Skip to main content

மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்

மணவாள மாமுனிகள்
திருவஹிந்திரபுரம்
இந்த ஆனி மூலம் என் கைக்கு ஸ்வாமி நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழி ஈடு முப்பத்தாறாயிரப்படி வ்யாக்யான புத்தகம் புத்தகம் கிடைத்தது. அன்று தான் "ஸ்ரீசைலேச தயாபாத்ரம்"
அவதார தினம்.

சில ஆண்டுகளுக்கு முன்  திருவஹிந்திரபுரத்துக்கு முதல் முறை சென்றிருந்தேன். தேவநாதப் பெருமாள், ஸ்வாமி தேசிகன் அவர் அங்கே தன் கையாலேயே
வெட்டிய அழகான கிணறு என்று எல்லாவற்றையும் சேவித்துவிட்டு வரும் போது வடக்கு மாட வீதியில் மணவாள மாமுனிகள் சந்நதியை பார்த்தவுடன்
அவரையும் சேவித்துவிட்டு வந்துவிடலாம் என்று உள்ளே சென்றேன். அதுவரை எங்கள் கூடவே வந்த ஒரு உறவினர் ( அந்த ஊர்க்காரர் தான் ) இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை “நீங்க உள்ளே சென்று சேவித்துவிட்டு வாங்க... அடியேன் இங்கேயே இருக்கிறேன்” என்றார். எனக்குப் புரியவில்லை.
சந்நதியின் உள்ளே மணவாள மாமுனிகளைக் காணவில்லை ஆனால் மினியேச்சர் சைசில் பார்த்தசாரதி பெருமாள் இருந்தார் !





அங்கே இருந்த அர்ச்சகர் ஸ்வாமியுடன் கேட்ட போது ”இன்று மணவாள மாமுனிகள் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோலம்” என்றார்.
அந்த மாதிரி ஒரு திருக்கோலத்தை என் வாழ்நாளில் அனுபவித்ததில்லை.

ஸ்ரீவைஷ்ணவ ஆசாரிய குருபரம்பரையில் கடைக்குட்டியாக விளங்குபவர் ஸ்வாமி மணவாள மாமுனிகள் (காலம் கிபி 1370 - 1443 முதல் ). அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் என்று பெயர் பெற்றவர். ஆதிசேஷனுடைய அவதாரமாகமும், பகவத் இராமானுசரே மாமுனிகளாக அவதாரம் எடுத்தார் என்று கூறுவர். நம் நம்மாழ்வார் அவதரித்த அதே திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியிலேயே அவதரித்து, உபதேசரத்தின மாலை என்ற பொக்கிஷத்தை நமக்கு அருளிச்செய்தவர்.

அவருடைய வாழ்கை வரலாற்றில் பல சுவாரஸியமான சம்பவங்கள் இருக்கிறது. அதிலிருந்து சிலவற்றை இங்கே தருகிறேன். முதலில் எப்படி சந்நியாசம் மேற்கொண்டார் என்று பார்த்துவிடலாம்.

மணவாள மாமுனிகளின் குடும்பம் பெரியது, அடிக்கடி யாராவது பரம்பதம் அடைவதால் கோயிலினுள் செல்ல முடியாதபடி தீட்டு ஏற்பட்டுவந்தது. உடையவர் போல் இவரும் ஸ்ரீரங்கத்தில் நித்தியவாசமாய் பெரியபெருமாளுக்கு கைங்கரியம் செய்துக்கொண்டு இருக்கும் போது இவர் கைங்கரியத்துக்கு இந்த தீட்டினால் தடை ஏற்பட, அவர் சன்னியாசம் மேற்கொண்டார். அரங்கனின் கைங்கரியத்துக்காக !

வியாக்கியானச் சக்கரவர்த்தி’என்று போற்றப்படும் பெரியவாச்சான் பிள்ளை நாலாயிரத்துக்கும் உரை எழுதியவர். ஆனால் காலப் போக்கில் பெரியாழ்வார்
திருமொழியில் ஐந்தாம் பத்தில் தொடங்கும்

“வாக்குத் தூய்மை இலாமையினாலே
மாதவா உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் ..” என்ற திருமொழிக்கு பிறகு உரையைக் கரையான் அரித்துவிட்டது. மணவாள மாமுனிகள் பெரியாழ்வார் திருமொழி கடைசியிலிருந்து உரை எழுதி வாக்கு தூய்மை என்ற இடம் வந்த உடன் அதை நிறைவு செய்தார். காணாமல் போன உரைக்கு அவர் புத்துயிர் கொடுத்தார். அடியேனுக்கு மிகவும் பிடித்த திருமங்கையாழ்வார் வடிவழகு என்று சூர்ணிகையை இன்றும் கேட்டுக்கொண்டே
இருக்கலாம்.

