சென்னை தி.நகரில் இருந்து தேனாம்பேட்டை போகும் சாலையின் குறுக்கே இருக்கும் அந்த சின்ன சந்தின் பெயர், 'மாடல் ஹவுஸ் ரோடு லேன்.' தென்னந் துடைப்பத்தை திருப்பிப் பிடித்த மாதிரி பலவண்ண கட்சிக்கொடிகள் பறந்து கொண்டிருக்கும் அந்தச் சந்துக்கு எதிர்புறம் ஒரு ஜெராக்ஸ் கடை சந்து ஆரம்பத்தில், ஆலிவ் பச்சை நிறத்தில் கவிழ்ந்துகிடக்கும் குப்பைத்தொட்டியைக் கடந்து உள்ளே நுழைந்தால், மொத்தம் ஒன்பது வீடுகள். அதில் மூன்றாவது வீட்டில், ஐஸ்பாக்ஸ் ஆனந்தன் என்கிற ஆனந்தன் வசிக்கிறார் என்பதைத் தவிர இந்த சந்துக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.
சின்னத்திரைநிகழ்ச்சித் தொகுப்பாளர், நடிகர் போன்றவர்களை ஷாப்பிங் மால், கடைத்தெரு, தியேட்டர் போன்ற இடங்களில் பார்க்கும்போது, இவரை எங்கோ பார்த்தமாதிரி இருக்கிறதே...' என்று நமக்குத் தோன்றும் அல்லவா? ஆனந்தனும் அந்த வகை.
டப்பிங் செய்யப்படாத அக்மார்க்' தமிழ் டிவி சீரியல்களில் அப்பா, மாமா அல்லது எதிர்வீட்டு அங்கிளாக தினமும் ஆனந்தனைப் பார்க்கலாம். பிரைம் டைம் அல்லாத நேரத்திலும் ஒரகடம் பக்கம் வில்லைபோடப்பட்ட நிலத்தில் நின்றுக்கொண்டு மினிஸ்டர் ஒயிட் சட்டையுடன்,நெற்றியில்விபூதி,குங்குமம் பளிச்சிட, "அங்கே பாருங்க... அங்கேதான் பஸ்ஸ்டாண்ட்வரப்போகிறது. இரண்டே கிமீ தூரம்தான் கான்வென்ட் ஸ்கூல். அங்கே பாருங்க... ரோட்டில் பஸ் போகிறது. தூரத்தில் கோயில் கோபுரம்
தெரிகிறது பாருங்க …” என்று மிடில்கிளாஸ் மக்களைக் கவர்ந்துகொண்டிருப்பார் ஆனந்தன்.
ரிலீஸாகப் போகிற திரைப்படங்களின் விளம்பரங்களை நாளிதழில் பார்த்துக் கொண்டிருந்தபோது கைபேசி ஒம் முருகா...' என்ற ஒலியுடன், மேசையில்
கவிழ்ந்துகிடக்கும் கரப்பான்பூச்சி போல சிணுங்கியது.
"ஆனந்தன் ஹியர்."
"சார்…...யூனிட்டிலிருந்து பேசுகிறோம்."
"சொல்லுங்க சார்."
"நம்ம ….. சார் படத்துல உங்களுக்கு ஒரு லீட் ரோல் இருக்கு... நாளைக்கு வரமுடியுமா?"
"நிச்சயமா... என்ன ரோல்?"
"எனக்கு தெரியாது. சாரிடம்தான் கேட்க வேண்டும். ஆனா, ஷுட்டிங் ஸ்ரீபெரும்புதூர் கிட்ட காலையில உங்களுக்கு வண்டி அனுப்பிடுறோம்."
"பரவாயில்லே... ரோல் என்னன்னு தெரிஞ்சா, காஸ்ட்யூம் எடுத்துண்டு வருவேன்."
"எதுக்கும் ஒரு செட் நல்ல வேட்டி, சட்டை, பேன்ட் எல்லாம் எடுத்துட்டு வாங்க" என்று சுருக்க மாக முடித்துக்கொண்டார், சமீபகாலமாக மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்துவரும் அந்த பிரபல இயக்குநரிடம் திட்டுவாங்கும் உதவி இயக்குநர்.
