Skip to main content

கையெழுத்து சொல்லும் கதை - பகுதி 1

மா. செல்லப் பெருமாள் கோனார் ஒரு தீவிர தி.க தொண்டர். மதுரை வாசி. ’தந்தை பெரியார்’ மதுரை வந்தால் இவர் வீட்டில் தான் தங்குவார்.

1962 ஆம் வருஷம் ஒரு மார்கழி மாதம் மதுரை கள்ளழகர் கோயிலில் திருப்பாவை உபன்யாசம் நடந்துக்கொண்டு இருக்க அன்று மார்கழி கேட்டை – பெரிய நம்பிகள் திருநட்சத்திரம் ( ஸ்ரீராமானுஜருக்கு சமாஸ்ரயணம் செய்தவர் பெரியநம்பிகள்).

உபனயாசகர் பெரிய நம்பிகள் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

“தாழ்ந்த குலத்தில் பிறந்த மாறநேர் நம்பி ஆசாரியன் திருவடிகளை அடைந்த போது (காலமான போது) மாறநேர் நம்பிக்கு இறுதிச் சடங்குகளைச் செய்தார் பெரிய நம்பிகள். இந்தச் செயலை பல ஸ்ரீவைஷ்ணவர்களை முகம் சுளிக்க செய்திருக்க வேண்டும். அவர்கள் ஸ்ரீராமானுஜரிடம் போய் முறையிட ஸ்ரீராமானுஜரும் தன் ஆசாரியனிடம் “இது தகுமோ?” என்று கேட்க அதற்கு நம்பிகள்

“பறவையான ஜடாயுவுக்கு ராமர் இறுதிச் சடங்குலளைச் செய்தார் அவரைக் காட்டிலும் நான் பெரியவனோ ? அல்லது அந்த பட்சியை காட்டிலும் நம் மாறனோர் நம்பித் தாழ்ந்தவனா ? மேலும் உயர்ந்த குலத்தில் பிறந்த யுதிஷ்டிரர் (தருமர்) தாழ்ந்த குலத்தில் பிறந்தவளின் மகனாக பிறந்த விதுரருக்கு இதைச் செய்யவில்லையா? தர்மபுத்திரரைக் காட்டிலும் நான் பெரியவனோ? அல்லது விதுரரைக் காட்டிலும் இவர் சிறியவரோ? நம்மாழ்வார்  "பயிலும் சுடரொளி" என்ற பாசுரத்தில் "நெடுமாற்கடிமை" என்ற பாசுரத்திலும் பாகவதர்களின் சிறப்பைக் கூறி, "எம்மையாலும் பரமர்" என்றும், "எம் தொழுகுலம் தாங்களே" என்றும் கூறியவை எல்லாம் வெறும் கடல் அலை போல ஓசையா ? அவைகளை கடைபிடிக்க தக்கவை அன்றோ?'' என்று கூறினார்.

இவற்றைக் கேட்ட உடையவர் “தாம் அறிந்திருந்தாலும், உங்களை போல பெரியவர்களின் மூலமாக பகவர்களின் உயர்வை உணர்த்தவேண்டும் என்பதற்காகவே கேட்டேன்” என்றாராம்.

மேற்கூறிய பகுதி செல்லப் பெருமாள் கோனார் அவர்களின் செவிகளில் விழ அவர் உள்ளம் உருகியது. அந்தச் சமயம் கேட்டுக்கொண்டு இருந்த பாகவத கோஷ்டிக்குத் திருமண், ஸ்ரீசூர்ணம் பொட்டலம் வினியோகம் செய்துக்கொண்டு இருந்தார்கள். திகைத்துப் போய் நின்றுக்கொண்டு இருண்டஹ் செல்லப் பெருமாளுக்கும் ஒரு பொட்டலம் கையில் கிடைத்தது.

இவ்வளவு காலம் நாஸ்திகவாதம், பகுத்தறிவு என்று காலத்தை வீண் செய்துவிட்டேனே என்று மனம் வருந்தி, மறுநாள் காலை கள்ளழகர் கோயில் குளத்தில் குளித்துவிட்டு, தன்னுடைய கருப்பு துணிகளை வீசி எறிந்துவிட்டு திருமண், ஸ்ரீசூர்ணம் இட்டுக்கொண்டு உபன்யாசம் செய்தவர் முன் வந்து நின்றார். உபன்யாசம் செய்தவர் வேறு யாரும் இல்லை. நமக்கு நன்கு அறிமுகம் ஆன மதுரை இரா.அரங்கராஜன் ஸ்வாமிகள் தான்!.

முன் தினம் அவர் நிகழ்த்திய உபன்யாசம் பற்றியும், பெரிய நம்பிகள் பற்றியும் கூறி தான் ஒரு தீவிர ஸ்ரீவைஷ்ணவன் ஆக வேண்டும் ”எனக்கு சமாஸ்ரயணம் செய்துவைக்க உதவ வேண்டும்” என்று கேட்க. பெரிய நம்பிகள் பற்றி காதில் விழுந்து ஒரு இரவில் மாறிய உங்களுக்கு ஸ்ரீரங்கத்தில் பெரிய நம்பிகள் திருமாளிகையில் அவர்கள் வம்சத்தவர்கள் செய்து வைப்பது தான் நன்றாக இருக்கும் என்று கூற செல்லப் பெருமாள் கோனார் ஸ்ரீரங்கம் விரைந்தார். இரவு போய் சேர்ந்த அவர் பெரிய நம்பிகள் வீட்டு வாசலில் படுத்துக்கொண்டார். காலை பெரிய நம்பிகள் வீட்டில் இருந்தவர்கள் விசாரிக்க இவர் வந்த காரணத்தை சொல்லி அவர்களிடம் சமாஸ்ரயணம் செய்துக்கொண்டு உண்மையான ஸ்ரீவைஷ்ணவனாக மாறினார்.

அதன் பின் ஸ்ரீகாஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியர் ஸ்வாமிகளிடம் இருந்துக்கொண்டு அவருக்கு பல  கைங்கரியம் செய்துக்கொண்டு இருந்தார். அண்ணங்கராசாரியார் செய்த சொற்பொழிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து 1976ஆம் வருஷம் ஒரு சின்ன புத்தகத்தை அச்சடித்து பலருக்கு கொடுத்தார்.

தொடரும்...

Comments

  1. Switch from periyar to periya nambi super.if it's possible please take vaishnavism as base for your first script in cinema Desikan Swamin.

    ReplyDelete
  2. Dear Desikan
    Please let us know from where we can get this book. Thanks . Sripriya

    ReplyDelete
  3. Dear Desikan
    Please let us know from where we can get this book. Thanks

    ReplyDelete
    Replies
    1. Pl.mail me at reachvivas@gmail to get this book.Kindly visit SriVaishnavaSri.com also.

      Delete
  4. The book is available for sale at www.srivaishnavasri.com

    ReplyDelete

Post a Comment