உடைவர் சமிஸ்கிரத வேதங்களுக்குச் சிறந்த உரைகளை எழுதி சம்பிரதாயத்தை வளர்த்தார். ஸ்ரீராமானுஜர் தன்னுடைய காலட்சேபத்தில்  (சொற்பொழிவில்) நிறையத் தமிழ் பிரபந்தங்களைக் கூறி அதிலேயே பேசி மகிழ்ந்தார். ஆனால் எந்தத் தமிழ் பிரபந்தங்களுக்கும் அவர் காலத்தில் உரை எழுதவில்லை. அந்தக் குறையை ஸ்வாமி மணவாள மாமுனிகள் பூர்த்தி செய்தார் என்றால் மிகையாகாது. சுவையான சம்பவம் ஒன்று இருக்கிறது. இவருடைய ஆசாரியர் திருவாய்மொழிப்பிள்ளை,  பெயருக்கு ஏற்றார் போல் திருவாய்மொழியில் மிகுந்த பற்றிக்கொண்டவர். இவர் தான் மணவாள மாமுனிக்கு எல்லா விஷேச அர்த்தங்களை உபதேசம் செய்தவர். அவர் ஸ்வாமி மணவாள மாமுனியிடம் ஒரு சத்தியம் வாங்கிக்கொள்கிறார். அது வடமொழியில் ஸ்ரீராமானுஜர் அருளிச்செய்த ஸ்ரீபாஷ்யத்தை ஒரு முறை மட்டுமே பிரச்சாரம் செய்ய வேண்டும் அதற்குப் பிறகு ஆழ்வாருடைய பாசுரங்களையே எடுத்துரைக்க வேண்டும் என்பது தான்! அதனால் தன் வாழ்நாளில் நாலாயிர திவ்யபிரபந்தத்தை பிரச்சாரம் செய்வதையே குறிக்கோளாக ஏற்றுக்கொண்டார்.

”மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே”

என்று சொல்லுவர் அதாவது மணவாள மாமுனிகள் அவதரிக்கவில்லை என்றால் இன்று தமிழ் பிரபந்தங்கள் ஆற்றிலே கரைத்த புளியாய் போயிருக்கும்.

நம்பிள்ளையின் திருவாய்மொழி 36000 படி ஈட்டை உள் அர்த்தங்களை அழகான தமிழில் எல்லோருக்கும் புரியும்படி விரிவுரைக்கும் வல்லமை பெற்றவர்.
இவருடைய காலட்சேபத்தில் மயங்கி இவரைக்கொண்டு திருவாய்மொழிக்கு அர்த்தங்களைக் கேட்க வேண்டும் என்று விரும்பினார் ஸ்ரீரங்கத்துப் பெரிய
பெருமாள்! அவரை அழைத்து ஓர் ஆண்டு தன்னுடைய உற்சவங்களை எல்லாம் நிறுத்தி நம்பெருமாள் பகவத் விஷயத்தை தனக்கும் விரித்து உரைக்க நியமித்தார். மணவாள மாமுனிகளும் அதை செவ்வனே செய்து முடித்து சாற்றுமுறை தினம் ( கடை நாள் ) அன்று

ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்திர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்

என்று நம்பெருமாளே ஸ்ரீரங்கநாயகம் என்று பெயர் கொண்ட ஐந்து வயது அர்ச்சக குமாரனாக இந்தத் தனியன் ஸ்லோகத்தை ஒரு சிஷ்யனின் காணிக்கையாக
கொடுத்துவிட்டுச் சென்றார். அதனாலேயா ஸ்ரீரங்கம் நம்பெருமாளுக்கு இவரை ஆசாரியனாக இன்றும் கொண்டாடுகிறார்கள். மணவாள மாமுனிகள் எங்கே
எழுந்தருளியிருந்தாலும் ஆதிசேஷனில் இருப்பதைக் காணலாம். அவருக்கு அந்த சேஷ பீடத்தை அருளியவரும் நம்பெருமாளே.

மணவாள மாமுனிகள்
ஸ்ரீரங்கம்
மணவாள மாமுனிகள் தன் ஆசாரிய திருவடியை அடைந்த நாள் 16-12-1444 (மாசி , கிருஷ்ணபக்ஷ துவாதசி, திருவோணம், ஞாயிற்றுக்கிழமை). ஒவ்வொரு ஆண்டும் இந்நாளை மணவாள மாமுனிகளின் திருவத்யயன உற்சவமாக(ஸ்ரார்த்த உற்சவம்) தெற்கு உத்தர வீதியில் உள்ள ஸ்ரீமணவாளமாமுனிகள் சன்னதியில் நடைபெறுகிறது.

