Skip to main content

இராமானுசனுடையார் - இசையுடன் ஆழ்வார் பாசுரங்கள்.

ஸ்ரீராமபாரதியின் ’தேவகானம்’ என்னும் ஒலி நாடா தொகுப்பு என் திருதகப்பனாரின் சஷ்டியப்தபூர்த்திக்கு பரிசாகக் கிடைத்தது. அப்போது திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி அடியேனுக்கு ஒன்றும் தெரியாது. அந்த ஒலிநாடாக்களை வீட்டில் ஓட விட்ட போது ஆசாரியர்களின் தனியன்களும், ஆழ்வார் பாசுரங்களையும் முதல் முதலாக ராகத்துடன் கேட்டு அனுபவித்தேன். அது ஓர் ஆத்தும அனுபவம் விவரிக்க இயலாது.

பிறகு அந்த ஒலி நாடா கொடுத்தவரை தேடி திரு.ஸ்ரீராமபாரதியைப் பற்றி கொஞ்சம் தெரிந்துக்கொண்டென்.

நாதமுனிகள், ஆழ்வார்களின் பாசுரங்களை நுட்பமான தத்துவங்களை ஜனங்கள் கண்ணாரக் கண்டு தெளிவடையும் பொருட்டு பெருமாளுடைய புறப்பாடுகளில் அவைகளைப் பல விதங்களில் ஏற்பாடு செய்ய நினைத்தார். நாதமுனிகள் காலத்தின் ஏற்பாட்டின்படியே உத்ஸவங்கள் நடந்து ஸ்ரீராமானுஜர் காலத்தில் திராவிட வேதம் என்று அழைக்கப்படும் நாலாயிர திவ்ய பிரபந்தம் எல்லா திவ்ய தேசங்களிலும் சேவிக்க ( ஓதப்பட ) வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஸ்ரீரங்கம் கோயிலில் எந்தெந்த காலத்தில் எந்தெந்த திவ்யபிரபந்தம் சேவிக்க வேண்டும் என்ற நியதி உண்டாக்கப்பட்டது. அதனால் தான் ஸ்ரீராமானுஜருடைய வாழித் திருநாமத்தில் “தென்னாங்கர் செல்வமுற்றும் திருத்தி வைத்தான் வாழியே” என்கிறது. பெரிய பெருமாளுடைய செல்வம் என்னவென்றால் “வான் திகழும் சோலை, மதிளரங்கர் வண்புகழ் மேல் ஆன்ற தமிழ் மறைகளாயிரம்” என்கிறார் பட்டர். அதாவது ஆழ்வார்கள் பாடப்பட்ட பாசுரங்கள் எல்லாம் ரங்கநாதனுடைய ‘செல்வம்’ என்கிறார். ஆழ்வார் பாசுரங்களின் தத்துவங்களையும், பொருள்களையும் எல்லோருமறியும் பொருட்டு நடித்துக்காட்ட ‘இராமானுசனுடையார்’ என்று சிலரை ஏற்படுத்தி அவர்களை நடிக பாத்திரங்களாக உத்ஸவாதிகளில் நடிக்கும்படி செய்தார்.

இன்றும் ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து மற்றும் இராப்பத்து உற்சவம் பத்து நாள் நடக்கிறது அதில் ‘அரையர் சேவை’ முக்கிய நிகழ்வாகும். அந்த நாளைய முழு தியேட்டர் அனுபவம். ( ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ ஸ்ரீரங்கத்தில் அரையர் சேவை - சில குறிப்புகள் என்ற கட்டுரை ஒரு பொக்கிஷம் ).

இந்த அரையர் சேவைக்கு இந்த நூற்றாண்டில் மீண்டும் உயிர் கொடுத்தவர் நம் ஸ்ரீராம பாரதி.

சிக்காகோ பல்கலைக்கழகத்தில் மேல் படிப்புக்கு சென்றவர், அங்கே ஒரு சிற்ப கடையில் பழங்காலத்து ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர்

விக்ரகம் ஒன்று வாங்கி தன் வீட்டுக்குக் கொண்டுவந்த பின் அவருக்கு சில தெய்வீக அனுவம் கிடைக்க, திடீர் என்று ஒரு நாள் தன் பெட்டி படுக்கையை சுருட்டிக்கொண்டு இந்தியா திரும்பினார். தில்லியில் வி.வி.எஸ் என்று அழைக்கப்படும் திரு வி.வி. சடகோபனிடம் சேர்ந்தார். அவருடன் இந்திய இசை மற்றும், நாலாயிர திவ்ய பிரபந்தங்களுக்கு இசை சம்பந்தமான ஆராய்ச்சியில் ஈடுபட்டார். பல திய்வதேசங்களுக்கு சென்று ஆழ்வார்களின் பக்தி உள்ளத்தின் உணர்ச்சி பாவனைகளுடன் ஆடியும் குழித் தாளத்துடன் இசைக் கூட்டி பாடியும் “அரையர் சேவை”யாக பெருமாளுக்கு அர்ப்பணம் செய்தார்.

