எங்கும் ராமர் கலர் “உன்னை தண்ணியில்லா காட்டுக்கு மாத்திருவேன் பார்த்துக்க” என்ற மெரட்டலுக்கு அடிபணியாத சினிமா கதாநாயகன் மாற்றப்படும் இடமான இராமநாதபுரத்துக்கு தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது திருப்புல்லாணி திவ்யதேசம். எந்த கல்லுரியிலும் தமிழில் முனைவர் பட்டம் வாங்காத ஆண்டாள் “ஓத மாகடல் வண்ணா உன் மண வாட்டி மாரோடு சூழறும் சேதுபந்தம் திருத்தினா யெங்கள் சிற்றில் வந்து சிதையேலே - 520 என்று எந்த எஞ்சினியரிங் காலேஜிலும் பட்டம் வாங்காத ஸ்ரீராமருக்கு உதவ வந்த வானர சேனையினால் கட்டப் பட்ட சேது என்று மங்களாசாசனம் செய்கிறார். ‘ஸேது’ என்றால் வடமொழியில் “அணை” என்று பொருள். “ஆஸேது ஹிமாசலம்” என்று பழங்கால வழக்கு 400கிமீ தள்ளி, தற்போது “இமயம் முதல் குமரி வரை” என்று மாறிவிட்டது. “திருஅணை காண அருவினை இல்லை” என்ற பழமொழிக்கு சுலபமான அர்த்தம் - இராமர் கட்டிய இத் திருஅணையை பார்த்தால் நம் பாவங்கள் போகும். பார்த்தாலே பாவங்கள் போகும் என்கிறார்கள். நான் பார்த்து, குளித்துவிட்டு என்னுடைய பாவ கவுண்டரை ரிசெட் செய்துவிட்டு திரும்பினேன். கோடியில் இருக்கும் தனுஷ்கோடி ...