தந்தைக்கு எப்படி ஒரு மகன் எப்படி காரியங்களை செய்வாரோ அதே போல ஒரு ஆசாரியனுக்குச் சிஷ்யன் செய்ய வேண்டும். ( பஞ்சமஸ்காரம் செய்த ஆசாரியன் பரமபதித்தால் அந்தச் சிஷ்யனுக்கு தீட்டு உண்டு ) ஸ்வாமி மணவாள மானிக்கு சிஷ்யன் நம்பெருமாள் அதனால் அவர் பரமபதித்த நாள் முதல் இன்றும் நம்பெருமாளே இந்தக் கைங்கரியத்தை நடத்தி வைக்கிறார். நம்பெருமாள் பிரசாதங்களை கொடுத்து மரியாதை செய்கிறார்.

மணவாள மாமுனிகளின்"திருவடிநிலைகள்" (திருப்பாதுகைகள்)
இன்றும், ஸ்ரீரங்கத்தில் தெற்குஉத்திரவீதியில் உள்ள,மணவாள மாமுனிகளின் மடத்தில் இன்றுவரை உள்ளது...பக்தர்களுக்கு இன்றும்"அந்த திருவடி" தினமும்சாதிக்கப்படுகிறது...இதற்கு இன்னொரு அழகான பெயர் இருக்கிறது “பொன்னடியாம் செங்கமலம்” அடுத்த முறை செல்லும் போது “பொன்னடி சாத்துங்கோ” என்று கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

மாமுனிகள் எம்பெருமானாரை போற்றி  "யதிராஜ விம்சதி" என்கிற வடமொழி நூல், பிள்ளைலோகாசாரியாரின்  ஸ்ரீ வசன பூஷணம், தத்வத்ரயம், முமுக்ஷுப்படி ஆகிய நூல்களுக்கு உரை, அதே போல் அழகியமணவாளப் பெருமாள் நாயனாரின் “ஆசார்ய ஹ்ருதயம்”,  இராமானுச நூற்றந்தாதிக்கு உரை, திருவாய்மொழியில் சாரத்தை சொல்லும் "திருவாய்மொழி நூற்றந்தாதி" என்று பல நூல்களை இயற்றியுள்ளார்.

ஸ்ரீமணவாள மாமுனிகள் இவருக்கு முன்னே அவதரித்த தேசிகனை பல இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். இன்று நம் ஸ்ரீவைஷ்ணவர்கள் இவருக்கும் தேசிகனுக்குப் பெரிய சண்டை போன்ற ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி பாகவத அபசாரத்தைத் தேடிக்கொள்கிறார்கள். எந்த வடகலை கோயிலிலும் மணவாள மாமுனிக்குச் சந்நிதி கிடையாது ( அப்படி ஏதாவது இருந்தால் தெரியப்படுத்தலாம் ). நல்ல வேளை சில தென்கலை கோயில்களில் வேந்தாந்த தேசிகன் சந்நிதியை வேதாந்தாசாரியார் என்று பெயரிட்டு அங்கே உள்ளது, அதிகம் கவனிக்கப்படாமல், தீர்த்தம் கிடையாது, ஒரு சின்ன விளக்கு மட்டும்
எரிந்துகொண்டு இருக்கும் பெரும்பாலும்.

நாமம் மட்டுமே இவர்களின் கண்களுக்கு தெரிகிறது. எந்த நாமமாக இருந்தாலும் அது பெருமாள் திருவடியே என்று பார்க்க வேண்டும்.
ஸ்வாமி மணவாள மாமுனிகள் பாடிய உபதேச ரத்தின மாலையில் ஓர் பதிகம் இது

”நாத்திகரும் நல் கலையின் நன் நெறிசேர் ஆத்திகரும்
ஆத்திக நாத்திகருமாம் இவரை ஓர்த்து நெஞ்சே!
முன்னவரும் பின்னவரும் மூர்க்கர் என் விட்டு நடுச்
சொன்னவரை நாளும் தொடர்” என்கிறார் ஸ்வாமி.