1980ல் தில்லியிலிருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த வி.வி.எஸ் ரயிலிலிருந்து கூடூர் ஸ்டேஷனில் இறங்கினார். அதற்குப் பிறகு அவருக்கு என்ன நேர்ந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. தன் குரு திரு வி.வி.சடகோபனின் மறைவுக்கு பின் சீடர் ஸ்ரீராம பாரதி தன் துணைவியார் திருமதி சௌபாக்யலக்ஷ்மி ( இவரும் திவ்ய பிரபந்தங்களில் தேர்ச்சி பெற்றவர் ) தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். ஆழ்வார் திருநகரி, மேல்கோட்டையில் சில காலம் தங்கி அரிதாகி வரும் அரையர் இசையை ஆராய்ந்து கற்றார் திவ்ய பிரபர்ந்த பாடல்களுக்கு ராகம் அமைத்து இசைக் குறியீடுகளுடன் ’தேவ கானம்’ என்று நாதமுனிகள் சூட்டிய பெயரையே சூட்டி புத்தகம் ஒன்றை 1995ல் வெளியிட்டார். 1997ல் நாலாயிர திவ்ய பிரம்பந்தம் முழுவதும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து மிக அழகான புத்தகம் ஒன்றை வெளியிட்டார். ’அரையர் சேவை’ என்ற புத்தகம் ஒன்றையும் ஆங்கிலத்தில் எழுதினார் ( பாரதிய வித்யா பவன் வெளியீடு )

தூர்தர்ஷனில் இயக்குநர் வேலையில் இருந்தவர் அதை விட்டுவிட்டு சென்னை பள்ளிக்கரணை அருகில் செல்வமுடையான்பேட்டை (தற்போது ஜல்லடம்பேட்டை என்று வழங்கப்படுகிறது. திருமங்கை ஆழ்வார் திருக்கடல்மல்லை செல்லும் போது, பெருமாள் செல்வமுடையான் அவரை ஆசீர்வதித்தார் என்றும், அங்கே உள்ள சுண்ணாம்பு குளத்தில் தான் திருமங்கை ஆழ்வார் குதிரை ஆலிநாடன் தண்ணீர் குடித்தது என்று கூறுவர். 1857 சர்வேயில் அந்தக் குளம் இருக்கிறது !) என்ற இடத்தில் மேல்கோட்டை திருநாராயணன் - செல்லப்பிள்ளைக்குக் கோயில் கட்டினார், கோசாலையுடன், தன் குருவின் பெயரால் ”ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை” ஒன்று அமைத்து அக்கம் பக்கம் கிராமத்துக் குழந்தைகளுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் கற்றுக்கொடுத்தார்.

1997-8 என்று நினைக்கிறேன் ஸ்ரீராம பாரதி அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற வேண்டும் என்று பைக்கில் பள்ளிக்கரணை

ஜல்லடம்பேட்டைக்கு சென்றேன். பிரபந்தம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசை என்றவுடன் அவரிடம் இருந்த

திருப்பாவை, நித்யாநுஸந்தாநம் சந்தைமுறை ஒலிநாடாவை எனக்குக் கொடுத்தார். அது மட்டும் இல்லாமல் இன்று நானே ஆரம்பிக்கிறேன் என்று எனக்குச் சந்தை முறையில் இரண்டு பாசுரங்களை அவரே சொல்லியும் தந்தார். அப்போது அவர் மனைவி எனக்குப் பெருங்காயம், கறிவேப்பிலை கலந்த மோர் கொடுத்தது எனக்கு இன்னும் பசுமையாக நினைவில் இருக்கிறது.

முகநூலில் குட்மார்னிங் செல்ஃபிகளை கடந்து சில சமயம் அபூர்வமாக சில விஷயங்கள் கிடைப்பதுண்டு. வெள்ளிக்கிழமை அப்படி ஒன்று கிடைத்தது. திருமதி ஜெயந்தி ஸ்ரீரதரன் ஆழ்வார் பாடல்களை இசையுடன் பாடியுள்ளார் என்ற தகவல். அவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது எனக்கு அவருடைய சிடிக்களை அனுப்பினார். நேற்று சில மணி நேரம் கேட்டேன்.

கோயில் திருவாய்மொழி, சரணாகதி கீதம் என்று இரண்டு சிடியில் சில அருமையான ஆழ்வார்கள் பாசுரங்களை அடக்கியுள்ளார். த்வயத்தை தேஷில் கேட்பது சுகம். எம்.எல்.வி போன்றவர்களிடம் இசை பயின்றுள்ளார். கடந்த சில வருஷங்களாக தன் இசையை ஸ்ரீவைஷ்ணவ குறிப்பாக ஆழ்வார் பாடல்களுக்கு அர்ப்பணித்துள்ளார் என்று கேட்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. நிச்சயம் ஸ்ரீராம பாரதியை பற்றி இவருக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஸ்ரீராம பாரதியின் தேவகானத்தைக் கொண்டு மேலும் பல ஆழ்வார் பாடல்களை இவர் பாட வேண்டும்.

கோயில் திருவாய்மொழி சிடி விலை வெறும் 100/= ரூபாய் தான். சிடி வேண்டுவோர் 9962074727 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

Comments

  1. தகவலுக்கு ரொம்ப நன்றி.

    amas32

    ReplyDelete

Post a Comment