Skip to main content

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 2

மா. செல்லப் பெருமாள் கோனார் அவர்கள் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் செய்த சொற்பொழிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து 1976ஆம் வருஷம் ஒரு சின்ன புத்தகத்தை அச்சடித்து பலருக்கு கொடுத்தார் என்று போன பகுதியில் பார்த்தோம். அவர் தொகுத்த அந்தப் புத்தகத்தில் அவர் எழுதிய முன்னுரையில் சில பகுதிகளை இங்கே தருகிறேன்.

“.... அறிந்தோ அறியாமலோ அசுத்தப்பொருளின் மீது காலோ கையோ பட்டுவிட்டால், மனிதன் அதை உணர்ந்தவுடன் அவன் உள்ளம் அருவருப்பின்பாற்பட்டுத் துடிதுடித்துப் போகிறது. உடன் அவன் முதற்காரியமாக தூய நீர்நிலைக்குச் சென்று தன் உள்ளம் போதும் போதும் எனக் கருதும் வரை கால்களைத் தேய்த்துத்தேய்த்துக் கழுவுகிறான். இதனினும் தீவிரமாகவுள்ளவன் நீரில் தான் உடுத்தியுள்ள உடைகளுடன் மூழ்கிக் குளித்து எழுகிறான். அதன் பிறகுதான் அவர்கள் உள்ளம் அமைதி பெறுகிறது. இது மனிதனின் இயல்பாகும் .

இங்ஙனே, 1930 ஆம் ஆண்டினின்று 1962 ஆம் ஆண்டு வரை அடியேன், பகுத்தறிவுவாதி எனக் கூறிக் கொள்ளும் நாஸ்தீகவாதியாக அப்படுகுழியில் மூழ்கிக் கிடந்தவனவேன். பெரியபெருமாளான அழகிய மணவாளனின் திருவருளால் 1962ஆம் ஆண்டினின்று ஸ்ரீவைணவன் எனும் உணர்வு வரப்பெற்று பெருமாள் பக்தனாகினேன் அடியேன் பூர்வத்தில் பெரிதும் விரும்பி ஞானசாகரத்தைத் தேடினேன். அது ஸ்ரீகாஞ்சிபுரத்திலிருக்கிறது; அதில் உம்முடைய விருப்பப்படி மூழ்கிக் குடைந்து குடைந்து நீராடிப் புனிதனாகப் பெறலாம் என்க்கூறி ஞானசாகரமாகிய ஸ்ரீ உ.வே P.B.அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகளுடன் ஈடுபாடு கொள்ளும் அளவுக்கு அடியேனை ஆட்படுத்தியருளிய மஹான் மதுரை ஸ்ரீமான் R.அரங்கராஜன் ஸ்வாமிகளாவார் ஆட்படுத்தியருளியதுடன் நின்றுவிடவில்லை, அந்த ஸ்வாமிகளின் வெளியீட்டு நூல்களில் ஒவ்வொன்றாக கொடுத்துப் படித்து வருமாறு செய்து, அடியேனை அதன் சுவையறிந்து மேலும் மேலும் ஸ்வாமிகளின் வெளியீட்டு நூல்களையெல்லாம் வாங்கி வாங்கிப் படிக்கும் சுவைமிக்குடையோனாக்கி, மேலும் ஸ்ரீஸ்வாமிகளின் வெளியீடுகள் முழுவதையும் ஒன்று விடாமல் படித்து முடித்துவிட வேண்டும் என்னும் பெரும் பசிக்காரனாகவும் ஆக்கிவிட்டார்....”

இந்த வருடம் ஜனவரி 7 எனக்கு மறக்க முடியாத நாளாக அமைந்தது. அதைப் பற்றி கூறும் முன் பெரிய நம்பிகள் பற்றி இன்னும் கொஞ்சம் விஷயங்களை பார்த்துவிடலாம். .

ஆளவந்தார் அவதரித்து 21 வருடங்களுக்கு பிறகு நம் பெரிய நம்பிகள் மார்கழி கேட்டையில் அவதாரித்தார் ( கிபி 997-998 ). இவருக்கு இயற்பெயர் ஸ்ரீபராங்குசதாஸர். ஸ்ரீமகாபூரணர் என்று அழைக்கப்பட்டார்.

’நம்பி’ என்றால் எல்லா விதத்திலும் மிகவும் நம்பிக்கையானவர் பரிபூர்ணர் என்று பொருள். முதல் முதலில் மதுரகவியாழ்வார் ’கண்ணி நுண்சிறுத்தாம்பில்’ நம்மாழ்வாரை நம்பி என்று அழைத்துள்ளார். இவரே நமக்கு முதல் நம்பி.

ஸ்ரீரங்கம் கோயிலை பெரிய கோயில் என்றும், பெருமாளை பெரிய பெருமாள் என்றும், தாயாரை பெரிய பிராட்டியார் என்றும் அழைப்பது வழக்கம். அதே போல் பல நம்பிகள் இருந்தாலும் ஆளவந்தாருடைய சிஷ்யர்களுக்குள் பெருமை பெற்றவராய் ஸ்ரீராமானுஜருக்கு சமாஸ்ரயணம் செய்தவர் பெரியநம்பிகள். பெரிய என்று ஏற்றத்துடன் அழைப்பது இவரையே. ஸ்ரீரங்கத்தில் அவதரித்தவர்.

பெரிய நம்பிகள் பற்றி தெரிந்துக்கொள்ள சில சம்பவங்களை பார்க்கலாம்.