ஆனந்தனுக்கு நம்ப முடியவில்லை. ஏதாவது எஃப். எம் ரேடியோவிலிருந்து கிண்டல் செய்கிறார்களா? என்று கூட யோசித்தார். மனைவியிடம் சொன்னதற்கு, 'வினு வரைஞ்ச ஆஞ்சநேயர் வாலில் இருபத்தைந்து நாள் சந்தனம், குங்குமப் பொட்டு வச்சா நல்லது நடக்கும்னு நான் அப்பவே சொல்லல” என்றாள்.
"இதுலயும் ஐஸ்பாக்ஸ் ரோல்தான்னு நினைக்கிறேன்.”
"அப்படில்லாம் இருக்காது... உங்களுக்கு நல்ல பிரேக் கிடைக்கப் போகுது பாருங்க."
உள்ளே, குழந்தைவிடாமல்அழுதுகொண்டிருந்தது.
அடிக்கடி லீவும், ரிகர்சல்களுக்கு பர்மிஷன் போன்ற சலுகைகள் ஆனந்தன் வேலைபார்த்த வங்கியில் செளகரியமாகக் கிடைக்க, மாலை நேரத்தில் சபாநாட கத்தில் நடித்துக்கொண்டிருந்தார். சில வருடங்களுக்கு முன், குறும்படஇயக்குநர் ஒருவர் குறும்பாக இயக்கிய படம் ஒன்றில், இறந்த அப்பாவாக நடித்தார்.ஆனந்தன். வெளிநாட்டிலிருந்து கதாநாயகன் வரும்வரை ஒரு ஐஸ்பாக்ஸில் கிடப்பார் ஆனந்தன். அவரைச் சுற்றி நடக்கும் ஹியூமர் சப்ஜெக்ட் பல பாராட்டுகளைப் பெற்றது. அதில் தத்ரூபமாக நடித்த இவருக்கு சிறந்த குணசித்திர விருது கிடைக்க, அன்றிலிருந்து இவருக்கு ஐஸ்பாக்ஸ் பட்டம் ஒட்டிக்கொண்டது.
இளையராஜா டைட்டில் சாங் பாடினால் அந்தப் படம் நன்றாக ஒடும் என்று அன்று நம்பிய தமிழ்த் திரையுலகம், ஆனந்தன் இறந்தமாதிரி நடித்தால் அந்தப் படம்.நன்றாக ஒடும் என்று இன்று நம்பத் தொடங்கியது.
முதல் தடவை செத்ததுபோல நடித்தபோது ஆனந்தனுக்குப் பயமாக இருந்தது. பிறகு ரோஜா மாலை, ஊதுபத்திவாசனை, நெற்றியில் நாமம், பட்டை அல்லது குங்குமம், சந்தனம் என்று பழகிவிட்டது.
"சார் என் சீன் எப்ப?”
"அடுத்தது உங்க சீன்தான் சார். இப்ப உங்க அஸ்தியைக் கரைக்கும் சீன் ஒடிகிட்டு இருக்கு" என்று தன் அஸ்திகரைப்பைப் பார்க்கும் பாக்கியம் அவருக்கு சினிமாவில் சாத்தியமானது.
ஆரம்பத்தில் அவர் மனைவிக்கு சங்கடமாக இருந்தாலும் பிறகு, "இருங்க வீட்டு வாசலில் கோலம் போட்டுவிடுகிறேன். இன்னிக்கு எங்கே ஐஸ்பாக்ஸ்? வரும்போது புழக்கடைப் பக்கம் கால் அலம்பிண்டு வாங்க" என்று வழியனுப்பி வைத்தாள்.
"சார் என்னோட உயரம் ஐந்தடி ஐந்து அங்குலம்... போனதடவைஃப்ரீஸர்பாக்ஸ் உயரம் கொஞ்சகம்மியா இருந்தது. கண்ணாடியை அழுத்தி மூடாதீங்க, மூச்சு முட்டுது. அப்புறம், போனதடவை உள்ளே ஒரு ஆணி வேற குத்திச்சு' என்று உதவி இயக்குநர்களிடமும், காட்சி முடிந்தபின் படப்பிடிப்பில் கண்ணாடி அல்லது கேமராலென்ஸைப்பார்த்துச்சிரித்துவிட்டு பூசணிக்காய் அல்லது தேங்காய் சுற்றிப்போடுவது போன்ற சினிமா சென்டிமெண்டும் ஆனந்தனுக்குப் பழக்கப்பட்டது.