அதாவது நாத்திகர், ஆஸ்திக-நாத்திகர் இருவரையும் மூர்க்கத்தனம் உடையவர்கள் என்று அவர்கள் அருகில் செல்லாமல் ஆஸ்திகரின் சகவாசத்தை நாடு

என்கிறார். நாத்திகர்களை நமக்குத் தெரியும், ஆஸ்திகர்களை நமக்குத் தெரியும், நாத்திக-ஆஸ்திகர்கள் ?  இன்று வடகலை தென்கலை பார்த்துக்கொண்டு பகவத் - பாகவத அபசாரத்தை தேடிக்கொண்டு இருக்கும் இவர்களும், இணையத்தில் இருக்கும் பல ஸ்ரீவைஷ்ணவர்கள் பகுத்தறிவு பேசுகிறேன் என்று பிதற்றுவதும்
ஆஸ்திக-நாத்திகர்களே இவர்களிடம் ஜாக்கிரதையாகவும் ஒதுங்கியும் இருக்க வேண்டும்.

மணவாள மாமுனிகள் செய்த பல உபதேச ரத்தினங்கள் இன்று அணைத்து வடகலை வீடுகளிலும், மடத்திலும் ஒதுக்கிவைக்கப்படுகிறது; அதே போல் தேசிக
பிரபந்தம், பிரபந்த சாரம், பிள்ளை அந்தாதி போன்ற வை தென்கலை சம்பிரதாய வீடுகளிலும் மடத்திலும் ஒதுக்கிவைக்கப்படுகிறது என்பது தான் கசப்பான
உண்மை.

ஸ்ரீவைஷ்ணவர்கள் ஆசாரியர்கள் அவர்களுடைய உரைகளும், கருத்துக்களும் நமக்கு விட்டுச் சென்ற பெரிய சொத்துக்கள். வடகலையார் ஸ்ரீமணவாள
மாமுனிகள் சந்நிதிக்கும், தென்கலையார் வேதாந்த தேசிகன் சந்நிதிக்கும் பேதம் பார்க்காமல் செல்ல வேண்டும், குறிப்பாகக் குழந்தைகளுடன்.

திருப்பாதுகைகள் ஸ்ரீரங்கம்
நாம் மணவாள மாமுனிகளை போல் ஒன்றும் பெரிதாக சாதித்துவிடவில்லை, இப்பேர்பட்ட ஸ்வாமி மணவாள மாமுனிகளைச் சேவித்தாலே நாம் எவ்வளவு தாழ்ந்தவர்களாக இருக்கிறோம் என்று புரியும். ஸ்ரீரங்கத்தில் தெற்கு உத்திரவீதியில் உள்ள ஸ்ரீமணவாள மாமுனிகளின் மடத்தில் அவருடைய பொன்னடி தினமும் சாதிக்கப்படுகிறது. அடுத்த முறை ஸ்ரீரங்கம் செல்லும் போது நிச்சயம் அங்கே சென்று அவரை சேவித்திவிட்டு வாருங்கள்.

அடியார்கள் வாழ அரங்கநகர்வாழ
சடகோபன் தண்தமிழ் நூல்வாழ
கடல்சூழ்ந்த மண்ணுலகம் வாழ
மணவாளமாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்

பிகு: 

திருமங்கையாழ்வார் அழகை அனுபவித்து ஸ்ரீ மணவாள மாமுனிகள் "வடிவழகு" என்ற சூர்ணிகையைப் பாடுகிறார். அதை இந்த பதிவில் ஸ்ரீராம பாரதியின் உறையுடன் (ஒலி ஒளி வடிவில்) உங்களுக்குக் கொடுப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். ( கீழே உள்ள பாடலை கேட்டுக்கொண்டே படித்தால் சுவை கூடும் )

திருமங்கையாழ்வார் வடிவழகு

பேதை நெஞ்சே! இன்றைப் பெருமை அறிந்திலையோ!
ஏது பெருமை இன்றைக்கென்னென்னில் - ஓதுகிறேன்.
வாய்த்தபுகழ் மங்கையர் கோன் மாநிலத்தில் வந்துதித்த
கார்த்திகையில் கார்த்திகை நாள்

மாறன் பணிந்த தமிழ்மறைக்கு மங்கையர் கோன்
ஆறங்கம் கூற அவதரித்த-வீறுடைய
கார்த்திகையில் காத்திகைநாள் இன்றென்று காதலிப்பார்
வாய்த்த மலர்த்தாள்கள் நெஞ்சே வாழ்த்து.