ஸ்ரீராமானுஜர் துறவி அதனால் தினமும் பிட்சை எடுத்து உண்பார்.
ராமானுஜருக்கு திருப்பாவையில் ஈடுபாடு மிக அதிகம். அதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்ற பெயர் பெற்றார். இந்த பெயரையே அவர் விரும்பினார். "உந்துமத களிற்றன்" என்ற திருப்பாவை பாடிக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் பெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது "செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்" என்று பாடி முடிக்க, நம்பியின் மகள் அத்துழாய் கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரோ சமயம் நிகழ, ராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்).

அத்துழாய் பதரிக்கொண்டு உள்ளே சென்று தந்தையிடன் “கதவைத் திறந்தவுடன் என் காலில் விழுந்து மூர்ச்சித்து விழுந்தார்” என்று சொல்ல

பெரிய நம்பிகள் கலங்காமல் “உந்து மதகளிறு ஓதப் பெற்றிருக்க வேணும்” என்றாராம்.

இன்னொரு சமயம், ஸ்ரீ ராமானுஜர் அவருடைய சிஷ்யர்களுடன் வீதியில் வந்து கொண்டிருக்க, அவரை பார்த்த பெரிய நம்பிகள் கீழே அப்படியே சாஷ்டங்கமாக விழுந்து சேவித்தார். ராமானுஜர் அதை கண்டுக்கொள்ளாமல் சென்றுவிட்டார். ஏனெனில் அதை ஒப்புக்கோண்டால் தன்னுடைய ஆசார்யரிடமிடருந்து ப்ரணாமத்தை எற்றுக்கொண்டதாக ஆகிவிடும். சிலர்  பெரிய நம்பியிடம் ஏன் சேவித்தீர் என்று கேட்ட பொழுது “நான் என் ஆசார்யரான, ஸ்ரீ ஆளவந்தார் என்றோ நினைத்தேன்” என்றாராம்.

முன்பு மாறநேரி நம்பி பரமபதித்த போது பெரியநம்பி அவருக்கு சரம கைங்கர்யங்களை செய்தார் ( முதல் பகுதியில் இதை பற்றி விரிவாக பார்த்தோம் ). ஸ்ரீரங்கத்தில் இந்த செயலுக்கு இவரைப் பழித்தார்கள், அவரைத் தள்ளிவைத்தார்கள். அதைப் பொருட்படுத்தாமல் தன் பணியை செய்து வந்தார்.

ஒரு நாள் நம்பெருமாள் திருத்தேர் இவர் திருமாளிகையின் முன் வந்த போது பெரிய நம்பிகளின் புதல்வி அத்துழாய் தன் தந்தை செய்தது தவறு என்றால் திருத்தேர் நகரட்டும், இல்லை என் தந்தையின் செயலை பெருமாள் ஏற்றுக்கொண்டால் திருத்தேர் வீட்டை விட்டு நகரக் கூடாது என்று ஆணையிட்டாள்.  பெருமாள் அவர் திருமாளிகை வாசலை விட்டு நகரவேயில்லை. பிறகு அர்ச்சகமுகமாக ஆவேசித்து ”பெரியநம்பிகள் தவறு செய்யவில்லை. ஆசார்யன் கட்டளைப்படி செய்தது சரியே” என்று கூற தேர் நகர்ந்தது

ஒருநாள் பெரிய பெருமாளுக்கு ஏதொ ஒரு ஆபத்து வரப்போகிறது என்று தெரிந்தவுடன், பெரிய நம்பியை பெரிய கோயிலை ப்ரதக்ஷிணம் செய்து ரக்ஷையிடப் ப்ரார்த்தித்தார்கள். பெரிய நம்பி தன்னுடைய நிழல் போல  பாரதந்த்ரியத்தை முழுமையாக உணர்ந்து நடப்பவர் ஒருவர் என்னை பின் தொடர வேண்டும் என்று விண்ணப்பிக்க ”அப்படிப்பட்டவர் யார்? என்று ஸ்ரீராமானுஜர் கேட்க “நம் கூடத்தாழ்வான்” என்று என்றாராம் பெரிய நம்பி. திருவரங்கத்தமுதனார் இராமானுஜ நூற்றந்தாதியில் “மொழியைக்கடக்கும் பெரும்புகழான் வஞ்சமுக்குறும்பாம் குழியைக்கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண்கூடியபின்” என்று பாடுகிறார். இங்கே “நம்” என்ற பிரயோகம் பெரிய நம்பிகள் உபயோகித்ததையே அமுதனார் உபயோகித்துள்ளார்.

தாழ்த்தப்பட்ட குலத்தோராய் கருதப்பட் திருபாணாழ்வாரின் அமலனாதிபிரான் என்பதற்கு ”ஆபாத சூடமநுபூய ஹரிம்ஸயாநம்” என்ற தனியனை எழுதி அருளினார். பின்னாட்களில் ஓர் நாள் சோழ மன்னனால் கூரத்தாழ்வான், பெரியநம்பிகள் இருவரின் கண்கள் பிடுங்கப்பட்டன அதை பற்றி அடுத்த பகுதியில்

தொடரும்..








Comments

  1. எத்தனை தரம் கேட்டாலும் படித்தாலும் ஆசார்யர்கள் ஸ்ரீரங்கஸ்ரீயை ரட்சித்து நமக்குக் கொடுத்த கருணையில் கண்கள் தாமாய்க் கசிகின்றன

    ReplyDelete
  2. Acharyane ucham andavan rendam batcham copyright goes to vali sir :)

    ReplyDelete

Post a Comment