Skip to main content

ஸ்ரீ மணக்கால் நம்பியும், ஸ்ரீ மடப்பள்ளியும்

இரண்டு வாரங்களுக்கு முன் மீண்டும் ஸ்ரீரங்க விஜயம். பெரிய பெருமாளை சேவிக்க ரூ250/= க்யூவே பெரிதாக இருக்க, ’அப்பால’ இருக்கும் இன்னொரு ரங்கநாதப் பெருமாளாகிய அப்பக்குடத்தானை செவிக்க வண்டியைத் திருப்பினேன்.

தன் வலது கையில் அப்பக்குடத்தை வைத்திருக்கும் இந்தப் பெருமாளுக்கும் எனக்கும் ரகசிய சம்பந்தம் ஒன்று உண்டு. சொல்கிறேன்.

கோயிலடி என்னும் அப்பகுடத்தான்
பல வருஷம் முன் ஒரு நாள் கொள்ளிடக்கரை கல்லணை வழியாக கோயிலடி என்று அழைக்கப்படும் அப்பகுடத்தானை சேவிக்கச் சென்றேன். சந்நிதி பூட்டியிருந்தது. விசாரித்ததில் அர்ச்சகர் வீட்டைக் காண்பித்தார்கள். அர்ச்சகரிடம் பெருமாளை சேவிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். அவரும் அதற்குச் செவிசாய்த்து சந்நிதியின் கதவை திறந்தார். ஆனால் அகத்தில் எதையோ மறந்துவிட்டார். இதோ வந்துவிடுகிறேன் என்று சென்றார்.

கியூரியாசிட்டியினால் ஒரு  காரியம் செய்தேன் ( கவனிக்கவும் - விவரம் தெரியாத சின்ன பையனாக இருந்த போது ) கருவரை உள்ளே சென்று பெருமாள் பக்கம் இருக்கும் அப்பகுடத்தையும் பெருமாளையும் தொட்டு சேவித்துவிட்டு வெளியே வந்தேன். சிறிது நேரத்துக்குப் பிறகு வந்த அர்ச்சகர் “நம்மாழ்வார் இங்கிருந்து தான் தன் கடைசிப் பாசுரத்தைப் பாடி மோட்சமடைந்தார்” என்றார்.

தொட்டுக் கொஞ்சிய எனக்குப் பிரியமான அப்பகுடத்தானை சேவித்துவிட்டு அன்பில் சுந்தர்ராஜப் பெருமாளை சேவிக்கக் கிளம்பினேன்.

சுந்தர்ராஜப் பெருமாள்  சுடசுட பொங்கலுடன் வரவேற்றார். பருப்பு விற்கும் விலையில், பருப்பு இல்லாமல் அல்லது துளியூண்டு பருப்பை வைத்து எப்படி அருமையான பொங்கல் செய்யமுடியும் என்ற ரகசியத்தை அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும். கோயிலுக்கு வெளியில் இந்த ஆட்டுக்குட்டிகளுக்கு அமுதனுடன் தழைகளை கொடுத்துவிட்டு திருவெள்ளறைக்கு என் பயணத்தை தொடர்ந்தேன்.

மணக்கால் நம்பி அவதார
ஸ்தலம் செல்லும் பாதை
மணல் லாரிகள் ‘சைடு’ கொடுக்காமல் செல்லுகையில், மணக்கால் என்ற ஊர் பலகை வர “இங்கே தான் ஆளவந்தாருக்கு ஆசாரியரான மணற்கால் நம்பிகள் பிறந்த இடம்” என்று பெயர் பலகையை கை கூப்பிச் சேவித்துவிட்டு ஒரு கிமீ தூரம் செண்டிருப்பேன்  ”மணற்கால் நம்பி அவதார ஸ்தலம்” என்ற சின்ன பலகை என் கண்ணில் பட்டவுடன் அங்கே சென்ற போது கதவு பூட்டியிருந்தது. கதவு திறப்பதற்கு முன் அவரை பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ளலாம்.