அணைத்தவேலும் தொழுதகையும்
அழுந்திய திருநாமமும்
ஓமென்றவாயும் உயர்ந்தமூக்கும்
குளிர்ந்தமுகமும் பரந்த விழியும்
பதிந்த நெற்றியும் நெறித்த புருவமும்
கருண்டகுழலும் வடிந்தகாதும்
அசைந்த காதுகாப்பும் தாழ்ந்த செவியும்
சரிந்த கழுத்தும் அகன்றமார்பும்
திரண்ட தோளும் நெளித்த முதுகும்
குவித்தயிடையும் அல்லிக்கயிறும்
அழுந்திய சீராவும் தூக்கிய கருங்கோவையும்
தொங்கலும் தனிமாலையும்
தளிருமிளிருமாய் நிற்கிற நிலையும்
சாற்றிய திருத்தண்டையும்
சதிரான வீரக்கழலும் தஞ்சமான தாளிணையும்
குந்தியிட்ட கணைக்கால்களும் குளிரவைத்த திருவடியும் மலரும்
வாய்த்த திருமணங்கொல்லையும்
வயலாலி மணவாளனும்
வாடினேன் வாடி வாழ்வித்தருளிய
நீலக்கலிகன்றி மருவலர்தமுடல்துணிய
வாள் வீசும் பரகாலன் மங்கை மன்னனான வடிவே

உறைகழித்த வாளையொத்த விழிமடந்தை மாதர்மேல்
உருகவைத்த மனமொழித்திவ் வுலகளந்த நம்பிமேல்
குறையைவைத்த மடலெடுத்த குறையலாளி திருமணங்
கொல்லைதன்னில் வழிபறித்த குற்றமற்ற செங்கையான்
மறையுரைத்த மந்திரத்தை மாலுரைக்கவன்முனே
மடியொதுக்கி மனமடக்கி வாய்புதைத்து வொன்னலார்
குறைகுளித்த வேலணைத்து நின்றவிந்த நிலைமையென்
கண்ணை விட்டகன்றிடாது கலியனாணை யாணையே

காதும் சொரிமுத்தும் கையும் கதிர்வேலும்
தாதுபுனை தாளிணையும் தனிச்சிலம்பும் - நீதிபுனை
தென்னாலி நாடன் திருவழகைப் போல
என்னாணை யொப்பா ரில்லையே

வேலணைத்தமார்பும் விளங்கு திருவெட்டெழுத்தை
மாலுரைக்கத் தாழ்த்த வலச்செவியும் - தாளினிணைத்
தண்டையும் வீரக்கழலும் தார்க்கலியன் நன்முகமும்
கண்டு களிக்கு மென் கண்

இதுவோ திருவரசு இதுவோ திருமணங்கொல்லை
இதுவோ எழிலாலி என்னுமூர் - இதுவோதான்
வெட்டுங்கலியன் வெருட்டி நெடுமாலை
எட்டெழுத்தும் பறித்தவிடம்

வடிவழகு பாடலை அனுபவிக்க இங்கே :


Comments

  1. Srivaishnava pala per sampradayam Mari pora kalathula thenkala vadakala vithysam parpathu muttalthanam.cery good write up on Swami manavala mamunigal.

    ReplyDelete
  2. அற்புதம். இது இயற்றிய பாடல் அல்ல. பக்தி பிரவாகத்தில் பிறந்த அழகுத் தமிழ்.
    =பி எஸ் ஆர்

    ReplyDelete
  3. வைணவ லட்சணம் என்றால் என்ன என்று அருமையாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். அடக்கமும், ஆச்சார்யர்களைப் பணிந்து போற்றுவதும் பக்தி/ஞான யோகங்களைக் காட்டிலும் உயர்ந்தவையாக வைணவம் கொண்டாடுகிறது. இதறிந்தும், சிலபலர் பேதத்தை வளர்க்கின்றனர்.

    ReplyDelete
  4. Dear Desikan ,
    I read your blog regularly. Very good .my grand mother used to tell Ahobila mutt jeeyar visited Kodiyalam house and blessed the family . Acharya anugragham is fully with you.

    ReplyDelete
  5. அற்புதமான் பதிவு!

    ReplyDelete
  6. அருமை.

    அழகுதிகழ்ந்திடும் ஐப்பசியில் திருமூலம் அதெனுநாளே.

    ReplyDelete
  7. அருமை ஐயா அருமை

    ReplyDelete
  8. மிக்க நன்றி. அருமையான பதிவு.

    ReplyDelete
  9. பேதம் பார்ப்போரை
    புறம்தள்ளி
    இ௫ கலையும்
    வணங்குவோம்
    தேசிகனும்
    மணவாளமாமுனியும்
    நம் இ௫ கண்கள்

    ReplyDelete
    Replies
    1. Superb Explanation for current generation and scenario... We need to value our Srivainava Assets left by our Poorvacharyargal

      Delete
  10. Superb Explanation for current generation and scenario... We need to value our Srivainava Assets left by our Poorvacharyargal

    ReplyDelete
  11. அற்புதமான பதிவு மணவாள மாமுனிகளே இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்

    ReplyDelete

Post a Comment