"சார் ஸ்மைல் ப்ளீஸ்..." என்று படம் எடுத்து, ஆர்ட் டைரக்டர் இவரை ஃப்ரேமுக்குள் அடைத்து, லஞ்ச் சாப்பிட்டுவருவதற்குள்அதற்குஒருமாலைபோட்டு, ஊது பத்தி புகை பரவிக்கிடக்க குடும்பத்தார்கள் சோகத்தோடு நிற்கும் அந்தக் காட்சி தொடங்கி உயில், கடன் பத்திரம், அழுவது அல்லது பழிவாங்கும் வசனம் என்று ஆரம்பிக்கும்போது இவர் கால்வrட் முடிந்துவிடும்.
போன வாரம் ஆனந்தனைப் பேட்டி கண்ட ஒரு வார இதழின் நிருபர் "ஐஸ்பாக்ஸில் இருக்கும்போது உங்களுக்கு என்ன தோன்றும்?' என்று கேட்டபோது, "அதிக டேக் இல்லாமல் ஷாட் ஒகே ஆகணும் என்று வேண்டிக் கொள்வேன்' என்றார்.
மறுநாள் காலை சரியாக எட்டு மணிக்கு, வீட்டு வாசலில் சுமோ ஒன்று வந்து நின்றது. பெரிய டிபன் கேரியர்களின் நடுவே, ஆனந்தனுக்குஇடம் கிடைத்தது. உள்ளே ஏறி உட்கார்ந்து கதவு சாத்தப்படும் முன்பே வண்டி கிளம்பி அவசரத்தைக் காட்டியது. உள்ளே இருந்தவர் இரண்டு மொபைலை ஒன்றாகச் சேர்த்து வணக்கம் சொன்னார்.
"சார், ஸ்ரீபெரும்புதுர்ல ஷட்டிங். இப்பவே டிராஃபிக் ஜாஸ்தி... பூந்தமல்லில மாட்டிப்போம்” என்று, சீக்கிரமாகக் கிளம்பியதற்கு விளக்கம் கொடுத்தார்.
"இன்னிக்கு தினத்தந்தியில விளம்பரம் பார்த்தீங்களா?”
'இல்லையே... எங்க வீட்ல தினகரன்தான்."
"நாளைக்கு வரும் பாருங்க..." என்றபடி போனை எடுத்து பேச ஆரம்பித்தார்.
"ஆமாம்சார், பாட்டுக்குரஷ்யா.பரவாயில்லைசார். சுஷ்மிதாவா, நயனானு தெரியலை...” என்று ஒரு மொபைலிலும், 'ஓலாவை புடிச்சுப் போங்க. அல்லது நம்ம சார்வண்டிய அனுப்புறேன்" என்று இன்னொரு மொபைலிலும் பேசியபடியே வந்தார்.
பூந்தமல்லியில் வாகன நெரிசலில் வண்டி மாட்டிக்கொண்டபோது, டிரைவர் தன் மொபைலில் மணி பார்த்தபடி, சாவு கிராக்கி..." என்று குறுக்கே வழிவிடாமல் நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தைத் திட்டினார். ஆனந்தன் கீழே இறங்கி ஒரு சோடாவாங்கிக் குடித்தார். அரைமணிநேரம் ஹாரன்சத்தங்களும் கெட்ட வார்த்தைகளும் பரிமாறிக்கொண்ட பிறகு வண்டி பூரீபெரும்புதூர்-திருமழிசைக்கு நடுவில் இடதுபக்கம் திரும்பி ஐந்து கிலோ மீட்டர் உள்ளே சென்றபோது, ஷட்ைடிங் பார்க்க அந்த ஊரே கூடியிருந்தது.
