your project on Udayavar Varalaru..

    ReplyDelete
  8. Reading again and again with years swelling and heart trembling with the deepest respect, inexplicable emotions and the ultimate surrender unto Their Feet, with no.words to explain. Your million minute, the most adorable explanations, serve the tailor made pathway for the untold peace of mind and the Margam we should follow, for which we are born. Nothing gives happiness and security for a place over There, other than reading your descriptions!!!!! Crafted and sculptured with so much of meticulousness and efforts, inexplicable. So great Desikan. You fill our hearts with your posts of a treasure, unmeasyed!!!

    ReplyDelete
  9. அடியேன் ராமானுஜதாசன்!, அருமையான தகவல்கள் நண்பரே. வாழ்த்துக்கள்!

    ReplyDelete

Post a Comment