அவதார ஸ்தலத்தில்
மணக்கால் நம்பி
உய்யக்கொண்டாரின் பிரதான சீடர் மணற்கால் நம்பி இயற்பெயர் “ஸ்ரீராமன்”. உய்யக்கொண்டாரின் மனைவி பரமபதிக்க, அவருடைய திருமாளிகை காரியமெல்லாம் மணற்கால் நம்பியே செய்துவந்தார். உய்யக்கொண்டாரின் இரண்டு சின்ன பெண் குழந்தைகளையும் இவரே பார்த்துக்கொண்டார். ஒரு நாள் அந்தக் குழந்தைகளை நீராட்டி அழைத்து வரும் வழியில் வாய்க்காலில் சேறாயிருப்பதைக் கண்டு அவர்களுடைய கால்கள் சேற்றில் படாமல் இருக்கத் தானே படியாய்க்கிடந்து, அவர்களை தன் முதுகிலே கால் வைத்துக் கடக்க செய்தார். தம்முடைய குழந்தைகளில் கால் சுவடுகளை அவர் முதுகில் பார்த்த உய்யக்கொண்டார் அவருடைய ஆசாரிய அபிமானத்தைக் கண்டு வியந்து அவருக்கு மணற்கால் நம்பி என்று திருநாமம் சாத்தினார்.

திருவெள்ளறை 
ஆசாரிய சம்பந்தம் இருந்தால் மட்டுமே பகவானால் உத்தாரணம் பண்ண முடியும் என்பதற்கு மணற்கால் நம்பிச் சிறந்த உதாரணம். அவருடைய பெயரே இந்த ஊரின் பெயராக இன்றும் இருக்கிறது!.

( மணற்கால் நம்பி எப்படி ஆளவந்தாரை நம் சம்பிரதாயத்துக்கு கொண்டு வந்தார் என்று முன் எழுதியது http://sujathadesikan.blogspot.in/2014/08/blog-post.html  )

மணற்கால் நம்பி அவதார ஸ்தலத்துக்குச் சென்ற போது கோயில் பூட்டியிருந்தது. ”அர்ச்சகர் வேலைக்குச் சென்றுவிட்டார்” என்று அவர்கள் வீட்டு மாமி எங்களுக்காகக் கோயிலை திறந்துவிட்டார். மணற்கால் நம்பியைச் சேவித்துவிட்டு அவருக்குப் பிரியாவிடை கொடுத்துவிட்டு, அவருடைய ஆசாரியனான திருவெள்ளறைக்கு செல்ல திட்டமிட்டேன்.

திருவெள்ளறைக்கு சென்ற போது, பலிபீடத்துக்குத் திருமஞ்சனம் நடந்துகொண்டு இருந்தது.

உள்ளே புண்டரீகாட்சனை சேவித்துவிட்டு, மணக்கால் நம்பியின் ஆசாரியரான உய்யக்கொண்டார் மற்றும் எங்கள் ஆழ்வான் இருவரையும் சேவித்தேன்.

என் பெண் ஆண்டாளுக்கும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கும் இந்தக் கோயிலுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.

பத்து வருடம் முன் இந்தக் கோயிலுக்கு ஆண்டாளை அழைத்துக் கொண்டு சென்றிருந்தேன். பெருமாள் தீர்த்தம் வாங்கிய பின் ”இன்னும் கொஞ்சம் வேண்டும்” என்றாள். அர்ச்சகர், அந்தத் தீர்த்த பாத்திரத்தை அவள் கையில் கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் குடித்துவிட்டு தா என்றார்!.

ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு இந்த ஊரில் அவதரித்த உய்யக்கொண்டார் தான் திருப்பாவை தனியனான “அன்னவயல் புதுவை ஆண்டாள் அரங்கர்க்கு... என்ற தனியனை எழுதினார்.

இந்த ஊரில் அவதரித்த இன்னொரு ஆசாரியன் ‘எங்கள் ஆழ்வான் அவரை பற்றி சிறுகுறிப்பு இங்கே :

உடையவர் ஸ்ரீபாஷய வியாக்கனத்தை சொல்லச் சொல்ல அதை எழுத ஸ்ரீகூரத்தாழ்வானை பணித்தார். துரதிஷ்டவசமாக அந்தப் பணியை முடிக்கும் முன் அவர் கண் பறிபோனது. ஸ்ரீபாஷய விவரணத்தை முடிக்க கூரத்தழ்வானை போலத் தேர்ந்த பண்டிதரைத் தேடினார். அப்போது விஷ்ணுசித்தரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை நியமித்தார் இராமானுஜர்.

ஸ்ரீ உய்யக்கொண்டார்
திருவெள்ளறை
இவருடைய அறிவும் ஆற்றலும் கூரத்தாழ்வனுக்கு நிகராக இருப்பதைக் கண்ட உடையவர் பூரிப்புடன் “எங்கள் ஆழ்வானோ?” என்று விளிக்க விஷ்ணுசித்தர் ”எங்கள் ஆழ்வான்” ஆனார்.  எங்கள் ஆழ்வான் உடையவரை விட 80 வயது சிறியவர் ( காலம் கிபி 1069-1169 ) உடையவர் இவரை திருகுருகைப்பிரான் பிள்ளானிடம் அனுப்பி அவரையே ஆசாரியராகக் கொள்ள செய்தார். எங்கள் ஆழ்வானை ”அம்மாள் ஆசாரியன்” என்றும் அழைப்பர். ஏன் என்று பார்த்துவிடலாம்.