அலாவுதீன் விளக்கிலிருந்து பூதம் வெளிப்படுவது மாதிரி, பெரிய சைஸ்டிபன்கேரியர்களிலிருந்து வாசனை வெளிப்பட்டது. லைட், தெர்மாகோல், டிராலி, ஜங்ஷன் பாக்ஸ் என்று சுறுசுறுப்பாக வேலை நடந்து கொண்டிருந்தது. மேனேஜர்கள் யார் யாருக்கோ போன் செய்தபடி "புறப்பட்டாச்சா. எங்கே இருக்கீங்க..?"என்று விசாரித்துக்கொண்டிருந்தார்கள். சிலர், வாழையிலையைக் கையில் வைத்துகொண்டு பொங்கலுடன் கெட்டிச் சட்னியைக் குழப்பிக் கொண்டிருந்தார்கள். சாப்பிடாத வர்கள், மேக்கப் போட்டுக் கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும், லைட் அமைத்துக் கொண்டும் இருந்தார்கள்.
ஆனந்தனைப் பார்த்த அஸோசியேட் டைரக்டர் சைகையில் அவருக்கு வணக்கம் வைத்துவிட்டு, பதில் வணக்கம் சொல்லுவதற்குள்அருகேவந்து, "வாங்கசார். நம்ப ஹீரோ சாருக்கு நீங்கதான் அப்பா...' என்று அவருடைய ரோல் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.
”டி.பன்லாம் வேண்டாம் சார்."
"வேற ஏதாவது வேணுமா..?”
வேண்டாம் சார். இப்பதான் சோடா குடிச்சேன். ஷுட்டிங்க எப்ப ஆரம்பிப்பீங்க.. ?”
"ஹீரோ இனிமேதான் நுங்கம்பாக்கத்திலிருந்து கிளம்பணும். நீங்க கொஞ்சநேரம் கேரவனில் ரெஸ்ட் எடுத்துக்கோங்க" என்று கிசுகிசுத்தார்.
"பரவாயில்ல சார். நான் வெயிட் பண்றேன். எனக்கு ஒரு சின்ன சந்தேகம்."
"கேளுங்க சார்."
"படத்துல நான் இறந்துபோகுற சீன் இருக்கா?”
“இல்லையே, ஏன்.?"
”இல்ல... ' என்று ஆனந்தன் ஏதோ சொல்ல வாய்திறக்கும்போது
டைரக்டர் கோபத்தில் கத்த, அவரிடம் திட்டுவாங்க ஓடினார் அஸோசியேட் டைரக்டர்.
ஆனந்தனுக்கு சந்தோஷமாக இருந்தது. வீட்டுக்கு போன்செய்து, சன்னமான குரலில் ஹீரோவின் பெயரைக் குறிப்பிட்டு, "அவருடைய அப்பா கேரக்டராம்" என்றார்.
"ஐஸ்பாக்ஸ் கிடையாது” நிஜமாகவே ஆனந்தப்பட்டார்.
"ஹீரோ சார் கிளம்பிட்டாராம். சீக்கிரம் சீக்கிரம்..." என்று அந்த இடம் கல்யாண முகூர்த்தம் மாதிரி பரபரபரப்பாக மாறியது. ஆனந்தன் முகத்தில் மேக்கப் மேன் தண்ணிரைப் பீய்ச்சியடித்து, தோளில் இருந்த துண்டால் தண்ணிரைத்தடவி எடுத்துவிட்டு நெற்றியில் ஒரு சந்தனபொட்டுவைத்துதன் ஒப்பனையை முடித்து விட்டு அவரிடம் ஒரு சீப்பைக் கொடுத்து தலையை வாரிட்டு நிழலில் போய் உட்காருங்க... உங்க ஷாட் வரும்போது கூப்பிடுவாங்க" என்று சொல்லிவிட்டு, அடுத்த ஆர்ட்டிஸ்டுக்கு மேக்கப்போட புறப்பட்டார்.
ஆனந்தன் தன் மேக்கப் முகத்தை ஒரு செல்ஃபி எடுத்து மனைவிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியபோது, அந்த இடமே பரபரப்பாகியது. ஹீரோ என்று சொல்லப் பட்ட அந்த மாஸ், உற்ஸ்வர் மாதிரி குடையுடன் வந்து உட்கார்ந்தார். அவருக்கு, ஒழுங்காக சீவப்பட்ட இளநீர்வழங்கப்பட்டது.பாதிகுடித்துவிட்டுகேரவனுக்குச் சென்று கோட்சூட்சகிதமாக தலையில் விக்குடன் வந்து கேமரா முன் நின்றார்.
'சார் இந்த ஆர்ட்டிஸ்ட்தான் உங்க அப்பாவா நடிக்கிறார்.”
ஆனந்தன் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு கைகுலுக்கினார். சந்தோஷத்தில் கையெல்லாம் வியர்த்திருந்தது.
டைரக்டர் முதல் சீனை சொல்லி நடிக்கச் சொன்னார். "சார், உங்க நண்பனின் பெண்ணை. நினைவு இருக்கில்ல?"
கிளாப் சத்தம் ஒலிக்க "டேக்' என்றவுடன் அந்த இடம் அமைதி ஆனது. கிராமத்துப்பெண்தான்.தனக்குப் பிடித்திருப்பதாக ஹீரோ சொல்ல, டைரக்டர் சொல்லிக் கொடுத்த வசனத்தை தன் நாடக அனுபவத்தால் மாடுலேஷனில் அப்படியே ஒப்பித்துதரையில் சாய்ந்தார் ஆனந்தன்.
கீழே சாய்வது மாதிரி சொல்லிக் கொடுக்கலையே..." என்று குழம்பிய டைரக்டர், "கட்” என்றார். ஹீரோ திரும்ப குடைக்குள் தஞ்சம் புகுந்தார்.
ஆனந்தன் அப்படியே கிடக்க, நிலைமையைப் புரிந்துகொள்ளமற்றவர்களுக்குக் கொஞ்சநேரம் ஆனது. ஒருவர் ஆனந்தன் முகத்தில் தண்ணர் அடித்தார். ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் எங்கே என்று தேடினார்கள். துரத்தில் இருந்த பெட்டிக்கடையில் இருந்து சோடா வாங்கி வந்தார்கள். ஏதோ வண்டியில் அவரை ஏற்றி அருகில் இருந்த ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டு, ‘ஹார்ட் அட்டாக் எனும் மாரடைப்பு ஏற்பட்டு கோல்டன்ஹவர் வீணாக்கப்பட்டு மருத்துவமனைக்கு வருவதற்குள்ளாகவே இறந்துவிட, மாலை ஆறு மணிக்கு அவர் வீட்டில் ஐஸ்பாக்ஸில் இருந்தார்.
ஆனந்தன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த கோடம்பாக்கத்து நடிகர்களைப் பார்க்க மாடல் ஹவுஸ் சந்தில் கூட்டம் கூடியது.
பக்கத்தில் இருந்த ஜனதா ஹோட்டலில் காபி குடித்தபடியே நல்லாதான்சார் இருந்தார். மொத சீனு. அப்படியே சரிஞ்சுட்டார்..." காலையில் வீட்டு வாசலில் வந்து ஆனந்தனை காரில் பிக்கப் செய்த ஆசாமி யாருடனோ மீண்டும் இரண்டு மொபைலில் பேசிக்கொண்டிருந்தார்.
"சார், இறுதிச் சடங்கு கண்ணம்மாபேட்டையில நாளைக்கு காலையில ஆறு மணிக்குதானாம். கூட்டம் அவ்வளவா இருக்காது சார். நீங்க வந்து பார்த்துட்டுப் போயிடலாம்.'
இன்னொரு மொபைலில், "செத்துப்போனமாதிரியே இல்ல சார். அப்படியே நடிக்கிறாப்புல இருக்கு” என்றார்.
ஜன்னல் இதழ் - பிப் 2016. ஓவியம் மனோகர்
ச்சே..மனுசனுக்கு கொடுத்து வைக்கலியே..
ReplyDeleteSuper..!
ReplyDeleteசெத்தவரா நடிச்சப்பல்லாம் வாழ்ந்தவர், வாழ்ந்தவரா நடிக்கறப்ப செத்துட்டாரே... என்னா வாழ்க்கை. சூப்பர் ரைட்டப் தேசிகன்ஜி.
ReplyDeleteகொடுத்து வைக்கவில்லையே...... பாவம்..
ReplyDeleteஅருமையாக patternகளை பிடிக்கிறீர்கள்
ReplyDeleteஅடடா............ :-(
ReplyDeleteVery nice
ReplyDeleteSuper
ReplyDeleteSuper
ReplyDeleteSujatha nadai.
ReplyDelete