ஸ்ரீரமானுஜர் நியமித்த முக்கியமான ஆசாரியர் நடாதூர் ஆழ்வான், ஸ்ரீபாஷயத்தை பலரிடம் கொண்டு சென்றவர். இவருடைய பேரன் நடாதூர் அம்மாள். தன் பேரனுக்கு ஸ்ரீபாஷயம் சொல்லித்தர ஆரம்பிக்க நடாதூர் அம்மாள் துடிப்புடன் பல சந்தேகங்கள் கேட்க ஆரம்பித்தார். “எனக்கு வயதாகிவிட்டது, அதனால் நீ எங்கள் ஆழ்வானிடம் கற்றுக்கொள் அவர் தான் உன் சந்தேகங்களுக்கு தக்க விளக்கம் சொல்லுவார்” என்று அனுப்பினார்.
காஞ்சியிலிருந்து புறப்பட்டு, நடாதூர் அம்மாள் எங்கள் ஆழ்வானின் வீட்டுக் கதவை தட்டிய போது உள்ளேயிருந்து யார் ? என்று கேட்க அதற்கு அம்மாள் “நான் தான்” என்று பதில் கூற அதற்கு உள்ளிருந்து “நான் செத்த பின் வரவும்” என்று பதிலுரைத்தார் எங்கள் ஆழ்வான்.

குழம்பிய  நாடாதூர் அம்மாள் தன் தாத்தாவிடம் வந்து கேட்க அவர் “நான்” என்ற சொல்லாமல், நான் என்ற மமதை இல்லாமல் “அடியேன்” என்று சொல்ல வேண்டும் என்று அறிவுரைத்தார்.
அம்மாளும் திரும்ப சென்று “அடியேன் வந்திருக்கிறேன்” என்று சொல்ல எங்கள் ஆழ்வானுக்கு அபினான சிஷ்யனாக விளங்கினார் நடதூர் அம்மாள்.

எங்கள் ஆழ்வான்
அவருக்கு கீழே
நடாதூர் அம்மாள்
திருவெள்ளறை
குருபரம்பரையில் ஸ்ரீராமானுஜர் - எங்கள் ஆழ்வான் - நடாதூர் அம்மாள் என்ற வரிசையைக் காணலாம். நடாதூர் அம்மாளுக்கு ஆசாரியனாக இருந்ததால் எங்கள் ஆழ்வானை “அம்மாள் ஆசாரியன்” என்றும் அழைப்பர்.

இவரைப் பற்றி இன்னும் நிறைய இருக்கிறது விவரமாக இன்னொரு சமயம் எழுதுகிறேன்.










- * - * - * - * 
ஸ்ரீ மடப்பள்ளி என்ற புதிய ஹோட்டல் ஸ்ரீரங்கத்தில் வந்திருக்கிறது என்ற போன மாசம் எழுதிய ஒத்தை வரிக்கு அதன் உரிமையாளர் பாலாஜி எனக்குப் போன் செய்து நன்றி தெரிவித்து அடுத்த முறை ஸ்ரீரங்கம் வரும் போது ஸ்ரீ மடப்பள்ளிக்கு விஜயம் செய்ய வேண்டும் என்றார்.

மாலை போன சமயம் சாம்பிராணி புகையுடன் ”வெச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே” என்ற பிஜியமுடன் பாலாஜி வரவேற்றார்.
“அண்ணா என்ன சாப்பிடுகிறீர்கள்?” என்று இட்லியுடன், ரவா தோசை, வெங்காயம், பூண்டு இல்லாத சைடுகளுடன் உபசரித்தார். சாம்பார்/சட்னி சாப்பிட்டவுடன் நியூரோடிராஸ்மிட்டர்கள் வழியாக மூளைக்குச் சென்று எப்போதோ சாப்பிட்ட பழைய சுவைகளை நினைவுபடுத்தியது. டேஸ்ட் ( டெஸ்ட் ? )  செய்யுங்கோ என்று ஒரு கப்பில் ரவா கிச்சடியும், அசோகா அல்வாவும் கொடுத்தார். அருமையான ஃபில்டர் காபியுடன் நிறைவு செய்தேன். ராவா கிச்சடியில் மட்டும் ஒரு கல் உப்பு ஜாஸ்தியாக இருந்தது :-)

Comments

Post a Comment